Type Here to Get Search Results !

ஞானஸ்நானம் உருவான வரலாறு | John the Baptist Life History | யோவான்ஸ்நானன் வாழ்க்கை வரலாறு | Jesus Sam

==============
யோவான்ஸ்நானன்
==============


யார் இந்த யோவான் ஸ்நானன். அநேகர் யோவான்ஸ்நானன் என்றாலும், அப்போஸ்தலனாகிய யோவான் (இயேசுவின் சீஷன்) என்றாலும் ஒரே நபர் தான் என்று நினைக்கிறார்கள்.

யோவான்ஸ்நானன் என்பவர் இயேசுவின் சீஷர் அல்ல. இயேசுவுக்கு முன்பாக வந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு இயேசு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தியவர்.

ஏசாயா 40:3-5
3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியில் நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைப்பண்ணுங்கள் என்றும்,
4. பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு முரடானவைச் சமமாக்கப்படும் என்றும்,
5. கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.

இந்த தீர்க்கதரிசன வசனம் இயேசு கிறிஸ்து வருவதற்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கனால் உரைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து வருவதற்கு முன்பு, இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்காக வனாந்தரத்திலே ஒரு சத்தம் உண்டாகும் என்பதுதான் அந்த தீர்க்கரிசனம்.

இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம் பண்ண வந்தவர் யோவான்ஸ்நானன் என்று கிறிஸ்தவர்கள் அநேகருக்குத் தெரியும். ஆனால், யோவான்ஸ்நானன் எப்படி வழியை ஆயத்தம் பண்ணினார் என்று அவர்களுக்கு தெரியாது.

ஏசாயா தீர்க்கதரிசனமாக சொன்ன அந்த சத்தம் யோவான்ஸ்நானன் தான் என்று மத்தேயு 3:3, மாற்கு 1:3, லூக்கா 3:4, யோவான் 1:23 இந்த வசனங்கள் மூலம் நாம் உறுதிப்படுத்த முடியும். இயேசுவின் சரித்திரத்தை விளக்கும் நூல்களை நாம் சுவிசேஷ புத்தகம் அல்லது நற்செய்தி நூல்கள் என்று அழைப்போம். நற்செய்தி நூல்கள்: மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான். அநேகமாக இயேசு செய்த எல்லா காரியங்களும் இந்த நான்கு சுவிசேஷங்களில் காணப்படுவதில்லை.  மத்தேயுவில் காணப்படுகின்ற சில காரியங்கள் மற்ற மூன்று சுவிசேஷத்திலும் காணப்படுவதில்லை.  மாற்குவில் காணப்படுகின்ற சில காரியங்கள் மற்ற மூன்று சுவிசேஷத்திலும் காணப்படுவதில்லை.  இப்படி நான்கு நூல்களிலும் சில காரியங்கள் இடம் பெற்றிருக்கும்.  சில காரியங்கள் இடம் பெற்றிருக்காது.

இயேசு கிறிஸ்து பெத்லகேமிலே பிறந்தார். குடிமதிப்பு எழுத வேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது. இந்த நிகழ்வுகள் மாற்கு மற்றும் யோவான் புத்தகத்தில் இல்லை. ஆனால், ஏசாயா தீர்க்கன் உரைத்த சத்தம் யோவான்ஸ்நானன் தான் என்று நான்கு நற்செய்தி நூல்களிலும் நாம் வாசிக்க முடிகிறது.

இந்த யோவான்ஸ்நானன் தான் எனக்காக வழியை ஆயத்தம் பண்ண வந்த எலியா என்று இயேசு கிறிஸ்து லூக்கா 7:24-28 வசனங்களில் கூறுகிறார்.

அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைக்கும், அவருடைய ஊழியத்திற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் மிகவும் முக்கியமான நபர் இந்த யோவான்ஸ்நானன்.

யோவான்ஸ்நானனுடைய பிறப்பு ஒரு வித்தியாசமான பிறப்பு. யோவான்ஸ்நானன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரைந்திருந்தார். அவருடைய தாய் எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினால் நிரைந்திருந்தார்கள்.

அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் தான் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டார். ஆனால், யோவான்ஸ்நானனும், அவருடைய தாய் எலிசபெத்தும் அதற்கு முன்பாகவே பரிசுத்த ஆவியினால் நிரைந்திருந்தார்கள்.

எலிசபெத் தன் வயது முதிர்ந்த காலத்தில் தான் யோவான்ஸ்நானனை கர்ப்பந்தரித்தால். காரணம் என்னவென்றால், எலிசபெத்தின் கர்ப்பத்திலிருந்து யோவான்ஸ்நானன் என்ற ஒருவர் மாத்திரமே பிறக்க வேண்டும் என்பது ஆண்டவருடைய திட்டமாய் இருந்தது.

பரிசுத்த ஆவியானவர் வெளிப்படும் முன்பு, இயேசு பிறப்பதற்கு முன்பு, மரியாள் கர்ப்பவதியாவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியினால் நிரைந்தவள் தான் இந்த எலிசபெத்.

யோவான் ஸ்நானனின் தகப்பன் பெயர் சகரியா. இவர் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆசாரியர். சகரியா தனக்குரிய ஆசாரிய முறை வந்தபோது, எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே, தூபங்காட்டுகிற வேளையில், திடீரென்று காபிரியேல் தூதன் அவருக்கு தரிசனமானார்.

காபிரியேல் தூதனைக் கண்ட சகரியா பயந்துபோனார். காபிரியேல் சகரியாவை நோக்கி: உன் மனைவியாகிய எலிசபெத், கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு யோவான் என்று பெயரிட வேண்டும் என்று சொன்னார்.

காபிரியேல் தூதனின் வார்த்தைகளைக் கேட்ட சகரியா: நாங்கள் இருவரும் வயது சென்றவர்கள். இவைகள் எப்படி சம்பவிக்கும் என்று கேட்கிறார். உடனே காபிரியேல், கர்த்தருடைய வார்த்தையை நீ சந்தேகப்பட்டதினால், பிள்ளை பிறக்கும்வரை நீ வாய் பேச முடியாமல், ஊமையாய் இருப்பாய் என்று கட்டளையிடுகிறார். (லூக்கா 1:5-23)

சகரியா தேவாலயத்தை விட்டு வெளியே வரும்போது, ஊமையாகத்தான் வெளியே வந்தார்.

சகரியாவின் மனைவி எலிபசெத் கர்ப்பந்தரித்து, சரியாக ஆறு மாதத்தில் மரியாள் கர்ப்பந்தரித்தால். மரியாள் எலிசபெத்தைப் பார்க்க வந்து, மூன்று மாதங்கள் எலிசபெத்தின் வீட்டில் தங்கியிருக்கிறாள்.

மரியாளின் வாழ்த்துதலைக் கேட்டு, எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருந்த ஆறு மாத குழந்தை துள்ளியது என்று லூக்கா 1:41 வாசிக்கிறோம்.

இயேசு கிறிஸ்து ஊழியத்தை துவங்குவதற்கு சரியாய் ஆறு மாதத்திற்கு முன்பு யோவான்ஸ்நானன் தனது ஊழியத்தைத் துவங்கியிருக்க வேண்டும். ஏனென்றால், யூத ஆண்கள் தங்களுடைய முப்பது வயதில் தான் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியிடங்களில் தங்கி வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு யோவான்ஸ்நானன் பிறந்திருப்பார் என்றால், இயேசு விட்டைவிட்டு வெளியேறி ஊழியம் செய்ய துவங்குவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு யோவான்ஸ்நானன் வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும்.

ஆனால் சரித்திரத்தின்படி, இயேசு வந்து ஊழியம் துவங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் யோவான்ஸ்நானன் ஜனங்களுக்கு பிரசங்கம் பண்ணவும், ஞானஸ்நானம் கொடுக்கவும் துவங்குகிறார்.

முப்பது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய யோவான்ஸ்நானன் முதல் நான்கு மாதங்கள் எங்கே இருந்தார்? என்ன செய்தார்? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

யோவான்ஸ்நானன் திடீரென்று ஜனங்களுக்கு முன்பாக வந்து, விரியன் பாம்புக்குட்டிகளே என்று பிரசங்கம் செய்கிறார். அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் பரிசேயர்கள், சதுசேயர்கள், வேதபாரகர்கள், ரோம போர்வீரர்கள். இப்படி பொது வெளியில் யோவான்ஸ்நானன்: நீங்கள் அனைவரும் விரியன் பாம்புக்குட்டிகள் என்று சொன்னபோது, இவர்கள் யாரும் ஏன் எதிர்க்கவில்லை.

சமுதாயத்தால் மதிக்கப்பட்ட பரிசேயர், சதுசேயர், வேதபாரகர், போர்வீரர்கள் அனைவரும் பயந்து, நடுக்கத்தோடு யோவான்ஸ்நானன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதுமாத்திரம் அல்ல, பாவமன்னிப்பு பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டார்கள்.

யோவான்ஸ்நானன் வாருங்கள் நான் ஞானஸ்நானம் கொடுக்கிறேன் என்று சொன்னபோது, அவர்கள் அனைவரும் பயந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த பரிசேயர், சதுசேயர், வேதபாரகர்கள் அனைவரும் வேதத்தை நன்கு கற்று அறிந்தவர்கள். பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்காக விசேஷித்த கன்வென்ஷன் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்திருக்கிறோம் என்று சொன்னாலே இவர்கள் வரமாட்டார்கள்.

சாதாரண ஒரு குடிமகனாள் பரிசேயனிடம் பேச முடியாது. யாரேனும் பேசவேண்டும் என்று வந்தாலும், உன்னோடு பேசுவதற்கு எனக்கு நேரம் இல்லை என்று சொல்பவர்கள் தான் பரிசேயர்கள்.

இப்படிப்பட்ட தலைவர்கள் அனைவருக்கும், யோவான்ஸ்நானன் விரியன்பாம்புக்குட்டிகளே என்று சொன்னபோது, யாரைப் பார்த்து விரியன் பாம்பு என்று சொல்லுகிறாய் என்று அவரை கொலை செய்யும் அளவிற்கு கோபம் வந்திருக்க வேண்டும்.

ஆனால் அங்கே அப்படி நடைபெறவில்லை. அவர்கள் அனைவரும் பயந்து, யோவான்ஸ்நானனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

யோவான்ஸ்நானன் ஒரு லேவி கோத்திரத்தைச் சார்ந்தவர். யோவான்ஸ்நானனின் தகப்பன் சகரியா ஆரோனின் சந்ததி, சதோக்கின் வம்சத்தில் வந்தவர்.

யோவான்ஸ்நானன் பிறப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு சில ஆசாரியர்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறினார்கள். தேவாலயத்தை விட்டு மட்டும் அல்ல, அந்த சமுதாயத்தை விட்டும் வெளியேறினார்கள்.

ஏனென்றால், அந்த நாட்களில் ஆசாரியர்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று பயந்து அரசர்களையும், அரசு அதிகாரிகளையும், மந்திரிகளையும் நம்பி, அவர்களுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தார்கள்.

ஆசாரியர்கள் இராணுவ தலைவர்களை ஆலயத்திற்குள் வரவழைத்து அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்கள். மந்திரிகள் ஆலயத்திற்கு வந்தாள், ஆசாரியர்கள் மாத்திரமே செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் மந்திரிகளையும் அழைத்துச் சென்று, அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்கள். இப்படியாக எருசேலம் தேவாலயம் அசுசிபட ஆரம்பித்தது.

இன்றைக்கும் இதுபோன்ற காரியங்கள் அநேக சபைகளில் நடைபெற ஆரம்பித்து விட்டது. ஆலயத்தின் பலிபீடம் என்பது ஆண்டவருக்குறியது. பலிபீடம் என்பது சபை விசுவாசிகளுக்குறியதோ, சபையின் மேய்ப்பனுக்குறியதோ அல்ல. அது கர்த்தருக்குறியது.

ஆனால் இந்த நாட்களில் அநேக பலிபீடங்கள் விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை அணிந்து கொண்டு, தங்களுடைய தாலந்துகளை வெளிப்படுத்துவற்கும், தங்களை தாங்களே பெருமைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதுமாத்திரம் அல்ல சில மேடைகளில் அரசியல்வாதிகள் அமர்த்தப்படுகிறார்கள். பிற மதக் குருக்கள் அமர்த்தப்படுகிறார்கள். இப்படியாக கர்த்தருடைய மேடை இன்றைக்கும் அசுசிபடுத்தப்படுகிறது.

இப்படி அந்நாட்களிலும் தேவாலயம் தீட்டுப்பட்ட போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சில ஆசாரியர்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறினார்கள். இப்படி தேவாலயத்தை விட்டு வெளியேறின ஆசாரியர்கள் சவக்கடலுக்கு கீழே உள்ள ஒரு பகுதியில், இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் வாழ ஆரம்பித்தார்கள்.

இப்படி தேவாலயத்தில் நடக்கின்ற அசுத்தங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஆசாரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த குகைகளில் வாழுகிறவர்களோடு வந்து சேர்ந்துகொண்டார்கள்.

இவர்கள் தங்களை எசீன்ஸ் என்று அழைத்துக்கொண்டார்கள். எசீன்ஸ் என்றால் எபிரெய மொழியில் தூய்மை என்று பொருள். இவர்கள் வாழ்ந்த அந்த பகுதிக்கு கும்ரான் என்று பெயர்.

இந்த எசீன்ஸ்கள் எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை. அந்த பகுதிகளில் பேரீச்சை மரங்கள் அதிகம் காணப்படுவதால் பேரீச்சை மரங்களை வளர்த்து வந்தார்கள். அது மாத்திரம் அல்ல, ஆடு, மாடுகளையும் வளர்த்து வந்தார்கள்.

இவர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து, ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு வருவார்கள். தண்ணீர் தொட்டியின் ஒரு புறத்திலிருந்து உள்ளே இரங்கி, நடுப்பகுதிக்கு சென்றதும், மூன்று முறை மூழ்கி எழும்புவார்கள். பின்பு மறுபகுதி வழியாக வெளியேறி விடுவார்கள். இதைப்போன்று இரவு தூங்கச் செல்லும் முன்பும் செய்வார்கள்.

இவர்களில் சிலர் உணவு சமைப்பது, சிலர் ஆடு மாடுகளை வளர்ப்பது, சிலர் பேரீச்சை பனைகளை பராமரிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். இதுபோன்ற வேலைகளை சிலர் செய்தாலும், பெரும்பாலானோர் வேதாகமத்தை (பழைய ஏற்பாடு) பிரதியாக்கம் செய்யும் வேலையை செய்து வந்தார்கள்.

வேதாகமத்தை சுருள் சுருளாக எழுதி, அவைகளை பானைகளுக்குள் போட்டு வைத்து பத்திரப்படுத்துவார்கள். அந்த பானைகளை குகைகளுக்குள்ளாக ஒழித்துவைப்பார்கள்.

இப்படி இவர்கள் எழுதி வைத்துள்ள வேதாகம பிரதிகள் தான் 1948-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன், அந்த பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு, கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருந்தான். கல் விழும் இடத்தில் வித்தியாசமான சத்தம் கேட்பதை உணர்ந்த அவன், அருகில் சென்று பார்த்த போது, ஒரு பானை இருப்பதை கண்டான். பின்பு அந்த பகுதிக்கு ஆய்வாளர்கள் சென்று, அந்த பகுதி முழுவதையும் ஆராய்ச்சி செய்து, ஆண்டவருடைய வார்த்தைகளை கண்டுபிடித்து எடுத்தார்கள்.

இந்த எசீன்ஸ்கள் ஏன் வேதாகமத்தை பிரதியாக்கம் செய்தார்கள் என்றால். என்றாவது ஒருநாள் கடவுளின் கோபம் எருசலேமின்மேல் எழும்பும்போது, தேவாலயத்தில் உள்ள தீட்டுப்பட்ட ஆசாரியர்கள் அனைவரும் அழிந்துபோவார்கள். அதன் பின்பு தூய்மைவாதிகளான நாங்கள் அங்கே சென்று கடவுளின் வார்த்தைகளை மக்களுக்கு போதிக்க வேண்டும். அதற்கு பயன்படுவதற்காகவே அவர்கள் வேதாகமத்தை பிரதியாக்கம் செய்தார்கள்.

இந்த எசீன்ஸ்கள் தங்களோடு அதிகமாக பேசிக்கொள்ள மாட்டார்கள். தங்களுக்குள்ள காரியங்களை பகிர்ந்துகொள்ள பெரும்பாலும் சைகை முறையைத் தான் பயன்படுத்தினார்கள். முக்கியமான காரியங்களை பேசித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்தால் மாத்திரம், மெல்லிய சத்தத்தில் பேசுவார்கள்.

யோவான்ஸ்நானன் ஆசாரிய வகுப்பைச் சார்ந்தவர். சரித்திரத்தின்படி முப்பது வயதில் வீட்டை விட்டு வெளியேறின யோவான்ஸ்நானன் எசீன்கள் வாழ்ந்த பகுதிக்கு சென்று, நான்கு மாதங்கள் ஒரு எசீனாகவே வாழ்ந்தார்.

யோவான்ஸ்நானன் எசீன்களோடு வாழ்ந்தார் என்பதற்கு அநேக வரலாற்று குறிப்புகள் உள்ளது. அது மாத்திரம் அல்ல, அவர் சாப்பிட்ட உணவும், அவர் அணிந்திருந்த ஆடையும் நமக்கு கூடுதல் ஆதாரமாக உள்ளது.

எசீன்கள் பொதுவாக தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல மாட்டார்கள். பொது இடங்களில் அவர்களை அதிகமாக பார்க்க முடியாது. பொதுமக்கள் எசீன்களை பார்ப்பது என்பது அறிதான காரியம். சாதாரண பொதுமக்கள் கும்ரான் பகுதிக்கு செல்லவும் அனுமதி இல்லை.

எசீன்களில் யாரேனும் ஒருவருக்கு தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வந்தால், அவர் எசீன்களின் தலைவரிடம் அனுமதி கேட்க வேண்டும். அந்த தலைவர் அனுமதி கொடுத்தால் அவர் செல்லலாம். அப்படி அவர் புறப்படும்போது, ஒட்டக மயிர் உடையைத்தான் உடுத்திக்கொண்டு செல்ல வேண்டும். அப்படி செல்லும் ஒருவர் எல்லாவிதமான உணவுகளையும் உட்கொள்ள முடியாது. அவர் தன்னோடு கூட பனைதேன் அல்லது காட்டுத் தேனை கொண்டுபோக வேண்டும். அதேபோல வருத்த வெட்டுக்கிளிகளை கொண்டு போக வேண்டும். இவைகளை மட்டும் தான் அவர்கள் சாப்பிட வேண்டும்.

பொது இடங்களில் யாரேனும் ஒரு எசீன் செல்வதை மக்கள் பார்த்தால், மிகவும் ஆச்சரியப்படுவார்கள். (இந்த நாட்களில் நாம் விமானத்தைப் பார்ப்பது போல). ஆனால் பொதுமக்கள் யாரும் அவர்களோடு பேச மாட்டார்கள். காரணம், எசீன்கள் அவர்களோடு பேச மாட்டார்கள். பொதுமக்கள் எசீன்களைக் குறித்து பயமும், பக்தியும் கொண்டவர்களாக இருந்தார்கள். பொதுமக்கள் எசீன்களைக் குறித்து, அவர்கள் தூய்மையானவர்கள், பரிசுத்தர்கள் என்று நினைத்தார்கள்.

யோவான்ஸ்நானனைக் குறித்து வேதத்தில் வாசிக்கும்போது, அவர் ஒட்டக மயிர் உடை அணிந்திருந்தார் என்றும், வெட்டுக்கிளியையும், காட்டுத்தேனையும உணவாக உட்கொண்டார் என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். (மத்தேயு 3:4, மாற்கு 1:6) இதிலிருந்து யோவான்ஸ்நானன் எசீன்களோடு நான்கு மாதங்கள் வாழ்ந்தார் என்று நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

நான்கு மாதங்களுக்குப் பின்பு கும்ரான் பகுதியில் இருந்து வெளியே வந்த யோவான்ஸ்நானன் தன் பெற்றோரைப் பார்ப்பதற்கு செல்லவில்லை. இயேசுவுக்காக வழியை ஆயத்தம் பண்ண துவங்கினார்.

பொதுமக்கள் யாரும் எசீன்களின் குரலைக் கேட்டது இல்லை. எசீன்கள் யாரும் பொதுமக்களிடத்தில் பேசமாட்டார்கள். ஆனால், யோவான்ஸ்நானன் பேசினார். பேசினது மாத்திரம் அல்ல, பிரசங்கம் பண்ணினார். எனவே அதைக் கேட்ட ஜனங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு அவருடைய வார்த்தையைக் கேட்கிறார்கள்.

எனவே தான் யோவான்ஸ்நானன் மிகவும் தைரியமாக மக்களைப் பார்த்து விரியன் பாம்புக்குட்டிகளே என்று சொல்லும்போது, மக்கள் மறுமொழியாக எந்த கேள்வியும் கேட்கவில்லை. யோவான்ஸ்நானன் மக்களைப் பார்த்து மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது. பாவத்தை விட்டு மனந்திரும்பாவிட்டால் அழிக்கப்படுவீர்கள் என்று பிரசங்கம் செய்கிறார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள் ஒரு எசீன் இப்படி நம்மத்தியில் வந்து பேசுகிறார் என்றால், அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும். நாம் அனைவரும் அழிந்துபோய்விடுவோம் என்ற பயத்தில், நாங்கள் பாவிகள் ஐயா, நாங்கள் மனந்திருப்ப என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

ஜனங்கள் இப்படி கேட்டபோது, கும்ரான் பகுதியில் எசீன்கள் காலையும், மாலையும் செய்யும் முறையை யோவான்ஸ்நானனுக்கு நியாபகம் வந்தது. எனவே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட ஜனங்கள் அனைவரையும் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று, எல்லோரையும் மூன்று முறை மூழ்கி எழும்பச் செய்கிறார் யோவான்ஸ்நானன்.

இப்படித்தான் ஞானஸ்நானம் என்ற முறைமை உருவானது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.