Type Here to Get Search Results !

யோவான் ஸ்நானனின் மரணம் | Death of John the Baptist | Jesus Sam

============
யோவான்ஸ்நானன் (பாகம் 2)
============


யோவான்ஸ்நானன் தாயின் கருவில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார் என்றும், முப்பது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், நான்கு மாதங்கள் எசீன்களோடு வாழ்ந்தார் என்றும், எசீன்கள் என்றால் யார்? என்றும், யோவான் எப்படி ஜனங்கள் மத்தியில் பிரசங்கம் பண்ணினார் என்றும் முதல் பாகத்தில் அறிந்துகொண்டோம்.

இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம்பண்ண யோவான்ஸ்நானன் வந்தார் என்று நமக்கு தெரியும். அவர் எப்படி வழியை ஆயத்தம்பண்ணினார் என்று இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

கல்வாரி சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்படுவதற்காகவே இயேசு கிறிஸ்து வந்தார்.

நம்முடைய ஆண்டவர் திரித்துவமாய் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) செயல்படுகிறவர். தேவனுடைய நீதி, மனிதன் பாவம் செய்தால், பாவத்திற்கான தண்டனையை (மரணம்) அவன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறது. அதற்கு பதிலாக தேவனுடைய கிருபை, மனிதனுடைய தண்டனையை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று சொல்லுகிறது. தேவனுடைய கிருபை என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. தேவனுடைய கிருபை, தேவனுடைய நீதிக்கு தேவையான தண்டனையைப் (மரணம்) பெற்றுக்கொள்ளவே பூமிக்கு வந்தது.

யோவான்ஸ்நானன் யோர்தான் நதியிலே ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது இயேசுகிறிஸ்து அவ்வழியே வருவதைக் கண்ட யோவான்ஸ்நானன், இயேசுவைப் பார்த்து: இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கின்ற தேவ ஆட்டுக்குட்டி என்று சொல்லுகிறார்.

யோவான்ஸ்நானன், இயேசு கிறிஸ்து தன்னிடத்தில் தான் வருகிறார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இயேசு கிறிஸ்து தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெற வருகிறார் என்று அறிந்த யோவான்ஸ்நானன் மிகவும் ஆச்சரியப்படுகிறார்.

மத்தேயு 3:13,14,15
13. அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு, இயேசு கலிலேயாவை விட்டு, யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
14. யோவான் அவருக்கு தடை செய்து, நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாய் இருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா? என்றான்.
15. இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிரைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

யோவான்ஸ்நானன் மனந்திரும்புதலுக்கு ஏற்ற பிரசங்கத்தை செய்தார். மக்கள் நாங்கள் மனம் திரும்ப விரும்புகிறோம் என்று சொன்னபோது, எசீன்கள் காலையும், மாலையும் செய்யும் முறைமையின்படி, மனம் திரும்ப விரும்புகிறவர்களை தண்ணீருக்குள் மூன்று முறை மூழ்கி எழும்பச் செய்தார்.

அந்த நேரத்தில் இயேசு ஞானஸ்நானம் பெற வந்ததைக் கண்ட யோவான்ஸ்நானன் குழப்பமடைந்து, ஆண்டவரே, நீர் பரிசுத்தர், நான் தான் பாவி, நான்தான் உம்மிடத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும். நீர் ஏன் என்னிடத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு இயேசு: இப்பொழுது இடம் கொடு, இப்படி எல்லா நீதியையும் நிரைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்று சொல்லுகிறார்.

இங்கே இயேசு என்ன சொல்லுகிறார் என்றால், நீதிக்குத் (பிதா) தேவையானதைக் கொடுக்க, கிருபையாகிய நான் வந்திருக்கிறேன். எனவே எனக்கு இடம் கொடு என்று சொல்லுகிறார். உடனே யோவான்ஸ்நானன் இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்

ஞானஸ்நானம் என்ற முறையை இயேசு கிறிஸ்து உருவாக்கவில்லை. எசீன்களிடமிருந்து கற்றுக்கொண்டதை, யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் என்று உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்து யோவான்ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதின் மூலம், இயேசு கிறிஸ்துவும் ஞானஸ்நானத்தை அங்கிகரிக்கிறார்.

யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு வழியை ஆயத்தம்பண்ண வந்தார் என்றால், ஞானஸ்நானம் என்ற முறையை உலகிற்கு அறிமுகப்படுத்த வந்தார் என்று பொருள்.

ஒரு நபர் செய்த குற்றத்திற்கு மற்றவர் தண்டனை அனுபவித்தால் அது நீதியாகுமா? இல்லை. யார் தவறு செய்தார்களோ, அவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் உலக நீதி. ஆயிரம் குற்றவாளிகள் காப்பாற்றப்படலாம், ஆனால் ஒரு நீதிமான் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்று உலகத்தார் சொல்லுவதுண்டு.

இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே. அவர் குற்றம் செய்தாரா? அவரிடம் பாவம் இருந்ததா? இல்லை. யார் அந்த குற்றவாளிகள்? யார் அந்த பாவிகள்? நாம் தான். குற்றமில்லாத, பாவமில்லாத இயேசு தண்டிக்கப்பட்டதால், நான் காப்பாற்றப்பட முடியுமா? இல்லை.

நான் செய்த குற்றத்திற்கு நான் தண்டிக்கப்பட வேண்டும். அப்படியானால், இயேசுவைப் போல நானும் சிலுவையில் அறையப்பட வேண்டும். இயேசுவைப்போல நாமும் சிலுவையில் அறையப்பட முடியுமா? இல்லை.

எனவே தான் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்து, அதை ஒரு அடையாளமாக உருவாக்கி, இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம்பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகிய மூன்று காரியத்தையும் ஞானஸ்நானம் என்னும் முறைக்குள் கொண்டு வந்தார்.

எனவே நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது இயேசுவோடு சிலுவையில் அறையப்படுகிறோம், அவரோடு கூட மரிக்கிறோம், அவரோடு கூட அடக்கம்பண்ணப்படுகிறோம், கடைசியில் அவரோடு கூட உயிரோடு எழும்புகிறோம். இப்படியாக ஞானஸ்நானம் என்ற முறையின் மூலம் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை நாம் அனுபவிக்கிறோம்.

உலகப்பிரகாரமாக வீட்டிலோ, வெளியிலோ, வேலை செய்யும் இடங்களிலோ, பொது இடங்களிலோ நாம் தவறு செய்யும்போது, தண்டிக்கப்படுகிறோம். தண்டிக்கப்படும்போது, அந்த தண்டனைக்குறிய வலியை (வேதனை) நாம் தான் அனுபவிக்கிறோம்.

உலகப்பிரகாரமாக நாம் எந்த தண்டனையை அனுபவித்தாலும் அது நமக்கு வேதனையைத்தான் கொடுக்கும். ஆனால், நம்முடைய பாவத்திற்காக நாம் தண்டிக்கப்படும்போது மாத்திரம் அது நமக்கு இன்பமாய் இருக்கும். நாம் ஞானஸ்நானம் எடுக்கச் செல்லும்போது, சந்தோஷமாக செல்கிறோம்.

ஞானஸ்நானம் என்பது ஒரு சந்தோஷமான நிகழ்வு என்றாலும், ஞானஸ்நானத்தின் போது நாம் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மீண்டும் உயிரோடு எழும்புகிறோம் என்பதை உணர வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம்பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகிய இந்த மூன்று காரியங்களோடும் நம்மை இணைத்து நாமும் அவரோடு கூட மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்தெழக்கூடிய அடையாமாகிய ஞானஸ்நானத்தைத்தான் யோவான்ஸ்நானன் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த வழியை ஆயத்தம்பண்ணவே யோவானஸ்நானன் வெளிப்பட்டார்.

ஞானஸ்நானம் என்னும் முறை இல்லையென்று சொன்னால், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தோடு நமக்கு எந்த தொடர்பும் இல்லை. இப்படிப்பட்ட நல்ல ஒரு வாய்ப்பை அதாவது முறையை நமக்காக ஏற்படுத்திக்கொடுத்த யோவான்ஸ்நானனுக்காக நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

யோவான்ஸ்நானனின் மரணம்
ஏரோது ராஜாவின் சகோதரன் பெயர் பிலிப்பு. பிலிப்புவின் மனைவி பெயர் ஏரோதியாள். ஏரோது தன் சகோதரன் மனைவி ஏரோதியாளை தனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டான். ஏரோது அரசன் என்பதால், அவன் செய்தது தவறு என்று சொல்வதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை. ஆனால், யோவான்ஸ்நானன் ஏரோதையும், ஏரோதியாளையும் பார்த்து, நீங்கள் விபச்சாரம் செய்கிறீர்கள் என்று சொல்லுகிறார்.

யோவான்ஸ்நானன் இப்படி சொன்னதினால், ஜனங்களுக்கு இடையூராக இவர் செயல்படுகின்றார் என்ற குற்றத்தை இவர்மேல் சூட்டி, இவரை கைது செய்கிறார்கள். ஏரோதுவின் அரண்மனையில் உள்ள நிலத்தடி சிறைச்சாலையில் யோவான்ஸ்நானனை அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த சிறைச்சாலை தெக்கப்போலி நாட்டில் இருக்கிறது. யோவான்ஸ்நானனை குற்றம் சாட்டியிருப்பது மரண தண்டனைக்கான குற்றம் அல்ல.

இயேசு கிறிஸ்து இப்போது கலிலேயாவில் இருக்கிறார். யோவான்ஸ்நானன் தெக்கப்போலி நாட்டில் உள்ள ஏரோதுவின் அரண்மனை நிலத்தடி சிறைச்சாலையில் இருக்கிறார். கலிலேயாவிற்கும், தெக்கப்போலி நாட்டிற்கும் இடைப்பட்ட தூரம் மூன்று நாள் பிரயாண தூரம்.

யோவான்ஸ்நானன் செய்த குற்றம் பெரிய குற்றம் அல்ல. எனவே, யோவான்ஸ்நானனைப் காலையிலும், மாலையிலும் சென்று பார்ப்பதற்கு அனுமதி உண்டு. யோவானுடைய சீஷர்கள் தினமும் காலையும், மாலையும் சென்று யோவானைப் பார்ப்பதுண்டு.

ஏரோது மன்னனுக்கு அநேக இடங்களில் அரண்மனை உண்டு. செசரியா பட்டணத்தில் ஒரு அரண்மனை இருந்தது. எருசலேம் பட்டணத்தில் ஒரு அரண்மனை இருந்தது. சவக்கடலுக்கு அருகே மக்சாடா என்ற இடத்தில் ஒரு அரண்மனை இருந்தது. தெக்கப்போலியில் ஒரு அரண்மனை உண்டு.

ஏரோது தெக்கப்போலியில் உள்ள அரண்மனையில் தங்கும்படியாக செல்கிறார். ஒருசில நாட்கள் அங்கே தங்கியிருக்கிறார். அப்போது அங்கே ஒரு விருந்து நடைபெறுகிறது. ராஜ அரண்மனையில் முக்கிய பொறுப்புக்களில் இருக்கும் அனைவரும் இந்த விருந்தில் கலந்துகொண்டார்கள்.

ஏரோது தனக்கு மனைவியாக்கிக்கொண்ட பிலிப்புவின் மனைவி ஏரோதியாளுக்கு 10 அல்லது 11 வயது நிரம்பத்தக்க ஒரு மகள் இருந்தாள். விருந்து நடைபெறும் அந்த நாளில், ஏரோதியாளின் மகள் அனைவருக்கும் முன்பாக வந்து நடனமாடினாள். ஏரோதியாளின் மகள் நடனமாடியதைக் கண்டு, அவையில் இருந்த அனைவரும் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்.

ஏரோதியாளின் மகள் மிகச் சிறப்பாய் நடனமாடியதால், சந்தோஷத்தில் உணர்ச்சிவசப்பட்ட ஏரோது, அவளை அழைத்து, உனக்கு என்ன வேண்டுமென்று கேள், நீ எதைக் கேட்டாலும் நான் உனக்குத் தருவேன் என்று சொல்லுகிறார்.

அந்த சிறு பெண் என்ன கேட்பது என்று தெரியாமல், தன் தாயிடம் சென்று கேட்கிறாள். ஏரோதியாள் தன் மகளைப் பார்த்து: யோவான்ஸ்நானனுடைய தலையை ஒரு தட்டி (பாத்திரம்) வைத்துக் கொடுங்கள் என்று ராஜாவிடம் கேள் என்று சொல்லுகிறாள். சிறுமிக்கு தாய் என்ன கேட்கச் சொல்லுகிறாள் என்று கூட தெரிந்திருக்காது. ஏதோ தங்க தட்டில், தங்கப் பொருள் ஒன்றாக இருக்கும். அதை நம் வீட்டில் வைத்து அழகு பார்ப்போம் என்ற ஆசையில், தன் தாய் சொன்னதை அப்படியே ஏரோதிடம் சொல்லுகிறாள்.

அவையில் அனைவருக்கும் முன் நான் வாக்குக்கொடுத்துவிட்டேன், சிறுமி கேட்டதை என்னால் செய்யமுடியவில்லை என்றால், அது என் ராஜாங்கத்திற்கு அவமானம் என்று நினைத்த ஏரோது, ஒரு போர்வீரனை அழைத்து, சிறையில் இருக்கும் யோவான்ஸ்நானனின் தலையை வெட்டி, ஒரு தட்டி வைத்து கொண்டு வர என்று கட்டளையிடுகிறார்.

யோவான்ஸ்நானனின் தலை கொண்டுவரப்பட்டது. உண்மையான மனுஷ தலையைப் பார்த்ததும் சிறுமை அலறியிருப்பாள். கத்தியிருப்பாள். ஏன் மயங்கி கீழே விழுந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.  உடனே அந்த யோவான் ஸ்நானன் தலை இருந்த பாத்திரத்தை தன் தாயிடம் கொடுக்கிறாள் அந்த சிறுமி.

காலையின் யோவான்ஸ்நானனைப் பார்த்துவிட்டு சென்ற அவருடைய சீஷர்கள் மாலையில் அவரைப் பார்க்கும்படியாக வந்த போது, யோவான்ஸ்நானன் கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். விரைந்து சென்று அவருடைய தலையில்லாத சரீரத்தை பெற்றுக்கொண்டு, அவரை அடக்கம் செய்துவிட்டு, கலிலேயாவிற்கு விரைந்து ஓடினார்கள்.

மூன்று நாளைக்குப் பின்பு கலிலேயாவிற்கு வந்த யோவான்ஸ்நானனின் சீஷர்கள், நடந்த யாவற்றையும் இயேசுவுக்கு அறிவிக்கிறார்கள்.

இயேசுவானவர் பரலோகத்திலிருந்து பூமிக்கு வரும்போது, தனது தெய்வத்துவத்தை விட்டுவிட்டுத்தான் வந்தார் என்று பிலிப்பியர் 2-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இயேசுவானவர் நூற்றுக்கு நூறு சதவீதம் நம்மைப்போலவே மனிதனாக காணப்பட்டார். எனவே, யோவான்ஸ்நானன் கொலை செய்யப்பட்ட நிழக்வு இயேசுவுக்கு தெரிந்திருக்காது.

யோவான்ஸ்நானன் உயிரோடு இல்லை என்பதை அறிந்துகொண்ட இயேசு மிகவும் வேதனைப்பட தொடங்கினார். எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரு சிறுமியின் வார்த்தைக்காக யோவான்ஸ்நானன் கொலை செய்யப்பட்டார். அவருடைய தலையில்லாத சரீரத்தைத்தான் அவருடைய சீஷர்கள் அடக்கம் செய்தார்கள் என்று கேள்விப்பட்ட இயேசு மிகவும் கலங்கினார்.

நம்முடைய வாழ்விலும் கூட நமக்கு நெருக்கிய உறவுகளை நாம் இழக்கும்போது வேதனைப்படுவதுண்டு. நண்பர் யாரேனும் விபத்திலே மரித்துவிட்டால், உறவினர் யாரேனும் திடீரென அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டால், நாம் எவ்வளவு பெரிய பரிசுத்தவானாக இருந்தாலும், கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்று சொல்ல மாட்டோம். நம்மால் சொல்ல முடியாது. அதைப்போலவே, இயேசு கிறிஸ்துவுக்காக வழியை ஆயத்தம்பண்ண வந்த யோவானஸ்நானன் மரித்துப்போனான் என்ற செய்தியைக் கேட்ட இயேசு கிறிஸ்து மிகவும் வேதனைப்பட்டு கலங்குகிறார்.

யோவான்ஸ்நானன் அநியாயமாய் கொலைசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட இயேசு கிறிஸ்து, துயரத்தினால் தனிமையை விரும்பினார். ஜனங்களோடு பிரசங்கம் செய்து கொண்டிருந்த இயேசு தனிமையாய் இருப்பதற்காக எழுந்தார். உடனே பேதுருவும், யோவானும், யாக்கோபும் அவருக்கு பின்பாக சென்றிருப்பார்கள். அவர்களுக்கு பின்பாக மற்ற சீஷர்கள் சென்றிருப்பார்கள். அவர்களுக்கு பின்பாக பொதுமக்கள் சென்றிருப்பார்கள். ஆனால், இயேசு எல்லாரையும் விட்டு, ஒரு படவில் ஏறி தனிமையாய் இருக்கும்படியாக சென்றார்.

இயேசு அக்கரைக்குப் போகிறார் என்று கேள்விப்பட்டு, அநேக ஜனங்கள் அங்கேயும் கூடிவந்தார்கள். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மனநிலை தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களுக்கு தேவையானது இயேசுவிடமிருந்து ஆசீர்வாதமும், சுகமும் தான். அவர்களுக்கு ஆண்டவர் பிரசங்கம் செய்யவில்லை. வியாதியஸ்தர்களுக்கு மாத்திரம் சுகம் கொடுத்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

சரீர சுகவீனத்தினால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை நாம் சந்திக்கச் செல்கிறோம் என்றால், மருத்துவமனையில் அநேக வியாதியஸ்தர்கள் இருப்பார்கள், அநேகர் அவர்களைப் பார்ப்பதற்காக வந்திருப்பார்கள். அவர்கள் அனைவரையும் நாம் பார்க்கும்போது, நமக்கு அனுதாபம் வரும். அதைப்போலவே இயேசு கிறிஸ்து துயரத்தில் இருக்கும்போது, அநேகர் சுகத்திற்காக அவரிடத்தில் வருகிறதைக் கண்டு, அவர்களுக்கு சுகத்தைக் கொடுக்கிறார். பின்பு, அவருடைய சீஷர்களும் அவரிடத்தில் வந்துவிட்டார்கள்.

பிலிப்பு இயேசுவினிடத்தில் வந்து, ஐயா ஜனங்களை சாப்பிடும்படி அனுப்பிவிடுவோம் என்று கூறுகிறார். அப்பொழுது இயேசுவுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நான் இவர்கள் அனைருக்கும் உணவு கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என்று இயேசு நினைக்கிறார்.

யூதக் காலாச்சாரப்படி ஒருவர் மரித்துவிட்டால், அவருடைய மரணத்தைக் குறித்து விசாரிக்க வருகிறவர்களை அந்த வீட்டின் உரிமையாளர் அமரவைத்து உணவு கொடுத்து வந்ததற்கு நன்றி என்று சொல்லி அவர்களை வழிஅனுப்பி வைக்க வேண்டும். நம்முடைய இந்திய கலாச்சாரப்படி ஒரு மரண வீட்டிற்கு நாம் செல்கிறோம் என்றால், வீட்டின் உரிமையாளர்களிடம் சொல்லாமல் திரும்பிவிட வேண்டும். ஆனால், யூதக் கலாச்சாரப்படி அந்த வீட்டின் உரிமையாளர் தான் வந்தவர்களை வழி அனுப்பி வைக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து சூழ நிற்கும் ஜனங்கள் என்னுடைய நண்பனின் மரணத்தைக் குறித்து விசாரிக்க வந்தவர்கள் என்று எண்ணி, அவர்களை அமர வைத்து, விருந்து கொடுத்து, அனுப்பிவிட வேண்டும் என்று நினைக்கிறார்.

இயேசு கிறிஸ்து ஜனங்களை அமர வைத்து, ஐந்து அப்பம் இரண்டு மீனை அவர்களுக்கு உணவாக கொடுத்து, அவர்களை வழிஅனுப்பி வைத்தார். ஜனங்களை அனுப்பும் முன்பாகவே, பன்னிரெண்டு சீஷர்களை அவர் அனுப்பிவைத்தார். சீஷர்கள் இயேசுவை தனியே விட்டுவிட்டு செல்வதற்கு தயங்கினார்கள். இயேசு கிறிஸ்து அவர்களை துரிதப்படுத்தி புறப்படுங்கள் புறப்படுங்கள் என்று சொல்லி அனுப்பிவைத்தார். இயேசு கிறிஸ்து சீஷர்களை அனுப்பிவிட்டு, பின்பு ஜனங்களையும் அனுப்பிவிட்டு, பின்பு தூர இடத்திற்கு சென்று ஜெபிக்கிறார்.

இயேசு கிறிஸ்து செய்த அநேகமாயிரம் அற்புதங்களில், அவர் தனக்காக செய்து கொண்ட ஒரே அற்புதம் ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் ஆசீர்வதித்துக் கொடுத்ததுதான்.

இயேசு கிறிஸ்துவுக்கு நம்முடைய பாடுகள் தெரியும், நம்முடைய உபத்திரவங்கள் தெரியும். ஒருவரை இழந்தால் நாம் எவ்வளவு வேதனைப்படுவோம் என்பதும் அவருக்கு தெரியும்.

மத்தேயு 14:3-23

யோவான்ஸ்நானனின் மரணம் இயேசு கிறிஸ்துவை மிக அதிகமாக பாதித்தது. வேறு யாருடைய மரணமும் இயேசுவை இந்த அளவிற்கு பாதிக்கவில்லை. இயேசு கிறிஸ்துவுக்கு யோவான்ஸ்நானனோடு மூன்று விதமான உறவு இருந்தது.

1. யோவான்ஸ்நானன் இயேசு கிறிஸ்துவின் தூரத்து உறவினர். இருவருக்கும் ஆறுமாத வயது வித்தியாசம். கன்னிப்பெண் மரியாளே, எலிசபெத்தின் வீட்டிற்கு சென்று மூன்று மாதம் தங்கியிருப்பாள் என்றாள். இயேசுவும், யோவானும் அவர்களுடைய முப்பது வருட வாழ்வில் எத்தனை நாள் யோவான் இயேசுவின் வீட்டிற்கு சென்றிருப்பார், இயேசு யோவானின் வீட்டிற்கு சென்றிருப்பார்.

2. யோவான்ஸ்நானனும் இயேசு கிறிஸ்துவும் நண்பர்கள்.

3. ஊழியப்பாதையில் இயேசுவுக்கு வழியை ஆயத்தம்பண்ண வந்த ஒரு தீர்க்கதரிசிதான் இந்த யோவான்ஸ்நானன்.

யோவான்ஸ்நானனின் மரணம் இயேசு கிறிஸ்துவை எந்த அளவிற்கு பாதித்தது என்று அறிந்துகொண்டோம். நம்முடைய வாழ்விலும் நம்மை வேதனைப்படுத்தக்கூடிய, நம்முடைய மனதைக் காயப்படுத்தக்கூடிய, தாங்கமுடியாத துயரத்தை நாம் சந்திக்கும்போது, என்னுடைய வேதனை யாருக்கு தெரியும் என்று புலம்ப வேண்டாம். நம்முடைய மன வேதனைகளும், மன அழுத்தங்களும் இயேசுவுக்கு நன்றாகத் தெரியும்.

நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகள் எவ்வளவு வேதனை நிறைந்ததாக இருந்தாலும், பாடு நிறைந்ததாக இருந்தாலும், கவலை நிரைந்ததாக இருந்தாலும் எல்லாம் இயேசுவுக்குத் தெரியும். காரணம் மனுஷனாகிய இயேசு கிறிஸ்து எல்லா சூழ்நிலைகளையும் அனுபவித்திருக்கிறார்.

இவ்வுலகில் யார் நம்மை மறந்தாலும், யாரை நம்மை வெறுத்தாலும், யார் நம்மை விட்டுச் சென்றாலும், அவரை மாத்திரம் உறுதியாய் நம்புவோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்…..!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.