அற்புதம் செய்வார்
=============
அன்றாட வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவங்களும் சூழ்நிலைகளும் ஒன்றும் சாதாரணமானவைகள் என்று சொல்லிவிட முடியாது. சில வேளைகளில் குடும்பத்தில் நடக்கும் சம்பங்கள் ஒரு மனிதனுடைய சூழ்நிலைகளையே மாற்றிப் போட்டுவிடுகிறது. கடல் கொந்தளித்து ஒரு புயல் வீசினால் எப்படியோ அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் நம்மையும் மீறி நடந்துவிடுவதுண்டு.
எனக்கு ஏன் நேர்ந்தது, நான் என்ன பாவம் செய்தேன். என் குடும்பத்தில் இவைகள் நேரிடக் காரணம் என்ன என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறோம். சில வேலைகளில் விடை தெரியாத கேள்விக்குறியாக மாறிவிடுவதும் உண்டு.
உங்களுக்குள்ளே இயேசுவைப் பற்றிய ஒரு பெரிய நம்பிக்கையை இந்த சம்பவம் கொண்டு வரும் என்று நம்பி ஒரு உண்மை சம்பவத்தை, உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஒரு நண்பர் வாழ்வில் நடந்த சம்பவம். நல்ல மனிதர். அழகான குடும்பம். சந்தோஷத்திற்கு பஞ்சம் இல்லை. மகிழ்ச்சி நிறைந்த குடும்பம். வாழ்க்கையை வாழ தெரிந்தவர்கள். பெயர் குறிப்பிடவில்லை. விசுவாசத்திற்கு பெயர், ஊர் தேவையில்லை.
17 வயது நிரம்பிய மகனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் தங்கள் மகனை அருகில் உள்ள தெரிந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்த போது, மருத்துவர் சோதித்துப் பார்த்து நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று நிலைமையை அறிந்து காலதாமதம் செய்யாமல் ஒரு பெரிய மருத்துவமனைக்கு சிபாரிசு செய்தார். பதறிப்போன பெற்றோர்கள் கண்ணீரோடு என்ன செய்வது என்று யோசிக்ககூட நேரமில்லாமல் தன்மகனை இரவோடு இரவாக சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனையில் சேர்த்துவிட்டார்கள்.
மருத்துவர்களுக்கு செய்திபோனது, அவர்கள் அந்த மகனை சோதித்துப் பார்த்துவிட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அறுவை சிகிச்சை செய்தால் கூட பிழைப்பது கடினம் என்றும் சொல்லி விட்டார்கள். பெற்றோர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களில் கண்ணீர், மகனை குறித்த பாரம், துக்கமாக மாறிவிட்டது. மிகுந்த பாசம் வைத்து வளர்த்த மகன் அவன். நடக்க பழகின நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் அவன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் கண்முன் வருகிறது. இருதயம் கலங்குகிறது. வணங்காத தெய்வம் இல்லை, மகனைக்குறித்து கவலை அதிகமாகிக்கொண்டே இருந்தது.
தொலைபேசி மூலம் ஜெபத்திற்காக அழைக்கப்பட்டு நானும் நண்பர் மகனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றேன். நுழையீரல் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடக்கிற மகனை பார்த்ததும் என் கண்கள் கலங்கி நின்றேன். அவர்களும் கலங்கி நின்றார்கள். என் இருதயம் தேவனோடு பேசினது. நான் அவர்களோடு பேசினேன். கவலைப்படாதிருங்கள், கர்த்தர் இயேசு எதையும் செய்ய வல்லவர், மகனுக்கு ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்வார். மகன் சுகமடைவான், உங்கள் மகன் விஷயத்தில் பிள்ளைக்கு ஜீவனை கொடுக்கும் இயேசு இளைப்பாற மாட்டார். பொருத்திருந்து பாருங்கள் அதிசயங்களை காண்பீர்கள். இன்றைக்கே செய்வார். கலங்கவேண்டாம் என்று, பாரத்தோடு மன உருக்கத்தோடு இயேசு நீரே இந்த மகனுக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் (உபாகமம் 30:20) மகனுக்கு அற்புதங்களை செய்யுங்கள், பழுதடைந்த பாதிக்கப்பட்ட உறுப்புகள் எல்லாம் உம்முடைய நாமத்தினாலே செயல்படுவதாக என்று சொல்லி ஜெபித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வந்து விட்டேன்.
என்ன அற்புதம் அன்று இரவே அந்த மகனை சோதித்துப் பார்த்த மருத்துவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம் நம்ப முடியவில்லை. ஏதோ அற்புதம் நடந்துள்ளது. எல்லா உறுப்புகளும் எப்போதும் போலவே செயல்படுகிறது, அறுவை சிகிச்சை தேவையில்லை, நாளைக்கே உங்கள் மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறிவிட்டார்கள். பெற்றோர்களுக்கு ஒரே ஆச்சரியம். கண்களில் ஆனந்த கண்ணீர். இருதயம் சந்தோஷத்தால் நிறைந்து இருந்தது. இயேசு அற்புதம் செய்தார் என்று தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி பரிபூரண சுகத்தோடு மகனை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
பிரியமானவர்களே என்ன இப்படியும் நடக்குமா என்று உறைந்து போய் நிற்கிறீர்களா! என் வாழ்வில் இந்த அற்புதத்தை இயேசு செய்வாரா! என் வியாதி குணமடைந்து சுகம் பெறுவேனா? என்று தானே நினைக்கிறீர்கள். இயேசுவை நம்புங்கள், உண்மையான உயிருள்ள ஒரே தெய்வம் இயேசு மட்டுமே. மகனுடைய வாழ்வில் அற்புதங்களை செய்தவர், உங்கள் வாழ்விலும் அற்புதங்களை செய்வார். கலங்க வேண்டாம். இயேசுவை நம்புங்கள் அவர் உங்களை கைவிடமாட்டார்.
உங்களுக்கு இருக்கிற பிரச்சனைகள், எதுவாக இருந்தாலும் இயேசுவுக்கு முன்பாக ஒன்றுமில்லிங்க, அவர் சொன்னால் போதும் உங்கள் துக்கம் மாறும். தொட்டால் போதும் உங்கள் வியாதி நீங்கும். அதிசயம் நடக்கும்.
சோர்ந்து போகாமல் இயேசுவே என் துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் என் சஞ்சலத்தை நீக்கும், என் வியாதியை சுகமாக்கும், நான் உம்மை என் இருதயத்தில் நம்புகிறேன். அந்த மகனின் வாழ்வில் அற்புதங்கள் செய்வதர் நீர், என் வாழ்விலும் செய்யும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்கள் வாழ்விலும் பெரிய காரியங்களை செய்வார்.
தொடர்புக்கு,
வல்லமையுள்ள இயேசு ஊழியங்கள்,
57/29, பம்மல் நல்லதம்பி தெரு,
எம்.ஜி.ஆர் நகர், சென்னை. – 600 078
செல்: 9382157309
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.