Type Here to Get Search Results !

தேவன் ஏன் மனிதனானார்? | Why Did God Appear as Man? | Christian Short Message | பத்திரிக்கை செய்தி | Jesus Sam

==============
தேவன் ஏன் மனிதனானார்?
Why Did God Appear as Man?
==============


ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவன் இவ்வுலகில் மனிதனாக அவதரித்தார். அண்ட சராசரங்களையும் மனிதனையும் சிருஷ்டித்த தேவன், ஏன் மனிதனாக அவதரிக்க வேண்டும்?

முதலாவதாக, தேவன் தேவனாக தம்மை வெளிப்படுத்துவாரெனில் ஒருவரும் சேரக்கூடாத ஒளியிலிருக்கும் அந்தத் தேவனை, பாவங்களில் ஜீவித்து இருளின் அதிகாரத்திலிருக்கும் மனிதன் அணுகக் கூடாதவனாயிருப்பான். இடிமுழக்கத்தோடும் மின்னலோடும் எக்காள சத்தத்தோடும் தேவன் இஸ்ரவேல் ஜனங்களோடு பேசினபோது அவர்கள் நடுங்கினார்கள். மகிமையுள்ள தேவனோடு பேச அவர்களுக்குத் தைரியமில்லாதிருந்தது. ஆனால் அன்புள்ள தேவன் மற்றெல்லா சிருஷ்டிகளைப் பார்க்கிலும் மனிதனை அதிகமாய் நேசித்து அவனைப் பாவங்களிலிருந்து விடுதலையாக்கி, பாவத்தின் பலனாக அவன்மேல் வந்த சாபங்கள், பிரச்சினைகள், வியாதிகள் யாவற்றிலிருந்தும் அவனை விடுதலையாக்க விரும்பினார். அதற்காக அவர் மனிதனைப் போல மாம்சமும் இரத்தமும் உடையவராக பாவமில்லாதவராய் அவதரித்தார். அவர் ஏறக்குறைய முப்பத்து மூன்றரை ஆண்டுகள் இவ்வுலகில் மனிதனாகவே, மனிதனைப் போல பசியுடையவராக, தாகம் உடையவராக, பெலவீனமுடையவராக வாழ்ந்தார். ஆதலால் ஜனங்கள் பயமின்றி அவரோடு பழகினார்கள். அவருடைய வார்த்தைகளைக் கேட்க மிகவும் விரும்பினார்கள். தேவனுடைய அன்பைப் பற்றியும், அவருடைய இரக்கத்தைக் குறித்தும், அவருடைய திட்டங்களைப் பற்றியும் ஜனங்கள் அறிந்துகொண்டார்கள்.

இரண்டாவதாக, மனிதன் ஜீவிப்பதற்கான மாதிரியைக் காண்பிக்கும் பொருட்டு தேவன் மனிதனானார். மனிதன் தேவனைப் போல பூரண சற்குணம் உடையவனாயிருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஆதலால் மாம்சமும் இரத்தமுமுடையவராக வெளிப்பட்ட அந்தத் தேவன், பரிசுத்தமுள்ளவராக, தாழ்மையுள்ளவராக, அன்புள்ளவராக, மற்றவர்களை மன்னிக்கிறவராக, இரக்கமுள்ளவராக இப்பாவ உலகில் ஜீவித்துக் காண்பித்தார்.

மூன்றாவதாக, மனிதனை மீட்பதற்காகத் தேவன் மனிதனானார். ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்வது இரத்தமே. ஜனங்கள் பாவநிவிர்த்திக்காக இளங்காளை, வெள்ளாடு, போன்றவைகளின் இரத்தத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆனால், அந்த இரத்தமோ மனிதனுடைய பாவத்தை மன்னிக்க முடியாது. சிருஷ்டிகளின் மேன்மையான சிருஷ்டியாகிய மனிதனுடைய பாவம் மிருகத்தின் இரத்தத்தால் கழுவப்பட முடியாது. ஆதலால் அந்த மேன்மையான சிருஷ்டியாகிய மனிதனை சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தராகிய தம்முடைய இரத்தம் தான் மனிதனின் பாவத்தைக் கழுவவும், மன்னிக்கவும் முடியுமென்பதை தேவன் அறிந்து, மனிதனாக இவ்வுலகில் பாவமில்லாதவராய் அவதரித்து, மனிதனாக ஜீவித்து, தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிலுவை மரத்தில் மனிதனுக்காக சிந்தி, அவனுக்காக மரணத்தை ருசிபார்த்தார். அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தை விசுவாசித்து, தன் பாவங்களை மனஸ்தாபத்துடன் அறிக்கை செய்கிற எந்த மனுஷனுக்கும் பாவ மன்னிப்பையும் பாவங்களிலிருந்து விடுலையையும் தந்து, பாவங்களின் பலனாக வந்த சாபங்கள், வியாதிகளிலிருந்தும் அவனை விடுதலையாக்கும் பொருட்டாக அவர் அப்படியானார்.

மனிதனாக அவதரித்து, மனிதனாக ஜீவித்து, மனிதனுக்காக முழு இரத்தமும் சிந்தி மரித்த அந்த தேவன் தான் கர்த்தராகிய இயேசு. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும், எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது. (1 தீமோத்தேயு 1:15) அவரைக் குறித்து உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று கூறப்பட்டுள்ளது. மனிதனுக்காக மனிதனாக அவதரித்து, மனிதனுடைய பாவங்களுக்காக மரித்த கர்த்தராகிய இயேசு, மெய்யான தேவனானபடியால் அவர் மூன்றாம் நாளில் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றும் என்றும் ஜீவிக்கிறார்.

அன்பார்ந்த நண்பரே, அந்த அருமை இயேசுவை உம் இரட்சகராக ஏற்றுக்கொள்வீராக! கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் உம் பாவங்கள் நீங்கக் கழுவப்பட்டு, ஒரு பரிசுத்த ஜீவியம் செய்வீராகில், அவர் இருக்கும் பரலோகத்தில் நீரூம் அவரோடு கூட நித்திய நித்தியமாய் வாழலாம். நித்திய மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் பின்வரும் ஜெபத்தைச் சொல்லுங்கள்.

“கர்த்தராகிய இயேசுவே, நீர் தேவனாய் இருந்தும் பாவியான மனுஷனாகிய என்னை நேசித்து, எனக்காக மனிதனாக அவதரித்து, என் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். என் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து, எனக்கு சந்தோஷ சமாதானம் ஈந்து, நித்தியத்தில், மோட்ச இராஜ்யத்தில் என்னைச் சேர்த்துக் கொள்ளும். ஆமென்.“

தொடர்புக்கு,
சென்னை இறையியல் கல்லூரி,
14, வாடல்ஸ் ரோடு,
கீழ்ப்பாக்கம், சென்னை. – 600 010
தொலைப்பேசி: 9444251941

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.