Type Here to Get Search Results !

Luke 7:1-10 bible study tamil | யார் இந்த நூற்றுக்கு அதிபதி? | Roman officer centurion | gospel sermon points | bible character sermon | jesus sam

================
தலைப்பு: நூற்றுக்கு அதிபதியின் பண்புகள்
=================
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்தி வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பதிவின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.


லூக்கா 7:1-10
நூற்றுக்கு அதிபதியின் வீட்டில் ஒரு வேலைக்காரன் வியாதிப்பட்டு, மரண அவஸ்தையாயிருக்கிறான். அந்த நூற்றுக்கு அதிபதி, யூதர்களின் மூப்பரை அழைத்து, நீங்கள் என் வேலைக்காரனின் நிலையைக் குறித்து, இயேவிடம் சொல்லுங்கள். என் வேலைக்காரனுக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்று சொல்லுகிறார். மூப்பர்கள் அதை இயேசுவிடம் அறிவிக்கிறார்கள். வேலைக்காரன் சுகம் பெற்றுக்கொள்கிறான். இதையே லூக்கா 7:1-10 இந்த பகுதியில் நாம் வாசிக்கிறோம்.

இந்த நூற்றுக்கு அதிபதியிடம் காணப்பட்ட சிறப்புப் பண்புகளைக் குறித்து இந்த பதிவில் தியானிப்போம்.

நூற்றுக்கு அதிபதி என்றால் நூறு படை வீரர்கள் கொண்ட ஒரு குழுவிற்கு தலைவர் என்று பொருள். இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் உலகை ஆட்சி செய்து கொண்டிருந்தவர்கள் ரோமர்கள். எனவே, நூற்றுக்கு அதிபதியாய் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் ரோமர்களாகவே இருந்தனர்.

நமது இந்திய தேசத்திலும் கூட காவல்துறையை எடுத்துக்கொண்டால், அதில் பல பிரிவுகளில் பல தலைவர்கள், காவல்துறையை நடத்தி வருகிறார்கள்.

அதைப்போலவே ரோமர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஜனங்களை பாதுகாக்க ஆங்காங்கே வீரர்களும், வீரர்களுக்கு தலைவர்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களில் இஸ்ரவேல் நாட்டை பாதுகாக்கக்கூடிய வீரர்களுக்கு தலைராக இருந்தவர் தான் இந்த லூக்கா 7-ம் அதிகாரத்தில் வருகின்ற நூற்றுக்கு அதிபதி.

இந்த நூற்றுக்கு அதிபதி ஒரு கிறிஸ்தவர் அல்ல. உண்மைக் கடவுளை வழிபடக்கூடியவர் அல்ல. ரோமர்கள் சிலைகளையும், விக்கிரகங்களையும் வழிபடுகிறவர்கள். இந்த நூற்றுக்கு அதிபதியின் வழிபாட்டு முறையும் சிலைவழிபாடாகவே இருந்திருக்கும்.

நூற்றுக்கு அதிபதி ஒரு புறஜாதியாக இருந்தாலும், அவரிடமிருந்து கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குறிய சத்தியங்கள் பல உண்டு. இவரிடம் காணப்பட்ட மூன்று முக்கிய சிறப்பு குணங்களைக் குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.


1. விரும்புகிறவன்
வேலைக்காரனின் சுகத்தை விரும்பினான்
நூறு படைகள் கொண்ட ஒரு ரோம படைக்கு தலைவர் என்றபடியினால் இவர் மிகவும் வசதிபடைத்தவராகத்தான் இருந்திருப்பார். இவருடைய வீடு பிரமாண்டமான பெரிய வீடாகத்தான் இருந்திருக்கும். இவருடைய வீட்டில் அநேக வேலையாட்கள் இருப்பதாக வேதத்தில் வாசிக்கிறோம்.

லூக்கா 7:8
நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகரும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான்; மற்றொருவனை வா வென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அனுப்பினான்.

இந்த வசனத்தின் மூலம் இந்த நூற்றுக்கு அதிபதிக்கு அநேக வேலையாட்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் இவருடைய கட்டளைக்கு உடனே கீழ்ப்படிகிறார்கள் என்றும் வாசிக்கிறோம்.

இந்த நூற்றுக்கு அதிபதி தன் அதிகாரத்திற்குக் கீழ் இருக்கின்ற வேலைக்காரர்களையும் அதிகமாக நேசித்து வந்தார்.

லூக்கா 7:2,3
2. அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.

இந்த காலத்தில் தனக்கு கீழ் பணி புரிகின்ற பணியாளனை மரியாதைக் குறைவாக நடத்துவதையும், மரியாதைக் குறைவாக பேசுவதையும் அதிகாரிகளை நாம் பார்த்திருக்கிறோம்.

ஒரு பணக்காரருடைய வீட்டை பராமரிக்கும்படியாக வாசலில் ஒரு காவலாலரை (Watch Man) அமர்த்தினால், அவர்கள் அவரை சிறிதும் மதிப்பது இல்லை. தன் வீட்டிற்கு சமையல் வேலை செய்ய வரும் பணிப்பெண்ணை வீட்டின் உரிமையாளர் கொஞ்சமும் மதிப்பதில்லை. இதுபோன்ற நிகழ்வுகளை நாம் இன்றும் பார்த்து வருகின்றோம்.

அநேக கிறிஸ்தவர்களும் கூட, தாம் பதவி உயர்வடையும்போது, அது கடவுள் தனக்கு கொடுத்த ஆசீர்வாதம் என்று கருதாமல், அதை வாய்ப்பாக பயன்படுத்தி, தனக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களை மரியாதைக்குறைவாக நடத்துவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இந்த நூற்றுக்கு அதிபதி ஒரு புற இனத்தானாக இருந்தாலும், தன் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்கள் அனைவரைம் நேசித்தான் என்று மாத்திரம் அல்ல, மிகவும் நேசித்தான் (பிரியமான வேலைக்காரன்) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

வேலைக்காரன் சுகவீனமாய் இருக்கும்பொழுது, எப்படியாவது அவனுக்கு சுகம் கிடைத்துவிட வேண்டும் என்று பிரயாசப்படுகிறான்.  உனக்கு உடல்நிலை சரியில் நீ எங்காவது மருத்துவம் பார்த்துவிட்டு, சுகமடைந்ததும் என் வீட்டிற்கு வந்து வேலைகளை செய் என்று நூற்றுக்கு அதிபதி சொல்லவில்லை.

அனைவரையும் விரும்புகிறவன்
லூக்கா 7:5அ
அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான்.

யூதர்களின் மூப்பர்கள் இயேசுவிடம் வந்து, நூற்றுக்கு அதிபதியைக் குறித்து சொல்லும்போது, இவர் நமது ஜனத்தை மிகவும் நேசிக்கிறார் என்று சொல்லுகிறார்கள்.

நூற்றுக்கு அதிபதி ஒரு ரோமனாய் இருந்தாலும், யூதர்களை அதிகமாக நேசித்தார் என்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த காலகட்டத்தில் அநேக கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர் அல்லாத வேறு, தெய்வங்களை வழிபடுபவர்களை நேசிப்பது இல்லை. அவர்கள் அறியாமல் விக்கிரகங்களை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கும் நாம் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்பதை மறந்து, அவர்கள் விக்கிரகத்தை வணங்குபவர்கள், எனவே அவர்கள் பாவிகள். அவர்களோடு நாம் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைப்பவர்கள் அநேகர்.

இன்றைக்கு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மற்ற மதத்தினர் வரமுடியாமல் இருப்பதற்கு காரணம், நாம் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. அந்த நாட்களில் வாழ்ந்த யூத ரபீமார்களைப் போல, கிறிஸ்தவர்களாகிய நாம் பரிசுத்தவான்கள் என்றும், புறமதத்தை பின்பற்றுகிறவர்கள் பாவிகள் என்றும் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். எல்லோரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நாம் அடையும்போது, நம்மூலமாக அநேகர் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வார்கள்.

இந்த நூற்றுக்கு அதிபதி உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும், தன் வீட்டு வேலைக்காரனின் சுகத்தையும் விரும்பினார், எல்லா ஜனங்களையும் விரும்பினார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், நாம் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்றே கற்றுக்கொடுக்கிறார்.

லேவியராகமம் 19:18
    உன்னில் நீ அன்புகூருவது போல் பிறனிலும் அன்புகூருவாயாக.
    மத்தேயு 19:19
    மத்தேயு 22:19
    மாற்கு 12:31
    லூக்கா 10:27
    கலாத்தியர் 5:14

நான் ஒருவரிடத்தில் அன்பு காட்டாமல், கிறிஸ்துவின் அன்பைக் குறித்து அவர்களுக்கு போதிக்க முடியாது.

இந்தியாவில் கிறிஸ்தவர்கள், ஊழியர்கள் என்று தங்களை அழைப்பவர்களும் கூட ஜாதி என்ற பெயரில் சிலரை ஏற்றுக்கொண்டும், சிலரை வெறுத்தும் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

ஆனால், உண்மைக் கடவுளைப் பற்றி அறியாத, உண்மைக் கடவுளை வழிபடாத நூற்றுக்கு அதிபதி எல்லோரையும், நேசிக்கக்கூடியவராக, எல்லா மனிதரையும் விரும்பக்கூடியவராக காணப்பட்டார்.

நூற்றுக்கு அதிபதியைப் போல, நானும் எல்லோரையும் விரும்புகிறேனா? என்று சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.


2. விலைக்கிரயம் செலுத்துகிறவன்
நூற்றுக்கு அதிபதி புறஜாதியாக இருந்தாலும், உண்மைக் கடவுளை வழிபடுவோருக்காக ஒரு ஜெப ஆலயத்தை தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்தார்.

லுக்கா 7:5ஆ
நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.

இன்றைக்கு பரம்பரை கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் கூட, ஆலயத்திற்கென்று எதையும் செய்தில்லை.

நன்றாக வசதியாக இருக்கின்ற, உலகப்பிரகாரமாக சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற கிறிஸ்தவர்கள் கூட, கிறிஸ்துவுக்காக விலைக்கிரயம் செலுத்த தயங்குகிறார்கள்.

உலகப்பிரகாமாக செலவு செய்யும்போது, கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் கிறிஸ்தவர்கள், ஆண்டவருக்குக் கொடுக்கும்போது மாத்திரம், மிகவும் வருத்தத்தோடு, என் பணம் என்னை விட்டு போகிறதே என்ற வேதனையோடு கொடுக்கும் கிறிஸ்தவர்களையும் நாம் பார்க்க முடிகிறது.

“கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும் தரித்திரரானதில்லை“ என்று ஒரு பக்தன் சொல்லுகிறார். நாம் கிறிஸ்துவுக்காக எதை இழக்கிறோமோ, அதை நிச்சயமாய் பெற்றுக்கொள்வோம்.

லூக்கா 6:38
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.

நூற்றுக்கு அதிபதி புறஜாதியாராக இருந்தாலும், கிறிஸ்துவுக்காக விலைக்கிரயம் செலுத்தினார். நான் கிறிஸ்துவுக்காக விலைக்கிரயம் செலுத்தியிருக்கிறேனா? சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

ஆலயத்திற்கு தேவையான ஏதேனும் ஒரு பொருளை நான் வாங்கிக் கொடுத்துவிட்டால், அதை ஊழியர் எல்லோருக்கும் முன்பாக, இந்த நபர் இந்த பொருளை வாங்கிக்கொடுத்தார் என்று சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். ஆலய ஆராதனை முடிந்த பின்பு, நான்தான் இதை வாங்கிக்கொடுத்தேன் என்று, குறைந்தது நான்கு நபர்களிடமாவது சென்று நாம் சொல்லுவோம்.

ஆனால் ஜெப ஆலயத்தை கட்டிக்கொடுத்த நூற்றுக்கு அதிபதி, தன் பெயர் பிரஸ்தாபத்தை விரும்பவில்லை. அவர் யூதர்களின் மூப்பர்களை அழைத்து, என் வேலைக்காரனுக்காக இயேசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று பணிவாக சொல்லுகிறார்.

நான் உங்களுக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறேன். என் வேலைக்காரனுக்காக உங்கள் இயேசுவிடம் பேசுங்கள் என்று சொல்லவில்லை.

லூக்கா 7:3
அவன் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.

நூற்றுக்கு அதிபதி பெயர் பிரஸ்தாபத்தை விரும்பாமல், கிறிஸ்துவுக்காக விலைக்கிரயம் செலுத்தினான். என் வாழ்நாளில் கிறிஸ்துவுக்காக நான் என்ன விலைக்கிரயம் செலுத்தியிருக்கிறேன் என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.


3. விசுவாசிப்பவன்
புறஜாதியான நூற்றுக்கு அதிபதி, இயேசுவால் அற்புதம் செய்ய முடியும் என்று விசுவாசித்தார்.

லூக்கா 7:9
இயேசு இவைகளைக் கேட்டு அனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின் செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலுக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நூற்றுக்கு அதிபதியைக் குறித்து சொல்லும்போது, அங்கே கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் (உண்மைக் கடவுளை வழிபடுபவர்கள்) அனைவரையும் விட புறஜாதியான நூற்றுக்கு அதிபதியின் விசுவாசம் (நம்பிக்கை) பெரியது என்று இயேசு சொல்லுகிறார்.

நாமும் இந்த இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே, ஆண்டவர் அற்புதம் செய்கிறவர், அதிசயம் செய்கிறவர், வல்லமையுள்ளவர் என்பதை அறிந்திருந்தும், கண்கள் குருடாக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறோம்.

அனுதினமும் ஆண்டவரிடத்தில் ஜெபிக்கிறோம். ஆண்டவர் இந்த காரியத்தில் எனக்கு விடுதலை தர வேண்டும். ஆண்டவர் என் வியாதியை குணமாக்க வேண்டும். ஆண்டவர் என் திருமண வாழ்வை ஆசீர்வதிக்க வேண்டும். ஆண்டவர் எனக்கு குழந்தை பாக்கியத்தை தர வேண்டும். ஆண்டவர் எனக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் நாம் ஜெபிக்கிறோம். ஆனால் நம்மிடத்திலே விசுவாசம் காணப்படுகிறதா?  என் ஆண்டவர் எனக்கு இதை நிச்சயம் தருவார் என்ற விசுவாசம் நமக்கு தேவை.

புறஜாதியான நூற்றுக்கு அதிபதியிடம் காணப்பட்ட விசுவாசம் நம்மிடம் காணப்படாததினாலேயே, நம்முடைய வாழ்வில் இன்னும் அற்புதத்தை காண முடியாமல், சுகத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறோம்.

மத்தேயு 21:22
நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்.

நாமும் நூற்றுக்கு அதிபதியைப் போல, விசுவாசத்தோடு ஆண்டவரிடத்தில் ஜெபிக்கும்போது, நிச்சயமாய் பதிலை, ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

புறஜாதியான நூற்றுக்கு அதிபதி, கிறிஸ்தவர்களாகிய நமக்கு கற்றுக்கொடுக்கும் மூன்று குணங்களைக் குறித்து அறிந்துகொண்டோம்.

நூற்றுக்கு அதிபதி எல்லோரையும் விரும்புகிறவன், விலைக்கிரயம் செலுத்துகிறவன், விசுவாசிப்பவன்.

நாமும் எல்லோரையும் நேசித்து, கிறிஸ்துவுக்காக விலைக்கிரயம் செலுத்தி, விசுவாசத்தோடு காத்திருக்கும்போது, ஆண்டவர் நம்மையும் விடுவிக்க, ஆசீர்வதிக்க, மேன்மைப்படுத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார். 

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.....!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.