தலைப்பு: யோசேப்பு இயேசு கிறிஸ்துவின் நிழல்
கொலோசெயர் 2:16,17
16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும்
மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்கைளைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள்
கிறிஸ்துவைப்பற்றினது.
பழை ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளும்
புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருக்கிறது என்ற வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. பண்டிகையானாலும், மாதப்பிறப்பானாலும், ஓய்வுநாளானாலும்
இவையனைத்தும் ஏதோ சடங்காச்சாரம் அல்ல, இவைகள் புதிய ஏற்பாட்டின் அதாவது கிறிஸ்துவின்
நிழலாய் இருக்கிறது என்ற பவுல் எழுதுகிறார்.
பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனுடைய
வாழ்க்கையும் புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருக்கிறது. பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த
எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையையும் பற்றி வேதாகமத்தில் நாம் தெளிவாக வாசிக்க முடியாது. ஒரு சிலரை பற்றி மட்டுமே வேதம் நமக்கு தெளிவாக கற்றுக்கொடுக்கிறது. காரணம், பழைய ஏற்பாட்டு மனிதர்களுக்கு திருஷ்டாந்தங்களாக
சம்பவித்தவைகள் அனைத்தும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்கின்ற அதாவது உலகத்தின்
முடிவில் வாழ்கின்ற நமக்கு எச்சரிப்புண்டாக அவைகள் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது.
1 கொரிந்தியர் 10:11
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக
அவர்களுக்குச் சம்பவித்தது, உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
யோசேப்பு:
பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த யோசேப்பின் வாழ்க்கை
இயேசு கிறிஸ்துவின் நிழலாய் இருக்கிறது. யோசேப்புக்கும்
இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள ஒற்றுமைகள் முப்பதுக்கும்
அதிகமாக உள்ளதை வேதாகமத்தில் நாம் பார்க்க முடியும். யோசேப்பிற்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள ஐந்து ஒற்றுமைகளைக் குறித்து இந்த குறிப்பில்
தியானிப்போம்.
யோசேப்பின் தகப்பன் பெயர் யாக்கோபு. யாக்கோபிற்கு பதின்மூன்று பிள்ளைகள். ஒரு பெண் பிள்ளை. பன்னிரண்டு ஆண் பிள்கைள். பதினொராவது நபர் யோசேப்பு. யோசேப்பு யாக்கோபின் செல்லப்பிள்ளை. மற்ற பத்து சகோதரரும் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது
யோசேப்பு தகப்பனோடு சந்தோஷமாக இருந்தார். யோசேப்பிற்கென்று
தகப்பன் ஒரு பலவருன அங்கியையும் கொடுத்திருந்தார். (ஆதியாகமம் 37:3)
தகப்பனுடைய வீட்டில் செல்லப்பிள்ளையாய், எந்த
ஒரு வேலையையும் செய்யாமல் யோசேப்பு வாழ்ந்து வந்தார்.
1. குமாரன்
பிதாவினால் அனுப்பப்பட்டவர்
யோசேப்பு:
ஒரு நாள் தகப்பன் யோசேப்பை அழைத்து நீ உன்
சகோதரர்களை சந்தித்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும், மந்தைகளைப்பற்றியும்
விசாரித்து வா என்று சொன்னார். யோசேப்பு நினைத்திருந்தால்
என்னால் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் யோசேப்பு தன் சகோதரர் மேல் வைத்த பாசத்தின்
விளைவாக உடனே புறப்படுகிறார். சகோதரரை பார்க்கும்படியாக
தகப்பனால் அனுப்பப்பட்டார் யோசேப்பு.
ஆதியாகமம் 37:14
அப்பொழுது அவன்: நீ போய் உன் சகோதரருடைய ஷேமம் எப்பா என்றும்,
ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா…..
இயேசு கிறிஸ்து:
யோவான் 6:57
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும்,
மனிதனை ஆண்டவர் உருவாக்கிய
விதம்:
ஆதியில் இறைவன் தூதர்களையோ படைத்தார். பரலோகத்தில். தூதர்கள் மூன்று பிரிவுகளாக இருந்தார்கள். காபிரியேல், மிகாவேல், லூசிபர்.
காபிரியேல் தூதர்கள் செய்தியை அனுப்பக்கூடிய
பணியை செய்து வந்தார்கள். சகரியாவிடம் வந்து
உன் மனைவியாகிய எலிசபெத் கர்ப்பவதியாவாள் என்ற செய்தியை சொன்னது காபிரியேல் தூதன்.
(யோவான் 1:19)
மிகாவேல் தூதர்கள் யுத்தம் செய்யக்கூடியவர்கள்.
லூசிபர் தூதர்கள் கர்த்தரை துதித்து ஆராதனை
செய்யக்கூடியவர்கள்.
கர்த்தருக்கு ஆராதனை செய்து கொண்டிருந்த லூசிபர்
தூதர்களின் கூட்டம், நாங்கள் ஆண்டவரை விட பெரியவர்களாக வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்கள் உள்ளத்தில் பெருமை இருந்தது. பெருமை கொண்ட லூசிபர் தூதர் கூட்டத்தை ஆண்டவர் பரலோகத்திலிருந்து
பாதாளத்தில் தள்ளினார். பரலோகத்தில் இருந்த
மூன்றில் ஒரு பகுதி தூதர்கள் பெருமையினால் பாதாளத்தில் தள்ளப்பட்டார்கள். அந்த விழுந்துபோன தூதர்களின் இடத்தை நிரப்பும்படியாகவே
ஆண்டவர் மனிதனைப் படைத்தார்.
வானத்திலிருந்து விழுந்த தூதர் கூட்டத்தையே
அநேகர் தெய்வங்கள் என்று நம்பி அவர்களை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். புறமதத்தினர் தங்களுக்கு முப்பத்து முக்கோடி தெய்வங்கள்
உள்ளதாக சொல்லுவார்கள். இந்த முப்பத்து முக்கோடி
தெய்வங்களும் பரலோகத்திலிருந்து விழத்தள்ளப்பட்ட தூதர் கூட்டம் என அநேக வேதபண்டிதர்கள்
கூறுகிறார்கள்.
பரலோகத்தில் ஆண்டவரை ஆராதித்துக்கொண்டிருந்த
தூதர்கள் கூட்டம் பாதாளத்திற்கு சென்றதால், தூதரைவிட சற்று சிறியவர்களாக ஒரு ஜனக்கூட்டத்தை
நான் ஏற்படுத்தி, அவர்களை பரலோகத்தில் ஆராதனை செய்யும்படியான இடத்தில் நிறுத்து வேண்டும்
என்று ஆண்டவர் நினைத்தார்.
சங்கீதம் 8:5
நீ அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்.
விழுந்து போன தூதனின் இடத்தை நிரப்பும்படியாக
ஏற்ப்படுத்தப்பட்ட ஆதாம் பாவம் செய்தான். ஆதாமின்
மூலமாக முழு உலகிற்கும் பாவம் வந்தது. பாவம்
செய்த மனிதன் லூசிபர் கூட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்ட அந்த பாதாளத்திகே (நரகம்) செல்ல
வேண்டும். மனிதனை பாதாளத்திற்கு அனுப்ப விரும்பாத
ஆண்டவர் அவனை பரலோகத்தில் சேர்க்கும்படியாகவே பூமிக்கு மனிதனாய் வந்து, தன்னுடைய பரிசுத்த
இரத்தத்தை சிந்தி மனிதர்களின் பாவங்களை மன்னித்து பரலோக ராஜ்யத்திற்கு அவனை தகுதிப்படுத்தினார். அந்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுப்பட்டவர்கள்
மாத்திரமே பரலோகதிற்கு செல்ல முடியும்.
ஏன் ஆண்டவர் தூதர்களை மன்னிக்கவில்லை:
மனிதனை மன்னிப்பதற்காக கடவுள் மனிதனானார் என்றால்,
ஏன் தூதர்களை மாத்திரம் மன்னிக்காமல் பாதாளத்திற்கு தள்ளினார்? என்று நமக்கு கேள்வி
எழும்பலாம்.
மனிதன் தானாக தவறு செய்யவில்லை. பாதாளத்தில் விழுந்த தூதன் சர்ப்பத்தின் மூலமாக
மனிதனை வஞ்சித்ததால் அவன் பாவம் செய்தான்.
மனிதனுக்கு பாவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. தள்ளப்பட்ட தூதனாகிய லூசிபரே வஞ்சித்து பாவம் செய்ய
வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் சிந்தையில் கொண்டுவந்தான்.
ஆனால் லூசிபர் தூதனை யாரும் வஞ்சிக்கவில்லை. பெருமை என்ற குணம் அவனுக்குள்ளாகவே இருந்தது. எனவே ஆண்டவர் தூதனை மன்னிக்கவில்லை. மனிதனாகிய நம்மை மன்னிப்பதற்காக பரலோகத்தின் மேன்மையை
விட்டு பூமிக்கு வந்தார்.
தேவதூதர்களை விட சற்ற சிறியவர்களாகவே ஆண்டவர்
நம்மை படைத்திருக்கிறார். நமக்கு மன்னிப்பு
உண்டு, தூதர்களுக்கு மன்னிப்பு இல்லை.
தன்னை ஆராதிக்கும்படியாக படைக்கப்பட்ட தூதர்கள்
பெருமையினால் தள்ளப்பட்டதால், அந்த தூதுர்களின் இடத்தை பூர்த்தி செய்யும்படியாக ஆண்டவர்
மனிதனை படைத்தார். மனிதன் ஆண்டவருடைய விரும்பத்தை
உணராமல் தவறு செய்தபோது, தன்னுடைய இரத்தத்தை சிந்தி, அவனை இரட்சித்து பரலோகம் அழைத்துச்
செல்ல வேண்டும் என்பதற்காகவே ஆண்டவர் தன்னுடைய ஒரேபேரான குமானை உலகிற்கு அனுப்பினார்.
மனிதன் செய்த தவறுக்காக நான் ஏன் சிலுவையில்
அடிக்கப்பட வேண்டும் என்று எண்ணி, குமாரன் உலகிற்கு வராமல் இருந்திருக்கலாம், ஆனால்
குமாரன் நம்மீது வைத்த அன்பினாலே நம்மை மீட்கும்படியாக உலகிற்கு வந்தார்.
யோசேப்பு சகோதரர்கள் மீது அன்பு வைத்து அவர்களை
விசாரிக்க வந்ததுபோல, தேவக்குமாரனும் நம்மீது வைத்த அன்பினால் நம்மை இரட்சிப்பதற்காக
பரலோக மேன்மையை துறந்து பூமிக்கும் வந்தார்.
2. குமாரன்
சகோதரரை புறக்கணிக்கப்பட்டார்
யோசேப்பு:
ஆதியாகமம் 37:18
அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய்
வருமுன்னே, அவனைக் கொலை செய்யும்படி சதியோசனைபண்ணி,
சகோதரரை தேடி வந்த யோசேப்பை சகோதரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் மேல் பொறாமை கொண்டார்கள். அவனை புறக்கணித்தார்கள். யோசேப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு அவன் சகோதரர்களுக்கு
இல்லை.
இயேசு கிறிஸ்து:
ஏசாயா 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார். அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்.
இயேசு கிறிஸ்துவும் நம்மை இரட்சிப்பதற்காகவே
உலகிற்கு மனிதனாக வந்தார். ஆனால் உலகம் அவரை
ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:11
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இயேசு கிறிஸ்து மனிதனாக உலகிற்கு வந்தபோது,
இவரே மேசியா, இவரே நம்மை இரட்சிப்பவர் என்று அறியாமல் இருந்ததால் உலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற
நாம் இவரே மேசியா, இவரே இரட்சகர் என்பதை நன்கு அறிந்திருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களாக
இருக்கிறோம்.
ஆண்டவர் என் ஜெபத்தை கேட்கவில்லை, ஆண்டவர்
எனக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்திதரவில்லை, ஆண்டவர் எனக்கு நல்ல திருமண வாழ்க்கையை
ஏற்படுத்திதரவில்லை, ஆண்டவர் என்னை ஆசீர்வதிக்கவில்லை என்ற பல காரணங்களால் நாம் இஸ்ரவேலர்களைப்
போலவே ஆண்டவரை புறக்கணிக்கிறவர்களாக இருக்கிறோம்.
ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்காவிட்டாலும், ஜெபத்திற்கு
பதில் தராவிட்டாலும், தேவையை சந்திக்காவிட்டாலும், தன்னுடைய இரத்தத்தை நமக்காக சிந்தியிருக்கிறார்.
இரட்சிப்பை
ஆண்டவர் நமக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்.
இவ்வுலகில் எத்தனை ஆஸ்திகளை நாம் சம்பாதித்திருந்தாலும், அவைகள் நம்மை பரலோக
வாழ்விற்கு அழைத்துச்செல்வதில்லை. அவருடைய
இரத்தத்தால் கழுவப்பட்டால் மட்டுமே நாம் பரலோகம் செல்ல முடியும்.
அப்படிப்பட்ட விலைமதிப்பில்லாத அந்த இரட்சிப்பை
நான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆண்டவர் என்னைத்தேடி வந்தார்.
ஆண்டவர் என்னை ஆசீர்வதிக்காவிட்டாலும், என்
ஜெபத்தைக் கேட்காவிட்டாலும், ஆண்டவர் என்னை இரட்சித்திருக்கிறார். அதற்காக நான் அவருக்குள் நிலைத்திருப்பேன் என்று
நாம் தீர்மானம் செய்வோம்.
யோசேப்பை அவன் சகோதரர்கள் புறக்கணித்தது
போல அநேகர் இன்று கிறிஸ்துவை புறக்கணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுப்பட்டு இரட்சிப்பை
பெற்றுக்கொண்ட நான் அவரை புறக்கணியாமல் அவருடைய பிள்ளையாய் வாழ வேண்டும். வாழ்க்கையின் உயர்வு, தாழ்வுகளிலும் அவரை மாத்திரமே
பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
3. குமாரன்
சகோதரர்களால் விற்க்கப்பட்டார்
யோசேப்பு
ஆதியாகமம் 37:28 ஆ
அவர்கள்
யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள்…….
யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை இருபது வெள்ளிக்காசிற்கு
விற்றுப்போட்டார்கள். இவர்கள் என் சகோதரர்கள்
இவர்கள் என்னை நேசிப்பார்கள், நான் அவர்கள் மீது அன்பு வைத்திருக்கிறேன், அவர்களும்
என்மீது அன்பு வைத்திருப்பார்கள் என்று நினைத்து தன் சகோதரரைப் பார்க்க வந்த யோசேப்பிற்கு
மிகப்பெரிய அதிர்ச்சி. தன் சகோதரர்களோ யோசேப்பிற்கு
துரோகம் செய்தார்கள். அந்நியர் கையில் இருபது வெள்ளிக்காசிற்கு யோசேப்பை
விற்றுப்போட்டார்கள்.
இயேசு கிறிஸ்து:
மத்தேயு 26:15
நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் முப்பது
வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
இயேசு கிறிஸ்துவும் தன்னோடு கூட இருந்த சீஷனாலேயே
காட்டிக்கொடுக்கப்பட்டார். இயேசு கிறிஸ்துவை
ஏற்றுக்கொள்ளாத எத்தனையோ தலைவர்கள் அந்நாட்களில் இருந்தார்கள் அவர்கள் இயேசுவை காட்டிக்கொடுக்கவில்லை,
பொதுமக்கள் எவரும் இயேசுவைக் காட்டிக்கொடுக்கவில்லை, மறைமுக சீஷர்கள் அநேகர் இயேசுவுக்கு
இருந்தார்கள் அவர்கள் காட்டிக்கொடுக்கவில்லை.
இயேசுவோடு கூட இருந்து அவர் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் பார்த்து,
அவரிடமிருந்து அநேக நன்மைகளை பெற்றுக்கொண்ட யூதாஸ்காரியோத்து முப்பது வெள்ளிக்காசிற்கு ஆசைப்பட்டு இயேசு கிறிஸ்துவை
காட்டிக்கொடுத்தார். யூதாஸ்காரியோத்து தன்னை
நம்பியிருந்த இயேசுவுக்கு துரோகம் செய்தான்.
யூதாஸ்காரியோத்து தூரோகம் செய்ததன் விளைவாக இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.
கிறிஸ்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு
சாட்சியாய் வாழ வேண்டும் என்று ஆண்டவர்
ஆசைப்படுகிறார். ஆண்டவரை ஏற்றுக்கொண்ட நாம்
அவருக்காக சாட்சியாய் வாழுவோம் என்ற அவர் நம்மை நம்பியிருக்கிறார். நாம் அந்த சாட்சியை காத்துக்கொண்டிருக்கிறோமா? யூதாஸ்காரியோத்தை ஆண்டவர் நம்பியிருந்ததுபோலவே,
கிறிஸ்தவர்களாகிய நம்மையும் ஆண்டவர் நம்புகிறார்.
இந்த மகள், இந்த மகன் எனக்காக சாட்சியாக வாழுவான் என்று ஆண்டவர் நம்மீது நம்பிக்கை
வைத்திருக்கிறார்.
சாத்தான் எவனை பாவத்தில் விலவைக்கலாம் என்று
கெட்சிக்கிற சிங்கம்போல சுற்றித்திரிகிறான்.
சாத்தான், யோபுவை பாவம் செய்ய தூண்டிய போது யோபு ஆண்டவருக்குள்ளாக சாட்சியாய்
இருந்தார். என் தாசனாகிய யோபு பாவம் செய்ய
மாட்டான் என்று சொன்ன ஆண்டவருடைய நம்பிக்கையை காப்பாற்றினார். கிறிஸ்தவர்களாகிய நாமும் பாவம் செய்யமாட்டோம் என்று
ஆண்டவர் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்.
அந்த நம்பிக்கைக்கு நாம் அநேக நேரங்களில் துரோகம் செய்கிறவர்களாகவே இருக்கிறோம்.
நாம் ஒவ்வொரு முறை தவறு செய்யும்போதும்,
ஆண்டர் நம்மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்கிறோம். இயேசுவை சிலுவையில் அறைகிறோம்.
நாம் நம்முடைய சாட்சியை காத்துக் கொண்டு
நடக்கிறோமா? நம்மை பார்க்கிறவர்கள் ”இவர்கள் அல்லவோ கிறிஸ்தவர்கள்”
என்று சொல்ல வேண்டும். ”இவர்களாக கிறிஸ்தவர்கள்”
என்று சொல்லும் அளவிற்கு நம்முடைய வாழ்க்கை இருக்கக்கூடாது.
யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பிற்கு துரோகம்
செய்தார்கள், இயேசு கிறிஸ்துவின் சீஷனும் இயேசுவுக்கு துரோகம் செய்தான். கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் சாட்சியை கைக்கொள்ளாதவர்களாக
அவர் நம்மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்கிறவர்களாக இருப்போமானால் இந்த நாளில்
நம்மை மாற்றிக்கொள்வோம். ஆண்டவருடைய சமுகத்தில்
நம்மை அர்ப்பணிப்போம். இன்று முதல் ஆண்டவருக்காக
சாட்சியாய் வாழ்வோம்.
4. குமாரன்
தகப்பனால் உயர்த்தப்பட்டார்.
யோசேப்பு
ஆதியாகமம் 41:41-44
41. பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்து சேதம்
முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,
42.
பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தை கழற்றி, அதை யோசேப்பின் கையிலே
போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,
43.
தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தொண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு
முன்பாகக் கூறுவித்து, எகிப்து தேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.
44. பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன். ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும்
உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது காலையாவது அசைக்கக்கூடாது என்றான்.
யோசேப்பை
ஆண்டவர் எகிப்து தேசத்தின் அதிகாரியாய் உயர்த்தினார். எகிப்து தேசத்தின் முழு அதிகாரமும் யோசேப்பின் கையில்
இருந்தது.
யோசேப்பை அவன் சகோதரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,
அவனை புறக்கணித்தார்கள். அவனுக்கு துரோகம்
செய்தார்கள். நாங்கள் துரோகம் செய்ததால் யோசேப்பு
அழிந்துபோவான், அவனுடைய வாழ்க்கை முடிந்துவிடும் என்று சகோதரர்கள் நினைத்தார்கள். ஆனால் யோசேப்பு உயர்த்தப்பட்டார்கள்.
இயேசு கிறிஸ்து
பிலிப்பியர் 2:9-11
9.
அதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
10.
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
11.
பிதாவாகிய தேவனுக்கு மகிமையான இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்,
எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் உயர்த்தப்பட்டார். மரித்த கிறிஸ்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். எல்லா நாமங்களுக்கும் மோலான நாமத்தை ஆண்டவர் அவருக்கு
கொடுத்தார்.
நாமும் கூட அநேக நேரங்களில் யோசேப்பின் சகோதரரைப்
போல, நான் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், சாட்சியாய் வாழவில்லை என்றால் ஆண்டவருக்கு
நஷ்டம் என்று நினைக்கிறார்கள்.
நான் ஆலயத்திற்கு வராவிட்டால், ஊழியர்களுக்கு
நஷ்டம், ஆண்டவருக்கு நஷ்டம் என்று நினைக்கிறார்கள். என்னுடைய காணிக்கையில் தான் ஆலயம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,
நான் காணிக்கையை நிறுத்திவிட்டால் அது ஆண்டவருக்கு இழப்பு, ஊழியத்திற்கு என்று நினைக்கிறார்கள். ஆனால் நஷ்டமடையப்போவது நான்தான் என்பதை உணராதிருக்கிறார்கள்.
என்னால் தான் இந்த ஊழியம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,
நான் தான் இதை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கின்றேன், நான் தான் ஆலயத்தின் தேவைகளை
சந்தித்து வருகிறேன். நான் மாத்திரம் இல்லையென்றால்
ஊழியம் தடைபட்டுவிடும் என்று அநேகர் நினைக்கிறார்கள். நான் ஊழியம் செய்யாவிட்டால், நான் ஆலயத்தின் தேவையை
சந்திக்காவிட்டால் இழப்பு எனக்கு என்பதை அநேகர் உணராதிருக்கிறார்கள். எந்த ஒரு விதத்திலும் ஆண்டவருடைய ஊழியம் தடைபடுவதில்லை. அவர் உயர்த்தப்பட்டார்.
5. குமாரன்
ஆராதிக்கப்படுவதற்கு தகுதியானவர்
யோசேப்பு:
ஆதியாகம் 43:25
25. தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை, அவர்கள் கேள்விப்பட்டபடியால்,
மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை
ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
26. யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த
காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.
யோசேப்பை பார்த்த சகோதரர்கள் அவன் வரும்வரை
அவனுக்காக காத்திருந்து, தரைமட்டும் குனிந்து வணங்கினார்கள். அவனுக்கு ஆராதனை செய்தார்கள். சகோதரர்களால் ஆராதனை செய்யப்படும் ஒரு பாத்திரமாக
யோசேப்பு மாறினார்.
இயேசு கிறிஸ்து:
1 தீமோத்தேயு 6:15,16
15. அந்த பிரசன்னமாகுதலைத் தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்ராதிபதியும், ராஜாதி
ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
16.
ஒருவராய் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும்
கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்.
அவருக்கே கனமும் நித்திய வல்லமையும்
உண்டாயிருப்பதாக. ஆமென்.
எலியா சொல்லுகிறார், கர்த்தர் தெய்வமானால் அவரை சேவியுங்கள். பாகால் தெய்வமானால் அவனை சேவியுங்கள். (1 இராஜாக்கள்
18:21)
நாம் யாருக்கு ஆராதனை செய்துகொண்டிருக்கிறோம். கடவுளையும் ஆராதித்துக்கொண்டு, மற்ற தெய்வங்களையும்
வணங்கிக்கொண்டிருக்கிறோமா?
ஆராதனைக்கு தகுதியுள்ள ஒரே தெய்வம் இயேசு
கிறிஸ்து மாத்திமே. அவரை நாம் உண்மையாய் ஆராதிக்கும்போது,
அவரை நாம் முழுமனதோடு ஆராதிக்கும்போது, அவருடைய இரத்தத்தால் கழுப்பட்டு பரலோக ராஜ்யத்தில்
பிரவேசிக்கக்கூடிய பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஓய்வு நாள் தோறும் ஆலயத்திற்கு வருகின்ற
அநேக விசுவாசிகள் சரீர பெலவீனங்களுக்காக, திருமண காரியங்களுக்காக குறிசொல்லுகிறவர்களையும்,
ஜோசியரையும் தேடுச்செல்கிறதை நாம் பார்க்க முடிகிறது.
ஆண்டவரை மாத்திரம் உண்மையாய் ஆராதிக்கும்போது
இரட்சிப்பையும் விடுதலையையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
யோசேப்பிற்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள
ஒற்றுமையைப் பற்றி இந்த குறிப்பில் கற்றுக்கொண்டோம். விலைமதிப்பில்லாத இரட்சிப்பை இலவசமாய் பெற்றுக்கொண்ட
நாம் அவருக்குள் நிலைத்திருக்க வேண்டும். ஆண்டவர்
நம்மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யாதவர்களாக அவருக்கு சாட்சியாய் வாழ வேண்டும். அவருக்கு மாத்திரமே நம்முடைய ஆராதனையை செலுத்த வேண்டும்.
நாம் ஆண்டவருக்குள்ளாக நிலைத்திருக்கும்போது இம்மையில் ஆசீர்வாதத்தையும், மறுமையில்
நித்திய வாழ்வையும் பெறமுடியும்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.