Type Here to Get Search Results !

பத்து வாதைகளும் பத்து கட்டளைகளும் | The Ten Plagues and the Ten Commandments | Part 1 | Exodus Bible Study in Tamil | Jesus Sam

====================
பத்து வாதைகளும் பத்து கட்டளைகளும்
=====================
    மோசேயின் மூலமாக கர்த்தர் எகிப்தின் மேல் பத்து வாதைகளை நிகழ்த்தினார். அதே மோசேயின் மூலமாக ஆண்டவர் தம்மால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கு பத்து கட்டளைகளை கொடுத்தார்.


    ஏன் இந்த பத்து வாதைகள், ஏன் இந்த பத்து கட்டளைகள். இவ்விரண்டிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் தியானிப்போம்.

    யாத்திராகமம் 9:12, யாத்திராகம் 10:20,27 இந்த வசனங்களில் கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார் என்று வாசிக்கிறோம்.

    ஆண்டவர் மோசே என்ற நபரை தெரிவு செய்து, எகிப்திலே அடிமைகளாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமது ஜனத்தை விடுவிக்க நினைத்தார். பார்வோனிடம் சென்று கர்த்தருக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு என்று சொல்லும்படி கர்த்தர் மோசேயை அனுப்புகிறார். பார்வோன் ஒருவேலை ஜனங்களை ஆராதனை செய்ய அனுப்பவில்லையென்றால், இந்த வாதைகளை எகிப்தின் மேல் அனுப்பு என்று கர்த்தர் மோசேயிடம் சொல்லுகிறார்.

    ஆனால் பார்வோன் ஜனங்களை அனுப்ப மனதாயிருந்தபோதும், கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி ஜனங்களை அனுப்பிவிடவில்லை. ஏன் ஆண்டவர் இப்படி செய்ய வேண்டும்.

    தம் ஜனங்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்றே ஆண்டவர் மோசேயை ஏற்படுத்தினார். ஆதே ஆண்டவர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி ஜனங்களை அடிமைப்படுத்துகிறார். ஏன் ஆண்டவர் இப்படி செய்தார் என்று நாம் யோசிக்க வேண்டும்.

    ஆண்டவர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தவில்லை. பார்வோனின் இருதயம் கடிப்பட கர்த்தர் அனுமதித்தார். இந்த பத்து வாதைகளும் எகிப்தியருக்கு கட்டாயம் வரவேண்டிய வாதைகள். காரணம், எகிப்தியரை தண்டிக்க வேண்டும் என்றபடியினால் அல்ல, இஸ்ரவேல் ஜனங்களுக்கு நானே கடவுள் என்பதை கடவுள் நிரூபிக்க வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களுக்கு பத்து கட்டளைகளை கொடுக்கும்போது அவர்கள் அந்த பத்து கட்டளைகளை ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும். எனவே தான் ஆண்டவர் எகிப்தியருக்கு பத்து வாதைகளை கொடுத்தார்.

    ஆண்டவர் பாபிலோன் தேசத்திலிருந்து ஒரு மனிதனை தெரிவு செய்தார். அவர் தான் ஆபிரகாம். ஆண்டவர் ஆபிரகாமிடம் உன் மூலமாக ஒரு ஜனக்கூட்டத்தை நான் ஏற்படுத்தப்போகிறேன் என்று கூறினார். ஆபிரகாமை ஆண்டவர் கானான் என்ற தேசத்திற்கு அழைத்து வந்தார்.

    ஆபிரகாமிற்கு தொண்ணூற்று ஒன்பது வயதானபோது ஆபிரகாமின் மனைவி சாராள் கர்பவதியானால். ஆபிரகாமின் நூறாவது வயதில் அவனுக்கு ஈசாக்கு என்ற ஆண் மகன் பிறந்தான்.

    ஆபிராமை ஆண்டவர் அழைக்கும்போது உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகப்பண்ணுவேன் என்று கட்டளையிட்டார். ஆபிராம் என்ற பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார். ஆபிரகாம் என்றால் ஜாதிகளின் பிதா என்று பொருள்.

    ஆபிரகாம் தான் முதன் முதலில் கர்த்தரை யாவே அதாவது யெகோவா என்று அழைத்தார். மோரியா மலையிலே ஈசாக்கிற்கு பதிலாக ஒரு ஆட்டுக்கடாவை பலியிட்ட போது, ஆபிரகாம் கர்த்தருக்கு யெகோவா யீரே என்று பெயர் வைத்தார். யெகோவா யீரே என்றால் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்பவர் என்று பொருள்.

    ஆபிரகாமை ஆண்டவர் அழைத்தபோது ஆபிரகாம் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கானான் என்ற தேசத்திற்கு வந்தார். இதைத்தவிர அந்த ஆண்டவர் எப்படிப்பட்டவர்? அவருடைய குணாதிசயங்கள் என்ன? அவருடைய வல்லமை என்ன? என்பது பற்றி ஆபிரகாமிற்கு எதுவும் தெரியாது.

    ஈசாக்கிற்கு என் தந்தையாகிய ஆபிரகாமின் கடவுள் இவர். இவரின் நாமம் யெகோவா என்று தெரியும். அதைத்தவிர வேறெதுவும் கடவுளைப்பற்றி ஈசாக்கு அறிந்திருக்கவில்லை. தன் தகப்பன் எப்படி ஆண்டவரை ஆராதித்தாரே அதைப்போலவே ஈசாக்கும் ஆண்டவரை ஆராதித்தார்.

    ஈசாக்கிற்கு ஏசா, யாக்கோபு என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ஏசா வழிமாறி சென்றுவிட்டான். யாக்கோபு தன் தகப்பன் ஈசாக்கு ஆண்டவரை எப்படி வணங்கினாரோ அப்படியே அவரும் வணங்கி வந்தார்.

    யாக்கோபுக்கு பன்னிரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களும் தங்கள் தகப்பன் ஆண்டவரை எப்படி வணங்கினாரோ அப்படியே வணங்கி வந்தார்கள். இந்த பன்னிருவரில் ஒருவர் தான் யோசேப்பு.

    இந்த யோசேப்பு தன் சகோதரர்களால் எகிப்திற்கு அடிமையாக விற்றுப்போடப்படுகிறார். பின்பு, கர்த்தருடைய தயவினால் எகிப்தின் பிரதம்மமந்திரியாக உயர்த்தப்படுகிறார்.

    யோசேப்பு உயர்த்தப்பட்ட போது, உலகெங்கும் பஞ்சம் வந்ததால், பஞ்சத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள யோசேப்பின் சகோதரர்கள் எகிப்திற்கு வருகிறார்கள்.

    பஞ்சத்திற்காக எகிப்திற்கு வந்தவர்கள், பஞ்சம் முடிந்ததும் தங்கள் சொந்த தேசத்திற்கு செல்லவில்லை.   எகிப்திலேயே வாழ ஆரம்பித்துவிட்டார்கள்.

    சரித்திரத்தின்படியும், வேதத்தின்படியும் யோசேப்பின் காலத்தில் ஜனங்கள் எகிப்திற்கு வந்தது முதல், மோசேயின் காலத்தில் ஜனங்கள் மீண்டும் கானான் தேசம் செல்லும் வரை இடைப்பட்ட காலம் நானூற்று முப்பது (430) வருஷம்.

    இந்த ஜனங்கள் ஆண்டவரைப்பற்றி அதிகம் அறியாதிருந்தார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம், எங்கள் கடவுள் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள். இதைத் தவிர தங்கள் கடவுளைப் பற்றி அவர்கள் ஒன்றும் அறியாதிருந்தார்கள்.

    இந்த ஆண்டவர் எப்படிப்பட்டவர்? எகிப்திய தெய்வங்களைப் போல நம்முடைய தெய்வத்தை நம்மால் பார்க்க முடியுமா? நம்முடைய தெய்வம் ஒருவர்தானா? இல்லையென்றால் இவருக்குக் கீழே கிளை தெய்வங்கள் உண்டா? இவரின் வல்லமை என்ன? இவரால் செய்ய முடிந்த காரிங்கள் எவை? செய்ய முடியாத காரியங்கள் எவை? எகிப்திய தெய்வத்தை விட இவர் பெரியவரா? சிறியவரா? இவர் திருமணம் செய்தவரா? செய்யாதவரா? இவருக்கு பூமியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறதா? வானத்திலுள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கின்றதா? நெருப்பு, காற்று, கடல், நதி, போன்றவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கின்றதா? இதுபோன்ற எந்த ஒரு காரியத்தைக் குறித்தும் இவர்கள் அறியாதிருந்தார்கள்.

    இந்த ஜனங்களுக்கு தெரிந்ததெல்லம், எங்கள் ஆண்டவர், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் ஆண்டவர். இதைத்தவிற வேறு எந்த இறையியலும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆண்டவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் இல்லை.

    எகிப்திலே அடிமைகளாக இருந்த ஜனங்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தெய்வத்தை வணங்கினார்கள். ஆனால் எப்படி வணங்கினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை பலிசெலுத்தினார்களா? எங்களுக்கு ஒரு தெய்வம் இருக்கிறார் என்று மனதளவில் மாத்திரம் நினைத்துகொண்டார்களா? குழுவாக இணைந்து அவருக்கு ஆராதனை செய்தார்களா? என்று நமக்குத் தெரியாது?

எகிப்து
    இந்த இஸ்ரவேலர்கள் அடிமையாக இருந்த எகிப்து தேசத்தில் பலதெய்வக் கோட்பாடு இருந்தது. இன்றும் நாம் எகிப்திய தெய்வங்களை ஆராய்ந்து பார்த்தால், அநேக தெய்வங்கள் நரி முகத்தோடு மனித சரீரத்தோடு காணப்படும். எகிப்தியர்கள் பூனை, பாம்பு போன்ற அநேக தெய்வங்களை வணங்கி வந்தார்கள். எகிப்திய பிரமீடுகளை ஆராய்ச்சி செய்யும்போது, அவர்கள் வணங்கிய அநேக தெய்வங்களை கண்டெடுத்திருக்கிறார்கள்.

    இந்த எகிப்தியர்களின் தெய்வங்கள் மிக பெரியதாகவும், விசித்திரமானதாகவும் இருந்தன. ஒவ்வொரு நாளும் பண்டிகைகளும், சிறப்பு நாட்களும் மிக விமர்சியாக அனுசரிக்கப்பட்டது. இதைப் பார்த்து, வியந்த இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திய தெய்வங்களையும் வணங்க ஆரம்பித்தார்கள்.

    எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களுக்கு, வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது என்பது தெரியாது. காரணம் இவர்களுக்கென்று ஒரு வேதமோ, சமய புத்தகங்களோ இல்லை. எனவே அறியாமையினால் எகிப்திய தெய்வங்களையும் வணங்கினார்கள்.

    யாத்திராகமம் 1:8-ல் வாசிக்கிறோம், யோசேப்பை அறியாத ஒரு ராஜா எகிப்திலே தேன்றியபோது, அவன் இஸ்ரவேலர்கள் பலுகிப் பெருகுகிறதைப் பார்த்து, அவர்களை அடிமைப்படுத்தத் துவங்கினான். தாங்கக்கூடாத சுமைகளை கொடுத்தான்.

    இவைகளின் மத்தியில் இருந்த இஸ்ரவேல் ஜனங்கள் எங்கள் ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தெய்வத்தை விட இந்த எகிப்திய தெய்வங்கள் வல்லமையுள்ளது என்று நினைத்திருக்கக் கூடும்.

    காரணம் எகிப்தியர்களுக்கென்று நல்ல ஒரு தேசம் இருக்கின்றது. தேசம் செழிப்பாக இருக்கின்றது. இவர்களின் தேவையை சந்திக்க அரசன் இருக்கின்றான். ஆனால், நாங்களோ அடிமைகளாக இருக்கின்றோமே! ஒருவேலை எங்கள் தெய்வத்தை விட இந்த எகிப்திய தெய்வங்கள் சக்தி வாய்ந்ததாக இருக்குமோ என்று நினைத்து, இஸ்ரவேலர்கள் எகிப்திய தெய்வங்களுக்கு பயந்தார்கள்.

    இந்த எகிப்தியர்கள் எத்தனையோ தெய்வங்களை வணங்கினாலும். இவர்களுக்கென்று பிரதான தெய்வங்கள் மூன்று இருந்தன. தெய்வங்களுக்குகெல்லாம் தலைவராக ஒரு தெய்வத் தந்தை இருந்தார். இந்த தெய்வத்தந்தையின் மனைவி தெய்வத்தாய் (தெய்வ மாதா) இருந்தாள். இந்த தெய்வத் தந்தைக்கும், தெய்வத் தாய்க்கும் ஒரு தெய்வக் குமாரன் இருந்தார். இந்த மூன்று தெய்வங்கள் தான் எகிப்தின் பிரதான தெய்வங்கள்.

    இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வருவது ஆண்டவருக்கு கடினமான காரியம் அல்ல. ஆண்டவரால், மிகவும் எளிய முறையிலேயே அவர்களை வெளியே கொண்டு வந்திருக்க முடியும். ஒருவேலை அவர்கள் அப்படி வெளியே வந்திருப்பார்களானால், அவர்கள் எங்களுடைய முதாதையர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தெய்வம் எங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது என்று நம்புவார்கள். ஆனால் அந்த எகிப்திய தெய்வங்கள் மேல் அவர்கள் வைத்திருந்த அந்த பயமும், பக்தியும் இன்னும் அவர்கள் உள்ளதில் இருந்திருக்கும்.

    இந்த ஜனங்களை வெளியே கொண்டு வரும்போது, இந்த எகிப்திய தெய்வங்களைக் காட்டிலும் நான் பெரியவர் என்பதை இஸ்ரவேலர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆண்டவர் விரும்பினார். நான் ஒருவரே கடவுள் என்று இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், எகிப்திய தெய்வங்களை நிர்மூலமாக்க வேண்டும் என்று ஆண்டவர் தீர்மானித்தார்.

    எகிப்தின் பிரதான பத்து தெய்வங்களைத் தெரிந்து கொண்டு, அந்த பத்து தெய்வங்களையும் அடித்து, இந்த தெய்வங்களைவிட நாம் பெரியவர் என்பதை ஆண்டவர் வெளிப்படுத்தினார். அதுதான் பத்து வாதைகள்.

    ஆண்டவர் எகிப்தியருக்குக் கொடுத்த முதலாவது வாதையை பார்த்த ஜனங்கள், நம்முடைய ஆண்டவர் இந்த எகிப்தின் பிரதான தெய்வத்தையே அடித்துவிட்டார். அப்படியானால் இந்த எகிப்திய தெய்வங்களை விட நம்முடைய ஆண்டவர் வல்லமை படைத்தவராக இருப்பாரோ என்று ஜனங்கள் நினைக்க ஆரம்பித்திருப்பார்கள்.

    எங்களுடைய பிரதான தெய்வம் தேற்றுப்போய்விட்டதே என்று நினைத்து பயந்து, பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைத்து, நீங்களும் உங்கள் ஜனங்களும் உங்கள் தேசத்திற்கு புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுகிறார்.

    ஒரு தெய்வத்தை மாத்திரம் அடித்தால் இந்த இஸ்ரவேலர்கள் நானே தெய்வம் என்பதை அறிந்துகொள்ள மாட்டார்கள் என்பதற்காக, ஆண்டவர் தான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்.

    ஆண்டவர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்திய பின்பு, பார்வோன் நான் என் முடிவை மாற்றிக்கொள்ளுகிறேன். எபிரெயர் ஒருவரும் என் தேசத்தை விட்டு வெளியே போகவேண்டாம் என்று கட்டளையிடுகிறார்.

    உடனே, ஆண்டவர் மோசேயின் மூலமாக எகிப்தின் மேல் இரண்டாவது வாதையைக் கொண்டு வருகிறார். அந்த வாதை எகிப்தின் இரண்டாவது பெரிய தெய்வத்தை அடித்தது. இதைப்பார்த்த இஸ்ரவேலர்கள் இன்னும் கொஞ்சம் ஆண்டவரை நம்ப ஆரம்பித்திருப்பார்கள்.

    இஸ்ரவேலர் நான் ஒருவரே தெய்வம் என்பதை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆண்டவர் எகிப்தின் மேல் பத்து வாதைகளை வரப்பண்ணி, எகிப்தின் பிரதான பத்து தெய்வங்களை அடித்தார்.

    பத்து வாதைகள் மூலம், ஆண்டவர் எகிப்தின் பத்து தெய்வங்ளை அடித்தது, எகிப்தியர் மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக அல்ல. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்போது, இந்த எகிப்திய தெய்வங்களை விட எங்கள் தெய்வம் மிகவும் வல்லமை படைத்தவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே.

    அற்புதங்களைக் கண்ட ஜனங்கள் கடவுளை முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோசேயும் ஆரோனும் தங்கள் கோலை சர்ப்பங்களாக மாற்றினார்கள். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் கோலை சர்ப்பமாக மாற்றினார்கள். மோசேயின் கோலும், ஆரோனின் கோலும் மந்திரவாதிகளின் கோல்களை விழுங்கியது உண்மைதான். இதுபோன்ற அற்புதங்களை ஜனங்கள் கண்டால், எங்கள் தெய்வமும் அற்புதம் செய்கிறவர். எங்கள் தெய்வத்திற்கும் வல்லமை உண்டு என்று தான் நினைப்பார்கள். எகிப்தின் பத்து தெய்வங்களை அடித்தால் மாத்திரமே, எங்கள் தெய்வம் தான் ஒரே தெய்வம் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். இதற்காகவே ஆண்வர் எகிப்தின் மேல் பத்து வாதைகளை கொண்டு வந்தார்.

    பத்து வாதைகளுக்கு பின்பு ஆண்டவர் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வருகிறார். ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்த பின்பு, ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த முதலாவது கட்டளை என்னையன்றி உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்க வேண்டதாம் என்பது தான்.

    ஆண்டவர் பத்து கட்டளைகளை கொடுக்கும்போது, அதை ஜனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தை ஆண்டவர் எகிப்திலேயே அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.  எகிப்திலிருந்து அவர்கள் புறப்பட்டு மூன்று மாத்திலேயே ஆண்டவர் அவர்களுக்குப் பத்து கட்டளைகளைக் கொடுத்தார். எகிப்திலே ஆண்டவர் நிகழ்த்திய பத்து வாதைகளைக் கண்ட ஜனங்கள் தங்கள் தெய்வம் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு அறிந்துகொண்டார்கள். அந்த அளவிற்கு ஆண்டவர் ஜனங்களை பக்குவப்படுத்தின பின்னே, பத்துக் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தார்.

    அண்டவர் ஏன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார் என்று இப்போது நாம் அறிந்திருப்போம். இஸ்ரவேலர் ஜனங்களுக்கு நான் ஒருவரே தெய்வம் என்பதை நிரூபிக்கும்படியாகத்தான் ஆண்டவர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்.

    நம்முடைய வாழ்க்கையிலும் அநேக போராட்டங்கள், அநேக வேதனைகள், கண்ணீர், கவலைகள் இருக்கலாம். நாம் அனுதினமும் ஜெபிக்கிறோம், உபவாசம் இருந்து ஜெபிக்கிறோம். தீர்மானம் எடுத்து ஜெபிக்கிறோம். ஆனால் நம்முடைய ஜெபத்திற்கு பதில் கிடைப்பதில்லை. நம்முடைய ஆண்டவருக்கு கண் இல்லையோ, நம்முடைய பிரச்சனைகளை அவர் பார்க்காமல் இருக்கிறாரே? நம்முடைய ஆண்டவருக்கு காதுகள் இல்லையா? நாம் ஜெபிக்கின்ற ஜெபங்கள் அவருடைய செவிக்கு சென்றடையவில்லையா? என்று நாம் யோசித்து கலங்க வேண்டாம்.

    நம்முடைய போராட்டங்கள், வேதனைகள், வியாகுலங்கள் எல்லாவற்றையும் ஆண்டவர் நன்கு அறிந்திருக்கிறார். இவற்றை மாற்றுவது ஆண்டவருக்கு லேசான காரியம். நம்முடைய பிரச்சினைகளை ஒரு இமைப்பொழுதில் ஆண்டவர் மாற்றிவிடுவார். ஆனால் ஆண்டவர் மாற்றாமல் இருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

    ஆண்டவர் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறார் இல்லை என்று நினைத்து, நாம் சோர்ந்துபோகவேண்டாம். கவலைப்பட வேண்டாம். ஜெபத்தை நிறுத்திவிட வேண்டாம். தொடர்ந்து உற்சாகமாக ஜெபிப்போம். ஆண்டவர் செய்ய நினைத்ததை ஏற்ற நேரத்தில் சிறப்பாய், நேர்த்தியாய் செய்து முடிப்பார். அவர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது. கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்கின்ற எல்லா காரியங்களும் தீமைக்கானவைகள் அல்ல, நன்மைக்கானவைகளே. ஒருவேலை அது தீமையாக தெரிந்தாலும், முடிவிலே நன்மையாக காணப்படும்.
    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக...ஆமென்!!.....

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.