Type Here to Get Search Results !

எகிப்தியருக்கு நேர்ந்த முதல் ஐந்து வாதைகள் | Exodus Bible Study | Moses | பத்து வாதைகள் | Jesus Sam

===============================
பத்து வாதைகளும் பத்து கட்டளைகளும் (Part 2)
================================
முதலாம் வாதை:
    யாத்திராகமம் 7:15-18-ல் வாசித்தால். ஆண்டவர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்து பார்வோனிடத்திற்கு போ, அவன் நதிக்கு புறப்பட்டு வருவான். அவனிடம் என் ஜனங்களை போகவிடு என்று சொல். அவன் மறுஉத்தரவு கொடுக்கவில்லையென்றால், உன் கையிலிருக்கிற கோலை நிதியிலே அடி. அப்பொழுது நதி இரத்தமாக மாறும் என்று சொல்லுகிறார்.


    உலகத்திலேயே மிகவும் நீளமான நதி, இந்த நயில் நதி. தெற்கே எத்தியோப்பியாவில் தொடங்கி, பல நாடுகளைக் கடந்து வடக்கே மத்திய தரைக்கடலை வந்தடைகிறது. இந்த நயில்நதியின் பெரும்பகுதி எகிப்து தேசத்தில் இருக்கிறது. இந்த நயில்நதி நாகரீகம் உலகத்தில் தோன்றிய இரண்டாவது நாகரீகம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்களும், சரித்திர ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்துள்ளார்கள்.

    முதலாவது நாகரீகம் மெசப்பத்தாமியா நாகரீகம். ஆபிரகாம் இந்த மெசப்பத்தாமியா நாகரீகத்தைச் சார்ந்தவர்.

    இரண்டாவது நாகரீகம் நயில்நதி நாகரீகம்.  எகிப்தியர்கள் உலகை ஆட்சி செய்தவர்கள். உலகத்தில் முதல் முதலில் வைத்தியர்கள் எகிப்தில் தான் தோன்றினார்கள். ஆதி காலத்தில் எகிப்தியர் எப்படி சத்திரசிகிச்சை செய்தார்கள் என்று எகிப்திற்கு சென்றால் இன்றும் நம்மால் பார்க்கமுடியும். எகிப்தியர்கள் இன்றும் அதிகால சத்திரசிகிச்சை முறையை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

    மரித்துப்போன ஒருவரின் சரீரத்தை பல நூற்றாண்டுகள் பதப்படுத்திவைக்கக்கூடிய ஞானம் எகிப்திய மருத்துவர்களுக்கு இருந்தது.

    எகிப்தியர்கள் நயில்நதியை ஆண்பாலாக சித்தரித்திருந்தார்கள். பொதுவாக எல்லா கலாச்சாரங்களிலும் நதியை பெண்பாலில் தான் அழைப்பார்கள். இந்தியாவிலும் கூட நதியை பெண்பாலில் தான் அழைப்பார்கள். கங்கை, காவேரி போன்ற பெண்ணின் பெயர்களைத்தான் இந்தியர்கள் நதிகளுக்கு வைத்துள்ளார்கள்.

    எகிப்தியர்கள் நயில்நதியை ஒரு ஆண்பாலாக கருதினார்கள். எகிப்தியர்கள் நயில்நதியை தெய்வமாகவும் வணங்கினார்கள். நதியை தெய்வமாக வணங்கக்கூடியவர்கள் எகிப்தியர்கள் மாத்திரம் அல்ல. பல கலாச்சாரங்களில் நதியை தெய்வமாக வணங்கி வந்தார்கள்.

    இந்த எகிப்தியர்கள் நயில்நதியை ஒரு பிரதான தெய்வமாகவும், ஆண் தெய்வமாகவும் வணங்கினார்கள். இந்த நயில்நதி தெய்வத்தின் பெயர் ஹப்பி தெய்வம். இந்த நயில்நதி அதாவது ஹப்பி தெய்வம் விவசாயத்திற்கு தலைமை தெய்வமாக இருந்தது. நயில் நதியின் ஓரங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. இங்கு நடைபெறுகின்ற விவசாயத்தின் மூலம் எகிப்து தேசத்தின் பலபகுதிகளுக்கும் உணவுப்பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டன. இந்த நதியின் மூலமாக அநேகர் நன்மையடைந்தார்கள்.

    எகிப்தியர்கள் சூரியனை இந்த ஹப்பி தெய்வத்தின் மனைவி என்று வணங்கினார்கள். சூரியன் என்பது அநேக கலாச்சாரங்களில் ஆண்பால். ஆனால் எகிப்தியர்கள் சூரியனை பெண்பாலாக பார்த்தார்கள். பாபிலோனியர்கள் சூரியனை ஆண்பாலாக கருதினார்கள். ஆனால் எகிப்தியர்கள் சூரியனை பெண்பாலாக கருதினார்கள். இவர்கள் சூரியனை இரா என்று அழைத்தார்கள்.

    எகிப்தியரின் பிரதான தெய்வத்தந்தை நயில்நதி அதாவது ஹப்பி தெய்வம். பிரதான தெய்வத்ததாய் அல்லது தெய்வமாதா என்பது சூரியன் அதாவது இரா. இந்த ஹப்பி என்ற தெய்வத்தந்தைக்கும், இரா என்ற தெய்த்தாய்க்கும் பிறந்தவர் தான் பார்வோன் ராஜா. பார்வோன் என்பவர் எகிப்தியர்களுக்கு ராஜா மாத்திரம் அல்ல, அவர் எகிப்தியர்களின் கடவுளும் கூட.

    பார்வோன் ராஜா என்பவர், நயில்நதிக்கும், சூரியனுக்கும் பிறந்த தெய்வக்குமாரன் என்று எகிப்தியர்கள் நம்பினார்கள்.

    ஒவ்வொரு நாளும் காலையில் தெய்வக்குமாரன், தெய்வத்தந்தையிடம் சென்று, தெய்வத்தாயை வரவேற்று அந்த நாளைத்துவங்குவார்.

    அதாவது ஒவ்வொரு நாள் காலையிலும் பார்வோன் சூரிய உதயத்திற்கு முன்னமே நயில்நதிக்கு சென்று, பூஜைகள் செய்து சூரியனை வரவேற்பது வழக்கம். ஆகவே, பார்வோனும், அவன் நியமித்த சில பூஜாசாரிகளும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னமே நயில்நதிக்கு சென்றுவிடுவார்கள்.

    பார்வோன் தன் முழங்கால் அளவிற்கு நயில்நதிக்குள் இறங்குவார். பார்வோனும், நயில்நதியும் இணைந்து இரா தெய்வத்தை அதாவது சூரியனை வரவேற்பார்கள். சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கும். நயில்நதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும். நயில்நதி அகலமான நதி அல்ல. நதியன் இக்கரையில் இருந்துகொண்டு அக்கரையில் இருப்பவரிடம் நாம் சத்தமாக பேசக்கூடிய அளவிற்கு அகலம் குறைந்த நதி. நயில்நதியின் நீளம் அதிகம், அகலம் குறைவு. உலகிலேயே அகலமான நதி அமேசான் நதி.

    ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் உதயமாகும் அந்த நேரத்தில் நதிக்குள் நிற்கும் பார்வோன், நதியின் நீரை வானத்திற்கு நேரேதூவி சூரிக்கடவுளை வரவேற்பார். இந்த காட்சியை பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். இதைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் எகிப்திய ஜனங்கள் அநேகர் கூடிவருவார்கள்.

    இந்த காட்சியைப் பார்ப்பதற்கு எகிப்தியர்கள் மாத்திரம் அல்ல இஸ்ரவேலர்களும் வருவார்கள். இதைப் பார்க்கிற இஸ்ரவேலர்களுக்கு பார்வோன் மேலும், நயில்நதியின் மேலும், சூரியன் மேலும் ஒருவித பயபக்தி இருந்தது.

    யாத்தராகமம் 7:17-ல் பார்வோன் நதிக்கு சென்று சூரியனை வரவேற்க்கப்போகிற அந்த நேரத்தில் மோசே பார்வோனைப்பார்த்து, இதோ என் கையிலிருக்கும் கோலினால் நதியில் இருக்கும் தண்ணீரை நான் அடிப்பேன். அப்பொழுது நதி இரத்தமாக மாறும் என்று சொல்லுகிறார்.

    இங்கே என்ன நடக்கிறது என்றால், நீ என் ஜனங்களை அனுப்பாவிட்டால், என் தாசனாகிய மோசே உங்கள் பிரதான தெய்வத்தந்தையை அடிப்பார். தெய்வத்தந்தை இரத்தமாக மாறும். இதைப்பார்க்கின்ற சூரியத்தாயாலும் ஒன்றும் செய்ய முடியாது. மகன் பார்வோனாலும் ஒன்றும் செய்ய முடியாது. அங்கே நின்றுகொண்டிருக்கின்ற பூஜாசாரிகளாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

    முதலாவது வாதை தண்ணீர் இரத்தமாக மாறினது என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. கிணறுகளிலே ஊற்றெடுத்த தண்ணீரைத் தவிர எகிப்து தேசத்தில் உள்ள அனைத்து தண்ணீர்களும் இரத்தமாய் மாறின. மீன்கள் எல்லாம் செத்துப்போயின.

    இதைப்பார்த்த எகிப்தியர்கள் ஆடிப்போயிருப்பார்கள். ஏதோ ஒரு தெய்வம் நம்முடைய தெய்வத்தை இரத்தம் வர அடித்துவிட்டது என்று பயந்திருப்பார்கள்.

    இதைப் பார்த்த இஸ்ரவேல் ஜனங்களுடைய மனதில் இந்த எகிப்திய தெய்வங்களை விட எங்கள் தெய்வம் பெரியவராக இருப்பாரோ என்ற எண்ணம் வந்திருக்கும்.

    நயில்நதி முழுவதும் இரத்தமாக மாறியதைப் பார்த்த பார்வோன், ஜனங்களை அனுப்பிவிட தீர்மானிக்கின்றான். ஆனாலும், கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால் அவன் ஜனங்களை அனுப்பிவிடவில்லை.


இரண்டாம் வாதை: (தவளைகள்)
    யாத்திராகமம் 8:5 இரண்டாம் வாதையில் எகிப்து தேசம் முழுவதையும் தவளைகள் மூடிப்போட்டது. முதலாம் வாதையில் நதியின் நீர் இரத்தமாக மாறியது. நதியில் உள்ள மீன்கள் எல்லாம் செத்துப்போனது. ஆனால் தவளைகள் சாகவில்லை.

    தவளை என்பதும் எகிப்திய முக்கிய தெய்வங்களில் ஒன்றாகும். தவளையை எகிப்தியர் ஹெக்ட் தெய்வம் என்று அழைத்தார்கள். இது ஒரு பெண் தெய்வம். இந்த ஹெக்ட் தெய்வம் நம்மை மறுஉலகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று எகிப்தியர் நம்பினார்கள்.

    எகிப்தியர்கள் மரணத்தோடு வாழ்க்கை முடிவதில்லை என்று நம்பினார்கள். அதேபோல இறந்தவர்கள் மறுபடியும் நாயாக, பூனையாக பூமிக்கு வருவார்கள் என்ற கொள்கையும் அவர்களுக்கு இல்லை.

    இந்த உலகத்திலே மரிக்கிறவர்கள், ஹெக்ட் தெய்வத்தின் உதவியினால் வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே ஒரு புதிய வாழ்வை தொடங்குவார்கள் என்று எகிப்தியர்கள் நம்பினார்கள்.

    எகிப்தியர்கள் தங்கள் ராஜாக்களை அடக்கம் செய்யும்போது, பிரமீடுகளில் அடக்கம் செய்வார்கள். அந்த ராஜாவின் கிரீடம், அவருடைய ஆடைகள், இன்னும் அவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, அந்த பிரமீடுகளில் வைப்பார்கள். காரணம், அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் அவருடைய மறுஉலகிற்கு தேவைப்படும் என்று அவர்கள் நம்பினார்கள்.

    சாதாரண மனிதர்களும் தங்களின் வசதிக்கு ஏற்ப, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது, அவர்கள் பயன்படுத்தின பொருட்களையும் அவர்களோடு சேர்த்து வைப்பார்கள்.

    எகிப்தியர்கள் மரித்தவரின் சரீரத்தை அடக்கம் செய்யும்போது, சரீரம் கெட்டுப்போகாமல் இருக்க சரீரத்தை மறுசுழற்ச்சி செய்துதான் அடக்கம்பண்ணுவார்கள். எனவே தான் ஆராய்ச்சியாளர்கள் எகிப்திய பிரமீடுகளை ஆராய்ச்சி செய்யும்போது, அதற்குள் இருக்கின்ற சரீரம் இன்றும் கெட்டுப்போகாமல் இருக்கிறது. எகிப்திய மிரமீடுகளில் மரித்தவரின் சரீரத்தோடு, அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் போன்ற பொருட்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    இந்த உலகத்தில் மரிக்கிறவர்களை உயிர்த்தெழச்செய்து மறுஉலகத்திற்கு கொண்டு செல்லும் தெய்வம் ஹெக்ட் தெய்வம் என்று எகிப்தியர்கள் நம்பினார்கள்.

    தங்கள் தெய்வமாகிய நயில் நதி இரத்தமாக மாறினாலும், மீன்கள் அனைத்தும் செத்துப்போனாலும், உயிர்த்தெழுதலின் தெய்வமாகிய தவளை சாகவில்லை. மீன்கள் செத்துப்போனாலும், எங்களை உயிர்த்தெழச் செய்யும் தெய்வமாகிய தவளை சாகவில்லை என்ற தைரியம் எகிப்தியர்களுக்கு இருந்தது.

    எனவே தான் ஆண்டவர் இரண்டாவது வாதையாக எகிப்து தேசம் முழுவதும் தவளைகள் வர கட்டளையிட்டார். தவளைகள் வந்தது பெரிய காரியம் அல்ல. தவளைகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு எகிப்து தேசம் முழுவதும் தவளைகளால் நிறைந்தது. எல்லோருடைய வீடுகளிலும், சமையல் அறைகளிலும், படுக்கை அறைகளிலும், வீதிகளிலும், தெருக்களிலும் தவளைகள் பெருகியது.

    உடனே பார்வோன் மோசேயை அழைத்து, நான் ஜனங்களை அனுப்பிவிடுகிறேன், தவளைகளை நிர்மூலம்பண்ணு என்று சொன்னபோது, தவளைகள் அனைத்தும் செத்துப்போனது. அந்த தவளைகளை குவியல் குவியளாக சேர்த்தார்கள், தேசமே நாரிப்போனதென்று வேதத்திலே வாசிக்கிறோம். (யாத்திராகமம் 8:14)

    இதைப் பார்த்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு எங்கள் தெய்வம் எகிப்திய தெய்வமான ஹப்பி தெய்வத்தை விட, ஹெக்ட் தெய்வத்தை விட பெரியவர் என்று நம்பியிருப்பார்கள்.


மூன்றாவது வாதை (பேன்கள்)
    யாத்திராகமம் 8:16 – ஆரோன் தன் கையிலிருக்கும் கோலால் பூமியின் புழுதியில் அடித்த போது தேசம் முழுவதும் பேன்களால் நிரைந்தது. நடக்கும் இடம், உட்காரும் இடம் எல்லா இடங்களும் பேன்களால் நிரைந்தது.

    எகிப்தியர்கள் பேன்களையும் தெய்வமாக வணங்கினார்கள். பேனை எகிப்தியர்கள் ஹெப் தெய்வம் என்று அழைத்தார்கள். எகிப்திய வரலாறுகளை ஆராய்ச்சி செய்யும்போது, பெரிய பெரிய பேன் சிலைகளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நயில் நதி விவசாயத்தின் தெய்வமாக இருப்பதுபோல, இந்த பேன் தெய்வம், புழுதியைக் கட்டுப்படுத்தி தாவரங்களை விளையச் செய்யும் தெய்வம். எகிப்து தேசம் பாலைவனம் என்பதால், அடிக்கடி புயல் ஏற்படும். காற்று அதிகமாக வீசி புழுதியை தூற்றும். புழுதிகள் தாவரங்களை மூடிப்போடும்.

    எகிப்து தேசம் ஒரு வறட்சியான தேசம். எகிப்தில் மழை என்பதையே பார்க்க முடியாது. உலகில் மிகப்பெரிய பாலைவனமான சகாரா பாலைவனம் எகிப்தில் தான் துவங்குகிறது.

    இந்த பேன் தெய்வமானது புழுதியைக் கட்டுப்படுத்தி தாவரங்களை செழித்து வளரச் செய்கிறது என்று எகிப்தியர்கள் நம்பினார்கள். இந்த பேன் எல்லோர் மேலும் வந்ததினால் பேன் தெய்வமும் தோல்வியடைந்தது.

    தேசம் முழுவதும் பேன்களால் நிரைந்ததால், எகிப்திய மந்திரவாதிகள் பார்வோனைப்பார்த்து இது தேவனுடைய விரல் என்று சொன்னார்கள். ஆனாலும் கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார். பார்வோன் ஜனங்கைளைப் போகவிடவில்லை.

நான்காம் வாதை (வண்டுகள்)
    யாத்திராகமம் 8:21 தேசம் முழுவதும் வண்டுகளால் நிரைந்தது.

    இந்த வண்டு தெய்வத்தை எகிப்தியர்கள் சூ (SHU) என்று அழைத்தார்கள். இது வண்டுகள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் தெய்வம். எகிப்து தேசத்தில் வண்டுகள் அதிகம் காணப்படும் அதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த வண்டுகளையும் அவர்கள் தெய்வங்களாக வணங்கினார்கள்.

    இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழுகிறவர்களுக்கு இவை புரிந்துகொள்ள முடியாத ஒன்றாக இருக்கும். வண்டுகளுக்கென ஒரு தெய்வமா என்று நாம் யோசிப்போம்.

    பாம்புகள் இல்லாத, பாம்புகளை பார்த்திராத நாடுகளுக்கு சென்று பாம்புகளை இந்தியா போன்ற நாடுகளில் தெய்வமாக வணங்குகிறார்கள் என்று சொன்னால், அதை அவர்களுக்கு ஏற்றுக்கொள்ள மிகவும் கடினமாக இருக்கும்.

    அதைப்போலவே எகிப்தியர்கள் வண்டுகளை வணங்கினார்கள் என்று சொன்னால் அது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருக்கும்.

    வண்டுகளிடமிருந்து, பூச்சிகளிடமிருந்து எங்களை பாதுகாத்துக்கொள் என்று சொல்லி, எகிப்தியர்கள் வண்டுகளுக்கு அதிகமான பூஜைகளை செய்து வந்தார்கள். எகிப்தியருடைய தெய்வங்களில் வண்டு முக்கியமான இடத்தில் இருந்தது.

    அந்த வண்டுகளையும் ஆண்டவர் அடித்தார்.


ஐந்தாம் வாதை (கால்நடைகள் அழிக்கப்படுதல்)
    யாத்திராகமம் 9:1-ல் மோசே பார்வோனைப் பார்த்தது: நீர் இன்னும் என் ஜனங்களை அனுப்பாவிட்டால், வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடு, மாடுகளை என் ஆண்டவர் அழித்துப்போடுவார் என்று சொன்னார்.

    பாபிலோனியக் கலாச்சாரத்திலேயே மாடுகளை தெய்வங்களாக வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். எகிப்தியர்களும் மாட்டை தெய்வமாக வணங்கினார்கள்.

    எகிப்தியர்கள் காளை மாட்டை ஓப்பூஸ் தெய்வம் என்றும், பசுமாட்டை ஹாதர் தெய்வம் என்றும் அழைத்தார்கள்.

    பிரயாணங்களின்போது, யுத்தத்தின்போது காளைமாட்டுச் சிலையை எகிப்தியர்கள் முன்பாக சுமந்து செல்லுவார்கள். ஒரு காரியத்தின் துவக்கத்திற்காக ஓப்பூஸ் தெய்வத்தை வணங்கினார்கள்.

    கால்நடைகள் மூலமாக அநேக நன்மைகள் இருக்கின்றது. யுத்தத்திற்கு புறப்படும்போது குதிரைகள், ஒட்டகங்கள், யானைகள் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். சுமை சுமப்பதற்காக கழுதையை பயன்படுத்துவார்கள். பசு மனிதனுக்கு ஆரோக்கியமான பால் கொடுக்கிறது. எனவே, கால்நடைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹாதர் தெய்வத்தை எகிப்தியர் வணங்கினார்கள்.

    மிருக ஜீவன்கள் எல்லாம் கொள்ளை நோயினால் செத்துப்போனால், இந்த மிருகஜீவன்களின் தலைவர்களான ஓப்பூஸ், ஹாதர் தெய்வங்கள் தோற்றுப்போனதாக அர்த்தம். ஓப்பூஸ் தெய்வத்தை விட, ஹாதர் தெய்வத்தை விட நான் பெரியவர் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் எகிப்தியரின் கால்நடைகள் எல்லாவற்றையும் அழித்துப்போட்டார்.

    இஸ்ரவேலர்களும் எகிப்து தேசத்தில் தான் வாழ்ந்தார்கள். மிகவும் தாழ்வான பிரதேசங்களில் ஒதுக்குப்புறமாக வாழ்ந்தார்கள். கூடாரங்களில் வாழ்ந்தார்கள். இஸ்ரவேலர்களும் கால்நடைகளை வளர்த்தார்கள்.

    எகிப்தியர்களின் கால்நடைகளை ஒப்பிடுகையில் இஸ்ரவேலர்களின் கால்நடைகள் மிகவும் சோர்வானதாக, மெலிந்துபோனதாக காணப்பட்டது. எகிப்தியரின் கால்நடைகள் பண்ணையில் வளர்க்கப்படுகின்ற கால்நடைகளைப்போல மிகவும் கொழுகொழுவென இருந்தன.

    எகிப்தியர்களுக்கு ஓப்பூஸ், ஹாதர் என்ற இரண்டு கால்நடை தெய்வங்கள் இருப்பதால், எகிப்தியரின் கால்நடைகள் கொழுகொழுவென இருக்கின்றன என்று இஸ்ரவேலர்கள் நினைத்தார்கள்.

    அந்த ஓப்பூஸ், ஹாதர் தெய்வத்தை விட நான் பெரியவர் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆண்டவர் எகிப்தியரின் கால்நடைகளை கொள்ளைநோயினால் வாதித்தார்.

    இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் பிரயாணப்படும்போது, மோசே மலைக்குச் சென்று நாற்பது நாட்களாகியும் திரும்பி வராததால் ஜனங்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தை உருவாக்க வேண்டும் என்று ஆரோனை கேட்டுக்கொண்டார்கள். அவன் அவர்களுடைய எல்லா பொன் ஆபரணங்களையும் வாங்கி அதை உருக்கி ஒரு பொன் கன்றுக்குட்டியை செய்தான்.

    ஏன் கன்றுக்குட்டியை செய்தார்கள் என்றால், எகிப்தியர்கள் தங்கள் பிரயாணங்களின் போது காளை மாட்டு சிலையையே முன்பாக கொண்டு செல்வார்கள். அதைப்பார்த்த ஜனங்கள் தங்களுக்கு முன்செல்லும்படியாக ஒரு கன்றுக்குட்டியைம் உருவாக்குகிறார்கள்.

    இந்த ஓப்பூஸ் தெய்வத்தை விட எங்கள் தெய்வம் பெரியவர் என்பதை அறிந்திருந்தாலும், இன்னும் பத்து கட்டளைகளை ஆண்டவர் கொடுக்காததால் அவர்கள் பொன் கன்றுக்குட்டியை உருவாக்கி அதற்கு ஆராதனை செய்து வந்தார்கள். (யாத்திராகமம் 32:5)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.