Type Here to Get Search Results !

எகிப்தியரின் கடைசி ஐந்து வாதைகள் விளக்கவுரை | Ten Commandments Explanation Tamil | Exodus | Moses | Bible Study | Jesus Sam

========================
பத்து வாதைகளும் பத்து கட்டளைகளும் (Part 3)
=========================

ஆறாம் வாதை: (கொப்புழங்கள்)
யாத்திராகமம் 9:8
    மோசே ஒரு கை பிடி அளவு சூலையின் சாம்பலை எடுத்துக்கொண்டு அதை பார்வோனின் கண்களுக்கு முன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன். அது எகிப்து தேசம் எங்கும் உள்ள மனிதர்கள் மேலும், மிருகஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புழங்களை எழும்பப்பண்ணும் என்று கர்த்தர் சொன்னார்.

    கொப்புழங்களை எகிப்தியர்கள் தெய்வீக வியாதியாகக் கருதினார்கள். இந்தியர்கள் அம்மை நோயை கருதுவதுபோல எகிப்தியர்களும் கொப்புழங்களை தெய்வீக வியாதியாக நினைத்தார்கள்.

    எகிப்தியர்களுக்கு செக்மெட் என்ற ஒரு தெய்வம் உண்டு. இந்த தெய்வம் வைத்தியத்தின் தெய்வம் மற்றும் ஞானத்தின் தெய்வம். எகிப்தியர்கள் மருத்துவத்திலும், ஞானத்திலும் சிறந்து விளங்கினார்கள். எகிப்தியர்கள் எப்படி பிரமீடுகளை கட்டினார்கள் என்று கட்டுபிடிக்க முடியாமல் இன்றைய விஞ்ஞானிகளே குழப்பத்தில் உள்ளார்கள். சூரிய ஒளி எந்த திசையிலிருந்து பிரமீடுகளின் மேல் விழுந்தாலும், பிரமீடுகளின் நிழல் தரையில் படுவதில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட ஞானம் எகிப்தியர்களுக்கு இருந்திருக்கிறது.

    ஞானத்தில் மாத்திரம் அல்ல மருத்துவத்திலும் சிறந்து விளங்கினார்கள் இந்த எகிப்தியர்கள். எகிப்தியர்கள் மயக்க மருந்து கொடுக்காமலேயே ஒரு மனிதனின் இருதயத்தை திறந்து அறுவை சிகிச்சை செய்தவர்கள். மயக்க மருந்து கொடுக்காமலேயே மண்டையோட்டை பிரித்து மருத்தும் செய்தவர்கள்.

    நாங்கள் மருத்துவத்திலும், ஞானத்திலும் சிறந்து விளங்க எங்கள் செக்மெட் தெய்வம் தான் காரணம் என்று எகிப்தியர்கள் நினைத்தார்கள்.

    அந்த தெய்வத்தினால் அனுமதிக்கப்படுகின்ற அல்லது அந்த தெய்வம் கொடுக்கின்ற வியாதிதான் இந்த கொப்பு வியாதி. எகிப்தியர்களுக்கு கொப்புழ வியாதி வந்துவிட்டாள், அந்த செக்மெட் தெய்வத்திற்கு ஆராதனைகள் செய்து, பூஜைகள் நடத்தி அந்த தெய்வத்தை திருப்தி படுத்துவார்கள்.

    இந்த கொப்புழ வியாதியானது எகிப்தியர்கள் அனைவருக்கும் வந்தது. ஆனால் இஸ்ரவேலர்களுக்கு வரவில்லை. அதன் மூலமாக ஆண்டவர் நான் செக்மெட் தெய்வத்தை விட பெரியவர் என்பதை காட்டுகிறார்.


ஏழாம் வாதை (கல்மழை)
யாத்திராகமம் 9:17
    நீ என் ஜனங்களை போகவிடவில்லை என்றால், எகிப்து தேசம் எங்கும் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு கல்மழை பொழியும் என்று ஆண்டவர் பார்வோனுக்கு சொன்னார்.

    எகிப்து தேசம் மழையைப் பார்த்திராத ஒரு தேசம். எப்போதாவது தான் மழை பொழியும். கல்மழை என்றால் பனிக்கட்டிகள் தான் மழையாக பொழிந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். மலையையே பார்த்திராத எகிப்தியர்களுக்கு, இதுவரை கண்டிராத கல்மழையை நான் பொழியப்பண்ணுவேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

    எகிப்து தேச வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கல்மழை பெய்து தேசத்தின் தாவரங்கள், வெளியிலிருக்கின்ற அனைத்து ஜீவராசிகளையும் அழித்துப்போட்டது. ஆனால் இஸ்ரவேலர்கள் வாழுகின்ற கோசேன் பகுதியில் கல்மழை பொழியவில்லை.

    செப் மற்றும் நுட் தெய்வங்கள் வானத்தைக் கட்டுப்படுத்தும் தெய்வங்கள். எகிப்தியர் கண்டிராத அளவிற்கு மிகவும் மோசமான கல்மழை எகிப்தியர்களுக்கு மாத்திரம் பொழிந்து தேசத்தை அழித்துப்போட்டதன் மூலம், இந்த வானத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தெய்வங்ளை விட நான் பெரியவர் என்பதை கர்த்தர் நிரூபித்தார்.


எட்டாவது வாதை (வெட்டுக்கிளிகள்)
யாத்திராகமம் 10:4
    நீ என் ஜனங்களை அனுப்பாவிடில், நாளை உன் தேசம் முழுவதும் வெட்டுக்கிளிகளால் நிரைத்திருக்கும் என்று கர்த்தர் பார்வோனிடம் சொன்னார். அது அப்படியே ஆயிற்று.

    வெட்டுக்கிளிகளை செராபிஸ் தெய்வம் என்று எகிப்தியர்கள் அழைத்தார்கள்.  வெட்டுக்கிளிகளின் முட்டைகள் ஆங்காங்கே மண்ணில் புதையுண்டிருக்கும். மழைநீர் முட்டைகளின் மீது பட்ட மாத்திரத்தில் வெட்டுக்கிளிகள் முட்டையிலிருந்து வெளிவந்து, காற்றின் திசையை நோக்கி பறந்து செல்லும்.

    நம்முடைய பகுதிகளில் மழைகால இரவு நேரங்களில் வீட்டு மின்விளக்குகளில் சிறிய சிறிய வண்டுகள் இருப்பதுபோல, எகிப்து தேசத்திலும் ஆங்காங்கே புழுதிகளில் இருக்கின்ற வெட்டுக்கிளி முட்டைகள், தண்ணீர் பட்ட உடனே, முட்டையிலிருந்து வெட்டுக்கிளிகளாக வந்து தேசம் முழுவதும் பரவும்.

    வெட்டுக்கிளிகள் அதிகமானால் அவைகள் தேசமெங்கும் உள்ள தாவரங்களை அழித்துப்போடும் என்பதால், வெட்டுகிளிகள் வராமலிருக்க, வெட்டுக்கிளிக்கு புஜை செய்து அதை ஆராதிப்பார்கள் எகிப்தியர்கள்.

    நாளை உன் தேசம் முழுவதும் வெட்டுகிளிகளால் நிரைத்திருக்கும் என்று மோசே சொன்னபோது, பார்வோன் தன் மந்திரவாதிகளை அழைத்து இந்த வெட்டுக்கிளிகளுக்கு பூஜை செய்திருப்பான். ஆனாலும், மறுநாளில் தேசம் முழுவதும் வெட்டுக்கிளிகள் வந்து, தாவரங்களை அழித்துப்போட்டதினால் நானே கர்த்தர் என்பதை ஆண்டவர் நிரூபித்தார்.


ஒன்பதாம் வாதை (காரிருள்)
    முதலாம் வாதை, ஒன்பதாம் வாதை, பத்தாம் வாதை இம்மூன்று வாதைகளும் மிகவும் முக்கியமான வாதைகள்.

முதலாம் வாதை
    நயில்நதி (ஹப்பி) தெய்வமாகிய தந்தைக்கு அடி விழுந்தது.

ஒன்பதாம் வாதை
    தாய் தெய்வமாகிய சூரியனுக்கு அடி விழுந்தது.

பத்தாம் வாதை
    குமாரனுக்கு அடி விழுந்தது.

யாத்திராகமம் 10:21
    மோசே தன் கையை எகிப்து தேசத்தின் மேல் நீடிட்டியபோது, எகிப்து தேசம் எங்கும் மூன்று நாள் காரிருள் உண்டாயிற்று.

    எகிப்து தேசம் மழை இல்லாத தேசம். சூரியன் காலையில் உதயமானால் மாலை வரை எப்பொழுதும் நன்றாக தெரியும்.

    இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கார்மேகங்கள் வந்து சில நேரங்களில் சூரியனை மறைப்பதுண்டு. நண்பகல் நேரத்திலும் சூரியன் மறைந்து அந்தகாரம் தோன்றுவதுண்டு.

    ஆனால் எகிப்து தேசம் அப்படிப்பட்ட தேசம் அல்ல. மேகங்களையே அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட எகிப்து தேசம் மூன்று நாள் வெளிச்சத்தைப் பார்க்காமல், இருளில் இருந்தது என்றால், சூரிய தெய்வத்தை கடவுள் தண்டித்தார் என்று பொருள். எகிப்தியர்கள் தங்கள் தாயாக வணங்கி வந்த சூரியனால் அவர்களுக்கு வெளிச்சம் கொடுக்க முடியவில்லை. சூரிய தெய்வம் தோற்றுப்போனது. இதன் மூலமாக ஆண்டவர் நான் சூரிய தெய்வத்தை விட பெரியவர் என்பதை காட்டினார்.


பத்தாம் வாதை (தலைப்பிள்ளை சங்காரம்)
    யாத்தராகமம் 11,12-ம் அதிகாரம். சங்காரத் தூதன் வந்து எகிப்து தேசத்தின் தலைப்பிள்ளைகள் எல்லோரையும் அடித்தான். ஒரே நாளில் எகிப்து தேசத்தில் உள்ள வீட்டின் மூத்த பிள்ளைகள் எல்லாம் மரித்துப்போனது.

    எகிப்தியர்கள் தங்களுக்கு பிறக்கின்ற முதல் பிள்ளையை தெய்வமாக கருத்தினார்கள். அதிலும் குறிப்பாக முதல் பிள்ளை ஆண்பிள்ளையாக பிறந்தார், அந்த குடும்பத்தின் தெய்வமாக அவனை மாற்றிவிடுவார்கள்.

    ராஜாவுக்கு முதல் பிறந்த பிள்ளையே அடுத்த பார்வோனாக முடியும். அப்படி பார்வோனாக மாறுகிறவர் தான் சூரிய மாதாவுக்கும், நயில்நதி தந்தைக்கும் பிறந்தவர் என்று எகிப்தியர்கள் நம்பினார்கள்.

    கடைசி வாதையாக ஆண்டவர் சங்காரத் தூதனை அனுப்புகிறார். தேசத்தில் எங்கும் உள்ள தலைப்பிள்ளைகளை அந்த தூதன் சங்கரிக்கிறான். எந்தெந்த வீட்டு நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டின் தலைப்பிள்ளைகள் மாத்திரம் உயிரோடிருந்தன.

    இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் நிலைகளில் இரத்தத்தை தெளிந்து சங்காரத் தூதன் வரும்போது, வீட்டைப் பூட்டிக்கொண்டு, வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருந்ததால், இஸ்ரவேலரின் பிள்ளைகள் ஒருவரும் சாகவில்லை.

    எகிப்து தேசம் முழுவதிலும் உள்ள அனைத்து தலைப்பிள்ளைகளும் மரித்துப்போனார்கள். எல்லா தலைப்பிள்ளைகளும் மரித்துப்போனாலும் பார்வோன் மாத்திரம் மரித்துப்போகவில்லை. இதன் மூலம் ஆண்டவர் எதைக் காட்டுகிறார் என்றால், அவர் நினைத்தால், ஒருவனை உயிரோடு வைக்கவும் முடியும். ஒருவனை சங்கரிக்கவும் முடியும் என்பதை காட்டுகிறார்.

    எகிப்து தேசம் பத்து வாதைகளை சந்தித்த பிறகு, எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் நாங்கள் ஆராதிக்கிற எங்கள் கர்த்தரே எகிப்தில் உள்ள தெய்வங்களைக் காட்டிலும் பெரியவர் என்பதை அறிந்திருப்பார்கள்.

    எகிப்து தேசத்தில் உள்ள தலைப்பிள்ளைகள் அனைத்தும் மரித்துப்போனதினால், பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை அனுப்பிவிட சம்மதிக்கிறான்.

    எகிப்தின் பிரதான பத்து தெய்வங்களையும் அடித்துவிட்டதால், கர்த்தர் பின்பு பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தவில்லை.

    இஸ்ரவேலர்கள் அனைவரும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி கானான் தேசத்தை நோக்கி விரைந்தார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.