Type Here to Get Search Results !

தீர்மானங்கள் | Ruth Bible Study | Wrong Decision | Bible Sermon Points | ரூத்தின் தீர்மானம் | ஆழமான பிரசங்க குறிப்புகள் | Jesus Sam

======================
தலைப்பு: தீர்மானங்கள்
=======================

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    நாம் ஒவ்வொரு நாளும் பல தீர்மானங்கள் எடுக்கின்றோம்.

    ஒரு குழந்தைகள் தனக்கு பசி எடுக்கும்போது தன்னை அறியாமலேயே தீர்மானித்து அழுகின்றது. சிறு பிள்ளைகளுக்கு பிடித்த ஏதேனும் விளையாட்டுப் பொருட்களை அவர்களிடம் காட்டும்போது அவர்கள் தங்களையும் அறியாமலேயே தீர்மானித்து சிறிக்கிறார்கள்.

    நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தீர்மானங்களை எடுக்கின்றோம்.

    காலையில் தூங்கி எழும்பும்போது இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவோமா? இல்லையென்றால் எழுந்து கடமைகளை செய்வோமா என்று யோசிப்பது ஒரு தீர்மானம்.

    எழுந்த பின்பு குளிர்ச்சியான பாணம் அருந்துவதா? சூடான பானம் அருந்துவதா? என்று யோசிப்பது ஒரு தீர்மானம்.

    இன்று வேலை செய்ய புறப்படுவோமா? இல்லை வீட்டிலேயே இருந்து ஓய்வுவெடுப்போமா? என்று யோசிப்பது ஒரு தீர்மானம்.

    சிறுவர்கள் இன்று பள்ளிக்கு செல்வோமா? இல்லையென்றால் ஏதேனும் காரணம் சொல்லி பள்ளிக்கு விடுமுறை எடுக்கலாமா என்று யோசிப்பது ஒரு தீர்மானம்.

    ஞாயிற்றுக்கிழமையானால் ஆலயத்திற்கு செல்ல வேண்டுமா? இல்லை வீட்டிலேயே நேரடி காட்சி மூலமாக ஆலய ஆராதனையில் கலந்துகொள்ளலாமா? (Live Streaming) என்று யோசிப்பதும் ஒரு தீர்மானம்.  ஆண்டவர் நல்ல சரீர சுகத்தைக் கொடுத்திருக்கும்போது, என்னுடைய சோம்பேறித்தனத்தினால் நான் ஆலயம் செல்லாமல், நேரடி காட்டிகள் மூலம் ஆராதனையில் கலந்து கொள்ளுகிறேன் என்று சொல்வது முட்டாள் தனம்.  வீட்டில் படுத்தபடுக்கையில் இருப்பவர்களும், மருத்துவ சிகிச்சை பெறுபர்களும் ஆராதனையில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நேரடி ஒளிபரப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.  இதை காரணம் காட்டி, அநேகர் ஆலயத்தை மறந்து வீட்டிலேயே இருந்துவிடுகிறார்கள்.

    இப்படி ஒவ்வொரு நாளும் நாம் அதிகாலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை எத்தனையே தீர்மானங்களை எடுக்கின்றோம்.

    இப்படி நாம் எடுக்கும் தீர்மானம் நல்ல விதத்திலேயோ கெட்ட விதத்திலேயோ நம்மையும் மற்றவர்களையும் பாதிக்கின்றது. அதைப்போலவே, மற்றவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் நல்ல விதத்திலோ கொட்ட விதத்திலோ அவர்களையும் நம்மையும் பாதிக்கின்றது.

    வேதாகமத்தில் பிழையான தீர்மானம் எடுத்த ஒரு நபரைப்பற்றியும், அவர் பிழையான தீர்மானம் எடுத்ததினால் அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறித்தும், அந்த பிழையான தீர்மானத்தை அந்த குடும்பத்தார் எப்படி சரி செய்தார்கள் என்பதைக் குறித்தும் இந்த குறிப்பில் தியானிப்போம்.


ரூத்தின் சரித்திரம்
    ரூத் புத்தகம் 4 அதிகாரங்கள் கொண்டது. மொத்தம் 85 வசனங்கள் உள்ளது. ரூத் புத்தகத்தை எழுதியவர் சாமுவேல்.

    மிகக் சிறிய இந்த புத்தகத்தை ஒருமுறை வாசித்த பிறகு இந்த தொகுப்பை வாசிப்பீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தொகுப்பின் மூலமாக ஆண்டவர் நிச்சயம் உங்களோடு கூட இடைபடுவார்.

ரூத் 1:1
    நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.

    மோசேயின் தலைமையில் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து பாலும் தேனும் ஓடுகின்ற கானான் தேசத்திற்கு வந்தார்கள். யோசுவா தேசத்தை ஜனங்களுக்கு பிரித்துக் கொடுத்தான். யோசுவா மரித்த பின்பு ஜனங்களை நியாயம் விசாரிப்பதற்கு ஆண்டவர் நியாயாதிபதிகளை நியமித்தார். யோசுவாவிற்கும் இஸ்ரவேலின் முதல் ராஜா சவுலுக்கும் இடைப்பட்ட காலம் நியாயாதிபதிகளின் காலம் எனப்படும்.

    நியாயாதிபதிகளின் காலம் மொத்தம் 230 ஆண்டுகள். இஸ்ரவேலின் முதல் நியாயாதிபதி ஓத்னியேல். கடைசி நியாயாதிபதி சாமுவேல்.

    நியாயாதிபதிகளின் காலம் 230 ஆண்டுகளில் தேசத்தில் 54 முறை பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பஞ்சம் என்பது இஸ்ரவேலர்களுக்கு புதுமை அல்ல. திடீரென்று தேசத்தில் பஞ்சம் வரும் என்பது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நன்றாகத் தெரியும். பஞ்சம் வந்தால் தங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜனங்கள் தங்களுக்குத் தேவையான தானியங்களை முன்னமே சேர்த்து வைத்திருப்பார்கள்.


1. எலிமலேக்கின் பிழையான தீர்மானம்
    இஸ்ரவேல் தேசத்திலே எருசலேமுக்கு அருகில் பெத்லகேம் என்ற கிராமத்தில் வாழ்ந்த எலிமெலேக்கு என்பவன் இஸ்ரவேல் தேசத்தை விட்டு மோவாப் தேசம் செல்ல புறப்பட்டான்.

    இந்த எலிமெலேக்கு மிகவும் பெரிய பணக்காரன், அந்த நாட்களில் ஒரு குடும்பத்திற்கு ஒரு காணி வைத்திருப்பவர்களையே பெரிய பணக்காரர்களாக கருதுவார்கள். இந்த எலிமெலேக்கு தனக்கு ஒரு காணியும், தன் இரண்டு மகன்களுக்கு இரண்டு காணியும் என மொத்தம் மூன்று காணிகள் வைத்திருந்தான். அப்படிப்பட்ட எலிமெலேக்கு பஞ்சத்திலிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றிக்கொள்ள நிச்சயம் தானியத்தை சம்பாதித்து வைத்திருப்பான்.

    அப்படியானால், எலிமெலேக்கு எதற்காக ஆண்டவர் வாக்குப்பண்ணின தேசத்தை விட்டு மோவாப் தேசம் செல்ல வேண்டும்.

    இஸ்ரவேல் தேசம் மெலிந்த நீளமான தேசம். எலிமெலேக்கு இஸ்ரவேலின் தென் பகுதியில் வாழ்ந்தான். தென் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டால், வடபகுதிக்கு சென்றிருக்கலாமே. வடக்கு பகுதியில் என்மோன் மலை இருக்கிறது. எர்மோன் மலையின் சிறப்பைக் குறிப்து சங்கீதம் 133-ல் பார்க்க முடியும். யோர்தான் நிதி இஸ்ரவேலின் வடக்குப் பகுதியில் தான் துவங்குகிறது. இப்படி செழிப்பான இடங்கள் தங்கள் தேசத்திலே இருக்கத்தக்க எலிமலேக்கு எதற்காக மோவாப் தேசம் செல்ல வேண்டும்.

    எலிமலேக்கு மோவாப் தேசம் செல்ல உண்மையில் பஞ்சம் தான் காரணம் என்றால், பத்து ஆண்டுகளுக்கு பின்பு நகோமியும், ரூத்தும் பெத்லகேம் வந்தபோது அவ்வூரார் நகோமியைப் பார்த்து இவள் நகோமி என்றும், எலிமெலேக்கின் மனைவி என்றும் அறிந்துகொண்டார்கள். அப்படியானால் பஞ்ச காலத்தில் பெத்லகேமில் இருந்தவர்கள் அனைவரும் உயிரோ தான் இருந்திருக்கிறார்கள். இதிலிருந்து பஞ்சம் கொடிய பஞ்சம் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

    சரித்திரத்தின் படி இந்த ஒரு குடும்பத்தைத் தவிற வேறு எந்த குடும்பமும் பெத்லகேமைவிட்டுச் செல்லவில்லை.

    பெத்லகேமில் பஞ்சம் வந்தபோது இந்த ஒரு குடும்பம் மாத்திரமே மோவாப் தேசம் செல்ல தீர்மானித்தார்கள். இவர்கள் எடுத்த தீர்மானம் சரியானதா? பிழையானதா என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

எலிமலேக்கு பெரிய பணக்காரர்கள்
    எலிமெலுக்கு பெத்லகேமில் வாழ்ந்து வந்தான். பெத்லமேகம் என்பது அக்கிராமத்தின் உண்மை பெயர் அல்ல. பெத்லகேமின் உண்மை பெயர் எப்பிராத்தா. இந்த எப்பிராத்தாவில் தான் அதி உயர் ரக கோதுமைகளும், தானியங்களும் விளையும். இந்த கோதுமையினால் செய்யப்படுகின்ற அப்பங்கள் தேசம் முழுவதுக்கும் கொண்டு செல்லப்படும். எனவே எப்பிராத்தாவை அப்பத்தின் வீடு என்று அழைத்தார்கள். அப்பத்தின் வீடு என்பதன் தமிழ் பதம் தான் பெத்லகேம்.

    அப்படிப்பட்ட பிரசித்தி பெற்ற ஒரு கிராமத்தில் மூன்று காணி நிலங்கள் வைத்திருந்தான் இந்த எலிமெலேக்கு. இவ்வளவு பெரிய பணக்காரன், ஏன் பெத்லகேமை விட்டுச் செல்ல வேண்டும்.

    லோத்தின் காலத்தில் இப்படிப்பட்ட பஞ்சம் வந்து, அவர் எலிமலேக்கைப் போல வேறு தேசம் செல்லவேண்டும் என்று முடிவெடுப்பாரானால் அது நியாயமானது. காரணம், லோத்திற்கு இரண்டு பெண் பிள்ளைகள். தன் மனைவியையும் சேர்த்து மூன்று பெண் பிள்ளைகளையும் தனி மனிதனாக பஞ்சத்திருந்து அவர்களைக் காப்பாற்றுவது லோத்திற்கு மிக கடினம்.

    ஆனால் எலிமெலேக்கின் வீட்டில் அவனுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். நகோமி மாத்திரமே பெண். எலிமெலேக்கு, மக்லோன், கிளியோன் ஆகிய இம்மூவரும் உழைத்திருந்தாலே பஞ்சத்திலிருந்து அவர்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், எலிமெலுக்கு ஆண்டவர் வாக்குப்பண்ணின தேசத்தை விட்டு புறப்பட வேண்டும் என்று தவறான தீர்மானம் எடுத்தான்.

    எலிமெலேக்கு என்றால் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ராஜா என்று பொருள். இஸ்ரவேலர்கள் பெயர்கள் வைக்கும்போது அர்த்தத்தோடு தான் வைப்பார்கள். ஒருவேலை அந்த பெயரின்படி அவர்கள் வாழவில்லை என்றால் அந்த பெயரை மாற்றிவிடுவார்கள்.

    எ.கா. ஏசா என்பதற்கு மயிர் அழகன் என்று பொருள். அவர் சிவப்பான கூலின் மேல் ஆசைப்பட்டதால் சிவப்புக்கூழான் என்ற ஏசாவிற்கு பெயர் மாற்றினார்கள். சிவப்பக்கூழான் என்றால் ஏதோம்.

    யாக்கோபு என்றால் காலை வாருபவன், எத்தன், ஏமாற்றுக்காரன் என்று பொருள். அவனை ஆண்டவர் தெரிந்தெடுத்து உயர்த்தியதால், அவனுக்கு போராடும் இளவரசன் என்னும் பெயர் வந்தது. இஸ்ரவேல் என்றால் போராடும் இளவரசன் என்று பொருள்.

    எலிமெலேக்கு என்றால் கடவுளால் ஏற்படுத்ப்பட்ட ராஜா என்று பொருள். ஒரு அரசனைப்போல வாழ்ந்தவர் இந்த எலிமெலேக்கு.

    இஸ்ரவேலின் முதல் ராஜா சவுல். சவுலை அரசனாக நியமித்தவர் இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியாகிய சாமுவேல் (15-வது நியாயாதிபதி).

    ஆனால் இந்த எலிமெலேக்கு வாழ்ந்தது இரண்டாம் நியாயாதிபதியின் காலத்தில். முதல் ராஜா சவுல் தோன்றும் முன்னமே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ராஜா என்னும் பட்டத்தை வாங்கினவர் இந்த எலிமெலேக்கு.

    ராஜாவைப் போல வாழ்ந்த, பெரிய பணக்காரனான இந்த எலிமெலேக்கு எதற்காக பஞ்சத்திற்கு பயந்து மோவாப் தேசம் செல்ல வேண்டும்.


மோவாப் தேசம்
    மோவாப் தேசம் ஒரு சபிக்கப்பட்ட தேசம். லோத்தின் இரண்டு பிள்ளைகளும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் கொடுத்து, அவனோடு தவறான உறவு வைத்து அதன் மூலமாக தங்களுக்கு பிள்ளைகளை பெற்று கொண்டார்கள். அப்படி பிறந்தவன் தான் இந்த மோவாப். அவனும் அவனுடைய சந்ததியும் என்றும் ஆண்டவருக்கு அருவெறுப்பானவர்கள். அப்படிப்பட்ட மோவாப் தேசத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்று எலிமெலேக்கு ஆசைப்பட்டான்.

    பஞ்சத்திற்காக இஸ்ரவேலில் உள்ள வேறு ஏதாவது பகுதிக்கு எலிமெலேக்கு சென்றிருக்கலாம். இல்லையேன்றால் எத்தனையோ நல்ல தேசங்கள் இருந்தன. அங்கு சென்றிருக்கலாம். ஆனால் இந்த எலிமெலுக்கு சபிக்கப்பட்ட மோவாப் தேசம் செல்ல வேண்டும் என்று பிழையான தீர்மானம் எடுத்தான்.

    ஒரு மனிதன் ஒரு தீர்மானம் எடுக்கிறான் என்றால், நான் இதனால் தான் இந்த தீர்மானம் எடுத்தேன் என்று ஒரு காரணம் சொல்லுவான். ஆனால் அது உண்மையான காரணமாக இருக்காது.

    எலிமெலேக்கும் அப்படித்தான் மோவாப் தேசம் செல்ல வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுத்தான். அதற்கு காரணமாக இந்த பஞ்சத்தை அவன் பயன்படுத்திக்கொண்டான். உண்மையில் மோவாப் தேசத்தின் மீது உள்ள அந்த கவர்ச்சியின் காரணமாகவே எலிமெலேக்கு அங்கு செல்ல தீர்மானம் பண்ணினான்.

    அநேகர் சொல்லுவார்கள் இனி என்னால் அவனோடு / அவளோடு வாழ முடியாது. அவன் / அவள் ஒரு மனிதனே அல்ல. அவன் ஒரு மிருகம், பிசாசு என்று சொல்லுவார்கள். திருமணத்திற்கு முன்பே அது ஒரு பிசாசு, மிருகம் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.  எல்லாவற்றையும் தெரிந்த பின்பே திருமணம் செய்திருப்பார்கள். கடைசியில் என்னால் அவனோடு வாழமுடியாது. விவாகரத்து வாங்கி கொடு என்பார்கள். இவர்கள் சொல்லும் காரணங்கள் உண்மையான காரணமாக இருக்காது. வேறு ஏதோ ஒரு உண்மையை மறைக்க இந்த காரணத்தை சொல்லி விவாகரத்து கேட்பார்கள்.

    அநேக வாலிபர்கள் இனி என்னால் இந்த வீட்டில் வாழ முடியாது. நான் என் நண்பர்களோடு தனியாக வாழப்போகிறேன் என்று சொல்லுவார்கள். ஏன் இப்படி முடிவெடுத்தாய் என்று பெற்றோர் கேட்டால், அதற்கு ஒரு காரணம் சொல்லுவார்கள், அவர்கள் சொல்லும் எந்த காரணமும் உண்மையான காரணமாக இருக்காது. ஏதோ ஒரு காரியத்தை நம்மிடம் மறைப்பதற்காக வேறு ஏதோ காரணம் சொல்லிவிட்டு, வீட்டை விட்டு சென்றுவிடுவார்கள்.

    அநேகர் தங்கள் ஆலயத்தை விட்டு விட்டு வேறு ஆலயம் சென்று விடுவார்கள். காரணம் கேட்டால், அந்த ஆலயத்தில் ஆராதனை சரியில்லை, ஊழியர் சரியில்லை, ஆடியோ சரியில்லை, என்று காரணம் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் அது காரணமாக இருக்காது. வேறு எங்கோ ஒரு ஆலயத்தில் பார்த்த அந்த கவர்ச்சி அவர்களை இழுத்தபடியினால், இங்கிருந்து அங்கே சென்றுவிடுவார்கள். இப்படி வேறு ஆலயத்திற்கு செல்லுகிறவர்கள் உண்மையான காரணத்தை சொல்லாமல், இந்த ஆலயத்தை குறைசொல்லிவிட்டு அங்கு செல்வார்கள். அவர்கள் சொல்லும் எந்த காரணமும் உண்மையான காரணமாக இருக்காது.

    இப்படி அநேகர் பிழையான தீர்மானம் எடுக்கின்றார்கள். மனிதன் பிழையான தீர்மானம் எடுக்க மற்றும் ஒரு காரணம் அவனிடம் உள்ள பணம்.

    எலிமலேக்கு மோவாப் செல்லும்போது அநேகர் ஆலோசனை சொல்லியிருப்பார்கள். அப்பொழுது எலிமெலுக்கு என்ன சொல்லியிருப்பான், உன் பணத்திலா போகிறேன். என் பணத்தில் போகிறேன், நஷ்டம் வந்தால் என் குடும்பம் தானே நஷ்டமடையப்போகிறது என்று சொல்லியிருப்பான்.


எலிமெலேக்கு ஏன் மோவாப் சென்றான்
நியாயாதிபதிகள் 3:12
    இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள். அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோமாய்ப் பலக்கப்பண்ணினார்.

    இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்த போது கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எக்லோன் என்னும் மோவாவின் ராஜா கையில் ஒப்புக்கொடுத்தார்.

    மோவாப் தேசம் சவக்கடலுக்கு அப்புறத்தில் அமைந்துள்ளது.

    இந்த மோவாபியர் 18 ஆண்டுகள் இஸ்ரவேலை அடிமைப்படுத்தினார்கள். அவ்வப்போது வந்து இஸ்ரவேலரின் தானியத்தையும், கோதுமையையும் கொல்லையடித்துச் செல்வார்கள்.

நியாயாதிபதிகள் 3:15
    இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார். அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான். அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.

    இஸ்ரவேலர்கள் தங்கள் பாவ வழியை விட்டு கர்த்தரை நோக்கி முறையிட்ட போது, கர்த்தர் ஏகூத் என்னும் நியாயாதிபதியை அவர்களுக்காக ஏற்படுத்தினார். இவன் இடது கை பழக்கமுள்ளவன்.

    இஸ்ரவேலின் முதல் நியாயாதிபதி ஓத்னியேல். இரண்டாவது நியாயாதிபதி ஏகூத்.

    இந்த ஏகூத் மிகவும் சூழ்ச்சமமான முறையில் மோவாவின் ராஜா எக்லோனை கொலை செய்தான். பின்பு தன் படையோடு வந்து மோவாபியர் அனைவரையும் கொலை செய்தான். (நியாயாதிபதிகள் 3:16-30)

நியாயாதிபதிகள் 13:29,30
    29. அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை வெட்டினார்கள். அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும், பராக்கிரமசாலிகளுமாயிரந்தார்கள். அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.
    30. இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேருடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது. அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.

    ஏகூத்தின் தந்திரத்தினால் மோவாப் தேசத்தில் உள்ள பதினாயிரம் பேர் கொலை செய்யப்பட்டார்கள். தேசம் 80 வருஷம் அமைதலாய் இருந்தது. முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் தவிற தேசத்தில் இருந்த அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள்.

    ஏகூத்தின் இந்த வெற்றியால் இஸ்ரவேலரைக் கண்டு மோவாப் தேசத்திலுள்ள அனைவரும் பயந்தார்கள். இஸ்ரவேலர் யாரேனும் மோவாப் தேசத்திற்குள் போனால் மோவாபியர்கள் அவர்களைக் கண்டு பயந்து நடுங்குவார்கள். இஸ்ரவேலர்களுக்கென தனி மதிப்பும், மரியாதையும் அங்கு இருந்தது.

    ஏகூத்தின் காலத்தில் தேசம் என்பது ஆண்டுகள் அமைதலாய் இருந்தது. இந்த எண்பது ஆண்டு காலத்தின் முதல் பகுதியில் வாழ்ந்தவர் தான் இந்த எலிமெலுக்கு.

    நான் பெத்லகேமில் இருப்பதினால், நான் பணக்காரனாக இருக்கலாம். ஆனால் நான் அசைப்பட்ட எதையும் எனனால் செய்ய முடியாது. நான் மோவாப் செல்வேனானால், அங்கு நான் தான் ராஜா, அங்கு நான் உள்ளாசமாக வாழலாம். நான் என்ன செய்தாலும், என்னை குற்றப்படுத்த, எதிர்த்து கேள்விகள் கேட்க அங்கு யாரும் இல்லை. எனவே தான் மோவாப் செல்லவேண்டும் என்று எலிமெலேக்கு தீர்மானம் செய்தான்.

    மோவாப் செல்ல வேண்டுமானால், அதற்கு சரியான காரணம் வேண்டும். அப்படி எலிமெலுக்கு யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் வழக்கமாக வருகின்ற ஒரு பஞ்சம் தேசத்தில் வந்தது. இதை காரணமாக வைத்து எலிமெலுக்கு மோவாப் தேசம் சென்றுவிட்டான்.

    உண்மையில் மோவாப் தேசத்தின் மீது உள்ள கவர்ச்சியினால் தான் எலிமெலேக்கு மோவாப் தேசம் சென்றான்.

    மோவாப் தேசம் செல்ல வேண்டும் என்ற பிழையான தீர்மானத்தை எடுத்தது எலிமெலேக்கு. ஒரு குடும்பத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் கணவன். அதாவது தகப்பனார். அவரை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. தவறான தீர்மானத்தை நகோமி எடுக்கவில்லை, பிள்ளைகள் மக்லோனும், கிளியோனும் எடுக்கவில்லை. தவறான தீர்மானம் எடுத்தது எலிமெலுக்கு.


2. பிழையான தீர்மானத்தின் விழைவு:
ரூத் 1:3
    நகோமியின் புருஷனாகிய எலிலெலேக்கு இறந்துபோனான். அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.
    எலிமெலேக்கின் பிழையான தீர்மானத்தினால், மோவாப் தேசத்தின் கவர்ச்சிய அனுபவிக்க அவனால் முடியவில்லை. கொஞ்ச நாட்களில் மரித்துப்போனார்.

    எபிரெய மொழியிலே மரணத்தை குறிக்கும் இரண்டு சொற்கள் உண்டு. மூத், யசான்.

    மூத் என்பதன் அராமிய வார்த்தை மௌத். இஸ்லாமியர்கள் ஒருவர் மரித்துவிட்டார் என்றால், மௌத் ஆகினார் என்றே சொல்லுவார்கள்.

    மூத் என்றால் அகால மரணம் அதாவது திடீர் மரணம் என்று பொருள்.

    யசான் என்றால் இயற்க்கை மரணம். வயது முதிர்வினால் ஏற்படும் மரணம்.

    எபிரெய வேதாகமத்தில் ரூத் 1:3-ல் மூத் என்ற வார்த்தையே பயன்படுத்ப்பட்டுள்ளது. தன் மகன்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை. அப்படிப்பட்ட ஒரு காலத்திலேயே எலிமெலுக்கு மரித்துப்போனார்.

    எலிமெலேக்கின் பிழையான தீர்மானத்தினால் அவன் வாழ்க்கையே முடிந்து போனது.

    நாமும் தவறான தீர்மானம் எடுப்போமானால் நம்முடைய வாழ்க்கையின் முடிவுகள் மோசமானதாக இருக்கும். நான் அநேக தவறுகள் செய்திருக்கிறேன், ஆனால் நான் மரிக்கவில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். உங்கள் சந்தோஷம் மரித்துப்போய் விடும், உங்கள் நின்மதி மரித்துப்போய் விடும், உங்கள் சமாதானம் மரித்துப்போய் விடும்.

    உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் இல்லையா? சமாதானம் இல்லையா? நீங்கள் என்ன பிழையான தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள். நம்முடைய பிழையான தீர்மானத்தினால் குடும்பத்தின் நற்காரியங்கள் மரித்துப்போய்விடும்.

ரோமர் 6:23
    பாவத்தின் சம்பளம் மரணம்.

    பிழையான தீர்மானம் எடுத்தது எலிமெலேக்கு, அவன் மரித்துப்போனான், அவனுடைய பிள்ளைகள் அனாதைகளாக்கப்பட்டார்கள். மனைவி விதவையாக்கப்பட்டாள். நான் பிழையான தீர்மானம் எடுப்பதால் அது எனக்கு மாத்திரம் பாதிப்பு அல்ல, என்னை நம்பியிருக்கிறவர்கள், என்னை சூழ்ந்துள்ள மற்றவர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    நான் தவறு செய்தால், நான் மது அருந்துவதால் எனக்குத்தானே பாதிப்பு, மற்றவர்களுக்கு என்ன பாதிப்பு என்று அநேகர் நினைப்பதுண்டு. நாம் தவறான தீர்மானம் எடுக்கும்போது அது நம்மை மாத்திரம் பாதிப்பது இல்லை, மற்றவர்களையும் பாதிக்கிறது.

    இஸ்ரவேலர்கள் வழக்கப்படி ஒரு குடும்பத்தின் தலைவர் மரித்துப்போவாரானால், குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு குடும்பத்தில் உள்ள மூத்த ஆண் மகனுக்கு கொடுக்கப்படும்.

    எலிமெலேக்கு மரித்தபோது அக்குடும்பத்தின் பொறுப்பு மூத்த மகனுக்கு கொடுக்கப்படுகிறது. அவனும் பிழையான தீர்மானம் எடுக்கிறான்.

ரூத் 1:4
    இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள். அவர்களில் ஒருத்தி பேர் ஓர்பாள். மற்றவர் பேர் ரூத். அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள்.

    பிள்ளைகளும் தகப்பனின் பிழையான தீர்மானத்தை சரிசெய்யாமல், சபிக்கப்பட்ட மோவாப் தேசத்திலேயே தங்களுக்கு பெண் கொண்டார்கள். பிள்ளைகள் தங்கள் தகப்பனின் பிழையான தீர்மானத்தை சரி செய்வார்கள் என்று ஆண்டவர் பத்து ஆண்டுகள் காத்திருந்தார். பத்து ஆண்டுகளாகியும் அவர்கள் தங்கள் பிழையான தீர்மானத்தை சரிசெய்யவில்லை.

ரூத் 1:5
    பின்பு, மக்லோன் கிலியோன் என்னம் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள். அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.

    மக்லோனும், கிளியோனும் தங்கள் தகப்பனின் பிழையான தீர்மானத்தை சரி செய்யாததினால் அவர்களும் அகல மரணமடைந்தார்கள்.

    இவர்களுடைய பிழையான தீர்மானத்தினால் நகோமி அநாதையாகிறாள், ரூத்தும், ஓர்பாளும் விதவையாகிறார்கள்.

    நாம் பிழையான தீர்மானம் எடுக்கும்போது அது மற்றவர்களையும் பாதிக்கிறது என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

    நான் பிழையான தீர்மானம் எடுத்துவிட்டேன், அதை சரி செய்வதற்கு வழி இல்லையா. நான் என்னுடைய பிழையான தீர்மானத்தை எப்படி சரி செய்வது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?

    உங்களுடைய பிழையான தீர்மானத்தை சரி செய்ய ஒரு வழி உண்டு.


3. நகோமியின் தீர்மானம்:
    எலிமெலேக்கு எடுத்த பிழையான தீர்மானத்தை, தன் மகன்கள் இருவரும் சரிசெய்யாத பிழையான தீர்மானத்தை நகோமி சரி செய்தாள்.

    தங்கள் இரண்டு குமாரரும் மரித்துப்போன பின்பு, குடும்பத்தின் தலைமை பொறுப்பு நகோமிக்கு கொடுக்கப்படுகிறது. நகோமி பிழையான தீர்மானத்தை சரியான மாற்றினாள்.

    மீண்டும் பெத்லகேம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தாள்.

    பெத்லகேமிலிருந்து அவர்கள் புறப்படும் போது அநேகர் இக்குடும்பத்தாருக்கு ஆலோசனை கொடுத்திருப்பார்கள். நீங்கள் எங்கும் செல்லவேண்டாம், ஆண்டவர் நமக்கு வாக்குப்பண்ணின தேசம் இதுதான் என்று சொல்லியிருப்பார்கள். யாருடைய ஆலோசனையையும் கேட்காதவர்களாக எருசலேமிலிருந்து மோவாப் தேசம் சென்றார்கள். இப்போது எல்லாவற்றையும் இழந்தவளாக மீண்டும் எப்படி என் ஊருக்கு செல்வேன் என்று நகோமி யோசிக்கவில்லை.

    ஒருவேலை நகோமி யோசித்திருக்கலாம், நான் இஸ்ரவேல் நாட்டிற்கு செல்வேன். ஆனால் பெத்லகேம் செல்லமாட்டேன். நான் பெத்லகேம் போவேனானால், அவர்கள் என்னை வார்த்தையினால் காயப்படுத்துவார்கள், என்னை கேலி செய்வார்கள் என்று யோசித்திருக்கலாம்.

    ஆனால் நகோமி அப்படி யோசிக்கவில்லை. என்ன யார் எப்படி நினைத்தாலும் பரவாயில்லை, யார் என்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை, நான் எங்கு பிழையான தீர்மானம் எடுத்தேனோ அங்கே செல்வேன் என்று தன்னுடைய பிழையான தீர்மானத்தை சரியான தீர்மானமாக மாற்றினாள்.

    நாமும் இந்த நகோமியைப் போல நம்முடைய பிழையான தீர்மானங்களை சரி செய்ய வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

    நாம் எப்பேர்பட்ட பாவியாக இருந்தாலும் நம்மை மன்னிக்க அவர் ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார்.

    நகோமியின் காலத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இல்லை. ஆனாலும் நகோமி தன்னுடைய பிழையை சரி செய்த போது அவளுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது. ஒரு ஆசீர்வாதமான மறுவாழ்கை நகோமி பெற்றுக்கொண்டாள்.

    இந்த கிருபையின் காலத்தில் வாழ்கின்ற நமக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உண்டு. பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்டு, அவருடைய இரத்தத்தினால் கழுவப்படும்போது நாமும் ஆசீர்வாதமான வாழ்வை பெற்றுக்கொள்வோம்.

ரூத் 1:16,17
    16. அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கம் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
    17. நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல், வேறொன்றும் உம்மைவிட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.

    நகோமி தன் பிழையை சரி செய்யும்போது, மோவாப் பெண் ரூத்தைக் கொண்டே ஆண்டவர் நகோமியை ஆசீர்வதித்தார். நகோமியின் சரியான தீர்மானத்தினால் ரூத் என்ற சாபம் ஆசீர்வாதமாக மாறியது.

    ரூத்தை பெத்லகேமைச் சார்ந்த போவாஸ் மனந்துகொண்டார். போவாஸ் மூலமாக ரூத் ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள். அவன் பெயர் ஓபேத். ரூத்தின் சந்ததியிலிருந்தே கிறிஸ்து என்னும் இரட்சகர் வெளிப்பட்டார். (மத்தேயு 1:5)

    ரூத் ஒரு ஆண் மகனை பெற்ற போது, அது நகோமியின் பிள்ளை என்றே அவளை வாழ்த்தினார்கள். (ரூத் 4:17)

    நகோமி தன் பிழையான தீர்மானத்தை சரிசெய்த போது, ரூத் என்ற சாபத்தை ஆண்டவர் ஆசீர்வாதமாக மாற்றினார்.

    நாமும் நம்முடைய பிழையான தீர்மானத்தை சரிசெய்யும்போது, நம்முடைய சாபத்தையும் ஆசீர்வாதமாக மாற்ற ஆண்டவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    அநேகர் இப்படியாக ஜெபிப்பதுண்டு, ஆண்டவரே என் மனைவியை மாற்றும், இல்லையே என் மனைவியையே மாற்றும்.

    நாம் நம்முடைய பாவங்களை ஆண்டவருடைய சமுகத்தில் அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்றுக்கொள்ளும்போது, நாம் சாபமாய் என்னக்கூடிய காரியங்களையே ஆண்டவர் ஆசீர்வாதமாக மாற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    நம்முடைய பாவத்தை ஆண்டவரிடம் அறிக்கை செய்வோம், நகோமியைப்போலை நம்முடைய பிழையான தீர்மானங்களை, பிழையான பாதைகளை சரிசெய்வோம், ஆண்டவர் நம்மிடத்தில் இருக்கின்ற எல்லா சாபமான காரியங்களையும், வேதனையான காரியங்களையும், தோல்வியான காரியங்களையும் ஆசீர்வாதமாய், செழிப்பாய் மாற்ற அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்…!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.