Type Here to Get Search Results !

கடவுள் பயன்படுத்திய சிறிய பொருட்கள் | Little Things Used by God | ஆழமான பிரசங்க குறிப்புகள் | Tamil Gospel Sermons | Jesus Sam

====================
கடவுள் பயன்படுத்திய சிறிய பொருட்கள்
=====================
2 நாளாகமம் 14:11அ
    கர்த்தாவே, பலமுள்ளவனுக்காலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம்.

    ஆண்டவர் சிறியவரைப் பயன்படுத்தி அசாத்தியமான காரியங்களை செய்வதில் வல்லவர்.

    எளியவனை குப்பையிலிருந்து தூக்கி, ராஜாக்களுக்கு முன்பாகவும், அதிகாரிகளுக்கு முன்பாகவும் நிறுத்துகிறவர் நம்முடைய ஆண்டவர்.

    வேதத்தில் மனிதர்களால் அர்ப்பமாக என்னப்பட்ட பொருட்களைக் கொண்டே கடவுள் அசாத்தியமான காரியங்கைச் செய்துள்ளார். அப்படி கடவுளால் பயன்படுத்தப்பட்ட சிறிய பொருட்களைக் குறித்து இந்த தொகுப்பில் தியானிப்போம்.


1. கழுதையின் பச்சை தாடை எலும்பு
    சிம்சோன் பெலிஸ்தியர்களிடமிருந்து இஸ்ரவேலரை காப்பாற்ற ஆண்டவரால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதி. இருபது ஆண்டுகள் சிம்சோன் இஸ்ரவேலரை நியாயம் விசாரித்தார்.

    ஒரு முறை பெலிஸ்தியர்கள் சிம்சோனை கொலை செய்ய வந்தபோது, ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பைக் கொண்டு பெலிஸ்திய வீரர்களில் ஆயிரம் பேரை கொன்றுபோட்டார் சிம்சோன்.

நியாயாதிபதிகள் 15:15
    உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.

    நாம் அநேக நேரங்களில் எனக்கு பணம் இல்லையே, செல்வாக்கு இல்லையே என்று யோசிப்பதுண்டு. என் மகன் படிப்புக்குத் தேவையான பணம் இல்லையே. என் மகளை ஒரு நல்ல வேலையில் சேர்க்க என்னிடம் பணம் இல்லையே. என்னுடைய கடன் பிரச்சனையை மாற்ற எனக்கு ஒரு வழி பிறக்கவில்லையே என்று யோசிக்கிறோம்.

    எனக்கு நல்ல ஒரு வேலை இல்லையே, எனக்கு நல்ல ஒரு வாகனம் இல்லையே (கார், பைக்), எனக்கு நல்ல ஒரு குடும்பம் அமையவில்லையே, எனக்கு நல்ல மனைவி அமையவில்லையே, எனக்கு நல்ல கணவன் அமையவில்லையே, எனக்கு நல்ல பிள்ளைகள் இல்லையே என்று நம்மிடம் இல்லாததை நினைத்தே கவலைப்படுகின்றோம்.

    சிம்சோன் எதிரிகள் தன்னை தாக்க வரும்போது என்னிடம் ஈட்டி இல்லையே, பட்டயம் இல்லையே, கேடகம் இல்லையே என்று யோசிக்கவில்லை. தன்னிடம் இருப்பதைக்கொண்டு பெலிஸ்தியரில் ஆயிரம் பேரை வெற்றி சிறந்தான்.

கதை:
    வெள்ளத்தில் அடித்து சென்றுகொண்டிருந்த ஒரு விசுவாசி தன்னைக் காப்பாற்றுமாறு கர்த்தரிடம் ஜெபித்தான். கடவுளும் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், ஒரு சில மரக்கட்டைகளை அவன் அருகில் அனுப்பினால்.

    சூழ்ந்து நின்று கொண்டிருந்த ஜனங்கள் அந்த மரக்கட்டையை பிடித்து கரைக்கு வந்துவிடுங்கள் என்று ஊரத்த சத்தமாய் கத்தினார்கள். அதற்கு அந்த விசுவாசி இல்லை இல்லை, நான் ஆண்டவரிடம் ஜெபித்துள்ளே அவர் என்னை எப்படியாவது காப்பாற்றுவார் என்று கூறினார்.

    நாமும் அநேக நேரங்களில் இந்த விசுவாசியைப்போன்று தான் இருக்கின்றோம். ஆண்டவர் என்னைக் காப்பாற்றுவார் என்று நாம் எந்த முயற்ச்சியும் எடுக்காமல் இருக்கின்றோம். அந்த விசுவாசிக்கு ஆண்டவர் சில கட்டைகளை அனுப்பியது போல, நம்முடைய வாழ்க்கையிலும் சில வாய்ப்புக்களை கொடுப்பார், நாம் தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டவர் நமக்கு என்ன கொடுத்திருக்கிறாரோ அதைப் பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாலந்துகள், திறமைகளை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். அதை கண்டறிந்து நாம் தான் செயல்பட வேண்டும்.

    சிம்சோன் அதைத்ததான் செய்தார், எதிரிகள் தன்னை சூழ்ந்த போது அந்த சூழ்நிலையில் ஆண்டவர் எனக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்று சிந்தித்து, அருகில் இருந்த கழுதையின் பச்சைத் தாடை எழும்பைக் கொண்டு பெலிஸ்திய வீரர்கள் ஆயிரம் பேரை கொன்று குவித்தார்.

    நான் கடவுளால் அபிஷேகம் பெற்றவன், பெலிஸ்தியர்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று சிம்சோன் அங்கே எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்திருப்பாரானால், அந்த ஆயிரம் பெலிஸ்திய வீரர்களும் இணைந்து அவர்மேல் பாய்ந்து வெற்றியடைந்திருப்பார்கள்.

    மற்றவர்களிடம் இருக்கின்ற பணம், பதவி, பொருளாதாரம், உயர்வு நமக்கு இல்லாமல் இருக்கலாம், நம்முடைய பெற்றோர் நமக்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கின்ற சூழ்நிலையில் இல்லாமல் இருக்கலாம், நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நமக்கு எதிர்மறையாக செயல்படலாம், இந்த சூழ்நிலையிலும் ஆண்டவர் எனக்கு என்ன கொடுத்திருக்கிறார், அதைக் கொண்டு நான் எப்படி செயல்பட முடியும் என்று யோசித்து நாம் நம்முடைய காரியங்களை செயல்படுத்தும்போது நாமும் சிம்சோனைப்போல ஒரு வெற்றியாளனாக மாற முடியும்.

    ஆயிரம் பெலிஸ்திய வீரர்களை கொன்று குவிக்க ஆண்டவர் பயன்படுத்தியது ஒரு சிறிய கழுதையின் தாடை எழும்பு. நமக்கு எதிரிடையாய் செயல்படுகின்ற பெரிய காரியங்களை மேற்கொள்ள எனக்கு அதிகாரம் இல்லையே, எனக்கு சக்தி இல்லையே என்று நாம் கவலைப்பட்டு கலங்காமல், கடவுள் நமக்கு கொடுத்திருக்கின்ற சிறிய காரியங்களை நாம் சரியாய் பயன்படுத்தும்போது நாமும் சிம்சோனைப்போல தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும்.


2. கவனும், கல்லும்
    பெலிஸ்திய வீரர்களில் ஒருவன் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து உங்களில் தைரியமுள்ளவர் என்னோடு யுத்தம்பண்ண வாருங்கள் என்று சவால் விட்டான். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நாற்பது நாள் இப்படி அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் பெயர் கோலியாத்.

    கோலியாத்தின் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணும். அவரது தோற்றத்தையும் உயரத்தையும் பார்த்த இஸ்ரவேலின் இராணுவ வீரர்கள் அவருக்கு பயந்து நடுங்கினார்கள். இவ்வளவு பெரிய அரக்கனை, சிறுவயது முதல் யுத்தத்தில் பயிற்ச்சி பெற்றவனை நாம் எப்படி வெற்றி பெற முடியும் என்று கலங்கி திகைத்தார்கள்.

    இஸ்ரவேலின் இராணுவத்தில் உள்ள அனைவரும் கோலியாத்தின் உயரத்தையும், அவனது பெலத்தையும் பார்த்தார்கள். ஆனால் பெத்லெகேமைச் சேர்ந்த தாவீது என்ற சிறுவன் நான் ஆராதிக்கிற என் ஆண்டவர் கோலியாத்தைக் காட்டிலும் பெரியவர் என்று விசுவாசித்தார்.

    நான் வணங்குகிற தெய்வம் கோலியாத்திலும் பெரியவர், அவரின் துணையோடு நான் கோலியாத்தை வெற்றி பெறுவேன் என்று வைராக்கியமாய் சொன்னார் சிறுவன் தாவீது.

    தாவீதின் சகோதரர்களும், ராஜாவாகிய சவுலும் தாவீதை தடுத்தார்கள். அவன் யுத்த வீரன், உன்னால் அவனை தோற்கடிக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால், தாவீது கர்த்தரே எனக்கு துணை என்ற தைரியத்தில் புறப்பட்டார்.

    தாவீது, மேய்ப்பர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் கவனையும், ஐந்து கூலாங்கற்களையும் எடுத்துக்கொண்டு கோலியாத்தை வீழ்த்த புறப்பட்டார்.

    ஆண்டவரின் கிருபையால் தாவீது கோலியாத்தை வெற்றி சிறந்தான்.

1 சாமுவேல் 17:49
    தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான். அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்துபோனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.

    ஒரு கல் தூரத்தில் இருக்கும்போது அது எவ்வளவு பெரிய கல்லாக இருந்தாலும் சிறிய கல் போன்று தோன்றும். ஒரு சிறிய கல்லை கண்ணுக்கு அருகில் வைத்து பார்த்தால், சிறிய கல்லும் பெரிய கல் போன்று தோன்றும்.

    சவுல் அரசனும், இஸ்ரவேல் ஜனங்களும் கோலியாத் என்ற கல்லை தங்களுக்கு அருகில் வைத்துப் பார்த்தார்கள், கல் மிகப் பெரியதாக இருந்தது. தங்களோடு கூட இருந்த கடவுளை தூரத்தில் வைத்துப் பார்த்தார்கள் கடவுள்  சிறியவராக தெரிந்தார்.

    ஆனால் தாவீது கடவுளை தனக்கு அருகில் வைத்துக்கொண்டு, கோலியாத் என்ற அரக்கனை தூரத்தில் வைத்தார். எனவே, கோலியாத்தைக் காட்டிலும் என் கர்த்தர் பெரியவர் என்பதை தாவீது உணர்ந்து கொண்டார்.

    நாமும் தாவீதைப் போல நமக்கு வரும் போராட்டங்கள், பெலவீனங்கள், எதிர்ப்புக்கள், தோல்விகள், அவமானங்களை தூரத்தில் வைத்துவிட்டு, இவைகளைக் காட்டிலும் என் கர்த்தர் பெரியவர் என்று விசுவாசிக்கும்போது நம்முடைய தோல்விகள் வெற்றியாய் மாறும், பெலவீனங்கள் பெலமாய் மாறும், சுகவீனங்கள் சுமாய் மாறும்.

    கோலியாத் என்ற பெரிய அரக்கனை வெற்றி சிறக்க ஆண்டவர் சிறிய கூலாங்கல்லையே பயன்படுத்தினார். அதைப்போலவே நமக்கு எதிரிடையாய் செயல்படுகின்ற எல்லா சக்திகளையும் வெற்றி சிறக்க ஆண்டவர் சிறிய பொருட்களையே பயன்படுத்துவார். உலகில் நமக்கு எதிரிடையாய் செயல்படுகின்ற எல்லா காரியங்களைக் காட்டிலும் என் கர்த்தர் பெரியர் என்ற விசுவாசம் நமக்கு இருக்கும்போது தாவீதைப்போல நாமும் வெற்றியாளராக மாற முடியும்.


3. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள்
    இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கேட்கும்படியாகவும், அவரால் சுகம்பெறும்படியாகவும் அநேகர் அவரை பின்பற்றினார்கள்.

    வனாந்திரமான ஒரு இடத்தில் அநேக ஜனங்கள் கூடியிருக்கிறதைக் இயேசு கண்டு அவர்களுக்கு உபதேசம் பண்ண தொடங்கினார். வெகுநேரம் சென்ற பின்பும் ஜனங்கள் ஆர்வமாக அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

    சீஷர்கள் இயேசுவிடம் வந்து: வெகுநேரம் ஆயிற்று. வனாந்திரமாய் இருக்கின்ற படியினால் ஜனங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தங்களுக்கான உணவை வாங்கிக்கொள்ள அனுப்பிவிடும் என்று சொன்னார்கள்.

    இயேசு சீஷர்களைப் பார்த்து: நீங்களே ஜனங்களுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார்.

    அப்பொழுது சீஷர்கள்: மிகவும் திரளான ஜனங்கள் இருக்கிறார்களே. இத்தனை திரள் கூட்ட ஜனங்களுக்கு நம்மால் எப்படி உணவு கொடுக்க முடியும் என்று கேட்டார்கள்.

    அதற்கு இயேசு: உங்களிடம் உள்ளதை கொடுங்கள் என்றார். அவர்கள் ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தார்கள்.

மாற்கு 6:35-44
    38. அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள்.

    கூடியிருந்த ஜனங்களில் புருஷர்கள் மாத்திரம் ஐயாயிரம் பேர் இருந்தார்கள். இத்தனை திரளான ஜனங்களுக்கு இந்த ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் எம்மாத்திரம். அப்பத்தையும், மீனையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டினாலும் இத்தனை ஜனங்களுக்கு சுவைக்கக்கூட கொடுக்க முடியாது என்று சீஷர்கள் நினைத்தார்கள்.

    இயேசு அப்பத்தையும் மீனையும் ஆசீர்வதித்து சீஷர்களிடத்தில் கொடுத்தார். சீஷர்கள் எடுக்க எடுக்க அப்பமும் மீனும் குறையாதிருந்தது. கூடியிருந்த அனைவரும் திருப்தியாய் சாப்பிடும் அளவிற்கு அப்பமும் மீனும் அவர்களுக்குக் கிடைத்தது. ஐயாயிரம் புருஷர்கள் என்றால், அவர்களோடு மனைவிகளும் பிள்ளைகளும் வந்திருப்பார்கள். சுமார் 15,000 மக்கள் திருப்தியாய் சாப்பிட்டு, மீதியான துணிக்கைகளை பன்னிரெண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.

    ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் இல்லாவிட்டால், ஆண்டவரால் இத்தனை திரளான ஜனங்களுக்கு உணவு கொடுத்திருக்க முடியாதே என்று ஒருவேலை நாம் யோசிக்கலாம். ஆண்டவர் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் இருந்ததினால் அற்பும் செய்யவில்லை. ஒன்றுமே இல்லை என்றாலும் ஆண்டவரால் அற்புதம் செய்ய முடியும்.

    நம்முடைய ஆண்டவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளாக மாற்றுகிறவர். (ரோமர் 4:17)

    ஆண்டவர் அற்புதம் செய்ய அப்பமும் மீன்களும் காரணம் அல்ல. ஆண்டவர் நம்முடைய இருதயத்தை பார்க்கிறார். நாம் ஆண்டவருக்காக கொடுக்க ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கின்றோமா?

    அத்தனை திரள் கூட்ட மக்கள் ஆண்டவருடைய வார்த்தையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருமே தங்களுக்கு தேவையான உணவை கொண்டு வந்திருப்பார்கள். ஏனென்றால், இயேசுவின் போதனையைக் கேட்க வருகிறவர்களுக்கு இயேசுவானவர் வெகுநேரம் பேசுவார் என்று நன்றாக தெரியும். எனவே நிச்சயம் வரும்போது ஆகாரத்தோடு வந்திருப்பார்கள்.

    ஆனால் உங்களிடத்தில் என்ன இருக்கிறது என்று ஆண்டவர் கேட்ட போது ஒருவரும் தங்களிடம் இருப்பதைக் கொடுக்க முன்வரவில்லை. அத்தனை திரள் கூட்ட மக்கள் மத்தியிலும் ஒரு சிறுவனே தன்னிடம் உள்ள அப்பத்தையும், மீனையும் கொடுக்க முன்வந்தான். (யோவான் 6:9)

    இச்சிறுவனைப்போல நம்மிடத்தில் உள்ள சிறிய பொருட்களை நாம் ஆண்டவருக்காக கொடுக்கும்போது, ஆண்டவர் அதை கனப்படுத்தி நம்மை ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    ”கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும் தரித்திரரானதில்லை”

    நாம் அவருடைய ஊழிப்பணிக்காக கொடுக்கும்போது அதை ஆண்டவர் பண்மடங்காய் திரும்ப கொடுக்கின்றவராய் இருக்கின்றார்.

லூக்கா 6:38அ
    கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி, நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்.

உண்மை நிகழ்வு:
    ஒரு சொல்வந்தன் வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றது. செல்வந்தனின் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் திருமணத்தில் கலந்துகொண்டு, மனமக்களை வாழ்த்தினார்கள். தங்களால் இயன்ற தொகையை திருமணத் தம்பதியினருக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

    செல்வந்தவர்கள் அநேகர் தங்கள் செல்வாக்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு லட்சம், இரண்டு லட்சம் என மொய் கொடுத்தார்கள்.

    அதைப் பார்த்த ஒரு சிலர், நம்மால் இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என்று எண்ணி, தாங்கள் கொடுக்க நினைத்த சிறிய தொகையையும் கொடுக்காமலேயே சென்றுவிட்டார்கள்.

    இதைப்போலவே நாமும் அநேக நேரங்களில் யோசிக்கின்றோம். ஆலயத்தில் தேவை இருக்கும்போது, அதை பணக்காரர்கள் சந்தித்துவிடுவார்கள். நம்மால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்று நினைத்து, ஆலயத்திற்கு கொடுப்பதையே நிறுத்திவிடுகின்றோம்.

    நாம் அதிகம் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்பவில்லை. நம்மிடத்தில் இருப்பதை கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகின்றார்.

    அச்சிறுவன் அந்த ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் எனக்கே போதாது, இதை ஆண்டவரிடம் கொடுத்தால் ஆண்டவர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார், யாராவது அதிகமாக கொண்டு வந்திருப்பார்கள் அவர்கள் கொடுப்பார்கள் என்று யோசிக்கவில்லை. தன்னிடம் இருந்ததை ஆண்டவரிடம் கொடுத்தான்.

    சிறுவனின் அச்செயல்களால் அவன் மாத்திரம் அல்ல, கூடியிருந்த அத்துனை ஜனங்களும் திருப்தியாய் சாப்பிட்டார்கள். நாமும் ஆண்டவருடைய பணிக்காக அவர்கள் கொடுப்பார்கள், இவர்கள் கொடுப்பார்கள் என்று யோசிக்காமல் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கும்போது, அதன் மூலமாக ஆண்டவர் நம்மையும், நம்முடைய குடும்பங்களையும் ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

    நாம் ஆண்டவருக்காக கொடுக்கம்போது, ஆண்டவர் பொருளின் அளவைப் பார்க்கிறவர் அல்ல, நம்முடைய மனதின் அளவைப் பார்க்கிறார்.

    ஒரு ஏழை விதவை இரண்டு காசு காணிக்கை போட்ட போது, மற்ற செல்வந்தர்களைக் காட்டிலும் அவளே அதிகம் கொடுத்தாள் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

மாற்கு 12:42
    ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியாக இரண்டு காசைப் போட்டாள்.

    நாமும் உற்காசமாய் நம்மிடம் இருக்கின்ற சிறிய பங்கை ஆண்டவருக்காக கொடுக்கும்போது அவர், நம்மை ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவராய் இருக்கின்றார்.

    சிறிய கழுதையின் தாடையைப் பயன்படுத்தி ஆயிரம் பெலிஸ்திய வீரர்களை தோற்கடிக்க கிருபைச் செய்தார் ஆண்டவர்.

    சிறிய கூழாங்கல்லைப் பயன்படுத்தி பெரிய கோலியாத்தை வெற்றி சிறக்கப்பண்ணினார் ஆண்டவர்.

    சிறிய அளவு அப்பத்தையும் மீணையும் கொண்டு அநேகருக்கு போசித்தார் ஆண்டவர்.

சங்கீதம் 113:7, 1 சாமுவேல் 2:8
    அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

    சிறியவர்களும் எளியவர்களுமாகிய நம்மைக்கொண்டு ஆண்டவர் பெரிய காரியங்களை செய்ய வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

    அவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வழியில் நடக்கும்போது நாமும் உயர்வைப் பெற்றுக்கொள்வோம்.

    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்….!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.