தலைப்பு:
தாவீது – இயேசு கிறிஸ்து
கொலோசெயர் 2:16,17
16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும்
மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்கைளைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள்
கிறிஸ்துவைப்பற்றினது.
பழைய ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளும்
புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருக்கிறது என்று வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. பண்டிகையானாலும், மாதப்பிறப்பானாலும், ஓய்வுநாளானாலும்
இவையனைத்தும் ஏதோ சடங்காச்சாரம் அல்ல, இவைகள் புதிய ஏற்பாட்டின் அதாவது கிறிஸ்துவின்
நிழலாய் இருக்கிறது என்ற பவுல் எழுதுகிறார்.
பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனுடைய
வாழ்க்கையும் புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருக்கிறது. பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த
எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையையும் பற்றி வேதாகமத்தில் நாம் தெளிவாக வாசிக்க முடியாது. ஒரு சிலரை பற்றி மட்டுமே வேதம் நமக்கு தெளிவாக கற்றுக்கொடுக்கிறது. காரணம், பழைய ஏற்பாட்டு மனிதர்களுக்கு திருஷ்டாந்தங்களாக
சம்பவித்தவைகள் அனைத்தும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்கின்ற அதாவது உலகத்தின்
முடிவில் வாழ்கின்ற நமக்கு எச்சரிப்புண்டாக அவைகள் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது.
1 கொரிந்தியர் 10:11
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக
அவர்களுக்குச் சம்பவித்தது, உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
தாவீது
தாவீதின் தகப்பன் பெயர் ஈசாய். ஈசாய்க்கு எட்டு பிள்ளைகள் இருந்தார்கள். எட்டாவது மகன் தாவீது. இந்த பழைய ஏற்பாட்டு தாவீதுக்கும் புதிய ஏற்பாட்டு
இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள இருபதுக்கும் அதிகமான் ஒற்றுமைகளை நாம் வேதத்தில் பார்க்க
முடியும். அவற்றில் ஒரு சில ஒற்றுமைகளைக் குறித்து
இந்த குறிப்பில் சிந்திப்போம்.
1. பெத்லகேமில்
பிறந்தவர்கள்:
தாவீது:
1 சாமுவேல் 17:15
தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லேகேமிலிருக்கிற தன்
தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.
தாவீது பெத்லகேம் ஊரில் பிறந்தவர்.
இயேசு கிறிஸ்து
மத்தேயு 2:1
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது……
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பெத்லகேம்
ஊரில் பிறந்தார்.
பெத்லகேம் என்பதன் அர்த்தம் அப்பத்தின் வீடு. இஸ்ரவேல் நாடு முழுவதும் கோதுமைகள் விளைந்தாலும்,
பெத்லகேமில் விளையும் கோதுமைக்கு அதிக சிறப்பு உண்டு. அந்த கோதுமையிலிருந்து எடுக்கப்படும் அப்பம் மிகச்
சுவையாக இருக்கும். முழு இஸ்ரவேல் நாட்டிலும்
உயர்தரமான அப்பம் பெத்லகேமில் மாத்திரமே கிடைக்கும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக அப்பமாக
வந்தார். ஜீவ அப்பம் நானே (யோவான் 6:48)
இயேசு கிறிஸ்து தன்னுடைய சரீரத்தை அப்பத்திற்கு
ஒப்பிடுகிறார். நமக்காக ஜீவ அப்பமாக வந்த இயேசு
உயர்தரமான அப்பம் கிடைக்கின்ற பெத்லகேமிலே நமக்காக பிறந்தார்.
1 கொரிந்தியர் 11:23,24
23. …..கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று
இராத்திரியி அப்பத்தை எடுத்து,
24. ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள்,
இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
2. கீழ்ப்படிந்தார்கள்:
தாவீது
தாவீது பெற்றோரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார். தாவீதின் தகப்பன் ஈசாய் தாவீதை அழைத்து, உன் சகோதரர்கள்
யுத்தக்களத்தில் இருக்கிறார்கள், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை நீ கொடுத்துவிட்டு
வா என்று சொன்னபோது, தாவீது உடனே கீழ்ப்படிந்து தன் சகோதரரைப் பார்க்கும்படியாக புறப்பட்டார்.
1 சாமுவேல் 17:20
தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு,
ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்.
இயேசு கிறிஸ்து
லூக்கா 2:51அ
பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து,
அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்……
சர்வ வல்லமையுள்ள கடவுள், நம்முடைய பாவத்தை
மன்னிக்கும்படியாக மனிதனாக பூமிக்கு வந்தார்.
அப்படி மனிதனாய் அவர் வாழ்ந்த போது, முப்பது வயது வரை தனது தாய் தகப்பனுக்கு
கீழ்ப்படிந்து நடந்தார்.
இயேசு கிறிஸ்து முப்பது வயது வரை எங்கு இருந்தார்,
என்ன செய்தார் என்பதைப் பற்றி வேதத்தில் எழுதப்படவில்லையே, ஏன் என்ற கேள்வி அநேகருக்கு
தோன்றும். இயேசு கிறிஸ்து முப்பது வயது வரை
ஒரு யூதக் குடிமகன் எப்படி வாழ்ந்தாரோ அப்படியே வாழ்ந்தார். எந்த ஒரு
மாற்றமும் அவரிடம் காணப்படவில்லை. எனவே,
அதைக் குறித்து வேதத்தில் எழுதப்படவில்லை.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது,
கன்னியின் வயிற்றில் பிறந்தார். பிறப்பு வித்தியாசமானதாய் இருப்பதால் அவை வேதத்தில்
எழுதப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து பன்னிரண்டு வயதில் மற்ற சிறுவர்களைப்போல
அல்லாமல் தேவாலயத்தின் குருக்களிடம் வினவும் அளவிற்கு திறமையானவராக இருந்தார். மற்ற சிறுவர்களை விட பன்னிரண்டு வயதில் தேவாலயத்தில்
இயேசுவின் செயல் வித்தியாசமானதாக இருந்ததால் அவைகள் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
முப்பது வயதில் ஆண்டவர் தனது ஊழியத்தை துவங்கியபோது,
அவருடைய ஊழிப்பாதை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. எனவே, இயேசுவின் மூன்றரை ஆண்டு ஊழியப்பணி வேதாகமத்தில்
எழுதப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்துவின் மரணம் முற்றிலும் வித்தியாசமானது. இயேசு கிறிஸ்துவிடம் ஒரு குற்றமும் இல்லாதபோதும்,
மதத்தலைவர்கள் அவரை கொலைசெய்தார்கள். மூன்றாம்
நாள் இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தார். இவை
ஒரு வித்தியாசமான நிகழ்வு என்பதால் இவையும் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து முப்பது வயது நிரம்பும் முன்
ஏதாவது வித்தியாசமான காரியங்களை செய்திருப்பாரானால் அவைகள் வேதத்தில் நிச்சயம் இடம்
பெற்றிருக்கும்.
இயேசு கிறிஸ்து முப்பது வயது வரை தாய், தகப்பனுக்கு
கீழ்படிந்தவராகவே வாழ்ந்தார்.
மனிதனின் மூளை இருபது வயதில் தான் முழுமையான
வளர்ச்சியைப் பெறும். இருபது வயதுக்குட்பட்ட
அனைவருமே சிறுவர்களாக கருதப்படுகிறார்கள்.
சிறுவர்கள் தானாக முடிவெடுக்கும் திறன் அற்றவர்கள். சிறுவர் தானாய் முடிவெடுக்கும்போது, பின்விளைவுகளை
யோசிக்க மாட்டார்கள். அவர்களுடைய மூளை இன்னும்
சரியான வளர்ச்சியை அடையவில்லை. இருபது வயது
நிறைந்த ஒரு நபரே பின்விளைவுகளைக் குறித்து சிந்திக்க துவங்குவார்.
இருபது வயதிற்கு பின்பே ஒரு மனிதனுக்கு வாழ்வின்
எதார்த்தம் புரிய துவங்கும். ஒவ்வொரு இருபது
வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் தங்கள் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டே நடக்க வேண்டும்.
இந்த விஞ்ஞான உலகத்தில் பெற்றோர்களை விட
நான் அதிகமாக படித்திருக்கிறேன். என்னால் சுயமாக
முடிவெடுக்க முடியும். எனக்கு யாருடைய ஆலோசனையும்
தேவையில்லை என்று அநேகர் நினைத்து தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி வாழ்ந்த அநேகர் தங்கள் வாழ்க்கையின் முதுமையில்,
இளமையில் செய்த தவறுகளை நினைத்து வருந்துகிறார்கள். ஒவ்வொருவரும் சிறுவரும் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து
நடக்க வேண்டும்.
தாவீது ராஜாவும் கீழ்ப்படிந்தார், இயேசு
கிறிஸ்துவும் கீழ்ப்படிந்தார் என்று கற்றுக்கொண்டோம். சிறுவர்களாகிய நாம் பெற்றோரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
வாழ கற்றுக்கொள்வோம்.
கீழ்ப்படியே முதல் படி என்று சொல்லுவார்கள். முதல் படியாகிய கீழ்படிதலை நாம் தவறவிட்டால், வாழ்வின்
உயர்ந்த நிலைகளை நம்மால் அடைய முடியாது.
எபேசியர் 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்,
இது நியாயம்.
3. வெற்றியாளர்கள்:
தாவீது
1 சாமுவேல் 17:34-37
36. அந்த சிங்கத்தையும், அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய
நான் கொன்றேன்……
தாவீது ராஜாவாய் மாறும்போது அவருக்கு இருந்த
அடையாளங்களில் ஒன்று சிங்கத்தை வெற்றி சிறந்த மாவீரன். தனிநபராக சிங்கத்தை வீழ்த்தும் அளவிற்கு திறமை வாய்ந்த
வீரன் தாவீது.
இயேசு கிறிஸ்து
மத்தேயு 4:1-10 | லூக்கா 4:1
1. அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்ககப்படுவதற்கு ஆவியானவராலே
வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கெட்சிக்கிற
சிங்கமாகிய பிசாசை வெற்றி சிறந்தார்.
பிசாசானவன் இயேசுவுக்கு என்ன தேவை என்பதை
நன்கு அறிந்தவனாக அவருக்கு சோதனையைக் கொடுத்தான்.
நாற்பது நாட்கள் உபவாசம் இருந்த இயேசு கிறிஸ்து நிச்சயம் பசியாய் இருப்பார்
என்பதை அறிந்த பிசாசு, ஒரு கல்லை இயேசுவிடம் கொடுத்து இதை அப்பமாக்கி சாப்பிடுங்கள்
என்று சொல்லுகிறான்.
இயேசு கிறிஸ்து அற்புதங்களை செய்ய வல்லவர். அவர் நினைத்திருந்தால் கற்களை அப்பங்களாக மாற்றியிருக்கலாம். அப்படி செய்தால் பிசாசின் வார்த்தைக்குக் கீழ்ப்டிந்ததாகும். மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வாயிலிருந்து
புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்ற பதிலின் மூலமாக ஆண்டவர் பிசாசை
வென்றார்.
மத்தேயு 4:3,4
3. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய
குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய
வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே
என்றார்.
இயேசுவின் தேவையை அறிந்து அவரை வீழ்த்த வந்த கெர்ச்சிக்கிற சிங்கமாகிய பிசாசை ஆண்டவர் இயேசு வெற்றி சிறந்தார்.
கெட்சிக்கிற சிங்கமாகிய பிசாசு:
1 பேதுரு 5:8
தெறிந்த
புத்தியுள்ளவர்களாயிருங்கள்.
விழித்திருங்கள். ஏனெனில் உங்கள்
எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று
வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
காட்டின் ராஜா சிங்கம் இன்று எந்த விலங்கை
தனது இறையாக்கலாம் என்று நோட்டமிடுவதுபோல, சாத்தானும் இன்று யாருடைய வாழ்க்கையை அழிக்கலாம்,
எந்த நீதிமானை பாவத்தில் விலத்தள்ளலாம் என்று எண்ணி சுற்றித்திரிகிறான். நாம் ஜாக்கிரதையோடு வாழ வேண்டும். பிசாசின் தந்திரங்களுக்கு நாம் விலகி ஓட வேண்டும்.
நாம் இனி செய்யவே கூடாது என்று வெறுத்து
ஒதுக்குற பாவங்களையே பிசாசானவன் நம் கண் முன் கொண்டு வருவான்.
எ.கா: பொய், கோபம், எரிச்சல், சண்டை
நான் இனி கோபம் கொள்ளவே மாட்டேன் என்று தீர்மானம்
செய்தோமானால், நம்முடைய கோபத்தை தூண்டுகின்ற காரியங்களே நமக்கு நேரிடும்.
இனி என் வீட்டில் சண்டை இருக்காது. குடும்பமாக சமாதானத்தோடு வாழ்வோம் என்று தீர்மானித்திருப்போமானால்,
அன்றுதான் சண்டையை தூண்டக்கூடிய அநேக காரியங்கள் குடும்பத்தில் நடைபெறும்.
இவையனைத்தும் சாத்தான் நமக்கு கொடுக்கின்ற
சோதனை என்று நாம் அறிந்து, இவற்றில் நாம் வெற்றி
பெற வேண்டும்.
மனம் திரும்புகிற ஒரு பாவியின் நிமித்தம்
பரலோகத்தில் மிகந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று லூக்கா 15:7-ல் வாசிக்கிறோம். ஒரு பாவ மனந்திரும்பும்போது பரலோகத்தில் மிகுந்த
சந்தோஷம் உண்டாயிருக்குமானால், ஒரு நீதிமான் பாவம் செய்யும்போது பிசாசுக்கு எவ்வளவு
சந்ஷோஷம் உண்டாயிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.
இயேசு கிறிஸ்து கெட்சிக்கிற சிங்கமாகிய பிசாசின்
சோதனையில் வெற்றிசிறந்ததுபோல, நாமும் கெட்சிக்கிற சங்கமாகிய பிசாசின் சோதனையில் வெற்றிபெறுவோம்.
4. ஏற்ற நேரத்தில்
உயர்த்தப்பட்டார்கள்:
தாவீது
2 சாமுவேல் 5:4
தாவீது ராஜாவாகும்போது முப்பது வயதாயிருந்தான்.
தாவீது
முப்பது வயதுதில் ராஜாவாக உயர்த்தப்பட்டார்.
இயேசு கிறிஸ்து
லூக்கா 3:23
அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் முப்பது வயதில்
தன்னுடைய ஊழியத்தை துவங்கினார்.
இருவரும் ஏற்ற நேரம் வரும்வரை காத்திருந்தார்கள்,
உயர்த்தப்பட்டார்கள். நம்முடைய வாழ்க்கையைக்
குறித்தும் ஆண்டவர் அநேக திட்டங்களை வைத்திருப்பார். எல்லாவற்றையும் ஏற்ற நேரத்தில் ஆண்டவர் செய்து முடிப்பார். ஏற்ற நேரம் வரும்வரை நாம் பொறுமையோடு காத்திருக்க
வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும்
ஆண்டவரின் சித்தத்தை அறிந்து நாம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முடிவுகளின் போது, புதிய
காரியங்களை துவங்கும்போதும் இந்த காரியத்தில் ஆண்டவர் பிரியப்படுவாரா என்று நாம் ஆண்டவருடைய
சித்தத்திற்காக காத்திருந்து செயல்படவேண்டும்.
தாவீது ஏற்ற நேரம் வரும்வரை காத்திருந்தார்,
ராஜாவாக உயர்த்தப்பட்டார். இயேசு கிறிஸ்துவும்
காத்திருந்தார், ஏற்ற நேரத்தில் ஊழியத்தை துவங்கினார். நாமும் ஆண்டவருடைய சித்தத்திற்காக காத்திருப்போம்,
ஏற்ற நேரத்தில் உயர்வையும், மேன்மையையும் பெற்றுக்கொள்வோம்.
5. ஏழைகளை
ஏற்றுக்கொண்டார்கள்:
தாவீது
1 சாமுவேல் 22:2
ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும்
அவனோடே கூடிக்கொண்டார்கள். அவன் அவர்களுக்குத்
தலைவனானான்.
தாவீது ராஜாவாதற்கு முன்பே ஒடுக்கப்பட்டவர்களையும்,
கடன்பட்டவர்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களுடைய தேவையை சந்தித்து வந்தார்.
இயேசு கிறிஸ்து
ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவும் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டவர்கள், திக்கற்றவர்கள், ஏழைகள், விதவைகள்
மத்தியிலேயே தன்னுடைய ஊழியத்தை செய்து வந்தார்.
இப்படிப்பட்டவர்களே ஆண்டவரிடமிருந்து அற்புதத்தையும், நன்மைகளையும் பெற்றுக்கொண்டார்கள்.
ஆண்டவர்
ஒரு மனிதனை தெரிவு செய்யும்போது அவன் திறமைவாய்ந்தவனாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை. ஒன்றும் இல்லாதவர்களையும், பைத்தியக்காரர்களையும்,
பலவீனமானவர்களையும், இழிவானவர்களையும், அற்பமாய் எண்ணப்பட்டவர்களையுமே ஆண்டவர் தெரிந்தெடுத்து
உயர்த்துகிறார்.
1 கொரிந்தியர் 1:27
27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத்
தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி
தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
28. உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
நாமும் கூட ஏழைகளையும், திக்கற்றவர்களையும், விதவைகளையும், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களையும் நேசிக்க வேண்டும், அவர்களின் தேவையை சந்திக்க வேண்டும் என்று ஆண்டவர் நமக்கு வழியுறுத்துகிறார்.
தாவீதும் ஏழைகளை நேசித்தார், இயேசு கிறிஸ்துவும் ஏழைகளை நேசித்தார். நாமும் ஏழைகளை நேசித்து அவர்களின் தேவைகளை சந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
தாவீதுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள
ஐந்து ஒற்றுமைகளைக் குறித்து அறிந்து கொண்டோம்.
நாமும் கீழ்ப்பந்து நடக்கும்போது, பிசாசின் சோதனைகளில் வெற்றிபெறும்போது, ஆண்டவருடைய
சித்தத்திற்காக காத்திருக்கும்போது, ஏழைகளை நேசித்து ஆதரிக்கும்போது ஆண்டவரிடமிருந்து
நன்மைகளையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.