Type Here to Get Search Results !

கிறிஸ்துவின் பிறப்பில் சாஸ்திரிகள் | Christmas Special Message in Tamil | யார் இந்த சாஸ்திரிகள்? | Christmas Message Sermon Outline | Jesus Sam

கிறிஸ்துவின் பிறப்பில் சாஸ்திரிகள்

சாஸ்திரிகள் என்றால் யார்?

  நட்சத்திரங்களை ஆராயக்கூடியவர்கள். இவர்களை பிரபுக்கள் என்றும் அழைத்தார்கள்.  இவர்கள் மீதியான் தேசத்திலிருந்து வந்தவர்கள். (ஆதியாகமம் 12 அதிகாரம்)

Astronomy:

   Astronomy என்றால் வானியல்.  வானத்தில் நிகழும் மாற்றங்களையும், நட்சத்திரங்களின் நகர்வுகளையும் ஆராய்ச்சி செய்வது.

Astrology:

  Astrology என்றால் வானத்தின் நட்சத்திரங்கள், கோல்களின் கணிப்புகளை வைத்து குறிசொல்லுவது. அதாவது ஜோதிடம் பார்ப்பது.

சாஸ்திரிகள்:

  இஸ்ரவேல் ஜனங்களில் லேவியர்கள் பரம்பரை பரம்பரையாக ஆசாரிய வேலை செய்வது போல, மீதியான் தேசத்திலிருந்து வந்த இவர்களும்  பரம்பரை பரம்பரையாக சாஸ்திரிகள் என்ற பட்டத்தை கொண்டிருந்தனர்.  இவர்கள் நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்தும், அதன் மூலமாக குறிசெல்லி வருமானத்தை ஈட்டியும் வந்தனர்.  யூதர்களைப்போன்றே ஒரே கடவுளை வழிபட்டு வந்தனர்.  நெருப்பை மூட்டி ஆராதனை நடத்தி வந்தனர்.  இரத்தத்தை பலியிட்டு கடவுளை ஆராதித்து வந்தனர்.  அதிகாரமும், ஆளுகை திறனும் படைத்தவர்கள்.


பார்வோன் ராஜா:

  சாஸ்திரிகளைப் பற்றி முதலில் நாம் ஆதியாகமத்திலேயே வாசிக்கிறோம்.   இவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் மூலம் காலங்களைக் கனித்து, ராஜாவிற்கு அநேக ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள்.

ஆதியாகமம் 41:8

  காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது.  அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்கு தன் சொப்பனத்தைச் சொன்னான்.  ஒருவரும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்கு சொல்லக்கூடாமற்போயிற்று.

  பார்வோன் ராஜா தான் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தைக் கூறும்படி தேசத்தில் உள்ள சாஸ்திரிகளையம், மந்திரவாதிகளையும் அழைத்து கேட்கிறார்.


நேபுகாத் நேச்சார்:

  நேபுகாத் நேச்சாரும் இந்த சாஸ்திரிகளை அழைத்தே தான் கண்ட சொப்பனத்தையும், அதின் அர்த்தத்தையும் அறிவிக்கும்படி கூறினார்.

தானியேல் 2:10

   கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை.  ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது, ஜோசியனிடத்திலாவது, கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை


நான்கு சாம்ராஜ்யங்கள்:              

          உலகத்தில் தோன்றிய முதல் நான்கு சாம்ராஜ்யங்கள் இவைகளே.

          1. பாபிலேனிய சாம்ராஜ்யம்

          2. மேதிய, பெர்சிய சாம்ராஜ்யம்

          3. கிரேக்க சாம்ராஜ்யம்

          4. ரோம சாம்ராஜ்யம்

    பாபிலோனிய சாம்ராஜ்யத்தில் சாஸ்திரிகளுக்கென்று தனி மதிப்பும் மதியாதையும் இருந்து வந்தது.  இவர்கள் நட்சத்திரங்களை வைத்து எதிர்காலத்தில் நடப்பவைகளை மன்னர்களுக்கு அறிவித்து வந்தனர்.

    மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தின் போது சாஸ்திரிகள் அவர்களுக்கென தனி அதிகாரத்தையும், ஆளுகை திறமையையும் வளர்த்துக்கொண்டார்கள்.  ஒரு மன்னர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் அவருக்கு என்ன தகுதி வேண்டும், யாரை மன்னராக நியமிக்க வேண்டும் என்ற சட்ட ரீதியான அனைத்து கட்டமைப்புகளும் இவர்களிடம் தான் இருந்தது.  எந்த ஒரு புதிய மன்னராக இருந்தாலும், அவர்களை நியமிக்கும் அதிகாரம் சாஸ்திரிகளுக்கு இருந்தது.

வஸ்தி:

  எஸ்தர் புத்தகத்தில் வாசிக்கிறோம், அகாஸ்வேரு ராஜாவின் மனைவி (ராணி) வஸ்தி ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படியாததால், வஸ்தியின் ராஜ மேன்மையை இழக்கச் செய்தவர்கள் இந்த பிரபுக்களே. (எஸ்தர் 1:16-20)

      மெமுகான் – பிரபு (எஸ்தர் 1:13)



தானியேல்:

   தானியேல் பாபிலோனிய ராஜ்யத்தின் போதும், மேதிய பெர்சிய ராஜ்யத்தின் போதும் பாபிலோனின் அதிகாரியாக இருந்தார். நேபுகாத்நேச்சார் தானியேலை மிகவும் நேசித்தார்.  தானியேல் ஆராதிக்கிற தெய்வம் தான் உண்மையான தெய்வம் என்பதை நன்கு அறிந்திருந்தார்.  இருப்பினும் தானியேலை சிங்க கொபிக்கு தப்புவிக்க நேபுகாத்நேச்சாரால் முடியில்லை.  காரணம் என்னவென்றால், அந்த பிரதானிகளின் சட்டம் அப்படிப்பட்டாக இருந்தது. 



தானியேல் 6:20

  ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.

   ராஜா இயற்றிய கட்டளையை ரத்து செய்யும் அதிகாரம் ராஜாவிற்கு இல்லை.  தானியேலை கெபியில் போடும் விருப்பம் ராஜாவுக்கு இல்லை.  ஆனால் அந்த பிரதானிகளின் சட்டம் அப்படிப்பட்டதாக இருந்தது.  எனவே, தானியேலே கெபிக்குள் போடாமல் தடுக்க ராஜாவாளும் முடியவில்லை.


சாஸ்திரிகளின் தலைவன் தானியல்:

  ராஜாவின் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் விடுவிக்கும் திறமை எந்த ஒரு சாஸ்திரிக்கும் இல்லாதிருந்தது.  அந்த சமயத்தில் தானியேல் கர்த்தருடைய துணையோடு, ராஜாவின் சொப்பனத்தையும், அதின் அர்த்தத்தையும் விடுக்கிறார்.  அதனால் நேபுகாத் நேச்சார் சாஸ்திரிகளுக்கும், பிரபுக்களுக்கும் அதிபதியாக தானியேலை நியமிக்கிறார்.

தானியேல் 2:48

  பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுவதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.

தானியேல் 5:11

   உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான்.  அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது.  உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது.  ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.


மோசியாவைக் குறித்த தீர்க்கதரிசனம்:

 தானியேலுக்கு ஆண்டவர், மேசியா எப்போது வருவார் என்ற வெளிப்பாட்டைக் கொடுத்திருந்தார். இதை நாம் தானியேல் புத்தகத்தில் அநேக இடங்களில் வாசிக்கிறோம்.

தானியேல்9:24

  மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.

 ஒரு வாரத்திற்கு எழு நாட்கள்.  ஒரு நாள் என்பது ஒரு வருஷத்தைக் குறிக்கிறது.  அப்படியானால் வரு வாரம் என்பது ஏழு வருஷம்.  அப்படியானால் எழுபது வருஷம் என்பது 490 வருஷம் ஆகும்.

  இன்னும் 490 ஆண்டுகளில் மேசியா வரப்போகிறார் என்று கர்த்தர் தானியேல் தீர்க்கதரிசிக்கு முன்னரிவித்தார்.  அந்த தீர்க்கதரிசனத்தை தானியேல் தனக்கு கீழாக இருந்த சாஸ்திரிகளுக்கு கற்றுக்கொடுத்தார்.  வானத்தை ஆராய்ச்சி செய்கிறவர்களாகிய இவர்களுக்கு அது ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்கும்.

 

ரோம சாம்ராஸ்யம்:

  ரோம சாம்ராஜ்யம் என்பது இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த சாம்ராஜ்யம்.  ரோம சாம்ராஜ்யத்தின் தலைமை மன்னன் அகஸ்துராயன். ரோம சாம்ராஜ்யத்திற்கு மிகவும் தொந்தரவாக இருந்தவர்கள் பார்த்தீனியர்கள்.  இவர்கள் ரோம சாம்ராஜ்யத்தை எதிர்த்து  அநேக கிளர்ச்சிகளை எழுப்பினார்கள்.  இந்த பார்த்தீனியர்களுக்கும், ரோமர்களுக்கும் சண்டை ஏற்படும் இடம் பெறும்பாலும் இஸ்ரவேல் நாடாகவும், அதை சுற்றியுள்ள நாடாகவும் இருந்தது.

  இந்த பார்த்தீனியா இஸ்ரவேல் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளது.  இங்கு இருந்த சாஸ்திரிகளே இயேசுவைப் பார்க்க வருகின்றனர்.  இந்த பார்த்தீனியா நாட்டு நான்காவது மன்னன் சாஸ்திரிகளின் வார்த்தைக்குக் கட்டுப்படாததால், அந்த மன்னனை சாஸ்திரிகள் பதவியிலிருந்து நீக்கினர்.  பார்த்தீனியா நாட்டிற்கு அந்த நேரத்தில் ராஜா இல்லாதிருந்தது.

  இந்த நேரத்தில் ரோமசக்கரவர்த்தியாகிய அகஸ்துராயன் சரீர பெலவீனத்தால் படுத்தபடுக்கையாய் இருந்தார்.

 

ஏரோது மன்னன்:

  இஸ்ரவேல் நாட்டில் கிளர்ச்சி எழும்பியபோது, இந்த ஏதோமியனாகிய ஏரோது, ரோம் நாட்டிலிருந்து இராணுவ வீரர்களை கொண்டுவந்து கிளர்ச்சியை அடக்கினான்.  எனவே அகஸ்துராயன் இந்த ஏரோதுவை இஸ்ரவேல் நாட்டிற்கு ராஜாவாக நியமித்திருந்தார்.

  இந்த ஏரோது பதவி ஆசை பிடித்த ஒரு மனிதன்.  தன் பதவிக்கு வேறு யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தன் மகனையும், உறவினர்களையும் கொலை செய்தவன்.  ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன்.

  தன்னுடைய அடக்கு ஆட்சிமுறையால், நான் மரிக்கும்போது எவரும் எனக்காக கண்ணீர் சிந்த மாட்டார்கள் என்று எண்ணி, தேசத்தில் உள்ள அனைத்து முக்கிய அதிகாரிகளையும், தலைவர்களையும் சிறைபிடித்தான்.  நான் மரிக்கும் நாளில் இவர்கள் அனைவரையும் கொலைசெய்துவிடுங்கள்.  இவர்களுக்காக கண்ணீர் சிந்துகிறவர்கள் எனக்காகவும் கண்ணீர் சிந்துவார்கள் என்று சொன்னவன் இந்த ஏரோது.


சாஸ்திரிகளும் - ஏரோதுவும்:

  கிழக்கிலே உதித்த நட்சத்திரைத்தைக் கண்ட சாஸ்திரிகளுக்கு தானியேல் தீர்க்கதரிசி முன்னுரைத்த தீர்க்கதரிசனம் நினைவிற்கு வந்தது.  அவர் சொன்ன காலங்கள் நிறைவேறியதால், யூதர்களின் ராஜா பிறந்துவிட்டார் என்று எண்ணி, ராஜாவைப் பார்ப்பதற்காக இஸ்ரவேலை நோக்கி புறப்பட்டனர் சாஸ்திரிகள்.  சாஸ்திரிகள் புறப்படும் நேரத்தில் பார்த்தீனியாவில் ராஜா இல்லை.  புதிய ராஜாவுக்காக அவர்கள் ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

  அநேக நாட்களாக குதிரைப் பிரயாணத்தில் வந்தார்கள் இந்த சாஸ்திரிகள்.  ஏறக்குறைய 12 சாஸ்திரிகளும், அவர்களுடைய பாதுகாப்பிற்காக 1000 பேருக்கு அதிகமான வீரர்களும் வந்ததாக அநேகர் நம்புகிறார்கள்.  இத்தனை திரளான ஜனங்கள் எருசலேமிற்கு வந்ததால் தான், ஏரோது ராஜாவும், எருசலேம் நகரத்தார் யாவரும் கலங்கினார்கள். (மத்தேயு 2:3)


  யூதருக்கு ராஜா என்பதால் அவர் அரண்மனையில் தான் பிறந்திருப்பார் என்று நினைத்து, ஏரோதுவின் அரண்மனைக்கு சென்று ”யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே” என்று கேட்கிறார்கள்.  (மத்தேயு 2:2)

  இதைக் கேட்ட ஏரோதின் இருதயம் பதைபதைத்திருக்கும்.  இந்த சாஸ்திரிகள் இருந்த அந்த பார்த்தீனியாவில் இப்போது ராஜா இல்லை.  ரோம சக்கரவர்த்தி அகஸ்துராயனும் பெலவீனப்பட்டிருக்கிறார்.  இந்த நேரத்தில் பார்த்தீனியர்கள் வந்து ”யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே” என்று கேட்கிறார்கள்.  இருதயம் பதைபதைக்க பிரதான ஆசாரியரையும், ஜனத்தின் வேதபாரகரையும் கூடிவரத்செய்து அவர்களிடம் விசாரிக்கிறான்.

மத்தேயு 2:4

     அவன் பிரதான ஆசாரியர், ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

கிறிஸ்து:

   சாஸ்திரிகள் ”யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே” என்று கேட்டார்கள்.  ஆனால், ஏரோது பிரதான ஆசாரியரையும், வேதபாரகரையும் அழைத்து கேட்கும்போது, சாஸ்திரிகள் கேட்ட வன்னமாக யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறாராமே, எங்கே பிறந்திருக்கிறார் என்று கேட்கவில்லை.  மாறாக, ”கிறிஸ்துவானர் எங்கே பிறப்பார்” என்று கேட்டான்.  காரணம் யூதர்களின் ராஜா கிறிஸ்துதான் என்றும், அவர் இந்த காலகட்டத்தில் தான் பிறப்பார் என்றும் ஏரோது அறிந்திருந்தான்.


  அவன் மாத்திரம் அல்ல, யூதருக்கு ராஜா பெத்லகேமில் பிறப்பார் என்று அனைத்து ஜனங்களும் அறிந்துவைத்திருந்தார்கள்.

யோவான் 7:41,42

  41. வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள்.  வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்

  42. தாவீதன் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.

   கிறிஸ்து என்பவர் யூதர்களை ரோமர்களிடம் இருந்து விடுவிக்கும் ராஜாவாக வருவார் என்றும், அவர் தாவீதின் ஊராகிய பெத்லகேமில் இருந்து வருவார் என்றும் எரோது உட்பட, பிரதான ஆசாரியர், வேதபாரகர் உட்பட, பொதுமக்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்தனர்.

பிரதான ஆசாரியர்:

  வருடத்திற்கு ஒருமுறை எருசலேம் தேவாலயத்தில் உள்ள மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு சென்று தனக்காகவும், ஜனங்களுக்காகவும் பலிசெலுத்தும் ஒரு நபர்.



ஆசாரியர்:

   ஆசாரியர்கள் ஆநேகர் இருந்தார்கள்.  எனவே அவர்கள் இருபத்து நான்கு (24) பிரிவுகளாக பிரிந்து தேவாலயத்தில் ஆராதனை நடத்தி வந்தார்கள்.  வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வாரங்கள் இவர்கள் ஆசாரிய வேலை செய்து வந்தார்கள்.  மற்ற நேரங்களில் வருமானத்திற்காக ஏதாகிலும் வேலைகளை செய்து வாழ்ந்து வந்தார்கள்.  அவர்களுள் ஒருவர் தான் சகரியா.  எனவே தான் லூக்கா 1:8-ல் ஆசாரிய ஊழிய முறைமையின்படி, அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூகங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான் என்று வாசிக்கிறோம்.

வேதபாரகர்:

    வேதத்தை பிரதியாக்கம் செய்யக்கூடியவர்கள். 

லேவியர்கள்:

    ஆலயத்தை தூய்மையாக வைத்திருப்பவர்கள், காவலர்கள்.

  இவர்கள் அனைவரும் மற்றவர்களை விட, ஆண்டவருக்காக தனியே பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.  ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நின்றுகொண்டு, ஆண்டவருக்கு தொண்டு செய்யக்கூடியவர்கள். 

  ஆனால், இவர்களில் ஒருவரும் கிறிஸ்துவைப் பார்க்க செல்லவில்லை.  எருசலேமிலிருந்து 6 கி.மீ தூரத்தில் இருந்த கிராமம் தான் இந்த பெத்லகேம்.  தெரிந்துகொள்ளப்பட்ட, ஆண்டவருடைய ஊழியத்தை செய்துகொண்டிருந்த, அருகாமையில் இருந்த எந்த ஒரு நபரும் மேசியா பிறந்துவிட்டார் என்று அறிந்து அவரை பார்க்க செல்லவில்லை.

  காரணம் என்னவென்றால், அந்த தேவாலயத்தின் மூலமாக அநேக வருமானம் பிரதான ஆசாரியருக்கும், ஆசாரியர்களுக்கும் கிடைத்து வந்தது.  ஜனங்கள் அவர்களை கடவுளாக நம்பி அவர்களை மதித்து வந்தனர்.  இந்த சூழ்நிலையில் அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் பிறந்திருக்கிற ஒரு குழந்தை தான் மேசியா என்று அவரை பார்க்க சென்றுவிட்டால், பின்பு ஜனங்கள் இவர்களைத் தேடி வரமாட்டடால்.  இவர்களே தேடிச் சென்று அந்த குழந்தையைப் பார்க்கிறார்கள் என்றால், இவர்களை விட உன்னதமான குழந்தை அதுதான் என்று மக்கள் நினைத்துவிடுவார்கள்.  இவர்களுக்கு வந்துகொண்டிருந்த வருமானம் தடைபட்டுவிடும்.  இதன் காரணமாகவே தேவாலயத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய ஒருவரும் கிறிஸ்துவைப் பணிந்துகொள்ளவரவில்லை.

 

சாஸ்திரிகள்:

  ஆனால் தானியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தை நினைவுகூர்ந்து வெகுதொலைவில் இருந்து சாஸ்திரிகள் இயேசு கிறிஸ்துவைப் பார்த்து பணிந்துகொள்ள வந்தார்கள்.

  பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்த இந்த சாஸ்திரிகள் யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் நிச்சம் ஒரு அரச மாளிகையில் பிறந்திருப்பார் என்று நம்பியே தங்கள் தேசத்திலிருந்து கிழம்பியிருப்பார்கள்.  ஆனால் அங்கு சென்ற சாஸ்திரிகளுக்கு ஒரே அதிர்ச்சி, அவர்கள் நினைத்து வந்த நினைவுகள் அனைத்து சுக்குநூறாக உடைந்து விட்டது.  குழந்தை ஒரு சின்ன வீட்டில் இருந்தது.

  நீங்களும் நானும் அந்த இடத்தில் இருந்திருப்போமானால், இல்லை, இந்த குழந்தை ராஜாவாக இருக்க முடியாது, நம்முடைய பயணம் வீணாகிவிட்டது என்று நம்முடைய தேசத்திற்கு திரும்பியிருப்போம்.

 வேதத்தில் வாசிக்கிறோம் நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்கு முன்சென்றது.  (மத்தேயு2:9).  நட்சத்திரத்தை ஆராய்ச்சி செய்யக்கூடிய இவர்களுக்கு தெரிந்திருந்தது, இவர் உண்மையிலேயே ராஜா தான்.  இருந்தபோதிலும் தன்னை இவ்வளவாக தாழ்த்தி ஏழ்மைக்கோளம் எடுத்தார் என்று உணர்ந்தவர்களாக, பிள்ளையை சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்துகொண்டார்கள்.


சாஸ்திரிகள் மேசியாவை (ராஜாவை) பார்த்தது சத்திரத்திலா? வீட்டிலா?

  மத்தேயு 2:11-ம் வசனத்தை நாம் சற்று ஆழமாக கவனிக்க வேண்டும்.  அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து என்று நாம் வாசிக்கிறோம்.  ஆனால், இயேசு கிறிஸ்து வீட்டில் பிறக்கவில்லையே, அவர் மாட்டுத்தொழுவத்தில் தான் பிறந்தார்.

  ஏன் இங்கே வீடு என்று எழுதப்பட்டிருக்கிறது என்றால், இயேசு கிறிஸ்து பிறந்தபோது, யோசேப்பு, மரியாளிடம் பணம் இல்லாதததால் மாட்டுத்தொழுவத்தில் பிறக்கவில்லை.  காரணம்.  உலகம் முழுவதும் குடிமதிப்பு எழுத மக்கள் புறப்பட்டு சென்றதால், அவர்களுக்கு சத்திரத்தில் இடம் இல்லை.  பின் நாட்களில் சத்திரத்தில் இடம் கிடைத்ததும், யோசேப்பும் மரியாளும் சத்திரத்திற்கு வந்திருப்பார்கள்.  இல்லையென்றால் ஏதோ ஒரு வீட்டை வாடகைக்கு வாங்கியிருப்பார்கள். 

  சாஸ்திரிகள் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.  பார்த்தீனியா அதைச் சுற்றியுள்ள, இஸ்ரவேல் நாட்டின் கிழக்குப் பகுதியைச் சார்ந்தவர்கள்.  இவர்கள் பெத்லகேம் வந்து சேர குறைந்தது ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் சென்றிருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.  எனவே, தான் ஏரோது இரண்டு வயத்திற்குட்பட்ட அனைத்து ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்யும்படி கட்டளை கொடுக்கிறான். (மத்தேயு 2:16)  அப்படியானல் இயேசு கிறிஸ்துவை சாஸ்திரிகள் ஒரு வீட்டில் வைத்துதான் பார்த்திருக்கிறார்கள்.



மேசியாவின் தாழ்மை:

   இந்த பூமியில் வாழக்கூடிய நம்மில் ஒருவருக்கும் நம் தாய் தகப்பனை தெரிவுசெய்யக்கூடிய வாய்ப்பு இல்லை.  ஆனால் எல்லாம் வல்ல கடவுளுக்கு அந்த வாய்ப்பு இருந்தது.  அவர் நினைத்திருந்தால் ஒரு பேரரசனுக்கு மகனாக பிறந்திருக்கலாம்.  ஆனால் நம்முடைய ஆண்டவர், அண்டசராசரங்களையும் படைத்து, அதை ஆளுகை செய்கிறவர், தன்னுடைய மகிமை அனைத்தையும் இழந்தவராய், ஒரு மாட்டுத்தொழுவத்தில் வந்து அவதறித்தார்.


ஆராதனை:

  சாஸ்திரிகள் ஏரோதுவைப் பார்த்து பணிந்துகொள்ளவில்லை.  இயேசு பாலகனை சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொண்டார்கள்.  (மத்தேயு 2:11)

 ஆராதனை என்பது சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொண்டு, அவருடைய பாதத்தை முத்தம் செய்வது.   மத்தேயு 2:11-ல் வாசிக்கிறோம், சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொண்டார்கள்.  இந்த வசனத்தின் மூல பாஷையிலிருந்தே ஆராதனை என்ற பதம் உருவானது.

   அவரை ஏற்றுக்கொண்டு அவரை ஆராதிக்க வேண்டிய அவருடைய சொந்த ஜனங்கள் ஒருவரும் அவரை ஆராதிக்கவில்லை.  கிறிஸ்துவாகிய மேசியாவிற்கு முதல் முதலில் ஆராதனை செய்தவர்கள் புறஜாதியாகிய சாஸ்திரிகள்.  இவர் புறஜாதிகளுக்கும் ராஜா என்பதை குறிக்கும்படி இப்படி நடந்தது.

 சாஸ்திரிகள் கிறிஸ்துவை ஆராதிப்பதோடு நிறுத்திவிடாமல், தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப்போலத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.

     பொன் – இவர் ஒரு ராஜா என்பதைக் குறிக்கிறது

   தூபவர்க்கம் – ஆசாரியர்கள் ஆராதனை நேரத்தல் பயன்படுத்துவது ஒரு பொருள்

 வெள்ளைப்போளம் – விளையுயர்ந்தது, மரணத்தின்போது சரீரத்திற்கு பயன்படுத்துவது.



 ராஜாவைப் பார்க்க வருகின்றபோது வெறும்கையாய் வராமல், தங்கலால் இயன்றதைக் கொண்டுவந்து ராஜாவிற்கு படைத்தார்கள்.

 சாஸ்திரிகள் கிறிஸ்துவாகிய ராஜாவைப் பார்த்து பணிந்துகொண்டு, ஏரோதுவின் கட்டளைப்படி அவனிடத்தில் செல்லாமல், தூதனின் வார்த்தைப்படி வேறுவழியே சென்றுவிட்டார்கள்.  மனிதருடைய கட்டளையை விட ஆண்டவருடைய கட்டளையே மேன்மையானது என்பதை அறிந்திருந்தார்கள்.

 சாஸ்திரிகள் எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தவர்கள் என்றும், அவர்களே ஆண்டவரை முதலில் ராஜாவாக ஏற்றுக்கொண்டார்கள் என்றும் சிந்தித்தோம்.

 நாம் இந்த நாளில் இந்த இயேசுவை ராஜாவாக ஏற்றுக்கொண்டிருக்கிறோமா?

       நாம் அவரை ராஜாவாக ஏற்றுக்கொண்டோமானால், அவர் விருப்பத்தை செய்ய ஆசைப்படுவோம்.  நமது விருப்பத்தை செய்ய விரும்பமாட்டோம்.

  நாம் ஆநேக நேரங்களில் இயேசு கிறிஸ்துவை ஒரு உதவியாளனாக பார்க்கிறோம்.  முழங்கால் படியிட்டதும், இயேசுவே அதைத்தாரும், இதைத்தாரும் என்று கேட்டு, அவரை ஒரு வேலைக்காரனாக மாற்றி விடுகிறோம்.  இயேசுவே எனக்கு பாதுகாப்பு தாரும் என்று சொல்லி அவரை ஒரு காவலனாக மாற்றி விடுகிறோம்.

  நாம் உண்மையில் இயேசு கிறிஸ்துவை ஒரு ராஜாவாக பார்ப்போமானால் அவருடைய சித்தத்தை அறிந்து செயல்பட ஆசைப்படுவோம்.  அவருக்காக வாழ நம்மை அர்ப்பணிப்போம்.

   ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.