விவிலிய மறைப்பகுதி
திருப்பாடல்கள் 199:25-32
திருப்பாடல்கள்
தொடர்ந்து நாம் திருப்பாடல்கள் 119-ம் பிரிவைத் தியானித்து வருகிறோம். இந்த 119-ம் திருப்பாடல் தாவீது அரசனால் எழுதப்பட்டிருக்கலாம் என்று பலரால் நம்பப்படுகிறது.
இந்த திருப்பாடலில் 176 திருமொழிகள் உள்ளன. இவை எட்டு எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். இவை எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது என்றால், எபிரெய மொழியில் மொத்தம் 22 எழுத்துக்கள் உள்ளன. தாவீது அரசர் ஒவ்வொரு எழுத்தை மையமாகக் கொண்டு எட்டு திருமொழிகளை எழுதுகிறார்.
முதல் பிரிவான ஆண்டவரின் திருச்சட்டம் என்ற பிரிவில் உள்ள எட்டு திருமொழிகளும் எபிரெய மொழியின் முதல் எழுத்தான Alef என்ற எழுத்தை மையமாகக் காண்டு எழுதப்பட்டது.
இரண்டாம் பிரிவான திருச்சட்டத்தின் படி நடத்தல் என்ற பிரிவில் உள்ள எட்டு திருமொழிகளும், எபிரெய மொழியின் இரண்டாம் எழுத்தான Bet என்ற எழுத்தை மையக்கருத்தாகக் கொண்டு எழுதப்பட்டது.
மூன்றாம் பிரிவான திருச்சட்டம் தரும் இன்பம் என்ற பிரிவில் உள்ள எட்டு திருமொழிகளும், எபிரெய மொழியின் மூன்றாம் எழுத்தான Gimel என்ற எழுத்தை மையக்கருத்தாகக் கொண்டு எழுதப்பட்டது.
நான்காம் பிரிவான திருச்சட்டத்தின்படி நடக்க உறுதி கொள்ளல் என்ற பிரிவில் உள்ள எட்டு திருமொழிகளும் எபிரெய எழுத்தின் நான்காம் எழுத்தான Daleth என்ற எழுத்தை மையக்கருத்தாகக் கொண்டு எழுதப்பட்டது.
இவ்வாறாக எபிரெய மொழியின் உள்ள 22 எழுத்துக்களுக்கும் ஒரு எழுத்துக்கு எட்டு திருமொழிகள் என்ற விதத்தில் தாவீது இந்த 119-ம் திருப்பாடலை எழுதுகிறார்.
எரேமியாவின் புலம்பல்
யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைபட்டுப்போன நாட்களில், எருசலேமை நினைத்து எரேமியா புலம்பின புலம்பல் தான் புலம்பல் நூல். இந்நூல் ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
1,2,4,5 ஆகிய பிரிவுகளில் 22 திருமொழிகள் இருப்பதைப் பார்க்க முடியும். இவை எபிரெயத்தின் 22 எழுத்துக்கள் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. முதல் திருமொழி முதல் எழுத்திலும், இரண்டாம் திருமொழி இரண்டாம் எழுத்திலுமாக, 22 எழுத்துக்களுக்கு 22 திருமொழிகள் என்ற அடிப்படையில் எரேமியா இந்நூலை எழுதுகிறார்.
நடுப்பகுதியில் உள்ள 3-ம் பிரிவில் 66 திருமொழிகள் இருப்பதைப் பார்க்க முடியும். இங்கு எபிரெயத்தின் ஒரு எழுத்துக்கு மூன்று திருமொழிகள் என்ற விதத்தில் எரேமியா புலம்பி எழுதுகிறார்.
சங்கீதம் 119:25-32
இந்த பகுதியில் தாவீதின் வாழ்வு மூலமாக, அருட்பணியாளர்களாகிய நம்முடைய வாழ்வையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகிறோம்.
1. தாவீதின் ஒப்படைப்பு (119:25-29)
நான் புழுதியில் வீழ்ந்து கிடக்கின்றேன். (25)
துயரத்தால் என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. (28)
- 1. எனக்கு வாழ்வைத் தாரும்.
- 2. உம் விதிமுறைகளைக் கற்றுத் தாரும்.
- 3. உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியளுரும்.
- 4. உமது வாக்கின்படி என்னைத் திடப்படுத்தும்.
- 5. பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்.
- 6. உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத் தாரும்.
இவ்வாறு தன்னை கடவுளிடத்தில் தாவீது அர்ப்பணம் செய்கிறார்.
2. தாவீதின் அறிக்கை (Statement) (119:30,31)
மூன்று அறிக்கைகளை சொல்லுகிறார்.
1. உண்மையின் பாதையை நான் தெரிந்துகொண்டேன்.
2. உம் நீதிநெறிமுறைகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.
3. உம் ஒழுங்குமுறைகளை நான் உறுதியாய்ப் பற்றிக் கொண்டுள்ளேன்.
தாவீதின் இந்த அறிக்கைகள் அருட்பணியாளர்களாகிய நமக்கு ஓரு் அறைகூவலாக இருக்கிறது.
3. விண்ணப்பம் (119:31)
ஆண்டவரே என்னை வெட்கமடைய விடாதேயும்.
4. தாவீதின் செயல் (119:32)
நீர் என் அறிவை விரிவாக்கும்போது, உம் கட்டளைகள் காட்டும் வழியில் நான் விரைந்து செல்வேன்.
ஆண்டவரே இந்த ஊழியப்பாதையில் நீர் என் அறிவை விரிவாக்கும்போது, இன்னும் உமக்காய் உழைப்பேன். இன்றும் உம் பாதையில் விரைந்து பயணிப்பேன் என்று ஆண்டவரிடத்தில் நம்மை அர்ப்பணிப்போம்.

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.