Type Here to Get Search Results !

உடன்படிக்கை ஆராதனை | Covenant Service 2026 | Jesus Sam

உடன்படிக்கை ஆராதனை
உடன்படிக்கை என்றால் என்ன?
உடன்படிக்கை, ஒப்பந்தம், தீர்மானம் இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய வார்த்தைகளே.

உடன்படிக்கை, ஒப்பந்தம் – இவை இரண்டும் இரண்டு மனிதர்களுக்கிடையே அல்லது இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் ஒரு முறை ஆகும்.

உடன்படிக்கை – பேச்சுவார்த்தையில் உறுதிபடுத்தப்படும் ஒரு செயல் ஆகும்.

ஒப்பந்தம் – பேச்சுவார்த்தையில் தொடங்கி, எழுத்துப்பூர்வமாக நிறைவேற்றப்படும் ஒரு செயல் ஆகும்.

தீர்மானம் – ஒரு நபர் அல்லது ஒரு குழுவினர் தீர்க்கமாக ஆலோசித்து எடுக்கும் முடிவு ஆகும்.

இந்த நாட்களிலும் அநேக ஒப்பந்தங்களை நாம் பார்க்க முடியும்.
எ.கா: ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டின் தலைவரோடு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுவார்.

இந்தியப் பிரதம்பர் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.
ரஷ்ய அதிபர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை.
சில முக்கிய முடிவுகள் எழுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
இதுபோன்ற செய்திகளை நாம் செய்தித்தாளில் படித்திருப்போம். இரு தலைவர்கள் சந்தித்துக்கொள்ளுகிறார்கள் என்றால், நலம் விசாரிப்பதற்காக அவர்கள் சந்தித்துக்கொள்வது இல்லை. சில முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காகவே சந்திக்கிறார்கள்.

நிலத்தை விற்கும்போது, வாங்குபவருக்கும், கொடுப்பவருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படும்.

திருமறை
நாம் பயன்படுத்தும் திருமறையே ஒரு உடன்படிக்கை நூல் தான்.

பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று சொல்லுவதைவிட, முதல் உடன்படிக்கை நூல், இரண்டாம் உடன்படிக்கை நூல் என்று சொல்லுவது தான் பொருத்தமானதாக இருக்கும்.

கடவுள் நம்மீது கொண்ட அன்பின் நிமித்தமாக தமது உடன்படிக்கையை மனிதரோடு ஏற்படுத்துகிறார். இது கடவுளின் தாழ்மையைக் குறிக்கிறது.

நான் ஒருவரோடு உடன்படிக்கை செய்கிறேன் என்றால், அவர் நம் தகுதிக்கு ஏற்றவராக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம்.

ரஷ்யா அதிபர் யாரோடு ஒப்பந்தம் மேற்கொள்ளுவார் என்றால், இந்தியா பிரதம்மரோடு தான் ஒப்பந்தம் மேற்கொள்ளுவார். ரஷ்ய அதிபர் மாவட்டத்தின் கலெக்டரோடு ஒப்பந்தம் மேற்கொள்ள மாட்டார்.

எல்லாம் வல்லக் கடவுள் மனிதர்களோடு உடன்படிக்கை செய்துள்ளார் என்றால், மனிதர் முன்பாக கடவுள் தன்னை எவ்வாளவாய்த் தாழ்த்தினார் என்றும், மனிதர்களை கடவுள் எவ்வளவாய் நேசிக்கிறார் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு உடன்படிக்கை
திருமறையில் பல உடன்படிக்கைகள் உள்ளன. கடவுள் மனதர்களோடு ஏற்படுத்தின உடன்படிக்கைகளும் உண்டு, மனிதன் மற்றவரோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகளும் உண்டு. 
இந்த நாளில் கடவுள் மனிதர்களோடு ஏற்படுத்தின இரண்டு உடன்படிக்கைகளைக் குறித்துப் பார்ப்போம்.

நோவா
ஆதியாகமம் 9:11
இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.

நோவாவின் காலத்தில் மழையினால் அனைத்து மக்களையும் கடவுள் அழித்துப்போட்டார். இதுபோன்ற அழிவு இனி நடைபெறாது என்று கடவுள் மனிதரோடு ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்.

அப்படியானால், இன்று அநேக இடங்களில் மழைகளினாலும், வெள்ளத்தினாலும், பூமி அதிர்ச்சியினாலும், சுனாமியினாலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்களே, அதற்கான காரணம் என்ன? ஏன் தண்ணீரினால் கடவுள் நம்மைத் தண்டிக்கிறார் என்ற கேள்வி நமக்குள்ளாக எழுவதுண்டு.

இயேசு கிறிஸ்து
லூக்கா 22:20
போஜனம்பண்ணின பின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.

இங்கே ஆண்டவர் இயேசு கிறிஸ்து புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். இரட்சிப்பு, மீட்பு என்பது இவ்வளவு காலமாக யூதர்களுக்கானதாக மட்டுமே இருந்தது.

இங்கு என்னை ஏற்றுக்கொண்டு என் இரத்தத்தினால் கழுவப்படுகிற அனைவருக்குமே மீட்பு உண்டு என்று இயேசு சொல்லுகிறார்.

இந்த புதிய உடன்படிக்கையின் மூலமாகவே புற இன மக்களான நாம் அனைவரும் அவருடைய சொந்தப் பிள்ளைகளாக மாற்றப்படுகிறோம்.

நம்முடைய உடன்படிக்கை அல்லது தீர்மானம்
ஒவ்வொரு ஆண்டும் பல தீர்மானங்களை நாம் எடுத்து வருகிறோம். அதில் கடைசிவரை நிலைத்திருக்க முடியுமா என்றால், கேள்விக்குறி தான்.

ஒரு வருடத்திற்குள்ளாக திருமறையை படித்த முடிப்பேன்.
பொய் சொல்ல மாட்டேன்.
சரியான நேரத்திற்கு தூங்குவேன்.
அழைப்பேசியை அதிகம் பயன்படுத்த மாட்டேன்.
இவ்வாறு பல தீர்மானங்களை நாம் எடுப்பதுண்டு.

1. நாம் எல்லாருக்கும் ஒரு ஆசை உண்டு. நாம் அனைவரும் மறுமையிலே பரலோகம் செல்ல வேண்டும்.

எதற்காக அங்கே செல்ல வேண்டும்.

பரலோகத்தில் கஷ்டம் இருக்காது. பிரச்சனை இருக்காது. சந்தோஷமாக இருக்கலாம். போட்டி பொறாமை இருக்காது. இப்படி நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

பரலோகம் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும், பூமியில் இருப்பதுபோல அங்கு குப்பைகள், கரைகள் இருக்காது. பரலோகம் முழுவதும் தங்கத்திலே மிண்ணும். எனவே, நாம் பரலோகத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.

நாம் என்னென்ன காரியங்கள் பரலோகத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அவை எல்லாவற்றையும் இந்த உலகத்தில் கொடுத்து, இந்த உலகத்தைப் பேனிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கடவுள் மனிதருக்குக் கட்டளையிட்டார். கடவுள் பரலோகம் போல் படைத்த இந்த உலகம் இன்று எப்படி பாழாகிக் கிடக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

கடவுள் கொடுத்த உலகைப் பாழாக்கின இந்த மனிதனை நம்பி பரலோகத்தைக் கடவுள் கொடுப்பாரா? என்று நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டு வருகிறது. அந்த இயற்கையைப் பாதுகாக்க நான் என்ன முயற்சி எடுத்திருக்கிறேன்.

என்னால் முடிந்த வரையில் குப்பைகளை சரியான குப்தைத் தொட்டியில் போடுதல், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருத்தல், உணவை வீணாக்காமல் இருந்தல் இதுபோன்ற சிறுசிறு காரியங்களில் நான் பூமியை பாதுகாக்கும்போது கடவுள் என்னை நம்பி அந்த பரலோகத்தைக் கொடுப்பார்.

கடவுள் மனிதனைப் படைத்து, அவனுக்குக் கொடுத்த பிரதான கட்டளை இதுவே.
ஆதியாகமம் 2:15
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

கடவுள் எனக்குக் கொடுத்த பொறுப்பு என்பது, கடவுள்கொடுத்த பூமியைப் பண்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதே. நான் அதை செய்கிறேனா? சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

இந்த புதிய வருடத்தில் கடவுள் கொடுத்த இயற்கையை பண்படுத்துவேன், பாதுகாப்பேன் என்று தீர்மானம் எடுப்போம்.

கடவுள் கொடுத்த இயற்கையைப் பாழாக்கிவிட்டு, அதனால் ஏற்படுகின்ற விலைவுகளாகிய வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றிற்கு கடவுள் காரணம் என்று சொல்லுவோமானால், நாம் மூடராய் இருப்போம்.

2. ஐக்கியம்
ரோமர் 12:10
சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்டமாயிருங்கள். கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

அனைவரோடும் ஐக்கியத்தோடு வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். பழைய வருடத்திலே யாருடனாவது நாம் பகையோடு இருப்போமானால், அவர்களோடு ஐக்கியப்பட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

இந்த புதிய வருடத்தில் அனைவரோடும் சமாதானமாய் இருக்க பழகிக்கொள்ளுவோம். பிசாசு நம்மை சோதிப்பதற்காக அநேக எதிரிகளைக் கொண்டு வருவான். நாம் அவர்களோடும் சமாதானமுள்ளவர்களாய் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

ரோமர் 12:18
கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளையான திருவிருந்தில் ஒருமனதாய் ஐக்கியப்பட்டவர்களாக அவருடைய புதிய உடன்படிக்கையில் நம்மை இணைத்துக்கொள்ளவே கடவுள் விரும்புகின்றார். வேற்றுமைகளைக் கலைந்து, சகோதரத்துவ ஐக்கியத்தோடு திருவிருந்தில் வாரம் தவறாமல் கலந்து கொள்ள முயற்சி செய்வோம்.

இந்த ஆண்டு தலைப்பு – இலக்கை அடையும் ஆண்டு

கடவுள் நம்மிடத்தில் விரும்புகின்ற இலக்கை நியமித்து அதைநோக்கி தொடர்ந்து பயனிப்போம். கடவுள் இந்த ஆண்டு முழுவதும் நம்மை பாதுகாத்து வழிநடத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார். ஆமென்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.