Type Here to Get Search Results !

யேசபேலின் ஆவி | The Spirit of Jezebel | Tamil Bible Study | Jesus Sam

==============
யேசபேலின் ஆவி
===============
யேசபேல் என்பது ஒரு பெண்ணின் பெயர் மாத்திரம் அல்ல. 1 இராஜாக்கள் புத்தகத்தில் யேசபேல் என்ற பெண் அறிமுகமாகிறாள். இந்த யேசபேல் என்ற பெண் பிறக்கும் முன்பதாகவே யேசபேலின் ஆவி கிரியை செய்து வந்தது. யேசபேலுக்கு முன்பு அந்த ஆவிக்கு யேசபேல் என்ற பெயர் இல்லையென்றாலும், யேசபேலின் ஆவி 1 இராஜாக்களுக்கு முன்பும் இருந்திருக்கிறது.  1 இராஜாக்கள் புத்தகத்தில் வாழ்ந்த யேசபேலுக்குள் அந்த ஆவி இருந்ததால், அந்த பெயரினாலேயே அது யேசபேல் என்று அழைக்கப்படுகிறது.


சாத்தான் என்பவன் முன்னே பரலோகத்தில் இருந்தவன். பரலோகத்தில் என்ன இருந்தது, அங்கே எந்த முறை பின்பற்றப்பட்டது, ஆண்டவருடைய கிரியைகள், செயலாக்கங்கள் எப்படிப்பட்டது? இதுபோன்ற எல்லா காரியங்களும் சாத்தானுக்கு நன்றாகத் தெரியும்.

இந்த சாத்தானுடைய தந்திரங்களில் ஒன்று தான், கர்த்தர் செய்கின்ற அதே காரியங்களை தானும் செய்வது. உலக வழக்கில் அசல், நகல் என்று சொல்லுவோம்.

ஆண்டவர் அசலாக இருக்கின்றார். கர்த்தர் செய்கின்ற அனைத்து காரியங்களையும் நகல் எடுத்து, அப்படியே செய்து மக்களை ஏமாற்றுபவன் தான் சாத்தான்.

எ.கா: ஆண்டவர் சிங்காசனத்திலே வீற்றிருக்கிறார். பிசாசானவனும் தன்னை சிங்காசனத்தில் வீற்றிருப்பவனாக காண்பிக்க ஆசைப்படுகிறான்.


திரித்துவம்
ஆண்டவர் திருத்துவமாக செயல்படுகின்றார். நம்மில் அநேகர் திரித்துவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்பி பின்மாற்றத்திற்குள் சென்று விடுகிறார்கள். கடவுள் மனிதனுடைய சிந்தனைகளுக்கும், எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர். மனிதனுடைய மூளையைக் கொண்டு, மனிதனைப் படைத்த கடவுளைப்பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய முடியாது.

திரித்துவத்தைப் பற்றி கடவுள் எந்த அளவிற்கு மனிதர்களுக்கு விளங்கப்படுத்தியிருக்கிறாரோ, அந்த அளவிற்குத்தான் மனிதர்களால் விளங்கிக்கொள்ள முடியும்.

கடவுள் வெளிப்படுத்தாத ஒன்றை, நம்முடைய மூளையைக் கொண்டு ஆராய்ச்சி செய்வது, கர்த்தருக்கு பிரியமில்லாத ஒன்றாகும்.

எனக்கு அதிக ஞானம் இருக்கிறது, என்னால் திரித்துவத்தைப் பற்றி அறிந்து, விளக்கப்படுத்த முடியும் என்று நினைக்கிறவர்கள், திரித்துவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் முன்பு, நம்முடைய சரீரத்தை ஆராய்ச்சி செய்வது நலமாயிருக்கும்.

நம்முடைய சரீரத்தில் உள்ள நரம்புகள், நாலங்கள், இருதயம், மூளை, இரத்தம் இதுபோன்ற காரியங்கள் எப்படி இயங்குகின்றன என்று ஆராய்ச்சி செய்வது நலமாயிருக்கும்.

கடவுள் தன்னுடைய சாயலின் படி உருவாக்கி மனிதனுடைய சரீரம் முழுவதையும் நான் ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டேன் என்று எந்த விஞ்ஞானியாளும் சொல்ல முடியாது. அவ்வளவு அற்புதமாக ஆண்டவர் மனிதனை படைத்திருக்கிறார்.

நம்முடைய சொந்த சரீரத்தையே ஆராய்ச்சி செய்ய முடியாத நாம், ஏன் ஆண்டவர் எப்படிப்பட்டவர், அவர் திரித்துமாக இருக்கிறாரா? தனி நபரா? ஆணா? பெண்ணா? என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்?

கடவுளால் படைக்கப்பட்ட மனிதனால், கடவுள் எப்படிப்பட்டவர் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முடியுமானால், அவர் ஆண்டவராக இருக்க முடியாது. ஆண்டவர் தன்னைப்பற்றி மனிதர்களுக்கு அதிகம் வெளிப்படுத்தாதற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

நமக்கு திரித்துவத்தைப் பற்றி என்ன தெரியும் என்றால், ஆண்டவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலைகளில் காணப்படுகின்றார். ஆனால் மூன்று தெய்வம் அல்ல. ஒரே தெய்வம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் ஒருவராக இருந்தாலும், எங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தது பரிசுத்த ஆவியானவரே என்று நம்மால் சொல்ல முடியாது. எங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தது இயேசுவானவரே.

இதைவிட அதிகமாக திரித்துவத்தைப் பற்றி நாம் விளங்கிக்கொள்ளவும் முடியாது. விளங்கிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

ஆண்டவர் திரித்துவமாக செய்படுவதினால், பிசாசானவனும் தன்னை திரித்துவமாக காட்ட விரும்புகிறான். இதைத்தான் போலி திரித்துவம் என்பார்கள்.

ஆண்டவர் ஒரே நபராக இருந்து கொண்டு மூன்று தன்மைகளில் அவரால் செயல்பட முடியும். ஆனால் சாத்தான் என்பவன் ஒருவனே. அவனால் மூன்று நிலைகளில் செயல்பட முடியாது. இருந்தாலும், சாத்தான் மூன்று நிலைகளில் வெளிப்பட்டு கிரியை செய்து வருகிறான்.


சாத்தானின் மூன்று நிலைகள்
    1. யேசபேல்
    2. அந்திக்கிறிஸ்து
    3. மரணத்தின் (அ) பாதாளத்தின் ஆவி

இம்மூன்றும் பிசாசுகளின் தலைமை நிலையைக் குறிக்கிறது. இதற்கு கீழே அநேக அசுத்த ஆவிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

எபேசியர் 6:12
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

இந்த நான்கு குழுக்களும் அசுத்த ஆவிகளாக இருந்தாலும், இவைகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பவன் தான் பிசாசு. அவன்தான் மேலே பார்த்த மூன்று தன்மைகளில் தன்னைக் காட்டிக்கொள்ளுகிறான்.


மரணத்தின் பாதாளத்தின் ஆவி
மரணத்தின் பாதாளத்தின் ஆவி என்பது இன்றைக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது, அடால்ப் ஹிட்லர் என்பர் 60 லட்சத்திற்கும் அதிகமான யூதர்களையும், 50 லட்சத்திற்கும் அதிகமான குரவர்களையும் கொன்று குவித்தார். ஹிட்லர் இவ்வளவு பெரிய கொடுமைவாதியாக மாற காரணம், அந்த மரணத்தின் பாதாளத்தின் ஆவி.

இப்படி உலகத்தில் பெரிய அளவிற்கு இரத்தம் சிந்துதலுக்கு காரணமாக இருப்பது, இந்த மரணத்தின் பாதாளத்தின் ஆவி.

அந்திக்கிறிஸ்துவின் ஆவி
அந்திக்கிறிஸ்துவின் ஆவி இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பவுல் தன்னுடைய நிருபத்தில் எழுதுகிறார்.

ஆனால், அந்த அந்திக்கிறிஸ்துவுக்கும், கடைசி நாட்களில் எழும்பும் அந்திக்கிறிஸ்துவுக்கும் வித்தியாசம் உண்டு.

அந்திக் கிறிஸ்துக்கள் அதாவது கள்ள கிறிஸ்துக்கள் உண்டு என்று மத்தேயு 24-ல் இயேசு கிறிஸ்துவும் கூறுகிறார். கடைசி நாட்களில் அநேக கள்ள தீர்க்கதரிசிகள் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சித்துக்கொள்வார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, உலகத்தில் ஏழு வருடம் உபத்திரவக்காலம். அந்த உபத்திரவக்காலத்தில் உலகத்தை ஆட்சி செய்யப்போகிறவன் அந்திக்கிறிஸ்து. அந்த அந்திக்கிறிஸ்து, சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பே பூமிக்கு வருவான்.


யேசபேலின் ஆவி
இந்த யேசபேலின் ஆவி வார்த்தையிலும், சத்தியத்திலும் வளருகின்ற சபைகளையே குறிவைத்து தாக்குவான். எந்த சபை, எந்த குடும்பம் தனக்கு பாதிப்பாய் இருக்கின்றதோ அங்கே தான் கிரியை செய்வான் இந்த யேசபேலின் ஆவி.

1 இராஜாக்கள் புத்தகத்தில் யேசபேல் ஒரு பெண்ணாக காட்டப்பட்டாலும், யேசபேலின் ஆவி அதாவது சாத்தான் என்பவன் ஒரு ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல.

தேவதூதர்களும் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல. ஆனால் தேவதூதர்களையும், சாத்தானையும் குறிக்கும்போது வேதம் ஆண்பாலில் தான் குறிக்கிறது. எனவே யேசபேலின் ஆவியையும் ஆண்பாலில் குறிப்பதில் தவறில்லை.

வளர்ந்த சபைகள், அபிஷேகத்திலே நிரைந்த குடும்பங்களை மாத்திரமே இந்த யேசபேலின் ஆவி தாக்குகிறது. அப்படியானால், மற்றவர்களை ஏன் இந்த யேசபேலின் ஆவி தாக்குவதில்லை.

ஏனென்றால், விரலால் கில்லி விரட்டக்கூடிய தாவரத்தை கோடரியாள் எவனும் வெட்ட மாட்டான். அதைப்போலவே, அபிஷேகத்திலும், ஆவிக்குறிய வாழ்க்கையிலும் வளராத கிறிஸ்தவர்களை பாவத்தில் விழ வைப்பதற்கு யேசபேலின் ஆவி தேவையில்லை.

எபேசியர் 6:12-ல் சொல்லப்பட்ட படி வான மண்டலத்தில் உள்ள பொல்லாத ஆவிகள், அந்தகார லோகாதிபதிகள் போன்ற சிறிய சிறிய பிசாசுகள் மூலமாகவே இவர்களை பாவத்தில் விலவைத்துவிடலாம். எனவே, ஆவியிலும், அபிஷேகத்திலும் வளராத சபை மற்றும் குடும்பங்களை விலப்பண்ண யேசபேலின் ஆவி செயல்படுவதில்லை.

வான மண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகள் என்பது, மரங்களிலே, செடிகளிலே, சிலைகளிலே அமர்ந்து கொண்டு கிரியை செய்யும் ஆவிகள்.

ஆவிக்குறிய வாழ்க்கையில் வளர்ச்சியடையாத குடும்பங்கள் இதுபோன்ற சிறிய சிறிய பிசாசின் கிரியைகளிலேயே விழுந்துவிடுவார்கள். எனவே, இப்படிப்பட்ட குடும்பங்களை, சபைகைளை தாக்க யோசபேலின் ஆவி கிரியை செய்வதில்லை.

யோசபேலின் அர்த்தம்
ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். ஒருசில பெயர்களுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஆனால் இந்த யேசபேல் என்ற பெயருக்கு நான்கு விதமான அர்த்தங்கள் உண்டு. இந்த நான்கு அர்த்தங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அர்த்தங்கள்.

யேசபேல் என்ற பெயரின் நான்கு அர்த்தங்கள்:
    1. கருணை கலந்த அன்பு
    2. இளவரசன் எங்கே?
    3. உயர்வில்லாத தன்மை (போலியான தாழ்மை)
    4. கணவன் அற்ற தன்மை

1. கருணை கலந்த அன்பு:
சபைகளிலே ஊழியர் ஆசீர்வாதத்தையும், செழிப்பையும், நன்மையையும் பேசினால் அது அனைவருக்கும் இன்பமாய் இருக்கிறது. ஊழியர் கண்டிப்பாய் பேசினால் அது விசுவாசிகளுக்கு நன்மையாக தோன்றுவதில்லை.

நம்முடைய திருச்சபையின் கன்வென்ஷன் கூடுகைக்கு ஒரு சிறப்பு ஊழியரை அழைத்திருக்கிறோம் என்றால், அந்த ஊழியர் மூலமாக ஆண்டவர் நமக்கு ஆசீர்வாதம் நிரைந்த வார்த்தைகளை கொடுக்க வேண்டும் என்றே நாம் ஆசைப்படுகிறோம்.

நமக்கு அநேக பெலவீனங்கள், சுகவீனங்கள், இயலாமைகள் இருக்கின்றபடியினால், அந்த ஊழியரின் வார்த்தைகள் எனக்கு ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும் கொடுக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

அதற்கு மாறாக அந்த ஊழியர் பாவத்தைக் குறித்தும், பாரம்பரிய சடங்குகளைக் குறித்தும், நம்மை கண்டித்து பேசுவாரானால் அதை நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கண்டிப்புகள், சட்டதிட்டங்கள் அனைத்தும் பழைய ஏற்பாட்டு சபைக்கு மாத்திரமே. புதிய ஏற்பாட்டில் சபை அன்பினாலே கட்டப்பட வேண்டும். அன்பின் நிமித்தமாகவே ஜனங்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்று சிலர் சொல்லுவதுண்டு.

புதிய ஏற்பாட்டில் உள்ள அப்போஸ்தலர் ஐந்தாம் அதிகாரத்தில் பார்த்தால் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பொய் சொன்ன அனனியா, சப்பீராள் கர்த்தருடைய சந்நிதியிலே மரித்துப்போய்விடுகிறார்கள்.

இது நடந்தது சபை உருவான காலத்தில். அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் தான் சபையே உருவானது. இன்னும் சபையில் உதவி ஊழியர்கள் கூட ஏற்படுத்தப்படவில்லை. அப்போஸ்தலர் 6-ம் அதிகாரத்தில் தான் பரிசுத்த ஆவியினாலும், ஞானத்தினாலும் நிரைந்தவர்கள் உதவி ஊழியர்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள்.

சபையில் இன்னும் உதவி ஊழியர்கள், மூப்பர்கள் ஏற்படுத்தப்படவில்லை. சபை இன்னும் மூல உபதேசத்தில் வளரவில்லை. சபை ஆரம்பித்து ஒரு சில மாதங்களில் ஒரு புதிய விசுவாசக் குடும்பத்தார் அனனியாவும், சப்பீராளும் தங்கள் நிலத்தை விற்று அதின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, மற்ற பங்கை அப்போஸ்தலரிடத்தில் கொண்டு வந்தார்கள்.

ஒரு புதிய விசுவாசி, முதல் முறை அறியாமல் தவறு செய்தபோதும், கர்த்தர் அவர்களை தண்டிக்கிறார். புதிய ஏற்பாட்டிலும் கண்டிப்பு இருந்தது.

கொரிந்து சபையில் ஒருவர் விபசார பாவத்தில் விழுந்த போது, அவரை சபையிலிருந்து துரத்திவிடுங்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். (1 கொரிந்தியர் 5:11-13)

விசுவாசத்தை மறுதலிக்கிறவர்களுக்கு விரோதமாய் தைரியமாய் போராடுகள் என்று யூதா கற்றுக்கொடுக்கிறார். (யூதா 3)

புதிய ஏற்பாட்டிலும் கண்டிப்பு இருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கர்த்தருடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயம்.

இந்த யேசபேலின் ஆவி சபைக்குள், குடும்பத்திற்குள் புகுந்து கண்டிப்பிற்கு விரோதமாக, ஒழுக்கத்திற்கு விரோமாக கிரியை செய்யும். கருணை கலந்த அன்பை பயன்படுத்தி, ஊழியர் கண்டிப்பது தவறு. ஒரு ஊழியர் இப்படியா செயல்பட வேண்டும் என்ற குழப்பத்தை உண்டுபண்ணும்.

விசுவாசிகள் தவறுவது உண்டு. ஆனால் மேய்ப்பன் என்பவன் அவர்களையும் மன்னித்து ஏற்றக்கொள்ள வேண்டுமே. அவர்களையும் நேசிக்க வேண்டுமே. அவர்களுக்கும் அன்பு காட்ட வேண்டுமே என்று கருணை கலந்த அன்பின் நிமித்தமாக பொல்லாத கிரியைகளை நடப்பிப்பான் இந்த யேசபேல்.


2. இளவசரன் எங்கே?
ஒரு மனிதனுக்குள் இருக்கின்ற தாலந்துகள், திறமைகள், சொல்வத்தைப் பயன்படுத்தி, அவனுக்குள் பெருமையை விதைத்து இந்த யேசபேலின் ஆவி கிரியை செய்யும்.

வீழ்ச்சிக்கு முன்னானது மேட்டிமை. பெருமையுள்ளவனுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார். பெருமை, மேட்டிமை போன்ற காரியங்கள் ஒருவனுக்குள் வந்தாள் அவன் விழுந்துபோவான். அவனை அடிப்பது பிசாசு அல்ல, பெருமை மேட்டிமை கொண்டவனை கர்த்தரே அடித்துவிடுவார்.

யேசபேலின் ஆவியினால் நன்றாக ஆவிக்குறிய விதத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்ற சபையை, குடும்பத்தை, ஊழியக்காரனை நேரடியாக தாக்க முடியாவிட்டால், பெருமை என்ற குணத்தை அவனுக்குள் விதைத்து, கர்த்தரே அவனை அடிக்கும்படி செய்துவிடுவான் இந்த பிசாசு.

ஊழியருக்கு விரோதமாக, குடும்பத்திற்கு விரோதமாக மற்றவர்கள் செயல்படும்போது, இந்த யேசபேலின் ஆவி உனக்குள் இருக்கிற இளவரசன் எங்கே? நீ ஏன் அமைதியாய் இருக்கிறாய்? உனக்குள் இருக்கின்ற அந்த அதிகாரத்தை வெளியே கொண்டுவா என்று சொல்லி, நமக்குள் பெருமையையும், மேட்டிமையையும் விதைப்பான்.

சபைகளிலே இப்படி ஒரு சிலரைப் பார்த்திரும்போம். நாங்கள் எவ்வளவு பெரிய உயர் குலத்தைச் சார்ந்தவர்கள். எங்கள் குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம், எங்கள் தலைமுறை எப்படிப்பட்ட தலைமுறை, கொஞ்சம் தாழ்மையாய் இருந்தால், எங்கள்மேலேயே நீங்கள் அதிகாரம் செலுத்துகிறீர்களா? என்று கேட்பார்கள். இப்படி அவர்களை பேச வைப்பது யேசபேலின் ஆவி.


3. உயர்வில்லாத தன்மை (போலியான தாழ்மை)
ஆண்டவர் நல்ல திறமை, தாலந்து கொடுத்திருந்தாலும் எனக்கு ஒன்றும் தெரியாது. என்னால் பாட முடியாது, மேடையில் நின்று பேச முடியாது, நான் ஊழியம் செய்ய மாட்டேன். எனக்கு ஊழியம் செய்ய தெரியாது என்று நம்மை நாமே குறைத்துக்கொள்ளும் தன்மையை இந்த யேசபேலின் ஆவி கொண்டு வரும்.

ஆண்டவர் எளியவனை குப்பையிலிருந்து தூக்கி எடுக்கிறார். தூக்கி எடுத்த பின்பு, அவன் குப்பையிலிருப்பதில்லை. குப்பையிலிருந்து நம்மை ஆண்டவர் உயர்த்தும்போது, பெருமை கொள்ள வைப்பது இந்த யேசபேலின் ஆவிதான். அதைப்போலவே, ஆண்டவர் நம்மை குப்பையிலிருந்து எடுத்த பின்பும், நான் குப்பை தானே, என்னால் எப்படி இந்த காரியத்தை செய்ய முடியும், என்று போலியான தாழ்மையை நமக்குள் கொண்டு வருபவனும் இந்த யேசபேலின் ஆவியே.

ஒரு போலியான கவலையை, வெறுமையை, தாழ்மையை கொண்டு வருவான் இந்த யேசபேல்.


4. கணவன் அற்ற தன்மை
மனைவிக்கு கணவன் என்பவன் தலை. அவர் நல்லவராக இருந்தாலும், கெட்டவராக இருந்தாலும் குடும்பத்தின் தலை என்பது கணவன் தான்.

கணவன் அற்ற தன்மை என்றால், தலைமைத்துவம் அற்ற தன்மை. வழிநடத்துவார் அற்ற தன்மை பராமரிப்பு அற்ற தன்மை.

கணவன் அற்ற தன்மை என்றால் யாரைக் குறிக்கிறது. திருமணம் செய்யாத ஒரு நபரைப் பார்த்து, இவள் கணவன் அற்றவள் என்று நாம் சொல்ல மாட்டோம். திருமணம் ஆகாதவர் என்று தான் சொல்லுவோம்.

கணவன் அற்ற தன்மை என்றால் ஒருவேலை கணவன் மரித்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவள் விவாகரத்து பெற்றவளாக இருக்க வேண்டும்.

இந்த யேசபேலின் ஆவி செய்யும் காரியம் என்னவென்றால், கணவன் இருக்கிறான், அவரை கணவராக பயன்படுத்துவது இல்லை. தலைமை உண்டு, ஆனால் தலைமைத்துவத்தை தலைமைத்துவமாக எண்ணுவது கிடையாது. இதுதான் கணவனற்ற தன்மையைக் குறிக்கிறது.

அநேகர் இப்படி சொல்லுவதுண்டு. எனக்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டியதில்லை. எனக்கு ஞானம் இருக்கிறது. அறிவு இருக்கிறது. கர்த்தர் எனக்கு ஆலோசனை கொடுப்பார். எனவே, எனக்கு தலைமைத்துவம் தேவையில்லை என்று சொல்லுகிறவர்கள் அநேகர்.

மனைவிமார்களிடத்தில் இந்த யேசபேலின் ஆவி எப்படி கிரியை செய்யும் என்றால், முதலாவது கணவனை திருந்த சொல்லுங்கள், பின்பு என்னை நான் திருத்திக்கொள்கிறேன். முதலாவது என் கணவனை என்மேல் அன்பு காட்டச் சொல்லுங்கள், பின்பு நான் என்னை தாழ்த்துகிறேன்.

சில விசுவாசிகள் என்னுடைய மேய்ப்பருக்கு ஒன்றும் தெரியாது. அவர் மேய்ப்பராக மாறும் முன்பே நாங்கள் கர்த்தரை அறிந்திருக்கிறோம். எங்கள் மேய்ப்பரைவிட எங்களுக்கு வேதத்தைக் குறித்து அதிகம் தெரியும்.  எங்கள் மேய்ப்பருக்கு தமிழே ஒழுங்காக பேச வராது. அவருக்கு ஆங்கிலம் தெரியாது. நான் அவரை விட எவ்வளவு படித்திருக்கிறேன்.  அவருடைய குடும்பம் மிகவும் எளிய குடும்பம். ஆனால் நாங்கள் அப்படியல்ல, என்னுடைய மகன் ஒரு வக்கில், என்னுடைய மகள் ஒரு மருத்துவர், என்னுடைய அப்பா விமானம் ஓட்டுபவர், நாங்கள் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாத, அந்த ஊழியர் மேய்ப்பனாக இருக்க முடியுமா?  எங்களுக்கு தலைமைத்துவம் தேவையில்லை என்று சொல்பவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இதுபோன்ற தலைமைத்துவம் அற்ற எண்ணங்களை நமக்குள் விதைப்பது யேசபேலின் ஆவி.


யேசபேலின் கிரியைகள்
ஒரு சபைக்குள்ளேயோ, ஒரு மனிதனுக்குள்ளேயோ, ஒரு குடும்பத்திற்குள்ளேயோ யேசபேல் எப்படி வரும் என்பதை பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.

வேதத்தில் உள்ள யேசபேல் என்ற பெண் எப்படி வந்தாள், என்பதை ஆராய்ந்தால், இந்த நாட்களிலும் யேசபேலின் ஆவி எப்படி கிரியை செய்யும் என்பதை நாம்மால் அறிந்துகொள்ள முடியும்.

1. மீண்டும் மீண்டும் பாவம் செய்வது
ஆகாப் ராஜா தனக்கு முன் இருந்த ராஜாக்களை விட அதிகமான பாவங்களை செய்தான். இதுதான் யேசபேல் உள்ளே வருவதற்கு அடிப்படையாய் இருந்தது.

ஒரு சபையிலே, ஒரு குடும்பத்திலே கர்த்தர் வெறுக்கின்ற காரியங்கள், கர்த்தர் விரும்பாத காரியங்கள் பெருகிக்கொண்டே இருக்குமானால், அது யேசபேலின் ஆவி உள்ளே வருவதற்கு ஒரு காரணமாய் அமையும்.


நேபாத்தின் குமாரனாகிய யெரோபெயாம்:
தாவீதின் குமாரன் சாலொமோன் நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேல் தேசத்தை அரசாண்டான். இவனுடைய ஆட்சிக்கு பின்பு, தேசம் வடக்கு ராஜ்யம், தெற்கு ராஜ்யம் என்று இரண்டு பகுதியாக பிரிந்தது.

வடக்கு ராஜ்யத்தில் பத்து கோத்திரங்கள் இருந்தன. தெற்கு ராஜ்யத்தில் யூதா, பென்யமீன் என்ற இரண்டு கோத்திரங்கள் மாத்திரம் இருந்தது.

வடக்கு ராஜ்யத்தின் முதல் ராஜா தான் இந்த யெரோபெயாம். தெற்கு ராஜ்யத்தில் உள்ள யூதா தேசத்தில் தான் எருசலேம் தேவாலயம் இருந்தது.

இந்த யெரோபெயாம் வடக்கு ராஜ்யத்தில் உள்ள பத்து கோத்திரத்தாரும், பண்டிகைக்காகவும், தொழுகைக்காகவும் தெற்கு ராஜ்யத்தில் உள்ள அந்த எருசலேம் தேவாலயத்திற்கு போவார்களானால், ஜனங்கள் சிதறடிக்கப்படுவார்கள் என்று நினைத்து, ஒரு காரியத்தை செய்தான். பத்து கோத்திரங்கள் அடங்கிய வடக்கு ராஜ்யத்தின் வடக்கு எல்லை தாண் என்ற இடத்திலும், தெற்கு எல்லையாகிய பெத்தேல் என்ற இடத்திலும் பலிபீடங்களை உண்டு பண்ணினான். பலிபீடத்திலே பொன் கன்றுக்குட்டியை செய்து வைத்தான்.

இஸ்ரவேல் ஜனங்களின் வனாந்திரத்திர பிரயாணத்தில், மோசே சீனாய் மலைக்குச் சென்று திரும்ப தாமதித்ததால், ஜனங்கள் ஒரு பொன் கன்றுக்குட்டியை செய்து, இதுதான் எங்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்த தெய்வம் என்று சொன்னார்கள். இந்த கன்றுக்குட்டியை செய்தது ஆரோன்.

இதனால் கோபமடைந்த மோசே கர்த்தர் எழுத்திக்கொடுத்த பத்து கட்டளைகளை உடைத்துப்போடுகிறார். ஜனங்களின் துணிச்சலினிமித்தம் அங்கே ஆயிரக்கணக்கானோர் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த யெரோபெயாம் வடக்கு ராஜ்யத்தில் உள்ள ஜனங்கள் தெற்கு ராஜ்யத்தில் உள்ள எருசலேம் தேவாலயத்திற்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக, மோசேயின் காலத்தில் உடைத்து நொருக்கப்பட்ட அந்த கன்றுக்குட்டியை வடக்கு ராஜ்யத்தின் இரண்டு பகுதிகளிலும் வைத்தான். அப்படியானால் யெரோபெயாம் செய்தது மிகவும் கொடியதான பாவம்.


1 இராஜாக்கள் 16-ல் ஆகாப்பைக் குறித்து சொல்லும்போது, யெரோபெயாம் செய்த பாவத்தைவிட ஆகாப் அதிக பாவத்தை செய்தான் என்று வாசிக்கிறோம்.

இந்த ஆகாப் கொடூரமான பாவங்களை செய்ததுமல்லாமல், பாவத்தின் மிகுதியாக யேசபேலையும் திருமணம் செய்தான்.

ஒரு மனிதனுடைய வாழ்வில் யேசபேலின் ஆவி நுழைய முதலாவது காரணம், அவனுடைய பாவம் மிகுதியாகும்போது (திரும்ப திரும்ப பாவம் செய்வது) யேசபேலின் ஆவி அவனுக்குள் கிரியை செய்ய ஆரம்பிக்கும்.

எந்த பாவம் ஒரு மனிதனிடமிருந்து துரத்தப்பட்டதோ, ஒரு சபையிடமிருந்து துரத்தப்பட்டதோ, அந்த பாவம் மீண்டும் உள்ள வரும்போது, யேசபேலின் ஆவி கிரியை செய்ய ஆரம்பிக்கும்.

ஆகாப் ராஜா தனக்கு முன்பாக இருந்த எல்லா ராஜாக்களையும் குறித்து நன்கு அறிந்திருந்தவன். அவர்கள் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்தை செய்தபோது, கர்த்தர் அவர்களை எப்படி தண்டித்தார் என்பதையும் நன்கு அறிந்தவன். எல்லாம் தெரிந்திருந்தாலும், துணிகரமாக யெரோபெயாமின் பாவங்களை செய்ததுமல்லாமல், அதைவிட கொடிய பாவங்களையும் செய்து வந்தான்.

யேசபேல் என்பவள் இஸ்ரவேல் தேசத்து பெண் அல்ல. யேசபேல் சீதோனின் ராஜாவாகிய யேத்பாகாலின் மகள். யூதர்கள் அந்நிய ஜாதியோடே சம்பந்தம் கலக்க வேண்டாம் என்று, ஆண்டவர் மோசேயின் மூலமாக வாக்குப்பண்ணியிருந்தார். இந்த ஆகாப் தன்னுடைய பாவத்தின் மிகுதியினால் சீதோன் தேசத்து ராஜாவின் மகளை திருமணம் செய்தான்.

பலமுறை ஆண்டவர் நம்மை கண்டித்து உணர்த்தும்போதும், நாம் ஆண்டவருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்காமல், மீண்டும் மீண்டும் தவறு செய்வோமானால் அது யேசபேலுக்கு கதவைத் திறந்துவிடும் என்பதை மறந்து போக வேண்டும்.


ஆகாப் சீதோனிய தேசத்து யேசபேலை விவாகம் செய்தது மாத்திரம் அல்லாமல், அவளுடைய தெய்வத்தையும் இஸ்ரவேல் தேசத்திற்கு கொண்டு வந்தான். அந்த விக்கிரகத்தின் பெயர் பாகால்.

எபிரெய மொழியிலே யெகோவா என்றால் கர்த்தர் என்ற பொருள் இருப்பதுபோல, கானானிய மொழியில் பாகால் என்றால் கர்த்தர் என்று பொருள். யேசபேலின் தெய்வமாகிய பாகால் முன்பு எங்கே இருந்தது என்றால், கானான் தேசத்தில் இருந்தது.

யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும், யோர்தானைக் கடந்து வந்து, எரிகோ, ஆயி போன்ற பட்டணங்களை கைப்பற்றி இந்த கானான் தேசத்தை சுதந்தரித்தார்கள். அப்பொழுது அங்குள்ள ஜனங்கள் வணங்கிக்கொண்டிருந்த தெய்வம் தான் இந்த பாகால். இஸ்ரவேலர்கள் கானான் தேசத்தைக் கைப்பற்றிய போது, பாகால் தெய்வத்தை தேசத்தைவிட்டு துரத்தினார்கள்.

எந்த தெய்வம் தேசத்தைவிட்டு துரத்தப்பட்டதோ, அதே விக்கிரகம் ஆகாபின் மனைவி யேசபேல் மூலமாக மீண்டும் இஸ்ரவேல் தேசத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

ஒரு சபைக்குள்ளேயோ, குடும்பத்திற்குள்ளேயோ அசுத்த ஆவி வரவேண்டுமானால் எளியவர்கள், பெலவீனமானவர்கள் மூலமாகவே வரும் என்று நாம் நினைக்கிறோம். நாம் நினைப்பது தவறல்ல. யார் பாவத்தின் மீது ஆசை வைக்கிறார்களோ, யாருடைய பார்வை கர்த்தரை விட்டு கொஞ்சம் பின்வாங்குகிறதோ, அவர்கள் மூலமாகவே பிசாசு நுழையப் பார்ப்பான்.

யோசுவாவின் காலத்தில் ஜனங்கள் எரிகோ பட்டணத்தை கைப்பற்றிய பின்பு, ஆயி பட்டணத்தை முற்றுகையிட்டார்கள். எரிகோவை விட குறைந்த படை கொண்ட ஆயி பட்டணத்தை தோற்கடிக்க முடியாமல் இஸ்ரவேலர்கள் முறிந்தோடினார்கள்.

காரணம் என்னவென்றால், ஆகான் என்ற நபர் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்தை (சாபத்தீடானதிலே தூரோகம் செய்தான்) செய்தபடியினால், குறைந்த படை கொண்ட ஆயி பட்டணத்தை தோற்கடிக்க முடியாமல் சிதறடிக்கப்பட்டார்கள்.

அந்த ஆகான் என்பவர் தலைவரும் அல்ல, யோசுவாவோடு இருந்த நபரும் அல்ல, இஸ்ரவேல் தேசத்தில் அவருக்கென ஒரு பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. ஆகான் என்பவர் ஒரு சாதாரண குடிமகன்.

இப்படி சாதாரணமான பெலவீனமான மனிதன் மூலமாகவே அசுத்த ஆவிகள் ஒரு சபைக்குள்ளே, ஊழியத்திற்குள்ளே, குடும்பங்களுக்குள்ளே நுழையும்.

ஆனால் இந்த யேசபேலின் ஆவி அப்படிப்பட்டது அல்ல. யேசபேலின் ஆவி தலைவர்கள், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் மூலமாகவே கிரியை செய்யும்.

மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம் (மத்தேயு 26:31) என்று இயேசுவும் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

யேசபேல் ஒரு குடும்பத்தை தாக்க வருகிறான் என்றால், குடும்பத் தலைவரைத்தான் முதலில் தாக்குவான். ஒரு சபையை தாக்க வருகிறான் என்றால், முதலில் தலைமை மேய்ப்பரையே தாக்குவான்.

யேசபேலாள் சபையின் தலைமை ஊழியரை தாக்க முடியவில்லை என்றால், ஊழியரின் மனைவி, பிள்ளைகளை தாக்குவான். அவர்களையும் தாக்க முடியவில்லை என்றால், உதவி ஊழியர், உதவி ஊழியரின் குடும்பங்களை தாக்குவான். இதுதான் யேசபேலின் ஆவி.

யேசபேல் தலைமை ஊழியரை தாக்க வரும்போது, அவரை தாக்க முடியவில்லை என்றால், அவரைவிட்டு விட்டு மற்ற ஊழியர்களை தாக்க முயற்சிக்க மாட்டான். அவரை தாக்கிக்கொண்டே மற்ற ஊழியர்களையும் தாக்க முயற்சி செய்வான்.

ஆகாப் ராஜா தனக்கு முன்னிருந்த எல்லா ராஜாக்களைப் பார்க்கிலும் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான் என்றால், அவன் காலத்தில் ஜனங்கள் எந்த அளவிற்கு பொல்லாதவர்களாக இருந்திப்பார்கள்.

யேசபேலின் ஆவி தேசத்தின் குடிகள் மூலமாகவோ, சிறிய சிறிய பொறுப்புக்களில் இருக்கின்றவர்கள் மூலமாகவோ இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழையவில்லை. தேசத்தின் தலைவர், ராஜா (ஆகாப்) மூலமாக தேசத்திற்குள் நுழைந்தது.

ஆகாப் ராஜா யேசபேலை திருமணம் செய்தது மாத்திரம் அல்ல. அவளுடைய தெய்வமான பாகாலையும் சேவித்தான் என்று வாசிக்கிறோம்.

தன் மனைவி மூலமாக தேசத்திற்குள் கொண்டுவரப்பட்ட பாகாலை ஆகாப் முதலில் வணங்கவில்லை, அதற்கு ஆராதனை செய்யவில்லை. அதை சேவித்தான் என்றே வேதத்தில் வாசிக்கிறோம். (1 இராஜாக்கள் 16:31)

சேவிப்பது என்றால் பணிந்துகொள்வது அல்ல. சேவிப்பது என்றால் அதற்கு வேலை செய்வது. ஆகாப் பாகால் தெய்வத்திற்கு ஆராதனை செய்யவில்லை. அது தன்னுடைய மனைவியின் தெய்வம் என்பதால், அதற்கு தேவையான காரியங்களை செய்து வந்தான்.

பாகால் என்பது யோசுவாவின் காலத்தில் தேசத்திலிருந்து துரத்திவிடப்பட்ட ஒரு தெய்வம். எந்த தெய்வம் தேசத்தைவிட்டு துரத்தப்பட்டதோ, அதே தெய்வத்தை யேசபேலின் ஆவி ஆகாப் மூலமாக தேசத்திற்குள் கொண்டு வந்தது. அதற்கு தேவையான காரியங்களை ஆகாப்பே செய்ய ஆரம்பித்தான்.

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய வார்த்தையில் வளர வளர நம்முடைய பாவங்கள், மூட நம்பிக்கைகளை விட்டு மனந்திரும்பி ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்க பிரயாசப்படுவோம்.

நாம் கர்த்தருடைய வார்த்தையை அதிகம் தியானிக்க தியானிக்க கர்த்தர் அநேக பாவங்களை நமக்கு உணர்த்துவார். பழைய மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள், ஜாதிப்பெருமை, பணப்பெறுமை, விக்கிரக ஆராதனை, சினிமா, பில்லிசூனியம், தாயத்து இதுபோன்ற காரிங்களை விட்டு நாம் ஒவ்வொரு நாளும் மனந்திரும்பிக் கொண்டிருக்கிறோம்.

யேசபேலின் ஆவி இதுபோன்ற நாம் விட்டுவந்த காரியங்களை மீண்டும் நம்முடைய குடும்பத்திற்குள் கொண்டு வந்து அதை ஆராதிக்க வைக்கமாட்டான். அதை சேவிக்க வைப்பான்.

ஒரு புத்தகம் கீழே விழுந்தால், நாம் அதை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம். அப்படியானால், அந்த புத்தகத்தை நான் ஆராதிக்கவில்லை. அதை சேவிக்கிறேன். அதற்கு நான் பணிவிடை செய்கிறேன்.

ஒரு பொருள் எப்படிப்பட்ட மதிப்புள்ளதோ, அதற்கு ஏற்றார் போலவே நம்முடைய செயல்பாடுகளும் இருக்கும். ஒரு புத்தகத்தை மேசையின் மேல் வைக்கின்றோம் என்றால், சத்தம் கேட்கும் அளவிற்கு வேகமாக நம்மால் வைக்க முடியும். ஆனால் புத்தகத்தை எந்த அளவு வேகத்தில் நாம் வைத்தோமோ, அதை அளவு வேகத்தில் ஒரு கடிகாரத்தை வைக்க மாட்டோம். கடிகாரத்தை எந்த அளவிற்கு வேகமாக வைக்கிறோமோ, அதை வேகத்தில் ஒரு கண்ணாடி பாத்திரத்தை வைக்க மாட்டோம். ஒரு முட்டையை கீழே வைக்கிறோம் என்றால், அதை இன்னும் மெதுவாக வைப்போம். கீழே வைத்த பின்பும், அது உருண்டோடி உடைந்துவிடக்கூடாது என்பற்காக மிக கவனமாக நாம் செயல்படுவோம்.

வேலை செய்பவர் நாம் ஒருவர்தான். சேவை செய்பவர் நாம் ஒருவர் தான். ஆனால் அதை செய்யும் முறைகளிலே வித்தியாசங்கள் உண்டு. ஒரு புத்தகத்தை கீழே வைப்பதற்கும், கடிகாரத்தை கீழே வைப்பதற்கும், கண்ணாடி பாத்திரத்தை கீழே வைப்பதற்கும், முட்டையை கீழே வைப்பதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு.

வேலை செய்கிறவர் நான் ஒருவர் என்றாலும், அவைகளில் வித்தியாசங்கள் உண்டு. அந்த பொருளின் தன்மை, பொருளின் மதிப்பு, முக்கியத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் நான் செய்யும் பணியின் (சேவை) அளவு வித்தியாசப்படுகிறது.

ஒரு பொருளுக்கு நான் செய்யும் சேவையின் அடிப்படையிலேயே நான் அந்த பொருளை எந்த அளவிற்கு மதிக்கின்றேன், அந்த பொருள் எனக்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரியும்.

முதலில் யேசபேல் பாகாலை தேசத்திற்குள் கொண்டு வந்தபோது ஆகாப் அதற்கு அனுமதி கொடுத்தார். பின்பு, அந்த தெய்வத்திற்கென தேவைகள் வரும்போது. என் மனைவியின் தெய்வம் தானே என்று சொல்லி, அதற்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தார். அதை சேவித்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆகாபே பாகால் சிலையை வணங்க, ஆராதிக்க ஆரம்பித்தான்.

இதைப்போலத்தான் நம்முடைய வாழ்க்கையிலும் நாம் விட்டு வந்த பாவங்கள், அசுத்தங்களுக்குள் நாமாக மீண்டும் விலப்போவதில்லை. யேசபேலின் ஆவி அதை நமக்குள் கொண்டுவரும்போது, அதை நாம் அனுமதிக்கிறோம்.


நாம் இரட்சிக்கப்பட்ட பின்பு சினிமா படங்களையோ, சினிமா பாடல்களையோ பார்க்க மாட்டேன், கேட்க மாட்டேன் என்று தீர்மானம் எடுத்திருப்போம். நம்முடைய இரட்சிக்கப்படாத உறவினர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து, தொலைக்காட்சியில் அந்த சினிமா படங்களையோ, பாடல்களையோ போடுகிறார்கள் என்றால், அவர்களை தட்ட முடியாமல், அதற்கு நாம் அனுமதி கொடுக்கின்றோம். அப்படியானால் அதை நாம் சேவிக்கின்றோம் என்று பொருள்.

இப்படிப்பட்ட காரியங்கள் நம்முடைய வாழ்வில் நடக்கும்போது இது யேசபேலின் ஆவி என்பதையே நாம் உணராதிருப்போம். ஏனென்றால், நான் ஏன் அந்த காரியத்தை செய்கிறேன் என்பதற்கு என்னிடம் ஒரு சரியான காரணம் இருக்கும். உறவினர்கள் என்னை தவறாக நினைத்துவிடக்கூடாது, சமுதாயம் என்னை தவறாக நினைத்துவிடக் கூடாது. நண்பர்கள் என்னை தவறாக நினைத்துவிடக் கூடாது. இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மிடமிருந்து துரத்தப்பட்ட அந்த பாவத்தை நாம் மீண்டும் சேவிக்க துவங்குகிறோம். இதுதான் யேசபேலின் ஆவி.


ஆகாப் முதலில், பாகாலை தேசத்திற்குள் அனுமதித்தான். பின்பு அதை சேவித்தான். பின்னர் பணிந்துகொள்ள ஆரம்பித்தான்.

நம்முடைய வாழ்விலும் கூட நாம் விட்டு வந்த எந்த பாவத்தை உள்ளே அனுமதிக்கின்றோமோ, எந்த பாவத்தை சேவிக்கின்றோமோ? அது நம்மை ஆட்கொண்டுவிடும். இது தவறு இல்லை, சமுதாயத்திற்காகத்தான், நண்பர்களுக்காகத்தான், உறவினர்களுக்காகத்தான் இதை செய்கிறோம் என்று நம்மை நாமே நியாயப்படுத்திக்கொண்டு, யேசபேலின் வலையில் விழுந்துவிடுவோம்.

ஆகாப் முதலில் பாகால் தெய்வத்திற்கு அனுமதி கொடுத்தான், பின்பு அதை சேவித்தான். பின்னர் பணிந்துகொண்டான். கடைசியில் அந்த பாகாலுக்கு கோயில் ஒன்றைக் கட்டினான்.

கோயிலைக் கட்டினான் என்றால், அதற்கு முழு மதிப்பும், மரியாதையும் கொடுத்து, அதை உயர்த்தினான் என்பதாகும். எந்த பாவம் ஒரு காலத்தில் தேசத்தைவிட்டு துரத்தப்பட்டதோ, அது யேசபேலின் மூலமாக, தேசத்தின் முக்கிய இடத்திற்கு வந்தது.

நாமும் நாம் விட்டு வந்த பழைய பாவத்துக்கு அனுமதி கொடுப்போமானால், கடைசியில் யேசபேலின் ஆவி நமக்குள் கிரியை செய்து, அந்த பாவம் நமக்குள் வளர்ந்து பெருகி, ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துவிடும்.


விக்கிரகத்தோப்புகள்
கடைசியில் ஆகாப் விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு கோபமுண்டாக்கினான் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

தமிழ் வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த விக்கிரகத்தோப்பு என்பது பாபிலோனிய தெய்வதைக் குறிக்கிறது. ஆகாப் கர்த்தருக்கு கோபமுண்டாக்க, பாபிலோனிய தெய்வத்தையும் தேசத்திற்குள் கொண்டு வந்தான்.

யேசபேல் சீதோனிய தேசத்து பெண். அவள் கொண்டு வந்தது பாகால் (பாகால் மெல்காட்) என்றா கானானிய தெய்வம். கடைசியில் ஆகாப் பாபிலோனிய தெய்வத்திற்கு ஒரு விக்கிரகத்தோப்பையே உண்டாக்கினான்.

உலகத்தில் தோன்றி சகல விக்கிரக ஆராதனைக்கும் தாய் இந்த பாபிலோன் தெய்வம். இந்த மதத்திலிருந்து தான் மற்ற விக்கிரக ஆராதனைகள் உண்டானது. இந்த பாபிலோனிய தெய்வம் என்பது முன்னே இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. கடைசி காலத்திலும் இந்த பாபிலோன் தெய்வங்கள் இருக்கும்.

வேதத்தில் விக்கிரக தோப்புகள் என்ற பெயர் எங்கெல்லாம் வருகிறதோ, அது இந்த பாபிலோன் தெய்வத்தைக் குறிக்கிறது. அனைத்து விக்கிரகங்களுக்கும் தாய் இந்த பாபிலோனிய தெய்வம். எனவே கர்த்தர் வெறுக்கின்றதும் இந்த பாபிலோனிய தெய்வம் தான்.

அப்படிப்பட்ட பாபிலோனிய தெய்வத்தை யோசபேலின் ஆவி ஆகாப் மூலமாக இஸ்ரவேல் தேசத்திற்குள் கொண்டு வர வைத்தது.

அப்படிப்பட்ட யேசபேலின் ஆவி இன்றும் கிரியை செய்துகொண்டிருக்கிறது. அந்த யேசபேலின் ஆவிக்குத்தப்பி நம்முடைய பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டு, தொடர்ந்து கர்த்தருக்காய் வாழ்வோம்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக….ஆமென்….!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.