Type Here to Get Search Results !

சாத்தான் அல்லது பிசாசின் வரங்கள் | The Gifts of Satan or the Devil | Bible Study in Tamil | Jesus Sam

==========
சாத்தானின் வரங்கள்
==========
சாத்தானின் வரங்களைக் குறித்து பார்க்கும் முன்னால், சாத்தானின் குணத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரு கதையை அறிந்து கொள்வோம்.


கதை
ஒரு ஊரில் ஒரு அழகான தாய் இருந்தாள். அவளுடைய கணவன் ஒரு தொழில் அதிபர். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இவர்கள் நல்ல வசதியான குடும்பத்தினர்.

ஒரு நாள் மகன் தன் அப்பாவிடம், அப்பா நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா? நேசிக்கிறீர்கள் என்றால் எனக்கு ஒரு இருசக்கர வாகனம் வாங்கிக்கொடுங்கள் என்று கேட்கிறான்.

அதற்கு தகப்பன்: நீ நன்றாகப் படி நான் உனக்கு வாங்கிக்கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார். அவனும் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுக்கின்றான். தன் தகப்பனிடம் வந்து, நான் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளேன், எனக்கு இருசக்கர வாகனம் வாங்கிக்கொடுங்கள் என்று சொல்லுகிறான்.

இப்படி தினமும் அப்பாவிடம் கேட்டுக்கொண்டிருக்க, தகப்பன் ஒரு நாள் கோபத்தில், உனக்கு இருசக்கர வாகனம் வாங்கிக்கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். உடனே, மகன் அழுதுகொண்டு வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்துவீட்டு மாமா, சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். சிறுவன் மாமாவைப் பார்த்து: என் அப்பாவிடம் ஆசையாய் ஒரு இருசக்கர வாகனம் ஒன்று கேட்டேன், அவர் தரமுடியாது என்று சொல்லிவிட்டார் என்று அழுதுகொண்டே கூறினான்.

அந்த மாமா சிறுவனை தன் வீட்டிற்கு பின்புறம் அழைத்துச் சென்றார், அங்கே ஒரு அழகான இருசக்கர வாகனம் இருந்தது. சிறுவன் மாமாவிடம், மாமா இந்த வாகனத்தைத்தான் நான் என் அப்பாவிடம் கேட்டேன், அவர் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார் என்று அழுதுகொண்டே சொன்னான்.

அதற்கு மாமா பரவாயில்லை, உன் அப்பாவிற்கு தெரியாமல், பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் இந்த இருசக்கர வாகனத்தை நீ எடுத்து பயன்படுத்திக்கொள் என்று சொல்லுகிறார்.

அந்த சிறுவன் நினைத்தானாம், இந்த மாமா என் அப்பாவாக இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும். நான் ஆசைப்பட்ட பொருளை உடனே கொடுத்துவிட்டாரே என்று நினைத்தானாம்.

சிறுவன் அந்த மாமாவைப் பார்த்து, மாமா நீங்கள் இருப்பது போன்று ஏன் என் அப்பா இருப்பதில்லை. நான் ஆசையாய் கேட்ட இருசக்கர வாகனத்தை வாங்கித்தர என் அப்பாவிடம் பணம் இருக்கிறது, வசதி இருக்கிறது, பின்னே, ஏன் வாங்கிக்கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறார் என்று கேட்டானாம்.

அதற்கு அந்த மாமா, எல்லா பெற்றோரும் என்னைப் போன்று இருப்பதில்லை, நீ மாத்திரம் என்னுடைய மகனாய் இருந்திருப்பாயானால், உனக்கு நான்கு சக்கர வாகனமே வாங்கிக் கொடுத்திருப்பேன் என்று கூறினாராம்.


பக்கத்து வீட்டு மாமா, ஏன் இப்படி அச்சிறுவனை நேசிக்க வேண்டும் என்று நாம் யோசிக்கலாம். அந்த மாமாவிற்கு சிறுவனின் தாய் மீது ஒரு ஈர்ப்பு. இச்சிறுவன் மூலமாகவே, அவனுடைய தாயை நெருங்க முடியும் என்று நினைத்த அந்த மாமா, அவன் ஆசைப்பட்ட பொருளை அவனுக்கு உடனே கொடுக்கிறார். மாமா நம்முடைய அம்மாவை நெருங்கும்படியாகவே நமக்கு உதவி செய்கிறார் என்பதை சிறுவன் அறியாதிருந்தான்.

அப்பா பிள்ளையின் மீது வைத்த அன்பின் நிமித்தமாக மகனுக்கு இப்போது இருசக்கர வாகனம் தேவையில்லை என்று நினைத்து வாங்கிக்கொடுக்கவில்லை. சிறுவனின் நலனைக்குறித்து கொஞ்சமும் யோசிக்காத, எதிர்காலத்தைக் குறித்த கரிசனை இல்லாத மாமா தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சிறுவனுக்குத் தேவைப்பாடாத பொருட்களையும் அவனுக்கு கொடுத்து ஆசை காட்டுகிறார்.


உண்மையான தகப்பன் என்பது நம்முடைய கர்த்தாதி கர்த்தரைக் குறிக்கிறது. நாம் நம்முடைய தகப்பனிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கும்போது, அவர் தாமதிக்கிறார் அல்லது மறுக்கிறார் என்றால் நாம் பொறுமையாய் இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த மாமாவைப்போன்று பிசாசானவன் நாம் அசைப்பட்ட பொருளைக் கொடுத்து நம்மை பாவத்தில் வில வைத்துவிடுவான்.


சாத்தானின் வரங்கள்
==============
சாத்தானின் வரங்கள் என்றால் சிலருக்கு புதிதாக இருக்கிறது. ஆவியின் வரங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சாத்தானின் வரங்கள். சாத்தானுக்கும் வரங்கள் இருக்கின்றதா? என்று அநேகர் யோசிப்பதுண்டு.

இன்று சாத்தானாக செயல்படுகிறவன் முன்பு தூதனாக இருந்தவன். சாதாரண தூதன் அல்ல இவன் பிரதான தூதனாக இருந்தவன். இவனுக்கு என்ன பெயர் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவன் விழுந்துபோன போது, அவனைக்குறித்து வேதம் அதிகாலையின் மகள் என்று சொல்லுகிறது.

ஏசாயா 14:12-ல் அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே என்று இவனைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. விடிவெள்ளி என்ற வார்த்தைக்கு எபிரெயு மொழியில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை லூசிபர்.

லூசிபர் என்பது சாத்தானின் பெயர் அல்ல. சாத்தானை வார்னிக்க கர்த்தர் இந்த பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். இரவு நேரங்களில் சந்திரனுக்கு அருகில் ஒரு நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக ஜொலித்துக்கொண்டிருக்கும். அந்த நட்சத்திரத்தின் பெயர் லூசிபர்.

கர்த்தர் மூன்று பிரதான தூதர்களை சிருஷ்டித்தார். ஒருவர் விழுந்துபோன தூதன். மற்றொருவர் மிகாவேல் (யூதா 1:9), மற்றொருவர் காபிரியேல் (லூக்கா 1:26).

இந்த விழுந்துபோன விடிவெள்ளியின் மகன் தான் ஆண்டவரை ஆராதிப்பதற்காகவும், ஆண்டவருடைய சமுகத்தில் மிக நெருக்கமாக இருப்பதற்காகவும் உருவாக்கப்பட்டவன்.

இந்த தூதனுக்குள் பெருமை வந்தபோது, அவனும் அவனோடு கூட இருந்த அத்துனை தூதர்களும் விழுந்துபோனார்கள். ஆண்டவர் எத்தனை தூதர்களை பரலோகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு தூதர்கள் கூட்டம் கீழே விழுந்தது.  அந்த தூதர் கூட்டமே, இன்று பிசாசின் ஆவிகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த தூதன் கீழே விழுந்தபோது அவனுக்கு கொடுக்கப்பட்ட பெயர் சாத்தான். சாத்தான், பிசாசு என்பது ஒரு பெயர் அல்ல, சாத்தான், பிசாசு என்றால் எதிராளி, சத்துரு என்று பொருள்.

ஆண்டவர் தூதனை கீழே தள்ளும்போது, அவனுடைய வரங்கள் ஒன்றையும் அவனிடமிருந்து பரித்துக்கொள்ளவில்லை. காபிரியேல் தூதனைவிட, மிகாவேல் தூதனை விட அதிகபடியான வரங்களும், அதிகாரங்களும் இந்த விழுந்துபோன தூதனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

விழுந்துபோன தூதன், தூதனாக இருக்கும்போது கர்த்தரிடத்தில் பெற்ற அனைத்து நல்ல காரியங்களும் இன்னும் அவனிடத்தில் உண்டு. இன்றும் அவன் அதை செயல்படுத்திக்கொண்டிருக்கிறான்.


ஆண்டவர் மனிதர்களை தேவதூதர்களைவிட சற்று சிறியவர்களாகவே படைத்திருக்கிறார். (சங்கீதம் 8:5)  தேவதூதர்கள் என்பவர்கள் ஆண்டவருடைய பணிவிடைக்காரர்கள். ஆண்டவர் சொல்லும் காரியத்தை செய்பவர்கள். மனிதனால் தேவதூதர்களுக்கு கட்டளையிட முடியாது.

அநேக கிறிஸ்தவர்கள் தேவதூதனே எனக்கு முன்பாக சென்று என் பாதைகளை செவ்வைப்பண்ணும், தேவதூதனே நான் வெளியே செல்கிறேன், என் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் என்று தேவதூதர்களுக்கு கட்டளையிடுவார்கள். அது தவறான காரியம்.

தேவதூதர்கள் என்றால் பணிவிடை செய்பவர்கள். மனிதனுக்கு பணிவிடை செய்பவர்கள் அல்ல, கர்த்தருக்கு பணிவிடை செய்பவர்கள்.

உதாரமணமாக: நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்றால், உங்கள் வீட்டில் வேலை செய்யும் நபரிடம் நான் வேலைசெய்ய சொல்ல முடியாது. உங்கள் வீட்டு வேலைக்காரருக்கு நீங்கள் தான் வேலை செய்ய கட்டளையிட வேண்டும். நான் ஒரு அதிகாரி, ஊழியராக இருக்கிறேன் என்றபடியினால் உங்கள் வீட்டு வேலைக்காரருக்கு நான் கட்டளையிட முடியாது.

அதுபோலவே, தூதர்களுக்கு மனிதர்களால் கட்டளையிட முடியாது. அவர்கள் கர்த்தர் கட்டளையிடும் வேலைகளை செய்கிறவர்கள்.


தேவதூதர்களுக்கு கிடைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் கர்த்தர் மனிதர்களுக்குக் கொடுப்பாரா?

நாம் தேவதூதர்களை விட சற்று சிறியவர்களாக இருந்தாலும், ஆண்டவர் நம்மை பணிவிடைக்காரர்களாக படைக்காமல் தம்முடைய சாயலில் படைத்திருக்கிறார். தேவதூதர்களை ஆண்டவர் தன்னுடைய சாயலில் படைக்கவில்லை.

ஆண்டவர் தேவதூதர்களை என்னுடைய மணவாட்டி என்று சொல்லவில்லை, மனிதர்களைத்தான் தன்னுடைய மணவாட்டி என்று சொல்லுகிறார்.

பரலோகத்தில் இயேசுவின் மணவாட்டியாய், பிதாவின் பிள்ளைகளாய் வாழப்போகிற நமக்கு, கர்த்தர் தேவதூதர்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களையும், வரங்களையும், நன்மைகளையும் கொடுக்காமல் இருப்பாரா? நிச்சயம் கொடுப்பார்.

தேவதூதர்களுக்கு கொடுத்த அதிகாரத்தையும், வல்லமையையும் கர்த்தர் மனிதனுக்கும் கொடுப்பார். ஆனால் எல்லோருக்கும் அல்ல. யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு அதை மாத்திரம் கொடுப்பார்.

ஒரு பிள்ளைக்கு என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக்கூடாது என்பது பெற்றோருக்குத்தான் தெரியும். எனவே, என்னுடைய பரம தகப்பனுக்கு எனக்கு என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக்கூடாது என்று நன்றாகத் தெரியும்.

ஆண்டவர் ஒருசில ஆசீர்வாதங்களை எனக்கு கொடுக்காமல் இருக்கிறார் என்றால், அதில் காரணங்கள் உண்டு. எனக்கு அந்த வரத்தை கர்த்தர் கொடுக்கவில்லையே, எனக்கு அந்த ஆசீர்வாதத்தைக் கர்த்தர் கொடுக்கவில்லையே என்று நாம் கவலைப்படுவோமானால், அந்த நேரத்தில் மேல் சொன்ன கதையில் எதிர்வீட்டுக்காரர் வந்ததுபோல, பிசாசு நம்முடைய வாழ்வில் நுழையப்பார்ப்பான்.

ஆண்டவர் நமக்கு கொடுக்க வேண்டாம், இது இவனுக்கு தேவையில்லை என்று சொல்லுகிற காரியங்களை பிசாசானவன் நம் கண்முன்னே நிறுத்தி நம்மை அவன் வசத்தில் விலவைத்துவிடுவான்.

1 பேதுரு 5:8
உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வதைதேடிச் சுற்றித்திரிகிறான்.

காட்டில் சிங்கம் கர்சிக்கிறது என்றால் சிங்கம் வரப்போகிறது என்று அங்கே உள்ள விலங்குகளுக்கு தெரியும். பிசாசானவன் சிங்கம்போல் வரும்போது அதை நாம் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

2 கொரிந்தியர் 11:14
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.

சாத்தான் தூதன் வேஷம் தரித்துக்கொண்டு வரும்போது கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சாத்தானுக்கு தூதன் வேஷம் தரிப்பது கடினமான காரியம் அல்ல, அவன் முன்னே தூதனாக இருந்தவன்.

நாடகத்தில் ஆண் மகனை அழைத்து நீ ஆண் மாதிரி நடிக்க வேண்டும் என்று சொல்வது எளிது. இரண்டு, மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனாய் இருக்கின்ற ஒருவரை அழைத்து நீங்கள் தகப்பனாக நடிக்க வேண்டும் என்று சொன்னால் அவர் அதற்கென கஷ்டப்பட்டு பயிற்சி எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் அதில் பழக்கப்பட்டவர்கள்.

அதைப்போலவே சாத்தானுக்கு தூதனாக நடிப்பதில் கஷ்டம் ஏதும் இல்லை, ஏனென்றால் முன்னே அவன் தூதனாகவே இருந்தவன்.

பிசாசு என்றால் கருப்பு உடை அணிந்து, இரண்டு நீண்ட பற்களோடு, கொடூரமாக இருப்பான் என்று அநேகர் நினைக்கிறார்கள். பிசாசு நம்மிடம் வரும்போது, இவன் பிசாசாக இருப்பானோ என்ற சந்தேகம் கூட வராத அளவிற்கு மிகவும் அழகான தோற்றத்துடன், தூதனைப்போன்று வருவான்.

நாம் கர்த்தரிடத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற ஆசீர்வாதங்களையும், வரங்களையும், நன்மைகளையும் பிசாசு கொடுத்து அநேகரை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றான். ஆசீர்வாதங்கள் கிடைக்கும்போது கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதமா? பிசாசு கொடுத்த ஆசீர்வாதமா? என்று தெரியாமல் அநேகர் ஏமாந்துபோய்விடுகிறார்கள்.


இந்த பிசாசு பயன்படுத்தும் எட்டு விதமான வரங்களைக் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம்.

எசேக்கியேல் 28:12
மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக் குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,

இங்கே தீரு ராஜா என்பது பிசாசைக் குறிக்கிறது. இல்லை இல்லை தீருவின் ராஜா என்பது பிசாசைக் குறிக்கவில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள்.

தீரு என்ற தேசம் இருந்தது உண்மை. தீரு என்றால் இன்றைய சிரியா தேசம். அங்கே ஒரு ராஜா இருந்தது உண்மை. ஆனால் எசேக்கியேல் 28:12-ல் சொல்லப்பட்ட தீருவின் ராஜா என்பது பிசாசைத்தான் குறிக்கிறது.

எசேக்கியேல் 28:1-10 வரை உள்ள வசனங்கள் தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தர் சொன்ன வார்த்தை என்று உள்ளது. முதல் பத்து வசனங்கள் தீரு தேசத்தின் ராஜாவுக்காக கொடுக்கப்பட்ட வசனங்கள்.

எசேக்கியேல் தீர்க்கதரிசி பாபிலோனுக்கு சிறைபட்டுப் போனவர்களோடு இருந்த ஒருவர். இந்த நாட்களில் தீருவில் ராஜாவாக இருந்தவர் தன்னை ஒரு கடவுளாக பாவித்து ஜனங்களிடத்தில் பெருமை தேடிக்கொண்டான். அக்காலத்தில் வாழ்ந்த ராஜாக்கள் பலர் தங்களை கடவுளாக சொல்லிக்கொண்டதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடியும்.

இந்த தீரு தேசம் மத்திய தரைக்கடல் பகுதியை அண்டிய ஒரு தேசம். இந்த தீருவின் ராஜா மிகப்பெரிய படகு ஒன்றை செய்து, அதில் தன்னுடைய சிங்காசனத்தை அமைத்து, சமுத்திரத்திற்கும் கடவுள் நான் தான் என்று சொல்லிவந்தான்.

இப்படி மனுஷனாகிய தீரு தன்னை கடவுளாக நினைத்ததினால் எசேக்கியேல் மூலமாக ஆண்டவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். எசேக்கியேல் 28:1-10 வரை உள்ள வசனங்கள் மனுஷனாகிய தீருவின் ராஜாவைக் குறிக்கிறது.

எசேக்கியேல் 28:11-ல் இருந்து வாசிக்கும்போது இங்கே சொல்லப்பட்ட தீருவின் ராஜா என்பவர் ஒரு மனிதனாய் இருக்க வாய்ப்பு இல்லை. இது பிசாசைக் குறிக்கிறது.

எசேக்கியேல் 28:15,16
15. நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவங்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டது மட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
16. உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய். ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேரூபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.

கேரூபாய் இருந்தாய் என்றெல்லாம் இந்த வசனங்களில் வாசிக்கிறோம். அப்படியானால், 11-ம் வசனத்திலிருந்து வரும் தீருவின் ராஜா என்பது தீரு பட்டணத்தில் உள்ள ராஜாவைக் குறிக்கவில்லை, பிசாசானவனைக் குறிக்கிறது.

இந்த எசேக்கியேல் 28-ம் அதிகாரத்தில் பிசாசுக்குக் கொடுக்கப்பட்ட எட்டு வரங்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. அதைக் குறித்து தியானிப்போம்.


1. விசித்திரமாய் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்
எசேக்கியேல் 28:12
நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்

பிசாசானவன் முன்னே கர்த்தருடைய முத்திரை மோதிரமாக இருந்தவன்.

ராஜாக்கள் காலத்தில் ராஜாக்கள் தங்கள் கையில் உள்ள பத்து விரல்களிலும் மோதிரங்கள் அணிவார்கள். வலது கரத்தின் மோதிர விரலில் ஒரு பெரிய மோதிரத்தை அணிந்திருப்பார்கள், அதுதான் முத்திரை மோதிரம்.

அக்காலத்தில் ஓலைகளில் தான் சட்டங்களை எழுதுவார்கள். சட்டங்கள் எழுதப்பட்ட பின்பு அதை ராஜாவிடம் கொண்டு வருவார்கள். ராஜா அந்த ஓலையில் தனது முத்திரை மோதிரத்தை அழுத்திப்பதிப்பார். ராஜாவின் மோதிரம் பதிக்கப்பட்ட சட்டம் மாத்திரமே செல்லுபடியாகும்.

அப்படி எழுதப்பட்ட சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. ராஜா ஒருவேலை சட்டத்தை மாற்ற நினைத்தால், வேறொரு ஓலையில் இந்த சட்டத்தை நான் செல்லாமல் போகப்பண்ணுகிறேன் என்று எழுதி அதில் ராஜா தன் முத்திரையைப் பதிக்க வேண்டும்.

ராஜாவுடைய அனைத்து அதிகாரங்களும் அவருடைய முத்திரை மோதிரத்தில் தான் இருக்கிறது.

ஆண்டவர் விழுந்துபோன தூதனை முத்திரை மோதிரமாக வைத்திருந்தார். அதாவது, அனைத்து அதிகாரங்களையும் ஆண்டவர் அவனுக்குக் கொடுத்திருந்தார்.

இந்த தூதனுக்குக் கீழ் தான் மற்ற அனைத்து தூதர்களும் இருந்தார்கள். காபிரியேல், மிகாவேல் தூதர்களும் கூட இந்த தூதனுக்கு கீழ் இருந்தவர்கள்.

சாத்தானுக்கு எசேக்கியேல் புத்தகத்தில் தீருவின் அதிபதி என்றும், தானியேல் புத்தகத்தில் பெர்சியாவின் அதிபதி என்று எழுதப்பட்டுள்ளது.

தானியேல் புத்தகமும், எசேக்கியேல் புத்தகமும் யூதர்கள் பாபிலோனிலே 70 ஆண்டுகள் அடிமைகளாக இருந்த போது எழுதப்பட்டது. அதாவது கி.மு. 586-ம் ஆண்டிற்கும் கி.மு.516-ம் ஆண்டிற்கும் இடையே எழுதப்பட்டது.

இந்த நாட்களில் சாத்தான் என்ற பெயர் புலக்கத்தில் இல்லை. அக்காலத்தில் சாத்தானைக் குறிப்பிட பயன்படுத்திய சொல்ல என்னவென்றால், அந்த நாட்களில் யார் உலகத்தை கொடுமையாய் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களைத் தான் சாத்தானுக்கு உவமையாக பயன்படுத்துவார்கள்.

எசேக்கியேல் இரண்டாம் உலகப்போரின் நாட்களில் இருந்திருப்பாரானால், ஆண்டவர் எசேக்கியேலிடம் “ஜெர்மனியின் ராஜாவிற்கு நீ சொல்லவேண்டியது என்னவென்றால்” என்று தான் சொல்லியிருப்பார். ஜெர்மனின் அதிபதி அடால்ப் கிட்லர். கிட்லர் என்பவர் சாத்தான் அல்ல, ஆண்டவர் கிட்லரை சாத்தானுக்கு உவமையாக சொல்லியிருப்பார்.

எசேக்கியேலின் காலத்தில் மிகவும் கொடிய, பைத்தியக்காரனான ராஜா தீருவின் ராஜா. எனவே தான், ஆண்டவர் சாத்தானைக் குறிக்கும்போது தீருவின் ராஜாவை ஒப்புமைப்படுத்தி கூறுகிறார்.


ஆண்டவர் விழுந்துபோன தூதனுக்கு ஆதியிலே அதிகாரத்தைக் (முத்திரை மோதிரம்) கொடுத்திருந்தார். அதே ஆண்டவர் நமக்கும் இன்று அதிகாரத்தைக் கொடுக்கிறார்.

அதிகாரம் என்பது ஒரு சிறந்த முறை. அதிகாரம் இல்லையென்றால், ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்.

குடும்பத்திற்கு அதிகாரியாக கணவனையும், சபைக்கு தலைவராக மூப்பர்களையும், மேய்ப்பர்களையும், அப்போஸ்தலர்களையும், தேசத்தை ஆளுவதற்கு சிலருக்கு சில அதிகாரத்தையும் கர்த்தர் கொடுக்கிறார்.

ஒரு குடும்பமாய் இருந்தாலும், நிறுவனமாய் இருந்தாலும், சபையாய் இருந்தாலும், எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அதிலே ஒழுக்கம் காணப்பட வேண்டுமானால், அதற்கு அதிகாரம் அவசியம்.

அதிகாரம் என்றால் பதவியைக் குறிக்கும். பதவியில் இருப்பவர்களால் தான் அதிகாரம் செலுத்த முடியும். எல்லா ஆண்களும் தலைவர் என்ற பதவியை அடைய முடியும். எப்போது என்றால், திருமணத்திற்கு பின்பு, திருமணம் செய்தால் மாத்திரமே அவர் குடும்பத்தின் தலைவர் என்ற அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்படுகிறது.

ஒரு ஆணுக்கு குடும்பத்தலைவர் என்ற பதவி வேண்டுமானால், அவருக்கு திருமணம் என்ற தகுதி இருக்க வேண்டும். அதைப்போலவே நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பதவியை கொடுக்க கர்த்தர் விரும்புகிறார். அதற்கு நாம் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆண்டவர் ஆட்டுக்கும் மாட்டுக்கும் வாலை அளந்து வைத்திருக்கிறார் என்று உலகத்தாரே சொல்லுகிறார்கள். நம்முடைய ஆண்டவர் யாருக்கு, எதை, எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று நன்றாகத் தெரிந்தவர். நாம் அதற்கு தகுதியாய் இருக்கும்போது ஆண்டவர் நமக்கு அதை கொடுக்க ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார்.


பதவி ஆசை இன்றைக்கு எல்லா மனிதர்களுக்கும் உண்டு. சில குடும்பங்களில் மனைவிமார்களுக்கு பதவி ஆசை வந்து, குடும்பத்தையும், கணவனையும் அவர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

நாம் உயர் பதவிகளுக்கு ஆசைப்படுவது தவறல்ல. ஆனால் பதவி உயர்வு கர்த்தரால் நமக்கு கொடுக்கப்பட வேண்டும். நாமாக பதவியை எடுத்துக்கொள்ளக் கூடாது.

இக்காலத்தில் நேற்று இரட்சிக்கப்பட்டு, இன்று ஞானஸ்நானம் எடுத்து, நாளை தங்களை முழுநேர ஊழியராகவும், மறுநாள் தங்களை சபையின் மேய்ப்பராகவும் நினைத்துக்கொண்டிருக்கிற ஊழியர்களை பார்க்க முடிகிறது.

ஆண்டவர் நம்மை ஊழியத்திற்கு அழைக்கிறார் என்றால், அதற்கான நேரம் வரும்வரை நாம் காத்திருக்க வேண்டும். உடனே ஊழியப்பொறுப்புகள் வேண்டும், மேய்ப்பனாக வேண்டும் என்று அநேகருக்கு ஆசை.

இப்படிப்பட்ட பதிவி ஆசை வரும்போது யாராவது நம்மிடம் வந்து, காலம் வரும்வரை காத்திருங்கள், கர்த்தர் ஏற்ற நேரத்திலே கொடுப்பார் என்று சொன்னால், அவர்களைப் பார்ப்பதற்கு எதிரிகளைப்போல் தோன்றுவார்கள்.

கடவுள் என்னை அழைத்திருக்கிறார், இவர் என்னை காத்திருக்கச் சொல்லுகிறாரே, ஆண்டவரே இவர் என் ஊழியத்திற்கு தடையாக இருக்கிறார், இவரை அகற்றும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு.

கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்திருந்தாலும், அவர் நம்மை உயர்த்தும் வரை அவருடைய பலத்த கரத்திற்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். ஏற்ற சமயத்தில் கர்த்தர் நம்மை உயர்த்துவார்.

நாம் ஆசைப்பட்ட பதவி உயர்வு நமக்கு கிடைக்கவில்லை என்று நாம் கலங்குவோமானால், அந்த நேரத்தில் பிசாசானவன் ஒளியின் தூதன் வேஷம் தரித்து, தந்திரமான முறையில் அந்த பதவி உயர்வை கொடுக்கப் பார்ப்பான். நான் அசைப்பட்ட பதவி உயர்வுதானே இது, அப்படியானால் கர்த்தர் தான் இந்த பதவி உயர்வைக் கொடுத்தார் என்று நினைத்தால், அது உண்மை அல்ல, நம்மை திசைதிருப்பும்படியாக சாத்தான் விரிக்கும் வலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊழியம் செய்ய தாலந்து இருந்தால் மாத்திரம் போதாது, அதற்கான அழைப்பு, அர்ப்பணிப்பு, அபிஷேகம் இருக்க வேண்டும்.


பந்தி விசாரிப்புக்காரர்கள்
அப்போஸ்தலர்கள் எப்படி ஒருவரை ஊழியத்திற்கு ஏற்படுத்தினார்கள் என்று பார்ப்போம்.

கிரேக்க கலாச்சாரத்தில் திருமணமான ஒரு ஆண் மரித்துப்போவாரானால், அவர் தெய்வமாக மாறிவிடுவார். அவருடைய மனைவி தெய்வத்தின் மனைவியாக கருதப்படுவாள். எனவே கிரேக்கர்கள் விதவைகளை அதிகம் மதித்தார்கள். கிரேக்கர்கள் தெருக்களிலே, வழியோரங்களிலே விதவைகளைப் பார்த்தால், எழுந்து நிற்பார்கள். எல்லா காரியங்களிலும் விதவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். வரிசையில் நிற்கிறார்கள் என்றால், விதவைகள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை, அவர்கள் தெய்வத்தின் மனைவி என்பதினால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

யூதர்கள் விதவைகளை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். விதவைகளை துர்குணசாலிகளாக கருதினார்கள். வழியில் செல்லும்போது விதவைகளைப் பார்த்துவிட்டால், விட்டிற்கு திரும்பிவிடுவார்கள். அந்த காரியத்தைச் செய்ய புறப்பட மாட்டார்கள்.

இந்த கிரேக்கர்களும், யூதர்களும் இரட்சிக்கப்பட்ட பின்பு, சபையிலே பந்தி விசாரிப்பு காரியங்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. கிரேக்க விதவைகள் மதிக்கப்படவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அப்பொழுது அப்போஸ்தலர்கள் பந்திவிசாரிப்புக்காக ஏழுபேரை நியமிக்க முடிவு செய்தார்கள்.

பந்தி விசாரிப்புக்காக தெரிவு செய்யப்படுகிறவர்கள் பரிசுத்த ஆவியிலும், ஞானத்திலும் நிறைந்தவர்களாயும், ஜனங்களிடத்தில் நற்சாட்சி பெற்றவர்களாயும் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.

சாதாரண பந்தி விசாரிப்புக்கு இத்தனை ஆயத்தங்கள் இருக்க வேண்டுமானால், மேடையில் ஏறி பிரசங்கம் செய்கிறவர்களுக்கு எத்தனை அதிக ஆயத்தங்கள் இருக்க வேண்டும்.

ஊழியன் என்பவனுக்கு அழைப்பு இருக்க வேண்டும். அழைப்பு மாத்திரம் போதாது, ஊழியத்தில் அவனுக்கு அர்ப்பணம் இருக்க வேண்டும். அர்ப்பணம் இருந்தால் போதாது, மூத்த ஊழியர்கள் அவன்மேல் கை வைத்து அவனை அபிஷேகம் செய்ய வேண்டும்.

அபிஷேகம் என்றால், கீழே விழுந்து புரழுவது அல்ல. தலைமைத்துவம் அவர்கள் மேல் கை வைத்து அபிஷேகித்து அவர்களை ஊழியத்தில் ஏற்படுத்த வேண்டும்.

அழைப்பு இருந்தாலும், அர்ப்பணம் இருந்தாலும் தலைமைத்துவம் நம்மை அபிஷேகிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

இறைக்கு அநேக ஊழியர்களுக்கு அழைப்பு இருக்கிறது, அர்ப்பணம் இருக்கிறது, தலைமைத்துவம் அபிஷேகம் செய்யாததால், வேறு யாரேனும் கள்ள உபதேசி வந்து, எங்கள் சபைக்கு நீங்கள் உதவி ஊழியராக வாருங்கள் என்று சொன்ன உடன் கர்த்தர் தான் அழைக்கிறார் என்று புறப்படுகிறவர்களும் உண்டு.

இப்படி குறுக்கு வழியிலே ஊழியத்தைக் கொடுக்கிறவர், பதவியைக் கொடுக்கிறவர் கர்த்தர் அல்ல, பிசாசு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

புதிய வழிகள் திறக்கப்படுகிறது என்றால், அது கர்த்தர் திறக்கின்ற வழிதானா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். திறக்கப்படுகின்ற எல்லா கதவுகளும் கர்த்தர் திறக்கின்ற கதவுகள் அல்ல.

கர்த்தர் விழுந்துபோன தூதனை முத்திரை மோதிரமாக வைத்திருந்தார். அவனுக்கு பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே தேவன் நமக்கும் ஏற்ற காலத்தில், பதவிகளை கொடுக்க விரும்புகிறார். அதற்காக நாம் ஆயத்தப்படும் முன்பே, பிசாசானவன் குறுக்குவழிகளில் பதவிகளை கொடுக்கும்போது, நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

கர்த்தர் கொடுக்கின்ற பதவிகள் மாத்திரமே நிரந்தரமானது. அது தாமத்தித்தாலும் ஆசீர்வாதத்தைத் தரும். பிசாசு கொடுக்கின்ற பதவி உயர்வுகள் சீக்கிரத்தில் எல்லாம் கிடைத்துவிடும், அதன் மூலமாக ஏற்படுகின்ற பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

கர்த்தர் நமக்கு பதவியைக் கொடுக்கும்வரை, உயர்வுகளைக் கொடுக்கும் வரை காத்திருப்போம், கர்த்தர் நிச்சயம் ஒரு நாள் நம்மையும் உயர்த்துவார்.


2. பிசாசு ஞானத்தால் நிறைந்தவன்
எசேக்கியேல் 28:12
நீ ஞானத்தால் நிறைந்தவன்.

சாத்தான் என்பவன் ஒரு முட்டாள் அல்ல. அவன் ஞானத்தினால் நிறைந்தவன். சாலொமோன் ராஜா ஞானியா? சாத்தான் ஞானியா? என்றால், சாத்தான் தான் ஞானி.

சாலொமோனுக்கு கர்த்தர் ஞானத்தைக் கொடுத்தார். உன்னைப்போல ஞானி உனக்கு முன் இருந்ததும் இல்லை, உனக்குப் பின் இருப்பதும் இல்லை என்று கர்த்தர் சாலொமோனுக்கு சொன்னார்.

சாத்தானுக்கு ஞானம் கொடுக்கப்படவில்லை, அவன் உருவானது முதல் ஞானத்தால் நிறைந்தவனாய் இருக்கிறான். சாத்தானுடைய சூழ்ச்சிகள் ஞானம் சம்பந்தமாகவும் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டு வித ஞானம்
இரண்டு விதமான ஞானங்கள் உண்டு.
    1. தூய ஞானம்
    2. பிரயோக ஞானம்

தூய ஞானம் என்றால் மாற்றப்படாத ஒன்று.

பிரயோக ஞானம் என்றால், தூய ஞானத்தின் அடிப்படையில் மாற்றப்படுகின்ற ஒன்றாகும்.

மேலே இருந்து ஒரு பொருளை கீழே போட்டால் அது கீழே விழும் என்பது தூய ஞானம். இப்போது மாத்திரம் அல்ல, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொருளை கீழே போட்டாலும் அது கீழே விழும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு ஒரு பொருளை கீழே போட்டாலும் அது கீழே விழும். இது தூய ஞானம். புவி ஈர்ப்பு விசையை யாராலும் மாற்ற முடியாது.

மேலிருந்து கீழே விழும் ஒரு பொருளின் வேகத்தைக் கணக்கிட்டு, அதற்கு எதிரான திசையில் அதற்கு அதிகமான விசையை செலுத்தி, அந்த பொருள் கீழே விழாமல் பறக்க வைக்க முடியும். இது பிரயோக ஞானம். இப்படித்தான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த எண்ணைக் கூட்டினாலும் நான்கு என்று தான் வரும். இது தூய ஞானம்.

ஆனால் இந்த தூய ஞானத்தைப் பயன்படுத்தி, அதற்காக கணித வரைமுறைகளை உண்டாக்கி, நுணுக்கமான பல கண்டுபிடிப்புகள் இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இது பிரயோக ஞானம்.

இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு பிரயோக ஞானம் நிறைந்த நூற்றாண்டு. பிரயோக ஞானத்தின் மூலமாக அநேக புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் பல விதங்களில் முன்னேறிக்கொண்டு வருகிறது. (எ.கா விமானம், தொலைப்பேசி, தொலைக்காட்சி, கேமரா, ரோபோ)

இந்த காலத்தில் பிசாசானவன் தூய ஞானத்தைவிட பிரயோக ஞானத்தை சிறந்ததாக காட்டி, தூய ஞானம் பொய் என்று ஜனங்களை நம்ப வைக்கிறான்.

தூய ஞானம் என்றால், நாம் பயன்படுத்தும் பரிசுத்த வேதாகமம். இந்த வேதாகமம் எழுத ஆரம்பித்த ஆண்டு கி.மு 1500. எழுதி முடிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 100-ம் ஆண்டு. வேதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எதைச் சொன்னதோ, அதைத்தான் இன்றும் சொல்லுகிறது. வேதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

3500 ஆண்டுகளுக்கு முன்பு வேதத்தில் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று எழுதப்பட்டது. இன்றும் அது அப்படித்தான் சொல்லுகிறது. வானத்தையும் பூமியையும் படைத்தவர் கர்த்தர் என்று சொல்வது தூய ஞானம்.

ஆனால் பிரயோக ஞானத்தைப் படிக்கின்ற சிலர், தூய ஞானத்தை மறந்து, அணுவிலிருந்து வெடித்து சிதறி தான் பூமி உருவானது என்று கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

தூய ஞானத்தை ஒழிப்பதற்காக பிசாசானவன் மனிதனுடைய பிரயோக ஞானத்தைப் பயன்படுத்துகிறான். பிரயோக ஞானத்தை மாற்ற முடியும், தூய ஞானம் மாறாதது.

குடும்பத்தின் தலைவர் கணவன் என்பது தூய ஞானம். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பது பிரயோக ஞானம்.

ஆணோடு ஆண் சேர்ந்தால் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்பது தூய ஞானம். ஆணோடு ஆண் சேர்ந்து பாவம் செய்த சோதோம் கொமோரா தேசத்தை கர்த்தர் அழித்தார்.

ஆனால் பிரயோக ஞானம், சிலர் ஆணோடு ஆண் சேர்ந்து வாழும்படியான உணர்வுகளோடு தான் பிறக்கிறார்கள். அவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.

இன்னும் சில நாட்களில் பிரயோக ஞானம், சிறு பிள்ளைகளை கர்ப்பலித்து, துன்புறுத்துகிறவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்கள் பிறக்கும்போது சிறு பிள்ளைகளோடு சேரும் உணர்வுகளோடு தான் பிறக்கிறார்கள். அவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள்.  இதுதான் பிரயோக ஞானம்.

ஒரு ஊழியன் தன் மகனை ஊழியக்காரனாகவே மாற்ற வேண்டும். ஊழியன் என்பவன் தூய ஞானத்தைப் பேசுகிறவன். தூய ஞானத்தைப் போதிக்கின்ற ஊழியன், தன் மகனை பிரயோக ஞானம் கற்றுக்கொள்ள அனுமதிக்கக்கூடாது.

பிரயோக ஞானம் தேவை. நாம் இந்த உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உலகத்தில் நமக்கு பிரயோக ஞானம் அவசியமானது. ஆனால் பரலோக ராஜ்யம் செல்ல ஒரே வழி தூய ஞானம் மாத்திரமே.


3. பிசாசு பூரண அழகுள்ளவன்
எசேக்கியேல் 28:12
பூரண அழகுள்ளவன்.

பிசாசு என்றால் அவன் அருவருப்பானவன், கருப்பு நிறத்தில் இருப்பவன், தலையில் இரண்டு கொம்பு, பின்னால் நீண்ட வால் போன்ற அமைப்புகளுடன் காணப்படுவான் என்று அநேகர் நினைக்கிறார்கள்.

பரலோகத்தில் உள்ள தூதர்களில் மிகவும் அழகானவன் இந்த தூதன். கர்த்தரைப்போல் அழகுள்ளவர் யாரும் இல்லை. கர்த்தருக்கு அடுத்தபடியாக பூரண அழகு நிறைந்தவன் பிசாசானவன் என்பதை நாம் மறந்துபோய்விடக் கூடாது.

எப்படி ஞானத்தால் நிறைந்திருந்தானோ, அதைப்போலவே பூரண அழகு நிறைந்தவன் இந்த பிசாசு.

அநேக வாலிபர்கள் விழுந்துபோவதற்கு காரணமாய் இருப்பது இந்த அழகு. அநேக ஊழியர்களும் கூட இந்த அழகினால் விழுந்துபோகிறார்கள்.

நன்றாக பாடல் திறமை உள்ளவர்கள், நன்றாக ஆராதனை நடத்துபவர்கள், நன்றாக பிரசங்கம் செய்பவர்கள் கூட அழகான ஒரு பெண்னைக் கண்டதும், பாவத்தில் விழுந்து விடுகிறார்கள்.

திருமணமான சிலர் தங்கள் திருமணத்திற்கு அப்பார்பட்ட வேறு ஒரு உறவை வைத்திருப்பதற்குக் காரணம் இந்த அழகு. விருப்பமோ இல்லையோ, கணவனுக்கு தன் மனைவி மாத்திரமே உலகத்தில் சிறந்த அழகியாக தெரிய வேண்டும். அதைப்போலவே மனைவிக்கு விருப்பமோ இல்லையோ, தன் கணவன் மாத்திரமே உலகத்தில் சிறந்த அழகனாக தெரிய வேண்டும்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று உலகத்தாரே சொல்லுகிறார்கள். கர்த்தர் தான் ஆதாமுக்கு ஏற்ற துணையைக் கொடுத்தார். எனவே, அழகை கண்டு நாம் விழுந்துபோகக்கூடாது.

வெளிப்புற அழகை நாட வேண்டாம். வெளிப்புற அழகு இன்றைக்கு இருக்கும் நாளைக்கு இருக்காது. உள்ளான அழகை மாத்திரமே நாம் தேட வேண்டும்.

நம்முடைய பாவம் என்ற அசுத்தத்தை அகற்றி, பரிசுத்தம் என்ற அழகை கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிறார். உலக அழகைக் காட்டி பிசாசு நம்மை வஞ்சிக்க எத்தனிக்கிறான். நாம் மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

பிசாசு கருப்பு நிறத்தில் வரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம், அழகிய உருவத்தில் வந்து, நான் உள்ளே வரலாமா? என்று கேட்கும்போது, பிசாசிற்குத்தான் உள்ளே இடம் இல்லை, நீங்கள் உள்ளே வரலாம் என்று அனுமதி கொடுத்து விடுகின்றோம். வந்ததே பிசாசு என்பதை நாம் அறியாதிருக்கிறோம்.

பிசாசு அசிங்கமான உருவத்தில் வருவான் என்று எதிர்பார்த்து, அழகான உருவத்தில் வந்தது பிசாசு என்பதை மறந்து, இன்றைக்கு அநேகர் வீணாய்போய்க்கொண்டிருக்கிறார்கள்.


4. சாத்தான் ஏதேனில் இருந்தவன்
எசேக்கியேல் 28:13
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்.

சாத்தான் இருந்த ஏதேன் தோட்டம் என்பது ஆதாம், ஏவாள் இருந்த ஏதேன் தோட்டத்தைக் குறிக்கவில்லை. பரலோகத்தைக் குறிக்கிறது.

ஏதேன் தோட்டம் என்பது அமைதியைக் குறிக்கிறது. நம்முடைய வாழ்க்கைக்கும் அமைதி அவசியமானதாகும். ஓய்வு, உரக்கம், அமைதி இதுபோன்ற காரியங்கள் மனிதனுக்கு நிச்சயம் தேவை.

மன அழுத்தத்திலே இருப்பவர்கள், அவர்கள் வாழும் சூழலிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் கடற்கரை, ஆறு, அருவி போன்ற இயற்கை சூழ்ந்த இடங்களுக்குச் செல்வார்களானால், அவர்களுடைய மனதில் ஒரு மாற்றம் ஏற்படும்.

மனதில் நின்மதியில்லாதவர்கள் அமைதியைத் தேடி அழையும்போது, ஏதேன் என்ற அமைதியான இடத்தில் வாழ்ந்த பிசாசு அவர்களை பாவத்திற்குள் விலவைக்கிறான்.

இந்த காலத்திலும் பிசாசானவன் தியானம் என்ற முறையில் ஏதேன் தோட்ட அனுபவத்தை ஜனங்களுக்குள் கொண்டு வருகிறான். உங்கள் மனதை வெறுமையாக்குங்கள், உங்களை அமைதிப்படுத்துங்கள் என்று சொல்லி, மனிதர்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறான் பிசாசு. இந்தியா போன்ற நாடுகளில் யோகா என்ற பெயரில், பிசாசின் இந்த தந்திரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

எத்தனையோ வெளிநாட்டவரும் கூட தியானத்திற்காக, அமைதியைத் தேடி இந்தியா வருவதை நாம் பார்க்க முடிகிறது. அமைதியைத் தேடுங்கள் என்று சொல்லி, மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறான் பிசாசு.

சில கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ ஊழியர்களும் கூட யோகா செய்துகொண்டிருக்கிறார்கள். சில சபைகளில் யோகா முறை அனுசரிக்கப்பட்டு வருகிறது.


யோகா
உலகத்தில் முதல் அரசனாக ஏற்படுத்தப்பட்ட கில்காமேஸ் என்பவர் தான் முதன் முறையாக இந்த யோகாவை அறிமுகப்படுத்தினார். வேதத்தில் இவருக்கு நிம்ரோத் (ஆதியாகமம் 10:8) என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இவன் தன்னுடைய உண்மையான தாய் செமிரமிசை திருமணம் செய்த பாதகன். இவனுக்கும் இவன் தாய்க்கும் பிறந்த பிள்ளையின் பெயர் தம்மூஸ்.

வேதத்தில் தோப்பு விக்கிரகங்கள் என்று எங்கெல்லாம் வருகிறதோ, இது இந்த பாபிலோனிய தெய்வமான செமிரமிஸ் தேவதையையும், தம்மூஸ் தெய்வத்தையும் குறிக்கிறது.

நிம்ரோத் என்ற மனிதன் எனக்குள் இருக்கின்ற சக்தியை நீங்கள் பெறவேண்டுமானால், நான் உட்காரும் விதத்தில் நீங்கள் உட்கார்ந்து, நான் நிற்கும் விதத்திலும் நீங்களும் நின்று என்னைப்போலவே செய்ய வேண்டும் என்று சொன்னான். இதுதான் இப்போது யோகாசனம் என்று சொல்லுகிறோம்.

நிம்ரோத்திற்கு பின்பு பாபேல் கோபுரம் கட்டும் காலத்திலே மொழிகள் சிதறடிக்கப்பட்ட போது, மொகஞ்சதாரோ, ஹரப்பா பிரதேசத்திற்கு போனவர்கள், இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்து வந்தார்கள்.

பிற்காலத்தில் ஆரியர்கள் (ஜெர்மன் தேசம்) அந்த மொகஞ்சதாரோ, ஸரப்பா நாகரீக மனிதர்களோடு சேர்ந்து, இந்த யோகாசனத்திற்கு ஏற்ற மூன்று தெய்வங்களை [பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் (சிவன்)] உருவாக்கி, யோகாவின் தெய்வம் என்று பெயரிட்டார்கள். இதைத்தான் தமிழில் யோகேஸ்வர் என்று சொல்லுகிறோம்.

யோகா என்பது தவறான உறவு முறை கொண்ட ஒரு மன்னனால் உருவாக்கப்பட்டது. இன்று அமைதியைத் தேடுங்கள் என்ற பெயரில் யோகாசனம் உலகம் முழுவதும் பறவிக்கொண்டிருக்கிறது.

சரீரத்தில் பெலவீனமா? குடும்பத்தில் குழப்பமா? வேலை ஸ்தலங்களில் நின்மதியில்லையா? எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு ஒரே தீர்வு இந்த அமைதி. அதாவது யோகாசனம் என்று கற்றுக்கொடுக்கிறார்கள்.

எந்த பிரச்சனை இருந்தாலும் எல்லாவற்றையும் மறந்து உங்களை வெறுமையாக்குங்கள், என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது.

ஒரு மனிதனிடமிருந்து பிசாசு புறப்பட்டு, மீண்டும் வரும்போது அவன் வெறுமையாய் இருப்பானானால், இன்னும் ஏழு பிசாசுகளை கூட்டிக்கொண்டுவந்து அவனுக்குள் பிரவேசிக்கும் என்று இயேசு சொல்லுகிறார். (மத்தேயு 12:43-45)

வேதத்திலே தியானம் என்று சொல்லுவது ஜெபம் என்று சொல்லுவது நம்மை வெறுமையாக்குவது அல்ல, நம்மை நிரப்புவது. இரவும் பகலும் வேதத்தை தியானித்துக்கொண்டிரு (யோசுவா 1:8) என்றால், வசனத்தால் உன்னை நிரப்பு என்று பொருள்.

பிசாசு ஏதேன் என்ற அமைதியான இடத்தில் இருந்தவன். அமைதியைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். எனவே யோகாசனம் என்ற பெயரில், ஜனங்களை அமைதிக்குள்ளாக, வழிநடத்துகிறான்.

யோகாசனம் என்பது ஆண்டவர் அருவருக்கின்ற ஒரு காரியம். கிறிஸ்தவர்கள் ஒருபோதும் யோகாசனத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.


5. பிசாசு செல்வத்தில் நிறைந்தவன்
எசேக்கியேல் 28:13
பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் என்னை மூடிக்கொண்டிருக்கிறது.

பிசாசு தங்கத்தினாலும், நவரத்தினங்களாலும் (ஒன்பது இரத்தினங்கள்) நிறைந்தவன். செல்வத்தினால் நிறைந்தவன் பிசாசு. ஐசுவரியத்திற்கு அவனிடம் குறைவில்லை.

பிசாசு ஏழை என்று நினைக்க வேண்டாம். அவன் ஐசுவரியத்தினால் நிறைந்தவன். கர்த்தர் அவனுக்கு சகல ஐசுவரியத்தையும் கொடுத்திருந்தார்.

அனைத்து ஐசுவரியமும் அவனிடம் இருந்தாலும், அவன் சில நேரங்களில் ஒன்றுமில்லாதவன் போல் நடிப்பான்.

பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாயிருக்கிறது. (1 தீமோத்தேயு 1:6) பணம் தீமை அல்ல. பண ஆசை தான் தீமையை கொண்டு வருகிறது.

தூதனுக்கே ஆண்டவர் பணத்தைக் கொடுப்பாரானால், நமக்கு கொடுக்காமல் இருப்பாரா? நிச்சயம் நமக்கும் கர்த்தர் ஐசுவரியத்தைக் கொடுப்பார்.

யார்? யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ? அவர்களுக்குத் தகுந்ததை கர்த்தர் அவர்களுக்குக் கொடுப்பார்.

பிசாசானவன் பண ஆசையை மனிதர்களுக்கு தூண்டிவிட்டு, போட்டி மனப்பான்மையை உண்டுபண்ணுவான்.

ஒருவரிடத்தில் புதிய கார் இருந்தால், எனக்கும் அந்த கார் வேண்டும். ஒருவர் பெரிய மாடிவீடு வாங்கிவிட்டால் நானும் வாங்க வேண்டும். இப்படியாக பண ஆசையை, போட்டி மனப்பான்மையை மனிதர்களிடத்தில் விதைக்கிறான் பிசாசு.

பிசாசானவன் சபைகளுக்குள்ளும் போட்டி மனப்பான்மையை, பண ஆசையை கொண்டுவருகிறான். மற்ற சபைகளில் இருக்கின்ற அனைத்து பொருட்களும், எங்கள் சபையிலும் இருக்க வேண்டும் என்ற போட்டியை உண்டு பண்ணுகிறான் பிசாசு.

எங்களிடம் பணம் அதிகமாக இருக்கின்றது என்று மற்றவர்கள் அறிந்துகொள்ளும்படியாகவே சிலர் பொருட்களை உயர்ந்த விலையில் வாங்குவார்கள்.

சில ஊழியர்கள் பண ஆசையின் நிமித்தமாக விசுவாசிகளிடத்தில் காணிக்கை கொடுங்கள் கொடுங்கள் என்று சொல்லி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழியர்கள் ஒருபோதும் பணத்தின் மீது ஆசை வைக்கக்கூடாது. ஊழியம் என்பது நம்முடைய வேலை அல்ல, கர்த்தருடைய வேலை. கர்த்தர் ஏற்ற நேரத்தில் ஊழியத்தின் தேவைகள் அனைத்தையும் சந்தித்து, நேர்த்தியாய் நம்மை வழிநடத்துவார்.

நன்றாக அபிஷேகத்தில் நிறைந்து ஊழியம் செய்பவர்களும் கூட, பணத்தின் மீது ஆசை வைத்து பின்வாங்கிப் போய்விடுகிறார்கள். பிசாசு செல்வத்தினால் நிறைந்தவன், பண ஆசை மூலமாக நம்மை பாவத்தில் வில வைப்பான்.


6. பிசாசு இசையினால் நிரைந்தவன்
எசேக்கியேல் 28:13
சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும், உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

ஆண்டவர் இந்த தூதனை சிருஷ்டிக்கும்போதே மேல வாத்தியங்களையும், நாத வாத்தியங்களையும் கொடுத்திருந்தார்.

நாகசுரம் என்ற பதம் எபிரெயு மொழியில் இல்லை. உண்மையான எபிரெயு மொழியில் கர்த்தர் அந்த தூதனுக்கு மேல வாத்தியங்கைளையும், நாத வாத்தியங்களையும் கொடுத்தேன் என்றே கூறுகிறார்.

இசையில் தாளம், ராகம் என்ற இரண்டு உண்டு. இந்த இரண்டையும் கர்த்தர் அந்த தூதனுக்கு கொடுத்திருந்தார்.

பிசாசானவன் இசை நிறைந்தவன். ஆண்டவருடைய பாடல்கள் பாடுவதற்கும் இசை பயன்படுத்தப்படுகிறது. எவ்வளவு பாடுபட்டு கிறிஸ்தவ இசை உருவாக்கப்பட்டாலும், அதைவிட ஒருபடி மேல் தான் உலக இல்லை இருக்கிறது.

சாத்தான் இந்த உலகத்தை வஞ்சிக்க பயன்படுத்தும் மிக முக்கியமான ஆயுதம் இந்த இசை. இந்த இசையின் மூலமாக பிசாசு அநேக கிறிஸ்தவர்களையும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறான்.

நாம் இசையை வாசிக்கும்போதும், இசையை கேட்கும்போதும் மிகவும் கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். கர்த்தர் இசை இசைக்கும் திறமை கொடுத்திருப்பாரானால், அதை கர்த்தருக்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.

உலக பெருமைக்காக, புகழுக்காக பாடுகிறவர்கள் ஒருபோதும் கர்த்தருடைய வார்த்தையைப் புகழ்ந்து பாட அனுமதிக்கப்படாக்கூடாது.

சில கிறிஸ்தவ ஊழியர்களும் தாங்கள் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் அநேகர் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக உலக மனிதர்களை மேடைகளில் ஏற்றுகிறார்கள்.

இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்ற ஊழியனே மேடை ஏறும்போது அதற்கான ஆயத்தத்தோடு மேடை ஏற வேண்டும். ஆனால் சில ஊழியர்கள் தங்கள் நிகழ்ச்சியின் பெயர் பெருமைக்காக சினிமா இசைக்கலைஞர்களையும், உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற மனிதர்களையும், இரட்சிக்கப்படாதவர்களையும் மேடைகளில் ஏற்றுகிறார்கள்.

சில இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் நான் உலகத்திற்காக பாடுவேன் அது என்னுடைய தொழில், கிறிஸ்துவுக்காகவும் பாடுவேன் அது என்னுடைய பக்தி என்று சொல்லுகிறார்கள்.

அப்படியானால் விபச்சாரியும் அப்படிச் சொல்லலாமே. உலகத்தில் அநேக நாடுகளில் விபச்சாரம் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன், இருந்தாலும் விபச்சாரம் என்னுடைய தொழில் நான் அதை செய்வதினால் என்ன தவறு என்று ஒருவர் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வோமா?

திருட்டுத் தொழில் செய்பவன், இதுதான் என்னுடைய தொழில். நான் இரட்சிக்கப்பட்டாலும், என்னுடைய தொழிலைத்தான் செய்வேன் என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வோம்.

திருடன் ஆண்டவரே இன்று நான் திருடப்போகிறேன், பெரிய தொகையை எனக்கு காண்பியுங்கள். நான் திருடும்போது யாரும் என்னை பார்க்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஜெபித்தால் கர்த்தர் தான் பதில் கொடுப்பாரா? அதைப்போலவே சினிமா துறையில் இருந்துகொண்டு ஒருவர் கர்த்தரை தேட முடியாது.

கர்த்தர் கொடுத்திருக்கின்ற திறமைகளை நாம் உலக புகழுக்காக, பெருமைக்காக பயன்படுத்தக்கூடாது. குறிப்பாய் இசையில் நாம் மிக கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். கர்த்தரைப் புகழ்ந்து பாடுவதற்கு மாத்திரமே நாம் நம்முடைய இசை திறமையை பயன்படுத்த வேண்டும்.

கிறிஸ்தவர்கள் பக்தி நிறைந்த கிறிஸ்தவ பாடல்களை மாத்திரமே கேட்க வேண்டும். இசை நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஒரு வாலிபன், ஒரு நாள் இரவு தன் தாய் தகப்பனை கொலை செய்துவிட்டான். குடும்பமாக ஆலயத்திற்கு வருகிறவர்கள், ஆண்டவரை ஆராதிக்கிறவர்கள் அவர்களுடைய குடும்பத்தில் இப்படி ஒரு கோர நிகழ்வு.

அந்த மகனை விசாரித்துப் பார்த்ததில், அவன் அதிகமாக கேட்டுக்கொண்டிருந்த பாடல் வரிகள் அவ்வளவு மோசமானதாக இருந்திருக்கிறது. இந்த இசையினால் அவன் கவரப்பட்டு, தன் தாய் தகப்பனையே கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டான்.

நாம் இசையில் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும். சாதாரணமாக, இசை தான் என்று நாம் நினைத்துவிட வேண்டாம். இசையின் மூலமாக நம்முடைய ஆழ்மனதை சாத்தான் கட்டுப்படுத்துவான். எந்த இசையையைக் கேட்கிறோம் என்பதில் நாம் மிக கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

இன்றைய கிறிஸ்தவ உலகில் ஆராதனை என்ற பெயரில் உலக இசையும், உலக நடனமும், உலக கவர்ச்சியும் கொண்டுவரப்பட்டுள்ளது. பிசாசானவன் ஆதியில் ஆராதனை வீரனாக இருந்தவன். எந்த ஆரானையை கர்த்தர் வெறுக்கிறார் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கர்த்தர் அருவருக்கின்ற ஆராதனையையும், பாடல்களையும் கிறிஸ்தவ ஊழியர்கள் மூலமாகவே கொண்டுவருகின்றான் பிசாசு. கிறிஸ்தவர்கள் இசையில் மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.


7. பிசாசு காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட கேரூப்
எசேக்கியேல் 28:14
நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேரூப்.

கேரூப் என்பது எபிரெய மொழி வார்த்தை. இதன் அர்த்தம் பட்டயம். பட்டயம் என்பது துணிவு, வீரம் இதை அடையாளப்படுத்துகிறது. பிசாசானவன் ஒரு வீரனாக படைக்கப்பட்டவன்.

பிசாசானவன் அந்த துணிவு, வீரத்தை தவறான விதத்தில் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து, கோபத்தை உண்டு பண்ணி மனிதர்களை கொலையாளியாக மாற்றுகிறான்.

தங்களை தாங்களே மனித வெடிகுண்டுகளாக மாற்றி மக்களை அழிப்பவர்களை பார்க்கிறோம். இதிலே என்னுடைய வீரம் விளங்குகிறது என்று நினைக்கிறார்கள்.

அநேக சிறுவர்கள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு நானும் வீரன் என்று சொல்லவதை விரும்புகிறார்கள்.

வைரஸ் போன்ற கொள்ளை நோயை உலகத்திற்குள் புகுத்திவிட்டு, எல்லா ஜனங்களையும் கொன்றுகுவித்து, நான் வீரன் என்று சொல்லும் நாடுகளையும் நாம் பார்த்திருக்கிறோம்.

கிறிஸ்தவர்களும் கூட மிகவும் துணிகரமாக பாவம் செய்து வருகிறார்கள். அதை வீரமாக நினைக்கிறார்கள். கடவுள் பயம் அற்றவர்களாக, அநேக கிறிஸ்தவர்கள் துணிகரமாக பாவம் செய்கிறார்கள்.

பிள்ளைகள் பெற்றோரிடத்தில் பேசும்போது மரியாதையோடு பேசுவதில்லை. விசுவாசிகள் மேய்ப்பரிடம் பேசும் போது மரியாதையாக பேசுவதில்லை. துணிகரமாக எதிர்த்துப் பேசுகிறார்கள்.

பிசாசானவன் தன்னுடைய துணிவை தவறான விதத்தில் மக்களுக்கு கற்றுக்கொடுத்து, பாவம் செய்ய தூண்டுகிறான். நாம் வீரம் என்று நினைத்து செய்யும் காரியங்களில் மிகவும் கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.


8. பிசாசு மகிமை நிறைந்தவன்
எசேக்கியேல் 28:14
தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன். அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.

கர்த்தர் மற்ற தூதர்களைவிட இந்த விழுந்துபோன தூதனுக்கு அதிக மகிமையை கொடுத்திருந்தார். மகிமை என்றால் உயர்வைக் குறிக்கிறது. தூதனுக்கு மகிமையைக் கொடுத்த ஆண்டவர் மனிதர்களுக்கு கொடுக்காமல் இருப்பாரா? நிச்சயம் கொடுப்பார்.

நான் உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன். நீ கீழாகாமல் மேலாவாய் என்று ஆண்டவரே நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். (உபாகமம் 28:14)

ஆண்டவர் விசுவாசிகளுக்கு மகிமையைக் கொடுக்கிறார், ஊழியர்களுக்கு மகிமையைக் கொடுக்கிறார். தாவீதையும் கர்த்தர் உயர்த்தினார்.

தாவீது இஸ்ரவேலை அரசாண்ட போது தேசம் செழித்திருந்தது. தாவீதின் எல்லா காரியத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்தி வைத்திருந்தார். இசையிலே, வீரத்திலே, பணத்திலே, பதவியிலே தாவீது மகிமையடைந்திருந்தார். அப்படிப்பட்ட தாவீது, கர்த்தாவே என் மகிமை உம்மைப்பாடும் என்று சொல்லுகிறார். (சங்கிதம் 108:1) என் மகிமை எனக்கு அல்ல கர்த்தாவே உமக்கே உரியது என்று தாவீது சொல்லுகிறார்.

கிறிஸ்தவர்கள் மாத்திரம் அல்ல, அநேக ஊழியர்கள் மகிமையைத் தேடி ஓடுகிறார்கள். மகிமையை கர்த்தர் கொடுக்க வேண்டும். ஆனால் அநேகர் ஜனங்கள் என்னை மதிக்க வேண்டும், ஜனங்கள் என்னை கனப்படுத்த வேண்டும் என்று சொல்லி, தங்களுக்கான மகிமையை உயர்வை தாங்களே தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களுக்கான மகிமையை தாங்களே தேட விரும்பி அநேகர் தங்களுடைய பெயருக்கு முன்னால் பட்டங்களையும், பெயருக்கு பின்னால் படிப்புகளையும் போட்டுக்கொள்ளுகிறார்கள்.

நமக்கு மகிமையைக் கொடுக்கின்றவர், உயர்வைக் கொடுக்கின்றவர் கர்த்தர் மாத்திரமே. குறுக்குவழிகளில் நாம் மகிமையைத் தேடாமல், கர்த்தர் நம்மை உயர்த்தும் வரை அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருக்க வேண்டும்.

பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்படுகின்ற நம்முடைய எதிராளியின் குணாதிசயங்களைக் குறித்து அறிந்து கொண்டும்.  பிசாசு விரும்புகின்ற காரியங்கள், ஆண்டவர் அருவருக்கின்ற காரியங்கள் நம்மிடத்தில் உள்ளதா? என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்....!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.