Type Here to Get Search Results !

அகில உலக ஜெப தினம் மார்ச் 1, 2024 | International Day of Prayer March 1 2024 | Women's Fellowship | Order of Service | Jesus Sam

அகில உலக ஜெப தினம்
பாலஸ்தீன அகில உலக ஜெபக் குழுவால் தயாரிக்கப்பட்டது
மார்ச் 1, 2024
”நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில்… அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள்“ (எபேசியர் 4:1-7)

ஆரானையின் நோக்கம்:
இவ்வாராதனை, பல்வேறு இடர்பாடுகள், ஒடுக்குமுறைகளின் மத்தியில் ஒருவரையொருவர் அன்பினால் அரவணைக்க அழைக்கிறது. எபேசியர் 4:1-7ல் அடங்கியுள்ள திருமறைப் பகுதியை மையமாகக் கொண்டு ஒருங்கிணைந்த கிறிஸ்வப் பாலஸ்தீன பெண்கள் குழுவால் எழுதப்பட்டது. பாலஸ்தீன கிறிஸ்தவப் பெண்கள் துன்புறும் சூழலின் பின்னணியில், இந்த கருப்பொருளில் நாங்கள் குழுவாக சிந்தித்தோம். உலகமெங்கிலுள்ள பெண்கள், துன்ப நேரங்களில் ஒருவரையொருவர் அன்பினால் அரவணைக்க நாங்கள் ஊக்கமளிப்போம் என்று நம்புகிறோம்.

ஆயத்தம்:
பின்வரும் பாலஸ்தீனத்தின் அடையாளங்களை சேகரிப்போம்.

ஒலிவ கிளைகள் அல்லது இலை (அல்லது ஒலிவ இலையின் புகைப்படம் அல்லது பதாகை) ஒலிவ எண்ணெய்

ஒலிவ மரங்கள் ஆயிரம் ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும் தன்மை கொண்டதால், அவை வளமான நித்திய வாழ்வுக்கான அடையாளம். பாலஸ்தீனத்திலிருக்கும் ஒரு சில ஒலிவ மரங்கள், இயேசுவின் காலத்தில் இருந்தவை.

எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது பிற நாரத்தை பழங்கள்
வரலாற்று சிறப்பு மிக்க பாலஸ்தீனத்தில் நாரத்தை (Citrus) பழங்கள் வளமாக விளைந்தன. மேலும் அவை உலகமெங்கிலும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கற்றாழைச் செடிகள் அல்லது இலைகள்
கற்றாழைச் செடிகள் பாலஸ்தீனத்திலிருந்து வந்தவை அல்ல. ஆனால் பல ஆண்டுகளாக அவைகள் அத்தேசத்தில் உள்ளன. கற்றாழை பாலஸ்தீன கிராமங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக மாறிவிட்டது.

1948-ஆம் ஆண்டிலே பல கிராமங்கள் அழிக்கப்பட்ட பின்பும், ஒன்றுமில்லாத அந்த இடத்திலே கற்றாழைச் செடிகள் மட்டும் இருந்தன. கடினமான சூழ்நிலையிலும் மீண்டு உயிர்வாழ இயலும் என்பதற்கு அடையாளமாக காற்றாழைச் செடிகள் உள்ளன. அழிந்து போனாலும் கற்றாழை உயிர்வாழும் தன்மையுடையது. மேலும், துன்பத்தின் மத்தியிலும், வலியின் மத்தியிலும் அழகு மற்றும் வாழ்வாதாரச் சின்னமாக கற்றாழையின் மலரும் பழங்களும் இருக்கின்றன.

மல்லிகை, கசகசாப் பூக்கள் மற்றும் பிற மலர்கள்
மல்லிகை மற்றும் கசகசாய் பூக்கள் பாலஸ்தீனர்களுக்கு வளமும், அர்த்தமுமுள்ளவைகள். மக்களை ஆறுதல்படுத்தி ஒன்றிணைக்கும் தேநீரை தயாரிக்க மல்லிகை பயன்படுத்தப்படுகிறது. தங்கள் தேசத்துக்காக வாழ்வைத் தந்த அருமையானவர்களை கசகசாப் பூக்கள் பாலஸ்தீனர்களுக்கு நினைவுபடுத்தும்.

கூடைகள்
நாரத்தைப் பழங்கள், கற்றாழைச் செடிகள் அல்லது இலைகள், மலர்களை வைக்க கூடைகளை பயன்படுத்தலாம்.

ஆரானைக்கு முன்
(சபையார் வருகையின் போது ஆலய மணி ஒலிக்கும்)
(சபையார் உள்ளே நுழையும்போது, ஒரு ஒலிவ கிளை அல்லது இலையை கொடுக்கலாம்)

பவனி
(‘’I Urge You” என்ற பாடலின் இசையை மீட்டலாம்)

(எலுமிச்சை, ஆரஞ்சு, ஒலிவ இலை, ஒலிவ எண்ணெய், கற்றாழை இலைகள், மல்லிகை போன்ற மலர்கள் அடங்கிய கூடைகளுடன் தலைவர்கள் பவனியை முன் நடத்தலாம். பவனியின் முடிவில் அக்கூடைகளை பலிபீடத்திலோ அதற்கு அருகிலோ வைக்கலாம்)

வாழ்த்து
சாலோம். சமாதானம் உங்களோடிருப்பதாக.

முப்பது வருடங்களுக்கு முன்னர், “வாருங்கள், காணுங்கள், செயல்படுங்கள்“ என்ற கருத்தில் எழுதும்படியாய் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அகில உலக ஜெப தின பெண்கள் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கிறிஸ்தவ மார்க்கம் பிறந்த இடம் பாலஸ்தீனம் என்பதால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அகில உலக ஜெப தின பெண்கள் குழுவினருக்கு இந்த வருடத்திற்கான நிகழ்ச்சியை வடிவமைக்க மறுபடியும் வாய்ப்பளிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருங்கிணைந்த கிறிஸ்தவ பெண்கள் குழுவினர் கடந்த நான்கு வருடங்களாக ஜெபித்து, எபேசியர் 4:1-7ன் அடிப்படையிலான “நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில்… அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள்“ என்ற கருப்பொருளில் சிந்தித்து இதை எழுதியிருக்கிறார்கள்.

ஆராதனை நடத்துபவர்: திரித்துவ தேவனான, படைப்பாளர், குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம்.

சபையார்: ஆமென்

ஆராதனை நடத்துபவர்: கர்த்தர் உங்களோடிருப்பாராக.

சபையார்: அவர் உங்களோடுமிருப்பாராக.


ஆரம்ப ஜெபம்:
ஜெபம் செய்வோம்
திரித்துவ தேவனே, நீர் வாழ்ந்த, உபதேசித்த நிலத்திலே நாங்கள் பயணிக்கும்போது, எங்களோடு வாரும். இப்போது இந்த தேசத்திலே வாழ்பவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை உணர எங்கள் கண்களைத் திறந்தருளும். உலகமெங்கிலும் துன்புறுவாரோடு இணைந்து ஜெபிக்கவும், செயல்படவும் எங்களுக்கு பெலனையும், தைரியத்தையும் அருளும். ஆமென்.

சமாதானத்துக்கான ஜெபம் – ”யாராபாசலாமி“ (சமாதானத்தின் தேவன்)

(“யாராபாசலாமி“ – என்று யாவரும் பாடுவோம்)

ஆராதனை நடத்துபவர்: சங்கீதம் 85-ல் உள்ள வசனங்களைக் கொண்டு தொடர்ந்து ஜெபிப்போம். கர்த்தாவே, எமது தேசத்தின் மேல் பிரியம் வைத்து யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.

சபையர்: உமது ஜனத்தின் அக்கிரமத் மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.

ஆராதனை நடத்துபவர்: உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு உமது கோபத்தின் எரிச்சலை விட்டுத் திரும்பினீர்.

சபையார்: எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டு வாரும். எங்கள் மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.

ஆராதனை நடத்துபவர்: என்றைக்கும் எங்கள் மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?

சபையார்: உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?

ஆராதனை நடத்துபவர்: கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச் செய்யும்.

சபையார்: கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன். அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார். அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.

ஆராதனை நடத்துபவர்: நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.

சபையார்: கிருபையும், சத்தியமும் ஒன்றையென்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

ஆராதனை நடத்துபவர்: சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.

சபையார்: கர்த்தர் நன்மையானதைத் தருவார். நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.

ஆரானை நடத்துபவர்: நீதி அவருக்கு முன்பாகச் செல்லும்

சபையார்: அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.

அனைவரும் மறுமுறை ”யாராபாசலாமி” என்று பாடுவோம்.


ஆராதனைக்கு அழைப்பு
ஆராதனை நடத்துபவர்: அன்போடும், ஐக்கியத்தோடும் வழிபட நம்மை ஒன்றிணைக்கும் தேவனைத் துதிப்போம்.

சபையார்: கருத்துக்களிலும், இறையியல் விளக்கங்களிலும் உள்ள வேறுபாடுகளைக் கடந்து திரித்துவ தேவனில் ஐக்கியப்படுவோம்.

ஆராதனை நடத்துபவர்: விசுவாசிகளின் தாழ்மை, பணிவு, பொறுமை, அன்பு போன்ற இன்றியமையாத குணங்களை நினைவுகூறுவோம்.

சபையார்: பிறரை நியாயந்தீர்க்காமல் ஏற்றுக்கொள்ள தவறின எங்கள் பெலவீனங்களையும் தோல்விகளையும் நாங்கள் அறிக்கையிடுகிறோம்.

ஆராதனை நடத்துபவர்: எங்கள் குடும்பங்களிலும் சமுதாயத்திலும் சமூகத்திலும் திருச்சபையிலும் உள்ள சவால்களைத் தாழ்மையோடும், பொறுமையோடும் எதிர் கொள்வோம்.

சபையார்: பணிவோடும் அன்போடும் நாங்கள் எல்லாவற்றையும் மேற்கொள்வோம். நாங்கள் தேவனுக்குரியவர்கள் என்பதை அறிந்து எங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருப்போம்.


சுவிசேஷ பாடம்:
யோவான் எழுதின சுவிசேஷம் 15-ம் அதிகாரத்தில், இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தனது சீஷர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

”நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.


மீட்டெழுந்ததைக் குறித்த ஒரு சம்பவம்:
ஒருவரிலொருவர் அன்பு கூறுங்கள், ஒருவரையொருவர் அன்பினால் தாங்குங்கள் என்ற இந்தக் கற்பனையை இயேசு தனது வாழ்வின் முக்கியமான தருணத்தில் கொடுத்தார்.

இன்றைய ஆராதனையில், பாலஸ்தீன கிறிஸ்தவப் பெண்களான மூவரின் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கேட்க இருக்கிறோம். ஒருவரையொருவர் அன்பினால் தாங்குங்கள் என்ற இயேசுவின் அழைப்புக்கு வல்லமையுள்ள சான்றாக ஒவ்வொரு சம்பவமும் இருக்கும்.

எலியானாரின் கதையைக் கேளுங்கள்:
எனது பெயர் எலியானார். நான் பாலஸ்தீனத்தைச் சார்ந்த கிறிஸ்தவப் பெண். புனித ஸ்தலமாகிய எருசலேமிலுள்ள “கிரேக்க ஆர்தோடேக்ஸ் சபையைச்“ சார்ந்தவள். நான் அநேகம் போர்களையும், வன்முறையையும் பார்த்திருக்கிறேன். நான் பாரம்பரியமிக்க எருசலேம் குடும்பத்திலிருந்து வந்தவள். 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் எனது கொள்ளுப்பாட்டனார் ”புனித ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் சபையை“ உருவாக்கினார். அது நகர எல்லைக்கு வெளியே வசிக்கும் கிறிஸ்தவர்கள் வழிபடுவதற்கு ஏதுவான ஒரு இடமாக அமைந்தது.

1948-ல் நக்பா என்று அழைக்கப்படும் பேரழிவில் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் பாலஸ்தீனர்கள் சிதறடிக்கப்பட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்ட காலம் வரைக்கும் அந்தச் சபை நிலைத்திருந்தது. கடுமையான குண்டுவீச்சினால் உயிர் பிழைக்க ஓடியவர்களில் எனது குடும்பமும் ஒன்று. தாய் நாட்டிற்கும், சபைக்கும் திரும்புவோம் என்ற நம்பிக்கையில் எனது குடும்பம் என் தாயின் மைத்துனர் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் அவர்கள் நம்பிக்கை இறுதிவரை கை கூடவில்லை. இப்போது எனது வீடும், புனித ஜார்ஜ் சபையும் இஸ்ரவேல் கலாச்சார மையமான “கான்பிடரேஷன் ஹவுஸ்“ ஆக மாற்றப்பட்டுள்ளது.

எங்கள் இடத்தை விட்டு எனது பெற்றோர் சிதறடிக்கப்படும் முன்பாக அவர்கள் அண்டை வீட்டிலே வசித்த யூத குடும்பம் ஒன்று சபையின் பொக்கிஷங்களான சின்னங்கள், நற்கருணை பாத்திரங்கள், பெற்றோரின் சொத்துக்கள் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்தார்கள்.

நானும் எனது சகோதரனும் வளரும்போது, எனது பெற்றோர் எங்கள் இடத்திற்குத் திரும்பிச் செல்வோம், புனிதப் பொருட்களையெல்லாம் பெறுவோம் என்ற நம்பிக்கையோடு தங்களுக்கு வாக்களித்த அயல் வீட்டாரை நினைவு கூர்ந்தார்கள். எனது பெற்றோர் எல்லாவற்றையும் இழந்தாலும் தங்கள் அயல் வீட்டாரை அன்போடு நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றியோடிருந்தார்கள். ஒருவரையொருவர் அன்பினால் எவ்வாறு தாங்குவது என்றும் நன்மை செய்தவர்களிடம் நன்றியறிதலோடு இருக்க வேண்டும் என்றும் எனது பெற்றோர் கற்றுத் தந்தார்கள்.

எருசலேமில் வாழ்ந்த பாலஸ்தீன கிறிஸ்தவப் பெண்ணாக வாழ்வை எதிர்கொண்ட நான், உள்ளுரிலும் உலகளாவிய அளவிலும் சமூகத்திற்காக முழுமையாக உழைப்பதைத் தெரிந்தெடுத்தேன்.

வாழ்வு கடினமாக இருக்கும்போதும், பிறரோடு இணைந்து வாழ்வது எவ்வளவு முக்கியமென்று எனது பெற்றோரிடமிருந்து கற்றுக் கொண்டேன். சமூகத்துக்கான எனது அர்ப்பணிப்பு நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது, துவங்கியது. எனக்கு அரேபிய மொழிக் கற்றுத் தந்த ஆசிரியர், தனது மனிதநேய பணிகளில் என்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். அவர்களது பணிவும் அன்பும் பிறருடைய வாழ்வை மேன்மைப்படுத்தும் பணியின் மீது எனக்கிருந்த மதிப்பையும், அன்பையும் பெருக்க உதவிச் செய்தது.

என் வாழ்வின் பின் நாட்களில், நான் மனிதநேயமிக்க உதவிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சமய, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தினேன். இந்தத் திட்டங்கள் மதம், இனம், பாலினம், அந்தஸ்து ஆகியவற்றைக் கடந்து அனைவருக்கும் பிரயோஜனமாயிருந்தது. எருசலேம், காசா பகுதி மற்றும் மேற்குக் கரையிலுள்ள நூற்றுக்கணக்கான பெண்கள், அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமாகத் திகழ அவர்களுக்கு உதவும் பாக்கியம் கிடைத்தது.

வாழ்வு எனக்கு எளிதானதாக அமையவில்லை. பல பின்னடைவுகள், தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கூட சந்திக்கிறேன். எனினும் மெய்யான அன்பு, புரிதல், பணிவு, தாழ்மை, பொறுமை இருந்தால் நமது சமூகம் ஒன்றிணைந்து வலுவாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

என் குழுந்தைப் பருவத்திலிருந்தே, வாழ்க்கை பலவீனமானது, சமாதானமற்றது என்பதை நான் அறிவேன். நான் எனது தாய் நாட்டை விட்டு சென்றிருக்கலாம். ஆனால் கடவுள் உன்னை நேசிப்பது போல், நீ பிறனை நேசி என்ற இயேசுவின் கட்டளையின்படி வாழ்ந்து காட்ட அங்கேயே தங்கியிருப்பதை தெரிவு செய்தேன்.

நிருப வாக்கியம்: எபேசியர் 4:1-7
பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்திலிருந்து இவ்வருடத்திற்கான கருப்பொருள் உருவானது.

“ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டது போல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கததாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது“.

அமைதியான தியானம்
அன்பினால் பிறரை தாங்க கர்த்தர் நமக்குக் காட்டும் வழிகளைக் குறித்து சிந்திப்போம்.

(2-3 நிமிடங்கள் அமைதியான தியானம்)
(அல்லது இந்த நேரத்தில் அகில உலக ஜெப தினத்திற்காக எழுதப்பட்ட வேதாகம ஆய்வுப் பகுதியைக் குறித்தும் சிந்திக்கலாம்)

கீர்த்தனை – “I Urge You“
“I Urge You” என்ற பாடல் அகில உலக ஜெப தின வழிபாட்டுக்காக பிரத்யேகமாக இயற்றப்பட்டது.


உண்மையை எடுத்துரைக்கும் ஒரு சம்பவம்
இப்போது லீனாவின் வாழ்வில் நடந்த சம்பவத்தைக் கேட்போம்.

என் பெயர் லீனா. மே 11, 2022ல், ஜெனின் என்ற பட்டணத்தில் கொல்லப்பட்ட பிரபல பத்திரிக்கையாளரான எனது அத்தை ஷிரினை இழந்தேன். எனது அத்தை ஒலிவமரக் கிளையைப் போன்றவர். பாலஸ்தீனர்கள் அனுபவித்த காரியங்களின் உண்மையை அழிக்க மிரட்டல் விடுத்த, பலவான்களை எதிர்க்கும் ஆற்றல் பெற்றர் அவர்.

எனது அத்தை ஷிரின் மரித்தபோது, பாலஸ்தீனம் ஒரு அடையாளத்தையும், ஒரு புராணத்தையும், அல் ஜசீராவின் பிரபல பத்திரிக்கையாளரையும் இழந்தது. ஆனால் எனக்கு அவர் இவை எல்லாவற்றையும் விட மேலானவர். என் ஞானஸ்நானத்தில் ஞானத்தாய் மற்றும் என் சிறந்த நண்பர். எனக்கும் அநேக பாலஸ்தீன பெண்களுக்கும் அவர் சிறந்த முன்மாதிரி. நான் வளரும்போது அவரைப் போலவே ஒரு வெற்றிகரமான தொழில்முறையாளராகவும், பட்சாதாபத்துடனும் இருக்க விரும்பினேன். கலை, அரசியல் மற்றும் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவது, நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, விடுமுறைக்கு வெளியே செல்வது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என அவரோடு நான் கழித்த தருணங்கள் அனைத்தையும் ரசிப்பேன்.

25 ஆண்டுகளாக, பாலஸ்தீன அனுபவக் கதைகளைக் கூறவும், உண்மைக்குக் குரல் கொடுக்கவும் அத்தை ஷிரின் அவர்கள் தனது வாழ்வை அர்ப்பணித்தார்கள். பாலஸ்தீனாவிலும் அரேபிய உலகின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் தொலைக்காட்சியின் வாயிலாக நுழைந்தார். அவர் பாலஸ்தீனியர்களின் இருதயத்துக்குள்ளும் நுழைந்துவிட்டார் என்பதற்கு அவரது அடக்க நாள் ஒரு சான்று.

இஸ்ரேலியப் படைகளின் அச்சுறுத்தல்களையும் மீறி ஷிரினின் சவப்பெட்டியை தோளில் சுமந்த வலிமையான, தைரியமான பாலஸ்தீனர்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

எனது அத்தை ஒரு பாலஸ்தீனிய கிறிஸ்தவர் என்பது பலருக்குத் தெரியாது. சமய மரபுகளிலே வித்தியாசங்கள் இருந்தாலும் ஒருவரையொருவர் அன்பினால் தாங்க ஷிரினின் விசுவாசம் அவரை நடத்தியது. எருசலேமில் உள்ள புனித ஸ்தலத்திற்குள் நுழைவதற்கு இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அனுமதி கிடைக்க வேண்டும் என்று அவர் போராடினார். அவர் உண்மைகளைக் கூறிய ஆக்கிரமிப்பாளர்களை அன்பினால் தாங்குவற்கு ஏதுவாக இருந்தது. உண்மையை எடுத்துரைப்பது, அன்போடு எதிர்க்கும் செயலின் ஒரு வடிவமாகும். ஏனென்றால் அது ஒடுக்குமுறையாளர்களை மனிதநேயமிக்கவராய் வாழ அழைக்கிறது.

ஒலிவ மரத்தின் கிளையைப் போன்ற ஷிரின் சொற்ப நாட்களிலே கொல்லப்பட்டாலும், அவருடைய மரபு வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அவருடைய நினைவுகள் இப்பூமியைப் பலப்படுத்தி, நாம் உண்மையை எடுத்துரைக்கவும், நீதியைக் கோரவும், நமக்குப் பெலன் கொடுக்கிறது.

கீர்த்தனை – “We walk by the Light of the Word’

அன்பினால் உண்மையைக் கூறத் துணிந்த இப்பெண்ணின் கதையைக் கேட்ட நாமும் அவர்களைப் போன்று பயணிக்க நம்மை அர்ப்பணிப்போம்.

பரிந்துரை ஜெபங்கள்
தூய ஆவியால் ஒருங்கிணைந்து கூடியிருக்கும் நாம், பெண்களுக்காகவும், உலகத்துக்காகவும், தேவையுள்ளோருக்காகவும் ஜெபிப்போம்.

“எங்கள் அழைப்புக்கு ஏற்ற வாழ்வுக்கு நேராய் எங்களை நடத்தும்“ என்று நான் கூறியவுடன் “எங்கள் ஜெபத்தைக் கேட்டளுரும் கர்த்தாவே“ என்று மறுமொழி கூற அழைக்கப்படுகிறீர்கள்.

ஜெபம் பண்ணக்கடவோம்
ஆராதனை நடத்துபவர்: நீதியுள்ள கர்த்தாவே, எங்களை ஆசீர்வதித்து சமாதானத்துக்கும் நீதிக்கும் சாட்சியாக எங்களை உருவாக்கும். உம்முடைய செயல்பாடுகளை காணும்படியாய் எங்கள் கண்களைத் திறந்தருளும். எல்லாவிதமான வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பழிவாங்குதல் ஆகியவற்றிலிருந்து எங்களைக் காத்தருளும். கல்வியும், அடிப்படை உரிமையும் மறுக்கப்பட்ட பெண்களுக்காக நாங்கள் விசேஷமாய் ஜெபிக்கிறோம். வன்கொடுமையினாலும் வன்முறையினாலும் பாதிக்கப்பட்டு துன்புறும் பெண்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். திருச்சபையும், அரசாங்கமும் பெண்களுக்கென்று பாதுகாப்பான இடங்களை உருவாக்க நாங்கள் ஜெபிக்கிறோம். பிறருக்கு உதவ எங்கள் தாலந்துகளைப் பயன்படுத்தவும், அவர்களுக்கென்று குரல் கொடுக்கவும் எங்களுக்கு உவி செய்யும். அழைப்புக்கு ஏற்ற வாழ்வுக்கு நேராய் எங்களை நடத்தும்.

சபையார்: எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.

ஆராதனை நடத்துபவர்: அகதியான கர்த்தாவே, சிறுவயதில் பெத்லகேமில் நடந்த படுகொலைக்குத் தப்பி ஓட வேண்டியதாயிருந்ததினால், அகதிகள், இடம்பெயர்ந்தவர்களின் அவல நிலையை நீர் அறிவீர். இந்த இருள் சூழ்ந்த கடினமான காலங்களில் எங்களோடு நிலைத்திருந்து எங்களுக்கு உதவி செய்யும். அகதிகளுக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் வழிகாட்டும். பாதுகாவலராயிருந்து அமைதியான இடங்களுக்கு அவர்களைக் கொண்டு செல்லும். அகதிகளின் தேவைகள் சந்திக்கப்படும்படியாய், அவர்களை ஏற்றுக்கொள்கிறவர்களின் இருதயத்தைத் திறந்து, அரசியல் தலைவர்களின் செயல்திட்டங்களை நீர் நடத்தியருளும்.

சபையார்: எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.

ஆராதனை நடத்துபவர்: எங்கள் கன்மலையான கர்த்தாவே, உம்மேல் எங்கள் வாழ்வை கட்ட நீர் எங்களுக்குக் கற்றுத்தந்துள்ளீர். வீடிழந்தவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். இஸ்ரேலிய அதிகாரிகளால் வீடுகள் அழிக்கப்பட்டு அல்லது அழிக்கப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளான பாலஸ்தீனிய குடும்பங்களோடு இணைந்து விசேஷமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த குடும்பங்களுக்கு நீதியையும், அந்த அநீதிகளுக்கு முடிவையும் நீர் அருளும். அழைப்புக்கு ஏற்ற வாழ்வுக்கு நேராய் எங்களை நடத்தும்.

சபையார்: எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.

ஆராதனை நடத்துபவர்: சமாதானத்தின் கடவுளே, இஸ்ரவேலின் ஆக்கிரமிப்புக்கு ஒரு முடிவு வரவும், நடந்து வரும் அடக்கு முறைக்கு ஒரு தீர்வு கிடைக்கவும் நாங்கள் ஜெபிக்கிறோம். கிறிஸ்தவம், யூத மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று சமயங்களின் புனித ஸ்தலமான எருசலேமுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். கிறிஸ்தவர்களாகிய நாங்கள், இயேசுவின் வழியைப் பின்பற்றி குடிமக்கள் அனைவருடனும் அன்பைப் பகிர்ந்து கொள்ள கற்றுத்தாரும். அழைப்புக்கு ஏற்ற வாழ்வுக்கு நேராய் எங்களை வழிநடத்தும்

சபையார்: எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.

ஆராதனை நடத்துபவர்: குணப்படுத்தி நிலைநிறுத்தும் ஆவியானவரே, சுகவீனமாயிருப்பவர்களுக்காகவும், மரித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவும், துக்கித்துக் கொண்டிருக்கிறவர்களுக்காகவும் ஜெபிக்கிறோம். Covid – 19 தொற்று நோய்க்கும் மற்றும் பிற வியாதிகளுக்கும் தடுப்பூசிகளை உருவாக்கும் விஞ்ஞானிகளுக்காகவும், சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் இழைத்து சோர்வடையும் போது, எங்களை பலப்படுத்தும், நல்ல கனிகளைக் கொடுக்கும்படி, எங்கள் உலர்ந்த இலைகளை உயர்ப்பியும். புது வாழ்வையும், உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும் எங்களுக்குத் தாரும். அழைப்புக்கு ஏற்ற வாழ்வுக்கு நேராய் எங்களை வழிநடத்தும்.

சபையார்: எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.

ஆராதனை நடத்துபவர்: கிருபையுள்ள கர்த்தாவே, எங்களின் கவனக்குறைவால் உம்முடைய படைப்புகளை அழித்துவிட்டோம். சுற்றுச் சூழலுக்கும், தாவரங்கள், விலங்கினங்களுக்கும் மற்றும் காற்று, நிலம், நீர் ஆகியவற்றில் வாழும் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்தோம். நாங்கள் பூமியை அழித்ததின் விளைவாய் காலநிலை மாற்றம் அடைந்துள்ளது. உம்முடைய படைப்புகளை பாராட்டவும், நேசிக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் அழித்ததை சரிசெய்ய எங்களுக்கு உதவிபுரியும். அழைப்புக்கு ஏற்ற வாழ்வுக்கு நேராய் எங்களை வழிநடத்தும்.

சபையார்: எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.

ஆராதனை நடத்துபவர்: ஒருமைப்பாட்டின் தேவனே, நீர் ஒன்றாயிருப்பது போல, உமது சீஷர்களும், உம்மைப் பின்பற்றுகிறவர்களும் ஒன்றாயிருக்க வேண்டும் என்று உமது குமாரனாகிய இயேசு ஜெபித்தார். எங்களுடைய பேச்சிலும், வாழ்விலும், ஜெபிக்கும் முறையிலும் வித்தியாசங்கள் இருந்தாலும், பிறரை நீதியுடனும், நியாயத்துடனும், அன்புடனும் நடத்த உமது அடியார்களாகிய எங்களுக்குக் கற்றுத்தாரும். உலகளாவிய திருச்சபையையும், நற்செய்தியைப் பறைசாற்றுகின்ற விசுவாசமுள்ள பெண்களையும் ஆசீர்வதியும். அழைப்புக்கு ஏற்ற வாழ்வுக்கு நேராய் எங்களை நடத்தும்.

சபையார்: எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் கர்த்தாவே.

ஆராதனை நடத்துபவர்: அன்புள்ள ஆண்டவரே, நாங்கள் உமக்கு எவ்வாறு நன்றி செலுத்துவோம். எல்லா ஆசீர்வாதங்களும் உம்மிடத்திலிருந்து வருகிறது என்பதை அறிவோம். நீர் எங்களுக்கு தூரமாகாதேயும். கிறிஸ்துவின் வரங்களின் அளவுக்கு ஏற்றபடி எங்களுக்கு கிருபை அருளி எங்கள் உள்ளத்தை மகிழ்ச்சியினால் நிரப்பும். இந்த விண்ணப்பங்களையும், நீர் மட்டுமே அறிந்த எங்கள் இருதயத்தின் வேண்டுதல்களையும், நீர் கேட்டு பதிலளிப்பீர் என்ற விசுவாசத்தோடு நாங்கள் ஜெபிக்கிறோம்.

பிதா, குமாரன் பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய நாமத்தினாலே

அனைவரும்: ஆமென்!

கர்த்தரின் ஜெபம்:
இயேசு கற்பித்த ஜெபத்தின் மூலம் நமது ஜெபத்தைத் தொடருவோம் வாழ்வின் கடினமான நேரங்களில் ஒருவரையொருவர் அன்பினால் தாங்க இந்த ஜெபம் நம்மை அழைக்கிறது.

செழிப்பதைக் குறித்த ஒரு சம்பவம்.
இப்பொழுது நாம் சாராவின் கதையைக் கேட்போம்.

என் பெயர் சாரா. சில நேரங்களில், நான் வேர்களோடு இணைக்கப்பட்ட ஒரு ஒலிவ மரத்தின் இலை உள்ளிருந்து பூப்பதைப்போல உணர்கிறேன். நான் எருசலேமிலே ஒரு லூத்தரன் கிறிஸ்தவளாக பிறந்து வளர்ந்தேன். பாலஸ்தீனப் பெண்ணாக எனது வாழ்க்கை மிகவும் சவாலானாதாகவே உள்ளது. எனது திருச்சபை முதல் பெண் போதகரை அருட்பொழிவு செய்தது. அதன் மூலமாக சமுதாயத்தில் மாற்றங்கள் வருகின்றதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

பல ஆண்டுகளாக, பாலஸ்தீனர்களின் விடாமுயற்சியைக் கண்டு நான் பிரமித்திருக்கிறேன். எங்கள் இடத்திலே ஒரு பாலஸ்தீனியராக வாழ்வது என்றால் அது எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை ஒரு கதையின் மூலமாக பகிர்ந்து கொள்கிறேன்.

எனது தாத்தா பாட்டி யோப்பா பட்டணத்தில் வசித்து வந்தனர். 1948-ம் ஆண்டுக்கு முன்பு அவர்கள் அப்பட்டணத்தில் இருந்த பிற கிறிஸ்தவர்களோடும், இஸ்லாமியர்களோடும், யூதர்களோடும் வளர்ந்தார்கள். 1948-ல் இஸ்ரவேல் என்ற நாடு உருவாக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த நிலத்தில் வாழ்ந்த பாலஸ்தீனர்களுக்கு அது ஒரு பேரிடியாக இருந்தது. இந்த பேரழிவை தான் ”நக்பா“ என்கிறோம். இஸ்ரவேலின் படைகள் எனது தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்தது அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதன் காரணமாக எனது தாத்தாவும், பாட்டியும் யோர்தானில் அகதிகளானார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், என் தாத்தா பாட்டி எருசலேமுக்கு வந்து எனது பெற்றோரையும், என்னையும், எனது சகோதரரையும் யோப்பா பட்டணத்துக்கு அழைத்துச் சென்று அவர்கள் வாழ்ந்த வீட்டை எங்களுக்குக் காண்பிப்பதிலே பெருமகிச்சி அடைந்தார்கள். எனது தாத்தா, அவரது சிறுவயதிலே நடந்த சம்பவங்களையும், அவர் தகப்பனோடு சேர்ந்து மரங்கள் நட்டு மகிழ்ந்த காரியங்களையும் பகிர்ந்து கொண்டார். அவர்கள் நட்ட அந் மரங்களைத் தவிர, அங்கே அனைத்தும் மாறியிருந்தபடியால், மரங்களை வைத்து தான் நாங்கள் வீட்டை அடையாளம் கண்டோம்.

மிகவும் கவலைக்குரிய காரியம் என்னவென்றால், அந்த வீட்டிலே வசித்தவர்கள் எங்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள். அவர்கள் எங்களிடம் கூச்சலிட்டு வீட்டை விட்டு வெளியேற்றியது இன்றும் எனது நினைவில் இருக்கிறது. நாங்கள் அந்த வீட்டிற்குள் செல்லவும் விரும்பவில்லை. வெளியே இருந்து தான் வீட்டை பார்வையிட்டோம். எனவே, அதை எனது தாத்தா அவர்களிடம் விளக்க முயன்றார். ஆனால், அவர்கள் அதை கேட்க மறுத்து எங்களை வெளியே துரத்திவிட்டார்கள். இரண்டாம் முறையும் தனது சொந்த வீட்டை விட்டு துரத்தப்பட்டபடியினால் எனது தாத்தா மிகவும் உடைந்து போனார்.

பின்னர் யோர்தானிலே, நான் அவர்களை சந்தித்த போது, எனது பாட்டி அவர்களது தாயார் வைத்துப்போன அந்த வீட்டின் சாவியை எனக்குக் காண்பித்தார். என்றாவது ஒருநாள் அந்த வீட்டிற்குத் திரும்பிப் போவோம் என்ற நம்பிக்கையோடு அவ்வீட்டின் சாவியை அவர்கள் வைத்திருந்தார்கள். இதுதான் அங்கிருக்கும் பலரின் அவல நிலை. 1948 மற்றும் 1967-ல் நடந்த இரண்டு பேரழிவுகளைத் தொடர்ந்து, இன்று வரை அநேகர் அங்கிருக்கும் தங்களது சொந்த வீட்டை விட்டு துரத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

நான் உருவான ஒலிவ மரமாகிய என குடும்பம் பெலமும், எதிர்த்து தாங்கி நிற்கும் சக்தி கொண்டது என்பதை நான் அறிவேன். எனது மூதாதையர்களின் அன்பினால் நான் ஊட்டமளிக்கப்பட்டேன். என்னால் பிறரை அன்பினால் தாங்க இயலும். ஒலிவ மரத்தின் இலையாக என்னை மலரச் செய்தது அவர்களின் அன்பு. என்னை வலுவானவளாகவும், மீள் தன்மையுடையவளாகவும் உருவாக்கியது அவர்களின் அன்பு.

காணிக்கை
பாலஸ்தீன கிறிஸ்தவ பெண்களின் சாட்சிகளினால் நாம் இன்று ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். ஒருவரையொருவர் அன்பினால் தாங்குவதின் வல்லமையை அவர்களுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களின் மூலம் நமக்குக் காட்டியிருக்கிறார்கள்.

இப்போது நாம் காணிக்கை படைக்க இருக்கிறோம்.

(படைக்கின்ற காணிக்கை எவ்விதத்தில் பயன்படுத்தப்படும் என்பதை ஆராதனை நடத்துகிறவர் விளக்கிக் கூறலாம்)

2 கொரிந்தியர் 8:12-15 வரை உள்ள வார்த்தைகள், வளமான வாழ்வை நாம் அனுபவிக்கும்படியாய், கொடுக்க நம்மை அழைக்கிறது.

“ஒருவனுக்கு மனவிரும்ப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படி அல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கீகரிக்கப்படும். மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன். எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்ந்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.“

நாம் பரந்த மனதுடனே உதாரத்துவமாய்க் கொடுப்போம்.

ஜெபம் பண்ணக்கடவோம்:
கர்த்தாவே, எங்கள் சிலுவை கனமானது, ஆனாலும் நாங்கள் ஒன்றாக இணையும்போது, அதைத் தாங்க இயலும், அழைப்புக்கு ஏற்ற வாழ்க்கை வாழ எங்களை அர்ப்பணிப்பதற்கு அடையாளமாக நாங்கள் படைத்திருக்கும் காணிக்கை அமைவதாக. படைப்புகள் அனைத்தும் வளமான வாழ்வு பெற இது ஒரு வல்லமையான கருவியாக அமையட்டும். ஆமென்.

கிறிஸ்துவின் சமாதானத்தைப் பகிர்தல்:
அநீதிகள், போர்கள் துன்பங்கள் மத்தியிலும், அன்பினால் ஒன்றுபடும்படி தேவன் நம்மை அழைக்கிறார். துன்பத்திலும் நாம் ஒன்றித்து இருக்கும்போது, கடவுள் நமக்கு வாக்களித்த சமாதானத்தில் நாம் வாழ்வோம்.

எனவே, ஒரு ஒலிவ கிளையை / இலையைக் கொடுத்து நாம் ஒருவரோடொருவர் சமாதானத்தைப் பகிர்ந்து கொள்வோம். நாம் ஒலிவ கிளை / இலையை கொடுக்கும்போது “கிறிஸ்துவின் சமாதானம்“ என்று அர்த்தம் கொள்ளும் அரேபிய வார்த்தையான “சலாம் அல் மஷிஹ்“ என்ற வா்த்தைகளைக் கூறுவோம்.

(ஆராதனையின் ஆரம்பத்தில் நம் கரங்களில் கொடுக்கப்பட்ட ஒலிவ கிளையை / இலையைப் பரிமாறிக் கொள்வோம்)

அர்ப்பணிப்பின் வார்த்தைகள்:

ஆராதனை நடத்துபவர்:
என்னோடு சேர்ந்து, உங்கள் இருதயத்தை அர்ப்பணிப்பை உரத்த சத்தமாய் கூறுங்கள்.

அனைவரும்: அனைத்துப் பெண்களுடனும், குறிப்பாக அடக்குமுறையையும், வன்முறையையும் அல்லது பாகுபாடுகளை அனுபவிக்கும் பெண்களுடனும் இணைந்து நின்று சமாதானத்துக்காக உழைக்க அர்ப்பணிப்போம்.

சமய நிறுவனங்கள் உட்பட சமூகத்தின் எல்லா நிலைகளிலும் உழைக்கும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து உண்மையுள்ள ஆதரவாளர்களோடு இருப்போம்.

இறைவனின் நீதியும் சமாதானமும் நிறைந்த ஆட்சி உலகத்தில் வரும்வரை, ஒருவரையொருவர் அன்பினால் தாங்குவோமாக.

ஆராதனை நடத்துபவர்: நாம் இப்பொழுது சமாதானம் மற்றும் நீதியின் கருவிகளாக செல்லக்கடவோம்.

ஆசீர்வாதம்:
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்துக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கச் செய்து, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

பின்பவனி இசை:

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.