Type Here to Get Search Results !

JC VBS 2024 | Day 9 | நல்ல மாதிரியை தொடர எண்ணுகிறேன் | Jesus Sam

நாள் 9: நல்ல மாதிரியை தொடர எண்ணுகிறேன்
(பிலிப்பியர் 3:17)
==================
நோக்கம்:
பிள்ளைகள் தங்கள் வாழ்வில் கிறிஸ்துவையும், சிலுவையை பின்பற்றுகிறவர்களையும் மாதிரியாக எண்ணி பின் தொடர வேண்டும்.  சிலுவை பாதையை எதிர்க்கிறவர்களின் மாதிரியை வெறுக்கவும் கடவுளிடம் தங்களை ஒப்படைக்கவும் வேண்டும்.

வேதபகுதி:
    2 நாளாகமம் 10:1-14
    2 நாளாகமம் 10:19 - 12:14 (ரெகொபெயாமின் தவறான தேர்வு)

மனன வசனம்:
நீதிமொழிகள் 13:20
    ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.


பாட சுருக்கம்:
ரெகொபெயாம் என்ற அரசர் நல்லாலோசனைகாரரின் ஆலோசனைகளை கேட்காமல் தன் உடன் வளர்ந்தவர்களிடம் ஆலோசனைகேட்டு நடந்ததால் தீயவராக கடைசிவரை வாழ்ந்தார்.  மக்களும் அவரை வெறுத்தனர்.  பிள்ளைகளும் தவறான வாழ்க்கை மாதிரியை பின்பற்றாமல் கிறிஸ்துவின் சாயலில் உள்ள நல்ல மாதிரிகளை தேடி அவர்களை பின்பற்ற தங்களை ஒப்படைக்க வேண்டும்.

கவன ஈர்ப்பு:
இரண்டு இன்டர் அல்லது சீனியர் மாணவர்களை முன்னே அழைக்கவும். அவர்களிடம் ஐந்து கேள்விகள் கேட்க போவதாகவும் அதற்கு சரியான பதிலை அவர்கள் வைத்திருக்கும் தாளில் எழுத வேண்டும். மற்றபடி கீழே உட்கார்ந்திருக்கும் யாரும் பதில் கூறக்கூடாது. அதிக மதிப்பெண் பெற்றவரே வெற்றியாளர். ஒரு Life Line அவர்களுக்கு உண்டு. அங்கே உட்கார்ந்திருக்கிற யாரிடம் வேண்டுமானாலும் அவர்கள் உதவி கேட்கலாம். அந்த மாணவர்கள் கண்டிப்பாக ஆசிரியர்களிடமே கேட்பார்கள். அவர்களிடம் ஏன் நீங்கள் உங்கள் நண்பரிடம் கேட்காமல் உங்கள் ஆசிரியரிடம் கேட்டீர்கள் என்றுக் கேட்கவும்.

ஆசிரியர்கள் மூத்தவர்கள் மற்றும் உங்களைவிட அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் தானே. ஆனால் பல வேளைகளில் பெரியவர் ஆலோசனைகளை நாம் கேட்பதில்லை. நம்மோடு இருக்கும் நம் நண்பர்களின் பேச்சையே கேட்கிறோம். அவ்வாறு செய்வதால் வரும் பிரச்சனைகளைக் குறித்து பார்ப்போம்.

மாணவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள்
1. யோசேப்பின் மறுபெயர் என்ன?
    சாப்னாத்பன்னையா

2. இடிமுழக்கத்தின் மக்கள் யார்?
    யோவான், யாக்கோபு

3. எத்திரோவின் மறுபெயர் என்ன?
    ரெகுவேல்

4. யூதாஸிற்கு பதிலாக தெரிந்தெடுக்கப்பட்ட சீஷன் யார்?
    மத்தியா

5. சாத்ராக்கிற்கு பெற்றோர் இட்ட பெயர் என்ன?
    அனனியா

பாட விளக்கம்:
தாவீதின் மகனாகிய சாலொமோன் மரித்த பின்பு அவர் மகன் ரெகொபெயாம் அரசன் ஆனார்.  சாலொமோன் காலத்தில் அரச பதவியில் இருந்த அரசருக்கு விரோதமாக செயல்பட்டதால் யெரொபெயாம் என்பவரை கைது செய்ய சாலொமோன் கட்டளையிட்டு இருந்தார். யெரொபெயாம் சாலொமோன் இறக்கும் வரை தலை மறைவாக வாழ்ந்து வந்தார். சாலொமோன் மரித்த பின்பு மீண்டும் மக்களைக் கூட்டிச் சேர்த்து புதிய அரசரான ரெகொபெயாம் முன் வந்து உம் தகப்பனாகிய சாலொமோன் எங்களுக்கு அதிகமாக பாரமான வேலைகளைக் கொடுத்தார். நீங்கள் அதைக் குறைத்தால் நாங்கள் உமக்கு சேவை செய்வோம் என்றார்கள். ஆரம்பத்திலே கடவுளுக்கு பிரியமாக ஆட்சி செய்த சாலொமோன் பின் நாட்களில் தன் சுய பெருமையை நிலை நிறுத்த எண்ணியும், மாளிகையை அழகுபடுத்தவும், பல மன்னர்களை தன் நாட்டிற்கு விருந்துக்கும் அழைத்து, தன் செல்வ செழிப்பை காட்சி படுத்தினார்.அதற்காக அதிகமான செல்வம் சேர்க்கவும் எண்ணி மக்களிடம் அதிகமான வரிகளைப் பெறுவதும், அவர்களை பட்டணத்தைக் கட்ட அதிகமான வேலைகள் வாங்கியும் சிரமப்படுத்தினார். சாலொமோனின் இந்த கொடுமைகளால் கோபமாக மக்கள் இருந்தனர். யெரொபெயாமின் தூண்டுதலால் அவர்கள் ரெகொபெயாமிடம் முறையிட்டனர். ரெகொபெயாம் மூன்று நாட்கள் கழித்து வரும்படி கூறி அவர்களை அனுப்பிவிட்டார்.

பின்பு சாலொமோனின் அரசவையில் அவருக்கு உதவியாக இருந்த பெரியவர்களிடம் ஆலோசனைபண்ணினார். சாலொமோனின் மிகவும் ஞானம் நிறைந்தவர். சாலொமோனின் அசரவையில் அவரின் ஞானம் நிறைந்த காரியங்களைப் பார்த்து முதிர்ச்சி அடைந்தவர்கள் அவர்கள். மக்களை எப்படிகையாள வேண்டும் என்பதை அறிந்து இருந்தார்கள். யெரொபேயாம் மூலம் ஏற்படப் போகும் ஆபத்தைக் குறித்தும் அறிந்திருந்தார்கள். அவர்கள் மக்களிடம் கனிவோடு நடந்து கொள்ள அறிவுரை கூறினார்கள். அவர்களிடம் இரக்கத்தோடு நடந்து கொள்ளுமாறும், அன்போடு பேசுமாறும் கூறினர்.


ரெகோபெயாமோ அந்த ஆலோசனையை கேட்டாலும் அவரோடு விளையாடி வளர்ந்த வேறு சில வாலிபர்களிடம் ஆலோசனை கேட்கவிரும்பினார். அவர்களுக்கு அரச காரியங்களில் அநுபவம் இல்லாது இருந்தது. ஒரு அரசரிடம் எப்படி மக்கள் இப்படி பேச முடியும்? என அகங்காரத்தோடு எண்ணினார்கள். ஒரு அரசர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எண்ணினார்கள். மக்கள் கஷ்டப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரியாது இருந்தார்கள். மேலும் யெரொபெயாம் குறித்தும் அவர்கள் அசட்டையாக எண்ணியிருந்திருப்பார்கள். அவர்கள் மக்களிடம் சாலொமோனை விட அதிகமான கஷ்டத்தை கொடுக்கப்போவதாக கூறும்படி ஆலோசனைக் கூறினர்.


வாலிபர்களின் ஆலோசனைகளைக் கேட்ட ரெகோபெயாம் அனுபவம் நிறைந்த முதியவர்கள் ஆலோசனையைத் தள்ளி வாலிபர்களின் ஆலோசனையைக் கேட்டார். மக்களிடம் “என் தந்தை உங்களை சாட்டையினால் தண்டித்தார் என்றால் நான் தேளைவைத்து கடிக்க வைத்து தண்டிப்பேன்” எனக் கூறினார். மக்கள் அதைக் கேட்டு இனி நாங்கள் உங்கள் ஆட்சியில் இருப்பதில்லை எனக் கூறி பென்யமீன், யூதா என்ற இரண்டு பிரிவினர்கள் தவிற மற்றவர்கள் பிரிந்து சென்று தங்களுக்கென தனி நாட்டை உருவாக்கினார்கள்.

நல்ல நண்பர்கள் நாம் உயர்வான இடங்களை அடையும்போது நமக்கு உதவுபவர்களாக இருக்க வேண்டும். மாறாக நம்மை தவறு செய்ய உற்சாகப் படுத்துகிறவர்களாக இருக்கக்கூடாது அல்லவா. ரெகொபெயாமின் நண்பர்கள் அவரின் தீய எண்ணங்கள் வளர ஆலோசனை கொடுத்தனர். சாலொமோன் மக்களை எப்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதை அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்களின் தவறான ஆலோசனை அந்த நாட்டின் பெரும் பகுதியை இழக்க காரணமாக இருந்தது. ரெகொபெயாம் நல்ல மாதிரியை பின் பற்றாமல், தவறான மாதிரியை தெரிந்துகொண்டார்.

இன்றும் நம் நண்பர்கள் தரும் ஆலோசனைகள் நமக்கு நல் வழியை காட்டுகிறதா? அல்லது தீய வழிக்கு நேராய் இழுத்துச் செல்கிறதா? மாதிரிகளாக நாம் பின்பற்றவது யாரை? நாம் நம் நண்பர்கள் போலவும் அல்லது சில நடிகர்கள், விளையாட்டு வீரர்களை மாதிரியாக கொண்டு அவர் போல உடை உடுத்த, அலங்காரம் செய்ய, சில உடல் மொழிகளை பின்பற்ற, சில பழக்க வழக்கங்களை செய்ய விரும்புகிறோம். அதையே மாஸ் என்றும் டிரென்ட் என்றும் கூறுகிறோம். அனுபவம் நிறைந்தவர்கள் ஆலோசனைகளையோ Cringe என்று கூறி உதாசினப்படுத்துகிறோம். அவர்களை Bommer என்று அழைக்கிறோம். அவர்களின் மாதிரியை பின்பற்றுவதில்லை. உங்கள் நண்பருக்கும் உங்கள் வயது தானே இருக்கும். அவர்கள் அனுபவமும் முதிர்ச்சியும் உங்கள் அளவுதானே இருக்கும். பின்பு அவர்கள் ஆலோசனை மட்டும் எப்படி முதிர்ச்சியாய் இருக்கும் என நம்புகிறீர்கள். ஒரு நண்பன் கூறும் அறிவுரைகளை உங்கள் பெற்றோரிடம் கூற நீங்கள் பயப்படவில்லை என்றால் அது நல்ல அறிவுரைகள். ஒரு வேளை அவர்கள் கூறும் அறிவுரைகளை உங்கள் பெற்றோரிடம் கூறப்பயப்படுகிறீர்கள் என்றால் அவை தவறானவைகளாக இருக்கலாம். நல்ல நண்பர்கள் உங்கள் குடும்பத்துடனும் நட்பாக இருப்பார்கள். அத்தகைய நண்பர்களை உங்கள் பெற்றோர்களும் நேசிப்பார்கள். மாறாக உங்கள் நட்பை உங்கள் பெற்றோருக்கு தெரியாமல் இரகசியமாக வைத்து இருந்தால் அது தேவையற்றதாகவே இருக்கும்.


வாழ்க்கைக்கு படிப்பினை:
உங்கள் குணாதிசயங்கள் நீங்கள் யாரை மாதிரியாக கொண்டு பின்பற்றுகிறீர்ளோ அவர்களைப் போலவே அமையும். ஞானம் உள்ளவர்களைப் பின்பற்றினால் நன்மைகள் நடக்கும். அனுபவ மற்ற மூடர்களை பின்பற்றினால் பிரச்சனைகள் நேரலாம். நாம் நமது நண்பர்களையோ, சினிமா ஹீரோக்களையோ, விளையாட்டு வீரர்களையோ, இசைக் கலைஞர்களையோ மாதிரியாக பின்பற்றக் கூடாது. இயேசுவையும், இயேசுவைப் போல வாழ நினைப்பவர்களின் மாதிரியையுமே பின்பற்ற வேண்டும். நல் மாதிரியை தொடர நாம் நம்முடைய சிந்தனைகளை கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும்.


நாள் 9 - நல்ல மாதிரியை தொடர எண்ணுகிறேன்
குறு நாடகம்
ஒரு வாலிபனை தன் நண்பர்களுடன் (புள்ளிங்கோ) மகிழ்ச்சியாக இருக்கிறார்.  அப்பொழுது அவருக்கு வேலைக்கான அழைப்பு வருகிறது.  அவன் நண்பர்களோ அவனை அந்த நேர்காணலுக்கு செல்ல வேண்டாம் எனவும், நாம் எப்பொழுதும் இவ்வாறே மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கிறார்கள்.  ஆனால் அருகில் நின்று கொண்டிருந்த நபர், அவனிடம் நீ உன் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட்த்தைக் குறித்து யோசிக்க வேண்டும்.  இந்த சிற்றின்பங்களுக்காக நல்ல வாழ்வை இழக்காதே.  உன் தோற்றத்தைத மாற்றி வேலைக்கு சலெ் என அறிவுரைக் கூறினார்.  அந்த வாலிபன் மிகுந்த குழப்பமடைகிறார்.  கடைசியில் அவர் வேலைக்கு செல்வதை தேர்வு செய்கிறார்.  அவர் நேர்காணலுக்கு செல்கிறார்.  ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த அறிவுரைக் கூறினவரே அங்கு அதிகாரியாக இருக்கிறார்.  இந்த வாலிபனின் மாற்றத்தைக் கண்டு அவருக்கு வேலை கொடுக்கிறார்.

படிப்பினை:
தவறான மாதிரிகளையும் அறிவுரைகளையும் பின்பற்றக் கூடாது.




Day 9 - நல்ல மாதிரியை தொடர எண்ணுகிறேன்
நம் அனைவருக்குள்ளும் நான், நாங்கள், எங்கள் என்ற பெருமை உணர்வு இயல்பாகவே இருக்கிறது.

Activity:
சில மாணவர்களை முன்பதாக அழைத்து, அவர்களை சில நிமிடங்கள் எதைப்பற்றியாவது பேச சொல்ல வேண்டும்.  அவர்கள் பேசும் போது நான், நாங்கள், எங்கள் என்ற வார்த்தை வராமல் பேச வேண்டும்.  

நண்பர்கள்:
நம்மை பார்க்கும்படியாக நம்முடைய வீட்டிற்கு வரும் நண்பர்கள், நம்மை மாத்திரம் அல்ல, நம்முடைய பெற்றோரையும் சந்திக்க வேண்டும்.  பெற்றோர் இல்லாத நேரத்தில், நம்மை மாத்திரம் சந்திக்க வரும் நண்பர்கள் நிச்சயம் நல்ல நண்பர்களாக இருக்க முடியாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.