Type Here to Get Search Results !

JC VBS 2024 | Day 10 | உயிர்த்தெழுதலை எண்ணுகிறேன் | Jesus Sam

நாள் 10: உயிர்த்தெழுதலை எண்ணுகிறேன்
(பிலிப்பியர் 3:10)
====================
நோக்கம்:
பிள்ளைகள் கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசித்து நாமும் அவரின் மரணத்தால் மீட்கப்பட்டு அவரைப்போல உயிரோடு எழுப்பப்பட்டு நித்திய வாழ்வை அடையும்படி மனம் மாறினவர்களாக கடைசிவரை பரிசுத்தமாக வாழ தங்களை ஒப்படைக்கும் படி அறிவுறுத்தப்பட வேண்டும்.

வேத பகுதி:
    லூக்கா 8:41-42, 49-56 (யவீரு மகளின் மரணம் என்னும் நித்திரை)

மனன வசனம்:
சங்கீதம் 49:15
    ...தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்.  அவர் என்னை ஏற்றுக்கொள்வார்.








பாட சுருக்கம்:
யவீருவின் மகள் மரணித்துவிட்டார், இனி ஒன்றும் செய்வதற்கில்லை என பலரும் எண்ணியபோது அவர் நித்திரையாக இருக்கிறார் என உணர வைத்து இயேசு உயிரோடு எழுப்பினார்.  நம் மரணமும் ஒரு நித்திரை போன்றது என்பதையும், யவீரு மகள் எழுப்பப்பட்டது போல நாமும் ஒரு நாள் எழுப்பப்படுவோம் என்பதையும், அவரின் சிலுவை மரணத்தால் மீட்கப்பட்ட நாம் நித்திய வாழ்வு அடைய பரிசுத்தமாக வாழ நம்மை ஒப்படைக்க வேண்டும் என்பதை உணரச் செய்ய வேண்டும்.


கவன ஈர்ப்பு:
ஒரு வைரத்தின் படத்தைகக் காட்டீ, அதைப் பற்றி கேட்கவும். வைரம் என்பது ஒரு மரம் மண்ணில் புதைந்து, பல புவியியல் மாற்றத்தாலும், இரசாயண செயல்பாட்டினாலும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து உறுதியாகி வைரமாக மாறுகிறது. எல்லா மரமும் வைரமாகாது. வளரும் போதே மிகவும் உறுதியாக இருக்கம் சில மரங்கள் மட்டுமே வைரமாகும். மரமாக இருக்கும்போது அதற்கு மதிப்பு குறைவுதான். ஆனால் வைரமான பின்போ அதன் மதிப்பு மிகவும் அதிகம். அதுபோலத்தான் நம் வாழ்வும்.

பாட விளக்கம்:
யூதர்கள் சாலொமோன் கட்டின தேவாலயத்தில் கடவுளை வழிபடுவார்கள். எல்லா நேரங்களிலும் அங்கு செல்ல முடியாது. அதினால் பல இடங்களில் தாங்கள் இருக்கும் பகுதிகளிலே சிறிய ஆலயம் கட்டினார்கள். அந்த ஆலயத்தின் வழிபாட்டுக் காரியங்களை ஒழுங்கு செய்ய ஒருவரை நியமிப்பார்கள். அவர் தான் ஜெப ஆலயத் தலைவர். அவர் அனைத்து காரியங்களையும் ஒழுங்காக நடக்கின்றனவா, எல்லா விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கும் பொறுப்பை உடையவர். யவீரு என்று ஒரு ஜெப ஆலயத்தலைவர் இருந்தார். இயேசு கலிலேயாவுக்கு வந்த போது யவீரு இயேசுவை சந்தித்தார். அவர் பாதத்தில் விழுந்து தன் மகளுக்காக வேண்டினார். ஜெப ஆலயத் தலைவர்கள் மிகவும் மதிப்பு மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்கள் சாதாரண மனிதர்கள் முன் பணிந்து கொள்ளமாட்டார்கள். ஆனால் இயேசுவின் தன்மையை அறிந்த அவர் இயேசுவை பாதத்தில் விழுந்து பணிந்தார்.


அப்பொழுது யவீரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து “அவர் மகள் மரித்து விட்டாள். இயேசுவை தொந்தரவு செய்யாதே” என்றார். ஆனால் இயேசுவோ “பயப்படாதே, விசுவாசமுள்ளவராய் இரு. அவள் காப்பாற்றப்படுவாள்” என்றார். பின்பு யவீருவின் வீட்டிற்கு சென்றார். இயேசுவை பின் தொடர்ந்து பலர் வந்திருந்தனர்.

யவீருவும் அவன் மனைவியும் இயேசுவை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் தவிர யாரும் உள்ளே வர வேண்டாம் என்றார் இயேசு. யவீருவின் வீட்டிலிருந்தவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசுவோ அவர்களிடம் அழவேண்டாம். மகள் தூங்குகிறாள் என்றார். அந்த பெண் மரித்தது கூட இவ்வளவு பெரிய தீர்க்கதரிசிக்கு தெரியவில்லையே என நினைத்து கேலியாக சிரித்தார்கள். இயேசு அந்த ஐந்து பேர்களை தவிற மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு, அந்த சிறு பெண்ணைப்பார்த்து, சிறு பெண்ணே எழுந்திரு என அழைத்தார். அந்த பெண்ணும் உயிரோடு எழுந்தார். இதன் மூலம் இயேசு மரணம் என்பது முடிவல்ல தன்னால் எல்லோரையும் உயிரோடே எழும்ப முடியும் என்பதை நிரூபித்தார்.


மற்றவர்கள் மரணத்தை திரும்பி வர முடியாத பயணம் என நினைக்கும் போது இயேசுவுக்கு அது ஒரு தூக்கம் போன்றதாய் இருக்கிறது. அவரால் யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் உயிரோடு எழுப்ப முடியும். இந்த சிறு பெண்ணை மரித்த சில மணிகளில் (நிமிடங்களாக கூட இருக்கலாம்) உயிரோடு எழுப்பினார். ஆனால் லாசருவை நான்கு நாட்கள் கழித்து உயிரோடு எழுப்பினார். நாம் ஒரு வேளை மரித்தாலும் அவர் மகிமையோடு திரும்பி வரும்போது அவர் நம்மையும் அழைப்பார். நாமும் தூக்கத்தில் இருந்து எழும்பும் போது எழும்புவதை போல உயிரோடு எழும்புவோம்.


வாழ்க்கைக்கு படிப்பினை:
நாம் மரணத்தைக் குறித்து பயப்பட தேவையில்லை. அது வெறும் தூக்கம் போன்றது. நாம் வாழும் வரையில் நம் வாழ்வில் நன்மைகளை செய்கிறவர்களாக இருக்க வேண்டும். நாம் புதைக்கப்பட்டால் மக்கிப் போகும் மரம் போல உறுதியற்ற வாழ்க்கை வாழாமல் உபயோகமான வாழ்க்கை வாழ்ந்தால் எழுப்பப்படும் போது அவர் இராஜ்ஜியத்தில் விலை மதிப்பில்லா வைரம் போல இருக்க முடியும். நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள, உண்மையான நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசை கொண்டு அவரிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.