Type Here to Get Search Results !

JC VBS 2024 | Day 8 | முன்னானவைகளை எண்ணுகிறேன் | Jesus Sam

நாள் 8: முன்னானவைகளை எண்ணுகிறேன்
(பிலிப்பியர் 3:13)
===================
நோக்கம்:
பிள்ளைகள் தங்கள் வாழ்வின் இலக்குகளையும், இலட்சியங்களையும் தங்கள் சுயசித்தம் சார்ந்து முடிவு செய்யாமல் கடவுள் நியமித்திருக்கிற இலக்கை அறிந்து கொள்ளவும், நாடவும் அந்த இலக்கை அடையவும் கடவுளின் சித்தத்திற்கு தங்களை ஒப்படைக்க வேண்டும்.

வேத பகுதி:
    ரூத் 1:6-8
    ரூத் 1:14-22
    ரூத் 4:13-17 (மோவாப் தேசம் முதல் இஸ்ரவேல் தேசம் வரை)

மனன வசனம்:
எரேமியா 29:11
    நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  அவைகள் தீமைக்கல்ல.  சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


பாட சுருக்கம்:
மோவாபில் வாழ்ந்து வந்தவர் ரூத்.  தன் அத்தை நகோமி யூத தேசத்திற்கு செல்ல திட்டமிட்ட போது மற்ற மருமகள் தான் தாய் வீட்டிற்கு சென்றார்.  ஆனால் ரூத்தோ உம்முடைய கடவுள் என் கடவுள் என ஏற்று, தன்னை ஒப்புவித்து நகோமியுடன் இஸ்ரவேல் தேசம் சென்றார்.  நகோமி அங்கே போவாசை ரூத்திற்கு மணமுடித்து வைத்தார்.  அவர்களின் கொள்ளு பேரன்தான் தாவீது அரசன்.  அந்த வம்சத்தில் தான் இயேசு கிறிஸ்துவும் பிறந்தார்.  ரூத் தன்னை கடவுளிடம் ஒப்புவித்ததால் கிறிஸ்துவின் திட்டத்தில் பங்காளர் ஆனார்.  பிள்ளைகளும் தங்கள் வாழ்வின் திட்டத்தை சுயசித்தப்படி எடுக்காமல் கடவுளின் சித்தத்திற்கு ஒப்படைக்க தூண்ட வேண்டும்.

கவன ஈர்ப்பு:
பிள்ளைகளிடம் "Granary of India, அதாவது இந்தியாவின் தானியக் கிடங்கு (உணவு தானியம் அதிகம் விளையும் இடம்) எது?” எனக் கேட்கவும். பஞ்சாப் மாநிலத்தின் படத்தினைக் காட்டி பஞ்சாப் எனக் கூறவும்.


பின்பு “தமிழ்நாட்டின் தானியக் கிடங்கு எது?” எனக் கேட்கவும். தஞ்சை படத்தினைக் காட்டி தஞ்சாவூர் என்று கூறவும். வேதத்திலும் இவ்வாறு தானிய விளைச்சலுக்கு பேர் போன ஒரு ஊர் இருக்கிறது. அதை பற்றி இன்று காணலாம்.


பாட விளக்கம்:
முடிந்தால் காய்ந்த வைக்கோலும் பச்சை கதிரும் எடுத்துச் செல்லவும், பச்சை கதிர் கிடைக்கவில்லை என்றால் Transparent Container-ல் வாற்கோதுமை (பார்லி) மற்றும் கோதுமையை எடுத்துச் செல்லவும். பஞ்சம், விளைச்சல் போன்ற காரியங்களைக் கூறும்போது அவைகளைக் காட்டி அந்த சம்பவத்தை விளக்கவும். எலிமெலேக்கு என்பவர் யூதேயாவில் உள்ள பெத்லெகேம் என்னும் ஊரில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். பெத்லகேம் என்றால் “அப்பத்தின் வீடு” என்று பொருள். அங்கு வாற்கோமை (பார்லி) மற்றும் கோதுமை வைத்து அப்பம் செய்வார்கள். அதினாலேயே பெத்லெகேம் அப்பத்தின் வீடு என்று அழைக்கப்பட்டது. ஆனால் ஒரு முறை அந்த நாட்டிலும் பஞ்சம் ஏற்பட்டது. எலிமெலேக்கு மோவாப் எனும் நாட்டிற்கு சென்றார். மோவாப் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று “இச்சிக்கத்தக்க இடம்” என்பதாகும்.

எலிமெலேக்கு மோவாபிலே இறந்து விட்டார். நகோமி தன் மகன்களுடன் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார்.  அங்கேயே நகோமியின் இரு மகன்களுக்கும் திருமணம் செய்துகொண்டனர்  (நகோமியின் மருமகள்கள் ஓர்பாள் மற்றும் எஸ்தர்).  பின்பு அவர் இரண்டு மகன்களும் மோவாபிலே மரித்துவிட்டனர். சில நாட்களுக்கு பின்னர் நகோமி தங்கள் ஊரான பெத்லகேமிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என எண்ணினார். அவர் புறப்பட்டு போகையில் தன்னுடன் இருந்த மருமகள்களான ஓர்பாள் மற்றும் ரூத்திடம் (கைம் பெண்கள் மற்றும் மருமணம் போன்ற காரியங்களை அதிக அழுத்தம் கொடுத்துக் கூறி கருப்பொருளிலிருந்து விலக வேண்டாம்) உங்கள் அப்பா வீட்டிற்கு செல்லுங்கள், என்னுடன் வந்து உங்களுக்கு பலன் இல்லை என்றார். முதலில் இருவரும் திரும்பி செல்ல மறுத்தனர். ஆனால் நகோமி அவர்களைச் சமாதானப்படுத்தியவுடன் ஓர்பாள் மட்டும் தன் தகப்பன் வீட்டிற்கு சென்றார். நகோமி ரூத்திடம் “நீ உன் அப்பா வீட்டிற்கும் உன் உறவினர்களிடமும், உன் கடவுள்கள் உள்ள இடத்திற்கும் போகவில்லையா?” எனக் கேட்டார். அதற்கு ரூத் நகோமியிடம் “நீங்கள் தங்கும் இடத்தில் நான் தங்குவேன். உமது உறவினர்கள் என் உறவினர்கள், உங்கள் கடவுள் என் கடவுள்? என்று கூறி நகோமியுடனே சென்றார்.


நகோமியும் ரூத்தும் பெத்லகேமுக்கு நடந்து சென்றார்கள். பெத்லெகேம் வந்தவுடன் பலர் நகோமியை அடையாளம் கண்டு கொண்டனர். அவர் நகோமி தானே என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர். நாகோமி என்பதற்கு “இரம்மியமான” எனப் பொருள். நகோமி அவர்கள் தன்னை நகோமி எனக்கூறும் போது “என்னை நகோமி எனக் கூப்பிட வேண்டாம், என்னை மாராள் எனக் கூப்பிடுங்கள்” என்றார். மாராள் என்பதற்கு கசப்புடையவர் என்று அர்த்தம். தான் அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமிலிருந்து போகும்போது எல்லாம் நிறைந்தவராக போனார். ஆனால் திரும்ப வரும் போது ஒன்றுமில்லாதவராக திரும்பினார் என்பதால் அவர் அப்படி கூறினார்.


அது வாற்கோதுமை (பார்லி) அறுவடைக்காலமாக இருந்தது. இஸ்ரவேலர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. அறுவடை செய்யும்போது நிலத்தில் சிந்தும் தானியங்களை ஏழைகள் உண்ண விட்டுவிட வேண்டும். அப்படிப்பட்ட தானியங்களை பொருக்க ரூத் சென்று வருவதாக கூறினார். நகோமி தன் கணவர் உறவினரான செல்வந்தராக இருந்த போவாஸ் நிலத்தில் தான் ரூத் தானியங்களை சேகரித்து வந்தார் என்பதை அறிந்துகொண்டார். ரூத் பற்றி அறிந்து கொண்ட போவாஸ் அவருக்கு இரக்கம் காட்டினார். யாரும் அவரை கடிந்துகொள்ள வேண்டாம் என்று கூறினார். அறுவடை காலம் முடியும் வரை ரூத் அங்கு மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து தானியம் சேகரித்தார். பின்பு ஒரு நாள் எலிமெலேக்குவிற்கு சொந்தமான நிலத்தை, அதை பராமரித்து வந்த எலிமெலேக்கின் உறவினரிடம் இருந்து வாங்க போவாஸ் ஊர் பெரியவர்களை அழைத்திருந்தார்.


அங்கே போவாஸ் ஊர் பெரியவர்கள் முன் ஆதரவின்றி இருக்கும் ரூத்தையும் திருமணம் செய்வதாக வாக்களித்தார். நகோமியுடன் மோவாபில் இருந்து ஏழையாக வந்த ரூத், இப்பொழுது ஒரு செல்வந்தரை திருமணம் முடித்தார். அவர்களுக்கு ஓபேத் எனும் ஆண் குழந்தை பிறந்தது. ஓபேத் தாவீது ராஜாவின் தாத்தா (ஓபேத்தின் மகன் ஈசாய், ஈசாயின் மகன் தாவீது). இயேசு கிறிஸ்துவும் அந்த வம்சத்திலே பிறந்தார். போவாஸ் மூலம் ரூத்திற்கு ஒரு மீட்பு கிடைத்தது. ரூத் தன் தற்கால ஆசைகளைப் பற்றி எண்ணாமல் பின் நாளில் வரும் முன்னான காரியங்களை பெற்றுக்கொள்ள தன்னை ஒப்புக்கொடுத்தார். கடவுளும் அவருக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தார்.


வாழ்க்கைக்கு படிப்பினை:
ரூத் பழைய வாழ்வை பற்றி கவலைப்படாமல் முன்னானவைகளை பெற தன் மாமியுடன் பெத்லெகேம் நோக்கி சென்றது போல, நாமும் முன்னானவைகளை பெற நம் வாழ்வின் மேன்மைகளாக நினைப்பவைகளை விட்டுவிட்டு கடவுளை மட்டும் நம்பி நம்மை ஒப்படைக்க வேண்டும்.




நாள் 8 - முன்னானவைகளை எண்ணுகிறேன்
குறு நாடகம்
நிலவிற்கு ஆல்ட்ரினும், நீல் ஆம்ஸ்ட்ராங்கும் செல்கின்றனர்.  அப்பொழுது நிலவில் முதலில் கால் வைக்க ஆல்ட்ரினை சொல்லுகிறார்கள்.  ஆனால், அவர் நிலவில் புவிஈர்ப்பு, சமநிலை எப்படி இருக்கும் என எண்ணி பயந்தார்.  அப்பொழுது ஆம்ஸ்ட்ராங்கை அழைத்தார்கள்.  அவரோ எதுவும் யோசிக்காமல் பதில் கூட சொல்லாமல் காலை நிலவில் வைத்துவிட்டு “நான் இறங்கிவிட்டேன்” என்றார்.

படிப்பினை:
நாமும் கடவுளுக்காக ஏதாவது செய்ய அழைக்கப்படும்போது தயக்கமின்றி செயல்பட வேண்டும்.


Day 8 - முன்னானவைகளை எண்ணுகிறேன்
பிள்ளைகளிடம் நீங்கள் போக வேண்டும் மற்றும் போக வேண்டாம் என்று நினைக்கும் இடங்கள் என்ன என்ன? என்று கேட்கவும்.

ரூத்தின் சரித்திரத்தில் மோவாப் தேசம் முதல் பெத்லகேம் வரை உள்ள பயணத்தை பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

ரூத் மற்றும் நகோமியின் பயண உரையாடலை விரிவாக விளக்க வேண்டும்.

போவாஸ் என்பர் யார்? என்று விளக்க வேண்டும்

போவாஸ் - ரூத்தின் சந்ததியில் தான் இயேசு பிறந்தார் என்பதோடு கதை முடிய வேண்டும்.

ரூத்தைப்போல இன்மைக்குறிய ஆசீர்வாதங்களைப் பற்றி யோசிக்காலம், எதிர்காலத்தைக் குறித்த நோக்கம் நமக்கும் வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.