===============
கிறிஸ்துமஸ் நற்செய்தி
==============
“கிறிஸ்துமஸ்“ என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் நன்னாளாகும். கிறிஸ்துமஸை “கிறிஸ்தவர்களின் பண்டிகை“ என்று சொல்வதை விட இந்த உலகத்திலுள்ள எல்லா மக்களும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர வேண்டிய நன்னாள் என்று கூறினால் சரியாகும்.
உண்மையான பரிசுத்தமுள்ள தெய்வம் ஒருவர் மட்டும் உண்டு. அவருடைய மனித அவதாரமாக இயேசு கிறிஸ்து பிறந்தார். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீன நாட்டில் ஒரு சாதாரண குடும்பத்தில் ஏழ்மையின் கோலத்தில் அதிசய பலனாக இயேசு பிறந்தார்.
நானே வழியும் (வாசல்)
சத்தியமும் (உண்மை)
ஜீவனுமாயிருக்கிறேன் (வாழ்வு)
- இயேசு கிறிஸ்து
ஏதோது என்பவர் அரசனாக இருந்த நாட்களில் பாலஸ்தீனத்திலுள்ள பெத்லகேம் என்னும் சிற்றூரில் இயேசு பிறந்தார். கன்னி மரியாளின் கர்ப்பத்தில் தோன்றிப் பிறந்த அவருடைய அதிசயப் பிறப்பு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்க்கதரிசன கூற்றுக்களெல்லாம் அந்தந்த காலங்களில் அப்படியே நிறைவேறின. இயேசு என்ற பெயருக்கு அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு விடுதலையையும் மீட்பையும் அருளுவார் என்று பொருள்.
பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனுக்குலத்தை மீட்டெடுக்க இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். மனிதனை பாவத்திலிருந்து விடுதலையாக்கவே அவர் மனித அவதாரம் எடுத்தார்.
இயேசுவே அன்பின் அவதாரம்! அவரே இறைவனின் ஒரே அவதாரம்! ஒப்பற்ற அவதாரம்! “இயேசு பிறந்தபோது அவருடைய அற்புதப் பிறப்பை பற்றிய நல்ல செய்தியை தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தனர். பாலஸ்தீனத்திற்கு கிழக்கேயிருந்து ஞானிகள் ஒரு அற்புத நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்டு, பெத்லகேம் ஊர் பரிசுத்த பாலகனைப் பணிந்துகொள்ள வந்தனர்.
ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பைப் பற்றிய செய்தியை உங்களுக்கு அறிவித்து இந்த மகிழ்ச்சியில் நீங்களும் பங்குகொள்ள உங்களை அழைக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலக சரித்திரத்தை “கிறிஸ்துவுக்கு முன்“ என்றும் “கிறிஸ்துவுக்கு பின்“ என்றும் இரண்டாக பிரித்தது.
மனோதத்துவ ஞானத்தில் மூழ்கிக்கிடந்த கிரேக்க ஞானத்தை முற்றிலும் மாற்றி விட்டது. படைபலத்தால் இறுமாப்பு அடைந்திருந்த ரோமப் பேரரசின் அடிப்படையையே ஆட்டி அசைத்தது. சம்பிரதாயத்திலும், சன்மார்க்கத்திலும் வேரூன்றி நின்ற யூத குல சடங்காச்சாரங்களுக்கு ஒரு மாபெரும் முற்றுப்புள்ளியை வைத்தது.
அதற்கு காரணம் இயேசு கிறிஸ்து உலக மக்களுக்கு “இறை வாழ்வை“ ஒரு புதிய வாழ்வைக் கொண்டு வந்ததே ஆகும். பாவத்தன்மையிலும், பாவச் செய்களிலும், வியாதியிலும், மரண பயத்திலும், சாபத்திலும் அறியாமையிலும் மூழ்கிக்கிடந்த மனிதருக்கு மறுமைக்குறிய அருள் நிறைந்த ஒரு புதிய வாழ்வை அவர் எடுத்து வந்தார்.
நான் உலகத்தை நியாந்தீர்க்க வராமல்,
உலகத்தை இரட்சிக்க (விடுவிக்க) வந்தேன்.
- இயேசு கிறிஸ்து
இயேசு பிறப்பிலும், வாழ்க்கையிலும் அதிசயமானவராகவே விளங்கினார். பேச்சிலும், போதனையிலும் இறைவனின் அதிகாரத்தை வெளிப்படுத்தினார். அவர் செய்த அற்புத செயல்களிலும், நற்தொண்டுகளிலும் தெய்வத்தின் ஆற்றலையும் அன்பையும் மனிதனுக்கு வெளிப்படுத்திக் காண்பித்தார்.
இயேசு கிறிஸ்து ஏதோ ஒரு மகாத்மாவாகப் பணியாற்றி புகழைப் பெற இவ்வுலகில் பிறக்கவில்லை “சாகப் பிறந்த இயேசு“ என்று கூறினால் அது மிகையாகாது. “சாகப் பிறந்தாரா?” என்று வியப்புடன் நீங்கள் கேட்லாம். ஆம், பாவத்திற்கான பிரயாச்சித்தப் பலியாக பரமன் இயேசு மரிக்க வேண்டியது அவசியமாயிருந்தது. அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் உத்தமராகவே நியாயந்தீர்க்கப்பட்டார்.
இயேசுவின் மரணத்தோடு அவரது வாழ்க்கை வரலாறு முடியுமென்று அவரை விரோதித்தவர்கள் நினைத்தார்கள்.
“கடவுள்“ கடவுளாகவே இருக்கட்டும் நான் நானாகவே இருக்கிறேன் என்பது அநேகருடைய கொள்கை. அதாவது கடவுளுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு உள்ளான, உண்மையான, உறுதியான உறவு கிடையாது. அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் தங்கள் குணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறார்கள். கெட்ட பழக்கங்களிலிருந்து விடுதலையில்லாமல் துடிக்கிறார்கள்.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்.
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்.
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்,
அவரது நாமம் அதிசயமானவர்,
ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன்,
நித்திய பிரதா, சமாதாப் பிரபு.
ஏசாயா 9:6
அநேகர் தங்கள் வாழ்க்கையில் அழகும், ஆனந்தமும், ஆசீர்வாதமும் பெற்று அனுபவியாமல் திசைகெட்டு அலைகிறார்கள். தெய்வமே தன்னைத் தாழ்த்தி, உலகத்தில் பிறந்த எந்த மனிதனும் அவருடைய அன்பையும் ஆற்றலையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இவ்வுலகில் பிறந்தார்.
“இயேசு“ அவதரித்தது துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்ய அல்ல. அதாவது பாவிகளை தண்டித்து அழிப்பதற்காக அல்ல. தாழ்ந்தவர்களை சீர்தூக்கவும், அன்பினால் நிரப்பப்படவும், பரிசுத்தப்படுத்தவுமே இயேசு மனிதராகப் பிறந்தார். உங்களை நேசிக்கிற இயேசு கிறிஸ்து உங்களுக்காக இந்த உலகத்திற்கு மனிதனாக வந்தார்.
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய
இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ
அவர்கள் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு,
இயேசுவைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
scripture
உங்கள் பாவங்களுக்காக, உங்களுக்குப் பதிலாக சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்த இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தார். இன்றைக்கும் ஆண்டவராகிய இயேசு உயிருடன் இருக்கிறார். அவர் உங்களை நேசிக்கிறார்
ஜெபம்:
ஆண்டவராகிய இயேசுவே! உலக இரட்சகரே! உம்மைத் துதிக்கிறேன். இயேசுவே உம்மை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன். என் உள்ளத்தில் நீர் தங்கியிருந்து உமது வெளிச்சத்தை விளங்கச்செய்யும். – ஆமென்.
என்னை விசுவாசிக்கிறவர்கள் (நம்புகிறவர்கள்)
இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
- இயேசு கிறிஸ்து
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது அவர் உங்கள் உள்ளத்தில் பிறக்கிறார். இயேசுவின் பிறப்பும் வாழ்க்கையும் உலக சரித்திரத்தை இரண்டாக பிரித்தது போல இயேசு உங்கள் உள்ளத்தில் வந்து தங்கும்போது உங்கள் வாழ்க்கை மறுமலர்ச்சியைப் பெறும். உங்கள் வியாதியும், பிரச்சனையும் கடந்து போகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நீங்கள் முழு நம்பிக்கை வைத்து அவரை ஏற்றுக்கொள்வீர்களா?
மனிதனுடைய சரீரம் அசுத்த பழக்கங்களால் மூழ்கி அழிய பிசாசினால் உருவாக்கப்பட்டதல்ல. மிருகத் தன்மையை வெளிப்படுத்த மிருகத்திலிருந்து தோன்றியதும் அல்ல. “மனித சரீரம் தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்டது என்றும் இறைவன் தங்கும் ஆலயம்“ என்றும் வேதம் போதிக்கிறது.
தேவனுடைய பிரசன்னமும் பரிசுத்தமும் மனித உள்ளத்தை ஆட்கொண்டு அவருடைய அன்பும் ஆற்றலும் யாவருக்கும் வெளிப்படவேண்டும் என்பதே இறைவனுடைய திருவுள விருப்பம் ஆகும்.
கடவுளுடைய இந்தத் திட்டம் மனிதனுடைய வாழ்வில் இடம் பெறும் வரை மனிதனுக்கு நிலையான அமைதியும், நிறைவான மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. இந்தக் கிருபையை இலவசமாக கொடுக்கவே இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்.
இழந்துபோனதைத் தேடவும்,
இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.
மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல,
இரட்சிக்கிறதற்கே வந்தார்.
- இயேசு கிறிஸ்து
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
மீண்டும் சீக்கிரமாக இந்த உலகத்திற்கு வரப்போகிறார்.
அவரை சந்திக்க நீங்கள் ஆயத்தமா?
ஆண்டவராகிய இயேசுவிற்கு உங்கள் உள்ளத்தில் இடமளிக்க வேண்டும். அவரை நம்பினவர்கள், அவரால் சந்திக்கப்பட்டவர்கள் புதிய மனிதர்களாக மாறினார்கள். இன்றும் ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து, அவரைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறவர்கள் உள்ளத்தில் உலகத்திற்கு ஒளியாக வந்த இயேசு கிறிஸ்துவின் ஜீவஜோதி பிரசாசிக்கிறது.
இயேசு உங்களுக்கு தேவை! அவராலே அல்லாமல் உங்கள் வாழ்வு நிறைவைப் பெற முடியாது.
சுகவீனம் அடைந்தோரை குணமாக்கின, மரிதோரை உயிரோடு எழுப்பின, பாவிகளை மன்னித்து, புதுவாழ்வை அறித்த ஆண்டவராகிய இயேசு உங்கள் உள்ளத்தில் இடம் பெற வேண்டும்.
சத்தியத்தைக் குறித்துச்
சாட்சி கொடுக்க நான் பிறந்தேன்.
இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.
- இயேசு கிறிஸ்து
அதுவே நீங்கள் கொண்டாடக்கூடிய கிறிஸ்துமஸ். இது ஏதோ ஆடம்பரமான வெளிவேஷமல்ல, மதமாற்றமல்ல, உள்ளான மனமாற்றமும், குணமாற்றமுமே உண்மையான கிறிஸ்துமஸ் ஆகும். இந்த மகிழ்ச்சியை அனுபவித்தவர்களால் அதை மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கிறோம்.
முதல் முறையாக இந்த வர்க்கத்திற்கு மீட்பை அருளவந்த இயேசு கிறிஸ்து மிக விரைவில் நீதியுள்ள நியாயத்தீர்ப்பைக் கொடுக்க மீண்டும் வரப்போகிறார். அவரைச் சந்திக்க நாம் யாவரும் ஆயத்தப்படுவோம்.
உங்களுக்கு எங்கள் உள்ளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.!
இயேசுவே என்னை இரட்சியும்!
ஆசீர்வதியும்!
காப்பாற்றும்!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.