================
தலைப்பு: எழுந்து வா
=================
உன்னதப்பாட்டு 2:10
என் நேசர் என்னோடே பேசி என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா
உன்னதப்பாட்டு புத்தகம் ஒரு காதல் கடிதம். இதில் உள்ள வசனங்கள் அனைத்தும் காதல் கவிதைகள் போன்று இருப்பதால், இப்புத்தகம் கடவுளின் வார்த்தைகள் அல்ல என்று, அநேக கிறிஸ்தவர்கள் சொல்வதுண்டு்
இது தவறான கருத்து. மற்ற புத்தகங்களைப் போன்றே இந்த உன்னதப்பாட்டு புத்தகமும் கடவுளுடைய வார்த்தையே. இதை எழுதியவர் சாலொமோன்.
புதிய ஏற்பாட்டில் மணவாளன் என்பது கிறிஸ்துவைக் குறிக்கிறது. மணவாட்டி என்பது சபையைக் குறிக்கிறது. மணவாளனுக்கும், மணவாட்டிக்கும் உள்ள காதல் உணர்வை பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த சாலொமோன் ஞானி தீர்க்கதரிசனமாக இப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஆண்டவர் என் பிரியமே, என் ரூபவதியே எழுந்து வா! என்று சபையை அழைக்கிறார். சபையாகிய நாம் எதையெல்லாம் விட்டு எழுந்து வரவேண்டும் என்று இந்த குறிப்பில் தியானிப்போம்.
1. துக்கத்தை விட்டு எழுந்து வர வேண்டும்
மத்தேயு 6:27 | லூக்கா 12:25
கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
சபையாகிய நாம் துக்கத்தைவிட்டு எழுந்து வர வேண்டும் என்று கிறிஸ்து விரும்புகிறார்.
துக்கம் வர காரணம் என்ன?
நம்முடைய ஆசைகள் தான் துன்பத்திற்குக் காரணமாய் இருக்கிறது. ஆண்டவர் நம்மை ஒவ்வொரு நாளும் கண்ணின் மணிபோல பாதுகாத்து வழிநடத்தி வருகிறார். நம்முடைய தேவைகளை நேர்த்தியாய் சந்தித்து வருகிறார். நாம் சொல்லும் இடங்களிளெல்லாம் பாதுகாப்பு தருகிறார்.
ஆண்டவர் நமக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருந்தாலும், எத்தனையே கிருபையை கொடுத்திருந்தாலும், நான் எதிர்பார்த்த, நான் ஆசைப்பட்ட இந்த காரியத்தை கடவுள் எனக்குச் செய்யவில்லையே என்று எண்ணி, நாம் கவலைப்பட்டு கலங்குவதுண்டு.
நமக்கு இருக்கின்ற இந்த ஐசுவரியம், பொருளாதாரம், பதவி உயர்வு இல்லாதவர்கள் நாட்டில் அநேகர் உண்டு. சரியான உணவு கிடைக்காமல் ஒருவேலை உணவுக்காக ஏங்குகிறவர்கள் அநேகர் உண்டு. இப்படிப்பட்ட நபர்களை நாம் அனுதினமும் சந்திக்கிறோம். இவர்களைவிட ஆண்டவர் என்னை உயர்த்தி வைத்திருக்கிறார் என்று நாம் ஒருநாளும் ஆண்டவருக்கு நன்றி சொல்வதில்லை.
ஆனால் நம்மைவிட வசதிவாய்ப்புக்களில் உயர்ந்து இருப்பவரைப் பார்த்து, அவரைப்போல் என் வாழ்வும் அமையவில்லையே என்று கவலைப்பட்டு கலங்குகிறோம்.
நாம் நம்முடைய துக்கத்தைவிட்டு எழும்ப வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.
துக்கத்தினால் சரீரம் பாதிக்கப்படும்
சங்கீதம் 31:9
எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன். துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
நாம் கவலைப்படுவதால் நம்முடைய சரீரம் பாதிக்கப்படும். நமக்கு ஏற்பட்ட நஷ்டங்களையும், தோல்விகளையும் நினைத்து நாம் கவலைப்பட்டு கலங்குவதால் நம்முடைய சரீரம் பெலனடையப்போவதில்லை, சரீரத்தில் வியாதிகளும், பெலவீனமும் தான் ஏற்படும். எனவே, கடந்ததை நினைத்து கவலைப்பட்டு கலங்காமல், இனி எப்படி செயல்படவேண்டும், என்று யோசித்து, ஞானமாய் நடந்துகொள்ள வேண்டும்.
மத்தேயு 6:27
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
துக்கம் மரணத்தை உண்டாக்கும்
2 கொரிந்தியர் 7:10ஆ
லௌகீக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
லௌகீக துக்கம்
லௌகீக துக்கம் என்பது உலகப்பிரகாரமான துக்கம் அல்லது கவலை. உலகப்பிரகாரமான கவலைகள் சில நேரங்களில் மரணத்தையும் கூட ஏற்படுத்துன்றது.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டான். மகனின் பிரிவைத் தாங்கமுடியாமல், துக்கத்தின் மிகுதியினால் தகப்பனும் மரித்துப்போனார் என்ற செய்தியை நாம் செய்தித்தாளில் வாசித்திருப்போம்.
உலகப்பிரகாரமான கவலைகளும், சோர்வுகளும், வேதனைகளும் சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகின்றது.
எனவே, நாம் கிடைக்காத ஒன்றுக்காக, இல்லாத ஒன்றுக்காக கவலைப்பட்டு கலங்குவதை விட்டுவிட்டு, இருப்பதில் சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்வோம்.
நாம் நினைத்த ஒரு காரியம் நடைபெறாதபோது, அதை நினைத்து நாம் எவ்வளவு நாள் கவலையோடு, கண்ணீரோடு அமர்ந்திருந்தாலும் அது நமக்கு கிடைக்கப்போவதில்லை. எத்தனை போராட்டங்கள் வந்தாலும் தொடர்ந்து நாம் முயற்ச்சிக்கும்போது தோல்விகளை வெற்றியாக மாற்ற முடியும்.
பிலிப்பியர் 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள். சந்தோஷமாய் இருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
நம்முடைய வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பெலவீனங்கள், தோல்விகள் ஏற்பட்டாலும், கர்த்தர் என்னோடு கூட இருக்கிறார். அவர் என்னை பெலப்படுத்துவார், அவர் என்னை நடத்துவார் என்று நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
எந்த இடத்திலும் மறுபடியும் சொல்லுகிறேன் என்று சொல்லாத பவுல், சந்தோஷமாய் இருங்கள் என்று மறுபடியும் வழியுறுத்துகிறார்.
வாழ்வின் எப்பேர்பட்ட கடினமான சூழ்நிலையாக இருந்தாலும், கர்த்தர் என்னை நடத்துவார், இந்த சூழ்நிலையும் ஓர்நாள் மாறும் என்ற விசுவாசத்தோடு, தொடர்ந்து கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்போம்.
அன்னாள்
அன்னாள் என்ற ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லையே என்று பல நாட்கள், கவலையோடும் கண்ணீரோடும் இருந்தால். ஒருநாள் ஆண்டவருடைய சமுகத்திற்கு வந்து தன்னுடைய கவலைகளையெல்லம் இரக்கிவைத்த பின்பு, அவள் துக்கமுகமாய் இருக்கவில்லை.
1 சாமுவேல் 1:18ஆ
அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
அன்னாளைப்போல நாமும் நம்முடைய துக்கங்கள், மனபாரங்கள், வேதனைகள், கண்ணீர் யாவற்றையும் ஆண்டவர் சமுகத்தில் இரக்கிவைத்துவிட்டு, ஆண்டவர் என் பாதையை செவ்வைப்பண்ணுவார் என்ற விசுவாசத்தோடு, துக்கமுகமாய் இல்லாமல் சந்தோஷமாய் இருப்போம்.
நாம் ஆலயத்திற்கு வருகின்றோம், நம்முடைய வேதனைகள், பாரங்களை ஆண்டவருடைய சமுகத்தில் இரக்கிவைக்கின்றோம். ஆலயத்தைவிட்டுச் செல்லும்போது, உமக்கு எதுக்கு ஆண்டவரே வீண் சிரமம் என் கவலைகளை நானே எடுத்துக்சென்று விடுகிறேன் என்று சொல்வதுபோன்று, ஆலயத்தைவிட்டு வெளியே வரும்போது அதே கவலையோடு, வேதனையோ ஆலயத்தைவிட்டு வெளியே வருகின்றோம்.
அன்னாலைப்போல நம்முடைய கவலைகளை ஆண்டவரிடம் இரக்கிவைத்துவிட்டு, துக்கத்தைவிட்டு எழும்பி, மகிழ்ச்சியாய் இருப்போம். ஆண்டவர் நம்மை உயர்ந்த இடத்தில் அமர வைப்பார்.
அன்னாளின் ஜெபத்தைக் கேட்ட ஆண்டவர் சாமுவேலை மாத்திரம் அல்ல, சாமுவேலுக்குப் பின் இன்னும் மூன்று ஆண் பிள்ளைகளையும், இரண்டு பெண் பிள்ளைகளையும் கொடுத்தார்.
துக்கத்தைவிட்டு எழும்பிய அன்னாளை ஆசீர்வதித்த இறைவன், நாமும் துக்கத்தைவிட்டு எழும்பும்போது நம்மையும் ஆசீர்வதிப்பார்.
தேவனுக்கேற்ற துக்கம்:
2 கொரிந்தியர் 7:10அ
தேவனுக்கேற்ற துக்கம் முன்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது.
துக்கம் நல்லதல்ல, துக்கத்தினால் சரீரம் பாதிக்கப்படும், துக்கத்தினால் மரணம் கூட நேரிடலாம் என்று சொல்லும் வேதம், ஒருவித துக்கம் மாத்திரம் நல்லது என்று கூறுகிறது. அதாவது தேவனுக்கேற்ற துக்கம் நல்லது என்று வேதம் கூறுகிறது.
தேவனுக்கு ஏற்ற துக்கம் என்பது, நாம் ஆண்டவருடைய வார்த்தைகளை தியானிக்கும்போது, ஆலயத்தில் ஊழியர் மூலமாக கடவுளின் வார்த்தை வெளிப்படும்போது, நம்முடைய குறைகளை ஆண்டவர் உணர்த்துவாரானால் அதற்காக நாம் துக்கப்பட வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.
யாராவது ஒருவர் நீங்கள் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள், உங்கள் பாதைகளை சரிபடுத்துங்கள் என்று, நம்மை கண்டித்து உணர்த்தும்போது அதற்காக நாம் துக்கப்பட வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.
இப்படிப்பட்ட துக்கங்கள் மனஸ்தாபத்தை உண்டாக்காமல், நம்மை நாம் இரட்சித்துக்கொள்வதற்கு, நரகத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதற்கு ஏதுவாயிருக்கிறது என்று பவுல் கூறுகிறார்.
ஆண்டவர் விரும்பாத உலக காரியங்களுக்காக கவலைப்படுகின்ற நாம், ஆண்டவர் விரும்புகின்ற காரியத்திற்கு கவலைப்படுவதில்லை. யார்தாம் ஒருவர் நம்முடைய குற்றத்தை உணர்துவாரானால், நாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு, நீ என்னை குற்றப்படுத்துகிறாயா? நீ பெரிய நீதிமானா? நீ என்ன கடவுளா? என்னையே குற்றப்படுத்துகிறாய் என்று அவர்களிடம் கோபம் கொள்கிறோம்.
நாம் தவறு செய்யும்போது, நம்மைவிட வயதில் குறைந்த ஒருவர் நம்முடைய குற்றத்தை உணர்த்துவாரானால் அதற்காக நாம் கவலைப்பட வேண்டும். மனம் திரும்ப வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.
2. தூக்கத்தை விட்டு எழுந்து வர வேண்டும்
எபேசியர் 5:14
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
கிறிஸ்து நம்மில் கிரியை செய்ய வேண்டுமானால் நாம் தூக்கத்தை விட்டு எழும்ப வேண்டும்
தூங்குகிறவர்களை ஆண்டவர் மரித்தவர்களுக்கு நிகராக ஒப்பிடுகிறார்.
எலியா
1 இராஜாக்கள் 19:5,7
5. ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான். அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி யெழுப்பி: எழுந்திருந்து போனஜம்பண்ணு என்றான்.
7. கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு. நீ பண்ண வேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்.
இஸ்ரவேலர்கள் பழைய ஏற்பாட்டை நியாயப்பிரமாண புத்தகம், தீர்க்கதரிசன புத்தகம் என இரண்டு பிரிவுகளாக பிரித்தார்கள். ஆதியாகமம் முதல் உபாகமம் வரை உள்ள நியாயப்பிரமாண புத்தகத்தின் பிரதிநிதி மோசே.
யோசுவா முதல் மல்கியா வரை உள்ள தீர்க்கதரிசன புத்தகத்தின் பிரதிநிதி எலியா.
இப்படி பழைய ஏற்பாட்டில் முக்கியமான நபராக கருதப்படும் எலியா ஒரு யேசபேல் என்னும் ராணிக்கு பயந்து ஒரு சூரைச்செடியின் கீழ் படுத்து தூங்குகிறார். ஆண்டவர் தூதனை அனுப்பி அவரை தட்டி எழுப்பி, நீ பண்ண வேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்று சொன்னார்.
நாமும் இந்த உலகத்தில் பண்ண வேண்டிய பிரயாணம் வெகுதூரம், நாம் இந்த உலகத்தில் சாதிக்க வேண்டிய காரியம் அநேகம். நாம் தூக்கத்தை விரும்பி நேரத்தையும், காலங்களையும் வீண் விரயம் செய்யாமல், கடவுள் நமக்கு கிருபையாய் கொடுத்திருக்கின்ற நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
நீதிமொழிகள் 24:33,34
33. இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
34. உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.
நாம் தூக்கத்தை விரும்புவோமானால், தரித்திரமும், வருமையும் நம்முடைய வீட்டில் வாசற்படியில் நிற்கும். கடவுள் கொடுத்திருக்கின்ற பெலன் இருக்கும் வரை நாம் உற்ச்சாகமாக உழைக்க வேண்டும்.
சராசரியாக ஒரு நாளைக்கு ஒருமனிதன் ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். அதற்கு குறைவாக தூங்குவதும் தவறு. அதற்கு அதிகமாக தூங்குவதும் தவறு.
பள்ளிகளில் கால அட்டவனை எதற்காக கொடுக்கிறார்கள். நாம் பொழுதுபோக்குக்காக பள்ளிக்கு வராமல், அந்தத்த நேரத்திற்கு அந்த அந்த பாடங்களை சரியாய் படிக்க வேண்டும் என்பதற்காகவே.
நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கு ஒரு கால அட்டவனை தேவை. அதிகாலையில் எழுந்ததும் இந்த நாளில் நான் என்ன என்ன காரியங்களை செய்து முடிக்கப்போகிறேன் என்ற வரைமுறையை நாம் திட்டமிட வேண்டும்.
கணவன்:
அநேக குடும்பங்களில் மனைவி சமைப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போன்ற வேலைகளை செய்துகொண்டே தினமும் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டுகிறார்கள். அநேக ஆண்கள் வீட்டு வேலையையும் செய்யாமல், நன்றாக தூங்கி எழுந்து, மனைவி ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, டீ கடைக்கு சென்று அந்த நாள் முழுவதையும் வீணாக கழித்துக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் வந்து இரவு நன்றாக தூங்கிவிடுகிறார்கள்.
இப்படி எந்த வேலைகளையும் செய்யாத ஆண்கள், வேலைசெய்ய மனமில்லாத ஆண்கள் கடவுள் என் குடும்பத்தின் சூழ்நிலையை மாற்ற வில்லை, என் ஜெபத்தை கேட்கவில்லை என்று கடவுளை குறைசொல்வதும் உண்டு்.
மனைவி:
எனது நண்பன் நன்றாக வேலைசெய்யக்கூடிய ஒரு மனிதன். ஒரு முறை நான் அவருடைய வீட்டிற்கு சென்றபோது, வீட்டில் உள்ள எல்லா சமையல் பாத்திரங்களையும் அவர் கழுவிக்கொண்டிருந்தார். கழுவி முடித்ததும் அந்த நேரத்திற்கான உணவை அவரே தயார் செய்ய ஆரம்பித்தார். நான் அவரிடம் கேட்டேன், நண்பனே, உன் மனைவி எங்கு இருக்கிறார்கள், அவர்கள் இந்த சமையல் வேலையை செய்ய மாட்டார்களா? என்று கேட்டேன்.
இதைக் கேட்ட நண்பனின் மனைவி, அறைவீட்டில் இருந்து வெளியே வந்து சொன்னார்கள். சகோதரா, நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முன்பே ஒப்பத்தம் செய்துகொண்டோன். எனக்கு சமையல் வேலைகள் தெரியாது, என்று நான் சொன்னபோது, நானே சமைத்துக்கொள்கிறேன் என்று சொல்லி ஒப்புக்கொண்டே என்னை உன் நண்பர் திருமணம் செய்து கொண்டார் என்று சொன்னார்கள்.
இப்படி குடும்ப பொறுப்பு இல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் இருக்கின்ற பெண்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த வேலையை கணவன் தான் செய்ய வேண்டும், இந்த வேலையை மனைவி தான் செய்ய வேண்டும் என்ற எந்த பாகுபடும் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம்.
எப்படி ஆண்களுக்கு நிகராக பெண்களும் தினமும் வேலை செய்து சம்பாதிக்கிறார்களோ, அதைப்போல தினமும் சமையல் வேலையை ஆண்கள் செய்வதில் எந்த தவறும் இல்லை.
ஆனால், நான் சோம்பேறியாய் நன்றாக படுத்து உறங்குவேன் என் கணவன் வீட்டில் உள்ள சமையல் வேலைகளை பார்த்துக்கொள்வார், வேலைக்கு சென்று சம்பாதிப்பார் என்று மனைவி சொல்லுவதும் தவறு.
நான் தான் குடும்பத்தின் தலைவர், நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன், மனைவி வேலை செய்து குடும்பத்தை நடத்தினால் போதும் என்று கணவன் சொல்லுவதும் தவறு.
ஆண்டவர் நமக்கு கிருபையாய் கொடுத்திருக்கின்ற, நேரத்தையும், காலங்களையும், திறமைகளையும், சரீர சுகபெலனையும் பயன்படுத்தி நாம் நம்மால் இயன்ற மட்டும் உழைக்க வேண்டும்.
இந்த உலகத்தில் இரண்டு கால்களும் இல்லாத அநேகர் சாதித்திருக்கிறார்கள். இரண்டு கைகள் இல்லாத அநேகர் பெரிய மகத்தான காரியங்களை செய்திருக்கிறார். இரண்டு கண்களும் இல்லாத அநேகர் உலக சாதனை படைத்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு தேடிவரவில்லை. அவர்களுக்கான வாய்ப்புக்களை தாங்களே ஏற்படுத்திக்கொண்டார்கள்.
ஆண்டவர் நமக்கு நல்ல சரீர சுகபெலனை கொடுத்திருக்கிறாரே, நாம் இன்னமும் தூக்கத்தை விரும்புவோமானால், நம்மை உயர்த்த கடவுளாலும் கூடாது. தூக்கத்தை விட்டு எழும்பி, உழைக்கும்போது அதை ஆண்டவர் கனப்படுத்தி நம்மை ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
3. பாவத்திலிருந்து எழுந்து வர வேண்டும்
லூக்கா 15:20
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இளையவன் தன் தகப்பனை நோக்கி, தகப்பனே ஆஸ்திரியில் எனக்கு வரும் பங்கை தரவேண்டும் என்று கேட்டார். தகப்பனும் கொடுத்துவிட்டார்.
சில நாட்கள் சென்றபின்பு இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு தூரதேசம் போனார். தன் ஆஸ்தியை துன்மார்க்கமாய் அழித்துப்போட்டார்.
இந்த உவமையை லூக்கா 15:11-32 உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இங்கே தகப்பன் என்பவர் கர்த்தர். குமாரன் என்பது மனிதர்களாகிய நாம்.
குமாரன் தன் தகப்பனிடமிருந்து புறப்பட்டு தூரதேசம் போனபோது, என் மகன் இத்தனை நாட்களாக என் கட்டுப்பாட்டில் இருந்தான், நான் அவனை நன்றாக பராமரித்தேன், அவனுடைய தேவையை சந்தித்தேன், அவனுக்கு வேண்டியதையெல்லாம் சந்தித்தேன், இப்பொழுதோ அவன் என்னைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டானே என்று மனஸ்தாபப்பட்டு கலங்குகின்றார்.
இங்கே ஒரு காரியத்தை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். இந்த தகப்பன் மிகப்பெரிய ஐசுவரியவான். அவருடைய வீட்டில் அநேக வயல் நிலங்கள் இருந்தன. அநேக வேலையாட்களும் அவருக்கு இருந்தார்கள். ஒருவனை போ என்றால் போவதற்கும், ஒருவனை வா என்றால் வருவதற்கும் அநேக வேலையாட்கள் இந்த தகப்பனுக்கு இருந்தார்கள்.
என் மகன் என்னைவிட்டு பிரிந்து சென்றால், அவனால் நின்மதியாக இருக்க முடியாது, அவனால் ஆசீர்வாதமாக இருக்க முடியாது, சந்தோஷமாக இருக்க முடியாது என்பது தகப்பனுக்கு நன்றாகத் தெரியும். அப்படியானால், இந்த தகப்பன் ஒரு காரியம் செய்திருக்கலாம். தன் வேலையாட்களை அனுப்பி, என் மகன் எங்கே இருக்கிறான் என்று தேடி கண்டுபிடித்து அவனை கூட்டிக்கொண்டு வாருங்கள் என்று சொல்லியிருக்கலாம். இல்லையென்றால், தன் மகன் அல்லவா, தானே இரங்கிச் சென்று தன் மகனைத் தேடியிருக்கலாம். ஆனால் அந்த தகப்பன் அதைச் செய்யவில்லை.
இந்த இளைய மகனைபோலவே அநேகர் ஆண்டவருக்கு பிரியமில்லாத வழியில் நடந்துகொண்டிருக்கிறோம். ஆனால் நாம் தவறான பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் அறியாதிருக்கின்றோம்.
இந்த இளைமகன் என் தகப்பனை விட்டு நான் வெளியே வந்தது நல்லது, இப்போது நான் சந்தோஷமாக இருக்கின்றேன் என்று நினைத்தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய பணம் குறைய ஆரம்பித்தது. பணம் குறைய ஆரம்பித்தபோதே அவன் தன் தகப்பனிடம் சென்றிருக்க வேண்டும்.
நாமும் தவறான பாதையில் சென்றுகொண்டிருப்போமானால், நம்முடைய சந்தோஷம் குறைந்துபோம், நம்முடைய நின்மதி குறைந்துபோம், எடுத்த காரியங்கள் தோல்வியாய் முடியும்.
இப்படியாக ஆண்டவர் நம்முடைய பாவத்தை உணர்த்தும்போது நாம் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். அநேக கிறிஸ்தவர்கள் ஆண்டவர் ஒரு பாவத்தைக் கண்டித்து உணர்த்தும்போது கீழ்ப்படியமாட்டார்கள். நான் செய்வது தவறு என்றால், ஆண்டவரே நேரில் வந்து எனக்கு உணர்த்தட்டும் நான் என் தவறை திருத்திக்கொள்கிறேன் என்று சொல்லுவார்கள்.
இளைய மகனை தேடி அந்த தகப்பன் எப்படி செல்லவில்லையே, அதைப்போல ஆண்டவர் நம்மைத்தேடி ஒருபோதும் வரமாட்டார்.
ஊழியர்கள் மூலமாக, வேத வசனத்தின் மூலமாக ஆண்டவர் நம்முடைய பாவத்தை உணர்த்தும்போது, நாம் உணர்வடைய வேண்டும். ஆண்டவர் நேரடியாக என்னோடு பேசினால் மாத்திரமே நான் செய்வது குற்றம் என்று நான் உணர்ந்துகொள்வேன் என்பது முட்டாள்தனம்.
வெளிப்படுத்தல் 3:20
இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
நாம் தவறான பாதையில் நிற்கும்போது ஆண்டவர் நம்மைத் தேடி வரமாட்டார். நாம் தான் ஆண்டவரைத் தேடி வரவேண்டும். ஆண்டவர் வாசற்படியில் நின்று கதவைத் தட்டிக்கொண்டே இருக்கிறார். நாம் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நம்மோடு வந்து தங்குவார்.
அந்த இளைய மகன் எல்லாவற்றையும் இழந்தவனாக தன் தகப்பனை தேடி வந்தபோது, அவன் தூரத்தில் வரும்போதே அவன் தகப்பன் ஓடிச் சென்று அவனை கட்டி அனைத்து முத்தமிட்டார்.
என் தகப்பனிடத்தில் நான் வரவேண்டும் என்று அவன் முதல் படியை எடுத்துவைத்தபோது, அவன் தகப்பன் சிங்காசனத்தைவிட்டு இரங்கி வந்து, தன் மகனை கட்டி அனைத்து அவனை முத்தஞ்செய்கிறார்.
நாம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதல் முயற்ச்சியை எடுக்கும்போது, ஆண்டவர் நம் உள்ளதில் வந்து நம்மை பரிசுத்தப்படுத்தி, புதிய மனுஷனாக மாற்ற வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
இந்த இளைய மகனைப்போல எல்லாவற்றையும் இழந்த பின்பு தகப்பனைத் தேடி வருவதைவிட, இந்த நிலையிலே நாம் ஆண்டவரோடு ஐக்கியப்படுவோமானால், நாம் எப்பேர்பட்ட பாவியாக இருந்தாலும், ஆண்டவர் நம்மை ஏற்றுக்கொண்டு, நம்மை கழுவி, சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்த அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
நாம் நம்முடைய பாவத்தை விட்டு எழும்ப வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.
எழுந்து வா என்ற இந்த கட்டுரையின் மூலம் மூன்று காரியங்களைக் கற்றுக்கொண்டோம். தாம் துக்கத்தை விட்டு எழும்ப வேண்டும், தூக்கத்தை விட்டு எழும்ப வேண்டும், பாவத்தை விட்டு எழும்ப வேண்டும்.
இம்மூன்று காரியங்களையும் விட்டு நாம் எழும்பி, மணவாட்டியாகிய நாம் மணவாளனாம் இயேசுவோடு இணைந்து வாழும்போது அவருடைய ஆசீர்வாதத்தையும், நன்மைகளையும் பெற்று உயர்ந்த இடங்களிலே வாழ முடியும்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்…..!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.