Type Here to Get Search Results !

அப்போஸ்தலர் நடபடிகள் 21-28 | Acts Bible Study Part 10 | பவுலின் கடைசி மினெரி பயணம் | Jesus Sam

=========================
அப்போஸ்தலர் நடபடிகள் (பாகம் பத்து)
===========

அப்போஸ்தலர் இருபத்து ஒன்று (21)
====================
பவுல் மூன்றாவது மிஷனெரி பயணத்தை முடித்துவிட்டு செசரியாவுக்கு வந்தார். அங்கே அகபு என்னும் தீர்க்கதரிசி, பவுல் எருசலேமில் கைது செய்யப்படுவார் என்று கூறினார். சீஷர்கள் அனைவரும் பவுலை எருசலேமிற்கு போகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். பவுல் நான் கிறிஸ்துவுக்காக கைதுசெய்யப்பட மாத்திரம் அல்ல, மரிக்கவும் ஆயத்தமாய் இருக்கிறேன் என்று சொன்னார்.

பவுல் செசரியாவிலிருந்து எருசலேமுக்கு வந்து, சகோதரரை சந்தித்து, அவர்களிடத்தில் ஊழியத்தைக் குறித்த அறிவிக்கையை சமர்ப்பித்தார்.

பவுல் மிகப்பெரிய ஊழியர், அவர் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சகோதரர்கள் அவரிடத்தில் உங்கள் ஊழிய அறிக்கையை சமர்ப்பியுங்கள் என்று கேட்கவுமில்லை. ஆனால், பவுல் தலைமைத்துவத்திற்கு கணக்கு ஒப்படைத்தார்.

இக்கால ஊழியர்களும் பவுலிடமிருந்து இக்காரியத்தை கற்றுக்கொள்ள வேண்டும். உதவி ஊழியர்கள் தலைமைத்துவத்திற்கு கணக்கு ஒப்புவிக்கும்போது, தாங்கள் செய்த ஊழியத்தை அறிக்கையாய் சமர்ப்பிக்க வேண்டும்.

எனது தலைமைத்துவம் இப்படிப்பட்ட அறிக்கையைத்தான் எதிர்பார்க்கிறது என்று, தலைமைத்துவத்திற்கு ஏற்ற போலி அறிக்கையை சமர்ப்பிக்காமல், உண்மையில் நாம் என்ன ஊழியம் செய்தோமோ அந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

கணக்கு ஒப்புவித்தல் என்பது சிறந்த முறையாக இருந்தாலும், தலைமைத்துவத்திற்காக நாம் ஊழியம் செய்யாமல், கர்த்தருக்காக ஊழியம் செய்ய வேண்டும்.



பவுல் யூதர்களுக்கு மாத்திரம் அல்ல, புறஜாதிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். புறஜாதியார் விருத்தசேதனம் பண்ண வேண்டிய கட்டாயம் இல்லை என்று வாதாடியவர் இந்த பவுல். பவுலின் இந்த காரியங்களை தவறாக புரிந்துகொண்ட யூதர்கள் பவுலை ஒரு யூத மத விரோதியாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

பவுல் ஒருபோதும் யூத மதத்திற்கு எதிராகவோ, நியாயப்பிரமாணத்திற்கு எதிராகவோ செயல்படவில்லை. பவுல் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதினாலும், புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவித்ததினாலும், யூதர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியதினாலும், விருத்தசேதனத்தைப் பற்றி பேசியதாலும் சில யூத மதத் தலைவர்கள் பவுலை யூத மத விரோதி என்று நினைத்தார்கள்.

யூதர்களுக்கு நசரேய விரதம் என்ற முறை உண்டு. அதைப்போலவே, வேண்டிக்கொண்டு தலைச்சவரம் பண்ணுகிறவர்களும் உண்டு. பவுலைக் குறித்த யூதர்களின் தவறான எண்ணத்தை நீக்கும்படியாக, எருசலேமில் உள்ள சகோதரர்கள் பவுலினிடத்தில், தலைச்சவரம் பண்ணிக்கொள்ள விரும்புகிற நான்கு பேர் நம்மிடத்தில் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு தேவையான செலவுகளை செய்து, அவர்கள் தலைச்சவரம் பண்ணிக்கொள்ளும்போது நீங்களும் தேவாலயத்திற்கு சென்று உங்களை சுத்திகரித்துக்கொள்ளுங்கள். இதைப் பார்க்கிற யூதர்கள் பவுல் யூத மத விரோதி அல்ல என்று அறிந்துகொள்வார்கள் என்று ஆலோசனை சொன்னார்கள்.

பவுல் சகோதரரின் ஆலோசனைப் படி எல்லா காரியங்களையும் செய்தார்.



பவுலின் ஊழியப் பயணத்தில் அவரோடு கூட சில கிரேக்கர்கள் இருந்தார்கள். இதைப் பார்த்த ஆசிய நாட்டாரான யூதர்கள், பவுல் தேவாலயத்திற்கு வந்தபோது, பவுல் கிரேக்கர்களை தேவாலயத்திற்குள் அனுமதித்து தேவாலயத்தை தீட்டுப்படுத்தினார் என்று கலகத்தை உண்டு பண்ணினார்கள்.

கலகம் அதிகமானதினால், போர்ச்சேவகர்கள் பவுலை இழுத்துக்கொண்டு சேனாபதியினிடத்திற்குப் போனார்கள். சேனாபதி ஒரு ரோமன். பவுல் சேனாபதியினிடத்தில் கிரேக்கு பாஷையில் பேசியதால் சேனாபதி ஆச்சரியப்பட்டார். ரோமர்கள் உலகப் பொதுமொழியாகிய கிரேக்க மொழியையே பயன்படுத்தி வந்தார்கள்.

சேனாபதி பவுலிடம் நீதான 4000 கொலை பாதகரை வனாந்திரத்திற்கு கொண்டுபோன எகிப்தியன் என்று கேட்ட போது, பவுல் இல்லை, நான் சிலிசியா நாட்டிலுள்ள புகழ் பெற்ற தர்சு பட்டணத்தான் என்று சொல்லுகிறார்.

பவுல் நான் யூதர்களோடு பேசவேண்டும் என்று சொன்னபோது சேனாபதி அதற்கு உத்தரவு கொடுத்தார்.


அப்போஸ்தலர் இருபத்து இரண்டாம் (22) அதிகாரம்
===============
பவுல் யூதரோடு பேசும்போது எபிரெயு பாஷையில் பேசினார். பவுல் பேசும்போது கூடியிருந்த அனைவரும் அமைதலாயிருந்தார்கள்.

ஊழியர்கள் பிரசங்கம் பண்ணும்போது ஜனங்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர்கள் மொழிநடையில் பேச வேண்டும். பவுல் அதைத்தான் செய்தார்.  பவுல் ஒரு பன்மொழி பண்டிதர். சிறந்த கல்விமான்.

தமிழ் என்ற ஒரு மொழியை எடுத்துக்கொண்டால், மதுரையில் உள்ளவர்கள் பேசும் தமிழ் வேறுமாதிரியும், சென்னையில் உள்ளவர்கள் பேசும் தமிழ் வேறுமாதிரியும், இலங்கையில் உள்ளவர்கள் பேசும் தமிழ் வேறுமாதிரியும் காணப்படும்.

நாம் எந்த இடத்தில் பேசுகிறோமோ, அங்கு உள்ள ஜனங்கள் எந்த மொழி பேசுகிறார்களோ, அந்த மொழிநடையில் நாம் பேசினோமானால், ஜனங்கள் ஆர்வமாக வார்த்தையை கவனிப்பார்கள்.

ஒருசில ஊழியர்கள் தங்களை ஜனங்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்கிறோம். தமிழ் கிறிஸ்தவர்களும் ஆங்கிலம் பேசும் ஊழியர் என்றால், அவர் மிகச் சிறந்த ஞானி என்று நினைக்கிறார்கள். இங்கிலாந்தில் பிச்சைக்கார்களும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தும் தொழில் செய்பவர்களும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். ஒருவர் ஆங்கிலம் பேசிவிட்டார் என்பதினால், அவர் கல்விமான், ஞானி என்று நினைப்பது தவறு.

இன்னும் சில ஊழியர்கள் தமிழிலும் பேசாமல், ஆங்கிலத்திலும் பேசாமல் இரண்டு மொழிகளிலும் கலந்து பேசுவார்கள்.

நாம் எத்தனை மொழிகள் படித்திருந்தாலும், எவ்வளவு கல்வி அறிவு இருந்தாலும், மேடையில் பேசும்போது கேட்கும் ஜனங்கள் புரிந்துகொள்ளும் விதத்தில், அவர்கள் மொழிநடையில் பேசுவது சிறந்த முறையாகும்.



பவுலின் சாட்சி முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள், இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்ற வேண்டும். இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல என்று மிகுந்த சத்தமிட்டார்கள்.



ஜனங்கள் அதிகமாக கூச்சலிட்டதினால் சேனாபதி பவுலை கோட்டைக்குள் அழைத்து, ஜனங்கள் இப்படி கூச்சலிட என்ன காரணம் என்று இவனை சவுக்கால் அடித்து விசாரியுங்கள் என்று சொன்னார்.

கூடியிருந்த ஜனங்கள் அனைவரும் பவுலுக்கு விரோதமாக எழும்பி நிற்பதினால், பவுல் நிச்சயமாக ஏதோ பெரிய பொல்லாங்கு செய்திருக்கிறான் என்று சேனாபதி நினைத்தார்.

பவுல் செசரியாவில் இருக்கும்போது கிறிஸ்துவுக்காக கைது செய்யப்படுவதற்கு மாத்திரம் அல்ல, மரிக்கவும் ஆயத்தமாய் இருக்கிறேன் என்று சொன்னார். ஆனால், இங்கே பவுல் காரணம் இல்லாமல் போர்ச்சேவகர்களால் அடிவாங்குவதை விரும்பவில்லை.

எனவே பவுல் சேவகர்கள் தன் கையை வாரினால் கட்டும்போது, சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியைப் பார்த்து, ரோமனும், நியாயம் விசாரிக்கப்படாதவனுமாய் இருக்கிற மனுஷனை அடிக்கிறது நியாயமோ என்று கேட்டார்.

பவுலின் வார்த்தைகளைக் கேட்ட நூற்றுக்கு அதிபதி பயந்து, சேனாபதியினிடத்தில் போய், நீ செய்யப்போகிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரும், அந்த மனுஷன் ரோமன் என்றார்.

பவுல் ரோம குடியரிமை பெற்ற தாய் தகப்பனுக்கு பிறந்தவர். ஆனால் இந்த சேனாபதி மிகுந்த திரவியத்தினால் ரோம குரியுரிமை பெற்றவர்.

அந்த நாட்களில் ரோம் நாட்டில் பிறக்காத ஒருவர் ரோமக்குடியுரிமை பெற வேண்டுமானால், அதற்கான தேர்வுகள் எழுத வேண்டும். அநேக பணம் செலவு செய்ய வேண்டும். நூறு பேர் ரோமகுடியுரிமைக்காக பிரயாசப்படுகிறார்கள் என்றால், அதில் ஐந்து பேருக்கு மாத்திரமே அந்த குடியுரிமை கிடைக்கும்.

ரோம குரியுரிமை பெற்ற ஒருவரை அவ்வளவு எளிதில் யாராலும் தொட முடியாது. பவுலை கட்டுவித்ததற்காக சேனாபதி மிகவும் பயந்தார்.

சுவிசேஷம் அறிவிப்பதால் எதிர்ப்புகள் வரும்போது, நாம் சிலநேரங்களில் நம்முடைய உலகப்பிரகாரமான பதவியை பயன்படுத்துவது நல்லது.

கிறிஸ்தவர்கள் என்றாலே யார் அடித்தாலும் வாங்கிக்கொள்ளுவார்கள் என்பது அல்ல, கிறிஸ்துவுக்காக சாக தயாராக இருக்க வேண்டும், அதற்காக யார் அடித்தாலும் வாங்கிக்கொண்டு இருக்கக்கூடாது.

அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு முழு நேர ஊழியருக்கு அரசாங்கம் மதகுரு என்ற ஒரு அடையாள அட்டை கொடுத்திருக்கிறது. பேருந்தில் செல்லும்போது எனக்கு உட்கார இடம் வேண்டும் என்பதற்காக நான் ஒரு ஊழியம், எனக்கு முன்னுரிமை கொடுங்கள் என்ற அதிகாரத்தை பயன்படுத்துவது தவறு.

காவல் துரை அதிகாரிகள் நம்முடைய ஆலயத்தை, வீட்டை சோதனை செய்ய வரும்போது, நாம் அவர்களை மதிக்க வேண்டும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மதில் சொல்ல வேண்டும். ஆனால், காரணமே இல்லாமல், நாம் ஆராதனை நடத்திக்கொண்டிருக்கும்போது, காவல்துரை அதிகாரிகள் ஆராதனைக்கு இடையூரு செய்யும் விதத்தில் கேள்விகள் கேட்பார்களானால், அந்த நேரத்தில் நாம் அதிகாரத்தை பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.



சேனாபதி, யூதர்கள் பவுலின் மேல் சாட்டின குற்றத்தை விசாரிக்க மனதாய், பிரதான ஆசாரியரையும், ஆலோசனை சங்கத்தார் அனைவரையும் கூடிவரச் செய்து, அவர்களுக்கு முன்பாக பவுலை நிறுத்தினார்.


அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து மூன்று (23)
==========================
பவுல் ஆலோசனை சங்கத்தின் முன் நின்று பேசும்போது, பிரதான ஆசாரியர் பவுலின் வாயில் அடியுங்கள் என்று சொல்லுகிறார்.

அப்பொழுது பவுல், வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார், நியாயம் விசாரிக்கும்படியாக அழைத்துவரப்பட்ட ஒருவரை, நியாயம் விசாரியாமல் அடிக்கலாமா என்று கேட்கிறார்.

பவுல் ஆலோசனை சங்கத்தின் உறுப்பினாராக இருந்தவர். ஆலோசனை சங்கத்தின் சட்டதிட்டங்களை பவுல் நன்கு அறிந்திருந்தார்.

பவுல் தன்னை அடிக்கச் சொன்னவர் பிரதான ஆசாரியர் என்று அறியாமல் இப்படிச் சொல்லிவிட்டார். பின்பு, மற்றவர்கள் சொன்னபோது, நான் பிரதான ஆசாரியரை பேசியது தவறு என்று தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார்.

பிரதான ஆசாரியர் நடந்துகொண்ட முறையும் சரியானதல்ல. ஆலோசனை சங்கம் என்பது ஒருவருடைய குற்றங்களை விசாரிப்பதற்க்கான இடம். விசாரிக்காமல் அடிக்கச் சொல்லி பிரதான ஆசாரியர் கட்டளையிட்டது தவறு.



ஆலோசனை சங்கத்தில் பரிசேயர் ஒருபுறமும், சதுசேயர் ஒருபுறமுமாக இருக்கிறதைக் கண்ட பவுல், நான் பரிசேயனும், பரிசேயனின் மகனுமாய் இருக்கிறேன் என்று கூறினார். நான் மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப் பற்றிய நம்பிக்கையைக் குறித்து நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று சொன்னார்.

பரிசேயர்கள் மரித்தோர் உயிர்த்தெழுதலையும், தேவதூதர்களையும் நம்புவார்கள். சதுசேயர் இவை இரண்டையும் நம்பமாட்டார்கள்.

ஆலோசனை சங்கத்தில் பரிசேயர் அதிகமாக இருப்பதைப் பார்த்த பவுல், நான் ஒரு பரிசேயன், மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார் என்று நான் பிரசங்கித்ததினாலேயே என்னை இங்கு கூட்டிக்கொண்டு வந்தார்கள் என்று சொன்னபோது, பரிசேயர்கள் அனைவரும் பவுலுக்கு ஆதரவாய் நின்றார்கள். பரிசேயருக்கும், சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

பரிசேயர்கள் பவுலினிடத்தில் நாங்கள் ஒரு குற்றமும் காணோம் என்று சொன்னார்கள். கூட்டம் கலைந்துபோனது.



நாற்பது பேருக்கும் அதிகமானோர், நாங்கள் பவுலை கொலைசெய்யும் வரை புசிப்பதும் இல்லை, குடிப்பதும் இல்லை என்று தீர்மானம் பண்ணிக்கொண்டார்கள்.

இக்காரியத்தை பவுலின் சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள் போய் பவுலுக்கு இதை அறிவித்தார். பவுல் இதை சேனாபதியினிடத்தில் அறிவித்தபோது, பவுல் இரவோடு இரவாக செசரியாவுக்கு கொண்டுபோகப்படுகிறார்.


அப்போஸ்தலர் இருபத்து நான்கு (24)
====================
செசரியாவிலே பேலிக்ஸ் என்னும் ரோம ஆளுநர் (தேசாதிபதி) ஒருர் இருந்தார். ஐந்து நாளைக்கு பின்பு பிரதான ஆசாரியரும், மூப்பரும் பேலிக்ஸினிடத்தில் வந்து, பவுல் தேவாலயத்திற்கு விரோதமாக குற்றம் செய்தான் என்று சொன்னார்கள்.

பேலிக்ஸினிடத்திலும் பவுல் தன்னுடைய சாட்சியை சொல்ல ஆரம்பித்தார்.

பவுலின் வாதத்தையும், யூதர்களின் வாதத்தையும் கேட்ட பேலிக்ஸ் பவுலைக்குறித்து அதிகம் விசாரித்து அறிந்துகொண்டார். பவுல் பெரிய பணக்காரர், கல்விமான், ஞானி என்று அறிந்துகொண்ட பேலிக்ஸ், தான் பவுலை விடுதலை செய்ய, பவுல் ஏதேனும் பணம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தார்.

இப்படி இரண்டு ஆண்டுகள் பவுல் பேலிக்ஸின் காவலில் இருந்தார்.

பவுல் ஒரு யூதன் என்றபடியினால், யூத மதத்திற்கு விரோமாகவே அவர் குற்றம் செய்தார் என்று சொல்லும் யூதர்கள் பேலிக்ஸிடம் வந்து, நீங்கள் பவுலை எங்களிடத்தில் ஒப்படைத்துவிடுங்கள், நாங்கள் அவனை நியாயம் விசாரிக்கிறோம் என்று சொன்னார்கள்.

ஆண்டவர் பவுலுக்கு சொப்பனத்தில் நீ யூதர்கள் மத்தியில் என்னைக் குறித்து அறிவித்ததுபோலவே, ரோமாபுரியிலும் அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

பேலிக்ஸ் பண ஆசை கொண்டவன். யூதர்களிடத்தில் பணத்தை வாங்கிக்கொண்டு, தன்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்துவிடுவான், என்று நினைத்த பவுல் நான் இராயணுக்கு அபயமிடுகிறேன் என்று சொல்லுகிறார். நான் ஒரு ரோமன், சேனாபதி, தேசாதிபதி இவர்களிடத்தில் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை, நான் இராயணுக்கு அபயமிடுகிறேன் என்று பவுல் சொல்லுகிறார்.


சிறிய நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் நமக்கு நியாயமானதாக இல்லையென்றால், உயர்நீதிமன்றத்திற்கு மணுகொடுக்கலாம். அதைப்போலவே இங்கே பவுல் செய்கிறார்.


பவுல் இராயணுக்கு அபயமிட்டதினால் எருசலேமிற்கு கொண்டுபோகப்படவில்லை. பவுல் இராயணுக்கு அபயமிடுகிறேன் என்று சொல்லாதிருந்தால், யூதர்கள் பவுலை நியாயம் விசாரிப்பதாக கூறி எருசலேமிற்கு அழைத்துச் சென்று கொலை செய்திருப்பார்கள்.

பேலிக்ஸ் யூதர்களை பகைக்காமல் இருந்தால், அவர்கள் ஏதேனும் பணம் கொடுப்பார்கள் என்பதினாலும், பவுல் இராயணுக்கு அபயமிட்டதினாலும் இரண்டு ஆண்டுகள் பவுலை தன்னுடைய காவலிலேயே வைத்திருந்தான்.

பேலிக்ஸிற்கு பிறகு பொர்கியுபெஸ்து தேசாதிபதியாக அமர்த்தப்பட்டார்.


அப்போஸ்தலர் இருபத்து ஐந்து 25
========================
பொர்கியுபெஸ்து பவுலை கடைசியாக ஒருமுறை ஏரோது மன்னன் அகிரிப்பா முன்னிலையில் விசாரிக்க தீர்மானித்தார்.

ஏரோது யூதர்களின் அரசன், பொர்கியு பெஸ்து ரோம தேசாதிபதி, பவுலின் மேல் குற்றம் சாட்சியவர்கள் யூதர்கள்.


இஸ்ரவேல் நாட்டில் மூன்றுவிதமான சிறைச்சாலைகள் இருந்து.
1. மத ரீதியாக, தேவாலயத்திற்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை காவல் பண்ணும்படியாக பிரதான ஆசாரியனுடைய வீட்டிற்கு கீழ், பாதாளத்தில் ஒரு சிறை இருந்தது.

2. யூதர்களின் மன்னன் ஏரோது. கொலை, திருட்டு, சமூக விரோத செயல்கள் போன்ற குற்றம் செய்தவர்களை காவல்பண்ணும்படியாக ஏரோதுவின் வீட்டில் ஒரு சிறை இருந்தது.

3. ரோமர்களுக்கு விரோதமாக, ரோம அரசிற்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை தேசாதிபதியின் கோட்டைக்குள் இருக்கின்ற சிறையில் காவல் வைப்பார்கள்.



பவுலின் மேல் சாட்டப்பட்ட குற்றம், இவன் தேவாலயத்தை கலங்கப்பண்ணினான் என்பதே. அப்படியானால் இவர் பிரதான ஆசாரியனுடைய காவலில் தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதற்கு முன்பாகவே சேனாபதி தலையிட்டு, இவர்களுடைய நியாயத்தை விசாரித்தார். சேனாபதியின் கட்டுப்பாட்டில் பவுல் இருந்ததினால் யூதர்கள் இவரை கொலை செய்ய நினைத்தார்கள்.

உடனே, பவுல் சேனாபதியினிடத்திலிருந்து தேசாதிபதியினிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.  யூத மதப்பிரச்சனையாய் இருந்த இக்காரியம், ரோம பிரச்சனையாய் மாற்றப்பட்டது. ரோமர்களின் சிறையில் அடைக்கப்படுவதற்கு பவுல் ரோமர்களுக்கு விரோதமாக எந்த குற்றமும் செய்யவில்லை.

எனவே கடைசியாக பவுல் பொது குற்றம் (பொய், திருட்டு, சமூக விரோத செயல்) ஏதேனும் செய்திருக்கிறாரா? என்று கண்டறியும்படி ஏரோது மன்னனுக்கு முன்பாக விசாரிக்கப்பட தீர்மானித்தார்கள்.

பெஸ்துவுக்கு முன்பாகவும், அகிரிப்பாவுக்கு முன்பாகவும் பவுல் விசாரிக்கப்பட்ட போது, அங்கேயும் பவுல் தன்னுடைய சாட்சியை சொல்லுகிறார்.

பவுலின் சாட்சியைக் கேட்ட அகிரிப்பா, பெஸ்துவினிடத்தில் இவன் ஒரு கொலையாளி அல்ல, திருடன் அல்ல, சமூக விரோத செயலில் ஈடுபட்டவன் அல்ல. இவரைப் பார்த்தால் மதரீதியாக குற்றம் செய்தவர் போல் தெரியவில்லை, சமூக ரீதியாகவும் குற்றம் செய்தவராக தெரியவில்லை, அரசுக்கு விரோதமாகவும் இவர் செயல்படவில்லை, ஒருவேலை பவுல் இராயணுக்கு அபயமிடாதிருந்தால், இவரை விடுதலை செய்யலாம் என்று கூறுகிறார்.

இதைப் பார்க்கும்போது பவுல் இராயணுக்கு அபயமிட்டது தவறு. அவர் மாத்திரம் அபயமிடாதிருந்தால் இவரை விடுதலை செய்திருப்பார்கள் என்று நாம் யோசிக்கலாம்.

பவுல் இராயணுக்கு அபயமிட இரண்டு காரணங்கள் உண்டு. பவுல் ஒருவேலை விடுதலை செய்யப்படுவாரானால், அவரை கொலைசெய்ய யூதர்கள் ஆயத்தமாய் இருக்கிறார்கள். அவரை கொலை செய்யுமாளவும் நாங்கள் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை என்று நாற்பது பேருக்கும் அதிகமானோர் தீர்மானம் செய்திருக்கிறார்கள்.

ஆண்டவர் பவுலின் சொப்பனத்தில் தோன்றி, நீ ரோமாபுரியிலும் என்னைக் குறித்து அறிவிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். அப்படியானால் இராயணுக்கு அபயமிட்டால் தான், தன்னுடைய குற்றத்தை ரோம அதிகாரிகள் விசாரிக்கும்போது அவர்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியும்.


அப்போஸ்தலர் இருபத்து ஏழு (27)
=======================
வேதாகமத்தில் எழுதப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் கட்டுக்கதைகள் அல்ல, ஒவ்வொன்றிற்கும் சரித்திர ஆதாரங்கள் உண்டு. பவுல் ரோமாபுரிக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று வேதத்தில் மாத்திரம் அல்ல, ரோம சரித்திரத்திலும் இடம் பெற்றுள்ளது.

பவுலும், கைதிகளும் கடல் பிரயாணமாக இத்தாலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு தான் ரோம் நகரம் உள்ளது. பவுலோடு கூட லூக்காவும் சென்றதாக எழுதுகிறார்.

கடலிலே புயல்காற்று வந்தபோது, அனைவரும் பயந்தார்கள். அப்பொழுது பவுல் மாலுமியினிடத்தில், கப்பல் சேதமேயன்றி, உயிர்சேதம் ஏற்படாது என்று சொல்லுகிறார். கப்பலில் மொத்தம் இருநூற்று எழுபத்து ஆறு பேர் (267) இருந்தார்கள்.


அப்போஸ்தலர் இருபத்து எட்டு (28)
==================
எல்லோரும் காப்பாற்றப்பட்டு மெலித்தா தீவை அடைந்தார்கள். அங்கே குளிர்மூட்டும் நேரத்தில் ஒரு விரியின் பாம்பு பவுலின் கையைக் கவ்விக்கொண்டது.

இதைப் பார்த்த ஜனங்கள் பவுலை ஒரு பாவியான மனுஷன் என்று நினைத்தார்கள். அவன் புயலுக்கு தப்பி உயிர்பிழைத்த போதும் அவனுடைய பாவம் அவனை விடவில்லை, அவன் பாம்பின் விஷத்தால் மரிக்கப்போகிறான் என்று நினைத்தார்கள்.

பவுல் அதை நெருப்பில் உதரிப்போட்டு தைரியமாக இருந்தார், பவுலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததைக் கண்ட ஜனங்கள் மிகவும் அச்சரியப்பட்டார்கள். இதை பயன்படுத்தி அங்குள்ள மக்களுக்கு பவுல் சுவிசேஷத்தை அறிவித்தார்.

ரோம அதிகாரிகள், கைதிகள் அனைவரும் இருக்கத்தக்க மெலித்தா தீவில் பவுல் வல்லமையாய் சுவிசேஷத்தை பிரசங்கித்து, அநேக அற்த அடையாளங்களையும் நடப்பித்தார். தீவில் பெரிய எழுப்புதல் உண்டானது. பவுல் புறப்படும்போது, அத்தீவார் நீங்கள் இங்கேயே இருந்துவிடுங்கள் என்று கூறினார்கள்.

மெலித்தா தீவிலிருந்து சீரகூசா பட்டணத்திற்கு சென்றார்கள். சீரகூசாவிலிருந்து இத்தாலிக்கு அதாவது ரோமநகரத்திற்கு சென்றார்கள்.


ரோமர் நகரில் பவுல் வீட்டுக் காவல் சிறையில் இரண்டு ஆண்டுகள் வைக்கப்படுகிறார். பின்பு தனக்கான ஒரு வீட்டை வாடகைக்கு வாங்கி தன்னிடத்தில் வருகிறவர்களுக்கு சுவிஷேசத்தை அறிவித்தார்.

பவுல் ரோமாபுரியிலேயே மிகுந்த தைரியமாய், தடையில்லாமல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார் என்பதோடு அப்போஸ்தலர் நடபடிகள் முடிவடைகிறது.



நீரோ என்ற ரோம மன்னன் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தார். ரோம் நகரத்தை தானே அழித்துவிட்டு, அதை கிறிஸ்தவர்கள் தான் அழித்தார்கள் என்று பொய் குற்றம் சாட்சி, கிறிஸ்தவர்கள் அனைவரையும் கொலை செய்தார் நீரோ மன்னர்.

மிகப்பெரிய விளையாட்டு மைதானம் ஒன்றில் அநேக கம்பங்களை ஊண்டி, ஒரு கம்பத்தில் இரண்டு கிறிஸ்தவர்கள் என்ற விதத்தில் எல்லா கம்பங்களிலும் கிறிஸ்தவர்களை தொங்கவிட்டு, உயிரோடு அவர்களை தீயிட்டு கொழுத்தி, அந்த நெருப்பின் வெளிச்சத்தில் விளையாட்டுகளை நடத்தினான் இந்த நீரோ மன்னன்.

ரோமாபுரியை தானே எரித்துவிட்டு, எரிந்து கொண்டிருக்கும்போது இசைக்கருவிகள் வாசிப்பவனை அழைத்து, இசைவாசிக்கச் சொல்லி, அதைக் கேட்டுக்கொண்டிருந்தவன் இந்த நீரோ மன்னன்.

இந்த நீரோ மன்னனின் காலத்தில் கி.பி.67-ல் பவுலை கழுத்தை அருத்து கொன்றுபோட்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.