Type Here to Get Search Results !

அப்போஸ்தலர் 18-21 வேத ஆராய்ச்சி கட்டுரை | Book of Acts Bible Study in Tamil | Jesus Sam

==================
அப்போஸ்தலர் நடபடிகள் (பாகம் ஒன்பது)
========================
அப்போஸ்தலர் அதிகாரம் பதினெட்டு (18)
==================


பவுலின் மூன்றாம் மிஷனெரி பயணம்
அப்போஸ்தலர் 18:23-ல் பவுலின் மூன்றாம் மிஷனெரி பிரயாணம் ஆரம்பமாகிறது. இந்த பயணத்தின் காலம் சுமார் நான்கு ஆண்டுகள். இந்த நான்கு ஆண்டுகளில் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் பவுல் எபேசுவில் ஊழியம் செய்தார்.

பவுலின் இரண்டாவது மிஷனெரி பயணத்தின் காலம் இரண்டரை ஆண்டுகள். இதில் அதிகபட்சமாக ஒன்றரை ஆண்டுகள் பவுல் கொரிந்து பட்டணத்தில் ஊழியம் செய்தார். அதைப்போலவே மூன்றாவது பயணத்தில் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் எபேசுவில் ஊழியம் செய்தார்.

பவுல் இரண்டாவது மிஷனெரிப் பயணத்தை முடித்த பின்பு அந்தியோகியா பட்டணத்திற்கு வந்து சுமார் ஒரு ஆண்டுகள் அந்தியோகியாவில் தங்கியிருந்தார். பின்பு தனது மூன்றாவது மிஷனெரி பயணத்தை மேற்கொண்டார்.

பவுல் கொரிந்தியருக்கு எழுதும்போது சகலமும் நல்லொழுக்கமும் கிரமமுமாய் செய்யப்படக்கடவது என்று சொன்னதுபோல, தனது ஊழியத்தையும் கிரமமாகவே நிரைவேற்றி வந்தார் பவுல். (அப்போஸ்தலர் 18:23)


அப்பொல்லோ
அப்பொல்லோ எகிப்தில் உள்ள அலெக்சாண்ரியாவில் பிறந்தவர். இவர் எகிப்தியனாய் இருந்து யூதனாக மாறியவர்.

யூதர்கள், கிரேக்கராக இருந்து யூதர்களாக மாறியவர்களை புராசலிடோஸ் என்று அழைத்தார்கள். புராசலிடோஸ் என்பது கிரேக்க மொழி வார்த்தை. அப்பொல்லோ எகிப்தியனாக இருந்து யூதனாக மாறியதால் அவனை யூதன் என்றே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவர் யூதன் அல்ல, எகிப்தியனாக இருந்து யூதனாக மாறியவர்.

லூக்கா, தீத்து, சீலா இவர்கள் அனைவரும் புராசலிடோஸ்.  அதாவது கிரேக்கராக இருந்து யூதராக மாறியவர்கள்.


அப்போஸ்தலர் 12:24-ல் அப்பொல்லோ வேதாகமங்களில் வல்லவன் என்று வாசிக்கிறோம். வேதாகமங்களில் வல்லவன் என்றால், யூதர்களுக்கென்று பல வேதங்கள் இல்லை, பழைய ஏற்பாட்டை அதாவது டனாக்கை யூதர்கள் நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசனம், எழுத்துங்கள் என்று அதாவது தோரா, நெபீன், கெட்டூபீன் என்று மூன்று விதத்தில் பிரித்து வைத்திருந்தார்கள். எனவேதான் வேதாகமங்களில் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. நமக்கு பரிசுத்த வேதாகமம் ஒன்றே வேதம், இதைத்தவிற வேறு வேதங்கள் இல்லை.

அப்பொல்லோ வேதாகமங்களில் தேறினவனாக இருந்ததால், அவர் இயேசுவைக் குறித்தும் சில இடங்களில் பேசினார். இதைப்பார்த்த ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் அப்பொல்லோவை தங்களோடு ஊழியத்தில் இணைத்துக்கொண்டு இயேசுவைக் குறித்த அநேக ஆழமான காரியங்களை அவருக்கு கற்றுக்கொடுத்தார்கள்.

அப்பொல்லோ ஆண்டவரை முழுமையாக விசுவாசித்தார், அபிஷேகம் பெற்றிருந்தார், வல்லமையாய் ஊழியம் செய்தார். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் ஊழியத்தில் முதிர்ச்சியடைந்தவர்கள். இவர்கள் நினைத்திருந்தால், அப்பொல்லோவை தாங்களாகவே ஊழியத்தில் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் இவர்கள் அப்படிச் செய்யவில்லை.

ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் அப்பொல்லோவை தாங்களாக ஊழியத்திற்கு ஏற்படுத்தாமல், அப்போஸ்தலருக்கு கடிதம் எழுதுகிறார்கள்.


இந்த நாட்களில் அநேகர் தங்களைத் தாங்களே ஊழியராக, அப்போஸ்தலராக, குருவானவராக ஏற்படுத்திக்கொள்ளுகிறார்கள். எந்த ஒரு ஊழியனும் தலைமைத்துவத்துக்குக் கீழ் அடங்கி ஊழியம் செய்ய வேண்டும். ஒரு ஊழியனுக்கு எவ்வளவு அபிஷேகம், வல்லமை, திறமை, தாலந்துகள் இருந்தாலும் அவன் தலைமைத்துவத்தால் அங்கிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்பொல்லோ அபிஷேகம் பெற்றிருக்கிறான், வல்லமையாய் ஊழியம் செய்கிறான், இருப்பினும் அப்போஸ்தலர்களால் அவன் ஊழியத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் அப்போஸ்தலருக்கு கடிதம் எழுதுகிறார்கள்.


அப்போஸ்தலர் பத்தொன்பதாம் (19) அதிகாரம்
===============
அப்பொல்லோ அப்போஸ்தலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆக்கில்லா, பிரிஸ்கில்லாவோடு இணைந்து கொரிந்து பட்டணத்தில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.


பவுல் எபேசுவுக்கு வந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தார். இங்கே பன்னிரண்டு சீஷர்கள் இருந்தார்கள். யார் இந்த பன்னிரண்டு சீஷர்கள்.

இயேசு கிறிஸ்துவுக்குப் பதிலாக அவரது சிலுவையை தூக்கிச் சென்றவர் சிரேனே ஊர் சீமோன். சீமோன் தானாக அந்த சிலுவையை தூக்கவில்லை, ரோம போர் வீரர்கள் சீமோனை கட்டாயப்படுத்தி சிலுவையை சுமக்க வைத்தார்கள்.


கி.மு 722-ல் வடக்கு ராஜ்யமாகிய இஸ்ரவேல் ராஜ்யம் அசீரியர்களால் கைப்பற்றப்பட்டது. அசீரியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை உலகின் பல நாடுகளுக்கு சிதறடிக்கப்பண்ணினார்கள். அப்படி சிலர் வட ஆப்பிரிக்காவில் உள்ள சிரேனே என்ற பட்டணத்தில் குடியேறினார்கள்.

சிதறடிக்கப்பட்டவர்கள் அங்கேயே வாழ ஆரம்பித்தார்கள். பல தலைமுறைகள் ஆப்பிரிக்காவிலேயே அவர்கள் வாழ்ந்ததால், அவர்களுடைய சரீர தோற்றம் ஆப்பிரிக்கர்களைப்போலவே திடகாத்ரமாக காணப்பட்டது.

இயேசு சிலுவையை சுமந்து சென்று கொண்டிருந்தபோது, சிரேனே ஊரைச் சார்ந்த ஒரு யூதன் ஒருவன் அந்தழியே சென்றான். அவன் பெயர் சிமோன். அவன் நல்ல சரீரபலம் படைத்தவன் என்பதினால், அவனை கட்டாயப்படுத்தி சிலுவையை சுமக்க வைத்தார்கள் போர்வீரர்கள்.

சீமோனுக்கு இயேசு என்பவர் யார் என்று தெரியாது. ரோம வீரர்கள் கட்டாயப்படுத்தினதினால், வேறுவழியின்றி சிலுவையை தூக்கினார் சீமோன். யாரோ ஒருவர் குற்றம் செய்திருக்க என்னை சிலுவையை சுக்க சொல்லுகிறார்களே என்று, இயேசுவின் மீதும், ரோம வீரர்களின் மீதும் சீமோனுக்கு வெறுப்பு இருந்திருக்கும். சில மணி நேரங்களுக்குப் பின்பு, இயேசு ஒரு குற்றமும் செய்யவில்லை என்று, ஜனங்கள் பேசியதைக் கேட்ட சீமோன், இயேசுவைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்பியிருப்பார்.  பின்நாட்களில்  அவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார் என்று சரித்திரம் சொல்லுகிறது.

சிரேனேக்கு சென்ற சீமோன், தன் மனைவிக்கும், அலெக்சாந்தர், ரூப் என்ற தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் இயேசுவைக் குறித்து அறிவித்தார். அவர்களும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். இவர்கள் மூலமாக சிரேனே பட்டணத்தில் வேறு அநேகரும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.

இதினிமித்தம் சிரேனே பட்டணத்தில் உள்ள யூதர்கள் இவர்களை தாக்கினார்கள். இந்த தாக்குதலில் தகப்பன் சீமோன் மரித்துப்போனார்.

சீமோனின் மனைவியும், அவனுடைய பிள்ளைகளும், இன்னும் ஒருசில வாலிபர்களும் சிரேனேயிலிருந்து தப்பி எபேசு பட்டணத்திற்கு வந்தார்கள். இவர்களே அந்த எபேசுவில் இருந்த பன்னிரெண்டு சீஷர்கள்.

சில ஆண்டுகளில் ரூப்பும், அவனுடைய தாயும் எபேசுவிலிருந்து ரோமாபுரிக்கு சென்றார்கள். அலெக்சாந்தார் எபேசுவிலேயே இருந்தார்.

பவுல் கடைசியாக ரோமாபுரிக்கு சென்றபோது, பவுலை நன்றாக பராமரித்தது இந்த ரூப்பும், அவனுடைய தாயுமே. எனவேதான் ரோமர் புத்தகத்தில் பவுல் எனக்கும் தாயாகிய ரூப்பின் தாயையும் வாழ்த்துங்கள் என்று சொல்லுகிறார். (ரோமர் 16:13)


பவுல் எபேசுவுக்கு வந்து சீஷர்களைப் பார்த்தார். அவர்கள் யோவான்ஸ்நானனின் ஞானஸ்நானம் மாத்திரம் பெற்றிருந்து, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறாதிருந்தார்கள். (அப்போஸ்தலர் 19:5)

பவுல் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்த பின்பு, அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நியபாஷை பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

அப்போஸ்தலர் 19:5-யை வைத்துக்கொண்டு Jesus Only என்ற குழுவைச் சார்ந்தவர்கள் இயேசுவின் நாமத்தில் மாத்திரமே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவது தவறு என்று போதிக்கிறார்கள்.  இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

இயேசு கிறிஸ்து மரிக்கும் முன்பு வரை எல்லோரும் யோவான்ஸ்நானனின் ஞானஸ்நானம் பெற்றார்கள். இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்த பின்பு நாம் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும்.

யோவான் கொடுத்த ஞானஸ்நானத்திற்கும், இயேசு கிறிஸ்து சொன்ன ஞானஸ்நானத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதையே பவுல் (அப்போஸ்தலர் 19:5) இங்கே விளங்கப்படுத்துகிறார். இதை உணராத சிலர் இயேசுவின் நாமத்தில் மாத்திரம் தான் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று வேதத்தை புரட்டி போதிக்கிறார்கள்.


இயேசுவின் ஞானஸ்நானம் என்றால் அது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. ஒரு கடையில் Cococola விற்கிறார்கள். நான் கடைக்குச் சென்று ஒரு Cock கொடுங்கள் என்று கேட்பதால், இனி அந்த பானத்தின் பெயர் Cock என்று மாரிவிடாது. அந்த பானத்தின் பெயர் எப்பொழுதுமே Cococola தான்.

அதைப்போல பவுல் இயேசுவின் நாமத்தில் என்று சொன்னதால், அது இயேசுவை மாத்திரம் குறிக்கிறது என்று சொல்லமுடியாது. அதற்குள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று தன்மைகளும் காணப்படுகிறது.

இயேசுவின் ஞானஸ்நானம் என்றால், இயேசு கற்றுக்கொடுத்த ஞானஸ்நானம். இயேசுவானவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்றே போதித்தார். (மத்தேயு 28:19)


பவுலின் கைக்குட்டைகளையும், ஆடைகளையும் வியாதியஸ்தர் மேல் வைத்த போது அவர்கள் சுகம் பெற்றார்கள். பொல்லாத ஆவிகளும் துரத்தப்பட்டன.

பவுலின் உடைகள் மூலமாக அற்புத அடையாளங்கள் நடந்தது உண்மைதான். ஆனால் கிறிஸ்தவர்கள் இதை இறையியலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஊழியர்களின் ஆடைகளிலும், கைக்குட்டைகளிலும் அபிஷேகம் இருக்கிறது என்று விசுவாசிகள் நம்பக்கூடாது. சில நேரங்களில் ஆண்டவர் அப்படியும் அற்புதம் செய்கிறார். ஆனால் எல்லோர் மூலமாகவும் அல்ல.


பவுல் பிசாசுகளை விரட்டுகிறதை பார்த்த சில வாலிபர்கள், இயேசுவின் நாமத்தில் நாமும் பிசாசை விரட்டுவோம் என்று தீர்மானித்தார்கள். இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல யூதர்கள், மாத்திரமல்ல பிரதான ஆசாரியருடைய பிள்ளைகள் (யூதர்களிலும் மந்திரவாதிகள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது). அவர்கள் பிசாசிடம் பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் நாமத்தினாலே கட்டளையிடுகிறேன் என்று சொன்னபோது, பிசாசு பவுலையும் அறிவேன், இயேசுவையும் அறிவேன் நீங்கள் யார்? என்று சொல்லி, அவர்கள் மேல் பாய்ந்து, அவர்களை பலாத்காரம்பண்ணியது. அவர்கள் நிர்வாணிகளும், காயப்பட்டவர்களுமாக அங்கிருந்து ஓடிப்போனார்கள்.

இயேசுவின் நாமத்திற்கு அதிகாரம் உண்டு. பிசாசுகள் இயேசுவின் நாமத்திற்கு பயந்து நடுங்கும். ஆனால் அதை பிரயோகிக்கிற மனுஷன் நீதிமானாய் வாழ வேண்டும். பிசாசு நம்மைவிட இயேசுவைக் குறித்தும், வேதத்தைக் குறித்தும் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.


எபேசு
எபேசு பட்டணம் கொரிந்து பட்டணத்தைப்போலவே ஐசுவரியமான பட்டணம். கொரிந்து பட்டணத்தில் ஐசுவரியம் இருந்தது ஆனால் கல்வி அறிவு இல்லை. ஆனால் எபேசு பட்டணம் ஐசுவரியமும், கல்வி அறிவும் நிரைந்த பட்டணம்.

எபேசு பட்டணம் இரண்டு கல்வி முறைகளில் சிறந்து விளங்கியது. ஒன்று உலகப்பிரகாரமான கல்வி முறை. மற்றொன்று பிசாசுகளைக் குறித்தும், மந்திரங்களைக் குறித்தும், மாயவித்தைகள், சாஸ்திரங்கள், கிரகங்கள் கணிப்பது, நாள் பார்ப்பது, நேரம் பார்ப்பது, அஞ்சனம் பார்ப்பது குறித்தும் அதிகம் கற்றுக்கொடுக்கும் கல்வி முறை.

பவுலின் பிரசங்கத்தைக் கேட்ட மாயவித்தைக்காரர்கள் அநேகர் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்து எல்லோருக்கும் முன்பாக அதை சுட்டெரித்தார்கள். அந்த புத்தகங்களின் மொத்த மதிப்பு ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு. (அக்காலத்தில் ஒரு வெள்ளி காசு என்பது ஒரு மனிதனின் ஒரு நாள் வருமானம்).


தீனாள்
எபேசுவிலே தியானாளின் பெரிய கோவில் ஒன்று இருந்தது. தியானாளின் உருவசிலை ஜனங்கள் மத்தியிலே வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் சிலை செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது.

பவுலின் வார்த்தைகளைக் கேட்டு ஜனங்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதினால், ஜனங்கள் சிலை வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். சிலை செய்யும் தொழிலாளிகள் தங்கள் ஆதாயம் அற்றுப்போயிற்று என்று கண்டு, பவுலோடு வாக்குவாதம் பண்ணினார்கள்.

அப்பொழுது அலெக்சாந்தர் அவர்களோடு பேசி பவுலை அவர்களிடமிருந்து அழைத்துக்கொண்டு வந்தார்.


அப்போஸ்தலர் நடபடிகள் இருபதாம் (20) அதிகாரம்
===================
ஐத்திகு
பவுல் மேல்வீட்டிலே நெடுநேரமாய் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். ஐத்திகு என்னும் வாலிபன் பவுலின் பிரசங்கத்தை ஜன்னலில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நித்திரை மயக்கத்தினால் மூன்றாம் மெத்தையிலிருந்து விழுந்து மரித்துப்போனான். பின்பு பவுலின் மூலமாக அவன் மீண்டும் உயிர்பெற்றுக்கொண்டான்.


பவுல் எபேசுவிலிருந்து புறப்படும்போது, அநேக அழமான சத்தியங்களை அவர்களோடு பேசுகிறார். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும் எச்சரிக்கையாயிருங்கள் என்று புத்தி சொல்லுகிறார்.

இந்த காரியங்கள் இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒழுங்காக ஒரு திருச்சபைக்கு சென்றுகொண்டிருக்கின்ற மக்களை கள்ள உபதேசத்தின் மூலமாக தங்கள் சபைக்கு இழுத்து தங்களுக்கு ஆதாயத்தைத் தேடிக்கொள்ளுகிற கூட்டம் இந்த நாட்களில் பெருகி காணப்படுகிறது.

நான் உங்கள் பணத்தையும், பொருளையும் இச்சிக்கவில்லை, என்னுடைய தேவைகளுக்காக நானே வேலை செய்தேன் என்று பவுல் பேசுகிறார். கடைசியாக அவர்களுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு அவர்களுக்காக ஜெபிக்கிறார் பவுல்.

பவுல் அங்கிருந்து வந்த பின்பு, தீமோத்தேயு அந்த சபையை நடத்திக்கொண்டு வந்தார். அதற்கு பின்பு எபேசு சபையிலே தலைவராக இருந்து செயல்பட்டவர், இயேசுவின் சீஷனாகிய யோவான்.

அப்போஸ்தலர் இருபத்து ஒன்றாம் (21) அதிகாரம்
=====================
பவுல் செசரியா பட்டணத்திற்கு வந்தார். அங்கே பலிப்பு என்பவர் பவுலையும் அவரோடு வந்தவர்களையும் ஏற்றுக்கொண்டார்.

இந்த பிலிப்பு என்பவர் அப்போஸ்தலர் 6-ல் பந்தி விசாரிப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட ஏழுபேரில் ஒருவர். அவர் மூலமாகத்தான் ஆண்டவர் சமாரியாவிற்கு சுவிசேஷத்தை அறிவித்தார். அவர் மூலமாகத்தான் எருசலேமிலிருந்து எத்தியோப்பியாவிற்கு சென்று கொண்டிருந்த மந்திரிக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.

இந்த பிலிப்பு தான் பின்நாட்களில் குடும்பமாக செசரியா பட்டணத்தில் ஊழியம் செய்து வந்தார். பிலிப்புவிற்கு தீர்க்கதரிசனம் சொல்லுகிற நான்கு குமாரத்திகள் இருந்தார்கள்.

பவுல் செசரியாவில் இருக்கும்போது, யூதேயாவிலிருந்து வந்த அகபு என்னும் தீர்க்கதரிசி பவுல் எருசலேமிலே யூதர்களால் கட்டப்படுவார் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார்.

எபேசுவில் உள்ள ஜனங்கள் பவுலிடம் நீங்கள் எருசலேமிற்கு போகவேண்டாம் என்று கூறினார்கள். அதற்கு பவுல், இயேசுவுக்காக நான் கட்டப்படுவதற்கு மாத்திரம் அல்ல, மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.

பின்பு பவுல் எருசலேமுக்கு வந்து, கர்த்தர் செய்த எல்லா காரியங்களையும் அப்போஸ்தலர்களுக்கு அறிவித்தார். பவுல் ஊழியத்தின் தலைமைப்பொறுப்புக்கு வந்தாலும், தனக்கு கீழ் அநேக ஊழியர்களை வைத்து செயல்படுகின்ற பொறுப்பில் இருந்தாலும், தலைமைத்துவத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதில் அவர் தவறவில்லை.

பவுல் தன்னுடைய ஊழியத்தைக் குறித்த அறிக்கை கொடுக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. ஆனாலும் அவர் தலைமைத்துவத்துக்கு கீழ் அடங்கி செயல்படுகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

பவுல் புறஜாதியாருக்கு விருத்தசேதனம் தேவையில்லை என்று சொன்னதை, தவறாக புரிந்துகொண்ட யூதர்கள் பவுல் யூத மதத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று நினைத்து அவரை கொலை செய்ய நினைத்தார்கள்.

எனவே சகோதரர்கள் பவுலிடம் உங்களைக் குறித்த யூதர்களின் எண்ணங்கள் மாற வேண்டுமானால், யூத முறையையை நீர் பின்பற்ற வேண்டும். பிராத்தனை பண்ணிக்கொண்டு தலைச்சரவம் பண்ண ஆயத்தமுள்ள நான்கு பேர் நம்மோடு இருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து நீங்களும் உங்களை சுத்திகரித்துக்கொண்டு, நீங்களே முன்னின்று அக்காரியத்தை நடத்துங்கள். அதைப் பார்க்கிற யூதர்களுக்கு  உங்களைக் குறித்த தவறான எண்ணம் அற்றுப்போகும் என்று ஆலோசனை சொன்னார்கள். பவுலும் அதை ஏற்றுக்கொண்டு எல்லா காரியங்களையும் செய்தார்.


பவுலின் முதல் மிஷனெரி பயணம் அந்தியோகியாவில் தொடங்கி, அந்தியோகியாவில் நிரைவடைந்தது. இரண்டாவது மிஷனெரி பயணம் அந்தியோகியாவில் தொடங்கி அந்தியோகியாவில் முடிவடைந்தது. ஆனால் மூன்றாவது மிஷனெரி பிரயாணம் அந்தியோகியாவில் தொடங்கி எருலேமில் முடிவடைந்தது. அதன் பின்பு பவுல் அந்தியோகியாவிற்கு செல்லவில்லை.

ஏன் பவுல் அந்தியோகியா செல்லவில்லை என்றால், போவதற்கான வாய்ப்பு இல்லை. அதற்குள்ளாகவே ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள் அவரை கைது செய்துவிடுகிறார்கள்.

எனவே பவுலின் மூன்றாவது மிஷனெரி பிரயாணம் எருசலேமில் முடிவடைந்துவிடுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.