Type Here to Get Search Results !

அப்போஸ்தலர் நடபடிகள் வேத ஆராய்ச்சி கட்டுரை | பவுலின் இரண்டாவது மிஷனெரி பயணம் | Book of Acts Bible Study Chapter 15-18 | Part 8 | Jesus Sam

=================
அப்போஸ்தலர் நடபடிகள் (பாகம் எட்டு)
========
அப்போஸ்தலர் பதினைந்தாம் (15) அதிகாரம்
===================

பவுலின் இரண்டாவது மிஷனெரி பயணம்
பவுலின் இரண்டாவது மிஷனெரி பிரயாணம் இரண்டரை ஆண்டு காலம்.

பர்னபாவும், பவுலும் முதலாவது மிஷனெரி பயணத்தை மேற்கொண்ட போது அவர்களோடு கூட சென்றவர் பர்னபாவின் சகோதரி மரியாளின் மகன் மாற்கு. மாற்கு பர்னபாவிற்கு மாமா முறை. பர்னபாவும், பவுலும் முதியர்சியடைந்தவர்கள். மாற்கு இளம் வாலிபன்.

வாலிபனாகிய மாற்குவால் முதிர்ந்த பர்னபா, பவுல் என்ற ஊழியர்களோடு இணைந்து ஊழியம் செய்ய முடியவில்லை. பம்பிலியா நாட்டிற்கு வந்தபோது மாற்கு பர்னபா, பவுலை விட்டு பிரிந்து சென்றார்.

மாற்கு பம்பிலியா என்ற இடத்திற்கு வந்தபோது, தன் மாமன் பர்னபாவிடம் மாமா என்னால் இனி உங்களோடு ஊழியத்தில் தொடர இயலாது, நான் திரும்பிச் செல்கிறேன் என்று சொல்லுகிறார். இந்த நேரத்தில் பவுல் எந்த ஒரு மறுஉத்தரவும் சொல்லவில்லை. ஏன் திரும்பிச் செல்கிறாய் என்றும் கேட்டகவில்லை.

பவுல் கடைசியாக ரோமாபுரிக்கு சென்றதையும் சேர்ந்து நான்கு மிஷனெரி பயணங்களை மேற்கொள்கிறார். பவுலின் ரோமாபுரி பயணம் மிஷனெரி பயணம் அல்ல. பவுல் மூன்று மிஷனெரி பயணங்களை தான் மேற்கொண்டார் என்ற கருத்தும் உண்டு.

பவுலின் முதலாவது மிஷனெரி பயணத்தில் பவுல் தலைமை ஊழியர் அல்ல, பர்னபாவே தலைமை ஊழியர். பர்னபாவின் உதவி ஊழியனாகவே பவுல் முதலாவது மிஷனெரி பயணத்தை மேற்கொண்டார்.

பவுல் இரட்சிக்கப்பட்டபோது பவுலை சீஷர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, பர்னபாதான் பவுலை ஏற்றுக்கொண்டு தன்னோடு ஊழியத்தில் இணைத்துக்கொண்டார். பர்னபா பவுலைவிட வயது சென்றவராக இருந்தார். பவுல் ஆவிக்குறிய விதத்தில் வளர்வதற்கு பெரும் உதவியாக இருந்தவர் இந்த பர்னபா. பவுல் தனது சொந்த ஊரான தர்சுவில் இருந்தபோது, அந்தியோகியாவில் இருந்த பர்னபா, பவுலை தன்னோடு சேர்த்துக்கொண்டு ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.

பவுல் பர்னபாவின் உதவி ஊழியனாக இருந்தாலும், முதலாவது மிஷனெரி பயணத்தின் போது ஆண்டவர் பர்னபாவை விட பவுலையே அதிகம் பயன்படுத்துகிறார். பவுல் மூலமாகவே அநேக அற்புத அடையாளங்கள் நடைபெற்றன.

பவுல் தன்னுடைய உதவி ஊழியனாக இருந்தாலும், அவர் மூலமாக ஆண்டவர் அநேக அற்புத அடையாளங்களை செய்தார் என்றபடியினால், பவுல் மூலமாக அநேகர் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள் என்ற படியினால், பர்னபா ஒருபோதும் பவுல் மீது பொறாமை கொள்ளவில்லை.

இந்த நாட்களில் இருக்கின்ற தலைமை ஊழியர்கள் தங்களுக்கு கீழ் பணிசெய்யும் ஒருவரை ஆண்டவர் வல்லமையாய் பயன்படுத்துகிறார் என்றால், அவர்கள் மேல் பொறாமை கொள்ளுகிறார்கள். தலைமை ஊழியரைவிட உதவி ஊழியர் மக்களால் அதிகம் நேசிக்கப்படுகிறார், அவர் மூலமாக திருச்சபையிலே மாற்றங்களை ஆண்டவர் கொண்டு வருகிறார் என்றால், தலைமை ஊழியர்கள் பொறாமையினால் அவர்களை ஊழியத்தில் பயன்படுத்தாமல், தள்ளிவைக்கிறார்கள்.

சிறந்த ஊழியன் என்பவன் தன் உதவி ஊழியனை ஆண்டவர் வல்லமையாய் பயன்படுத்துகிறார் என்றால், அதினால் சந்தோஷமடைய வேண்டும். பர்னபாவிடம் இப்படிப்பட்ட குணாதிசயம் இருந்தது.


பர்னபானின் இரட்சிப்பின் அனுபவத்தைவிட பவுலின் இரட்சிப்பின் அனுபவம் வித்தியாசமானது. இயேசுவானவரே பவுலுக்கு காட்சி கொடுத்து பவுலை இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்தினார். முதலாவது மிஷனெரி பயணத்தில் பர்னபாவைவிட பவுல் அதிகமாக பயன்படுத்தப்பட்டார். இருந்த போதிலும் பவுல் பர்னபாவை உதாசினப்படுத்தவில்லை. முதல் மிஷனெரி பயணம் முழுவதும் பவுல் பர்னபாவிற்கு கீழ் அடங்கியிருந்தே ஊழியம் செய்தார்.

தலைமை ஊழியரைவிட என்னைத்தான் ஆண்டவர் வல்லமையாய் பயன்படுத்துகிறார் என்றாலும், எந்த உதவி ஊழியனும் தலைமைத்துவத்தை கனவீனம் செய்யக்கூடாது. தலைமை ஊழியர் நம்மைவிட கல்வி அறிவில் குறைந்தவராக இருக்கலாம், உலக ஞானத்தில் நம்மைவிட குறைந்தவராக இருக்கலாம், என்னை ஆண்டவர் வல்லமையாய் பயன்படுத்துகிறார் என்றபடியினால் ஒருபோதும் தலைமைத்துவத்திற்கு எதிராக நாம் செயல்படக்கூடாது.


பவுல் முதலாவது மிஷனெரி பயணம் முழுவதும் தனது தலைமை ஊழியர் பர்னபாவுக்கு அடங்கி செயல்பட்டார். பவுல் தலைமை ஊழியரைவிட்டு பின்வாங்கவுமில்லை, தலைமை ஊழியரைவிட அதிகமாக செயல்படவும் இல்லை. ஊழியருக்குக் கீழ் அடங்கியிருந்து தன்னுடைய காரியங்களை சரியாய், நேர்த்தியாய் செய்து வந்தார். முதல் மிஷனெரி பிரயாணம் முடிந்து, பவுலும், பர்னபாவும் அந்தியோகியா வந்தடைந்தார்கள்.


சிலநாளைக்கு பின்பு பவுல் தனது இரண்டாவது மிஷனெரி பயணத்தை துவங்க தீர்மானித்தார். பவுலின் இரண்டாவது மிஷனெரி பயணத்தைக் குறித்து அப்போஸ்தலர் 15:36-18:21 உள்ள வசனங்களில் பார்க்க முடியும்.


அப்போஸ்தலர் 15:36-ல் பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கித்த பட்டணங்களில் உள்ள சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்போம் வாரும் என்று சொன்னார்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம், பர்னபா பவுலை அழைக்கவில்லை, பவுல் தான் பர்னபாவை அழைக்கிறார். அப்படியானால், பவுல் தான் தலைமை ஊழியர்.

பர்னபா பவுலோடு கூட போகவில்லை. ஒருவேலை சென்றிருந்தாரானால், பவுலின் இரண்டாவது மிஷனெரி பயணத்தில் தலைமை ஊழியராக இருப்பவர் பவுல்.

பவுல் பர்னபாவிடம் பட்டணங்களை சந்தித்துவிட்டு வருவோம் என்று சொன்னபோது பர்னபா சரி வருகிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் வரவில்லை என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் பர்னபாவின் பதில் வித்தியாசமாக இருந்தது.

நான் உன்னோடு வருகிறேன். ஆனால் நாம் இருவர் மாத்திரம் அல்ல, நம்மோடு என் சகோதரி மரியாளின் மகன் மாற்குவையும் அழைத்துக்கொண்டு போவோம் என்று சொல்லுகிறார்.

அதற்கு பவுல், இல்லை இல்லை முதல் பயணத்தில் மாற்கு பம்பிலியா நாடுவரைக்கும் நம்மோடு இருந்துவிட்டு பின்பு நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டான். எனவே இந்த முறை அவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்.

பவுல் சொல்லும் காரியம் நியாயமானது. ஒரு குழுவாக, இரண்டு அல்ல மூன்று நபர்களாக நாம் இணைந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஊழியத்திற்காக பிரயாணப்படுகிறோம் என்றால் அல்லது ஏதேனும் சிறப்புக் கூட்டங்களுக்கு ஆயத்தப்படுகிறோம் என்றால், அந்த நாட்கள் நிறைவேறும் வரை நாம் அவர்களோடு இணைந்து தான் இருக்க வேண்டும்.

ஒருவேளை அந்த பத்து நாட்களில் கடைசி இரண்டு நாள் அல்லது இடையில் ஏதோ இரண்டு, மூன்று நாள் நமக்கு தனிப்பட்ட வேலையின் நிமித்தமாக அந்த ஊழியத்தில் தொடரமுடியாது என்றால், துவக்கத்திலேயே நாம் அவர்களிடம் சொல்லிவிட வேண்டும். நானும் உங்களோடு இணைந்து இந்த பத்து நாட்களும் ஊழியம் செய்கிறேன், ஆனால் தவிர்க்க முடியாத இந்த காரணத்தினால் இந்த இந்த நாட்களில் மாத்திரம் என்னால் உங்களோடு இணைந்துகொள்ள முடியாது என்று சொல்லிவிட வேண்டும்.

நாம் இணைந்து ஊழியம் செய்து கொண்டிருக்கும்போது, இடையில் என அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை, எங்கள் தோட்டத்தில் வேலை இருக்கிறது, எங்கள் மாடு கன்று ஈன்றுள்ளது இதுபோன்ற நொண்டி சாக்குகளை சொல்லி நாம் ஊழியத்தை விட்டு செல்வோமானால், அந்த இடத்தில் இருந்து நீங்கள் செய்ய வேண்டிய வேலை அனைத்தும் பாதிக்கப்படும். நீங்கள் பத்து நாளும் இணைந்திருப்பீர்கள் என்று நினைத்து உங்களுக்குப் பல பொறுப்புகளை பிரித்து வைத்திருப்பார்கள். நீங்கள் திடீர்ரென்று ஊழியத்தைவிட்டு சென்றால், அந்த வேலைகள் முழுவதும் பாதிக்கப்பட்டுவிடும்.

நான் இந்த இந்த நாளில் தான் ஊழியத்தில் இருப்பேன், இந்த இந்த நாளில் என்னால் இருக்க முடியாது என்று நீங்கள் முன்னமே சொல்லிவிட்டால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய அது வசதியாக இருக்கும். திடீரென்று சொல்லும் பட்சத்தில் மற்ற ஊழியர்களுக்கு அது மிகப்பெரிய சிரமத்தை உண்டாக்கும்.


இங்கே மாற்கு என்ற வாலிபனால் பவுல், பர்னபா என்ற முதிர்ச்சியடைந்த ஊழியர்களோடு இணைந்து ஊழியம் செய்ய முடியவில்லை என்றாலும், அந்த முதல் பயணம் முடியும் வரை அவர்களோடு இணைந்து ஊழியத்தை நிறைவேற்றிவிட்டு, இரண்டாவது பயணத்தின்போது மாமா என்னால் உங்களோடு இணைந்து ஊழியம் செய்ய முடியவில்லை என்று சொல்லியிருக்கலாம். ஆனால் மாற்கு அப்படி செய்யாமல், திடீரென்று ஊழியத்தை விட்டு சென்றுவிடுகிறார்.

இப்படி இடையில் ஊழியத்தைவிட்டு செல்கிறவர்கள் அதன் மூலமாக ஏற்படுகின்ற சிரமங்களைக் குறித்து, பாதிப்புகளைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படமாட்டார்கள்.

ஞாயிறு பள்ளி ஊழியத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிற ஒரு ஊழியர், ஞாயிறு பள்ளி ஆசிரியர்களுடையே உள்ள மனக்கசப்பினால், இனி என்னால் இந்த ஞாயிறு பள்ளி ஊழியத்தை தொடர முடியாது என்று சென்றுவிட்டால், அது ஞாயிறு பள்ளி ஆசிரியர்களுக்கு மாத்திரம் அல்ல, ஞாயிறு பள்ளி பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இப்படி ஊழியத்தை பாதியில் விட்டுச் செல்கிறவர்கள், நாம் திடீரென்று இப்படி சென்றுவிட்டால், அந்த ஊழியத்தை யார் தொடர்வது, அந்த ஊழியம் சிறப்பாக நடந்துவிடுமா? ஏதேனும் குழப்பங்கள் வருமா என்று எதைக்குறித்தும் யோசிக்க மாட்டார்கள். திடீரென்று என்னால் இந்த ஊழியத்தை செய்ய முடியாது என்று பிரிந்து சென்றுவிடுவார்கள்.


உண்மையில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அந்த ஞாயிறு பள்ளி தலைமை பொறுப்பை என்னால் தொடர்ந்து நடத்த முடியாது என்றால், வேறு ஏதேனும் ஆசிரியரை அழைத்து, நீ இனி இந்த ஊழியத்தை தலைமை ஏற்று நடத்து, இன்ன இன்ன பிரகாரம் செய், இப்படி இப்படி ஆசிரியர்களை வழிநடத்து என்று சொல்லிவிட்டு சென்றால் அது நல்லது. திடீரென்று ஊழியத்தைவிட்டு தங்களை பிரித்துக்கொண்டால், அது ஊழியத்தில் குழப்பத்தை உண்டுபண்ணும்.

இப்படி திடீரென்று ஊழியத்தை விட்டு தங்களை விலக்கிக்கொண்டவர்களை நாம் வேறு ஊழியத்தில் பயன்படுத்தினாலும், அந்த ஊழியத்தை விட்டும் அவர்கள் ஒருநாள் பிரிந்து செல்லத்தான் போகிறார்கள். ஏனென்றால் அதன்மூலமாக ஏற்படுகின்ற பின்விளைவுகளைக் (பாதிப்பு, சிரமம்) குறித்து, அவர்கள் சற்றம் கவலைப்பட மாட்டார்கள். முதல் முறை ஊழியத்தை விட்டு பிரிந்து சென்றதுபோல, மறுபடியும் செல்லமாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லையே.


அதனால் தான் இங்கே பவுல் சொல்லுகிறார், மாற்கு முதல் முறை நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் மூலமாக ஊழியத்தில் ஏற்படுகின்ற இழப்புக்களையும், பாதிப்புக்களையும் அவர் உணரவில்லை. நான் இங்கிருந்து சென்றால்போதும், எனக்கு பின் அந்த ஊழியம் எப்படி நடந்தால் என்ன என்று நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இப்படி ஒருமுறை ஊழியத்தைவிட்டுச் சென்றவரை மறுபடியும் ஊழியத்தில் இணைத்துக்கொண்டால், இந்த முறையும் அவர் ஊழியத்தை விட்டு பிரிந்து செல்லமாட்டார் என்பதற்கு எந்த உறுதியும் இல்லையே. எனவே, அவரை நம்மோடு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று பவுல் கூறுகிறார்.


உலகப்பிரகாரமாக நாம் ஒரு தொழிற்சாலையிலோ அல்லது தொழில் நிறுவனங்களிலோ வேலைசெய்யும்போது, தனிப்பட்ட காரணங்களால் நாம் வேலையை விட வேண்டிய கட்டாயம் இருந்தால், அந்த நிர்வாகத்தினர் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று சொல்லுவார்கள். காரணம், மூன்று மாதங்களுக்கு பின்பு நாம் வேலையை விடப்போகிறோம் என்றால், அதற்குள்ளாக அவர்கள் நேர்முகத்தேர்வு நடத்தி, வேறு ஒரு புதிய நபரை தெரிவு செய்ய வேண்டும். திடீரென்று அந்த வேலையை விட்டு நாம் வெளியேறுவதற்கு எந்த ஒரு நிறுவனமும் அனுமதிப்பதில்லை.


பவுலுக்கு மாற்குவின் மீது தனிப்பட்ட எந்த ஒரு பகையும் இல்லை. பவுல் தனது முதலாவது மிஷனெரி பயணத்தை அந்தியோகியா பட்டணத்திலிருந்து துவங்குகிறார். பவுல், பர்னபா, மாற்கு மூவரும் இணைந்து பிரயாணத்தை ஆரம்பித்தார்கள். பம்பிலியா நாட்டிற்கு வந்தபோது பவுல், பர்னபாவை விட்டு பிரிந்து மாற்கு எருசலேமுக்கு வந்து, பேதுருவோடு இணைந்து கொண்டு, பேதுருவின் மூலமாக மாற்கு சுவிசேஷ புத்தகத்தை எழுதுகிறார்.

பவுலும், பர்னபாவும் முதலாவது மிஷனெரி பயணத்தை முடித்துவிட்டு கடைசியாக அந்தியோகியா வந்தபோது, எருசலேமிலிருந்த மாற்குவும் அந்தியோகியாவிற்கு வருகின்றார். உடனே பவுல், நீ ஏன் இங்கே வந்தாய்? நீ ஊழியத்தை பாதியில் விட்டு வந்தவன் அல்லவா? என்றெல்லாம் கேட்கவில்லை.

உண்மையில் பவுலுக்கு மாற்குவின் மீது தனிப்பட்ட விரோதம் இருந்திருந்தால், மாற்கு எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்கு வந்தபோதே பவுலை அவரை தடுத்திருப்பார். ஆனால் பவுல் அப்படி செய்யவில்லை.

முதல் மிஷனெரி பயணம் பவுலின் பயணம் அல்ல, பர்னபாவின் பயணம். பர்னபாவின் உதவி ஊழியனாகவே பவுல் சென்றார். ஆனால், இரண்டவாது பயணம் பவுலின் பயணம். இங்கே பவுல் தான் தலைமை ஊழியர். பவுல், தனக்கு மூத்த ஊழியராக இருந்த பர்னபாவை, நீங்களும் இந்த பயணத்தில் இணைந்துகொள்ளுகிறீர்களா? என்று பணிவோடு கேட்கிறார். அதற்கு பர்னபா மாற்குவையும் கூட்டிக்கொண்டு போவோம் என்று சொன்னபோது, பவுல் இல்லை அவன் முதல் பயணத்தில் பம்பிலியா நாட்டில் நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டானே, அவனை இந்த முறை அழைத்து செல்ல வேண்டாம் என்று கூறுகிறார். அதற்கு பர்னபா: ஆமாம், நீ சொல்லுவதும் சரிதான், மாற்கு நம்மோடு வரவேண்டாம் என்று கூறியிருக்கலாம்.

ஆனால் பர்னபா இங்கே தான் ஊழியன் என்பதையும், ஒரு ஊழியனிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து, தன் குடும்பத்தை ஊழியத்திற்குள் நுழைக்க முயலுகின்றார். எனவேதான் பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் உண்டாகிறது.

இப்படி குடும்பத்தை ஊழியத்திற்குள் கொண்டு வர நினைத்து. மறைந்துபோன, அழிந்து போன எத்தனையோ ஊழியங்களை இந்த நாட்களிலும் நம்மால் பார்க்க முடியும். ஊழியம் என்பது வேறு, குடும்பம் என்பது வேறு, இதை ஊழியர்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.

மாற்கு என்ற ஒரு வாலிபனால், பவுல், பர்னபா என்ற இரண்டு ஊழியர்களுக்கிடையே பிரிவினை உண்டாகிறது.


பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு சீப்புரூ தீவுக்குப்போனார். (அப்போஸ்தலர் 15:39)

இந்த வசனத்தின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், பர்னபா ஊழியத்தைவிட்டே சென்றுவிட்டார். சீப்புரூ தீவு பர்னபாவின் சொந்த ஊர். பர்னபா தனது காணியாட்சியை விற்று அதின் கிரயத்தை கொண்டுவந்து அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்த ஒருவர். அப்போஸ்தலர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படாத பவுலை ஏற்றுக்கொண்டு, தன்னுடன் ஊழியத்தில் இணைத்துக் கொண்டவர். பவுலையும், பர்னபாவையும் நான் அழைத்த ஊழியத்திற்காக பரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியினாலே அழைக்கப்பட்டவர். (அப்போஸ்தலர் 13:2). இப்படிப்பட்ட பர்னபா குடும்பத்தை ஊழியத்தில் இணைக்க நினைத்து, அதை செயல்படுத்த முடியாததால், ஊழியத்தைவிட்டே சென்றுவிட்டார்.

பர்னபா சீப்புரூ தீவிற்கு சென்று ஊழியம் செய்தார், என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்தார், ஆனால் எந்த ஒரு ஊழியமும் செய்யவில்லை. இந்த இடத்திற்கு பின்பு பர்னபாவை குறித்து அப்போஸ்தலர் நடபடிகளில் வேறு எங்கும் நம்மால் பார்க்க முடியாது.

பர்னபா ஊழியத்தைவிட்டுப் பின்வாங்க அப்படி என்ன நடந்தது, விபச்சாரம் நடந்ததா? கொலை நடந்ததா? வேசித்தனம் நடந்ததா? விக்கிரக ஆராதனை நடந்ததா? இல்லை. ஒன்றும் இல்லாத குடும்ப பிரச்சனையினால் பர்னபா என்ற மூத்த ஊழியர் ஊழியத்தைவிட்டே சென்றுவிட்டார்.

பவுல் பர்னபா இவர்களை விட்டு பிரிந்து சென்ற மாற்கு கூட ஊழியத்தைவிட்டுச் செல்லவில்லை, பேதுருவோடு இணைந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் பர்னபா பவுலை விட்டு பிரிந்து ஊழியத்தைவிட்டே சென்றுவிட்டார்.

எருசலேம் சபை யூத கிறிஸ்தவர்களுக்கு தலைமை இடமாக இருந்ததுபோல, அந்தியோகியா சபை புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு தலைமை இடமாக இருந்தது. பவுலோடு செல்ல விரும்பாத பர்னபா அந்தியோகியாவிலேயே இருந்து ஊழியத்தை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் பர்னபா அப்படிச் செய்யாமல், ஊழியத்தைவிட்டே பிரிந்து சென்றுவிட்டார்.

பர்னபாவிற்கு மாற்கு இல்லாமல் ஊழியம் செய்ய முடியாது என்ற நிபந்தனையும் இல்லை. முதல் பயணத்தில் மாற்கு பம்பிலியா நாட்டில் பிரிந்து சென்ற பின்பு, பவுலும், பர்னபாவும் இணைந்து தான் ஊழியம் செய்தார்கள். மாற்கு இல்லாமல் பர்னபாவினால் ஊழியம் செய்ய முடியும், இருந்தபோதிலும் ஊழியத்தில் குடும்பத்தை இணைக்க நினைத்ததினால் பர்னபா ஊழியத்தைவிட்டே சென்றுவிட்டார்.


பவுல் சீலா என்பவரைத் தெரிவு செய்து, தனது இரண்டாவது மிஷனெரி பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்திலிருந்து பவுல் மேற்கொண்ட அனைத்து பயணங்களிலும் பவுல் தான் தலைமை ஊழியர். (அப்போஸ்தலர் 15:40)

சிலர் சீலா என்பது ஒரு பெண்ணின் பெயர் என்று நினைக்கிறார்கள். பவுலின் மனைவி சீலா என்றும், இவர்களுக்குப் பிறந்த குமாரன் தீமோத்தேயு என்றும் சிலர் சொல்லுகிறார்கள். இது உண்மை அல்ல.

சீலா என்பவரை சைலஸ் என்று அழைப்பார்கள். இவர் பெண் அல்ல, இவர் ஒரு ஆண்.


அப்போஸ்தலர் பதினாறாம் (16) அதிகாரம்
===========
பவுல் தீமோத்தேயு என்பவனையும் தெரிந்துகொண்டு தன்னோடு ஊழியத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினார். தீமோத்தேயு சகோதரராலே நற்சாட்சி பெற்ற ஒரு சீஷன். இவருடைய தகப்பன் கிரேக்கன். தாய் விசுவாசமுள்ள யூத ஸ்திரீ.

தீமோத்தேயுவின் தகப்பன் கிரேக்கன் என்றபடியினால், பவுல் தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் பண்ணினார்.


புறஜாதிகளும் விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்ற வாதம் எழுந்தபோது, விருத்தசேதனம் கிறிஸ்தவர்களுக்கு தேவையில்லை என்று வாதாடியவர் பவுல். ஆனால், அதே பவுல் தீமோத்தேயு என்பவருக்கு விருத்தசேதனம் செய்கிறார்.

யூதர்கள் மாத்திரம் யூதர்களாக இருந்துகொண்டே கிறிஸ்தவர்களாகவும் இருக்க முடியும். தீமோத்தேயுவின் தகப்பன் ஒரு புராசலிடோஸ் அல்ல. கிரேக்கராக இருந்து யூதர்களாக மாறுகிறவர்களை யூதர்கள் புராசலிடோஸ் என்று அழைத்தார்கள். தீமோத்தேயுவின் தகப்பன் யூதனாக மாறவில்லை.

வேறு மதத்தைச் பின்பற்றக்கூடிய ஒருவர், யூத மதத்தை ஏற்றுக்கொண்ட பின்பு யூத மதத்தில் உள்ள ஒரு நபரை திருமணம் செய்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஒரு யூத குழந்தையாக ஏற்றுக்கொள்ளப்படும். யூத மதத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவரோடு யூத மதத்தைச் சார்ந்த ஒருவர் திருமணம் செய்வாரானால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை, ஒருவர் யூதனாக இருக்கிறார் என்படியினால் யூதனாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அது புறஜாதியாகவே ஏற்றுக்கொள்ளப்படும்.

தீமோத்தேயுவின் தகப்பன் யூத மதத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், தீமோத்தேயு பிறக்கும்போதே ஒரு யூதனாக பிறந்திருப்பார். 8-ம் நாளில் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருப்பார். தீமோத்தேயு விருத்தசேதனம் பண்ணப்படாததினால், அவருடைய தகப்பன் யூதனாக மாறவில்லை என்பது தெளிவாகிறது.

தீமோத்தேயுவின் தாய் பிறப்பால் ஒரு யூத பெண்ணாக இருந்தாலும், கிரேக்கனை திருமணம் செய்ததினால் அவர்களுடைய யூதத்தன்மையை இழந்திருப்பார்கள்.

சமாரியர்களும் யூதர்கள் தான். கி.மு 722-ல் அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றிய போது, வேறு நாட்டில் உள்ள புறஇனத்தவர்கள் சமாரியாவில் குடியேற்றினார்கள். சமாரியாவில் வாழ்ந்த யூதர்கள் வேறு இனத்து மனிதர்களோடு சம்பந்தங்கலந்தார்கள். எனவே, யூதர்கள் சமாரியர் வீதிகளில் நடப்பதையே பாவமாக கருதினார்கள். அந்த அளவிற்கு யூத மதத்தின் மீது பக்தி கொண்டவர்கள் இந்த யூதர்கள்.

தீமோத்தேயுவின் தாய் கிரேக்கரை திருமணம் செய்ததினால், தீமோத்தேயுவையும் யூதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தீமோத்தேயுவையும் கிரேக்கராகவே நினைப்பார்கள்.

தீமோத்தேயுவை ஊழியத்தில் எடுத்து பயன்படுத்த நினைத்த பவுல், யூதர்கள் தீமோத்தேயுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் பண்ணினார்.

தீமோத்தேயு விருத்தசேதனம் பண்ணப்படுவதற்கு முன்பே, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, சகோதரர் மத்தியில் நற்சாட்சி பெற்ற சீஷனாக இருந்தார். பவுல் தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் பண்ணினதின் மூலமாக தீமோத்தேயுவை கிறிஸ்தவனாக மாற்றவில்லை, யூதனாக மாற்றுகிறார். மிஷனெரி பிரயாணத்தின் போது, மற்ற இடங்களில் உள்ள யூதர்கள் தீமோத்தேயுவை ஒரு யூதனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கிரேக்கனான தீமோத்தேயுவுக்கு பவுல் விருத்தசேதனம் செய்து, அவரை யூதனாக மாற்றுகிறார். கிறிஸ்தவனாக மாற்றவில்லை. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் விருத்தசேதனம் பண்ணவேண்டிய அசியம் இல்லை.

அப்போஸ்தலர் 16:4
அவர்கள் பட்டணங்கள் தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள்.

பவுல் அந்தியோகியாவை தலைமையகமாகக் கொண்டு புறஜாதிகள் மத்தியில் ஊழியம் செய்துவந்தாலும், தனக்கு ஞானமும், அறிவும் அதிகம் இருந்தாலும் (அப்போஸ்தலர்களில் ஒருவரும் பவுல் அளவிற்கு படித்தவர்கள் அல்ல), எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களுடைய சட்டதிட்டங்களுக்கு மாறாக எதையும் பவுல் செய்யவில்லை. தலைமைத்துவத்துக்குக் கீழ் அடங்கியே தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றி வந்தார்.

நாம் உதவி ஊழியராக இருக்கிறோம் என்றால், நம்முடைய தலைமைத்துவத்துக்குக்கீழ் அடங்கியே ஊழியம் செய்ய வேண்டும். நமக்கு எவ்வளவு ஞானம், கல்வி, திறமை இருந்தாலும் தலைமைத்துவத்துக்கு மாறாக நாம் எதையும் செய்யக்கூடாது.


பவுல் முதல் மிஷனெரி பயணத்தின் போது ஆசியா நாட்டிலுள்ள பல பகுதிகளுக்கு சுற்றித்திரிந்தார். இரண்டாவது பயணத்தின் போது முதல் முறையாக ஐரோப்பா பட்டணத்திற்கும் சென்று ஊழியம் செய்ய ஆரம்பித்தார். மக்கெதோனியா என்பது ஐரோப்பா தேசத்திலுள்ள ஒரு பட்டணம்.

அப்போஸ்தலர் 16:12-ல் அந்தப் பட்டணத்திலே சில நாள் தங்கியிருந்தோம் என்று வாசிக்கிறோம். அப்படியானால், இந்த வசனத்திலிருந்து, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தின் ஆசிரியரான லூக்கா தன்னை பவுலோடு ஊழியத்தில் இணைத்துக்கொள்ளுகிறார்.

தான் எப்படி பவுலோடு இணைந்தேன், எந்த பட்டணத்தில் இணைந்தேன் என்ற எந்த குறிப்பையும் ஏழுதாத லூக்கா, பவுலோடு இணைந்து ஊழியம் செய்தேன் என்பதை மாத்திரம் விளங்கப்படுத்துகிறார்.


லீதியாள்
லீதியாள் தியத்திரா ஊரைச் சார்ந்தவள்.  தியத்தீரா என்ற இடம் ஐரோப்பாவில் உள்ள இடம் அல்ல, சின்ன ஆசியாவில் உள்ள ஒரு இடம். தியத்தீரா ஊர் சாய தொழிற்சாலைகளுக்கு பேர்போன ஒரு ஊர். ஆடைகளுக்கு பயன்படுத்தும் சாயக்கலவைகளை அநேக இடங்களுக்கு சென்று விற்பவள் தான் இந்த லீதியாள். இவள் பவுலின் வார்த்தைகள் மூலமாக தொடப்பட்டு அவள் மாத்திரம் அல்ல, அவளுடைய வீட்டார் அனைவரும் இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்றார்கள்


குறிசொல்லும் பெண்
பிசாசு பிடித்த ஒரு பெண், பவுலையும் மற்றவர்களையும் பார்த்து, தவறுதலாக எந்த வார்த்தையையும் சொல்லவில்லை. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? ஏன் இயேசுவைப் பற்றி அறிவிக்கிறீர்கள்? இங்கு உங்களுக்கு என்ன வேலை என்றெல்லாம் கேட்கவில்லை.

அந்த பெண்ணுக்குள் இருந்த பிசாசு பவுலையும், அவரோடு இருப்பவர்களையும் பார்த்து, இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர். இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர் என்று நல்ல காரியத்தைத் தான் சொன்னது. (அப்போஸ்தலர் 16:17)

இதைக்கேட்ட பவுல், பிசாசுகளும் எங்களை புகழ்ந்து பேசுகிறது என்று பெருமைப்படவில்லை. இக்கால ஊழியர்கள் பிசாசு ஏதேனும் வார்த்தையை சொல்லிவிட்டால், அதை உடனே வீடியோ எடுத்து, தங்களுக்கு பெருமையை தேடிக்கொள்ளுகிறார்கள்.

சில ஊழியர்கள், ஒரு மனிதனுக்குள் பிசாசு புகுந்துவிட்டால், உன் பெயர் என்ன? உன் ஊர் என்ன? உன் விலாசம் என்ன? ஏன் இந்த மனிதனுக்குள் வந்தாய்? என்று பல கேள்விகளைக் கேட்கிறார்கள்.

ஆனால் பவுல் இந்த பிசாசிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. சினங்கொண்டு, நீ இவளைவிட்டு புறப்பட்டுப்போ என்று இயேசுவின் நாமத்தில் சொல்லுகிறேன் என்றே சொல்லுகிறார். உடனே பிசாசு அவளை விட்டுப்போனது. (அப்போஸ்தலர் 16:18)

பிசாசு என்றாலே அது பொய்யும், பொய்க்குப் பிதாவுமாய் இருக்கிறது. நாம் அதினிடத்தில் உன் பெயர் என்ன? என்று கேட்ட உடனே அது உண்மையை சொல்லாது. ஏன் வந்தேன், எதற்கு வந்தேன் என்ற எந்த உண்மையையும் பிசாசு சொல்லாது.

இயேசு கிறிஸ்து ஒரு முறை லேகியோன் பிசாசிடம் உன் பெயர் என்ன என்று கேட்டார். இந்த வசனத்தை வைத்துக்கொண்டு சிலர் பிசாசின் பெயர், விலாசத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பவுல் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. இயேசுவின் நாமத்தினாலே கடிந்து விரட்டுகிறார்.

பிசாசு என்னைப் பார்த்து பயப்படுவதில்லை. நான் சாதாரண ஒரு மனிதன். ஆனால் எனக்குள் இருப்பவர் பெரியர். அவருக்கு முன்னால் எப்பேர்பட்ட பிசாசானாலும் பயந்து ஓடும்.

அந்த பெண்ணுக்குள் இருந்த அசுத்த ஆவியை பவுல் துரத்தியதால், அவள் மூலமாக தங்களுக்கு ஆதாயத்தைத் தேடிக்கொண்டிருந்த சிலர், யூதர், புறஜாதியார் என்ற குழப்பத்தை உண்டுபண்ணி பவுலையும், சீலாவையும் அதிகாரிகளிடத்திற்கு கொண்டு சென்றார்கள்.

இந்த நிகழ்வு நடைபெற்றது ஐரோப்பாவில். ஐரோப்பாவில் யூதர்கள் குறைவாகவே காணப்பட்டார்கள். ரோமர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபடியினால், அதிகாரிகள் பவுலையும், சீலாவையும் அநேக அடி அடிக்கும்படி கட்டளையிட்டு, சிறையில் வைத்தார்கள்.

பவுலும், சீலாவும் ஆண்டவருடைய ஊழியத்தைச் தான் செய்தார்கள். ஆண்டவர் காண்பித்த பாதையில் தான் ஊழியத்தை நடத்தினார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைத்ததோ பாடுகள். அவர்களை அநேக அடி அடித்து, சிறையில் உட்காவல் அறையில், தொழுமரத்தில் மாட்டினார்கள் என்று வாசிக்கிறோம்.

இதன் மூலமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஆண்டவர் சொன்ன இடத்தில், ஆண்டவர் சொன்ன பாதையில் நாம் ஊழியம் செய்தாலும் நமக்கு பாடுகளும், உபத்திரவங்களும் உண்டு.

ஆண்டவர் சொல்லி நான் ஒரு இடத்திற்கு போவேனேயானால், எனக்கு பாடுகளே வரக்கூடாது, ஆண்டவர் சொல்லி நான் ஊழியத்தை துவங்குவேவனேயானால், எனக்கு எதிர்ப்புகளே வரக்கூடாது என்று நாம் யோசிக்கிறோம்.

பவுலும் சீலாவும் இப்பொழுதுதான் ஊழியத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதான் ஊழியத்தின் ஆரம்பம். ஆரம்பத்திலேயே உபத்திரவத்தை பார்த்த பவுலும், சீலாவும் பின்வாங்கவில்லை. ஆண்டவரே நீ சொன்ன ஊழியத்தைத்தானே செய்தோம், ஏன் எங்களுக்கு இத்தனை பாடுகள் என்று ஆண்டவர் மீது எரிச்சல் அடையவில்லை.

சரீரம் முழுவதும் காயங்களுடன், தொழுமரத்தில் கைகளும், கால்களும் கட்டப்பட்ட சூழ்நிலையிலும், பவுலும் சீலாவும் தேவனைத் துதித்துப்பாடினார்கள். சிறையில் உள்ள மற்ற கைதிகள் இவர்கள் பாடித்துதிப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

சிரைச்சாலைக்காரன் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிறான். பொதுவாக கைதிகள் தாங்கள் செய்த குற்றத்தை நினைத்து, தங்கள் குடும்பத்தை நினைத்து எப்பொழுதும் புலம்பிக்கொண்டிருப்பார்கள். அதைப்போலவே பவுலும், சீலாவும் புலம்புகிறார்கள் என்று நினைத்து சிரைச்சாலைத்தலைவன் நன்றாக படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறான்.

திடீரென்று சிறையின் கதவுகள் அசையும்படி பூமி மிகவும் அதிர்ந்தது, கதவுகள் திறவுண்டது, எல்லாருடைய கட்டுகளும் அவிந்துபோனது.

தூங்கி எழுந்த சிரைச்சாலைத்தலைவன், கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கைதிகள் ஓடிவிட்டார்கள் என்று பயந்து பட்டயத்தினால் தன்னை கொலை செய்ய பார்த்தான்.

பவுலும், சீலாவும் ரோமர்களின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். ரோமர்களுடைய சட்டங்கள் வித்தியாசமானதாக இருக்கும். ஒரு சிறைக்கைதி தப்பிவிட்டால், அந்த நேரத்தில் சிறையை காவல் காத்துக்கொண்டிருந்த காவலரும், அவனுடைய குடும்பமும் கொலைசெய்யப்பட வேண்டும் என்பது ரோமர்களின் சட்டம்.

எனவே, நான் மரித்துப்போனால், காவலன் மரித்துப்போனதால் கைதிகள் தப்பித்துவிட்டார்கள், என்று எண்ணி, குடும்பத்தையாவது உயிரோடு வைப்பார்கள். எனவே தான் சிலைச்சாலைத் தலைவன் பட்டயத்தினால் தன்னைக் கொன்றுபோட மனதாயிருந்தான்.

ரோமர்களின் சிரையில் ஏதேனும் பழுதடைந்தால், அதை சரிசெய்வதற்கான தொகையை சிரைச்சாலைக்காவலர்களின் வருமானத்திலிருந்தே எடுப்பார்கள். இதுவும் ரோமர்களின் சட்டம்.

நம்முடைய பகுதிகளிலும் கூட வாடகை வாகனங்களை ஓட்டுபவர்களுடைய வாகனங்களில் ஏதேனும் பழுதடைந்தால், அதை சரிசெய்வதற்கான தொகையை அந்த வாகனத்தை ஓட்டுபவரின் வருமானத்திலிருந்தே எடுப்பார்கள்.


சிரைச்சாலையின் அதிகாரி தன்னை கொலை செய்ய முயன்றபோது, பவுல் உரத்த சத்தமாய் நீ உனக்கு கெடுதி ஒன்றும் செய்துகொள்ளாதே, நாங்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறோம் என்று சொல்லுகிறார்.

பவுலின் வார்த்தையைக் கேட்ட சிரைத்தலைவன் பவுலின் காலில் விழுந்து ஆண்டவன்மாரே இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

தமிழ் வேதாகமத்தில் இரட்சிப்பு என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அநேக ஊழியர்கள் இவர் இயேசுவை முன்னமே அறிந்திருக்கிறார். இரட்சிப்பு என்றால் என்ன என்று இவருக்கு தெரிந்திருந்தது என்று பிரசங்கிப்பதை நாம் பார்த்திருப்போம்.

இரட்சிப்பு எ்ன்பது ஒரு தமிழ் மொழிச் சொல் அல்ல. இரட்சிப்பு என்பது சமஸ்கிரத சொல். இரட்சிப்பு என்றால் தமிழில் விடுதலை என்று பொருள். (எ.கா: விடுதலை, பாதுகாப்பு, காப்பாற்றப்படுதல்)

சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தது, கட்டுகள் அவிந்துபோனது, ஆனால் ஒருவரும் தப்பி ஓடவில்லை, சிரையின் உள் அறையிலிருந்து நீ உனக்கு கெடுதி ஒன்றும் செய்துகொள்ளாதே என்ற சத்தம் கேட்கிறது. இதைப்பார்த்த சிரைத்தலைவன், பவுலின் காலில் விழுந்து சொல்லுகிறார், ஐயா சங்கிலிகள் அனைத்தும் உடைந்துபோய்விட்டது, சிறையின் கதவுகள் அனைத்தும் உடைந்துபோய்விட்டது, இதை சரிசெய்ய தேவையான பணத்தை என்னுடைய வருமானத்திலிருந்து எடுத்துக்கொள்வார்கள். அது என் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாய் இருக்கும். இதிலிருந்து நான் தப்பித்துக்கொள்ள, பாதுகாக்கப்பட என்ன செய்ய வேண்டும் என்று தான் கேட்டார்.

அதற்கு பவுல் அதிகாரியிடம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, நீயும் உன் வீட்டாரும் மீட்கப்படுவீர்கள், பாதுகாக்கப்படுவீர்கள் என்று சொல்லுகிறார்.

நாங்கள் இயேசுவை விசுவாசித்ததினால், எங்களுக்கு விடுதலை கிடைத்தது. அதுபோலவே, நீ இந்த இயேசுவை விசுவாசித்தால், இந்த பூமிஅதிர்ச்சியினால் (சிறை உடைக்கப்பட்டது) ஏற்பட்ட இழப்பிலிருந்து நீயும், உன் குடும்பமும் காப்பாற்றப்படுவீர்கள் என்று பவுல் சொல்லுகிறார். மூலபாஷையில் காப்பாற்றப்படுவீர்கள் என்று எழுதப்பட்டுள்ள வார்த்தையைத்தான் தமிழ் வேதாகமத்தில் இரட்சிக்கப்படுவீர்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று பவுல் சொன்னதினால், இக்கால கிறிஸ்தவர்கள் நான் ஒருவன் விசுவாசித்தால் போதும், என் குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட்டு பரலோகத்திற்கு சென்றுவிடும் என்று நினைக்கிறார்கள்.

இங்கே பவுல் இரட்சிப்பு என்று சொல்வது, நீயும் உன் குடும்பமும் இந்த இழப்பிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள் என்று தான் சொல்லுகிறார். மனந்திரும்பி இரட்சிக்கப்படுவதை சொல்லவில்லை. நான் ஒருவன் விசுவாசிப்பதினால் என் குடும்பம் இரட்சிக்கப்படாது. அவனவன் தன் பாவத்தை உணர்ந்து, ஆண்டவரிடம் பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்டால் மாத்திரமே இரட்சிக்கப்பட முடியும்.


இயேசுவை விசுவாசித்தால், நீயும் உன் வீட்டாரும் காப்பாற்றப்படுவீர்கள் என்று பவுல் சொன்னதினால், சிரைச்சாலைக்காரன் தன் வீட்டாரனைவரோடும் கூட வந்து, பவுலின் மூலமாக இயேசுவைக் குறித்து அறிந்துகொண்டான். அந்த இராத்திரியிலே அவனும், அவனுடைய வீட்டார் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.


மறுநாள் காலையில் அதிகாரிகள் வந்து பார்த்தபோது சிறைச்சாலைக்காரனிடம் எப்படி சிறைச்சாலைகள் உடைந்துபோனது என்ற எந்த கேள்வியும் கேட்கவில்லை. சிரைச்சாலைக்காரனை அழைத்து, பவுலையும், சீலாவையும் விடுதலைபண்ணச் சொல்லி கட்டளையிடுகிறார்.

பவுல் சந்தோஷமாக சிரையை விட்டு வெளியே சென்றிருக்கலாம். ஆனால் பவுல் அப்படிச் செய்யவில்லை. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.

பவுல் யூதனாக இருந்தாலும் ரோம குடியுரிமை பெற்றவர். ரோம குடியுரிமை பெற்ற ஒருவரை யாரும் எளிதில் தொடமுடியாது. ரோமனாகிய என்னை எந்த விசாரனையுமின்றி வெளியரங்கமாய் அடித்து, சிரையில் அடைத்துவிட்டு, இரகசியமாய் விடுதலை செய்கிறீர்களா என்று கேட்கிறார்.

பவுல் ஒரு ரோமன் என்பதை அறிந்த அதிகாரிகள் பயந்து, பவுல், சீலாவுடனே தயவாய் பேசி, பட்டணத்தைவிட்டு போகும்படி வேண்டிக்கொண்டார்கள்.

இப்படி ஒருசில நேரங்களில் பவுல் தனக்கு உலகப்பிரகாரமாக இருக்கின்ற அதிகாரத்தையும் பயன்படுத்துகிறார். ஆண்டவருடைய ஊழியப்பணியில் உலக அதிகராத்தையும் பயன்படுத்தலாம் என்று பவுல் கற்றுக்கொடுக்கின்றார்.


அப்போஸ்தலர் பதினேழாம் (17) அதிகாரம்
=============
மக்கெதொனியாவிலிருந்து தெசலோனிக்கே பட்டணத்திற்கு சென்றார்கள். தெசலோனிக்கே பட்டணமும் ஐரோப்பா நாட்டிலுள்ள ஒரு பட்டணம். இங்கே ஒரு ஜெப ஆலயமும் இருந்தது.

இங்கே அநேகர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். இந்த பட்டணத்திலும் பவுலுக்கு பிரச்சனைகள் வந்தது.

தெசலோனிக்கேயிலிருந்து பெரோயா பட்டணத்திற்கு சென்றார்கள்.


அத்தேனே பட்டணம்
பின்பு கிரேக்க தலைநகரமாகிய அத்தேனே பட்டணத்திற்கு வந்தார்கள். இந்த பட்டணத்தில் எப்பிக்கூரரும், ஸ்தோயிக்கரும் பவுலோடு வாக்குவாதம் பண்ணினார்கள். இவர்கள் இருவரும் தத்துவ ஞானிகள்.

கிரேக்கர்கள் தத்துவ ஞானிகள். தெய்வ பயம் கொண்டவர்கள். கிரேக்கர்கள் மனித முகத்தோடும், குதிரை சரீரத்தோடும் இருக்கின்ற தெய்வங்கள், இதுபோன்ற பல உருவங்களில் தெய்வங்களை வணங்கினார்கள்.

கிரேக்கர்களின் தலைநகர் அத்தேனே பட்டணத்தில் மார்ஸ் என்ற ஒரு மேடை இருந்தது. அத்தேனே பட்டணத்தில் பவுல் சுற்றித்திருந்தபோது, அநேக கல்வெட்டுகளைப் பார்க்கிறார். அதில் ஒன்றில் அறியப்படாத தேவனுக்கு என்று எழுதப்பட்டிருந்தது.

பவுல் மார்ஸ் மேடையில் நின்று அத்தேனே பட்டணத்தாரை நோக்கி: நீங்கள் அறியாத தேவன் என்று சொல்லுகிறீர்களே, அந்த தேவனைப் பற்றிதான் நான் கற்றுக்கொடுக்கப்போகிறேன் என்று சொல்லி, இயேசுவைக் குறித்து அவர்களுக்கு போதிக்கிறார்.

எந்த இடத்தில் எப்படி வார்த்தையை பிரசங்கித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஞானம் பவுலுக்கு அதிகமாகவே இருந்தது. கிரேக்கர்கள் உலகத்தில் தலைசிறந்த ஞானிகள். அவர்களுக்கு, அவர்களுடைய பலிபீடத்தில் உள்ள ஒரு வாசகத்தைக் கொண்டே சத்தியத்தை போதித்தார் பவுல்.


அப்போஸ்தலர் பதினெட்டாம் (18) அதிகாரம்
===============
கொரிந்து பட்டணம்
அந்தேனே பட்டணத்திலிருந்து பவுல் கொரிந்து பட்டணத்திற்கு சென்றார். கொரிந்து பட்டணத்தில் பவுல் பதினெட்டு மாதம் தங்கியிருந்தார்.

கொரிந்து பட்டணத்தில் மிகப்பிரபளமான இரண்டு ஐரோப்பிய துரைமுகங்கள் இருந்தன. கொரிந்து பட்டணத்தில் கிரேக்கர்கள் அதிக அளவில் இருந்தார்கள். யூதர்களும் கொரிந்தில் வாழ்ந்து வந்தார்கள். கிலவுதியு ராயனின் காலத்தில் ரோமாபுரியில் உள்ள யூதர்கள் அனைவரும் துரத்தப்பட்டார்கள். அவர்கள் வந்து சேர்ந்த இடம் இந்த கொரிந்து பட்டணம்.

தெசலோனிக்கே, பிலிப்பி போன்ற பட்டணங்களை விட தொழில்வாய்ப்பு அதிகம் நிறைந்த பட்டணம் இந்த கொரிந்து பட்டணம். கொரிந்து அந்நிய நாட்டார் வந்து செல்லும் ஒரு முக்கியமான இடம்.

கொரிந்துவில் இரண்டு பெரிய துரைமுகங்கள் உண்டு. ஐரோப்பாவிலிருந்து ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களும், ஆசியா, ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் கப்பல்களும், இதுபோன்ற மத்திய தரைக்கடலை பயன்படுத்துகின்ற அனைத்து கப்பல்களும் இந்த கொரிந்துவில் உள்ள ஏதோ ஒரு துரைமுகத்திற்கு வந்து சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு செல்வது வழக்கம்.

அந்த நாட்களில் பாய்மரக்கப்பல் தான் அதிக அளவில் இருந்தது. கொரிந்து வழியாய் பிரயாணப்படுகிறவர்கள் பட்டணத்திற்குள் வந்து ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்கள் அங்கு வந்து தங்கிவிட்டுத்தான் செல்வார்கள்.

பாய்மரங்களை சரிசெய்வது, தங்கள் பிரயாணத்துக்குத் தேவையான உணவு பொருட்களை ஆயத்தம் செய்வது போன்ற காரியங்களுக்காக அந்த வழியே செல்லும் அனைத்து கப்பல்களும் சில மாதங்கள் கொரிந்துவில் இருந்துவிட்டே புறப்படும்.

The Kings HighWay – ராஜாவின் பெருந்தெரு என்று அழைக்கப்படும் சாலை இந்த கொரிந்து வழியே சென்றது. கடல் வழி வணிகம் மாத்திரம் அல்ல, தரைவழி வணிகத்தின் முக்கிய இடமாகவும் இந்த கொரிந்து பட்டணம் காணப்பட்டது. தரைவழி வணிகர்களும் சிலநாள் கொரிந்துவில் தங்கவிட்டுச் செல்வது வழக்கம்.

விக்கிரக ஆராதனை நிறைந்த ஒரு பட்டணம் இந்த கொரிந்து. கொரிந்துவிலிருந்து தெற்கே எட்டு கி.மீ தொலைவில் அக்ரோகொரிந்து என்ற இடம் உண்டு. அந்த பட்டணத்தில் உள்ள ஒரு மேட்டில், பிரபளமான அஃப்ரோடிடைஸ் என்ற பாபிலோனிய தெய்வம் இருந்தது.

இந்த கோயிலில் ஆயிரம் விபச்சாரிகள் இருந்தார்கள் (தேவதாசிகள்). தாசி என்றால் விபச்சாரி. தேவதாரி என்றால் தெய்வத்திற்காக விபச்சாரம் செய்கிறவர்கள். ஒவ்வொரு நாளும் இந்த கோயிலில் விபச்சாரம் நடைபெறும். இந்த விபச்சாரத்தைப் பார்த்து, சந்தோஷமடைந்த அந்த தெய்வம் கொரிந்து பட்டணத்தை ஆசீர்வதிப்பதாக அவர்கள் நம்பினார்கள்.

விபச்சாரம் செய்வதற்காகவே இந்த கோயிலுக்கு வருபவர்கள் உண்டு. கடல் வழி வணிகம், தரைவழி வணிகத்தின் நிமித்தமாக கொரிந்து பட்டணத்திற்கு வருபவர்களும் உண்டு. இப்படி அநேகர் வந்து செல்லும் இடம் என்பதால், எந்த நேரமும் மக்கள் கூட்டம் நிரைந்த ஒரு பட்டணம் இந்த கொரிந்து.

அநேகர் வந்து செல்லும் இடம் என்பதால், அநேக வாடகை வீடுகள் கொரிந்து பட்டணத்தில் காணப்பட்டது. சில நேரங்களில் வாடகைக்கு வீடு கிடைக்காமல் போகும் அளவிற்கு மக்கள் கூட்டம் அதிகரிக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் பால அறைகள் கொண்ட வீடுகள் வைத்திருப்பவர்கள், தங்கள் வீடுகளையும் வாடகைக்கு கொடுப்பார்கள். இந்த வீடுகளும் நிறைந்துவிட்டால், வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்கள் கூடாரங்களில் வாழ ஆரம்பிப்பார்கள்.

வீடுகளை வாடகைக்கு எடுக்கும் அளவிற்கு பண வசதி இல்லாவர்களும் கூடாரங்களை வாங்கி அதில் தங்குவார்கள். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பட்டணம் என்பதால், கொரிந்து பட்டணத்தில் கூடாரத்தொழில் முக்கியப் பங்கு வகித்தது.

இரண்டுபேர், மூன்றுபேர், நான்குபேர் தங்கும் அளவிற்கு வெவ்வேறு அளவுகளில் கூடாரங்கள் செய்து விற்பனை செய்வார்கள். கூடாரங்களை வாடகைக்கு வாங்குபவர்களும் உண்டு, சொந்தமாக வாங்குபவர்களும் உண்டு.

ஒருசில நாட்கள் தங்குபவர்கள் வாடகைக்கு கூடாரங்களை வாங்குவார்கள். அநேக நாட்கள் தங்குபவர்கள் வாடகைக்கு வாங்குவதைவிட சொந்தமாக வாங்கிவிட்டால், நாம் மற்ற இடங்களுக்கும் அதை பயன்படுத்தக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் உண்டு.

பவுல் கூடாரத்தொழில் செய்பவர். கொரிந்து பட்டணத்தில் இருந்த ஆக்கில்லா, பிரிஸ்கில்லா என்ற தம்பதியினரும் கூடாரத்தொழில் செய்து வந்ததால், தானும் ஒரு கூடாரத்தொழில் செய்தவன் என்றபடியினால், கொரிந்து பட்டணத்தில் மாத்திரம் பவுல் கூடாரத்தொழில் செய்தார்.

பவுல் செல்லும் இடம் எல்லாம் கூடாரத்தொழில் செய்யவில்லை, கொரிந்து பட்டணத்தில் மாத்திரமே கூடாரத்தொழில் செய்தார்.


தலைச்சவரம் பண்ணுதல்
பவுல் கெங்கிரேயா பட்டணத்தில் தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால், தலைச்சவரம் பண்ணிக்கொண்டார் என்று வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 18:18)

கிறிஸ்தவர்கள் வேண்டுதல் என்ற பெயரில் மொட்டை போடலாமா? பவுல் செய்தாரே என்று அநேகர் செல்வதுண்டு.

பவுல் கிறிஸ்தவனாக இருந்தாலும், அவர் ஒரு யூதன். எனவே யூதமுறைப்படி அவர் தன்னுடைய முறைமையை செய்தார். நசரேய விதம், போன்ற அவர்களுக்கென சில சடங்குமுறைகள் யூத கலாச்சாரத்தில் உண்டு.

யூதார்கள் மாத்திரம் யூதர்களாக இருந்துகொண்டே, கிறிஸ்தவர்களாகவும் இருக்க முடியும். எனவே, பவுல் செய்தார் என்பதற்காக நானும் செய்வேன் என்று நம்மால் சொல்லமுடியாது. அவர் பிறப்பால் ஒரு யூதன். எனவே பவுல் யூத கடமைகளை நிறைவேற்றினார்.

பின்பு பவுல் எருசலேமிற்கு சென்று சபையை சந்தித்துவிட்டு, அந்தியோகியா பட்டணத்திற்கு சென்றார். இதோடு இரண்டாவது மிஷனெரி பிரயாணம் முடிவுபெற்றது.

அந்தியோகியாவிலிருந்து புறப்பட்ட பவுல், மீண்டும் அந்தியோகியா வந்தடைந்தார்.

பவுலின் இரண்டாவது மிஷனெரி பயணத்தில் பவுலோடு இணைந்துகொண்டவர்கள் – சீலா, தீமோத்தேயு, லூக்கா, ஆக்கில்லா, பிரிஸ்கில்லா.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.