Type Here to Get Search Results !

Book of Acts Bible Study | Chapter 11,12 | அப்போஸ்தலர் நடபடிகள் விளக்கவுரை | Part 6 | Jesus Sam

=============
அப்போஸ்தலர் நடபடிகள் (பகுதி 6)
============
அப்போஸ்தலர் பதினொராம் அதிகாரம் (11)
=================

பேதுரு புறஜாதிகள் மத்தியில் சென்று அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவித்து, அவர்களோடு புசித்து, குடித்ததை கேள்விப்பட்ட அப்போஸ்தலர்கள் பேதுருவோடு வாக்குவாதம் பண்ணினார்கள்.

அப்போஸ்தலர்கள் பேதுருவோடு தர்க்கித்தது சரியே. அப்போஸ்தலர்கள் அனைவரும் பாரம்பரிய யூதர்கள். யூதர்களுடைய நியாயப்பிரமாணப்படி விருத்தசேதனம் பண்ணிக்கொண்ட யூதன், விருத்தசேதனம் இல்லாத புறஜாதியாரோடு எந்த வித உறவும் வைத்திருக்கக்கூடாது.

அப்போஸ்தலர்களும் சீஷர்களும் இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொண்டார்கள். இயேசு கிறிஸ்து உலகத்தை மீட்க வந்த மேசியா அல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற யூதர்களை மாத்திரம் மீட்க வந்த மேசியா என்று நினைத்தார்கள்.

அப்போஸ்தலர்கள் அனைவரும் இயேசு கர்ப்பித்த மார்க்கம் என்பது யூதமதத்தின் ஒரு பிரிவு என்று நினைத்தார்கள்.


பேதுரு நடந்த காரியங்கள் அனைத்தையும் சீஷர்களுக்கு விளக்கியபோது, சீஷர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்து யூதர்களை மீட்கும்படியாக வந்தவர் அல்ல, அகில உலகத்தையும் பாவத்திலிருந்து மீட்டு, பரலோக ராஜ்யத்தில் சேர்க்க வந்தவர் என்று அறிந்துகொண்டு கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள்.


ஸ்தேவான் மரித்தபோது எருசலேமில் இருந்த சீஷர்கள் அனைவரும் சிதரடிக்கப்பட்டார்கள். பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா என பல இடங்களுக்கு சிதறிப்போனார்கள். இப்படி சிதறிப்போன சீஷர்கள், அங்குள்ள யூதர்களுக்கு மாத்திரமே சுவிசேஷத்தை அறிவித்தார்கள். புறஜாதியாருக்கு அறிவிக்கவில்லை.


புதிய ஏற்பாட்டு காலத்தில் இரண்டு அந்தியோகியா பட்டணங்கள் இருந்தன. சிரியா தேசத்தில் ஒரு அந்தியோகியா இருந்தது (தீரு, சீதோன் தேசத்தின் அருகில் இருந்த அந்தியோகியா), துருக்கியில் (சின்ன ஆசியா) ஒரு அந்தியோகிய பட்டணம் இருந்தது. இந்த சிரியா தேசத்தில் உள்ள அந்தியோகியாதான் பெரிய அந்தியோகியா என்று அழைக்கப்பட்டது.


சபையார் சிரியா தேசத்தில் உள்ள அந்தியோகியா பட்டணத்திற்கு தான் பர்னபாவை அனுப்பினார்கள். பர்னபாவிற்கு மரியாள் என்ற சகோதரி இருந்தாள். சுவிசேஷ புத்தகங்களில் மூன்று மரியாளைக் குறித்து வாசிக்கலாம். சுவிசேஷ புத்தகத்தில் வருகின்ற மரியாள் இந்த மரியாள் அல்ல. இவள் பர்னபாவின் சகோதரி. இந்த மரியாளின் மகன் பெயர் யோவான் மாற்கு. இந்த யோவான் மாற்கு தான் மாற்கு நற்செய்தி நூலை எழுதினார்.

இந்த பர்னபா தான் தன்னுடைய நிலங்களை விற்று, அதின் கிரயத்தை கொண்டு வந்து அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார். (அப்போஸ்தர் 4:36,37)

பர்னபா நல்லவர், பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர் என்று அவரைக் குறித்த நற்சாட்சி இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர் மூலமாக அநேக கிறிஸ்துவின் பக்கம் திரும்பினார்கள். (அப்போஸ்தலர் 11:24)


சவுல் தமஸ்குவில் இரட்சிக்கப்பட்ட பின்பு அநேகநாள் அங்கே ஊழியம் செய்தார். பின்பு அரபிதேசத்திற்கு சென்று அங்கே மூன்று வருஷம் தங்கியிருந்தார். (கலாத்தியர் 1:17). பின்னர் தமஸ்கு பட்டணத்திற்கு வந்து, எருசலேமிற்கு வந்தார். சீஷர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த பர்னபாவே சவுலை ஏற்றுக்கொண்டார். பின்பு சவுல் எருசலேமிலிருந்து தனது சொந்த ஊரான தர்சு பட்டணத்திற்கு சென்றுவிடுகிறார்.


தர்சு பட்டணம் அந்தியோகியா பட்டணத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு பட்டணம். அந்தியோகியாவிலிருந்து காலையில் நடக்க துவங்கினால், மாலையில் தர்சு பட்டணத்திற்கு சென்றுவிடலாம்.


அந்தியோகியாவில் சுவிசேஷம் அறிவித்துக்கொண்டிருந்த பர்னபா தர்சு பட்டணத்திற்கு சென்று பவுலை அந்தியோகியாவிற்கு அழைத்து வருகிறார். இருவரும் ஒருவருட காலமாக அந்தியோகியாவில் சுவிசேஷம் அறிவித்தார்கள்.

இந்த அந்தியோகியா பட்டணத்தில் தான் சீஷர்களுக்கு முதல் முதலில் கிறிஸ்தவர்கள் என்ற பெயர் வழங்கப்பட்டது.

யூதபாரம்பரியத்தை மாத்திரம் கடைபிடிக்கிறவர்கள் இயேசுவை பின்பற்றுகிறவர்களை கள்ள உபதேசிகள் என்று அழைத்தார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் தங்களை நாங்கள் யூத மதத்தின் ஒரு கிளை என்று நினைத்தார்கள். ஆனால் முதல் முதலில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று புறஜாதியான அந்தியோகியா பட்டணத்தாரால் அழைக்கப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்று பொருள். (அப்போஸ்தலர் 11:26)


அந்நாட்களில் எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியா பட்டணத்திற்கு வந்தார்கள். அவர்களில் ஒருவரான அகபு என்பவர் உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர் உரைத்ததின்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே பஞ்சம் உண்டானது. (அப்போஸ்தலர் 11:27,28)


அந்தியோகியாவில் தான் முதல் முதலில் புறஜாதிகள் மத்தியில் சபை உருவானது. கொர்நேலியுவின் வீட்டில் புறஜாதிகளும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் சபை துவங்கவில்லை. முதல் முதலில் அந்தியோகியாவில் தான் புறஜாதிகள் மத்தியில் சபை உருவானது.

பவுல் பர்னபாவுடன் இணைந்து ஊழியம் செய்ய ஆரம்பித்த முதல் இடம் அந்தியோகியா. (அப்போஸ்தலர் 11:25)

அந்தியோகியா பட்டணத்தில் தான் முதல் முதலில் சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் வழங்கப்பட்டது. (அப்போஸ்தலர் 11:26)

அந்தியோகியா பட்டணத்தார் தான் முதல் முதலில் உதவிப்பணம் சேகரித்து கொடுக்கும் முறையை அறிமுகம் செய்தவர்கள். (அப்போஸ்தலர் 11:29)


இயேசு கிறிஸ்து எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு முதல் முதலில் சபை தொடங்கப்பட்ட இடம் எருசலேம். இரண்டாவது சபை தொடங்கப்பட்ட இடம் அந்தியோகியா. யூத கிறிஸ்தவர்களின் தலைமையகம் எருசலேம் என்றும், புறஜாதி கிறிஸ்தவர்களின் தலைமையகம் அந்தியோகியா என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அந்தியோகியா சபையைப் போலவே, இந்த நாட்களில் இருக்கின்ற சபைகளும் உதவிப்பணம் கொடுக்க வேண்டும் என்பதை கர்த்தர் விரும்புகிறார். நம்முடைய திருச்சபையை விட மிகவும் கஷ்டத்தில் உள்ள அநேக திருச்சபைகளை நாம் பார்க்கும்போது அவர்களுக்கும் நாம் உதவிபணம் அனுப்பி, அவர்களையும் தாங்குவது கிறிஸ்தவர்களின் கடமையாக இருக்கிறது.

அந்தியோகியா பட்டணத்தார் உதவிப்பணம் கொடுத்தார்கள் என்பதால், அவர்கள் ஐசுவரியவான்கள், பெரிய முதலாளிகள் அல்ல, அவர்களுக்கும் தேவைகள் இருக்கத்தக்க, தேவையுள்ள மற்றவர்களுக்கும் அவர்கள் கொடுத்து உதவினார்கள். அந்தியோகியா சபையாரைப்போல நாமும் நம்மைவிட வசதிவாய்ப்புகளில் குறைந்து காணப்படும் சபைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும். குறிப்பாய் கிராமப்புரங்களில் உள்ள சபைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும்.


அப்போஸ்தலர் பன்னிரெண்டாம் அதிகாரம் (12)
===========
யாக்கோபு, யோவான், பேதுரு இந்த மூவரும் இயேசுவோடு நெருங்கியிருந்த சீஷர்கள். யாக்கோபும் யோவானும் சகோதரர்கள். இந்த யாக்கோபுவை ஏரோது பட்டயத்தால் கொலை செய்தான்.

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களில் முதல் இரத்த சாட்சி இந்த யாக்கோபு. கிறிஸ்தவர்களில் முதல் இரத்த சாட்சி ஸ்தேவான்.


ஏரோது யாக்கோபை கொலை செய்தது யூதர்களுக்கு பிரியமாய் இருந்ததால், பஸ்கா பண்டிகை முடிந்த பின்பு பேதுருவையும் கொலை செய்ய யோசனை பண்ணி, பேதுருவை சிரைச்சாலையில் அடைத்தார்.

அப்போஸ்தலர்களில் மூத்தவர் இந்த பேதுரு. பேதுருவின் ஆலோசனைகளை சீஷர்கள் மதித்தார்கள். அப்படிப்பட்ட பேதுருவை ஏரோது கொலை செய்ய நினைத்து கைது செய்ததால், சபையார் பேதுருவுக்காக ஊக்கமாக ஜெபித்தார்கள்.

சபையாரின் ஜெபத்தைக்கேட்டு ஆண்டவர், ஏரோது பேதுருவை கொலைசெய்ய குறித்த நாளுக்கு முந்தின நாள் ஒரு தூதனை பேதுருவினிடத்தில் அனுப்புகிறார். தூதன் சிறைச்சாலையில் கட்டப்பட்டிருந்த பேதுருவை விலாவில் தட்டி எழுப்பி சிறைச்சாலையிலிருந்து வெளியே கொண்டுவந்து விட்டார்.

சபையார் அனைவரும் பர்னபாவின் சகோதரி மரியாள் அவர்களுடைய வீட்டில் பேதுருவுக்காக ஊக்கமாக ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேதுரு இந்த மரியாளின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகிறார்.

மரியாள் என்பது இயேசுவின் தாய் மரியாள் அல்ல. அநேகர் பேதுரு இயேசுவின் தாயாகிய மரியாளின் வீட்டிற்கு தான் சென்றார் என்றும், யோவான் இயேசுவின் சகோதரன் என்றும், அவருக்கு மாற்கு என்னும் பெயர் இருந்ததாகம் நினைக்கிறார்கள்.

பேதுரு பர்னபாவின் சகோதரி மரியாளின் வீட்டிற்கே சென்றார். இந்த மரியாளின் மகன் பெயர் யோவான் மாற்கு.

மரியாள் என்றால் கசப்பு என்று பொருள். யூதர்கள் பொதுவாக பெண்களை விரும்பமாட்டார்கள். ஆண்களை சந்தோஷமாக ஏற்றக்கொள்வார்கள். பெண் பிள்ளை பிறந்தாள் அதை கசப்பாக நினைப்பார்கள். எனவே, மரியாள் என்ற பெயர் யூதர்கள் மத்தியில் பரவலாக காணப்பட்டது. சுவிசேஷ புத்தகங்களிலும் நாம் அநேக மரியாளைக் குறித்து வாசிக்க முடியும்.

சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த பேதுரு இயேசுவின் தாயாகிய மரியாளின் வீட்டிற்கு செல்லவில்லை, பர்னபாவின் சகோதரி மரியாளின் வீட்டிற்கு சென்றார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பேதுரு கதவை தட்டியபோது, ரோதை என்பவள் எட்டிப்பார்த்து, பேதுருவின் சத்தத்தை அறிந்து கதவை திறவாமல் உள்ளே ஓடி பேதுரு வாசலுக்கு முன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள். ரோதை சொன்னதை ஒருவரும் நம்பவில்லை.

நம்முடைய ஜெபமும் அநேக நேரங்களில் இந்த சீஷர்களுடைய ஜெபத்தைப் போன்றே உள்ளது. ஆண்டவர் என்னுடைய வாழ்வில் அற்புதம் செய்ய வேண்டும், விடுதலை கிடைக்க வேண்டும் என்று ஜெபிப்போம். ஆண்டவர் விடுதலை கொடுத்தால் நம்பாமல் இருப்போம்.

பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்த சீஷர்களே பேதுரு சிறையிலிருந்து வந்துவிட்டார் என்று நம்பவில்லை. வெளியே நிற்பது பேதுருவின் தூதனாக இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். (அப்போஸ்தலர் 12:15)

இந்த வசனத்தை வைத்துக்கொண்டு அநேகர் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தூதன் இருக்கிறான் என்று சொல்வதுண்டு. அது உண்மை அல்ல.

அவர்கள் கதவை திறந்தபோது பேதுரு உள்ளே வந்து, பேசாதிருக்கும்படி கையமர்த்தி, கர்த்தர் தன்னை காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு அறிவித்து, இதை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று கூறுகிறார்.

இங்கே சொல்லப்படுகிற யாக்கோபு யோவானின் சகோதரர் அல்ல. அவர் ஏரோதினால் கொலை செய்யப்பட்டார். இங்கே சொல்லப்படுகிற யாக்கோபு இயேசுவின் சகோதரன் யாக்கோபு.

இயேசுவின் சகோதரரில் இருவர் இயேசுவின் சீஷர்களாக இருந்தார்கள். ஒருவர் இந்த யாக்கோபு மற்றவர் யூதா.

இயேசுவின் சகோதரர் யாக்கோபு தான் புதிய ஏற்பாட்டில் உள்ள யாக்கோபு நிருபத்தை எழுதியவர். இயேசுவின் சகோதரர் யூதா தான் புதிய ஏற்பாட்டில் உள்ள யூதா நிருபத்தை எழுதியவர்.

இயேசுவின் சகோதரன் யாக்கோபு தான் பிற்காலத்தில் எருசலேம் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பெண்களில் மரியாள் என்ற பெயர் அநேகருக்கு இருப்பது போல, ஆண்களில் அநேகருக்கு இந்த யாக்கோபு என்ற பெயர் இருந்ததை வேதத்தில் நாம் பார்க்க முடியும்.

இந்த இரண்டு பெயர்களும் நல்ல அர்த்தத்தை கொடுக்கின்ற பெயர்கள் அல்ல. மரியாள் என்றால் கசப்பு என்று பொருள். யாக்கோபு என்றால் காலை வாருபவன் என்று பொருள். இந்த இரண்டு பெயர்களும் யூதர்கள் மத்தியில் பரவலாக காணப்பட்டது.


சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பேதுரு சிறைச்சாலையில் காணவில்லை என்பதால் கோபமடைந்த ஏரோது சிறைக்காவலரை கொலை செய்தான். சேவகருக்கள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல. (அப்போஸ்தலர் 12:18,19)

பேதுருவை காணவில்லை என்பதை அறிந்த ஏரோது யூதேயா தேசத்தை விட்டு செசரியா பட்டணத்திற்கு சென்று அங்கே வாசம்பண்ணினார்.

தன்னுடைய தோல்வியை தாங்கமுடியாமல் ஒரு பைத்தியக்காரனாக மாறினார் ஏரோது. இந்த ஏரோதுவைப்போலவே தோல்வியை தாங்க முடியாத அந்தியோகஸ் எஃபிபனஸ் என்பவர் பைத்தியமாக மாறினார்.

கி.மு. 167-ல் அந்தியோகஸ் எஃபிபனஸ் என்பவர் எருசலேமிற்குள் வந்து தேவாலயத்தையும், எருசலேம் நகரத்தையும் கைப்பற்றுகிறான். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு எகூதா என்ற வாலிபனும் அவனோடு சேர்ந்த ஒருசில வாலிபர்களும் இணைந்து இந்த அந்தியோகஸ் எஃபிபனஸை தோற்கடித்தார்கள். எகூதா என்பவர் ஒரு ராஜா அல்ல, இராணுவ வீரன் அல்ல, சாதாரண வாலிபன். தன்னை ஒரு வாலிபன் தோற்கடித்துவிட்டதை தாங்கமுடியாமல், அந்தியோகஸ் எஃப்பிபனஸ் மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறி மரித்துப்போனார். இதுபோன்ற ஒரு நிலைதான் ஏரோதுக்கு வந்தது.


எசேக்கியா யூதாவை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது கி.மு. 700-ம் ஆண்டு செனகரிப் என்ற மன்னன் எருசலேமைக் கைப்பற்ற ஒரு லட்சத்து எண்பதினாயிரம் வீரர்களோடு வந்தார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக நீ அந்த சேனையைக் கண்டு பயப்பட வேண்டாம், அவர்களே முறிந்தோடுவார்கள் என்று எசேக்கியாவிற்கு தீர்க்கதரிசனமாக சொல்லப்படுகிறது.

அன்று ஒரே இராத்திரியில் கர்த்தருடைய தூதன் செனகரிப் மன்னனின் இராணுவீரர்கள் ஒருலட்சத்து எண்பதினாயிரம் பேரையும் கொன்றுபோட்டார். காலையில் எழுந்துபார்த்த செனகரிப், தன்னுடைய இராணுவம் முழுவதும் மடிந்துபோனதை அறிந்து பயந்து நினிவேக்கு ஓடிப்போனான். நினிவேக்கு ஓடின செனகரிப் ஒரு பைத்தியக்காரனைப்போல மாரினான். பின்நாட்களில் அவனுடைய பிள்ளைகளே அவனை கொலைசெய்தார்கள்.


ஏரோது மன்னனுக்கு செசரியா பட்டணத்திலும் ஒரு அரமனை இருந்தது. தன் காவலில் வைக்கப்பட்ட பேதுருவைக் காணாததால், ஆத்திரமடைந்த ஏரோது செசரியாவில் வந்து தங்கினார்.

இந்த ஏரோது மன்னனுக்கும் தீரு சீதோன் தேசத்தாருக்கும் இடையே சில கருத்துவேறுபாடுகள் இருந்தன. இதை சரிசெய்துகொள்ளும்படியாக தீரு சீதோன் தேசத்தார் ஏரோதுவைக் காண வந்தார்கள். அவர்கள் ஏரோதின் வீட்டு விசாரனைக்காரன் பிலாஸ்துவை அழைத்து, எங்களுக்காக நீ ராஜாவிடம் பேசு, அவரோடு நாங்கள் நல்லுரவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

செசரியாவிலே விளையாட்டு மைதானம் ஒன்று இருந்தது. சுற்றிலும் ஜனங்கள் அமர்ந்து பார்க்கும்படியாகவும், நடுவிலே வீரர்கள் விளையாடும்படியான ஒரு மைதானம் அங்கே இருந்தது.

குறித்த நாளிலே ஏரோது அந்த மைதானத்தில் வந்து அமர்ந்தார். தீரு சீதோன் தேசத்தாரும் வந்து அமர்ந்தார்கள். ஏரோது அவர்களுக்கு பிரசங்கம் பண்ணினார்.

ஏரோதுவின் வார்த்தைகளைக் கேட்ட ஜனங்கள் இது மனுஷ சத்தமல்ல, தேவ சத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். ஏரோது சிறந்த முறையில் பேசியதால் கூடியிருந்தவர்கள் இப்படி சொல்லவில்லை.

தீரு, சீதோன் பகுதியில் இருந்தவர்கள் ஏரோதின் மூலமாக அநேக நன்மைகளை அனுபவித்தவர்கள். ஏதோ ஒரு கருத்துவேறுபாட்டினால் ஏரோதின் மூலமாக இவர்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. எனவே, ஏரோதுவை சமாதானப்படுத்த, ஏரோதுவோடு மீண்டும் நல்லுரவை ஏற்படுத்தக்கொள்ள வந்தவர்கள் இந்த தீரு, சீதோனியர். எனவே, ஏரோது என்ன பேசினார் என்று கூட கவனிக்காமல், ஏரோதின் மனம் நெகிழ வேண்டும் என்பதற்காக உங்கள் வார்த்தைகள் மனுஷ சத்தம் அல்ல, தேவனுடைய சத்தம் என்று புகழுகிறார்கள்.

நம்மையும் கூட அநேகர் பாராட்டுவது உண்டு. அப்படி பாராட்டுகிறார் என்றால், அவர் நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கின்றார் என்று அர்த்தம்.

ஏரோதுவின் சத்தம் தேவனுடைய சத்தம் என்று ஜனங்கள் சொன்னபோது, ஏரோதும் அதை ஏற்றுக்கொண்டு தன்னை ஒரு கடவுளாக நினைத்தான். ஏரோதுவின் இச்செயல்களால் ஆண்டவர் ஏரோதை அடித்தார். ஏரோது புழுபுழுத்து மரித்தான்.


நேபுகாத்நேச்சார் பாபிலோனிலே பெரிய தொங்குந்தோட்டம் ஒன்றை செய்தார். பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக அந்த தொங்கும்தோட்டம் இருந்தது. ஒருநாள் தன்னுடைய அரண்மனையில் உப்பரிகையில் ஏறி, இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கொன்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னார். (தானியேல் 4:30)

நேபுகாத்நேச்சாரின் இந்த பெருமையினால் ஆண்டவர் அவரை தேசத்திலிருந்து துரத்தில் ஏழு ஆண்டுகள் மாட்டைப்போல புல்லைத் தின்ன வைத்தார்.


ஏரோதின் மூலமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், நம்முடைய ஊழியத்தின் மூலமாக, நம்முடைய பாடல்கள் மூலமாக, நம்முடைய பிரசங்கத்தின் மூலமாக, நம்முடைய செயல்பாடுகள் மூலமாக, நம்முடைய உதவி செய்யும் குணத்தின் மூலமாக அநேகர் ஆசீர்வதிக்கப்படலாம். ஆனால் அந்த கனம் மதிப்பும் நம்மைச் சேராமல், கடவுளைச் சேர வேண்டும்.


பர்னபாவும், பவுலும் தர்ம ஊரியத்தை நிறைவேற்றின பின்பு, மாற்கு என்றும் பெயர் கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டு புறப்பட்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.