Type Here to Get Search Results !

The Feast of Pentecost | பெந்தகோஸ்தே திருநாள் சிறப்புச் செய்தி | Sunday Service Special Message | Jesus Sam

தலைப்பு: பெந்தகோஸ்தே

யூதர்களின் ஏழு பண்டிகைககள்

1. பஸ்கா பண்டிகை

2. புளிப்பில்லாத அப்பப்பண்டிகை

3. முதற்கனி அல்லது முதற்பலன் பண்டிகை

4. பெந்தகோஸ்தே பண்டிகை

5. எக்காள பண்டிகை

6. பாவ நிவிர்த்தி பண்டிகை

7. கூடாரப் பண்டிகை

          இந்த ஏழு பண்டிகைகளும் யூதர்களின் முக்கியப் பண்டிகை நாட்களாகும்.  மிகவும் முக்கியமான பண்டிகை பஸ்கா பண்டிகை.

          யூதர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி காணப்படுகின்றார்கள்.  இப்படி சிதறியிருக்கின்ற யூதர்கள் அனைவரும் பஸ்கா பண்டிகை அன்று எருசலேமிற்கு வருவார்கள்.  பஸ்கா பண்டிகைக்கு பின் வரும் ஐம்பதாவது நாள் பெந்தகோஸ்தே பண்டிகை ஆகும்.  பெந்தகோஸ்தே பண்டிகை முடிந்ததும் அனைத்து யூதர்களும் தங்கள் இடங்களுக்கு திரும்பிச் சென்று விடுவார்கள்.


பஸ்கா பண்டிகை:

யாத்திராகமம் 12:1-11

          இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 முப்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.  இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்ரை நோக்கி  முறையிட்ட போது, அவர்களை பாலும் தேனும் ஓடுகின்ற கானான் தேசத்திற்கு அழைத்து வர கர்த்தர் தீர்மானித்தார்.  அதற்காக மோசே என்ற நபரை தெரிந்தெடுத்தார்.

          மோசே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் சென்று நாங்கள் எங்கள் சொந்த தேசத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்ன போது பார்வோன் மறுத்தான்.  நீங்கள் எனக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும்.  நீங்கள் உங்கள் சொந்த தேசத்திற்கு செல்ல நான் உங்களை அனுமதிக்க மாட்டேன் என்றான்.

          பார்வோனின் இருதயக் கடினத்தின் நிமித்தம் கர்த்தர் எகிப்தியருக்கு அநேக வாதைகளைக் கொடுத்தார்.  வாதைகளை சந்தித்த போதும் பார்வோன் ஜனங்களை அனுப்ப தீர்மானிக்க வில்லை.

 

பத்து வாதைகள்:

1. தண்ணீர் இரத்தமாகுதல் (யாத்திராகம் 7:20)

2. தவளை (யாத்திராகமம் 8:1-15)

3. பேன் (யாத்திராகமம் 8:16-19)

4. வண்டு (யாத்திராகமம் 8:20-24)

5. கொள்ளை நோய் (யாத்திராகமம் 9:1-7)

6. கொப்பளம் (யாத்திராகமம் 9:8-12)

7. கல் மழை (யாத்திராகமம் 9:18-24)

8. வெட்டுக்கிளி (யாத்திராகமம் 10:1-20)

9. காரிருள் (யாத்திராகமம் 10:21-23)

10. தலைப்பிள்ளை சங்காரம் (யாத்திராகமம் 12:29-40)

 

          ஒன்பது வாதைகளை சந்தித்த போதும் பார்வோனின் மனம் இறங்கவில்லை.  கடைசியாக எகிப்து தேசத்தில் உள்ள அனைத்து தலைப்பிள்ளைகளையும் கொலை செய்ய வேண்டும் என்று கர்த்தர் தீர்மானித்தார்.

          ஒரு நாளை நியமித்து அந்த நாளில் நான் சங்காரதூதனை அனுப்புவேன்.  தூதன் வந்து எகிப்து தேசத்தில் உள்ள அனைத்து குடும்பத்திலும் உள்ள தலைப்பிள்ளைகளை சங்காரம் பண்ணுவான் என்று கர்த்தர் சொன்னார்.

எகிப்து தேசத்தில் வாழ்கின்ற இஸ்வேலர்களின் பிள்ளைகளை தூதன் சங்கரிக்காமல் இருக்க, அவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியை அடித்து அதின் இரத்தத்தை வீட்டு நிலைக்கால்களில் பூச வேண்டும்.  இரத்தம் பூசப்பட்ட நிலைக்கல்களுடைய வீடுகளில் மாத்திரம் சங்கார தூதன் சங்காரம் பண்ணாமல் இருப்பான்.

கர்த்தர் நியமித்த அந்த நாளில் எகிப்து தேசத்தில் உள்ள அனைத்து தலைப்பிள்ளைகளும் செத்துப்போனார்கள்.  வீட்டு நிலைக்கால்களில் இரத்தம் பூசிய இஸ்ரவேலரின் பிள்ளைகளோ மரிக்கவில்லை. 

தங்கள் தேசத்தில் உள்ள அனைத்து தலைப்பிள்ளைகளும் மரித்துப்போனதைக் கண்ட பார்வோன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிட தீர்மானித்தான்.

சங்கார தூதன் வந்தபோது எகிப்தியரின் தலைப்பிள்ளைகள் மரித்துப்போனது.  இஸ்ரவேலர்களுக்கு அந்த நாளில் விடுதலை கிடைத்தது.  இதை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூற வேண்டும் என்று கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு கட்டளையிட்டார்.  இதுவே பஸ்கா பண்டிகை.

 

பஸ்கா பண்டிகையை இஸ்ரவேலர்கள் முதலாம் மாதம் பதினாலாம் தேதியில் அனுசரித்து வந்தார்கள்.  இன்றளவும் இஸ்ரவேலர்கள் பஸ்கா பண்டிகையை அனுசரித்து வருகிறார்கள்.  பஸ்கா பண்டிகையன்று உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற இஸ்ரவேலர்கள் எருசலேமிற்கு வருவார்கள்.

லேவியராகமம் 23:5

          முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,

          பஸ்கா பண்டிகையன்று தங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதை நினைவுகூறும் விதத்தில் இஸ்ரவேலர்கள் தங்கள் வீடுகளில் ஒரு ஆட்டை பலியிட்டு அதை குடும்பமாக சாப்பிடுவார்கள்.

          ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பஸ்கா பண்டிகையன்றே சிலுவையில் அறையப்பட்டார்.  கிறிஸ்தவர்களாகிய நமக்காக பஸ்கா ஆடாக பலியானார்.

 

 பெந்தகோஸ்தே பண்டிகை (அல்லது) அறுவடை பண்டிகை

          பஸ்கா பண்டிகைக்கு பின்வரும் ஐம்பதாவது நாள் சவ்யாத் பண்டிகை அதாவது அறுவடை பண்டிகை.  இதை பெந்தகோஸ்தே பண்டிகை என்றும் சொல்லுவார்கள்.

          பஸ்கா பண்டிகைக்கு பின் ஏழு வாரங்களுக்கு அடுத்த நாள் பெந்தகோஸ்தே பண்டிகை அதாவது சவ்யாத் பண்டிகை.

          இந்த அறுவடை பண்டிகை அன்று இஸ்ரவேலர்கள் தங்கள் விளைச்சலின் முதல் பகுதியை கர்த்தருடைய ஆலயத்தில் கொண்டு வந்து படைப்பார்கள்.

          பஸ்கா பண்டிகைக்கு எருசலேம் வரும் ஜனங்கள் பெந்தகோஸ்தே பண்டிகை முடிந்தபின்பே தங்கள் இடங்களுக்கு புறப்பட்டு செல்லுவார்கள்.

 

          பெந்தகோஸ்தே என்பது அறுவடையைக் குறிக்கிறது.  அறுவடை பண்டிகை நாளாகிய அன்றே கர்த்தர் தம்முடைய சுவிசேஷத்தின் அறுவடையை துவங்கினார்.

          பஸ்கா பண்டிகையன்று சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவானவர் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.  உயிர்த்தெழுந்து கிறிஸ்து நாற்பது நாள் அப்போஸ்தலர்களுக்கு தரிசனமானார். (அப்போஸ்தலர் 1:3)  பின்பு பரலோகத்திற்கு எரிச்சென்றார்.

          பரலோகத்திற்கு செல்லும் நேரத்தில் இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்கு ஒரு பிரதான கட்டளை ஒன்றை கொடுத்தார்.

மத்தேயு 28:19

          ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

          அநேகருக்கு தன்னைக்குறித்து அறிவிக்க வேண்டும் என்றும், என்னை பின்பற்றுகிறவர்களை அடையாளப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

          நாற்பது நாளுக்கு பின்பு பரலோகத்திற்கு சென்ற கிறிஸ்துவானவர் அப்போஸ்தலர்களை எருசலேமில் காத்திருக்கும்படி கட்டளையிட்டார்.  சீஷர்கள் அனைவரும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து எருசலேமில் காத்திருந்தார்கள்.

          பஸ்கா பண்டிகை நாளுக்கு பின்பவரும் ஐம்பதாம் நாளாகிய பெந்தகோஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியானவரால் சீஷர்கள் நிரப்பப்பட்டார்கள்.  பரிசுத்த ஆவியினால் நிரம்பிய பேதுரு பிரசங்கித்த போது மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள்.

          கிறிஸ்துவானவர் சீஷர்களுக்கு கொடுத்த கட்டளையை பெந்தகோஸ்தே நாளன்று நிறைவேற்றினார்.  பெந்தகோஸ்தே நாளன்று இஸ்ரவேலர்கள் தங்கள் தானியத்தை ஆலயத்தில் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.  அதே அறுவடை பண்டிகையன்றே கிறிஸ்துவானர் தம்முடைய சுவிசேஷத்தின் அறுவடையை துவங்கினார்.

அப்போஸ்தலர் 2:41

          அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.  அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 

 

பெந்தகோஸ்தே:

பெந்தகோஸ்தே நாளன்று சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்.  அநேக கிறிஸ்தவர்கள் சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதால் அந்த நாளுக்கு பெந்தகோஸ்தே நாள் என்று பெயர் வந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  அப்படியல்ல, பெந்தகோஸ்தே என்பது இஸ்ரவேலர்களின் அறுவடை பண்டிகை.  அந்த நாளன்று பரிசுத்த ஆவியானவர் சீஷர்களை நிறப்பினார்.

அப்போஸ்தலர் 2:1-ல் பெந்தகோஸ்தே என்னும் நாள் வந்தபோது என்றே வாசிக்கிறோம்.  இஸ்ரவேலர்கள் காலம் காலமாக அனுசரிக்கின்ற பெந்தகோஸ்தே நாளில் தான் சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள்.

 

அந்நிய பாஷை:

          பெந்தகோஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட சீஷர்கள் பற்பல பாஷைகளை பேசினார்கள்.  அவர்கள் பேசிய அத்துனை பாஷைகளையும் வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

அந்நிய பாஷை என்பது மனிதர்களுக்கு புரியாத பாஷை அல்ல.  மற்ற மனிதர்கள் பேசக்கூடிய பாஷையே.

          பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதால் சீஷர்கள் அந்நிய பாஷைகளை பேசவில்லை.  பஸ்கா பண்டிகையன்று இஸ்ரவேலுக்கு வந்த ஜனங்கள் அனைவரும் பெந்தகோஸ்தே பண்டிகை முடிந்ததும் மீண்டுமாக தங்கள் ஊர்களுக்கு புறப்படுவார்கள் என்று தியானித்தோம்.

          சீஷர்கள் பரிசுத்த ஆவியை பெற்றக்கொண்டதை மற்ற நாடுகளில் இருந்து வந்திருக்கும் மற்ற மொழி பேசக்கூடிய யூதர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆவியானவரே அவர்களுக்கு பற்பல பாஷைகைளை கொடுத்தார்.

          வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் எருசலேமிலே கூடியிருந்தார்கள் என்றே அப்போஸ்தலர் 2:5-ல் வாசிக்கிறோம்.

          சுமார் 17 நாடுகளில் இருந்து ஜனங்கள் வந்ததாக அப்போஸ்தலர் 2:9-11 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம்.

          கூடியிருந்த அத்துனை மனிதர்களுக்கும் சீஷர்கள் பேசிய பாஷை புரிந்தது.

அப்போஸ்தலர் 2:7,8

          7. எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
          8. அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமோ, இதெப்படி?

          சீஷர்கள் பற்பல பாஷைகளிலே தேவனுடைய மகத்துவத்தை பேசினார்கள்.  அது மற்றவர்களுக்கும் புரிந்தது என்று அப்போஸ்தலர் 9:11-ல் வாசிக்கிறோம்.

 

          அப்போஸ்தலர் 2:1-12 வரை உள்ள வசனங்கள் மூலமாக நாம் நன்கு அறிந்துகொள்ள வேண்டிய காரியங்கள்

1. சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதால் அந்த நாளுக்கு பெந்தகோஸ்தே நாள் என்ற பெயர் வரவில்லை.

2. பெந்தகோஸ்தே என்பது யூதர்களின் அறுவடை பண்டிகை

3. சீஷர்கள் அந்நிய பாஷை என்ற பெயரில் மனிதர்களுக்கு புரியாத பாஷைகளை பேசவில்லை.  மனிதர்கள் புரிந்துகொள்ளும்படியான பாஷைகளையே பேசினார்கள்.

4. 17-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்த வந்த யூதர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆவியானவர் அந்நிய பாஷையை பொழிந்தருளினார்.

 

பரிசுத்த ஆவியானவரின் நோக்கம், அந்நிய பாஷை பேச வேண்டும் என்பது அல்ல.  பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைக் குறித்து அறிந்துகொள்வோம்.

          பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டாளும் பழைய ஏற்பாட்டிலும் பரிசுத்த ஆவியானவர் காணப்பட்டார்.  பரிசுத்த ஆவியானவர் புதிய ஏற்பாட்டிற்கு மாத்திரம் உரியவர் அல்ல.  பழைய ஏற்பாட்டிலும் பரிசுத்த ஆவியானவர் காணப்பட்டார்.

சங்கீதம் 51:11

          உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

 

பெந்தெகோஸ்தே நாளில் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள்

1. சாட்சியாய் வாழச் செய்வார்

அப்போஸ்தலர் 1:8

          பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

          எருசலேம் என்பது நாம் வசிக்கக்கூடிய இடத்தைக் குறிக்கிறது.

          யூதேயா என்பது நாம் வசிக்கக்கூடிய மாநிலம் அல்லது மாவட்டம் என வைத்துக்கொள்ளலாம்.

          சமாரியா என்பது அருகாமையில் உள்ள மாநிலம் அல்லது மாவட்டம் என வைத்துக்கொள்ளலாம்.

          பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டதன் நோக்கம், பரிசுத்த ஆவியை பெற்றுகொண்டவர்கள் தாங்கள் வசிக்கக்கூடிய பகுதிகளிலும், தேசங்களிலும், மற்ற தேசங்களிலும் கடைசியாக உலகத்தின் முடிவுபரியந்தமும் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாய் வாழ வேண்டும் என்பதற்காகவே.  பூமியின் கடைசி பரியந்தமும் அந்நிய பாஷைகளை பேசுவீர்கள் என்று கிறிஸ்து சொல்லவில்லை.  எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றே சொல்லுகிறார்.

          கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்காக சாட்சியாய் வாழ வேண்டும்.  நாம் நம்முடைய சாட்சியை காத்துக்கொள்ள பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்கு தேவை.  அதற்காகவே பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டார்.

         

2. கண்டித்து உணர்த்துவார்

யோவான் 16:7,8

          7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்.  நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்.  நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்.  நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

8. அவர் வந்து, பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தை கண்டித்து உணர்த்துவார்

          நம்மை கண்டித்து உணர்த்தும்படியாகவே பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டிருக்கிறார்.  நாம் வழி தவறும்போது, தவறான பாதையில் செல்லும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மை கண்டித்து உணர்த்துகிறவராக இருக்கிறார்.  ஆண்டவர் அறுவெறுக்கக்கூடிய காரியங்களை நாம் செய்யும்போது, அவர் நம்மை கண்டித்து உணர்த்துகிறார்.

 

3. வல்லமையாய் ஊழியம் செய்ய பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டார்

பேதுரு

          இயேசு கிறிஸ்துவின் சீஷர்களில் அதிக வயதையுடையவர் பேதுரு.  இயேசு கிறிஸ்துவுக்கு முப்பது வயதாக இருக்கும்போது பேதுருவுக்கு நாற்பது வயதிற்கும் அதிகமாகவே இருந்தது.

          (யூதர்கள் நாற்பது வயதிலேயே திருமணம் செய்வார்கள்.  இயேசு கிறிஸ்து பேதுருவை சீஷனாக அழைக்கும்போதே பேதுருவுக்கு மாமி இருந்ததாக வேதத்தில் வாசிக்கிறோம்.  (மாற்கு 1:30)

          பேதுரு இயேசு கிறிஸ்துவோடு மூன்றறை ஆண்டுகள் வாழ்ந்தாலும், நான் அவரை அறியேன் என்று சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கின ஒரு மனிதன்.  (மத்தேயு 26:74)  பயந்த சுபாவம் உள்ள மனிதன்.

 

          1. அப்படிப்பட்ட பேதுரு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட போது அவருக்குள்ளாக புதிய தைரியம் வந்தது.  பரிசுத்த ஆவியானவரின் துணையோடு அவர் பிரசங்கித்த போது அவருடைய முதல் பிரசங்கத்திலேயே மூவாயிரம் பேர் இரட்சிக்ககப்பட்டார்கள்.

அப்போஸ்தலர் 2:41

          அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.  அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

          பேதுருவின் பிரசங்கத்தினாலேயே இவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அப்போஸ்தலர் 2:14-ல் வாசிக்கிறோம்.

 

2. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பேதுருவின் இரண்டாவது பிரசங்கத்தில் ஐயாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள்.

அப்போஸ்தலர் 4:4

          வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்.  அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.

 

3.  பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பேதுரு நடந்து செல்லும்போது அவருடைய நிழல் பட்டு அநேகர் சுகமடைந்தார்கள்.

அப்போஸ்தலர் 5:15,16

          15. பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.

          16. சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவியினால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்.  அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.

 

 

2. பிலிப்பு

அப்போஸ்தலர் 8:26-40

          பிலிப்பு என்பவன் பந்திவிசாரிப்புக்காக (அப்போஸ்தலர் 6:5) தெரிவுசெய்யப்பட்ட ஒருவன்.  அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட போது ஒரு எத்தியோப்பியனுக்கு (மந்திரி) கர்த்தருடைய சுவிசேஷத்தை அறிவித்து அவருக்கு ஞானஸ்நானமும் கொடுத்தார்.

அப்போஸ்தலர் 8:38

          இரதத்தை நிறுத்தச்சொன்னான்.  அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்.  பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.

 

3. யோவான்

வெளிப்படுத்தல் 1:10

          கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்.

          யோவான் நற்செய்தியாளர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, கடைசிகால இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தின விஷேசம் புத்தகத்தில் எழுதியுள்ளார்.  அவரால் எழுதப்பட்ட அனைத்து காரியங்களும் இன்றும் உலகத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

 

          பெந்தகோஸ்தே நாளைப்பற்றியும், பரிசுத்த ஆவியானவர் ஏன் பொழிந்தருளப்பட்டார் என்பதைப் பற்றியும் அறிந்துகொண்டோம்.  பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாகிய நாம் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழுவோம்.  ஆவியானவர் நம்மை கண்டித்து உணர்த்தும்போது பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்போம்.  பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட போது பேதுரு தைரியமாய் வசனத்தைக் குறித்து சாட்சிகொடுத்ததுபோல, நாமும் மற்றவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை (சுவிசேஷத்தை) பறைசாற்றுவோம்.

          ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்!


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.