Type Here to Get Search Results !

எலோஹும் நாமத்தின் இரகசியம் | Mysteries of the Name Elohim | genesis 1:1 bible study in tamil | jesus sam

எலோஹும் (יםהִ֑לֹאֱ) நாமத்தின் இரகசியம்
ஆதியாகமம் 1:1
==================


நம்முடைய ஆண்டவருக்கு பெயர் இல்லை. ஏனென்றால், கடவுளுக்கு பெயர் தேவையில்லை. மனிதர்களாகிய நமக்கு பெயர் இருக்கக்காரணம், மனிதர்கள் அநேகர் இப்பூமியில் வாழ்ந்து வருகின்றோம். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனையும் குறிப்பதற்காக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய பெயர்களுக்கு அர்த்தம் இருக்கிறதா? என்றால் இருக்கிறது. அர்த்தத்தின்படி நம்முடைய பெற்றோர்கள் நமக்கு பெயர் வைக்கவில்லை, நம்மை அடையாளப்படுத்துவதற்காகவே நம்முடைய பெற்றோர்கள் நமக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஆனால், கடவுள் ஒருவரே. எனவே, அவருக்கு பெயர் தேவையில்லை. அப்படியானால், எலோஹீம் என்றால் என்ன? எலோஹும் என்பது கடவுளின் பெயர் அல்ல. அவருடைய தன்மையை விவரிக்கும் ஒரு நாமம்.

என்னுடைய பெயர் சாமுவேல் என்றாலும், என் சபை விசுவாசிகள் என்னை பாஸ்டர் என்று அழைப்பார்கள். அப்படியானால், என்னுடைய பெயர் பாஸ்டரா? நிச்சயமாக இல்லை. பாஸ்டர் என்பது என்னை விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு நாமம்.

ஆண்டவர் தன்னுடைய விவரத்தை ஒரு நாமத்தின் மூலமாக கொடுத்தார். அதுதான் எல்லோஹீம்.

ஆபிரகாம் ஆண்டவருக்கு யாவ்வே என்று பெயர் வைத்தார். இப்படி அநேகர், அநேக விதங்களில் ஆண்டவருக்கு பெயர் சூட்டினார்கள். ஆனால் இந்த எல்லோஹீம் என்ற பெயரை மனிதர்கள் எவரும் கொடுக்கவில்லை. ஆண்டவரே தன்னை எல்லோஹீம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.

ஆண்டவர் தன்னை எல்லோஹும் என்று அறிமுகப்படுத்துகிறார் என்றால், அதை நாம் சற்று ஆராந்து பார்ப்பது அவசியம்.

யாத்திராகமம் 20:7
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த பத்து கட்டளைகளில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான கட்டளை, நாம் ஆண்டவருடைய நாமத்தை வீணிலே வழங்கக்கூடாது என்பதாகும்.

ஆண்டவர் தனக்காக தெரிந்துகொண்ட நாமம் எவ்வளவு வல்லமையான நாமம், எவ்வளவு உன்னதமான நாமம் என்று இந்த தொகுப்பின் மூலமாக நாம் அறிந்துகொள்ளப்போகிறோம்.

எல்லோஹீம் என்ற எபிரெய நாமத்தைத்தான் தமிழ் வேதாகமத்தில் தேவன் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

வேறு எந்த மொழிக்கும் இல்லாத அநேக சிறப்பு அம்சங்கள் இந்த எபிரெய மொழிக்கு உண்டு. எபிரெயு மொழியிலே உயிரெழுத்துக்கள் இல்லை. 22 மெய்யெழுத்துக்கள் மட்டுமே உள்ளது. இந்த 22 எழுத்துக்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தங்களும் உண்டு.

தமிழ் மொழியில் 247 எழுத்துக்கள் உள்ளன. தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் தனி தனி அர்த்தங்கள் இல்லை. அ என்றால், ஆ என்றால், இ என்றால் இதற்கு அர்த்தகங்கள் இல்லை. ஆனால் எபிரெய எழுத்துக்களுக்கு ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.

ஆலேப் என்றால் ஒரு காளையின் தலை என்று பொருள்.

எபிரெய மொழியில் எண்கள் இல்லை. ஆலேப் என்றால் ஒன்று. பெய்த் என்றால் இரண்டு. கிமேல் என்றால் மூன்று. டாலெத் என்றால் நான்கு. ஹெ என்றால் ஐந்து.

எலோஹும் (יםהִ֑לֹאֱ)
    אֱ (ஆலெப்) – 1
    לֹ – (லாமேட்) – 30
    הִ֑ (ஹெ) – 6
    י (யொட்) - 10
    ם (மெம்) – 40

1+30+6+10+40 = 86
8+6= 14
1+4= 5

எபிரெய மொழியின் படி ஒன்று என்பது தேவனைக் குறிக்கும். நான்கு என்றால் இயேசுவைக் குறிக்கும்.

எபிரெய மொழிப்படி ஐந்து என்பது தேவனுடைய வல்லமை என்று பொருள். பிதாவானவர் இயேசுவோடு இணையாமல் தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தமாட்டார். அதேபோல, இயேசுவானவர் பிதாவோடு இணையாமல் தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்த மாட்டார்.

பிதாவும், குமாரனும் இணைந்து தான் வல்லமையை வெளிப்படுத்துவார்கள். அந்த வல்லமை தான் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது.

אֱ (ஆலெப் - Alephy) – God

ஆலெப் என்ற எழுத்து காலையின் தலையைக் குறிக்கும். மட்டுமல்ல, அடையாள ரீதியாக ஆண்டவரையும் குறிக்கும்.

Alephy என்ற எழுத்திற்குள் Alef, Lamed, Tav இந்த மூன்று எழுத்தும் இதற்குள் அடங்கும். Alephy என்ற எழுத்தை மறுபக்கம் மாற்றி எழுதினால் Tav, Lamed, Alef என்று வரும். அதாவது பெலே என்று வரும்.

ஆலெப் என்றால் ஒன்று என்று பொருள். பெலே என்றால் ஆயிரம் என்று பொருள்.

வேதத்தில் ஆண்டவருக்கு ஒரு நாள் ஆயிரம் நாளைப் போலவும், ஆயிரம் நாள் ஒரு நாளைப்போலவும் இருக்கும் என்று வாசிக்கிறோமே, அதின் அர்த்தம் இதைத்தான் குறிக்கிறது.

    Alef – 1
    Lamed – 30
    Tav – 80
    1+30+80 = 111

ஆலெப் என்ற எழுத்தில் உள்ள மூன்று சொற்களின் கூட்டுத்தொகை 111 ஆகும். இந்த மூன்று பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது.

לֹ – (லாமேட்) – 30

லாமேட் என்ற சொல்லுக்கு கோல் மற்றும் ஆசிரியர் என்ற இரண்டு பொருள் உண்டு.

கோல் என்றால் மேய்ப்பர்கள் கையில் வைத்திருக்கும்கோல். வேதத்திலும் மோசே, ஆரோன், யோசுவா போன்ற அநேகர் கோல் பயன்படுத்தியிருப்பதை நாம் வாசிக்க முடியும்.

கண்பார்வை அற்றவர்கள் கையில் கோல் வைத்திருப்பார்கள். யாரையாவது அடிக்கவேண்டுமானால், நாம் உடனே அருகில் இருக்கும் கோலை எடுப்போம். அப்படிப்பட்ட கோல் அல்ல. லாமேட் என்றால் மேய்ப்பனின் கோல் என்று பொருள்.

லாமேட் என்ற எழுத்தின் மற்றொரு பொருள் ஆசிரியர் அதாவது போதிப்பவர்.

சங்கீதம் 23-ல் தாவீது கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் என்று பாடுகிறார். எந்த கர்த்தரை தாவீது பாடுகிறார் என்றால், மேய்ப்பனாகிய கர்த்தரைப் போற்றி பாடுகிறார்.

சங்கீதம் 23:4-ல் உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் என்று தாவீது சொல்லுகிறார்.

தேற்றும் என்ற பதம் கடந்த காலத்தையோ, நிகழ்காலத்தையோ குறிக்கவில்லை, வருங்காலத்தைக் குறிக்கிறது.

கடந்த காலம் என்றால் தேற்றினது என்று வந்திருக்க வேண்டும். நிகழ்காலம் என்றால் தேற்றுகிறது என்று வந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே தேற்றும் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே, இது எதிர்காலத்தைக் குறிக்கிறது.

இந்த வார்த்தை எதிர்காலத்தைக் குறிக்கிறது என்றால், தாவீது பயன்படுத்தின இந்த வார்த்தை ஒரு தீர்க்கதரிசனமான வார்த்தை ஆகும்.

தாவீது அரசனின் இந்த தீர்க்கதரிசன வார்த்தை எங்கு நிறைவேறினது என்றால் யோவான் 14:16-ல் நிறைவேறினது.

யோவான் 14:16
நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

இந்த வசனத்தில் நான் என்று இயேசுவானவர் சொல்லுகிறார். நான்கு என்ற இலக்கத்தைக் கொண்ட இயேசுவானவர் முதல் எண்ணான பிதாவை வேண்டிக்கொள்ளும்போது, இவர்கள் இருவரும் அல்லாத (பிதா, இயேசு) வேறொரு நபரை பிதா நமக்கு தவருவதாக இயேசுவானவர் சொல்லுகிறார். அவர் தான் பரிசுத்த ஆவியானவர்.

இந்த வசனத்திலே திரித்துவம் காணப்படுகிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூவரும் இந்த வசனத்தில் வெளிப்படுத்தப்படுகிறார்கள்.

சங்கீதம் 23:4 சாதாரண ஒரு கோல் அல்லது தடியைக் குறித்து சொல்லவில்லை. அது பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசன வசனம்.

அப்படியானால் லாமேட் (לֹ) என்ற எழுத்து யாரைக் குறிக்கிறது என்றால் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது.

எபிரெய எழுத்துக்களில் லாமேட் என்ற எழுத்து பன்னிரெண்டாவது (12) எழுத்தாக இடம் பெற்றுள்ளது.
    12 = 1+2
    1+2 = 3

பன்னிரெண்டு என்ற எழுத்தை ஒன்று மற்றும் இரண்டு என எழுதி இரண்டின் கூட்டுத்தொகையையும் பார்த்தால் மூன்று என்று வரும். மூன்று என்றால் உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது.

எபிரெய மொழியில் ஒன்று என்றால் தேவன். இரண்டு என்றால் பிரிவு. மூன்று என்றால் உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது.

அப்படியானால், லாமேட் என்பதின் அர்த்தம் தேவன் பரிந்து மனிதனாய் வந்து மரித்து உயிர்த்தெழுந்தார் என்பதைக் குறிக்கிறது.

ஒரு முறை ஆண்டவர் சீஷர்களிடத்திலே தன்னுடைய மரணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, சீஷர்கள் ஆண்டவரே இது உமக்கு நேரிடக்கூடாது என்று சொன்னார்கள். அதற்கு இயேசு என்னைப் போகவிடுங்கள். நான் போனால்தான் பரிசுத்த ஆவியானவர் வருவார் என்று சொன்னார். இங்கே ஆண்டவர் எதைக் குறித்து சொல்லுகிறார் என்றால், தன்னுடைய மரணத்தைக் குறித்துச் சொல்லுகிறார்.

தேவன் பரலோகத்திலிருந்து பிரிந்து மனிதனாய் வந்து, மரித்து உயிர்த்தெழுந்த பின்பே, பரிசுத்த ஆவியானவர் வெளிப்பட முடியும்.

எபிரெய எழுத்துக்களில் 12-வது எழுத்து லாமேட். லாமேட் என்றால் பரிசுத்த ஆவியானவர். எனவே தான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பன்னிரெண்டு சீஷர்களை ஆண்டவர் தனக்கென தெரிந்தெடுத்தார்.

ஒரு வருடத்திற்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று ஆண்டவர் நமக்கு பிரித்துக்கொடுத்திருக்கிறார்.

உபாகமம் 11:12
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கிறது.

என் தேசமாகிய இஸ்ரவேல் தேசத்தை, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால், 12 மாதங்களும் நான் கவனிப்பேன் என்று ஆண்டவர் தீர்க்கதரிசனமாக சொல்லுகிறார்.

லாமேட் என்றால் முப்பது (30) என்று பொருள். 30 என்ற இலக்கத்தை 10x3 = 30 என்று பிரிக்கலாம். அந்த மூன்று என்பது 1+1+1 பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது.

இந்த லாமேட் என்ற எழுத்துதான் நம்மை பரலோகத்தோடு, அதாவது பிதாவோடு தொடர்புபடுத்துகின்றது. (לֹ) எபிரெய எழுத்துக்களில் மற்ற 21 எழுத்துக்களுக்கும் மேலே எந்த குறியீடும் இருப்பதில்லை. இந்த லாமேட் என்ற எழுத்து மாத்திரம் மேல ஒரு குறியீடோடு காணப்படுகிறது.

லாமேட் என்றால் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தான் நம்மை பரலோகத்தோடு தொடர்புபடுத்துகிறார்.

எலோஹும் (יםהִ֑לֹאֱ)
לֹאֱ இந்த எல் என்ற சொல் கர்த்தரைக் குறிக்கிறது. எல் என்றால் தேவன் அல்லது கர்த்தர். ஆனால் எல்லோகீம் என்ற பதத்தில் இன்னும் மூன்று எழுத்துக்கள் உள்ளன. יםהִ֑ – ஹிம். எல் என்றால் தேவன் என்றால் இந்த ஹிம் என்ற பதம் ஏன் அதனோடு சேர்ந்து வருகிறது என்று நாம் யோசிக்கலாம்.

எல் (לֹאֱ) என்றால் ஒருமையைக் குறிக்கிறது. இந்த ஒருமையை பன்மையாக்கவே ஹிம் (יםהִ֑) என்ற மூன்று சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.

(לֹאֱ) எலீம் என்ற சொல்லை பன்மையாக்க வேண்டுமானால், அதற்கு Yod (י) என்ற எழுத்தையும் Mem (הִ֑) என்ற எழுத்தையும் எழுதினால் போதுமானது.

לֹאֱ – எல் என்ற ஒருமைச் சொல்லோடு יה - இந்த இரண்டு எழுத்துக்களைச் சேர்த்தாலே ஒருமைச் சொல் எலீம் என்று பன்மையாக மாறிவிடும். எலீம் என்றால் எல் என்ற பதத்தின் பன்மை.

ஆண்டவர் இந்த எல்லோஹீம் பதத்திற்கு மாத்திரம், வேறு எந்த சொல்லுக்கும் செய்யாத காரியத்தை செய்தார். என்ன என்றால் יםלֹאֱ – எலீம் என்ற பன்மை பதத்தோடு Hey (ה) என்ற எழுத்தையும் ஆண்டவர் சேர்த்தார்.

வேறு சில இடங்களிலும் இந்த Hey (ה) என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதை வேதத்தில் நாம் பார்க்க முடியும்.

Hey (ה) – என்ற இந்த பதம் எபிரெய மொழியில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஐந்து என்பது தேவனுடைய வல்லமையைக் குறிக்கிறது.

Hey (ה) என்ற சொல்லிற்கு, உள்ளேயிருந்து சுவாசம் மூலமாக வெளியே கொண்டுவரப்படுகின்ற வல்லமை என்று பொருள்.

ஆதியாகமம் 2:7
தேவனாகிய கர்த்தர் மனுசனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆண்டவர் பூமியிலுள்ள எல்லாவற்றையும் வார்த்தையினால் படைத்தார். எல்லாவற்றையும் பார்த்து உண்டாகக்கடவது என்று சொன்னார், அவைகள் உண்டாயின.

ஆண்டவர் மனுஷனைப் படைக்கும்போதும், மனுஷன் உண்டாகக்கடவன் என்று சொல்லியிருந்தால், நிச்சயம் மனுஷன் உண்டாயிருப்பான். ஆனால் ஆண்டவர் அப்படிச் செய்யவில்லை.

ஆண்டவர் மண்ணினால் தன்னைப்போன்ற ஒரு சாயலையுடைய ஒரு உருவத்தை உருவாக்கி, அந்த உருவத்திற்கு Hey (ה) என்ற வார்த்தையை அதாவது சுவாசத்தைக் கொடுக்கிறார். ஆண்டவர் அந்த மனித உருவத்திற்கு Hey (ה) என்ற வார்த்தையை சொன்ன மாத்திரத்தில் மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆண்டவர் Hey (ה) என்ற எழுத்தின் மூலமாகவே மனுஷனை உண்டாக்கினார். அப்படியானால் Hey (ה) என்ற பதம், ஆண்டவருடைய சிருஷ்டிப்பின் வல்லமையைக் காட்டுகிறது.

2 தீமோத்தேயு 3:16
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.

இந்த வசனத்தின்படி முழு வேதாகமமும் ஆண்டவருடைய சுவாசத்தின்படி உருவானது ஆகும். ஆண்டவர் இந்த வேதத்தை எழுதுவதற்கு பிரதியாக்கம் செய்வதற்கு எத்தனையோ மனிதர்களைப் பயன்படுத்தியிருந்தாலும், உண்மையில் இந்த வேதத்தை ஆண்டவர் தன்னுடைய சுவாசத்தைக் கொண்டு Hey (ה) எழுதியுள்ளார்.

ஆபிராம்:
தனக்கு ஆராதனை செய்யும்படி ஆண்டவர் ஒரு ஜனக்கூட்டத்தை தெரிந்தெடுக்க விரும்பினார். அதற்காக ஆண்டவர் தெரிந்துகொண்ட பாத்திரம் தான் ஆபிராம்.

இந்த ஆபிராமுக்கு ஆண்டவர் ஆபிரகாம் என்று பெயர் மாற்றினார். ஆபிரகாமிற்கு ஆண்டவர் பெயர் மாற்றும் போது, அந்த பெயரில் உள்ள எந்த ஒரு எழுத்தையும் ஆண்டவர் நீக்கவில்லை. இடையில் Hey (ה) என்ற பதத்தை சேர்த்தார்.

ஆபிராம் என்ற பெயருக்கு இடையில் ஆண்டவர் Hey (ה) என்ற தன்னுடைய சுவாசத்தை, அதாவது சுவாசம் என்ற வல்லமையை அனுப்பி ஆபிரகாம் என்று மாற்றுகிறார்.

எனவே தான் உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களை சபிப்பேன் என்று ஆண்டவர் ஆபிரகாமிற்கு சொல்லுகிறார்.

இஸ்ரவேலர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஆண்டவருடைய கிருபையினாலே நமக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். ஆனால் இஸ்ரவேல் தேசத்தாருக்குள் தேவனுடைய சுவாசம் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

எனவே, இஸ்ரவேலுக்கு விரோதமாக செயல்படுகின்ற எல்லா கிரியைகளும் அழிக்கப்படும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆபிரகாமிற்கு மாத்திரம் ஆண்டவர் பெயர் மாற்றவில்லை. ஆபிரகாமின் மனைவி சாராய்க்கும் ஆண்டவர் பெயர் மாற்றினார். தமிழில் சாராய் என்ற பெயரை ஆண்டவர் சாராள் என்று மாற்றினார் என்று வாசிக்கிறோம். ஆங்கிலத்தில் Sara என்ற பெயரை Sarah என்று ஆண்டவர் மாற்றியுள்ளார் என்று வாசிக்கிறோம். உண்மையில் சாராளுக்குள்ளும் ஆண்டவர் Hey (ה) என்ற தன்னுடைய சுவாசத்தை வைத்தார்.

ஆபிரகாமிற்கு ஆண்டவர் Hey (ה) என்ற வல்லமையைக் கொடுத்தார். ஆபிரகாம் – பெயருக்கு உள்ளே Hey (ה) என்ற வார்த்தையை ஆண்டவர் வைக்கிறார். சாராளுக்கு ஆண்டவர் Hey (ה) என்ற வல்லமையைக் கொடுக்கவில்லை. Hey (ה) என்ற வல்லமைக்குள் சாராளை வைக்கிறார். எனவே தான் பெயரின் முடிவில் Hey (ה) என்ற வார்த்தையை ஆண்டவர் சேர்க்கிறார்.

யாவே (YHWH) – הִ֑לֹהִ֑י
யாவே என்றால் கர்த்தர் என்று பொருள். இந்த யாவே என்ற பதத்தில் Hey (ה) என்ற சொல் இரண்டு முறை வந்துள்ளது.

י (யொட்) - 10

யொட் (Yud) என்றால் கரம் என்று பொருள். யொட் (Yud) என்பதன் எண்ணிக்கை 10.

உலகத்தில் பல மதங்கள் உண்டு. வேறு எந்த மதத்தின் கோட்பாட்டிலும், தெய்வம் மனிதனாக வந்து, மனிதனுக்காக மரிக்கவில்லை.

ஆனால் கிறிஸ்தவ மதத்தில் ஒன்று என்ற நிலையில் இருக்கும் தேவன், மனிதனுக்காக பூமிக்கு வந்து, ஒன்றுமில்லாதவராக பூஜ்ஜியமாக மாறினார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் ஏழு வார்த்தைகளைப் பேசினார். அவைகளில் இரண்டு வார்த்தைகள் மிகவும் வேதனையான வார்த்தைகள்.

ஒன்று – என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்.

இரண்டு – எல்லாம் முடிந்தது.

ஜீவனுள்ள தேவன் வெறுமனே, மனிதனாக மாத்திரம் வாழ்ந்துவிட்டுப் போகவில்லை. அவர் ஒன்றுமில்லாத பூஜ்ஜியமாக மாறினார்.

தேவன் மனிதனாய் வந்து, மரிக்கும் அளவிற்கு தன்னைத் தாழ்த்தினார் என்பது தான் யொட் (Yud) என்ற எழுத்தின் அர்த்தம்.

எபிரெய எழுத்துக்களில் உள்ள 22 எழுத்துக்களில் மிகவும் சிறிய எழுத்து இந்த யொட் (Yud) என்ற எழுத்து ஆகும்.

பத்து என்பது கரத்தைக் குறிக்கிறது. எனவே தான் ஆண்டவர் தன்னுடைய கரத்தின் வல்லமையினால் எகிப்தியர்களுக்கு பத்து வாதைகளைக் கொடுத்தார். தம்முடைய கரத்தினால் இஸ்ரவேலர்களுக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார்

யொட் (Yud) என்ற வார்த்தை இயேசுவை பிரதிபலிக்கிறது. அதாவது மனிதனாய் வந்து, மரித்த இயேசுவை பிரதிபலிக்கிறது.

நமக்காக இயேசு கிறிஸ்து மரித்ததினாலேயே நமக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கிறது. இயேசுவின் மரணம் இல்லாமல், கிறிஸ்தவ மதம் இல்லை.

மத்தேயு 5:17
17.நியாயப்பிரமானத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்க வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள்.

நியாயப்பிரமாணம் (டோரா) என்பது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களைக் குறிக்கிறது. (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்). தீர்க்கதரிசன புத்தகங்கள் (நெபீன்) என்பது யோசுவா முதல் மல்கியா வரை உள்ள 34 புத்தகங்களைக் குறிக்கிறது.

மத்தேயு 5:18
18. அழிக்கிறதற்க்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமானத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உருப்பாகிலும், ஒழிந்துபோகாதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எழுத்தின் உறுப்பு என்பது யொட் (Yud) என்ற எழுத்தைக் குறிக்கிறது. எபிரெய மொழியில் உள்ள 22 எழுத்துக்களிலும் யொட் (Yud) என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.

அப்படியானால் எபிரெயு மொழியில் உள்ள ஒவ்வொரு எழுத்திலும் இயேசுவானவர் இருக்கிறார்

எனவே தான் வேதத்தில் ஒரு எழுத்தையும் நம்மால் சேர்க்கவோ, நீக்கவோ முடியாது.

பிலிப்பியர் 2:5-7
5. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.
6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும். தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

இயேசுவானவர் இப்படியாகத் தன்னைத் தாழ்த்தினதினாலேயே நமக்கு நித்திய ஜீவன் கிடைத்திருக்கிறது.

ם (மெம்-Mem) – 40

மெம் (Mem) என்றால் தண்ணீர் என்று பொருள். எபிரெய எழுத்துக்களில் மெம் (Mem)-ன் மதிப்பு 40.

நான்கு என்பது இயேசுவைக் குறிக்கிறது. 40 என்பது 4-ன் பரிபூரணத்தைக் குறிக்கிறது.

நாற்பது என்பது வேதத்தில் மிக முக்கிய எண் ஆகும்.

மோசே நாற்பது ஆண்டுகள் எகிப்தில் வாழ்ந்தார்.

மோசே நாற்பது ஆண்டுகள் மீதியானில் வாழ்ந்தார்.

மோசே நாற்பது ஆண்டுகள் ஊழியம் செய்தார்.

இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது ஆண்டுகள் வனாந்திரத்தில் நடந்து சென்றார்கள்.

ஆபிரகாம் ஈசாக்கிற்கு நாற்பது வயதில் திருமணம் செய்து வைத்தார்.

வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தின்படி இயேசுவுக்கு நாற்பது வயதாகும்போது, அவருக்கு சபையோடு திருமணம் நடைபெறும்.

மோசே, எலியா, இயேசு கிறிஸ்து இவர்கள் மூவரும் நாற்பது நாட்கள் உபவாசமிருந்தார்கள்.

நோவாவின் நாட்களில் 40 நாட்கள் இரவும், பகலும் மழை பெய்தது.

வேதத்தில் அடையாள ரீதியாக தண்ணீருக்கு அநேக பொருள் உண்டு.

எபேசியர் 5:25-27
25. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையிலே அன்புகூர்ந்து,
26. தாம் அதை திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்.
27. கரைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

சபையானது தண்ணீராகிய தேவனுடைய வார்த்தையினால் சுத்திகரிக்கப்பட வேண்டும்.

2 பேதுரு 3:5
பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்.

தேவனுடைய வார்த்தையினாலே தண்ணீர் உருவாக்கப்பட்டு, அந்த தண்ணீரிலிருந்து பூமி உருவானது என்று வாசிக்கிறோம்.

ஏசாயா 12:3
நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீரை மொண்டு கொள்வீர்கள்.

ஏசாயா தீர்க்கன் தண்ணீரை இரட்சிப்புக்கு ஒப்பிடுகிறார்.

எசேக்கியேல் 36:25
அப்பொழுது நான் உங்கள் மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்: நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களை சுத்தமாக்குவேன்.

எசேக்கியேல் தண்ணீரை தூய்மைக்கு அடையாளமாக ஒப்பிடுகிறார்.

யோவான் 7:37-39
37. பண்டிகையின் கடைசி நாளாகிய பிரதான நாளில் இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பாணம்பண்ணக்கடவன்.
38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.

இங்கே தண்ணீர் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

யோவான் 4:14
நான் கொடுக்கம் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது: நான் அவனுக்கு கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீருற்றாயிருக்கும் என்றார்.

இங்கே தண்ணீர் நித்திய ஜீவனுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தல் 21:6ஆ
தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

வெளிப்டுத்தல் 21:1
பின்பு பழிங்கியைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து எனக்கு காண்பித்தான்.

ஆலெப் – தேவன்

லாமேட் – மேய்ப்பனின் கோல், ஆசிரியர், பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம்

ஹெ (Hey) – தேவனுடைய வல்லமை

யொட் – கரம் (மனிதனாய் வந்து மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவைக் குறிக்கிறது)

மெம் (Mem) – தண்ணீர் 

மேலே சொல்லப்பட்டபடி எல்லோஹீம் என்பதன் விளக்கம் என்னவென்றால்,

தேவன், பரிசுத்த ஆவியானவர் என்னும் கோலையும், ஆசிரியரையும் கொண்டு, தன் கரத்தின் வல்லமையினால் நமக்கு இயேசு என்னும் இரட்சகர் மூலம் இரட்சிப்பையும், வார்த்தையையும், சுத்திகரிப்பையும், நித்திய ஜீவனையும் வழங்குகிறார்.

தேவன், பரிசுத்த ஆவியானவர், இயேசு என்ற திரித்துவம் இந்த வாக்கியத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.

கர்த்தர் என் மேய்ப்பர் என்ற வார்த்தை இதற்குள் அடங்கியிருக்கிறது.

ஆசிரியராக ஆண்டவர் இருக்கிறார். நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

தேவனுடைய வல்லமை, இரட்சிப்பு இங்கே இடம்பெற்றுள்ளது.

தேவனுடைய வார்த்தை, ஒவ்வொரு நாளும் நாம் அடைய வேண்டிய சுத்திகரிப்பு, நித்திய ஜீவன் ஆகியவை இவற்றிற்குள் அடங்கியிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.