Type Here to Get Search Results !

JC VBS 2023 | Day 4 | நீதியுள்ளவைகளில் உறுதி | Assured in Righteous Things | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2023

நாள் – 4
தலைப்பு: நீதியுள்ளவைகளில் உறுதி

    ஆஸ்தியும், ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும், அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். (சங்கீதம் 112:3)
நோக்கம்:
    கடவுளுடைய பிள்ளைகளின் வாழ்வும், செயல்களும் இருளில் வாழுபவர்களுக்கு வெளிச்சம் போலவும் மற்றவர்களுக்கு சரியான பாதையை காட்டுகிறதாயும், உண்மையுள்ளதாயும் இருக்க வேண்டும். நாம் நீதியான காரியங்களில் ஈடுபடவும், செயல்படவும் வேண்டும் என்பதை பிள்ளைளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

வேதபகுதி:
    2 சாமுவேல் 5:1-16 புதிய அரசர் தாவீதும் புதிய தலைநகரமும் மற்றும் புதிய குடும்பமும்.
    2 சாமுவேல் 6:1-19 உடன்படிக்கை பெட்டி மறுபடியும் கொண்டுவரப்பட்டது.

மனப்பாட வசனம்:
2 பேதுரு 3:17ஆ,18அ
    உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.

வேதபாட முன்னேற்றம்:
    நீதியான செயல்களை, சரியான காரியங்களை செயல்பாட்டின் மூலம் செய்வதில் உறுதியாய் காணப்பட வேண்டும். தாவீது புதிய அரசராக ஏற்படுத்தப்பட்டவுடன் இருளில் இருந்த மக்களுக்கு புதிய நம்பிக்கை, ஒளி பிறந்ததுபோல் இருந்து. தாவீதின் செயல்கள்.

    1. புதிய அரசராக தாவீது நியமனம்
    2. எருசலேமை தலைநகரமாக தாவீது ஏற்படுத்துதல்
    3. கடவுளை ஆராதிப்பதற்கான அவருடைய பிரசன்னத்தின் அடையாளமாக கருதப்பட்ட கர்த்தருடைய பெட்டி மீண்டுமாக கொண்டுவரப்பட்டது. இதுமுதல் மக்களுக்கு புதிய நம்பிக்கையும், எதிர்காலத்தை குறித்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
    4. நாமும் நீதியான, சரியான காரியங்களை செய்யும் போது, நமக்கும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் பெரும் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

தலைப்பு அறிமுகம்:
    இரண்டிரண்டு பேராக ஐந்து ஜோடிகளை முன்பாக அழைக்க வேண்டும். அதில் ஒருவருடைய கண்களை கட்டி விட வேண்டும். அவருடைய நண்பனின் கையில் ஒரு பலூனை கொடுக்க வேண்டும். கண்கள் கட்டப்பட்ட ஐந்து நபர்களையும் ஒருபுறம் சிறிது தூரம் தள்ளி இந்த ஐந்து நபர்களுக்கு நேராக வரிசையாக நிற்க வைக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் இடையே சில தடைகளை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக நாற்காலிகளை நடுவில் வைக்கலாம் மற்றும் சில நபர்களை சிலை போன்று அசையாமல் நிற்க சொல்லலாம். கண்கள் கட்டப்பட்டவர்கள் அவர்களுடைய நண்பர்களை பார்த்து நேராக இருக்குமாறு நிற்க வைக்காமல் மற்ற திசைகளில் திரும்பி நிற்க வைக்க வேண்டும். இப்பொழுது Start என்று சொன்னவுடன் கண்கள் கட்டப்பட்டவர்களுக்கு அவர்களுடைய நண்பர்கள் வழிகாட்டியாக இருந்து தன்னிடம் இருக்கும் பலூனை அவர்கள் பெற்றுகொள்வதற்கு அவர்கள் இருந்த இடத்திலிருந்தே உதவி செய்ய வேண்டும். கீழே அமர்ந்திருக்கும் மற்றவர்களும் இவர்களை உற்சாகப்படுத்தலாம். இவ்வாறு சிறிது நேரம் விளையாடிய பின்பு, கண்கள் கட்டப்பட்டவர்களை மீண்டும் அவர்களுடைய இடத்தில் கொண்டு போய் நிற்கவைக்க வேண்டும். அவர்களுடைய கண் கட்டுகளை அவிழ்த்து விட்டு Start சொன்னவுடன் அவருடைய நண்பர்களிடம் சொன்று அந்த பலூனை பெற வேண்டும்.
    (அறியாமையினாலே இருளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் சரியான வழியில் தான் நடக்கிறோமா என்பது தெரியாது. ஆனால் கிறிஸ்துவை அறிந்த நாம் அவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களும் நீதியை பெற்றுக்கொள்வார்கள்)

பாட விளக்கம்:
    சவுலின் மரணத்திற்கு பின்னர் தாவீது ஆண்டவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு யூதாவின் பட்டணமாகிய எப்ரோனுக்கு வந்து குடியேறினார். அங்கே யூதா கோத்திரத்தார் அவரை அரசனாக ஏற்படுத்தினர். ஏழு ஆண்டுகள் அவர் யூதா கோத்திரத்தாருக்கு அரசனாக செயல்பட்டார்.
    தாவீதின் ஆட்சியில் யூதா மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். மேலும் சவுலை அடக்கம் செய்த கிபியோனியரை வாழ்த்தி தாவீது அவர்களுக்கு நன்றி கூறினார். ஆனாலும் சவுலின் குடும்பத்தாருக்கும் தாவீதின் குடும்பத்தாருக்கும் நீண்டகாலமாக யுத்தம் நடந்தது. முடிவிலே அப்னோர் என்ற சவுலின் படைத்தலைவர் இஸ்ரவேலின் மூப்பருடனே பேசி நீங்கள் தாவீதை உங்கள் ராஜாவாக ஏற்படுத்தும்படி நீண்ட நாட்களாக தேடினீர்களே என்றார். மேலும் இஸ்ரவேலை அவர்களுடைய எல்லா சத்துருக்களின் கைகளுக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பேன் என்று கர்த்தர் வாக்குப்பண்ணியதை கூறினார். இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம், இஸ்ரவேலின் எஞ்சிய கோத்திரத்தாரை தாவீதின் குடும்பத்தாருடன் உடன்படிக்கை செய்ய வைத்து அவரை முழு இஸ்ரவேலுக்கும் அரசனாக ஏற்படுத்தினர். ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட தாவீது எருசலேமை தலைநகரமாக்கினார். அதன்பின் கர்த்தருடைய பெட்டி என்று அழைக்கப்படும் உடன்படிக்கைப் பெட்டியை தாவீது எருசலேமிற்குள் கொண்டுவந்தார். உடன்படிக்கை பெட்டி என்பது 10 கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகையும், ஆண்டவர் தம் ஜனங்களுக்குத் தந்த மன்னாவும், ஆரோனின் குடும்பத்தை பிரதான ஆசாரியராக நியமித்ததை அடையாளப்படுத்தும் ஆரோனின் துளிர்த்த கோலும் கொண்ட ஒரு பெட்டியாகும்.
    இஸ்ரவேலர் வனாந்திரப் பயணத்தில் கர்த்தர் தங்களுடன் இருக்கிறார், அவர் பரிசுத்தமுள்ளவர் ஆகவே நாமும் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக உடன்படிக்கைப்பெட்டி ஏற்படுத்தப்பட்டது.
    மேலும் ஆண்டவர் கற்பித்தபடியே உடன்படிக்கை பெட்டியை ஒரு கூடாரத்தில் அதாவது ஆசரிப்புக் கூடாரத்தில் வைத்து ஆண்டவரை வழிபடும் இடமாக பயன்படுத்தினர். நியாயாதிபதிகளின் காலத்தில் போரில் வெற்றிபெறுவதற்காக யுத்தத்திற்குச் செல்லும்போது உடன்படிக்கை பெட்டியை சுமந்து சென்றனர்.
    தாவீதோ தன் உலக வாழ்வின் நன்மைக்காகவோ, தனது அரச பதவியைக் காத்துக்கொள்வதற்காகவோ அல்ல கர்த்தரை மகிமைப்படுத்த அவரை ஆராதிக்க அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற வாஞ்சையுடன் கர்த்தருடைய பெட்டியை எருசலேமிற்குக் கொண்டுவந்தார். அரமனையில் அனைத்து வசதிகளைப் பெற்றிருந்தாலும் கர்த்தரின் ஆலயத்தில் தங்கியிருக்கும் நாளே தனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றும், வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி அவரது மகிமையை ஆராய்ச்சி செய்வதே தனக்கு விருப்பம் என்று தாவீது கூறினார். ஆடுகளை மேய்த்துவந்த தாவீதை ஆண்டவர் அரசனாக்கினார். ஆனால் தாவீது அரச பதவியின் மீது நோக்கமாக இராமல் கர்த்தரை கனப்படுத்துவதையும், பிறரும் கர்த்தரை அறிந்து அவரில் மகிழவேண்டும் என்பதையுமே தன் வாழ்வில் முதன்மைப்படுத்தினார்.
    நாமும் ஆண்டவர் நமக்குத் தந்திருக்கின்ற சிறப்புத் தாலந்துகள், நமது ஆற்றல், ஞானம் ஆகியவற்றை கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கும், பிறர் அதன் வழியாக ஆண்டவரை அறிந்து அவரில் மகிழ்வதற்கும் ஏற்றவிதமாய் செயல்படுவோம்.

இரட்சிப்பின் சிந்தனை:
    கடவுள் நம்மூலம், நமது வாழ்வின் வழியாய் அவரும் அவரால் படைக்கப்பட்ட உலகமும் ஒளியாகிய அவரை கண்டு கொள்ள வேண்டும் என விரும்புகிறார். கடவுளின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இருளான உலகத்தில் ஒளி ஏற்றுகிறவர்களாய், நமக்குள் இருக்கும் ஒளியை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும்.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

கதை:
    தாவீதுக்கு முன்பாக இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தவர் சவுல். சவுலை விட்டு ஆண்டவர் தாவீதை ராஜாவாக ஏற்படுத்தினார்.

    ஒரு மேசையில் ஏதேனும் சிறந்த ஐந்து பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டும். (எ.கா: ஆப்பில், பென்சில், பொம்மை, etc) ஒரு மாணவனை முன்பதாக அழைத்து, நீ உன்னிடம் உள்ள சிறந்த பொருளை இந்த மேசையின் மீது வைத்துவிட்டு, இந்த மோசையில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக்கொள் என்று சொல்ல வேண்டும். அந்த மாணவன் ஏதேனும் ஒரு பொருளை வைத்துவிட்டு, ஏதோ ஒரு பொருளை எடுப்பான்.
    நாம் அந்த மாணவனிடம், நீ இந்த பொருளை எடுத்ததன் காரணம் என்ன? அந்த பொருளை வைத்ததன் காரணம் என்ன? என்று கேட்க வேண்டும்.
    அதாவது, அவன் எந்த பொருளை வைக்கின்றானோ அதை கடவுளுக்கென்று வைக்கின்றான். எந்த பொருளை எடுக்கின்றானோ அந்த பொருள் கடவுளுக்கு வேண்டாம் என்று சொல்லி எடுக்கின்றான். அதற்காக விளக்கத்தை அவன் கொடுக்க வேண்டும்.
    இதைப்போலவே கடவுளும் சவுலை எடுத்துவிட்டு தாவீதை ராஜாவாக மாற்றினார் என்று மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

1. சவுலை தாவீது மதித்ததன் காரணம்: (Respect to the chair)
    சவுலின் மரணம் தாவீதுக்கு சந்தோஷம் அல்ல. சவுல் தாவீதுக்கு விரோதியாக இருந்தாலும், தாவீது சவுலின் மரண செய்தியை கேட்டு மிகவும் சத்தமிட்டு அழுதார்.
    செம்மை என்பது உள்ளத்தில் உள்ள காரியம். நீதி என்பது செயலில் வெளிப்பட வேண்டிய காரியம். நமது உள்ளத்தில் செம்மை காணப்படும்போது, அவைகள் நீதியாக செயலில் வெளிப்பட வேண்டும்.
    தாவீது சவுலை மதிக்காவிட்டாலும், அவர் அமர்ந்திருந்த சிங்காசனத்திற்கு மதிப்பு கொடுத்தார். சவுலை விட தாவீது எல்லா காரியங்களிலும் சிறந்தவராக இருந்தாலும், தாவீது சவுலின் அபிஷேகத்தை கனப்படுத்தினார்.
    எ.கா: Respect to the chair. ஒரு நாற்காலியில் ஒரு எலியை உட்கார வைத்தாலும் நாம் அதற்கு மதிப்பு கொடுத்து தான் ஆக வேண்டும். நாம் எலியை மதிக்காவிட்டாலும், எலி அர்ந்திருக்கின்ற நாற்காலியை மதிக்க வேண்டும்.
    நம்மை விட உயர் பொறுப்புகளில் இருக்கின்றவர்கள் நம்மை விட அனுபவத்திலும், கல்வியிலும், திறமையிலும் குறைந்தவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை மதிக்க, அவர்களுக்குறிய மரியாதையை செலுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
    வேதாகமத்தில் நாம் அநேக முடிகூட்டு நிகழ்வை பார்க்க முடியும். எ.கா: சாலொமோன். ஆனால் தாவீது அரசனாக முடிசூட்டப்பட்டதை நாம் எங்கும் வாசிக்க முடியாது.

2. தாவீது அரசனாக நியமனம் & எருசலேம் தலைநகரம்:
    கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினார்கள்.  அதைக் கேள்விப்பட்ட தாவீது, கர்த்தரின் பெயரால் அவர்களை ஆசீர்வதித்தான்.  
    சவுல் மரித்த செய்தியை கேள்விப்பட்ட யூதாவின் மனுஷர் தாவீதை எப்ரோனிலே வைத்து யூதாவின் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். (2 சாமுவேல் 3:4)  தாவீது ஏழு வருஷமும் ஆறு மாதமும் யூதா கோத்திரத்திற்கு மாத்திரமே ராஜாவாக இருந்தான்.  தாவீது ராஜாவாகிறபோது முப்பது வயதுடையவனாய் இருந்தான்.
    மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இஸ்போசேத் எஎன்ற இடத்தில் சவுலின் மகனாகிய இஸ்போசேத்தை ராஜாவாக்கினார்கள்.  இஸ்போசேத் கொலைசெய்யப்பட்ட போது, அப்னேரும், இஸ்ரவேலின் மூப்பர் அனைவரும் தாவீதிடம் வந்து, சவுல் ராஜாவாய் இருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டு போனவரும், நடத்திக்கொண்டு வந்தவரும் நீரே; என் ஜனமாகிய இஸ்வேலை ஆட்சிசெய்யும் பொருப்பை கர்த்தர் உம்மிடத்திலேயே கொடுத்திருகு்கிறார் என்று சொல்லி, தங்கள் மேல் ராஜாவாய் இருக்கும்படி இஸ்ரவேலின் மூப்பர் அனைவரும் எப்ரோனிலே தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்.  (2 சாமுவெல் 5:3)  தாவீது யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், சமஸ்த இஸ்ரவேலின்மேல் முப்பத்து மூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.  (2 சாமுவேல் 5:5)
    தாவீது முழு இஸ்ரவேலுக்கும் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட போது, தனது நாட்டிற்கென ஒரு தலைநகரம் வேண்டும் என்று அறிந்து எருசலேமை இஸ்ரவேல் நாட்டின் தலைநகராக தாவீது ஏற்ப்படுத்தினார். 
    தாவீதுக்கு முன்பாக எத்தனையோ நியாயாதிபதிகள் இஸ்ரவேல் நாட்டை நியாயம் விசாரித்தார்கள், நியாயாதிபதிகளுக்கு பின்பு சவுல் இஸ்ரவேலின் மேல் அரசனாக நியமிக்கப்பட்டான், இவர்களில் ஒருவருக்கும் நம் நாட்டிற்கு தலைநகரம் தேவை என்ற எண்ணம் வரவில்லை.  தாவீது நீதியானவைகளை செய்ய விரும்பி இஸ்ரவேலர் நாட்டிற்கென தலைநகரை உருவாக்கினார்.  அதுதான் எருசலேம் நகரம்.

எபூசியர்கள்:
    தாவீது முழு இஸ்ரவேல் நாட்டிற்கும் ராஜாவாக பொறுப்பேற்ற பின்பு முதலாவதாக எபூசியரோடு யுத்தம் பண்ணுகிறார்.  காரணம் எ்ன்னவென்றால், நியாயாதிபதிகள் 1:8-ல் வாசிக்கிறோம், எருசலேம் நகரத்தை யூதா புத்திரர் கைப்பற்றினார்கள்.  எருசலேம் இஸ்ரவேல் நாட்டிற்கு சொந்தமான நகரம்.
    இஸ்ரவேலர் எருசலேமைக் கைப்பற்றியதும் அதை பென்யமீனியருக்கு பிரித்துக்கொடுத்தனர்.  பென்யமீனியர் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.  பென்யமீனியர்களோடு சேர்ந்து எப்பூசியர்களும் எருசலேம் நகரத்தில் வாழ்ந்து வந்தனர்.  எருசலேம் நகரம் சுற்றிலும் மதில்கள் சூழ மிகவும் அழகாகவும், உறுதியாகவும் காணப்பட்டது.  எருசலேமைச் சுற்றியுள்ள கோட்டைக்கு சியோன் கோட்டை என்று பெயர்.
    எபூசியர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள்.  எபூசியர்கள் நாங்கள் ஆராதிக்கின்ற எங்கள் விக்கிரகங்களே எருசலேமை இவ்வளவு அழகாகவும், பாதுகாப்பாகவும், வைத்திருக்கிறது என்றார்கள்.  இஸ்ரவேலரின் எல்லைக்குள் இருக்கும் எபூசியரை துரத்திவிட வேண்டும் என்ற எண்ணம் நியாயாதிபதிகளுக்கோ, சவுல் ராஜாவிற்கோ வரவில்லை.  காரணம் அவர்கள் எபூசியரோடு யுத்தம் செய்ய பயந்தார்கள்.
    தாவீது ராஜாவாக பொறுப்பேற்ற பின் முதல் முதலாக எபூசியரையே தோற்கடிக்க நினைத்தார்.  இதுவரை இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளும், இஸ்ரவேலின் முதல் ராஜாவும், பென்யமீன் கோத்திரத்தானுமான சவுலும் எங்களோடு யுத்தம் செய்ய விரும்பவில்லை, ஆனால் இந்த தாவீது எங்களோடு யுத்தம் செய்ய எண்ணம் கொண்டுள்ளான் என்று நினைத்த எபூசியர்கள், தாவீதைப் பார்த்து: நீ எங்கள் நகரத்தையும், கோட்டையையும் கைப்பற்ற நினைத்தால், எங்கள் நகரத்தில் உள்ள குருடரும், சப்பாணிகளுமே உன்னை தோற்கடித்துவிடுவார்கள் என்று சொல்லி தாவீதை கேலி செய்தார்கள்.
    எருசலேமைச்சுற்றியுள்ள சீயோன் கோட்டை அழகானதாகவும், இயற்க்கையானதாகவும், உறுதியானதாகவும் இருந்ததினால் தங்களுக்கு போர்வீரர்கள் தேவையில்லை சீயோன் கோட்டையே நம்மை பாதுகாக்கும் என்று நம்பினார்கள்.  எனவேதான், குருடரும் சப்பாணிகளுமே தாவீதை தோற்கடித்துவிடுவார்கள் என்று எபூசியர்கள் சொன்னார்கள்.  எபூசியர்கள் குருடரையும், சப்பாணிகளையும் நம்பவில்லை, எருசலேமைச் சுற்றி அமைந்துள்ள சீயோன் கோட்டையை நம்பினார்கள்.  
    தாவீது கர்த்தருடைய ஆலோசனைப்படி எபூசியரோடு யுத்தம் செய்து எருசலேமையும் சீயோன் கோட்டையையும் கைப்பற்றினார்.  எருசலேம் நகரத்தில் உள்ள விக்கிரகங்கள் அனைத்தையும் தீயிட்டுக்கொளுத்தினார்.  தாவீது எருசலேமில் இருந்த விக்கிரகங்களையே குருடரும், சப்பாணியும் எ்ன்று சொன்னார்.  அந்த விக்கிரகங்களை ஒருவனும் தன் வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது என்று தாவீது கட்டளையிட்டார்.  அதனால், குருடரும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்ற சொல் உண்டாயிற்று.
    தாவீது குருடரும், சப்பாணியும் வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்லவில்லை.  குருடும், சப்பாணியுமான இந்த எபூசியரின் தெய்வங்கள்்வீட்டிற்குள் வரக்கூடாது என்று கூறினார்.
    எருசலேமைக் கைப்பற்றின தாவீது, எருசலேமின் அழகையும், செழிப்பையும், சீயோன் கோட்டையின் சிறப்பையும் பார்த்து எருசலேமை முழு இஸ்ரவேல் தேசத்திற்கும் தலைநகரமாக ஏற்படுத்தினார்.

3. உடன்படிக்கைப் பெட்டி:
    மோசேயின் காலத்தின் ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களோடு உடன்படிக்கை பன்னினார்.  அந்த உடன்படிக்கைக்கு அடையாளமாக ஆண்டவர் ஒரு பெட்டியை செய்ய சொன்னார்.  அந்த பெட்டியில் ஆண்டவர் இஸ்ரவேலர் ஜனங்களுக்கு கொடுத்த பத்து கட்டளைகளும், அவர்கள் வனாந்திரத்தில் சாப்பிட்ட உணவாகிய மன்னாவும், ஆண்டவர் ஆசாரியனாக தெரிவு செய்த ஆரோனின் துளிர்த்த கோலும் இருக்கும்.  மோசேயின் காலத்திலிருந்து கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி ஆசரிப்புக்கூடாரம் என்று சொல்லப்படுகின்ற கூடாரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டது.
    மோசேயின் காலம் முதல் இஸ்ரவேல் ஜனங்கள் போருக்கு புறப்படும்போது உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வந்து ஜெபித்துவிட்டு செல்லுவார்கள்.  அது அவர்களுடைய வலக்கமாக இருந்தது.
    ஏலி ஆசாரியனாக இருந்த காலத்தில், இஸ்ரவேலருக்கும் பெரிஸ்தியருக்கும் இடையே யுத்தம் வந்தது.  யுத்தத்தில் தோற்றுப்போய்விடும் என்ற பயத்தில் உடன்படிக்கைக்கு முன்பாக வந்து ஜெபிக்க வேண்டிய இஸ்ரவேலர்கள், உடன்படிக்கைப்பெட்டியையே யுத்தக்கலத்திற்கு கொண்டு சென்றார்கள்.
    இஸ்ரவேலர்களின் தீமையான செயல்களைக் கண்ட கர்த்தர், அப்போரில் இஸ்ரலேர்கள் தோற்றுப்போகும்படி செய்தார்.  உடன்படிக்கைப் பெட்டியை பெலிஸ்தியர்கள் தங்கள் தேசத்திற்கு கொண்டு சென்றார்கள்.
    கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி பெலிஸ்தியருடைய தேசத்தில் இருந்தபோது, கர்த்தர் அவர்களை வாசித்தார்.  எனவே, பெலிஸ்தியர்கள் உடன்படிக்கைப்பெட்டியை மீண்டும் இஸ்வேலுக்கு கரவை மாடு மூலமாக அனுப்பிவைத்தார்கள்.

பெத்ஷிமேஸ்:
    அந்த மாடுகள் பெத்ஷிமேசிலே யோசுவாவின் நிலத்தில் உள்ள ஒரு பெரிய கல்லின் மேல் வைத்தது.  கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி தங்கள் மத்தியில் இருப்பதை விரும்பாத பெத்ஷிமேசியர் விரும்பவில்லை. (உடன்படிக்கை பெட்டியை பாதுகாக்க வேண்டியவர்கள், அதற்குள்ளாக என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள்.  கடவுள் அதை விரும்பாததால் பெத்ஷிமேசிலே ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்.  பெஷத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டியை பாதுகாத்திருப்பார்கள் என்று சொன்னால் கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்திருப்பார்.)

கீரியாத்யாரீம்:
    பெத்ஷிமேசின் மனுஷர் கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தியர் கர்த்தருடைய பெட்டியை திரும்ப அனுப்பினார்கள், நீங்கள் வந்து அதை உங்களிடத்திற்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.  (1 சாமுவேல் 6:21)
    அப்படியே கர்த்தருடைய மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின்மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டு வந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியை காக்கும்படி அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். (1 சாமுவேல் 7:1)

    அந்த நாட்கள் முதல் கொண்டு, தாவீதின் வரை உடன்படிக்கை பெட்டியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.  ஏறக்குறை இருபது ஆண்டுகளாக கர்த்தருடைய பெட்டி கீரியாத்யாரீமிலே இருந்தது.  கர்த்தருடைய பெட்டியை மீண்டும் எருசலேமிற்கு கொண்டுவரவேண்டும் என்ற முயற்சியை எடுத்தவர் தாவீது ராஜா.
    பல ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி பின்நாட்களில் கேட்பாறற்றுக்கிடந்தது.  கேரூபீன்களின் நடுவே வாசமாயிருகு்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைகப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது விரும்பினார்.
    இருபது ஆண்டுகளாக கேட்பாறற்றுக்கிடந்த உடன்படிக்கை பெட்டியை மீண்டுமாக எடுத்து, அதை பரிசுத்தப்படுத்த வேண்டும், பராமரிக்க வேண்டும், அதற்கான கனத்தைக்கொடுக்க வேண்டும் என்ற என்னம் தாவீது அரசனுக்கே வந்தது.
    தாவீதின் ஆலோசனைப்படி கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேலின் தலைநகரமாகிய எருசலேமிற்கு கொண்டுவரப்பட்டது.  

    தாவீது அரசனாக பொறுப்பேற்றதும் எருசலேமை தலைமை நகரமாக மாற்றினார். உடன்படிக்கை பெட்டியை எருசலேமிற்கு கொண்டுவந்தார். இதை பிள்ளைகளுக்கு நாம் ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.
    தாவீது பெலிஸ்தியர்களை தோற்கடித்ததையும் நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
    சவுல் மரித்ததால் தாவீது அரசனாகவில்லை. தாவீது அரசனாக வேண்டும் என்பது கடவுளின் திட்டம்.
    தாவீது நிரந்தர அரசன்அல்ல, இயேசு கிறிஸ்துவே நிரந்த அரசன் என்பதை பிள்ளைகளுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.
    இந்த நான்காம் நாள் பாடத்தில் மூலமாக பிள்ளைகளுக்கு தலைமைத்துவத்தைப் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். தாவீது அரசனானான் என்றால் ஒரு நின்மதியான வாழ்க்கைக்குள்ளாக அவன் நுழையவில்லை. இனிமேல் தான் தாவீது சவால்களையும், போட்டிகளையும், எதிரிகளையும் சந்திக்கபோகிறான் என்பதை பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
    நாமும் அநேக நேரங்களில் உயர் பதவியில் இருப்பவர்களை பார்த்து, அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு எந்த குறைவும் இல்லை என்று யோசிப்பதுண்டு. நம்மை விட உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நம்மை விட பலமடங்கு பிரச்சனைகளும், போராட்டங்களும் இருக்கிறது என்பதை பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்


Activities:
    ஒருவித உணர்வை பிள்ளைகளிடம் காட்டி, அது எண்ண உணர்வு என்று பிள்ளைகளை கண்டுபிடிக்க வைக்கலாம். எ.கா: கவலை, சோகம், அழுகை, சந்தோஷம்.

    பலூனை ஊதி. பலூனில் பிள்ளைகள் தங்களின் பெயரை எழுத சொல்லி உற்சாகப்படுத்தலாம்.

    தாவீது போன்று ஒரு பொம்மையை வரைந்து அதை சுவற்றி மாட்டி, ஒரு மாணவனை அழைத்து, அவன் கண்னை கட்டி, கையில் ஒரு கிரீடம் (பேப்பர் கிரீடம்) கொடுத்து, சுவரில் இருக்கும் தாவீதின் தலையில் சரியாக கிரீடத்தை மாட்டு என்று சொல்ல வேண்டும்.

    ஒரு பாட்டிலில் 1, 10, 50, 100, 200, 500, 700, 1000 என எண்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். மற்றும் ஒரு பாட்டிலில் Take & Give என்ற இந்த இரண்டு வார்த்தைகளை எழுதி வைக்க வேண்டும். ஒரு மாணவனிடம் இந்த நாள் பாடத்திலிருந்து ஒரு கேள்வி கேட்க வேண்டும். அவன் சரியாக பதில் சொன்னால், அவனை முன்பதாக அழைத்து முதல் பாட்டிலில் இருக்கும் ஏதோனும் ஒரு எண்ணை எடுக்க சொல்ல வேண்டும். அவன் மிகவும் உற்சாகமாக அந்த மதிப்பெண்னை எடுப்பான். பின்பு மற்றொரு பாட்டிலில் எழுதிவைத்திருக்கிற அந்த இரண்டு வார்த்தைகளை காட்ட வேண்டும். அவன் Take என்ற வார்த்தையை எடுத்திருந்தால் அந்த மதிப்பெண்னை அவன் வைத்துக்கொள்ளலாம். Give என்ற வார்த்தையை எடுத்திருந்தால் அந்த மாணவன் தான் எடுத்த மதிப்பெண்னை வேறு யாருக்கெனும் கொடுக்க வேண்டும். இப்படி விளையாட்டு போட்டிகள் நடத்துவதன் மூலம் மாணவர்களிடையே கொடுக்கும் திறமையை நாம் வளர்க்க முடியும்.


விளையாட்டு:
    மரம், கிளை, பூ விளையாட்டை விளையாடி பிள்ளைகளை உற்சாகப்படுத்தலாம். மரம் என்றார் நேராக நிற்க வேண்டும். கிளை என்றால் இரண்டு கைகளையும் சிலுவை மர வடிவில் நீட்ட வேண்டும். பூ என்றால் பூவைப்போல கையை குவித்து வைக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.