Type Here to Get Search Results !

உயிர்த்தெழுந்த இயேசு யாரை சந்தித்தார்? | Happy Resurrection Day Special Message | Gospel Sermon Points in Tamil | Jesus Sam

தலைப்பு: உயிர்த்தெழுந்த இயேசு யாரை சந்தித்தார்

            உயிர்த்தெழுந்த திருநாள் என்பதை ஆங்கிலத்தில் Easter Day என்று சொல்லுவோம்.  Easter என்ற வார்த்தை ஒரு தவறான வார்த்தையாகும்.  இந்த வார்த்தை ஈஸ்டார் என்ற தெய்வத்தைக் குறிக்கும் வார்த்தையாகும்.

            தமிழ் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள விக்கிரக தோப்புகள் என்ற பதம் இந்த ஈஸ்டார் தெய்வத்தைக் குறிக்கும்.  (2 இராஜாக்கள் 17:10) (2 நாளாகமம் 17:6)

            நாம் மற்றவர்களை வாழ்த்தும் போது Happy Easter என்று வாழ்த்தாமல், கிறிஸ்து உயிர்தெழுந்த திருநாள் வாழ்த்துக்கள் என்று சொல்லுவது சிறந்தது.  இல்லையென்றால், Happy Resurrection Day என்று சொல்லுவது சிறந்தது.

 


வெளிநாட்டில் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நபர், பண்டிகைகால விடுமுறைக்கு தனது சொந்த ஊருக்கு வரவிரும்பினால், அதற்கான அநேக ஆயத்தங்களை மேற்கொள்ளுவார்.

தோறாயமாக ஒரு நாற்பது நாள் விடுமுறை என்று வைத்துக்கொள்ளுவோம்.  நாற்பது நாள் மாத்திரமே விடுமுறை என்பதால் குறிப்பிட்ட நபர்களை மாத்திரம் சந்திக்க முடியும்.  எனவே, யார் யாரை சந்திக்க வேண்டும், எப்போது சந்திக்க வேண்டும் என்று திட்டமிடுவார்.

            கணவன் தன் தாய், தகப்பன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொன்னால், மனைவி தன்னுடைய தாய் தகப்பன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லுவாள்.  இப்படியாக முக்கியமான நபர்களை மாத்திரமே சந்திக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிடுவார்கள். 

            சிறுவயது முதல் தாம் வளர்ந்த ஊர் என்பதால் அநேகரை சந்திக்க வேண்டிய விரும்பமும், ஆசையும் அவருக்கு இருந்தாலும், அவரால் எல்லா நபர்களையும் சந்திக்க முடியாது.  அவருக்கு முக்கியம் என்று தோன்றுகின்ற நபர்களை மாத்திரமே சந்திப்பார்.

            சிறுவயதில் தன் வீட்டிற்கு அருகாமையில் விளையாடிய நண்பர்கள், பள்ளிப்பருவத்தில் தன்னோடு படித்த நண்பர்கள், கல்லூரிப்பருவத்தில் தன்னோடு படித்த நண்பர்கள், தன்னோடு விளையாடியவர்கள் இப்படியாக அநேகரை சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், கொடுக்கப்பட்ட நாட்கள் நாற்பது நாட்களே என்பதால் ஒரு சிலரை மாத்திரமே அவரால் சந்திக்க முடியும்.

 

            இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு நாற்பது நாட்கள் மாத்திரமே பூமியில் இருந்தார்.  அந்த நாட்களில் சிலரை மாத்திரமே ஆண்டவர் சந்தித்தார்.  சிலருக்கு மாத்திரமே சில பொறுப்புகளை கொடுத்தார்.

            உயிர்த்தெழுந்த ஆண்டவர் சந்தித்த ஒவ்வொரு நபர்களும் முக்கியமானவர்கள்.  அவர்களிடம் காணப்பட்ட குணாதிசயங்கள் நம்மிடமும் காணப்பட்டால் நம்மையும் ஆண்டவர் சந்திக்க ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார்.

            உயிர்த்தெழுந்த ஆண்டவர், யார் யாரை சந்தித்தார்.  அவர்களிடம் காணப்பட்ட சிறப்பு குணங்கள் என்ன என்பதைக் குறித்து ஆராய்ந்து பார்ப்போம்.

 

 

1. மகதலேனாள் மரியாள்

மாற்கு 16:9

            வாரத்தின் முதல் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.

 

            உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முதன் முதலாக ஒரு பெண்ணுக்கே காட்சியளித்தார்.

            உயிர்த்தெழுந்த கிறிஸ்துவானவர் முதல் முதலில் மகதலேனா மரியாளுக்கு காட்சியளிக்க காரணம் என்ன?  அவளிடம் அப்படி என்ன குணம் காணப்பட்டது.

 

1. பாவியான ஸ்திரீ:

மாற்கு 16:10அ

            அவளிடமிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார்.

            இயேசு கிறிஸ்து அவளிடமிருந்து ஏழு பிசாசுகளை துரத்தியிருந்தார்.  அப்படியானால், பிசாசு பிடித்த ஒரு பெண்ணையே இயேசு கிறிஸ்து முதலாவது சந்தித்தார்.

 

லூக்கா 5:32

            நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.

 

            எத்தனையோ நல்லவர்கள், பரிசுத்தவான்கள் இருந்த போதிலும் ஆண்டவர் பாவியான அந்த மகதலேனா மரியாளையே தேடி வந்தார்.   பாவியாகிய நம்மையும் இரட்சிக்கும்படியாகவே அவர் உயிர்த்தெழுந்தார்.

 

2. புறக்கணிக்கப்பட்ட ஒரு ஸ்திரீ:

            பிரபலர் ஒருவர் நம்மைத் தேடி வருகிறார் என்றால், அவரை வரவேற்பதற்காக ஒரு சிறுவனையோ, ஏழையையோ நாம் அனுப்ப மாட்டோம்.  அந்த பிரபலரின் மதிப்பிற்கு தக்க ஒரு மனிதனை அனுப்பி அவரை அழைத்துவரச் சொல்லுவோம். (எ.கா: பேராயர்)

 

            இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், கிறிஸ்துவானவர் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பார் என்பதை விசுவாசித்திருந்தாள், கல்லறையினிடத்திற்கு ஓடி யார் முதலாவது வரவேற்ப்பது என்று யோசித்திருப்பார்கள். 

            சீஷர்கள் அனைவரும் இணைந்து பேதுருவை கைகாட்டியிருப்பார்கள்.  பேதுரு நீ தான் வயதில் மூத்தவர், நீ கல்லறைக்குச் சென்று இயேசுவை அழைத்து வா என்று சொல்லியிருப்பார்கள்.  அதற்கு பேதுரு, இல்லை, இல்லை என்னால் போகமுடியாது.  இயேசுவை மூன்று முறை காட்டிக்கொடுத்து நான் பாவம் செய்து விட்டேன் என்று சொல்லியிருப்பார். (லூக்கா 22:60)

            சீஷர்கள் அனைவரும் இணைந்து யோவானை கைகாட்டியிருப்பார்கள்.  நீ தான் இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்த சீஷன்.  நீ கல்லறைக்கு சென்று இயேசுவை வரவேற்று வா என்று சொல்லியிருப்பார்கள்.  யோவான் சொல்லியிருப்பார், இயேசுவை கைது செய்யும்போது, அகப்பட்டுவிடுவேன் என்று சொல்லி, வஸ்திரத்தை கலற்றிவிட்டு ஓடியவன் நான்.  எனவே, நான் போகமாட்டேன் என்று சொல்லியிருப்பார். (மாற்கு 14:51,52)

            இப்படியாக சீஷர்கள் அவர்களுக்குள்ளேயே ஒவ்வொரு நபராக சொல்லிக்கொண்டிருந்திருப்பார்கள்.  ஆனால், அவர்களில் ஒருவரும் இந்த மகதலேனா மரியாளிடம், நீ இயேசுவை சென்று அழைத்து வா என்று சொல்லியிருக்க மாட்டார்கள்.  ஏனென்றால், அவள் பாவியான ஸ்திரீ.  இப்பொழுது அவள் பிசாசுகள் நீங்கி, தூய்மையானவாளக இருந்தாலும், முன்னே அவளிடம் ஏழு பிசாசுகள் இருந்ததையே அவர்கள் நினைத்திருப்பார்கள்.

            மனிதர்கள் நம்மை பார்க்கும்போது, நம்முடைய பாவ வாழ்க்கையைக் குறித்தே நினைப்பார்கள்.  ஒரு நபர் ஆலயத்திற்கு புதிதாக வருகிறார் என்றால், இவ்வளவு அக்கிரமம் செய்துவிட்டு இவர்களெல்லாம் ஆலயத்திற்கு வருகிறார்கள் என்றே மக்கள் நினைப்பார்கள்.  நாம் மனம் திரும்பியதையும், இரட்சிக்கப்பட்டதையும் அவர்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் கண்களுக்கு நம்முடைய பாவங்களே தென்படும்.

 

ஏசாயா 55:8

            என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல.  உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

            மனிதன் நம்மை பார்ப்பது போல ஆண்டவர் நம்மை பார்ப்பது இல்லை.  நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், ஆண்டவர் நம்மையும் இரட்சிக்கும் படியாகவே உயிரோடெழுந்தார்.

 

 

2. மரியாள் மற்ற மரியாள்

மத்தேயு 28:9

            அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார்.  அவர்கள் கிட்ட வந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.

 

1. சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்களுக்கே காட்சியளித்தார்

            அவர்கள் என்பது மகதலுனா மரியாளையும், மற்ற மரியாளையும் குறிக்கிறது.

மத்தேயு 28:1

            ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதல் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

 

மரியாள் என்ற பெயரின் அர்த்தம் கசப்பு

பொதுவாக யூதர்கள் பெண்களை மதிக்க மாட்டார்கள்.  நம்முடைய வேதாகமத்திலும் கூட பெண்களை விட ஆண்களின் பெயர்களே அதிகம் குறிப்பிட்டிருக்கும்.  பெண்களை இழிவாகவே யூதர்கள் பார்த்தார்கள்.

 யூதர்கள் மாத்திரம் அல்ல, இந்தியாவிலும் கூட இன்றளவும் பெண்கள் மதிக்கப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள்.  ஒரு சிறுவனை அழைத்து உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்று கேட்டாள் அவன் அம்மா என்று சொல்லுவான்.  அதே சிறுவனிடம் நீ யாருடைய மகன் என்று கேட்டாள் தன் அம்மா பெயரை சொல்ல மாட்டான்.  தன் அப்பாவின் பெயரையே சொல்லுவான்.  பெரியவர்களாகிய நாமும் நம்முடைய பிள்ளைகளுக்கு அப்படியே கற்றுக்கொடுக்கின்றோம்.

ஆண்களைப்போலவே பெண்களும் மதிக்கப்பட வேண்டும் என்றே, இக்காலகட்டத்தில் அநேக திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றது. குடும்ப அட்டைகளில் தலைவியின் புகைப்படமே பதிக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்களையே ஆண்டவர் இரண்டாவதாக சந்தித்தார்.  தன்னோடு கூட இருந்த சீஷர்களுக்கு ஆண்டவர் இரண்டாவதாக காட்சியளிக்கவில்லை.  முதல் இரண்டு முறையும் ஆண்டவர் பெண்களுக்கே காட்சியளித்தார்.

 

2. புறக்கணிக்கப்பட்ட பெண்களையே சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்தினார்

மத்தேயு 28:10

            அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்.  நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்.  அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

 

            மதிக்கப்படாத பெண்களையே ஆண்டவர் சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்தினார்.

            மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மனிதர்களையே ஆண்டவர் எடுத்து பயன்படுத்த சித்தமுள்ளவராய் இருக்கின்றார்.

            ஆண்டவர் ஒருவனை பயன்படுத்த விரும்பினால், அவன் பணக்காரனாகவோ, அதிகாரம் படைத்தவனாகவோ, அரசியல் தெரிந்தவனாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஒன்றும் இல்லாத புறக்கணிக்கப்பட்டவர்களையே ஆண்டவர் பயன்படுத்த சித்தமுள்ளவராய் இருக்கிறார்.

 

 

3. கேபா- பேதுரு

1 கொரிந்தியர் 15:4,5

            4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,

            5. கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

            கேபா என்றால் பேதுரு என்று பொருள்.

உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.  மூன்றாவதாக பேதுருவுக்கு தரிசனமானார்.

            பேதுரு ஒரு சிறந்த மனிதன் அல்ல.  இயேசு கிறிஸ்துவை நான் பார்த்தது இல்லை.  அவர் எப்படி இருப்பார் என்றும் கூட எனக்கு தெரியாது என்று சபித்து சத்தியம் பண்ணின ஒரு நபர்.  இப்படிப்பட்ட பேதுருவையே ஆண்டவர் மூன்றாவதாக சந்தித்தார்.

            முதல் இரண்டு முறையும் ஆண்டவர் பெண்களுக்கு காட்சியளித்தார்.  உயிர்த்தெழுந்த கிறிஸ்து சந்தித்த முதல் ஆண் இந்த பேதுரு.

 

1. துரோகியையும் மன்னித்தார்

            நம்மைப்பற்றி ஒருவர் தவறாக பேசிவிட்டால், அவரை நாம் ஏறெடுத்தும் பார்க்கவும் விரும்புவதில்லை.

            ஒரு பழமொழி இப்படியாக சொல்லுவார்கள், எதிரியை மன்னித்துவிடலாம், துரோகியை மன்னிக்க முடியாது.

            இயேசுவானவருக்கு பிரதான ஆசாரியர், சதுசேயர், பரிசேயர், நியாயசாஸ்திரிகள், வேதபாரகர்கள் என அநேக எதிரிகள் இருந்தார்கள்.  அவர்களையும் ஆண்டவர் மன்னித்தார்.

            மூன்றறை ஆண்டுகள் இயேசுவோடு கூட இருந்து, அவர் செய்த அற்புதங்கள், அதிசங்கள் அனைத்தையும் பார்த்து, இயேசுவிடம் இருந்து அநேக நன்மைகளைப் பெற்ற பேதுரு இயேசு கிறிஸ்துவை அறியேன் என்று சபித்து சத்தியம் பண்ணுகிறார். (லூக்கா 26:60)

            இந்த பேதுருவின் மாமியையே ஆண்டவர் சுகமாக்கினார். (மத்தேயு 8:14,15)

மீனின் வயிற்றிலிருந்து இருந்து எடுத்த வெள்ளியைக் கொண்டு தனக்கும், இயேசுவுக்கும் வரிப்பணம் செலுத்தினவன் இந்த பேதுரு.  (மத்தேயு 17:27)

            இப்படியாக எத்தனையோ நன்மைகளை பெற்ற பேதுரு, இயேசுவுக்கு துரோகம் செய்தான்.  அப்பப்பட்ட துரோகியையும் ஆண்டவர் மன்னித்து, ஆண்களில் முதலாவதாக பேதுருவை சந்தித்தார்.

            மாத்திரம் அல்ல, துரோகம் செய்த அந்த பேதுருவையே ஆண்டவர் வல்லமையாய் எடுத்து பயன்படுத்தினார்.  பேதுருவின் முதல் பிரசங்கத்தில் மூவாயிரம் பேர் இரட்சிக்கப்படுகின்றார்கள்.  (அப்போஸ்தலர் 2:41)

            பேதுருவின் இரண்டாம் பிரசங்கத்தில் ஐயாயிரம் பேர் இரட்சிக்கப்படுகின்றார்கள்.  (அப்போஸ்தலர் 4:4)

 

            நான் ஒரு தகப்பனாரிடம் நீங்கள் ஏன் ஆலயத்திற்கு வருவதில்லை என்று கேட்டபோது, அவர் இப்படியாக கூறினார்.  நான் செய்த பாவங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் நான் ஆலயத்திற்கு வருவதற்கு தகுதியற்றவன்.  என்னை ஆண்டவர் மன்னிக்கவே மாட்டார் என்று கூறினார்.

            அநேகருடைய சிந்தையில் இப்படிப்பட்ட காரியம் இருப்பதினாலேயே ஆலயம் வருவதை விரும்பாமல் இருக்கிறார்கள்.  நாம் எப்பேர்பட்ட பாவியாக இருந்தாலும் நம்மை இரட்சிக்கும்படியாகவே இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். 

            துரோகியான பேதுருவை மன்னித்த ஆண்டவர் நம்முடைய பாவங்களையும், அக்கிரமங்களையும் மன்னிக்க ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார்.  நம்மையும் இரட்சித்து பரலோக ராஜ்யத்தில் சேர்க்கும்படியாகவே ஆண்டவர் உயிரோடு எழுந்தார்.

            இயேசு கிறிஸ்து துரோகியை மன்னித்தது போல நாமும் நமக்கு விரோதமாய் செயல்பட்டவர்களை மன்னிக்க வேண்டும்.  அவர்களையும் நேசிக்க வேண்டும்.  அவர்களோடும் ஐக்கியமாய் இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகின்றார்.

 

 

4. இயேசுவை அறியாத சீஷர்கள் (எம்மாவூர் சீஷர்கள்)

லூக்கா 24:30,31

            30. அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.

            31. அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள்.  உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.

 

            இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த அந்த நாளில் எருசலேமிலிருந்து, எம்மாவு என்னும் கிராமத்திற்கு இரண்டு சீஷர்கள் நடந்து சென்றார்கள்.  எருசலேமிலிருந்து எம்மாவு கிராமத்திற்கு ஏழு அல்லது எட்டு மையில் தூரம்.

            அப்படி அவர்கள் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது இயேசுவும் அவர்களோடு உரையாடிக்கொண்டு நடந்து சென்றார்.  இருப்பினும்  அந்த இரண்டு சீஷர்களும் இயேசு கிறிஸ்து தங்களோடு இருக்கிறார் என்பதை உணராதிருந்தார்கள்.

            அவர்கள் கண்கள் திறக்கப்பட்டபோது அவர்கள் இயேசுவை உணரந்துகொண்டார்கள்.

            நாமும் கூட அநேக நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சனைகள், தோல்விகள், அவமானங்கள், வியாதிகளைக் கண்டு இயேசு என்னோடு இல்லையோ என்று நினைப்பதுண்டு.

            இயேசு என்னோடு தான் இருக்கின்றார், அதை நான் தான் உணர்ந்துகொள்ளவில்லை என்பதை நாம் மறந்துவிடுகின்றோம்.  நம்முடைய கண்களை பிசாசானவன் மறைந்து வைத்திருக்கின்றான்.

            எத்தனை பிரச்சனைகள், பெலவீன்கள், தோல்விகள் வந்தாலும் இயேசு என்னோடு இருக்கிறார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.  அதற்காகவே இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்.

            ஆண்டவர் என்னோடு கூட இல்லையே என்ற சந்தேகஷம் வரும்போது, ஆண்டவரே உம்மை பார்க்கும்படியாக, உம்மை உணர்ந்துகொள்ளும்படியாக என் கண்களை திறந்தருளும் என்று நாம் ஜெபிக்க வேண்டும்.

 

5. பயந்த சீஷர்களுக்கு தரிசனமானார்

யோவான் 20:19-24

            19. வாரத்தின் முதல் நாளாகிய அன்றையதினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்கு சமாதானம் என்றார்.

            இயேசு கிறிஸ்துவை அறைந்தவர்கள் உலகை ஆட்சி செய்துகொண்டிருந்த ரோமர்கள்.  கிறிஸ்து மரித்த போது, அவர் சரீரத்தை பலத்த பாதுகாப்போடு வைத்திருந்தார்கள்.  உலகத்தில் முத்திரைபோட்டு, காவல் காத்த ஒரு கல்லறை, இயேசு கிறிஸ்துவின் கல்லறை மாத்திரமே.

            நாம் இந்தியாவிலும் கூட ஒரு சாதாரண மனிதனின் சரீரம் தெலைந்துபோனது என்றால் அதை எவ்வளவு தீவிரமாக தேடுகிறார்கள்.  சந்தேகப்படும் அனைவரையும் அழைத்து விசாரனை நடத்துகிறார்கள்.

            ஒரு சாதாரண மனிதனையே அரசாங்கள் தீவிரமாய் தேடும்போது, உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த ரோமர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஒரு சரீரம் காணாமல் போனது என்றால், அதை எவ்வளவு தீவிரமாக தேடியிருப்பார்கள்.  சரீரத்தை காணவில்லை என்றவுடனே, சீஷர்கள் தான் திருடிவிட்டார்கள் என்று எண்ணி, அவர்களை சிறையில் அடைக்க, விசாரிக்க திட்டமிட்டிருப்பார்கள்.

            ரோமர்கள் ஒரு கொடுங்கோல் ஆட்சி செய்துவந்தார்கள்.  இயேசுவிடம் எந்த குற்றமும் காணாத பிலாத்து அவரை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்.

            அப்பப்பட்ட கொடுங்கோல் ஆட்சியாளர்கள் நம்மை நிச்சயம் கொலை செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் பத்து சீஷர்களும் பூட்டப்பட்ட அறைக்குள் ஒழிந்திருந்தார்கள்.  தோமா எங்கோ வெளியே சென்றிருந்தார்.

            தோமா வெளியே சென்றதை அறிந்த சீஷர்களுக்கு இன்னும் பயம் அதிகாரித்திருக்கும்.  எவனாவது தோமாவை அடையாளம் கண்டு, இயேசுவின் சரீரத்தை காணவில்லை எங்கே ஒழித்து வைத்தீர்கள் என்று கேட்டார், தோமா சொல்லியிருப்பார், எனக்கு தெரியாது.  என்னுடைய கூட்டத்தார் அனைவரும் ஒரு வீட்டில் மறைமுகமாக ஒழிந்திருக்கின்றோம் நீங்கள் வந்து விசாரியுங்கள் என்று சொல்லியிருப்பார்.

            இப்படியாக பலவற்றை சிந்தித்துக்கொண்டு, பயத்தோடும் கலக்கத்தோடும் மூட்டப்பட்ட அறைக்குள் சீஷர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அப்படிப்பட்ட சீஷர்களுக்கு அண்டவர் காட்சி கொடுக்கின்றார்.

            காட்சி கொடுத்த ஆண்டவர், முட்டாள்களே, பைத்தியக்காரர்களே நான் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பேன் என்று உங்களுக்கு சொன்னோனே.  அதை ஏன் மறந்துபோனீர்கள்.  (மத்தேயு 16:21) (மத்தேயு 17:23) (மாற்கு 9:31) (மாற்கு 10:34) (லூக்கா 9:22) (லூக்கா 18:33) என்று கேட்டு அவர்களை கடிந்துகொள்ளவில்லை.   மூட்டப்பட்ட அறைக்குள்ளாக வந்த இயேசுவானவர் ”சமாதானம்” என்று சொல்லுகிறார்.

 

            நாமும் கூட அநேக நேரங்களில் பயந்து, கலக்கத்தோடு காணப்படுகின்றோம்.  என் வியாதி குணமடையாதோ, என் படிப்பு தோல்வியில் முடிந்து விடுமோ, என் எதிர்காலம் எப்படி இருக்குமோ, என் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ, என் கடன் அடைக்கப்படுமா என்ற பலவிதமான பயங்கள் நமக்குள்ளே காணப்படுகின்றது.

            நம்முடைய பயத்தை நீங்கி சமாதானத்தை கொடுக்கும்படியாகவே இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தார்.

 

 

 

6. தோமா:

            உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து பூட்டப்பட்ட அறைக்குள்ளே இருந்த பத்து சீஷர்களுக்கும் தரிசனமானார்.  பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் தற்கொலை செய்துகொண்டார்.  (மத்தேயு 27:5)

            மற்ற பதினொருவரில் தோமா மாத்திரம் வெளியே சென்றிருந்தார்.  தோமா சீஷர்களோடு இல்லாத போது இயேசு கிறிஸ்து அவர்களுக்கு காட்சியளித்தார். தோமா இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்ததை விசுவாசிக்கவில்லை.  அதாவது நம்பவில்லை.

            அந்த தோமாவின் அவிசுவாசத்தை நீக்கும்படியாகவே, அவனையும் விசுவாசியாய் மாற்ற வேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தார்.         

            இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நம்பாத தோமா, அநேக கேள்விகளை கேட்கிறார்.  நான் மாத்திரம் உங்களோடு இருக்கும்போது இயேசு வந்திருப்பாரானால், நான் அவர் காயங்களை தொட்டு பார்த்திருப்பேன்.  நீங்கள் எதையே பார்த்துவிட்டு என்னை குலப்புகிறீர்கள் என்று சொல்லியிருப்பார்.

            தோமாவின் கேள்விக்கு பதில் கொடுக்கும்படியாகவே இயேசு கிறிஸ்து மீண்டும் சீஷர்களுக்கு தரிசனமானார்.

யோவான் 20:26,27

            26. மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்.  தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்.  கதவுகள் பூட்டப்பட்டிருந்தது.  அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்கு சமாதானம் என்றார்.

            27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என்கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.

            இன்றும் கூட அநேகர் அற்புதங்களையும், அடையாளங்களையும் நம்பாமல் இருக்கிறார்கள்.  ஆண்டவர் அற்புதம் செய்வார், வியாதியை மாற்றுவார், கடன் பிரச்சனையை மாற்றுவார், தோல்வியை வெற்றியாக மாற்றுவார் என்பதை விசுவாசியாமல் இருக்கிறார்கள்.  அவர்களும் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தார்.

           

தோமா நம்பாமல் இருக்க காரணம்

            தோமா நம்பாமல் இருக்க காரணம் அவனை சுற்றியிருந்தவர்கள்.  இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று தோமாவிற்கு அறிவித்தவர்கள் சீஷர்கள்.

தோமா நினைத்திருப்பார், யோவானே இயேசுவை பிடிபதற்காக காலவர்கள் வந்தபோது வஸ்திரத்தை கலற்றிவிட்டு ஓடிவன் நீ தானே நீ சொல்லி நான் நம்ப வேண்டுமா? (மாற்கு 14:51,52)

பேதுருவே, இயேசுவை யார் என்றே தெரியாது என்று சபித்து சத்தியம் பண்ணியவன் நீயல்லவா? நீ சொல்லி நான் நம்பவேண்டுமா? என்ற எண்ணம் தோமாவிற்கு நிச்சயம் வந்திருக்கும். (லூக்கா 26:60)

            இன்றும் கூட அநேகர் ஆண்டவரை நம்பாமல் இருக்க காரணம், இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் இருக்க காரணம்.  விசுவாசிகளாகிய நாம்முடைய வாழ்க்கையே.  நாம் கடவுளுக்குள்ளாக நிலைத்திருப்போமானால், நம்முடைய வாழ்க்கை முறையைப் பார்த்து அநேகர் ஆண்டவரரை ஏற்றுக்கொள்ளுவார்கள்.

            நம் தேசத்தின் தந்தை காந்தியடிகள் வேதாகமத்தை வாசித்துவிட்டு, இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரு நாள் உண்மை கிறிஸ்தவர்களாக வாழ்ந்தாள் இந்தியா கிறிஸ்தவ நாடாக மாறும் என்று சொன்னாராம்.

            மற்ற மதத்தினர் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள தடையாக நாமே காணப்படுகின்றோம்.

           

 

7. ஏழு சீஷர்கள்

யோவான் 21:1-3

            3. சீமோன் பேதுரு மற்றவர்களைப் நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான்.  அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். 

 

            பேதுரு தான் தவறு செய்வது மாத்திரம் அல்ல மற்றவர்களையும் தவறு செய்யும்படி அழைக்கிறான்.  சீஷர்களில் மூத்தவர் இந்த பேதுரு.  கிறிஸ்துவிடம் இருந்து அநேக நன்மைகளை பெற்றவர்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்து ஆண்களில் முதலாவது இந்த பேதுருவுக்கே தரிசனமானார்.(1 கொரிந்தியர் 15:4,5)

பத்து சீஷர்கள் பூட்டப்பட்ட அறைக்குள் இருந்தபோது அவர்களில் ஒருவராக பேதுருவும் இருந்தார். (யோவான் 20:19)

            தோமா பத்து சீஷரோடு சேர்ந்தபோது மீண்டும் சீஷர்களுக்கு ஆண்டவர் காட்சி கொடுத்தார்.  அப்பொழுதும் பேதுரு அவர்களோடு கூட இருந்தார். (யோவான் 20:26)

            உயிர்த்தெழுந்த கிறிஸ்து மூன்று முறை பேதுருவுக்கு தரிசனமானார்.  எல்லாவற்றையும் பார்த்த பேதுரு ஆண்டவரை விட்டு பின்வாங்கி செல்ல துணிந்தான்.

            ஊழியத்தை விட்டு, ஆண்டவரை விட்டு பின்வாங்க துணிந்த பேதுரு, தான் முன் செய்து வந்த வேலையாகிய மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டான்.  ஆண்டவரை தேடாமல் உலகத்தின் பின்னால் சென்ற பேதுருவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

யோவான் 21:3ஆ

            அவர்கள் புறப்பட்டுப்போய் உடனே படவேறினார்கள்.  அந்த இரத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

            ஆண்டவருடைய ஊழியத்திற்காக அழைக்கப்பட்டவர்கள் அதை புறக்கணித்துவிட்டு வேறு எந்த வேலை செய்தாலும் அது அவர்களுக்கு ஆசீர்வாதத்தை தருவதில்லை.  இதை பேதுருவின் வாழ்விலிருந்து நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

            ஆண்டவர் நம்மை ஊழியத்திற்கோ, ஆலய காரியங்களுக்கோ, பகுதி நேர ஊழியத்திற்கோ அழைத்திருப்பார் என்று சொன்னால் அதை நாம் தவறவிடும்போது, நாம் வேறு எந்த தொழில் செய்தாலும் அதில் நாம் நன்மைகளை பார்க்க முடியாது.

            ஆண்டவரின் அழைப்பை உணராத, பல முறை எச்சரித்தும் உணர்வடையாத பேதுருவைப் பார்த்து ஆண்டவர் கேபமடையவில்லை.  பிள்ளைகளே என்று பாசத்தோடு அழைக்கிறார். (யோவான் 21:5)

 

            ஆண்டவரை தேடாமல், ஓய்வு நாள் ஆராதனையை நிறுத்திவிட்டு, உலகப்பிரகாரமாக நாம் எந்த வேலை செய்தாலும் அது நமக்கு ஆசீர்வாதத்தைத தேடித்தராது.  கடவுளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்கும் போது ஆண்டவர் நம்மை செழிக்கச்செய்வார்.

மத்தேயு 6:33

            முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.  அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்.

            பேதுருவைப்போல நாம் வழிதவறி சென்றிருப்போனால் இந்த நாளில் ஆண்டவருடைய சமுகத்தில் நம்மை அர்ப்பணிப்போம்.  முதலாவது நாம் ஆண்டவருக்கு முன்னுரிமை கொடுக்கும்போது ஆண்டவர் நம்மை நிறைவாய் வழிநடத்த சித்தமுள்ளவராய் இருக்கிறார்.

 

            உயிர்த்டெழுந்த கிறிஸ்துவானர் யார்? யாரை சந்தித்தார் என்றும், அவர்களிடம் காணப்பட்ட குணங்களைப் பற்றியும் அறிந்துகொண்டோம்.

            உயிர்த்தெழுந்த கிறிஸ்துவானவர் பாவியானவர்களையும், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களையும், துரோகம் செய்தவர்களையும், தாம் உயிர்த்தெழுந்ததை உணராமல் இருந்தவர்களையும், பயந்து ஒழிந்துகொண்டிருந்தவர்களையும், அவிசுவாசிகளாய் இருந்தவர்களையும், அழைப்பை உணராமல் உலகத்தின் பின்னால் சென்றவர்களையுமே சந்தித்தார். 

            நாமும் இப்படிப்பட்ட நிலையில் இருப்போமானால், இந்த உயிர்த்தெழுந்த திருநாளில் ஆண்டவர் நம்மையும் சந்திக்க ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார்.  அவருடைய கரத்தில் நம்மை நாம் அர்ப்பணிக்கும்போது, அவருக்குள்ளாக நாம் நிலைத்திருக்கும்போது நிறைவாழ்வை பெற்றுக்கொள்ள முடியும்.

            ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.