Type Here to Get Search Results !

jesus second coming soon | கிறிஸ்துவின் இரண்டாம் வருகை (அ) இரகசிய வருகை | Jesus Sam


பிரசங்க குறிப்பு

தலைப்பு:

=======================================

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை (அ)

கிறிஸ்துவின் இரகசிய வருகை

=======================================





வெளிப்படுத்தல் 22: 12

          இதோ, சீக்கிரமாய் வருகிறேன்.

          இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட வேத புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம், ஆண்டவர் சீக்கிரம் வருவேன் என்று வாக்குரைத்திருகிறார்.  அநேகருக்கு இந்த கேள்வி இருக்கும் 2000-ம் ஆண்டுகள் கடந்து விட்டதே இனி அந்த கடவுள் வரப்போகிறாரா? என்று.   கடவுள் எந்த நாளில் வருவேன் என்று சொல்லவில்லை.  ஆனால் நிச்சயம் வருவார்.  ஏனென்றால் அவர் சொன்னதை செய்பவர்.   அவர் வரும்போது பூமியில் என்னென்ன அடையாளங்கள் நடைபெறும் என்று கற்றுக் கொடுத்துள்ளார்.   அந்த அடையளங்களில் ஒரு சிலவற்றைக் குறித்த இந்த குறிப்பில் நாம் சிந்திக்கலாம்.

முதல் வருகை:

          முதல் முறை கடவுள் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக, பரலோக ராஜ்யத்திற்கு நம்மை தகுதிபடுத்த வேண்டும் என்பதற்காக ஒரு கன்னிகையின் மூலமாக குழந்தை பாலனாக இப்பூமிக்கு வந்தார்.  நம்முடைய பாவங்களுக்காக பாவமில்லா அவர் தனது கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தினார்.  மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பரமேறிச் சென்றார்.

ஏசாயா 9: 6

          நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்.  நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். 

 


இரண்டாம் வருகை:

          இரண்டாம் வருகையின் போது கடவுள் பூமிக்கு வரப்போவதில்லை.   வானத்திலிருந்து இறங்கி மேகங்கள் மேல் வருவார்.  அப்பொழுது பரிசுத்தவான்கள் அனைவரும் அவரோடுகூட மேகத்தில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

மத்தேயு 24: 30

          மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும், வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

 

1 தெசலோனிக்கேயர் 4: 16, 17

          16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதருடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்.  அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

          17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்.



கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள்:

1. நான் தான் கிறிஸ்து:

மத்தேயு 24: 5

          அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

          கடைசி காலத்தில் அநேகர் எழும்பி நான் தான் கிறிஸ்து, நான் தான் கடவுள் என்று சொல்லி அநேகரை தன் பக்கமாக இழுப்பார்கள் என்று கடவுள் சொன்னது இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

          ரஷ்யா நாட்டைச் சேர்ந்த டொரோப் என்று அழைக்கப்படும் மனிதர் தான் கிறிஸ்து எனவும், நான் தான் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தேன் எனவும் கூறி அநேகரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.   உலகம் முழுவதிலும் 20,000 பேருக்கு மேல் இவரைப் பின்பற்றி வருகிறார்கள்.  இவர் 1961-ல் பிறந்தவர்.  இவரைப் பின்பற்றுகிறவர்கள் இவருடைய பிறந்த நாளையே கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகின்றார்கள்.  யாராவது பெலவீனத்தோடு (வியாதியோடு) இவரிடம் வருவார்கள் என்றால் இவர் சுகம் கொடுக்கிறார்.  அநேகர் இவரைப் பின்பற்ற இதுவும் ஒர் காரணம்.  மெய்யான விடுதலையை சுகத்தை நமது ஆண்டவரால் மட்டுமே தர முடியும்.   குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.  (யோவான் 8: 36)   இந்த ரொரோப் என்கிறவர் நான் சொன்ன எதையும் நீங்கள் வேதத்தில் எழுதவில்லை என்று இவர் தானாகவே ஒரு வேதத்தை எழுதியுள்ளார்.  அதன் பெயர் The Last Testment.  இந்த புத்தகத்தில் ஒரு மனிதர் பிறப்பு முதல் இறப்பு வரை என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டாம்.  என்ன சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும் என அனைத்து நெரிமுறைகளையும் இவர் எழுதியுள்ளார்.    நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.  நீங்கள் என்னைப் பின்பற்றினால் மட்டுமே உங்களுக்கு பரலோகம் என்பது இவரது கூற்று.   சமீபகாலத்தில் இவர் ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக பேசியதால், அரசாங்கம் வெளியிடுகின்ற பொருட்களை நீங்கள் சாப்பிடக்கூடாது என பேசியதால், இவர் பொய்யான கொள்கைகளை பரப்புகிறார் என் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவரை பின்பற்றுகிறவர்கள் இன்னும் இவரை நம்பிக்கொண்டிருகு்கிறார்கள்.   எங்கள் கடவுளை நீங்கள் சிறையில் அடைத்துள்ளீர்கள், மிகப்பெயரிய விளைவை சந்திக்கப்போகிறீர்கள் என்று சொல்லிக்கொண்டு உள்ளார்கள்.

          ஆண்டவர் சொன்னது இன்று நிறைவேறிக்கொண்டிருக்கிறது.  அநேக கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பிக்கொண்டிருக்கிறார்கள்.


 

2. யுத்தம்:

மத்தேயு 24: 6

          யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். 

          இன்று எங்கு பார்த்தாலும் யுத்தம்.  நாங்கள் தான் சிறந்த இராணுவத்தை வைத்திருக்கிறோம்.  நாங்கள் தான் உலகில் தலைசிறந்தவர்கள்.  எங்களை வீழ்த்த ஒருவராலும் முடியாது என்ற போட்டியில் உலகம் ஒருவரை மாற்றி ஒருவரை தாக்கிக்கொண்டுள்ளது.   இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இன்றும் பிரட்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ரஷ்யா உக்ரைன் போர்.  கொரியா அமெரிக்கா இடையே போர்.  இது போன்று உலகில் அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளை பகைத்துக் கொண்டு எப்போது போர்தொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள். 

          ஆண்டவர் சொன்னார்.   கடைசி நாட்களில் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள் என்று.   அது இன்று நம் கண்களுக்கு முன்பாக நடந்து கொண்டிருக்கிறது.  இனியும் காலம் செல்லாது.





3. பஞ்சம், கொள்ளை நோய், பூமியதிர்ச்சி

மத்தேயு 24: 7

          பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

பஞ்சம்:

          இன்று உலக நாடுகளில் மிகவும் பஞ்சத்தில் வாடும் ஒரு நாடு சோமாலியா.   ஒருவேளை உணவு என்பது இவர்களுக்கு எட்டாக்கனியான ஒன்றாக உள்ளது.   இவர்களின் பிரதானமான தொழில் விவசாயமும், மீன்பிடித்தொழும் ஆகும்.  உலக நாடுகள் தங்களது எலக்ரானிக் கழிவுகளை இந்த நாட்டில் கொட்டுவதால் இங்குள்ள நிலமும், கடலும் பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே, விவசாயமும், மீன் பிடித்தொழிலும் இல்லாமல் போய்விட்டது.   இதன் காரணமாகவே சோமாலியா தற்போது அழிவின் விழிம்பில் இருக்கிறது.

          தற்போது இலங்கை பஞ்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.   இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்தாலும், விவசாயம் அழிக்கப்படுவதாலும் இந்தியாவிலும் பஞ்சம் வரும் காலம் வெகு தூரமல்ல.  நமது இந்திய தேசத்திற்காக தலைவர்களுக்காக நாம் பாரத்தோடு ஜெபிக்க வேண்டும்.



கொள்ளை நோய்:

          ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஊரடங்கு என்றால் என்ன? 144 தடை உத்தரவு என்றால் என்ன? என்று நமக்கு தெரியாது.  ஆனால் 2019-ம் ஆண்டு உருவான அந்த கொரோனா உலகையே உழுக்கிவிட்டது.   பலமாதங்களாக நம்மை வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் நம் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது.   கொரோனா கொள்ளை நோயானது இன்னும் எத்தனை உருமாற்றதை அடையும் என்பதை நாம் அறியம்.



பூமியதிர்ச்சி:

          இன்று அநேக இடங்களில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.   நமது நாட்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  நிக்கடர் அளவில் மிகக் குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆனால் அநேக நாடுகளில் நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டாக்கப்பட்டுள்ளது. 

          பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், பூமியதிர்ச்சி போன்ற தேவன் சொன்ன அனைத்தும் நம் கண்களுக்கு முன்பாக நடந்து கொண்டிருக்கிறது.  இனியும் காலம் செல்லாது.

 


4. கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம்:

மத்தேயு 24: 9

          அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலை செய்வார்கள்.  என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

          இன்று அநேக கிறிஸ்தவர்கள் துன்பப் படுத்தப்படுகிறார்கள்.   கிறிஸ்தவர்களை துன்புறுத்துகின்ற அரசியல்வாதிகளும், அரசியல் தலைவர்களும் அநேகமாக எழும்பியுள்ளார்கள்.   அவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மிஷனெரிகள் உருவாக்கின பள்ளியில் படித்து, அவர்களிடம் இருந்து அநேக நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்கள்.  இன்று இந்தியாவில் அநேக சிறப்பு மிக்க நல்ல நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்துவை அறிவிக்க வந்த கிறிஸ்தவர்களால் மட்டுமே.   அவர்கள் நமக்குத் தந்த பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தேவாலயங்கள் அதற்கு சான்றாக அமைந்துள்ளது.    கிறிஸ்தவத்தை ஒழிக்க வேண்டும், கிறிஸ்துவை அறிவிக்கிறவர்களை ஒடுக்க வேண்டும் என்று நினைக்கிற அனைவருமே கிறிஸ்தவ பள்ளிக் கல்லூரிகளில் பயின்றும், கிறிஸ்தவ மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் இருக்கிறார்கள்.   இவர்களுக்கு கிறிஸ்தவம் தேவையில், ஆனால் கிறிஸ்தவர்கள் உருவாக்கியவை மட்டும் தேவை. 

          வெளி மாநிலத்தில் கிறிஸ்துவை அறிவிக்க சென்ற ஒரு நபரை அங்கு உள்ள தலைவர்கள் பிடித்து, உயிருடனே அவருடைய இருதயத்தை அறுத்து எடுத்த நிகழ்வு நம் அறிந்ததே.

          ஒடிஷா மாநிலத்தில் கிறிஸ்துவை அறிவிக்க சென்ற கிரகாம்ஸ்டென்ஸ் அவர்களையும், அவர்கள் இரண்டு மகன்களையும் காரில் வைத்து, உயிருடன் எரித்த நிகழ்வும் நாம் அறிந்தே. 

          இன்று நமது தமிழகத்திலும் அநேக இடங்களில் சில மதத்தலைவர்கள் தேவாலயங்கள், ஜெப ஆலாயங்களுக்குள் நுழைந்தும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் தேவ ஊழியர்களை கைநீட்டி அடித்தும் வருகிறார்கள்.   இவை அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.   கிறிஸ்தவத்தின் தாரகமந்திரம் என்னவென்றால், கிறிஸ்தவத்தை ஒழிக்க வேண்டும் என்று எவ்வளவு தூரம் முயற்ச்சிகிறார்களோ, அந்த அளவு வளர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

          கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் வரும் என்று தேவன் சொன்னார்.  இதுவும் நம் கண்களுக்கு முன்பாக நடந்து கொண்டிருக்கிறது.

 

 

5. கள்ள தீர்க்கதரிசிகள்:

மத்தேயு 24: 11

          அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

தீர்க்கதரிசி:

          தீர்க்கதரிசி என்றால் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை ஆண்டவரின் உதவியோடு முன்னதாகவே அறிவிக்கின்ற ஒரு மனிதன். 

          முற்காலத்தில் தீர்க்கதரிசிகளை கடவுள் ஜனங்களை எச்சரிப்பதற்காகவும், கடிந்து கொள்வதற்காகவும், ஜனங்களை நல்வழிப்படுத்துவதற்காகவும், தமக்கு நேராக அவர்களை திருப்புவதற்காகவும், உதவி செய்வதற்காகவும், ஆசீர்வதிப்பதிற்காகவும் பயன்படுத்தினார்.

எ.கா: சாமுவேல், நாத்தான், எலியா, எரேமியா, யோனா,…. மல்கியா

 

கள்ள தீர்க்கதரிசிகள்:

          முற்காலத்தில் அநேக காரியங்களுக்காக தீர்க்கதரிசிகளை பயன்படுத்தின கடவுள்,  தற்போது ஆசீர்வதிக்க மட்டுமே பயன்படுத்துவரா?  ஏன் எந்த ஒரு தீர்க்கதரிசியும் ஜனங்களை எச்சரிப்பதில்லை.   கிறிஸ்தவர்களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  கள்ள தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

          கடைசி காலத்தில் கள்ளதீர்க்கதரிசிகள் எழும்புவார்கள் என்று ஆண்டவர் சொன்னது இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

 

6. அன்பு தனிந்துபோகும்:

மத்தேயு 24: 12

          அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தனிந்துபோம்.

          மனிதர்களிடம் அன்பு குறைந்து கொண்டிருக்கிறது.   பணத்திற்காக எதையும் செய்ய தயாராகிவிட்டான் மனிதன்.   சொத்திற்கு ஆசைப்பட்டு (பணம், நகை, நிலம்) குடும்பத்தில் உள்ளவர்களே ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள்கிறார்கள்.

          உண்மையான அன்பு மனிதர்களிடம் இல்லாமல் போய்விட்டது.   பணம் இருந்தால் போம், எதையும் சாதித்துவிடலாம் என்ற துணிச்சல் வந்த விட்டது.   ஆண்டவர் சொன்ன காரியங்கள் நம் கண்களுக்கு முன்பாக நடந்து கொண்டிருக்கிறது. 




7. முடிவு எப்போது வரும்:

மத்தேயு 24: 14

          ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும் அப்பொழுது முடிவு வரும்.

          உலகில் உள்ள எல்லோரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின் முடிவு வரும் என்று கடவுள் சொல்லவில்லை.  உலகில் உள்ள அனைவருக்கும் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்தவுடனே முடிவு வரும் என்று சொல்லுகிறார்.

          2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவைப் பற்றி அநேகருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.  ஏனெனில் அப்பொழுது தான் சீஷர்கள் கிறிஸ்துவைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்கள்.  ஆனால் இன்று கிறிஸ்தவம் உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது.  கிறிஸ்துவைப் பற்றி எனக்கு தெரியாது, கிறிஸ்தவம் இருப்பதே எனக்குத் தெரியாது என்று யாராலும் சொல்ல முடியாது. 

எ.கா: ஒரு பள்ளி, கல்லூரி, நிறுவனம் எங்கு சென்றாலும் நுழைவுப் படிவத்தில் நமது பெயர், முகவரியோடு சேர்ந்து எந்த மதம் என்று கேட்பார்கள்.  அந்த பிரிவில் கிறிஸ்தவம் வருகிறது.  எனவே கிறிஸ்தவத்தைப் பற்றி எனக்கு தெரியாது என்று எவரும் சாக்குபோக்கு சொல்ல முடியாது.  ராஜ்யத்தின் இந்த சுவிசேஷம் பூலோகம் எங்கும் அறிவிக்கப்பட்டு விட்டது. 

          தேவன் சொன்ன அனைத்து அடையாளங்களும் நம் கண்களுக்கு முன்பாக இப்போது நடந்து வருகிறது.   இனியும் காலம் செல்லாது.  

          கடவுளின் இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட ஆயத்தப்படுத்துவோம்.  நம் குடும்பத்தில் உள்ளவர்கள், உற்றார், உரவினர், நண்பர்களை ஆயத்தப்படுத்துவோம்.   கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் காணப்படுவோம்.

          ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.