அருளுரை தலைப்பு
பெந்தெகோஸ்தே திருநாள்
பெந்தெகோஸ்தே என்பது ஐம்பதைக் குறிக்கும் நாள் ஆகும். பஸ்கா பண்டிகைக்கு பின்பு வரும் ஐம்பதாம் நாள் அறுவடைத் திருநாளாக இஸ்ரவேலர்கள் அனுசரிப்பார்கள். இந்த அறுவடைத் திருநாளைத் தான் கிரேக்கப் சொல்லாடலில் பெந்தெகோஸ்தே திருநாள் என்று அழைக்கிறார்கள்.
இந்த அறுவடைத் திருநாளில் கோதுமை அறுப்பின் முதல் பலனை ஆண்டவருக்குக் காணிக்கையாகப் படைப்பார்கள்.
இஸ்ரவேலர்களின் முக்கிய ஏழு பண்டிகைகள்
1. பஸ்கா பண்டிகை
2. புளிப்பில்லாத அப்பப்பண்டிகை
3. முதற்கனி பண்டிகை (அல்லது) முதற்பலன் பண்டிகை
4. பெந்தேகோஸ்தே பண்டிகை
5. எக்காளப் பண்டிகை
6. பாவ நிவிர்த்திப் பண்டிகை
7. கூடாரப் பண்டிகை
கேள்வி 1
எந்த நாள் பஸ்கா பண்டிகை?
லேவியராகமம் 23:5
முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்கையும்,
முதல் மாதம் 14-ஆம் தேதி யூதர்கள் பஸ்கா பண்டிகையை அனுசரிக்கிறார்கள். இந்த பண்டியன்று தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். பஸ்கா பண்டிகையன்று இயேசு கிறிஸ்து ஓர் பஸ்கா ஆடாக சிலுவையில் அறையப்பட்டார்.
கேள்வி 2
பரிசுத்த ஆவியானவருக்காக சீஷர்கள் எத்தனை நாள் காத்திருந்தார்கள்.
விடை: ஏழு நாள் காத்திருந்தார்கள்.
பஸ்கா பண்டிகையன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழந்தார்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாற்பது (40) நாள் சீடர்களுக்கு காட்சியளித்தார். நாற்பதாம் நாள் பரமேறும்போது பரிசுத்த ஆவியைப் பெறும் வரையிலும் எருசலேமில் காத்திருங்கள் என்று சொல்லுகிறார். (அப்போஸ்தலர் 1:3-5)
1. சபையின் பிறந்த நாள் (பெந்தெகோஸ்தே திருநாள்)
இயேசுவானவர் பரமேரி பின்பு, ஏழாம் நாள் பெந்தெகோஸ்தே பண்டிகை வந்தது. இந்த நாளில் சீடர்கள் அனைவரும் ஒருமனப்பட்டு ஒரு இடத்தில் கூடி வந்திருந்தார்கள். அந்த நாளில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 2:4
அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்டியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
இந்த நாளைத் தான் சபையின் பிறந்த நாளாக நாம் கொண்டாடி வருகிறோம்.
இந்த வசனத்தை இரண்டு பகுதிகளாக நாம் பிரிக்க வேண்டும்.
முதல் பகுதியில் கூடியிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். இந்த நாள் வரை இஸ்ரவேலில் வாழ்ந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்படவில்லை.
பஸ்கா பண்டிகையை அனுசரிக்கும்படியாக உலகம் எங்கும் வாழுகின்ற யூதர்கள் எருசலேமிற்கு வருவார்கள். ஐம்பது நாட்களும் எருசலேமில் தங்கியிருந்து
1. பஸ்கா பண்டிகை,2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை,3. முதற்கனி பண்டிகை,4. பெந்தேகோஸ்தே பண்டிகை
என நான்கு பண்டிகைகளையும் கொண்டாடிவிட்டு, தங்கள் சொந்த நாடுகளுக்கு புறப்படுவார்கள்.
இப்படி அவர்கள் புறப்பட தயாரான நிலையில் பரிசுத்த ஆவியானவர் கூடியிருந்த அனைவருக்கும் வேறு வேறு பாஷைகளைக் கொடுக்கிறார். எனவே, பல பாஷைகளை அவர்கள் பேசினார்கள்.
இதன் மூலமாக கிரேக்க மொழி தெரிந்தவர்களுக்கு மட்டும் அல்ல, கிரேக்க மொழி அறியாதவர்களும் நற்செய்தியை அறிந்துகொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:9-11)
இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விட்டார். பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இருக்கிறார் என்பதை நான் எவ்வாறு புரிந்துகொள்வது.
யோவான் 16:7,8
7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்.
8. அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
நான் தவறு செய்யும்போது, நான் கடவுளுக்கு விரோதமாய் செயல்படும்போது, நான் தவறு செய்கிறேன் என்ற உணர்வு எனக்குள் வருமானால், பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இருக்கிறார் என்று பொருள்.
இன்று பலர் அந்நிய பாஷை பேசினால் தான் பரிசுத்த ஆவியார் எனக்குள் வருவார் என்று தவறாக நினைக்கிறார்கள். அப்படி அந்நிய பாஷை பேசுவது தான் ஆவியானவர் எனக்குள் இருக்கிறார் என்று பொருள்படும் என்று நினைத்தால், அப்போஸ்தலர் 2:2,3 வசனங்களையும் நாம் படிக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 2:2,3
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.
இந்த இரண்டு நிகழ்வுகளும் நிகழ்ந்த பின்பே, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டார். இந்த இரண்டு நிகழ்வும் இன்று நடைபெறுகிறதா? என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது.
இயேசு கிறிஸ்து பல இடங்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்தாலும், சபை என்ற அமைப்பை இயேசு கிறிஸ்து துவங்கவில்லை. சபை என்ற அமைப்பு, தூய ஆவியானவராலேயே துவங்கப்பட்டது. எனவே தான் பெந்தேகோஸ்தே திருநாளை சபை பிறந்த நாள் என்று சொல்லுகிறோம்.
2. சத்தியம் வளர்ந்த நாள்
பேதுருவின் முதல் அருளுரை (அப்போஸ்தலர் 2:14-36)
பேதுரு இதற்கு முன்பதாக எந்த இடத்திலும் பிரசங்கம் செய்ததாக திருமறையில் இல்லை. இயேசு கிறிஸ்து எதையாகிலும் செய்ய நினைக்கும்போது அதற்கு தடையாக இருப்பவர் இந்த பேதுரு.
1. நான் பாடுபடப்போகிறேன் என்று இயேசு சொன்னபோது, இவைகள் உமக்கு நேரிடக்கூடாது என்று சொன்னவர் பேதுரு.
2. மூன்று முறை மறுதலித்தவர் பேதுரு.
3. பேதுருவே என்மீது அகாப்பே (agapy) அன்பு கொண்டுள்ளாயா? என்று இயேசு கேட்டபோது, இல்லை ஆண்டவரே பிளேயோஸ் அன்பு தான் உள்ளது என்று சொன்னவர் இந்த பேதுரு. இந்த பேதுருவின் முதல் அருளுரையைக் கேட்ட மக்கள் இவ்வாறாக சொல்லுகிறார்கள்.
அப்போஸ்தலர் 2:37
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்.
இவ்வளவு நேரமாக இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று கேலி செய்தவர்கள், இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்படியானால், பேதுருவின் அருளுரை எவ்வளவு சிறப்பானதாக இருந்திருக்கும் என்று நாம் யோசித்துப் பார்ப்போம்.
இதை வைத்து பேதுருவுக்குள் யார் இருக்கிறார் என்று நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இருக்கிறார் என்றால் அதை என் பேச்சிலும், செயலிலும் நான் வெளிப்படுத்த வேண்டும். அந்நிய பாஷைகள் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்று ஆண்டவர் விரும்பவில்லை.
சபையிலே அந்நியபாஷையில் ஜெபித்துவிட்டு, வீட்டிலே தகாத வார்த்தைகளை நான் பேசுவேனானால், ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வாரா? நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
பெந்தேகோஸ்தே நாள் சத்தியம் வளர்ந்த நாள் என்று பார்த்தோம். பேதுருவின் அருளுரையைக் கேட்டு, அன்றைய தினம் சுமார் 3000 பேர் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார்கள்.
அப்போஸ்தலர் 2:41
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
3. சமத்துவம் பிறந்த நாள்
பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் அனைத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள் என்று வாசிக்கிறோம்.
அப்போஸ்தலர் 2:44
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாக வைத்து அநுபவித்தார்கள்.
எதையும், யாரும் இவை என்னுடையவை, இவை உண்ணுடையவை என்று சொல்லவில்லை.
அப்போஸ்தலர் 2:46,47
46. அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்தில் அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு, மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
47. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள்.
1. தினமும் தேவாலயத்திற்கு கூடி வந்தார்கள்
2. அனைவருடைய வீட்டிலும் உணவு பரிமாரினார்கள். (ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடைய வீட்டில் உணவு உண்டார்கள்)
3. மகிழ்ச்சி
4. கபடமில்லாத இருதயம் இருந்தது
5. கடவுளை துதித்தார்கள்
6. மக்களிடத்தில் தயவு பெற்றிருந்தார்கள்
இவையனைத்தும் இன்று நமது சபைகளில் நடைபெறுவது இல்லை. நமது சபையில் மாத்திரம் அல்ல, எந்த சபையிலும் நடைபெறுவது இல்லை.
ஆதி திருச்சபை இப்படியாக வாழ்ந்ததின் விளைவாக இரட்சிக்கப்படுகிறவர்களை கடவுள் அனுதினமும் சபைகளிலே சேர்த்துக் கொண்டு வந்தார்.
நம்முடைய சபைகளில் சமத்தும் இருக்கிறதா? அனைவருக்கும் அனைத்தும் என்ற கோட்பாடு, கோட்பாட்டில் மட்டும் உள்ளதா? நடைமுறையிலும் இருக்கிறதா? என்று நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
ஆதி திருச்சபையில் பெந்தேகோஸ்தே திருநாள் என்பது,
சபை பிறந்த நாள்
சத்தியம் வளர்ந்த நாள்
சமத்துவம் நிறைந்த நாள் என்று கற்றுக்கொண்டோம்.
பெந்தேகோஸ்தே திருநாளை கொண்டாடிய நாம் எப்படி இருக்கிறோம். சிந்திப்போம் செயல்படுவோம்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.