Type Here to Get Search Results !

சிகரம் | The Summit | JC VBS Sunday Service Sermon | Jesus Sam

தலைப்பு: சிகரம் (The Summit)

பிலிப்பியர் 3:12
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.

திருவிவிலியம்
கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து ஓடுகிறேன்.

சிகரம் என்பது, இலக்கு என்பது நாம் அதை அடைந்துவிட்டேன் என்று என்னால் சொல்லமுடியாது, கடவுள் என்னை அழைத்த நோக்கத்தை உணர்ந்தவனாக அதை நோக்கி நாம் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று பவுல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரு நோக்கம் உண்டு, ஒரு குறிக்கோல் உண்டு. நோக்கம் இல்லாமல் கடவுள் நம்மில் எவறையும் படைக்கவில்லை.

இன்று உலகில் பல கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. இந்த ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கும் ஒவ்வொரு நோக்கம் உண்டு. இன்றும் வானத்தில் என்ன நிகழுகின்றது? சந்திரனில் என்ன நிகழ்கின்றது? சூரியன் எவ்விதமான மாற்றத்திற்குள்ளாகி வருகிறது? போன்ற ஆராய்ச்சிகள் பல கோடிகள் செலவு செய்து மேற்கொள்ளப்படுகிறது. இவை அனைத்திற்கும் ஏதோ ஒரு நோக்கம் உண்டு. காரணம் உண்டு.

மனிதன் கண்டுபிடித்த, கண்டுபிடித்துக்கொண்டு இருக்கின்ற ஒரு பொருளுக்கே ஒரு நோக்கம் இருக்கும்பொழுது, உங்களையும் என்னையும் படைத்த ஆண்டவர், எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் நம்மைப் படைத்து இருப்பாரா? கடவுள் நம்மைப் படைத்ததற்கு ஒரு நோக்கம் உண்டு. கடவுள் இந்த பகுதியில் நம்மை வாழ வைத்திருப்பதற்கு ஒரு நோக்கம் உண்டு. இந்த திருச்சபையில் கடவுள் என்னை ஓர் அங்கத்தினராக வைத்திருப்பதற்கு ஒரு நோக்கம் உண்டு. அந்த நோக்கத்தை நான் அறிந்து, அதனடிப்படையில் செயல்படுகிறேனா? என்று சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

திருமறையில் கடவுளின் நோக்கத்தை நோக்கியப் பயணத்தில் செயல்பட்ட பல மனிதர்களை நாம் பார்க்க முடியும்.

1. யோசேப்பு
யோசேப்பு என்ற மனிதர் கடவுள் தனக்கு கொடுத்த நோக்கத்தை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் பிரயாசப்படுகிறார். இந்த பிரயாசத்தில் பல போராட்டங்களையும், தோல்விகளையும் சந்திக்கிறார். பல அவமானங்களை சந்திக்கிறார். பல துரோகங்களைச் சந்திக்கிறார்.

யோசேப்பு சிறுவனாக இருக்கும்போது, யோசேப்பின் நோக்கம் என்ன என்பதை கடவுள் வெளிப்படுத்திவிட்டார். ஆனால், அதற்கு இடையில் உள்ள பாடுகளைக் குறித்தும், போராட்டங்களைக் குறித்தும், கடவுள் யோசேப்பிற்கு செல்லவில்லை.

நம்முடைய வாழ்விலும் ஆண்டவர் ஓர் நோக்கத்தைக் கொடுத்திருப்பார். அந்த நோக்கத்தில் நாம் பயணிக்கும்போது, பல போராட்டங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். நம்முடைய பயணத்தில் மேடுகள், பள்ளங்கள், உயர்வுகள், தாழ்வுகள், அவமானங்கள், தோல்விகள், பெலவீனங்கள் இவ்வாறு பல ஏற்படலாம். இவற்றைப் பார்க்கும்போது, ஒருவேலை நமக்குள்ளாக நான் சரியாகத்தான் சென்றுகொண்டு இருக்கிறேனா? என்ற அச்சம் ஏற்படுவது உண்டு.

நமக்கு யோசேப்பின் வாழ்க்கை ஓர் நல்ல முன் உதாரணம். யோசேப்பு கடவுள் தனக்குக் கொடுத்த நோக்கத்தை நோக்கிய பயணத்தில் பல பாடுகளை, போராட்டங்களை, துரோகங்களை சந்திக்கிறார். அவற்றின் மத்தியிலும் யோசேப்பு கடவுளை மறந்துபோகவில்லை.

யோசேப்பின் பாடுகள்
  • சகோதரர்கள் பொறாமை கொல்லுகிறார்கள்.
  • பொறாமையினால் கொலை செய்யவும் தயாரானார்கள்.
  • அடிமையாக விற்றுப்போட்டார்கள்.
  • போத்திபாரின் வீட்டில் அடிமை வாழ்வு
  • பொய் குற்றத்தினால் சிறைச்சாலை வாழ்வு
இவ்வளவு பாடுகளின் மத்தியிலும், போராட்டங்களின் மத்தியிலும் வாழ்ந்த யோசேப்பை ஆண்டவர் எகிப்து நாட்டின் அதிகாரியாக மாற்றுகிறார்.

யோசேப்பின் பண்பு
யோசேப்பு தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பழிவாங்குவதற்காக பயன்படுத்தவில்லை. யோசேப்பு எகிப்து நாட்டின் அதிகாரியாய் மாறுகிறார். யோசேப்பினிடத்தில் தானியம் வாங்கும்படியாக யோசேப்பிற்கு துரோகம் செய்த சகோதரர்கள் வருகிறார்கள். யோசேப்பு நினைத்திருந்தால், அவர்கள் யோசேப்பிற்கு செய்த துரோகத்திற்காக அவர்களை பழிவாங்கியிருக்கலாம். ஆனால், யோசேப்பு அப்படிச் செய்யவில்லை, மாறாக அவர்களை மன்னிக்கிறார்.

ஆதியாகமம் 50:20
நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைதீர்கள். தேவனோ, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.

யோசேப்பு தன் சகோதரர்கள் தனக்குச் செய்த தீமையை நன்மையாகப் பார்த்தார். நாம் எப்படி பார்க்கிறோம்.

நீங்கள் எனக்குச் செய்த தீமை, தீமை அல்ல, அது நன்மைக்கே என்று நமக்கு தீமை செய்தவர்களைப் பார்த்து, நம்மால் சொல்ல முடியுமா? சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

யோசேப்பு கடவுள் தனக்கு கொடுத்த நோக்கத்தை, திட்டத்தை எப்படி வெளிப்படுத்துகிறார் என்றால், எகிப்தின் அதிகாரியாக மாறியதன் மூலமாக அல்ல, அனைத்து அதிகாரங்கள் இருந்த போதிலும், அதிகாரத்தை பழிவாங்கும் கருவியாக அல்ல, நன்மை செய்யும் கருவியாக பயன்படுத்துகிறார்.

கடவுள் என்னை நம்பி கொடுத்த அதிகாரத்தை நான் எவ்வாறு பயன்படுத்துகிறேன். நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

2. தாவீது
கடவுள் தாவீதைக் குறித்த நோக்கத்தை சிறுவயதிலேயே தாவீதுக்கு வெளிப்படுத்தினார். தாவீது சிறுவனாய் இருக்கும்போது, வனாந்தரத்திலே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீதுக்கு சாமுவேல் என்னும் இறைவாக்கினர் மூலமாக அழைப்பு வருகிறது, இஸ்ரவேல் நாட்டின் அதிகாரியாக அருட்பொழிவு செய்யப்படுகிறார்.

யோசேப்பைப் போலவே தாவீதின் திட்டத்தையும் கடவுள் சிறுவயதிலேயே வெளிப்படுத்திவிட்டார். ஆனால், அதை அடைவதற்கான போராட்டங்களைக் குறித்தும், பாடுகளைக் குறித்தும் சொல்லவில்லை.

தாவீதின் பாடுகள்
சவுல் அரசன் தாவீதைக் கொலை செய்வதற்கு சுமார் 18 முறை முயற்சி செய்கிறார். எந்த காரணமும் இல்லாமல் என் மானமாரே என்னைக் கொலை செய்ய வகை தேடுவார் என்று தாவீதிற்குத் தெரியாது.

சவுலுக்கு பயந்த தாவீது காத்தின அரசன் ஆகீஸின் முன் பைத்தியக்காரனைப்போல வாழ்ந்ததையும் திருமறையில் படிக்கிறோம். (1 சாமுவேல் 12:12,13)

இப்படி பல போராட்டங்களை சந்தித்த தாவீது, சவுல் அமலேக்கியர்களால் கொலை செய்யப்பட்ட பிறகு, இஸ்ரவேலின் இரண்டாவது ராஜாவாக மாறுகிறார். அதன் பின்பும் அவருக்கு பல பாடுகள் உபத்திரவங்கள் இருந்தது.

இஸ்ரவேலின் முதல் அரசர் சவுல். இரண்டாம் அரசர் தாவீது. மூன்றாம் அரசர் சாலொமோன். திருமறையிலே சாலொமோனின் நாட்களில் இஸ்ரவேல் நாட்டில் போர் இல்லாமல் இருந்தது என்று படிக்கிறோம். (1 நாளாகமம் 22:9) அதற்கு அடித்தளமிட்டவர் இந்த தாவீது. 

தனது காலத்திலேயே சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் இந்த தாவீது. தாவீது ஒரு போருக்குச் செல்வாரானால், நிச்சயம் அந்த போரில் வெற்றி பெறுவார். தாவீது போரில் தோற்றுப்போனதாக வரலாறு இல்லை.

காரணம்
தாவீது ஒரு பெரிய யுத்த வீரன். எவ்வளவு பெரிய சேனை தனக்கு முன்பதாக வந்தாலும், தாவீது தனி மனிதனாக அந்த சேனைக்குள் பாய்ந்து, அந்த சேனையை முறியடித்து, தோற்கடிக்கும் அற்றல் படைத்தவர். ஆனால், தனக்கு எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் கடவுள் ஒருவரை மாத்திரமே நம்பியிருந்தார்.

2 சாமுவேல் 22:30
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன். என் தேவனாலே நான் ஒரு மதிலைத் தாண்டுவேன்.

தாவீதின் செயல்
கடவுளால் தெரிவு செய்யப்பட்ட இந்த தாவீது என்ன செய்தார் என்றால்,

2 சாமுவேல் 7:2
ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.

மோசேயின் காலத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு இந்த உடன்படிக்கை பெட்டி கொண்டுவரப்பட்டது, அந்த நாட்கள் முதல் பல பரிசுத்தவான்களை கடவுள் எடுத்து பயன்படுத்தினார். ஆனால், ஒருவர் கூட கூடாரத்தில் இருக்கும் உடன்படிக்கைப் பெட்டியை ஒரு அழகிய கோவில் ஒன்றைக் கட்டி வைக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை. இந்த எண்ணம் முதல் முறையாக தாவீதுக்கே தோன்றியது.

கடவுள் கொடுக்கும் சான்று
அப்போஸ்தலர் 13:22
பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன்…..

முழு திருமறையிலும் கடவுள் ஒரு மனிதனை என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று சொல்லுகிறார் என்றால், அது இந்த தாவீது அரசனைப் பார்த்து தான். காரணம், கடவுளுக்காக பெரிய காரியம் ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இந்த தாவீதுக்குள்ளாக இருந்தது.

வில்லியம் கேரி
வில்லியம் கேரி என்ற அருள்பணியாளர் சொல்லும்போது, “கிறிஸ்துவுக்காக பெரிய காரியங்களைச் செய், கிறிஸ்துவிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்” என்று சொல்லுகிறார்.

நாம் கிறிஸ்துவிடமிருந்து பெரிய காரிங்களை எதிர்பார்க்கின்றோம், கிறிஸ்துவுக்காக நான் என்ன செய்திருக்கிறேன் என்றால், அது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.

தாவீது கடவுள் தன்னை அழைத்த நோக்கத்தை நிறைவேற்றி முடித்தார் என்று நான் நம்புகிறேன். நாம் எப்படி இருக்கிறோம்.

3. பேதுரு
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திருப்பணி செய்த நாட்களில் தன்னோடு பயணிக்கும்படியாக, இந்த திருப்பணியைத் தொடர்ந்து நிறைவேற்றும்படியாக 12 மனிதர்களைத் தெரிவு செய்தார்.

அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் இந்த பேதுரு. எனது மரணத்திற்குப் பின்பு, இந்த திருப்பணியை பேதுரு எடுத்துச் செல்வார் என்று ஆண்டவர் நம்பினார். மற்றவர்களைவிட பேதுருவை ஆண்டவர் நம்பவதற்குக் காரணம், பேதுரு மற்ற எல்லோரையும்விட வயத்தில் மூத்தவராக இருந்தார்.

அப்படிப்பட்ட பேதுரு, இயேசு கிறிஸ்து மரித்துவிட்டார் என்று தெரிந்த மாத்திரத்தில், தான் மீன்பிடித்த அந்த தொழிலைப் பார்க்க செல்கிறார்.

யோவான் 21:3
சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான்.

ஆண்டவர் தன்னை அழைத்த நோக்கத்தை மறந்தவராக பேதுரு, மீண்டும் தான் செய்து வந்த மீன்பிடித்தல் தொழிலை செய்ய ஆரம்பித்துவிட்டார். தனது நண்பர்களையும் சேர்த்துக் கொண்டார்.

ஆண்டவர் எவ்வளவாய் வேதனைப்பட்டிருப்பார். இந்த சீமோனின் பெயரை ஆண்டவர் பேதுரு என்று மாற்றியிருந்தார். பேதுரு என்றால் கூழாங்கல் என்று பொருள். தாவீதின் கையில் இருந்த கூழாங்கல்லைப்போல நீ என் கையில் பயன்படும் கூழாங்கள் என்று சொல்லிதான் ஆண்டவர் இந்த பெயரை சீமோனுக்கு கொடுத்தார். அன்று முதல் ஆண்டவர் சீமோனை பேதுரு என்றே அழைத்தார்.

ஆனால், யோவான் 21:16-ல் இயேசு பேதுரு என்று அழைக்கவில்லை.

யோவான் 21:15
அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

இங்கே இயேசு தான் கொடுத்த பேதுரு என்ற பெயரைச் சொல்லாமல், சீமோனே என்று அழைப்பதை நாம் பார்க்க முடியும்.

நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா? என்ற கேள்விக்கு, பேதுரு, இல்லை என்றே பதில் சொல்லுகிறார். இல்லை ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறார்.

கிரேக்க பதத்தில் அன்பைக் குறிக்கும் பல சொற்கள் உள்ளன. அதில் முதல் தரமா அன்பு அகாப்பே (Agape) அன்பே. இரண்டாவது அன்பு பிளேயோஸ் (Phileo) அன்பு.

அகாப்பே(Agape)
எதையும் எதிர்பார்க்காத, ஒரு தன்னலமற்ற அன்பு.

பிளேயோஸ் (Phileo)
சகோதரத்துவமான அன்பு.

இங்கே இயேசுவானவர் சீமோனே உன்னிடத்தில் அந்த அகாப்பே அன்பு உள்ளதா? என்று கேட்கிறார். அதற்கு பேதுருவின் பதில் என்னவென்றால், இல்லை ஆண்டவரே, என்னிடம் பிளேயோஸ் அன்பு தான் இருக்கிறது என்பதை நீர் அறிவீர் என்று சொல்லுகிறார்.

ஆண்டவர் மிகவும் உடைந்துபோனவராக, சரி மகனே என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்று சொல்லுகிறார். ஆட்டுக்குட்டி என்பது சிறுவர் ஊழியத்தைக் குறிக்கிறது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் பேதுருவுக்கு முதல் முதல் கொடுத்த திருப்பணி சிறுவர் ஊழியம் ஆகும்.

இரண்டாவது முறையாக ஆண்டவர் பேதுருவைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கிறார். அப்பொழுதும் பேதுரு அன்பு (அகாப்பே) இல்லை ஆண்டவரே, நேசம் (பிளேயோஸ்) தான் இருக்கிறது என்று சொல்லுகிறார்.

மூன்றாவது முறை ஆண்டவர் கேள்வியை மாற்றுகிறார்.
யோவான் 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு என் ஆடுகளை மேய்பப்பாயாக என்றார்.

இந்த முறை ஆண்டவர் உன்னிடத்தில் அகாப்பே அன்பு இருக்கிறதா? என்று கேட்காமல், நீர் சொல்லுகிறாயே அந்த பிளேயோஸ் அன்பாவது உன்னிடத்தில் உண்மையானதாக இருக்கிறதா? என்று ஆண்டவர் கேட்கிறார்.

ஒருவேலை பேதுரு இங்கே, ஆண்டவரே நீர் எதிர்பார்க்கின்ற அன்பு (அகாப்பே) என்னிடத்தில் இல்லை என்று சொல்லியிருந்தாலும், ஆண்டவருடனான இந்த உரையாடலுக்குப் பின்பு, பேதுரு தன் வாழ்நாளின் இறுதிவரை ஆண்டவரிடத்தில் அகாப்பே அன்பு கொண்டவராக வாழ்ந்தார்.

பேதுருவின் முதல் பிரசங்கத்தில் 3000 பேர் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

இரண்டாவது பிரசங்கத்தில் 5000 பேர் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

பின் நாட்களில் ரோமப் பேரரசன் நீரோ மன்னனால் பேதுரு கைது செய்யப்படுகிறார். இவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று சொன்னபோது, என் இயேசு நாதரைப் போல சிலுவையில் அறையப்படுவதற்கு நான் எந்த விதத்திலும் தகுதியுள்ளவன் அல்ல. எனவே, என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள் என்று சொல்லுகிறார்.

இப்படியாக தன் வாழ்நாளின் இறுதி வரை கிறிஸ்துவுக்காக அகாப்பே அன்பு கொண்டவராக இந்த பேதுரு வாழ்ந்தார். நான் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

கிறிஸ்து நம்மீது அகாப்பே அன்பு வைத்திருக்கிறார். ஆகவே, கிறிஸ்துவும் நம்மிடத்தில் அந்த அன்பை எதிர்பார்க்கிறார். வெறுமனே பெயர் அளவில் நான் கிறிஸ்துவின் மீது அன்பு வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமா? நமது வாழ்வில் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிறவர்களாக, அவருக்காக பெரிய காரியங்களைச் செய்கிறோமா? சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.