Type Here to Get Search Results !

Day 6 | JC VBS 2026 | காத்திருப்பில் வளர்ச்சி | சிகரம் | The Summit | Jesus Sam

நாள் 6: காத்திருப்பில் வளர்ச்சி

மனன வசனம்


i. ஆண்டு
    1901

ii. இடம்
டோனாவூர், தமிழ்நாடு (Dohnavur, Village in Tamil Nadu)

iii. கதை முக்கிய கருத்து
ஒரு இரவு பிரீனா (Preena) என்ற பயந்துபோன சிறுமி ஓடிவந்து ஏமியிடம் தஞ்சமடைந்தாள். மற்றவர்கள் எச்சரித்த போதிலும் ஏமி அந்தச் சிறுமியைப் பாதுகாப்பேன் என்று துணிச்சலான முடிவை எடுத்தார். இந்த ஒரு தைரியமான செயல் "டோனாவூர் ஐக்கியத்தின்” தொடக்கமாக அமைந்தது.

iv. தலைப்பு செய்தி
ஒருவருக்குச் செய்யும் உதவி பலரது வாழ்க்கையையே மாற்றும்.

v. மையக்கருத்து
இரக்கம், தைரியம், செயல்

vi. நோக்கம்
காத்திருக்கும் காலத்தை வளர்ச்சிக்கும் சேவைக்கும் பயன்படுத்த கற்றுத் தருதல்.

vii. வேதாகம பகுதி
ஆதியாகமம் 40

viii. மனப்பாட வசனம்
ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.


I. நோக்கம்
காத்திருப்பதின் முக்கியத்துவத்தை பிள்ளைகள் உணர செய்ய வேண்டும். காத்திருப்பது என்பது வீண் காலமல்ல என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். காத்திருக்கும் காலத்தை வளர்ச்சிக்கென பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். செயல்படாமல் இருப்பது தவறு என புரிய வைக்க வேண்டும். தனது துன்பத்திலும் பிறருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால் மனமுவந்து பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்

II. இலக்குகள்
  • காத்திருப்பதும் முக்கியம் என்பதை உணர்வது
  • புதிய திறமைகளை வளர்க்க ஊக்கமடைவது
  • துன்பத்திலும் பிறருக்கு உதவ கற்றுக்கொள்வது

III. ஏமி கார்மைக்கேல் : ஒரு கதவு திறக்கிறது
ஒரு இரவு, பிரீனா (Preena) என்ற சிறுமி பயந்துடன் ஓடிவந்து ஏமியிடம் தஞ்சமடைந்தாள். தான் துன்புறுத்தப்பட்ட இடத்திலிருந்து அவள் தப்பித்து வந்திருந்தாள். அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். ஏமி அவளது கதையைக் கேட்டார், அவளை நம்பினார். மற்றவர்கள் எச்சரித்த போதிலும், அந்தச் சிறுமியைப் பாதுகாப்பேன் என்று துணிச்சலான முடிவை எடுத்தார். ஏமியின் அந்த ஒரு தைரியமான செயல், பிற்காலத்தில் பல குழந்தைகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக மாறிய "டோனாவூர் கூட்டமைப்பின்" தொடக்கமாக அமைந்தது. ஒருவருக்குச் செய்யும் உதவி பலரது வாழ்க்கையையே மாற்றும்.

IV. பாடவிளக்கம்
யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூழலில் எகிப்து மன்னனுக்கு அப்பம் தயாரிப்பவனும், உதவியாளரும் எகிப்திய மன்னனுக்கு எதிராகக் குற்றம் செய்தனர். எனவே அவர்கள் இருவரும் யோசேப்பு இருந்த சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருநாள் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டனர். ஒவ்வொரு கனவும் வெவ்வேறு பொருள் கொண்டிருந்தது. காலையில் யோசேப்பு அவர்களிடம் வந்தபோது அவர்கள் கவலையாய் இருக்கக் கண்டார். காரணம் கேட்டபோது "நாங்கள் இருவரும் கனவு கண்டோம் அதை எங்களுக்கு விளக்கிச் சொல்ல யாருமில்லை" என்று பதில் கூறினார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி, "கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்கு உரியதல்லவா? என்னிடம் விவரமாகச் சொல்லுங்கள்” என்றார்.

அதில் ஒருவர் தான் கண்ட கனவை யோசேப்பிடம் பின்வருமாறு கூறினார். ஒரு திராட்சைச் செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன். அந்தத் திராட்சைச் செடியிலே மூன்று கொடிகள் இருந்தது. அது துளிர்க்கிறதாயிருந்தது அதில் பூக்கள் மலர்ந்திருந்தது அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது. பார்வோனுடைய பாத்திரம் என் கையிலே இருந்தது. நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் கனவைக் கூறினார். அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம். மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார். முன்னே அவருக்குப் பானம் கொடுத்து வந்த வழக்கத்தின் படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய் இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவு வைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்க வேண்டும். என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கு நான் தவறு ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்.

மற்றொருவரும் யோசேப்பை நோக்கி: நானும் என் கனவில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின் மேல் இருக்கக் கண்டேன் மேற்கூடையிலே பார்வோனுக்காகச் சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம், கொஞ்சம் இருந்தது. என் தலையின் மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான். அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம். இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார் அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான். மூன்றாம் நாள், பார்வோனின் பிறந்த நாள் விழா. அன்று தன் அலுவலர் அனைவருக்கும் அவன் விருந்து அளித்தான். அந்த அலுவலர் முன்னிலையில் இவர்கள் இருவரையும் அழைத்து வந்தான். அதில் பானங்கொடுக்கிறவனை மீண்டும் அந்தப் பணியில் வைத்தான். மற்றொருவனை கழுமரத்தில் ஏற்றினான். யோசேப்பு அவர்களுக்கு விளக்கிச் சொன்னபடியே இவ்வாறு நடந்தது. ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்து விட்டான்.

V. வாழ்விற்கு படிப்பினை
யோசேப்பு சிறையில் இருந்த காலத்தையும் வீணடிக்காமல் தனது வளர்ச்சிக்கென்று பயன்படுத்திக்கொண்டது போல நாமும் காலத்தை வீணாக கழிக்காமல் நமது வளர்ச்சிக்கென்று அவற்றை பயன்படுத்திக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். புதிய திறமைகளை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். தனது துன்பத்திலும் யோசேப்பு பிறருக்கு உதவியதுபோல நாமும் உதவ பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பொறுமையையும், தைரியத்தையும், இரக்கத்தையும் காத்திருப்பு காலங்களில் கற்றுக்கொள்ள வேண்டும்.

VI. வலியுறுத்த வேண்டியது
  • காத்திருப்பு வீண் காலமல்ல
  • துன்பத்திலும் பிறருக்கு உதவுதல்
  • திறன்கள் எதிர்காலத்திற்கு நம்மை தயார் படுத்துகின்றன

VII. தவிர்க்க வேண்டியது
  • காத்திருப்பை விதி என ஏற்றுக்கொள்ளச் சொல்லுதல்
  • செயலற்ற மனநிலை

VIII. கற்றல் நோக்கம்
  • திறன் வளர்ச்சி
  • சேவை மனப்பான்மை
  • பொறுமை

IX. வழிகாட்டி கேள்வி
  • காத்திருக்கும் காலம் எப்படி கற்றல் காலமாக மாறும்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.