நாள் 10: சிகரத்தின் சேவை
i. ஆண்டு
1931-1951
ii. இடம்
டோனாவூர், தமிழ்நாடு (Dohnavur, Village in Tamil Nadu)
iii. கதை முக்கிய கருத்து
ஒரு விபத்திற்குப் பிறகு ஏமி தனது பிற்கால வாழ்க்கையின் பெரும்பகுதியைப் படுக்கையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து மற்றவர்களை வழிநடத்தினார், புத்தகங்கள் எழுதினார் மற்றும் ஊக்கப்படுத்தினார். பிறருக்காக வாழும் வாழ்க்கையே மிக உயர்ந்த சிகரம் என்பதை அவர் தனது வாழ்வின் மூலம் காட்டினார்.
iv. தலைப்பு செய்தி
அன்பும், சேவையுமே உண்மையான சிகரம்.
v. மையக்கருத்து
பாரம்பரியம், நோக்கம்
vi. நோக்கம்
வாழ்க்கை அனுபவங்களை பிறருக்கு நன்மையாக மாற்ற ஊக்குவித்தல்.
vii. வேதாகம பகுதி
ஆதியாகமம் 50:15-21
viii. மனப்பாட வசனம்
ஆதியாகமம் 50:20
நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள் தேவனோ, இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
I. நோக்கம்
பிள்ளைகள் தங்கள் வாழ்க்கை பயணத்தை குறித்து சிந்திக்க வைக்க வேண்டும். வாழ்வின் அனுபவங்கள் பல படிப்பினைகளை கற்றுக்கொடுக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். அந்த அனுபவங்கள் பிறருக்கு நன்மையாக மாற்ற ஊக்குவிக்க வேண்டும். நன்றியுணர்வு மிக்கவர்களாக இருக்க கற்றுக் கொடுக்க வேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சொல்லி கடந்து விடாமல் அனுபவங்களை நேர்மறையாக ஏற்றுக் கொள்ள பழக்குவிக்க வேண்டும். பிறருக்கு சேவை செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.
II. இலக்குகள்
- தங்கள் வாழ்க்கைப் பயணத்தை சிந்திப்பது
- சேவை செய்ய உறுதி எடுப்பது
- தொடர்ந்து வளர வேண்டிய மனப்பான்மை பெறுவது
III. ஏமி கார்மைக்கேல் : உண்மையான சிகரத்தை அடைதல்
ஒரு விபத்திற்குப் பிறகு, ஏமி தனது பிற்கால வாழ்க்கையின் பெரும் பகுதியைப் படுக்கையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், அவர் தொடர்ந்து மற்றவர்களை வழிநடத்தினார், புத்தகங்கள் எழுதினார் மற்றும் ஊக்கப்படுத்தினார். பிறருக்காக வாழும் வாழ்க்கையே மிக உயர்ந்த சிகரம் என்பதை அவர் தனது வாழ்வின் மூலம் காட்டினார். அன்பும் சேவையுமே உண்மையான சிகரம்.
IV. பாடவிளக்கம்
யோசேப்பின் தந்தை மரணமடைந்த பின்பு யோசேப்பின் சகோதரர்கள் தந்தை மனம் வருந்தக்கூடாது என்பதற்காக இதுவரை நம்மை யோசேப்பு தண்டிக்கவில்லை. இப்போது தந்தை மரணம் அடைந்துவிட்டதால் யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாத் தீமைக்காகவும் நம்மை பழிவாங்குவான் என்று நினைத்து, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி, நாங்கள் செய்த துரோகத்தையும், பாதகத்தையும் நீர் தயவு செய்து மன்னிக்க வேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். யோசேப்பு அதைக் கேட்ட போது அழுதார். சகோதரர்கள் தனக்குச் செய்த துரோகத்தையும் அதின் விளைவாக ஏற்பட்ட துன்பங்களையும் நினைத்து அல்ல, தன் சகோதர் மீது அன்பு கொண்டபடியால் இவ்வாறு அழுதார். பின்பு, அவருடைய சகோதரரும் போய், அவருக்கு முன்பாகத் தாழ விழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள். யோசேப்பு அவர்களிடம் பயப்படாதிருங்கள், நான் தேவனா? நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள் தேவனோ, இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களை ஏற்றுக் கொண்டார். தனக்கு தீமை செய்தவர்களுக்கும் யோசேப்பு நன்மையே செய்தார். அவர்களை தண்டிக்கும் அதிகாரம் இருந்தும் தன் அதிகாரத்தை அவர்களை தண்டிக்க அல்ல, மாறாக அவர்களுக்கு வாழ்வு வழங்கவே பயன்படுத்தினார். மன்னிப்பை வழங்கி அவர்களை அன்போடு ஏற்றுக் கொண்டார்.
V. வாழ்விற்கு படிப்பினை
யோசேப்பு தன் சகோதரரை பழிவாங்குவதற்கான வாய்ப்பு இருந்தபோதும் அவர்களை பழிவாங்காமல் புறக்கணியாமல், அவர்கள் பயத்துடன் தன்னை தேடிவந்து மன்னிப்பு கேட்டபோது அவர்கள் செய்த தவற்றை சுட்டிக்காட்டவோ, அவர்கள் மனம் புண்படும்படியான எந்த செயலையுமே செய்யாமல் அவர்களிடம் அன்பு காட்டினார். அவர்களை அரவணைத்துக் கொண்டார், அவர்களுக்கு சேவை செய்தார். அவர்களுக்கு மீண்டும் வாழ்வு வழங்கினார். இந்த அன்பும், சேவையும், இரக்கமும், அக்கறையும் கிறிஸ்தவ நற்பண்புகள். நமது வாழ்வின் இலக்கு பிறருக்கு பயன் தரும் வாழ்வு வாழ்வதே என்பதை உணர்ந்து சிகரத்தை அடைவோம். ஆண்டவரிடம் நம்மை அர்ப்பணிப்போம்.
VI. வலியுறுத்த வேண்டியது
- அனுபவங்கள் பிறருக்கு நன்மை தர வேண்டும்
- நன்றியுணர்வு
- நீண்டகால பார்வை
VII. தவிர்க்க வேண்டியது
- "எல்லாம் நல்லதற்கே" என்ற எளிய விளக்கம்
- கடந்த வலியை மறைத்தல்
VIII. கற்றல் நோக்கம்
- சேவை உறுதி
- வாழ்க்கை பாரம்பரியம்
- சமூக மாற்றம்
IX. வழிகாட்டி கேள்வி
- குழந்தைகள் தங்கள் பயணத்தை பிறருக்கான ஆசீர்வாதமாக மாற்றுவது எப்படி?





இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.