Type Here to Get Search Results !

JC VBS 2024 | Day 5 | மறக்க வேண்டும் என எண்ணுகிறேன் | Jesus Sam

நாள் 5: மறக்க வேண்டும் என எண்ணுகிறேன்
(பிலிப்பியர் 3:13)
==================
நோக்கம்:
பிள்ளைகள் தங்கள் பழைய வாழ்வை மறக்க வேண்டும், பழைய நினைவுகள், பழக்கங்கள் இவைகளை மறக்க வேண்டும்.  இதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உதவி செய்கிறார், எனவே தங்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்

வேதபகுதி:
    ஆதியாகமம் 25:21-34
    ஆதியாகமம் 27 & 32 & 33 (யாக்கோபின் ஒப்படைப்பு)

மனன வசனம்:
ஏசாயா 43:18
    முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். 


பாட சுருக்கம்:
யாக்கோபு முன்பு ஏமாற்றுபவராக இருந்தும் பின்னாளில் கடவுளிடம் ஒப்புரவு ஆனதால் அவர் தன் தவறுகளை உணர்ந்து மன்னிப்பை பெற விரும்பி; பழைய  “ஏமாற்றி பெறுகிற வாழ்வை” மறந்து தன்னுடையவைகளை “பரிசாக கொடுக்கும் எண்ணம் கொண்ட வாழ்வை” பெற்றது போல பிள்ளைகளும் தங்கள் வாழ்வில் கடவுளிடம் ஒப்புரவாகி, தாங்கள் செய்யும் தவறுகள் நிறைந்த பழைய வாழ்வை மறந்து அவற்றுக்கு நேர் எதிராக நன்மை செய்யும் புதிய வாழ்வை பெற கடவுளிடம் தங்கள் வாழ்வை ஒப்படைக்க வேண்டும்.

கவன ஈர்ப்பு:
ஒரு நீளமான முள்ளை (நாட்டு கரு வேலம் முள்) எடுத்து காண்பித்து, ”இது என்ன?” என்று கேட்கவும்.  பின்பு இந்த முள் உங்கள் செருப்பில் குத்தினால் என்ன ஆகும்? செருப்பையும் தாண்டி காலையும் குத்தும் தானே? அப்பொழுது நாம் என்ன செய்வோம்? அந்த முள்ளை செருப்பில் இருந்து எடுப்போம் அல்லவா? இல்லை என்றால் நாம் நடக்கும் வழி எல்லாம் குத்திக் கொண்டே வரும் அல்லவா? அதுபோல தான் நாம் தவறு செய்தால் அது நம் மனதை குத்திக்கொண்டே இருக்கும்.  அதை மறக்கவில்லை என்றால் நம் மனதில் எவ்வாறு வேதனை தரும் என்பதை வேதாகமத்தில் ஒரு நபர் மூலம் காணலாம்.

பாட விளக்கம்:
ஒருவர் தன் மனைவியுடன் லகாய்ரோயீ எனும் ஒரு கிணற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்தார்.  அங்கு அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.  நான்கு பேரும் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர்.  பெயெர்செபா என்னும் ஊரில் அவர்கள் வாழ்ந்த போது அந்த இரண்டு மகன்களும் வளர்ந்து வாலிபர்கள் ஆனார்கள்.  அந்த தந்தை பெயர் ஈசாக்கு, தாய் பெயர் ரெபேக்காள்.  இரட்டை சகோதரர்கள் பெயர் ஏசா, யாக்கோபு.  மூத்த மகன் ஏசாவிற்கு வெளியிலே காட்டுக்குள் சென்று வேட்டையாடுவது பிடிக்கும்.  இளைய மகன் யாக்கோபுக்கோ தன் கூடாரத்திலே இருந்து எல்லாவற்றையும் கவனிப்பது தான் பிடிக்கும்.

ஒரு முறை யாக்கோபு தன் கூடாரத்தில் சிவப்பு பயிரை வைத்து கூழ் செய்து கொண்டிருந்தார்.  ஏசா வேட்டையாட சென்று ஒன்றும் கிடைக்காமல் அலைந்து அனைத்து சக்திகளும் இழந்து மிகவும் களைப்பாக வந்தார்.  அவர் யாக்கோபிடம் அவர் செய்த சிவப்பு கூழை கொடுக்கும்படி கேட்டார்.  யாக்கோபு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள எண்ணினார்.  ஏசாவிடம் சேஷ்ட புத்திரபாகத்தைக் கேட்டார்.  

சேஷ்டபுத்திர பாகம்:
சேஷ்ட புத்திர பாகம் என்பது ஒரு தந்தைக்கு எத்தனை மகன்கள் இருக்கின்றனறோ அதோடு ஒரு எண்ணைக் கூட்டி அத்தனை பங்காக தன்னுடைய சொத்துக்களைப் பிரித்து கொடுப்பார்.  மூத்த மகனுக்கு மட்டும் இரு மடங்கு கொடுப்பார்.  மூத்த மகன் குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும், தாய் தகப்பனையும் கவனிக்க வேண்டும்.  அதற்கே அந்த கூடுதல் பங்கு கொடுக்கப்படும்.  ஏசா மூத்த மகன் என்பதால் ஈசாக்கின் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு அவருக்கு கிடைக்கும்.  யாக்கோபு அந்த கூடுதல் பங்கை தனக்கு கொடுக்குமாறு கேட்டார்.


ஏசா எதுவும் சாப்பிடவில்லை என்றால் செத்துவிடுவோம் என்ற நிலையில் இருந்ததால் அவர் சேஷ்டபுத்திர பங்கை கொடுக்க சம்மதித்தார்.  யாக்கோபு அவருக்கு அதற்கு பதிலாக சாப்பிட வெறும் அப்பத்தையும், குடிக்க சிவப்பு கூழையும் கொடுத்தார்.  சிவப்பு கூழுக்கு ஆசைப்பட்டு தன் சொத்தை இழந்ததால், அவருக்கு ஏதோம் என்ற பெயர் உண்டாயிற்று (ஏதோம் - சிவப்பு).  நாமும் யாக்கோபு செய்தது போல நம் சகோதரர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ இக்கட்டான சூழலில் மிரட்டி சில நன்மைகள் பெற்றிருப்போம் தானே!

சில ஆண்டுகளுக்குப் பின் ஈசாக்கு முதிர்வயதானவர் ஆனார்.  அவர் கண்பார்வை மோசமானது, பொருட்களை தடவி பார்த்து தான் அவரால் கண்டுபிடிக்க முடியும்.  அவர் தான் மரணிக்கும் முன் தன் மகன்களை ஆசீர்வதிக்க எண்ணினார்.  முதலாவது ஏசாவை ஆசீர்வதிக்க எண்ணி, அவரை நல்ல உணவு கொண்டு வரச்சொன்னார்.  ஆனால் யாக்கோபும், ரெபேக்காளும் இணைந்து ஈசாக்கை ஏமாற்றினார்கள்.  ஆட்டை சமைத்து அதன் தோலை கையிலே மூடி, முடி அதிகம் உள்ளது போல நடித்து ஈசாக்கை ஏமாற்றி ஏசாவுக்கு கொடுக்க வேண்டிய ஆசீர்வாதத்தை யாக்கோபு பெற்றார்.  ஏசா அதினால் மிகவும் கோபம் கொண்டார்.  ஈசாக்கு பிறகு யாக்கோபை கொன்று விடுவேன் என கோபத்தில் தனக்குத்தானே சொன்னார்.  அதை அறிந்த ரெபேக்காளும் ஈசாக்கும் யாக்கோபை அழைத்து பதான் ஆராம் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ரெபேக்காளின் சகோதரர் லாபானிடத்திற்கு யாக்கோபை போக சொன்னார்கள்.

யாக்கோபு பெயர்செபாவிலிருந்து தப்பி பதான் ஆராம் (ஆரான்) என்ற இடத்திற்கு போனார்.  வழியில் இரவில் தூக்கம் வந்ததால் ஒரு கல்லை தலைக்கு வைத்து தூங்கினார்.  அப்பொழுது ஒரு கனவு கண்டார்.  அதில் வானத்திற்கு நேராக ஒரு ஏணி இருப்பதையும், அதில் தேவதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள்.  அவர்களுக்கு மேலாக கர்த்தர் நின்று ”நீ படுத்திருக்கும் அந்த இடத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்“ (பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள்).  நீங்கள் நான்கு திசையிலும் பரம்புவீர்கள்.  பூமியில் உள்ள அனைவரும் உங்கள் மூலமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.  நீ எங்கு சென்றாலும் நான் உன்னை காப்பேன்  “நான் சொன்ன இடத்திற்கு உன்னை திரும்பி வர செய்வேன்“ என்றார்.  யாக்கோபு தூக்கம் விட்டு எழுந்து அந்த இடம் கடவுளுடைய வீடு என்று கூறி பெத்தேல் (பெத் - வீடு; ஏல் - கடவுள்) என்று பெயரிட்டார்.  அவர் தன் அண்ணனுக்கு விரோதமாக தவறு செய்ததால், சமாதானம் இல்லாமல் இருந்தார்.  கடவுள் தன்னை உணவு உடை கொடுத்து காப்பாற்றி மீண்டும் தன் அப்பாவின் ஊருக்கு சமாதானமாக கொண்டு வந்தால் அவர் அங்கே கடவுளுக்கு தசமபாகம் (வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு) கொடுப்பேன் என கடவுளிடம் பொருத்தனை பண்ணினார்.  யாக்கோபு தவறு செய்து மனம் வருந்தின போது அவர் இருந்த இடம் எது? கடவுளின் வீடு.  அவர் தன் தவறுக்காக மனம் வருந்தினதால் தான் சமாதானம் கேட்கிறார்.


யாக்கோபு தன் மாமா வீட்டிற்கு வந்தார்.  அங்கு தன் மாமாவின் ஆடுகளை மேய்த்து வந்தார்.  பின் அவர் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றார்.  ஆனாலும் அவர் தன் தவறையும் அதின் விளைவாக தன் நாட்டையும் விட்டு இங்கு வந்து இருப்பதை எண்ணி சமாதானம் இல்லாதவராய் இருந்தார்.  ஒரு நாள் கடவுள் யாக்கோபிடம் ”உன் தகப்பனிடத்திற்கும் உன் உறவினர் இடத்திற்கும் போ” என்றார்.  யாக்கோபு தன் குடும்பத்துடனும், வேலைக்காரர்களுடனும், ஆடுகள் எருதுகள், கழுதைகள், ஒட்டகங்கள் என அவர் சம்பாதித்த அனைத்துடனும் தன் ஊருக்கு புறப்பட்டார்.

அவர் சிலரை ஏசாவிடம் தானும் தன் குடும்பமும் வருகிறோம் எனக் கூற தூது அனுப்பினார்.  தூது சென்றவர்கள், ஏசாவும் யாக்கோபை சந்திக்க வருகிறார் என்றும், 400 பேரோடு வருகிறார் என்றும் கூறினர்.  அதைக் கேட்டு பயந்து அனைத்து உடைமைகளையும், வேலையாட்களையும் இரண்டாக பிரித்து கூடாரம் போட்டார்.  ஒன்றை அவர்கள் தாக்கினாலும் மற்ற ஒரு பகுதி தப்பிக்குமே என நினைத்தார்.  அங்கு அவர் ஏசாவுக்கு பரிசளிக்க ஆடுகள், ஒட்டகங்கள் என சகலத்திலும் பங்கு பிரித்தார்.  அவர் அவைகளை முன்னாக செல்லும்படி கூறினார்.  அவர்களிடம் ஏசாவைக் கண்டால் உங்கள் அடியவர் (வேலைக்காரன்) அனுப்பிய பரிசு என கூறும்படிச் சொன்னார்.  முதலில் சொத்தை ஏமாற்றி பறிக்க எண்ணியவர் மனம் மாறி தன்னை தாழ்த்தி வேலைக்காரன் எனக் கூறி பரிசுகளையும் கொடுக்க முன்வந்தார்.  அவர்கள் அனைவரும் யாப்போக்கு எனும் கரையை கடந்து சென்றார்கள்.  யாக்கோபு மட்டும் அங்கேயே தங்கிவிட்டார்.

அங்கு ஒரு மனிதனுடன் சண்டையிட்டார்.  அவர் ஏசாவின் வேலையாள் என எண்ணி பயந்திருக்க வேண்டும்.  இராத்திரி முழுவதும் சண்டையிட்டும் அந்த நபரால் ஜெயிக்க முடியவில்லை.  பின்பு காலை விடியப்போகும் முன் யாக்கோபின் தொடையில் ஒரு நரம்பில் அடித்தார்.  விடிகிற நேரம் ஆனதினால் அவர் கடவுளின் தூதர் என அறிந்து கொண்டார்.  யாக்கோபு தன்னை ஆசீர்வதிக்கவில்லை என்றால் போக விடமாட்டேன் என்றார்.  அவர் எதிர்ப்பார்த்த ஆசீர்வாதம் சமாதானம்.


ஏனென்றால் யாக்கோபு நல்ல வசதியாகத்தான் திரும்பி வந்தார்.  அவரிடம் மனதில் சமாதானம் மட்டுமே இல்லை.  அந்த தூதன் யாக்கோபு (குதிகாலை இழுப்பவர்) எனப்படாமல் இஸ்ரவேல் (மனிதனோடும், கடவுளோடும் போராடி வெற்றி பெற்றவர்) எனப்படுவாய் எனக் கூறினார்.  இது வரை மற்றவரின் காலை வாரிவிட்டு ஏமாற்றி பிழைத்த யாக்கோபு. கடவுளிடம் போராடி சமாதானம் எனும் வெற்றியை பெற்ற இஸ்ரவேலாக மாறுகிறார்.  அந்த இடத்திற்கு பெனியேல் (பெனி - பிளைத்துவிட்டேன்; ஏல் - கடவுள்) எனப் பெயரிட்டார்.

பின்பு ஏசாவை சந்தித்ததும் ஏழு முறை தரை விழுந்து வணங்கினார்.  ஏசாவும் யாக்கோபை மன்னித்து அனைத்துக் கொண்டார்.  அங்கு சாலேம் பட்டணத்து எதிரே ஒரு இடத்தை நூறு வெள்ளிக் காசுக்கு வாங்கினார்.  அந்த இடமும் அதன் சுற்றியுள்ள இடமும் தான் பின்னாளில் எருசலேம் நகரம் ஆனது.


வாழ்க்கைப் படிப்பினை:
நாமும் நம் வாழ்வில் சிலரை சூழ்நிலையை பயன்படுத்தி ஏமாற்றி இருப்போம்.  சிலரை காயப்படுத்தியிருப்போம்.  சிலருடன் சண்டைபோட்டு சமாதானம் இழந்திருப்போம்.  யாக்கோபு சமாதானம் இழந்த போது, சென்ற இடம் கடவுளின் வீடு.  பின்பு கடவுளிடம் போராடி இரக்கம் பெற்றார் (பெனியேல்) பின்பு ஏசாவிடமும் ஒப்புரவு ஆனார்.  நாமும் அவ்வாறு யாருடனோ பிரச்சனை இருந்தால் கடவுளிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்க வேண்டும்.  நம் எதிரிகளிடமும் மன்னிப்புக் கேட்டு ஒப்புரவாக வேண்டும்.


நாள் 5 - மறக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்

குறு நாடகம்
ஒரு ராஜா நகர்வலம் செல்ல முடிவெடுக்கிறார்.  அவ்வாறு தான் செல்லும் போது அரண்மனைத் தெருவை தாண்டியவுடன் தன்னிடம் பேசும் முதல் நபரை இரவு விருந்துக்கு அழைக்க எண்ணினார்.  அப்பொழுது ஒரு பிச்சைக்காரன் அவரிடம் பிச்சைக் கேட்கிறார்.  அதைக் கண்டதும் உடன் வந்த மந்திரி மன்னர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என காத்துக் கொண்டிருந்தார்.  மன்னரோ அந்த பிச்சைக்காரரை அழைத்து அரிடம் புது துணிகள் கொடுத்து அதை அணிந்து அரண்மனைக்கு வாருங்கள், உங்களுக்கு விருந்து இருக்கிறது என்றார்.  அந்தப் பிச்சைக்காரரும் புதிய உடை அணிந்தார்.  ஆனாலும் அவர் பழைய உடையை ஒரு பையில் வைத்து அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.  அதை காவலாளி வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாய் வைத்துவிட்டு வரை மட்டும் உள்ளே அனுப்பினார்.  பிச்சக்காரரும் மன்னருடன் அமர்ந் உணவு உண்ணப்போனார்.  ஆனால் அவரது மனமே அந்த பழைய பையின் மேலே இருந்தது.  அதனால் அவர் சரியாக உணவு உண்ணவில்லை.  அதற்குள்ளாக விருந்து நேரம் முடிந்தது.  அதைக் கவனித்த மந்திரி அந் பிச்சைக்காரரிடம் “உங்களுக்கு புதிய உடைக் கிடைத்தும் நீங்கள் அந்த பழைய உடையை விடாமல் அதன் மீதே கவனமாக இருந்ததால், இந்த புதிய உடை அணிவதன் சந்தோஷத்தையும், அரசருடன் விருந்து உண்ணும் சந்தாஷத்தையும் இழந்தீரே” என கூறினார்.  அந்த பிச்சைக்காரரும் தான் பழையவைகளை எண்ணி நன்மைகளை இழந்ததை எண்ணி வருந்துகிறார்.

படிப்பினை:
நாம் நம் பழைய தவறான பழக்க வழக்கங்களை விடுவதற்கு மனமின்றி அதைப் பிடித்துக் கொண்டு புதிய நன்மைகளை இழந்துவிடுகிறோம்.



Day 5 - மறக்க வேண்டும் என எண்ணுகிறேன்
யாக்கோபு இஸ்ரவேலாக மாறும் நிகழ்வு
* குழந்தைப் பருவம் 
* தனிமையின் காலம்
* குடும்ப வாழ்க்கை
* ஒப்புரவாகுதல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.