Type Here to Get Search Results !

JC VBS 2024 | Day 4 | பிடிக்கப்பட்டவன் என எண்ணுகிறேன் | Jesus Sam

நாள் 4: பிடிக்கப்பட்டவன் என எண்ணுகிறேன்
(பிலிப்பியர் 3:12)
================
நோக்கம்:
பிள்ளைகள் கிறிஸ்துவினால் பிடிக்கப்பட்டவர்கள், அவருடைய அன்பினால் இணைக்கப்பட்டவர்கள் என்கிற உறுதியையும், அதைப் பிடித்துக் கொண்டு தொடர வேண்டும் என்ற எண்ணத்தையும் பெற வழிகாட்ட வேண்டும். நாம் அவரால் பிடிக்கப்பட்டவர்கள் என்பதால் அவரிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும்.

வேதபகுதி
    யோவான் 21:15-17
    அப்போஸ்தலர் 3:12 - 4:3
    அப்போஸ்தலர் 10 (பேதுருவின் ஒப்படைப்பு)

மனன வசனம்:
பிலிப்பியர் 3:12
...கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.


பாட சுருக்கம்:
பேதுரு எத்தனை முறை தன் வாழ்வில் விசுவாசத்தில் பின்மாறினாலும் இயேசு கிறிஸ்து அவரை கைவிடாமல் பிடித்துக் கொண்டதால், அவர் மனிதர்களைப் பிடிக்கிறவரானார்.  அதுபோல பிள்ளைகளும் தவறு செய்து இயேசுவைவிட்டு விலகினாலும் அவர்கள் இயேசுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் இயேசு அவர்களை ஒரு போதும் கைவிடுவதில்லை என்பதை உணர்ந்து தங்கள் வாழ்வை அவருக்கு ஒப்புவிப்பதன் மூலம் அநேகருக்கு கிறிஸ்துவின் மாதிரியாக இருக்க அவர்களை தூண்ட வேண்டும்.

கவன ஈர்ப்பு:
ஒரு சிறிய பையில் ஒரு ஐம்பது அல்லது நூறு ரூபாய் தாள் ஒன்று, உங்கள் அலைபேசி, ஒரு கைக்குட்டை, பேனா ஆகியவற்றை வைக்கவும்.  பின் முதலில் வேர்க்கிறது எனக்கூறி கைக்குட்டையை எடுக்கவும், கைக்குட்டை எடுக்கும்போது அந்த ரூபாய் தாள் தெரியாமல் கீழே விழுவது போல செய்ய வேண்டும்.  பின்பு அதை கவனித்து அதை எடுத்து மீண்டும் பையினுள் போடுங்கள்.  அடுத்து உங்கள் அலைப்பேசியை அனைத்து வைக்க மறந்து விட்டதாக கூறி மீண்டும் அலைபேசியை எடுக்கும்போது மீண்டும் அந்த பணம் கீழே தவறுவதுபோல போடவும்.  பின்பு வேகமாக எடுத்து வைத்துவிட்டு, முக்கியமான ஒரு விசயத்தை எழுத பேனாவை எடுக்கவும்.  இம்முறையும் அந்த பணத்தை தவறவிடுவது போல நடிக்கவும்.  பின்பு உடனடியாக எடுத்து வைத்துவிட்டு, போதும் எது எடுத்தாலும் பணம் கீழே விழுகிறது எனக் கூறிவிட்டு பையை ஓரமாக வைக்கவும்.  பின்பு பிள்ளைகளிடம் நீங்கள் இது மாதிரி பணத்தை தவறவிட்ட அநுபவம் உண்டா? எனக் கேட்கவும்.  பின்பு அவ்வாறு தவறினால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்கவும்.

நாம் எங்கே தொலைத்தோம் என தேடுவோம் தானே!  ஏனென்றால் அந்தப்பணம் நமக்கு தேவை.  இந்த நூறு ரூபாய் எத்தனை முறை விழுந்தாலும் நான் அதை எடுத்து வைத்துக்கொண்டேன்.  ஏனென்றால், அந்த பணம் எனக்கு எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படும் அல்லவா.  அதுபோல நாமும் எத்தனை முறை தவறினாலும் கடவுள் நம்மை மீண்டும் மீண்டும் பிடிக்கிறார்.  ஏனென்றால், நாம் அவருக்கு விசேஷமானவர்கள்.  இன்று நாம் வேதத்தில் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு நபர் எத்தனை முறை விழுந்தாலும் கடவுள் அவரை எப்படி மீண்டும் பிடித்து பயன்படுத்தினார் என பார்ப்போம்.

பாட விளக்கம்:
தன்னுடைய தொழிலை ஒருவர் செய்து வந்தார்.  திடீரென இயேசு அவரை சந்தித்து என்னுடன் வா என்றார்.  அவரும் கீழ்ப்படிந்து இயேசுவுடன் சென்றார்.  அவர்தான் பேதுரு.  பேதுரு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.  சொந்தமாக படகு வைத்து தொழில் செய்தார்.

பேதுருவும் - மீன் பிடி தொழிலும்:
அதை பார்க்கும்போது பெரும் செல்வந்தராக இல்லையென்றாலும், சுயநிறைவு கொண்ட மனிதனாக கப்பர்நகூமிலே வாழ்ந்து வந்தார் எனப் புரிகிறது.  ஒரு நாள் கலிலேயா கடலில் மீன் பிடி சம்பந்தமான வேலையில் அவரும் அவர் சகோதரர் அந்திரேயாவும் ஈடுபட்டிருக்கும்போது என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிப்பவர்களாக மாற்றுவேன் எனக் கூறி இயேசு அவர்களை அழைத்தார்.  பேதுரு தன் உடமையான அந்த படகையும், வலையையும் விட்டு விட்டு கடவுளின் பின் சென்றார்.  அவர் தன் தொழிலைப் பற்றியோ வருமானத்தைப் பற்றியோ கலைப்படவில்லை.  இயேசு அழைத்தவுடன் பின் சென்றார்.  அவருடைய சீஷருமாக மாறினார்.

பேதுரு - நீர் (இயேசு) கிறிஸ்து:
அவர் இயேசுவின் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார்.  ஒரு முறை இயேசு: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று சீஷர்களிடம் கேட்டார்.  அதற்கு பேதுரு: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து (கிறிஸ்து என்றால் மேசியா என்று பொருள்.  அபிஷேகம் பெற்றவர் என்ற பொருளும் உண்டு.  இராஜாக்கள், ஆசாரியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளே அபிஷேகம் பெற்றவர்கள்) என்று கூறினார்.  சாதாரண தச்சரின் மகன் என்றும் போதகர் என்றும் அறியப்பட்ட இயேசுவை ஒரு மகிமையானவராக பேதுரு எண்ணினார்.  இயேசுவும் அதினால் மகிழ்ந்து அவருக்குப் பரலோக ராஜ்யத்தின் முக்கிய பொறுப்புகளை கொடுப்பேன் என வாக்களித்தார்.

பேதுரு கடலில் நடத்தல்:
இயேசுவின் மீது அதிகமான அன்பு கொண்டாலும் பேதுரு சில தடு மாற்றங்களை சந்தித்தார்.  ஒரு முறை விசுவாசத்துடன் கடல் மீது நடக்க ஆரம்பித்தார்.  ஆனால் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பார்த்து கடவுள் காப்பாற்றுவார் என்ற விசுவாசமில்லாமல் பயந்துவிட்டார்.  கடலில் மூழ்கினார்.  ஆனால் இயேசு அவரை கடலில் மூழ்காமல் காப்பாற்றினார்.  


இயேசுவை கைது செய்தல்:
பின்பு இயேசுவை கைது செய்ய ரோம போர் வீரர்கள் வந்த போது, பேதுரு ஒருவரின் காதை வெட்டினார்.  இயேசு பகைவர்களையும் நாம் நேசிக்க வேண்டும் என்று போதித்து இருந்தாலும் பேதுரு கோபம் கொண்டார்.  ரோம வீரரை தாக்கினால் பெரும் தண்டனைகள் பெற வேண்டும், இயேசுவோ அந்த வீரனை சுகப்படுத்தி பேதுருவை காப்பாற்றினார்.

பேதுரு மறுதலித்தல்:
இயேசுவை கைது செய்து விசாரிக்க அழைத்துச் சென்ற போது, தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பேதுருவை நீங்கள் இயேசுவை பின்புற்றுகிறவர் தானே! என மற்றவர்கள் கூறும் போது மூன்று முறை இல்லை என்று கூறி மறுதலித்தார்.  அதற்கு பின்பு மிகவும் மனம் வருந்தி அழுதார்.


திபேரியா கடல் தரிசனம்:
இயேசு மரித்தபின்பு பேதுரு, தோமா, நாத்தான்வேல், யோவான், யாக்கோபு மேலும் இரு சீஷர்களுடன் மீன் பிடிக்க சென்றுவிட்டார்.  ஆனாலும் இயேசு அவர்களை தேடிவந்தார்.  பேதுருவிடம் “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று மூன்று முறை கேட்டார்.  பேதுருவும் ஆம் என்றார்.  இயேசு: ''என் ஆடுகளை மேய்ப்பாயாக'' என்றார்.  அதற்கு என் சபையை வழி நடத்துவாயாக என பொருள்.  எந்த நாட்டில் இயேசுவை தெரியாது என்று மறுதலித்தாரோ, அதே நாட்டில் இயேசுவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் குறித்து மக்களுக்கு சொன்னார்.  அவர் இயேசுவை பற்றி அறிவித்ததை கேட்டு ஆயிரக்கணக்கில் (சுமார் 3,000) மக்கள் கடவுளை ஏற்று திருமுழுக்கு பெற்றனர் (அப்போஸ்தலர் 2:41).  பலரை இயேசுவின் நாமத்தில் குணமாக்கினார். இவ்வாறு பேதுரு செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  ஆனால் தொடர்ந்து இயேசுவை பற்றி மக்களிடம் கூறிக்கொண்டே இருந்தார்.

பேதுருவும் கொர்நேலியுவும்:
ஆனாலும் அவரிடம் ஒரு பிழை இருந்தது.  அவர் யூதர் அல்லாத மக்களை சந்திக்கவில்லை.  ஆனால் கொர்நேலியு என்னும் ஒரு படைத்தலைவன் பேதுருவைக்கான வந்தார்.  அவர் ஒரு ரோமர்.  அவரை சந்திக்கும் முன் கடவுள் பேதுருவுக்கு ஒரு தரிசனம் கொடுத்திருந்தார்.  அதில் ஒரு கூடு போன்ற ஒன்று வானத்திலிருந்து இறங்கி வருவதைக் கண்டார்.  அதிலே எல்லாவிதமான மிருகங்கள் இருப்பதைக் கண்டார்.  கடவுள் அவை அனைத்தையும் அடித்துப் புசி என்று சொன்னார்.  பேதுருவோ அதில் சிலவற்றை உண்ணக் கூடாது என யூத சட்டங்கள் உள்ளனவே என்றார்.  அதற்கு கடவுள் அப்படியல்ல நீ அனைத்தையும் புசி என்றார்.  அந்த தரிசனத்தின் பொருளானது யூதருக்கு மட்டுமல்ல எல்லா நாட்டு மக்களுக்கும் சுவிசேஷம் சென்றடைய வேண்டும் என்பதாகும்.


அதற்கு பிறகு அந்தியோகியா, கொரிந்து, ரோமாபுரி என பல இடங்களுக்குச் சென்று புறஜாதியாரிடத்திலும் ஊழியம் செய்து சபைகளை உண்டாக்கினார்.  பின்பு ரோமாபுரியில் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.


வாழ்க்கைக்குப் படிப்பினை:
நாமும் கடவுளால் பிடிக்கப்பட்டவர்கள்.  நாம் என்ன தவறு செய்தாலும் அதை உணர்ந்து மனம் வருந்தினால் கடவுள் மன்னிப்பார்.  நம்மை மீண்டும் அவரோடு சேர்த்துக் கொள்வார்.  அவர் மீது அன்பாக இருந்து அவரிடம் நம்மை ஒப்படைத்தால் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக நம்மை மாற்றுவார்.



நாள் 4 - பிடிக்கப்பட்டவன் என்று எண்ணுகிறேன்

குறு நாடகம்
ஒரு மாணவன் பள்ளியில் எல்லா பாடங்களிலும் தோல்வி அடைகிறார், ஆசிரியர்களையும் மரியாதைக் கறைவாக நடத்துகிறார் என அனைத்து ஆசிரியர்களும் தலைமைஆசிரியரிடம் அந்த மாணவரால் நம் பள்ளிக்கு அவப்பெயர் வரும் எனவே, அவரை பள்ளியிலிருந்து இடை நீக்கம் செய்யச் சொல்லுகிறார்கள்.  ஆனால் தலைமை ஆசிரியர் இல்லை அந்த மாணவரும் நம் பள்ளிக்கு முக்கியம் எனக் கூறி அந்த மாணவரை அழைத்து வரச் சொல்லுகிறார்.  அந் மாணவர் வந்தவுடன் அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார்.  பின்பு அந்த மாணவனிடம் அடுத்த வாரம் மறக்காமல் அந் இடத்திற்கு சென்று கலந்து கொள் என்றார்.  இதனை அரைகுறையாக கேட்ட ஒரு ஆசிரியர் மற்ற ஆசிரியர்களிடம், தலைமை ஆசிரியர் அந்த மாணவரை வேறு ஆசிரியிடம் படிக்க அனுப்புகிறார், நாம் கற்றுக் கொடுத்தும் தேறாத மாணவன் வேறு ஒருர் கற்றுக் கொடுத்தால் தேறுவாரா? என் பேச ஆரம்பித்தனர்.  அடுத்து சில வாரங்கள் கழித்து தலைமை ஆசிரியர் எல்லோர் முன்னும் அந்த மாணவனை அழைத்து அவருக்கு பரிசை வழங்குகிறார்.  பின்பு அனைவரிடமும் இன்று நம் பள்ளி மாநிலத்தில் மிகவும் பெருமை மிகுந்த பள்ளியாக பெயர் பெற்றிருக்கிறது.  அதற்கு காரணம் இந்த மாணவர் எனக் கூறுகிறார்.  மாநில அளவில் நடந்த ஓவியப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றிருக்கிறார் எனவும், அந்த செய்தி நாளை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் வெளியிடப்படும், நம் பள்ளிக்கு மிகவும் பெருமை சேர்த்திருக்கிறார் என அறிவித்தார்.  பின்பு அந்த மாணவனை அழைத்து, தம்பி நீ ஒரு திறமைசாலி என்பதை அறிவேன்.  உன்னை எல்லாரும் நீ இந்த பள்ளிக்கு தேவையற்றவன் எனக் கூறினார்கள்.  ஆனால் நான் உன்னிடம் இருக்கும் திறமையை அறிந்து அவைத்திருந்தேன்.  நீ இவ்வளவு நல்ல திறமை வைத்து அதை வீணடிக்க பார்த்தாய்.  ஆனால் நீ ஒன்றை மறக்க கூடாது.  உன் நடவடிக்கைகளால் நீ நல்ல வாழ்வை இழந்திருப்பாய்.  நீ சிறுவகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி, பாராட்டுகளை பெற்று இருக்கிறாய்.  ஏனோ, இன்று கல்வியில் உன் கவனத்தை சிதறவிட்டாய்.  எல்லோரும் உன்னை தவறாக பேச ஆரம்பித்தனர்.  ஆனால் இன்று மீண்டும் எல்லோருடைய பாராட்டைப் பெற்றிருக்கிறாய்.  இது உனக்கு இரண்டாம் வாய்ப்பு.  இதை தவற விடாதே, உன் ஆசிரியர்கள் சொல்வதைக் கேள், அவர்கள் கற்றுக் கொடுப்பதை கவனி, நிச்சயம் நீ பழையபடி படிப்பிலும் சிறந்து விழங்குவாய் எனக் கூறுகிறார்.

படிப்பினை:
நாம் கடவுளால் சிறந்தவர்களாக படைக்கப்பட்டிருக்கிறோம்.  ஆனால் நாம் சரியான பாதையில் இருந்து விலகி தவறான பாதையை தேர்வு செய்கிறோம்.  கடவுள் நம்மை அப்பொழுது வேண்டாம் என கைவிடுவதில்லை.  தவறான பாதையை விட்டு மீண்டும் சரியான பாதையில் செல்ல வேண்டும் என கடவுள் விரும்புகிறார்.  நமக்கு அவர் மறு வாய்ப்புகளை கொடுக்கிறார்.  ஏனென்றால் நாம் அவரால் பிடிக்கப்பட்டவர்கள்.


Day 4 - பிடிக்கப்பட்டவன் என்று எண்ணுகிறேன்
ஒரு பிள்ளை தவறு செய்யும்போது, உடனே தகப்பன் பிள்ளையைப் பார்த்து: நீ தவறு செய்துவிட்டாய், நீ என்னுடைய மகன் அல்ல, என்னுடைய வீட்டை விட்டு வெளியே செல் என்று சொல்ல மாட்டார்.  அதைப் போல, ஆண்டவர் விரும்பாத காரியத்தை நாம் அறியாமல் செய்யும்போது, நம்முடைய பரம தகப்பனும் மன்னிக்க ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார்.  அவருடைய கரத்தில் நம்மை முழுமையாய் ஒப்புக்கொடுத்து, பாவங்களை அறிக்கையிடும்போது, நம்மை ஏற்றுக்கொள்ள அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.