Type Here to Get Search Results !

JC VBS 2024 | Day 3 | கிறிஸ்துவையே ஆதாயமாக எண்ணுகிறேன் | Jesus Sam

நாள் 3: கிறிஸ்துவையே ஆதாயமாக எண்ணுகிறேன்
(பிலிப்பியர் 3:9)
==============
நோக்கம்:
பிள்ளைகள் கிறிஸ்துவின் பாடு மரணங்களின் வழியே, நாம் அவருடன் ஐக்கியப்பட்டிருக்கிறோம் என்பதையும், நாம் கிறிஸ்துவின் பாடு மரணத்தை விசுவாசிப்பதன் மூலம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம் என்பதையும் உணர வேண்டும்.

வேதபகுதி:
    யோவான் 3:1-21
    யோவான் 19:38-42 (நிக்கொதேமுவின் ஒப்படைப்பு)

மனன வசனம்:
கலாத்தியர் 2:20
    ...என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.


பாட கூருக்கம்:
நிக்கொதேமு என்னும் பரிசேயர், சனகெரிப் சங்கத்தின் உறுப்பினராக இருந்த போதும் கூட இயேசுவின் போதனைகளை ஏற்றுக் கடைசிவரை கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டவராக இருந்தார்.  இயேசு கிறிஸ்துவின் மரித்த உடலை அடக்கம் பண்ண அவர் சீஷர்களே முன்வராத சூழலிலும் அவர் வந்தார்.  அது போல பிள்ளைகள் அவரின் மரணத்தின் மேன்மையையே ஆதாயமாக எண்ணி புதிய வாழ்வு பெற தங்களை ஒப்படைக்க தூண்ட வேண்டும்.

கவன ஈர்ப்பு
நீங்கள் கவனித்த இன்டர்மீடியேட் அல்லது ஒரு சீனியர் மாணவர்களில் கூச்சசுபாவம் உள்ள ஒருவரை முன்னால் அழைக்க வேண்டும்.  அவரிடம் ஒரு வசன அட்டையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சிறிய பரிசையோ வழங்கி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வரவும்.  பின்பு அந்த நபரிடம் நீங்கள் மற்றவர்களுக்கு முன் காலையில் கற்றுக்கொண்ட பாடலை பாடிகாட்ட முடியுமா? என கேட்க வேண்டும் (அவர்களை கட்டாயப் படுத்தக்கூடாது.  கேள்வி மட்டுமே கேட்க வேண்டும்).  பின்பு  தனி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் நீங்கள் பாடி துதிக்கும் கிறிஸ்தவ பாடலை கூறினால் போதும் என்று கூறவும், பின்பு அவரை அமரச் செய்யவும்.

இந்த வாலிபர் போல நாமும் பல வேளைகளில் மற்றவர் முன்பாக Action Song  செய்ய, வசனங்கள் ஒப்பிக்க, ஜெபிக்க வெட்கப்படுகிறோம்.  ஏனென்றால் நம் நண்பர்கள் நம்மை கேலி செய்வார்கள் என்ற பயம்.  சில சமயம் நம்மை அவர்கள் கூட்டத்திலிருந்து ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம் அல்லது மற்றவர் முன் நாம் தவறாக செய்து விடுவோமோ என்கிற பயமாககூட இருக்கலாம்.  இதே மாதிரியாக வேதத்தில் ஒரு மனிதர் இயேசுவை கண்டு பேச வேண்டும் என எண்ணினாலும், பகலில் சென்றால் மற்றவர்கள் பார்த்து விடுவார்கள் என பயந்து இரவில் இயேசுவைக் காணச் சென்றார்.  அவரைக் குறித்துக் காணலாம்.

பாட விளக்கம்:
நாம் முதல் நாள் பார்த்த சம்பவத்திலே பரிசேயர் என்றால் யார் என அறிந்து கொண்டோம் அல்லவா? (அந்த படங்களைக் காட்டி அவர்களுக்கு நினைவு படுத்தலாம்).  ஆம் அவர்கள் யூதரில் ஒரு குழுவினர்.  திருமறை சட்டங்களை கற்றவர்கள், காலத்திற்கேற்ப அந்த சட்டங்களில் சில திருத்தங்களை கொண்டு வருபவர்கள்.  விதிமுறை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை எனக் கூறுபவர்கள்.  இவர்கள் உயிர்த்தெழுதலை நம்பினார்கள்.  அப்படிப்பட்ட பரிசேயரில் ஒருவர் தான் நிக்கொதேமு.  அவர் சட்ட குழுவான (Legislative Assembly) சனகெரிப் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தவர்.

இயேசு பல முறை யூத மக்கள் பொருளை உணராமல் வெறும் சடங்காச்சாரமாக பின்பற்றும் பழக்க வழக்கங்களைக் குறித்து மக்களிடம் பேசினார்.  எடுத்துக்காட்டாக, ஓய்வு நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்பது சட்டமாக இருந்தது.  இயேசுவோ மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும் என்றால், ஓய்வு நாள் என்றாலும் நாம் உதவி செய்யலாம் எனக் கூறினார்.  இதனால் இந்த பரிசேயர்கள் தாங்கள் காக்கும் சட்டங்களை பழிக்கிறாரோ என இயேசுவின் மேல் கோபம் கொண்டார்கள்.  அவரை வெறுத்தார்கள்.  அவரிடம் வாக்குவாதம் செய்தார்கள்.

இயேசு தான் சிறுவயதிலேயே, கற்றறிந்த யூத குருமார்களிடம் அறிவுப்பூர்வமாக பேசும் திறமை பெற்றிருந்தார் (லூக்கா 2:46,47).  எனவே இவர் போதனைகளில் உள்ள உண்மையும், பரிசேயரின் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதிலில் உள்ள தெளிவும் சில பரிசேயர்களைக்கூட கவர்ந்தது.  வேதத்தில் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு அவரிடம் பதில் உண்டு என நம்பினார்கள்.  ஆனால் இயேசுவை சந்தித்தால் மற்ற பரிசேயர்கள் தங்களை தவறாக எண்ணுவார்களோ என பயந்தனர்.

நிக்கொதேமுவும் அவ்வாறு பயந்திருந்தவர்களில் ஒருவர்.  ஆனாலும் அவர் மனதில் இருந்த கேள்விகளைக் கேட்க வேண்டும் என எண்ணினார்.  அதினால் யாரும் பார்க்காதவாறு இரவில் இயேசுவை சந்திக்க சென்றார்.  இயேசுவிடம் நீங்கள் கடவுளிடம் இருந்து வந்தவர் என அறிவேன் என்றார்.  யூதர்கள் கடவுள் தங்களை வழிநடத்த ஒரு மீட்பரை (மேசியா) அனுப்புவார் என நம்பினார்கள்.  நிக்கொதேமு கடவுளிடம் இருந்து வந்தவர் எனக் கூறுவதால் அவரை மேசியா என உணர்ந்து கொண்டதை அறிக்கை செய்கிறார்.  இயேசுவும் நிக்கொதேமுவின் மனதில் உள்ள கேள்வியை அவர் கேட்கும் முன்னே அறிந்து பதில் கூற ஆரம்பித்தார்.  ஒரு மனிதன் மீண்டும் பிறக்க வேண்டும் என கூறினார்.  இயேசு கூறின பதில் புரியாமல் நிக்கொதேமு நின்றபோது அதை விளக்கி கூறினார்.  ஒரு மனிதன் மீண்டும் தன் தாயின் வயிற்றில் பிறக்க முடியாது, ஆனால் அவன் பழைய தவறான வாழ்வை விட்டுவிட்டு பரிசுத்த ஆவியானவர் காட்டும் நல்வழியில் நடப்பதே புதிய வாழ்வு என விளக்கினார். 


நிக்கொதேமு தன்னை (இயேசுவை) மேசியா (விடுதலை அளிப்பவர்) என்பதை உணர்ந்து வைத்திருந்ததால் தான் சிலுவையில் மரிக்கப்போவதை, மனுஷக்குமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும் என கூறி, தான் எப்படி இந்த உலகை கடவுளின் தண்டனைகளில் இருந்து காப்பாற்றி எல்லோருக்கும் விடுதலை (வசனம் 3:17) தரப் போகிறேன் எனும் தன் திட்டத்தையும் பகிர்ந்து கொண்டார்.

மேலும் தவறு செய்பவர்கள் தான் இருளை விரும்புவார்கள்.  இருளில் தாங்கள் செய்வது மற்றவர்களுக்குத் தெரியாது என நம்புகின்றனர்.  ஆனால் நன்மை செய்கிறவர்கள் வெளிச்சத்தை விரும்புகின்றனர்.  தாங்கள் செய்வது சரியானது என்பதால் அவர்கள் பயப்படுவதில்லை என இயேசு விளக்கமளித்தார்.  நிக்கொதேமு இயேசுவை சந்திக்க வந்தது சரியான காரியம் தானே.  ஆனால் மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள் எனப் பயந்தார் அல்லவா? அவர் இயேசுவை சந்திப்பது தவறல்ல என எண்ணியிருந்தால், பகலில் தானே வந்திருக்க வேண்டும்? இப்படித்தான் தன்னுடன் இருப்பவர்கள் நம்மை வெறுப்பார்கள் என எண்ணி நாமும் கடவுளுக்காக பல காரியங்கள் செய்ய அஞ்சுகிறோம்.  இந்த கேள்வி நிக்கொதேமுவின் மனதிலும் எழுந்திருக்க வேண்டும்.


பின்னாளில் நிக்கொதேமு இயேசுவைப் பற்றி அறிக்கையிடவும், பயப்படவுமில்லை.  மற்ற பரிசேயர்களிடம் இயேசுவுக்காக வாதாடினார் (யோவான் 7:50,51).  இயேசுவானவர் சிலுவையில் மரித்தபோது, அவரின் உடலை அடக்கம் செய்ய அவர் சீஷர்களே முன்வராதபோதும் கூட, நிக்கொதேமு 100 இராத்தல் (35-வஆ) வெள்ளைப்போளமும், கரியப்போளமும் கலந்து கொண்டு வந்தார்.  {100 இராத்தல் என்பது 50 கிலோ}.  இயேசுவை காணச் செல்வது குற்றம் அல்ல என்பதையும் மற்ற பரிசேயர்கள் தன்னை ஒதுக்கிவிட்டாலும் பரவாயில்லை எனவும் உணர்ந்துகொண்டார்.  யூதர்களின் தலைவர் என்கிற பதவி போகும் என பயப்படவில்லை.  தன் செல்வ செழிப்பான வாழ்க்கை பறிபோகும் என அஞ்சவில்லை.  கிறிஸ்வின் மரணத்தால் உண்டாகும் விடுதலையே போதும் என எண்ணி விசுவாசித்தார்.  இயேசு சிலுவையில் செய்த தியாகத்திற்கு முன் தன்னுடைய மத நம்பிக்கையோ தான் கடைபிடிக்கும் பாரம்பரியங்களோ ஒன்றும் அல்ல என நிக்கொதேமு எண்ணினார்.  இயேசுவை பின்பற்றுவதே போதும் என தன்னை ஒப்புக்கொடுத்தார்.  பல காரியங்களை தன் வாழ்வில் இழந்தார்.  இறுதி வரை கிறிஸ்துவுக்காக வாழ்ந்து மறை சாட்சியாக (இரத்த சாட்சி) மரித்தார்.  இன்றும் அவர் புனிதராக போற்றப்படுகிறார்.  ஆகஸ்டு 31 நிக்கொதேமுவின் புனித நாளாக அநுசரிக்கப்படுகிறது.


வாழ்வுக்கு படிப்பினை:
கிறிஸ்து நமக்காக சிந்தின இரத்தத்தால் தண்டனைகளுக்கு விடுதலையாகிறோம் என விசுவாசித்தால், அவருக்காக நாம் பொருட்களையோ, உறவுகளையோ இழக்க முன் வர வேண்டும்.  மற்றவர்களைக் குறித்து பயப்படாமல் இயேசுவுக்காக செயல்பட வேண்டும்.  மற்றவை நமக்கு முக்கியம் அல்ல, கிறஸ்துவே நமக்கு ஆதாரம், அவரே நமது ஆதாயம் என உணர்ந்து அவரிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும்.



நாள் 3 - கிறிஸ்துவையே ஆதாயமாக எண்ணுகிறேன்
குறு நாடகம்
ஒருவருக்கு கூரியர் மூலம் தபால் வருகிறது.  அதில் அவர் ஒரு மகிழுந்தை பரிசாக பெற்றதாக எழுதப்பட்டிருக்கிறது.  அதை வாசித்தவுடன் மிகவும் மகிழ்கின்றார்.  என்ன என்று அவர் தகப்பன் கேட்க தனக்கு மகிழுந்து பரிசாக கிடைத்தாகவும் கூறுகிறார்.  தகப்பனும் மிகவும் மகிழ்கிறார்.  “அதைப் பெற்றுக் கொள்ள போவோமா?” என தன் மகனிடம் கேட்கிறார்.  மகனோ, கூலி வேலை பார்க்கும் தன் தந்தையிடம் எந் நல்ல உடையும் இல்லாததால் அவரை அழைத்துச் செல்ல மனமில்லாமல் அவர் மனம் புண்படும்படியாக ஏளனமாக திட்டிவிட்டு, அந்த அலுவலகம் செல்கிறார்.  அந்த அலுவலகத்திற்கு சென்று பரிசினை தனக்கு கொடுக்கும்படி அலுவுலகத்தில் வேலை செய்யும் நபரிடம் கேட்கிறார்.  அந்த நபரோ உங்கள் தகப்பன் வரவில்லையா? என கேட்கிறார்.  மகனோ ஏளனமாக இப்படிப்பட்ட நல்ல இடங்களுக்கு அவர் எப்படி வருவார்? என பதில் கூறுகிறார்.  அலுவலரோ உங்கள் தகப்பன் தான் இந்த பரிசு சீட்டு போட்டு அதற்கு மாதம் தோறும் பணம் செலுத்தியிருக்கிறார்.  பணம் கட்டும்போது அவர் அழுக்கு உடையுடன் தான் ஏழ்மையாக வருவார்.  அவர் வேண்டாம் அவர் கட்டிய சீட்டின் மூலமாக வந்த மகிழுந்து மட்டும் வேண்டும் என நினைக்கிறீர்களே.  இது சுயநலம் இல்லையா? அவர் சீட்டு கட்டிய பணத்தை தனக்காக பயன்படுத்தி இருந்தால் உங்களை விட சிறப்பாக தோற்றமளிக்க மாட்டாரோ? வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக பல தியாகம் செய்த அவரை நீங்கள் ஏளனமாக எண்ணலாமா? மேலும் எங்கள் நிறுவன விதிப்படி பணம் செலுத்தியவர் கையொப்பம் இருந்தால் தான் பரிசு வழங்க முடியும்.  நீங்கள் உங்கள் தகப்பனை அழைத்து வாருங்கள்” என்றார்.  மகனும் தான் செய்த தவறினை உணருகிறார்.

படிப்பினை:
கடவுள் நமக்கு கொடுக்கும் நல்ல ஆசீர்வாதங்களை மட்டும் பெற்றுக் கொண்டு மற்றவர்கள் முன் அவரைப் பற்றி கூற வெட்கப்படுகிறோம் என்றால் அது சுயநலம். எனவே, கிறிஸ்துவே நமக்கு ஆதாயம் என எண்ண வேண்டும்.



Day 3 - கிறிஸ்துவையே ஆதாயமாக எண்ணுகிறேன்
சத்தியத்திற்கும் உண்மைக்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு. (Turth 0r Fact)
சத்தியத்தை நிரூபிக்க முடியாது.
உண்மையை நிரூபிக்க முடியும்.

சத்தியம்:
இயேசு ஒருவரை சுகமாக்கினால், அந்த சுகத்தை அவரால் உணர முடியும்.  ஆனால், அதற்கு சான்றிதழ் கொடுக்கப்படமாட்டாது.

உண்மை:
எனக்கு உடல் நிலை சரியில்லை என்று நான் மருத்துவரைச் சந்தித்தால், அவர் சில மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுப்பார்.  அதை சாப்பிட்டு நோய் குணமானபின்பு அதே மருத்துவரிடம் நான் சென்றால், அவர் எனக்கு சுகமடைந்ததற்கான சான்றிதழைக் கொடுப்பார்.

நிக்கோதேமுவின் வாழ்க்கை சரித்திரத்தில் எது உண்மை? எது சத்தியம் என ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

மாம்சத்தினால் பிறப்பது உண்மை.
ஆவியினால் பிறப்பது சத்தியம்.

உண்மை:
நான் கோபப்படுபவன், ஆண்டவர் அருவெறுக்கின்ற காரியங்களைச் செய்பவன்.  ஏமாற்றுபவன், பொய் சொல்லுபவன் அவைகள் அனைத்தும் உண்மை.  

சத்தியம்:
சத்தியம் எனக்குள் வரும்போது, எனக்குள் இருக்கம் உண்மை தோற்றுப்போகிறது.

Story Intro:
நிக்கோதேமு என்ற பெயரை மாணவர்கள் எளிதில் புரியும் விதத்தில் Nike என்று சொல்லாம்.

ஆதிகாலத்து உடையை அணிந்து கொண்டு, ஒரு மெழுகுவர்த்தியையும், ஒரு பெட்டியையும் எடுத்துக்கொண்டு பிள்ளகைள் முன்பாக வந்து, எனது பெயர் Nick.  எனது கையில் உள்ள பெட்டியில் என்ன இருக்கிறது என்ற பார்ப்போமா? என்று கேட்கவும்.

அந்த பெட்டிக்குள் ஒரு சில வார்த்தைகளை எழுதிவைக்கவும்.  யாரையேனும் முன்பாக அழைத்து அந்த பெட்டிக்குள் இருக்கின்ற வார்த்தையைப் பற்றி பேசச் சொல்லவும்.  அவர்களுக்கு தெரிந்த எதை வேண்டுமானாலும் பேசலாம்.
பெட்டிக்குள் இருக்கும் வார்த்தைகள்:
    1) மறுபடியும் பிறக்க வேண்டும்
    2) காற்றைப்போல
    3) சர்ப்பம் உயர்த்தப்பட்டது போல
    4) மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்
    5) உலகம் இரட்சிக்கப்படுவதற்காக
    6) ஆக்கினைக்கு தீர்க்கப்படான்.

பரிசேயர் என்றால் யார்?
யூத மத சட்டங்களை எழுதுபவர்கள்?
யூதர்களுக்கென்று சட்டங்களை எழுதிக்கொடுத்தவர் ஆண்டவர்.  
இந்தியாவிற்கு சட்டங்களை எழுதியது டாக்டர். அம்பேத்கார்.  சட்டங்கள் என்றால் அவை காலத்திற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.  இந்தியாவில் சட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றம் செய்யப்படாததினாலேயே, அநேக குற்றவாளிகள் தங்களை நிரபராதிகளாக காணபித்துக்கொண்டு வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  சட்டங்கள் திருத்தப்படாததினாலேயே, அநேக நிரபராதிகளும் குற்றங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

காலத்திற்கேற்ப சட்டங்களை திருத்தம் செய்வதன் மூலம் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.

நிக்கொதேமு
நிக்கொதேமு என்றால் வெற்றி பெறுபவர், வெற்றியடைந்தவர் என்று பொருள்.
நிக்கொதேமு ஒரு பரிசேன் (சட்டம் எழுதுபவர்)
யூதர்களுக்குள்ளே ஒரு அதிகாரி
இஸ்ரவேலில் ஒரு ரபீ அதாவது போதகர்
இயேசுவினிடம் வந்த ஒரே போதகர் (ரபி) இவரே
ஆலோசனை சங்கத்தின் உறுப்பினர் (சனெகரிப் சங்கம்)

புதிய ஏற்பாட்டில் பரிசேயர்களுக்கும், இயேசுவுக்கும் இடையே அநேக கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன.
எ.கா: பரிசுத்த ஓய்வு நாளில் எந்த வேளையும் செய்யக்கூடாது என்பது, யூதர்களின் சட்டம்.  எனவே, யூதர்கள் எந்த வேலையும் செய்யமாட்டார்கள்.  யாராவது உதவி வேண்டும் என்று கேட்டாளும், உதவி செய்ய மாட்டார்கள்.

ஆனால் இயேசுானவர், ஞாயிற்றுக்கிழமையும் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம் எனக் கற்றுக்கொடுத்தார்.  எனவே, சட்டத்தை எழுதக்கூடிய பரிசேயர்களுக்கு இயேசுவின்மேல் கோபம் அதிகமாக இருந்தது.

ஆனாலும், ஒரு சில பரிசேயர்கள், இயேசுவை சந்திக்க வேண்டும்.  அவரோடு பேச வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.  ஆனால் மற்றவர்கள் பார்த்துவிட்டால், என்னை கேலிசெய்வார்களோ, என்னை அவமானப்படுத்துவார்களோ, என்னுடைய வேலை பரிபோய்விடுமோ என்று பயந்து இயேசுவை சந்திக்க பயந்தார்.

இப்படி இயேசுவை சந்திக்க விரும்பி, பயந்துகொண்டிருந்தவர்களில் ஒருவர் தான் நிக்கொதேமு.  இவர் மிகவும் பயந்து, இராத்திரி நேரத்தில் இயேசு சந்திக்க வந்தார்.  அநேக காரியங்களைக் குறித்து, அவரோடு பேசினார்.  தன் உள்ளத்தில் இருந்த கேள்விகளுக்கெள்ளாம் பதில் அறிந்துகொண்டார்.  இயேசுவானவரும், நிக்கொதேமு கேள்வி கேட்பதற்கு முன்னமே, அவர் இதைத்தான் கேட்க வருகிறார் என்று அறிந்துகொண்டு, அதற்கு பதில் கூறினார்.  இயேசுவை சந்தித்து பேசியதில், இவரே மேசியா (நம்மை மீட்க வந்த கடவுள்) என்று அறிந்துகொண்டார்.  பின்பு மிகவும் சந்தோஷமாக தனது வீட்டிற்கு சென்றார் இந்த நிக்கொதெமு.

சில நாட்களுக்கு பின்பு, இயேசுவை கைது செய்யது, அவரை கொலை செய்ய வேண்டும்.  அதற்கான திடீர் சனெகரிப் சங்கத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள்.  அதில் ஒரு நபராக நிக்கொதேமுவும் இருந்தார்.  இயேசுவை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக நிச்சயம் வாதாடியிருப்பார்.  ஆனால் கடைசியில் அவரை சிலுவையிலும் அறைந்துவிட்டார்கள்.

நிக்கொதேமுவின் தைரியம்:
மனிதனுடைய பாவம் சிந்தப்படவேண்டுமானால், இரத்தம் சிந்தப்பட வேண்டும்.  அதாவது பரிசுத்த இரத்தம் சிந்தப்பட வேண்டும்.

என்னுடைய பாவங்களுக்காகவும் இயேசு சிலுவையில் மரித்தார், என்று அறிந்துகொண்ட நிக்கொதேமு, தன்னுடைய வேலை பரிக்கப்படுமோ, பரிசேயர்கள், ஆலோசனை சங்க உறுப்பினர்கள் என்னை கனவீனமாக பேசுவார்களோ, என்றெல்லாம் பயப்படாமல், தைரியமாக இயேசுவை நல்லடக்கம் செய்வதற்காக காரியங்களை செய்கிறார்.  

பஸ்கா பண்டிகை:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பஸ்கா பண்டிகைக்கு முந்தின நாள் சிலுவை மரத்தில் தொங்கி மறித்தார்.

அவரை அடக்கம் செய்வற்கு அவருடைய சீஷர்களே முன்வராத நிலையில், நிக்கொதேமு என்ற பரிசேயன் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம் செய்ய முன்வருகிறான்.

நாளை பஸ்கா பண்டிகையை அனுசரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த நிக்கோதேமு, தீட்டான சரீரத்தைத் தொட்டு அடக்கம் செய்தான் என்றால், நிக்கோதேமு எந்த அளவிற்கு இயேசு கிறிஸ்துவை நேசித்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  நிக்கோதேமுவின் இச்செயல்களால் அவருடைய பரிசேயன் என்ற பதவியும் அவரிடமிருந்து பிடுங்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.  எதையும் பொருட்படுத்தாமல் நிக்கோதேமு இயேசுவின் சரீரத்தைத் தொட்டு நல்லடக்கம் செய்வதை நாம் பார்க்க முடிகிறது.

தீட்டான சரீரத்தைத் (இயேசுவின் சரீரம்) தொட்டு, சுத்தமான ஒரே மனிதன் இந்த நிக்கோதேமு.



Climax
கதையின் Climax நிக்கோதேமு இயேசுவின் மரித்த சரீரத்தைத் தொட்டு அடக்கம் செய்ததை கூறவும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.