Type Here to Get Search Results !

அகில உலக ஞாயிறு பாடசாலை நாள் ஆராதனை ஒழுங்கு முறை | Universal Sunday School Day Worship Order | Jesus Sam

சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள். (மத்தேயு 19:14)

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் திருமண்டிலம்

அகில உலக ஞாயிறு பாடசாலை நாள்


(சிறுவர் ஞாயிறு)

வழிபாட்டு முறை

1. ஆரம்ப ஜெபம்
என்றும் எங்களை நேசிக்கிற அன்பின் கடவுளே, உம் அன்புப் பிள்ளைகளாகிய நாங்கள் நன்றி நிறைந்த உள்ளத்தோடும், துதிகளின் தொனியோடும் உம்மண்டை வருகிறோம். அன்பின் கடவுளே பாடுகளும், துன்பங்களும் தொற்று வியாதிகளும் நிறைந்த இந்த உலகிலே உம் பிரசன்னத்தையும், உம் சமாதானத்தையும் அனுபவிக்க எங்களுக்கு அருள்புரியும். இரக்கங்களின் கடவுளே, எங்கள் அன்புப் பிள்ளைகள் உம்மில் நிலைத்திருக்க அவர்களை பக்குவப்படுத்தும். எங்களைத் தாழ்த்தி உம்முடைய ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவும், சிறு பிள்ளைகளைப் போல நாங்கள் மாறவும், உம் வசனத்தை ஏற்று இவ்வுலகின் தீமைகளுக்கு விலக்கிக் காக்கப்படவும், உம் பேராயுதங்களைத் தரித்துக் கொண்டு, நற்செய்தியின் இரகசியங்களில் நிலைத்திருக்கவும் பெலன் தாரும். இந்த அகில உலக ஞாயிறு பள்ளி சிறப்பு வழிபாட்டைத் துவங்கும் வண்ணமாக நீர் எங்களோடு கூட இருந்து, நாங்கள் உம் பிரசன்னத்தை உணர அருள்புரியும். இந்த ஆராதனை நேரத்தை எங்களுக்கு ஆசீர்வதித்துத் தந்து, உம்மை ஆவியோடும், உண்மையோடும் வழிபடும் மனநிலையை எங்களுக்கு அருளிச் செய்யும். எங்களை நேசித்து வழிநடத்துகிற திரியேகக் கடவுளின் வழியாகவே வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

2. ஆரம்ப பாடல்:

3. வழிபாட்டிற்கு அழைப்பு:
அகில உலக ஞாயிறு பள்ளி, ஞாயிறு ஆராதனை, திருச்சபையிலும், சமுதாயத்திலும், சிறுவர்களின் அழைப்பையும், அர்ப்பணிப்பையும் நமக்கு நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. நலிவடைந்த சமூக அங்கங்களில் சிறுவர்களும் ஒரு பங்காக உள்ளனர். அநேக வேளைகளில் சமூகத்தில் சிறுவர்கள் புறந்தள்ளப்பட்டும், ஒதுக்கப்பட்டும், இழிவாக நடத்தப்பட்ட நிலையிலும் காணப்படுகிறார்கள்.

நாம் கடவுளைத் தொழுவோம்.
”நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்.“ (மத்தேயு 18:3)

“இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.“ (மத்தேயு 18:14)


4. திரியேக துதி:
ஆராதனை நடத்துபவர்: ஆண்டவரே, மண்ணினாலே எங்களை அழகாக உருவாக்கி, உமது சாயலையும் உமது ரூபத்தையும் எங்களுக்குத் தந்ததற்காக உம்மைத் துதிக்கிறோம். உமது படைப்புகள் அனைத்திலும் எங்களை உயர்வானவர்களாகப் படைத்து காணப்படுகிறவைகளையும், காணப்படாதவைகளையும் ஆளுகிற அன்பின் தேவனே உம்மைத் துதிக்கிறோம்.

இறைமக்கள்: வாழ்வளிக்கும் ஆண்டவரே உம்மைத் துதிக்கிறோம்.


ஆராதனை நடத்துபவர்: உன்னதத்திலிருந்து இவ்வுலகத்திற்கு வந்து, எங்கள் பாவங்களுக்காக மரித்து, தீமைகளை உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் வென்ற உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்காக உம்மைத் துதிக்கிறோம்.

இறைமக்கள்: வாழ்வை மீட்டெடுக்கும் கிறிஸ்துவே உம்மைத் துதிக்கிறோம்.


ஆராதனை நடத்துபவர்: எங்கள் வாழ்வின் வழிகாட்டியாகவும், உற்ற துணையாகவும் நின்று, ஒருபோதும் நாங்கள் வழுவாதபடி எங்களைக் காத்து, அனுதினமும் உம்முடைய இரக்கத்தினாலே எங்களைப் புதுப்பித்து, திருச்சபையாக எங்களை உம்முடைய படைப்புகளோடு இணைத்து வழிநடத்துகிற தூய ஆவியானவருக்காக உம்மைத் துதிக்கிறோம்.

இறைமக்கள்: வாழ்வை முழுமையாக்கும் தூய ஆவியானவரே உம்மைத் துதிக்கிறோம்.



5. பாவ அறிக்கை ஜெபம்:
இயற்கையை எழுச்சி அடையச் செய்து அது பெருகி மலர கிருபை அளித்தது போல கடவுளின் குடும்ப அங்கத்தினராக நாங்கள் இந்நேரத்தில் கூடி மகிழ எங்களுக்குப் புது ஜீவன் தந்தீரே. உம் அன்பையும், கரிசனையையும் பயமின்றிப் பெற்று உம்மையே நம்பி எங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறோம்.

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.“ (1 யோவான் 1:9)

பாவ மன்னிப்பை அருளும் இறைவனே எங்கள் மனதின் சிந்தனைகளாலும் எங்கள் உள்ளத்தின் விருப்பங்களாலும் எங்கள் உதடுகளின் வார்த்தைகளாலும் எங்கள் செய்கைகளாலும் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறோம் என்று அறிக்கையிடுகிறோம். (அமைதி)

அன்பும் இரக்கமுமுள்ள ஆண்டவரே, அநேக வேளைகளில் நாங்கள் எங்கள் சுய தேவைகளை மட்டுமே சிந்தித்து, எங்கள் பிள்ளைகளின் நிலையையும், தேவையையும் உணராமல் செயல்பட்டுள்ளோம். சிறு பிள்ளைகளை புறந்தள்ளியும், இழிவாக நடத்தியும் அவர்களுக்கான உரிய இடத்தை வழங்காமலும் இருந்த நிலையை எண்ணி, மனம் வருந்தி அறிக்கையிடுகிறோம்.

சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே, பிள்ளைகளாக நாங்கள் உமக்கு கீழ்ப்படியாமலும், எங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படியாமலும் எங்கள் கல்வியைக் குறித்து கவனமில்லாமல், சுறுசுறுபில்லாமல் செயல்பட்ட நிலையையும் எண்ணி, மனம் வருந்தி உம்மிடம் அறிக்கையிடுகிறோம்.

தைரியத்தையும், நம்பிக்கையையும் அருளும் ஆண்டவரே, எங்கள் வாழ்க்கையில் எல்லா காரியங்களுக்காகவும் நேரத்தை செலவிட்டு, ஜெபிப்பதற்கான நேரத்தை செலவிடாமலும், திருச்சபையின் காரியங்களில் பங்கு பெறாமலும், ஞாயிறு பள்ளி நிகழ்வுகளில் உற்சாகமாக செயல்படாமலும் இருந்த நிலையை எண்ணி, மனம் வருந்தி உம்மிடம் அறிக்கையிடுகிறோம்.

எல்லோரும்: இரக்கமுள்ள ஆண்டவரே! உம்மைப் பிரியப்படுத்தாமல் வாழ்ந்ததற்காக உண்மையாகவே வருந்துகிறோம். எங்களுக்கு இரங்கி எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். எங்கள் இருதயத்தை சுத்திகரித்து எங்களை தூய்மைப்படுத்தி இனி புதுஜீவன் பெற்று புதுவாழ்வு வாழ எங்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று எங்கள் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.


6. பாவ மன்னிப்பு: (ஆயர்)
எல்லாம் வல்ல இறைவா, உண்மையாய் மனம் திரும்பி தம் பாவங்களை அறிக்கையிடுகிற யாவருக்கும் மன்னிக்கிறவரே, மனம் திரும்புகிற ஒவ்வொரு உள்ளத்துக்கும் இரட்சிப்பின் கிருபையை நிச்சயப்படுத்தும். எங்கள் பாவங்களை மன்னித்து, தீய எண்ணங்களினின்று எங்களை தூய்மைப்படுத்தும், எங்களுக்காக தம்மையே தியாகம் செய்த இறை மகன் இயேசுவின் வழியாகவே வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.


7. நன்றியறிதலின் ஜெபம்:
ஒவ்வொரு ஜெபத்திற்கும் மறுமொழியாக ”ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்“ என்று கூறுவோம்.

ஆராதனை நடத்துபவர்: பகிர்வையும், அன்பையும், எங்களுக்குக் கற்றுத் தருகிற அன்பான எங்கள் குடும்பத்திற்காக….

இறைமக்கள்: ஆண்டவேரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.


ஆராதனை நடத்துபவர்: வேற்றுமையில் ஒற்றுமை காணும் தென்னிந்திய திருச்சபைக்காகவும், ஞாயிறு பாடசாலைக்காகவும், எங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாயிருப்பவர்களுக்காகவும்….

இறைமக்கள்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்


ஆராதனை நடத்துபவர்: தொன்மையும் அழகும் கொண்ட எங்கள் தேசத்திற்காகவும், திருச்சபைக்காகவும் உம்முடைய படைப்பில் நாங்கள் காண்கிற பன்மைக்காகவும்….

இறைமக்கள்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்


ஆராதனை நடத்துபவர்: உம்மை குறித்து அதிகமாய் நாங்கள் அறிந்துகொள்ள உதவுகிற புத்தகங்களுக்காகவும், எழுத்தாளர்களுக்காகவும், கிறிஸ்தவ இலக்கியங்களுக்காகவும்…..

இறைமக்கள்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்


ஆராதனை நடத்துபவர்: தாலந்துகள், நல் ஈவுகள், ஆசீர்வாதங்களால் எங்களை நிறைத்துள்ளதற்காகவும் அதனை நாங்கள் முழுமையாய் அனுபவிக்கவும், பயன்படுத்தவும் நீர் தந்த தருணங்களுக்காகவும்……

இறைமக்கள்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.


ஆராதனை நடத்துபவர்: கடவுளே நீர் தந்த ஆசீர்வாதங்கள் அனைத்திற்க்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் அருளுகிற உம் கிருபைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்க அருள்புரியும் ஆண்டவரே ஆமென்.

8. திருமறைப் பகுதி:
    பழைய ஏற்பாடு :
    நற்செய்தி வாக்கியம் :
    நிருபவாக்கியம் :
    சங்கீதம் :


9. விசுவாச அறிக்கை:
அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்:
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளை விசுவாசிக்கிறேன்.

அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டுப் பாதாளத்தில் இறங்கினார். மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து எழுந்தருளினார். பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளின் வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும் நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறோம். ஆமென்.

10. வரவேற்பு நடனம்:

11. சிறப்புப் பாடல்:

12. அருளுரை:

13. மகிழ்விக்கும் மன்னா:
நம்பிக்கையில் வளர்த்தல்
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். (மத்தேயு 18:6)

14. அறிவிப்பு:

15. காணிக்கைப் பாடல்:

16. காணிக்கை ஜெபம்:

17. மன்றாட்டு ஜெபம்:

“கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள். அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.“ (1 நாளாகமம் 16:11)

ஒவ்வொரு மன்றாட்டிற்கும் ”ஆண்டவரே இரக்கமாயிரும்” என்று மறுமொழி சொல்லவும்.

ஆராதனை நடத்துபவர்: அகில உலக சமாதானத்திற்காகவும், நன்மதிப்பையும், பொறுமையையும் அருளுகிற ஆவியின் வல்லமை எல்லா தேசங்களுக்குள்ளாக நிறைந்திருக்கவும் உம்மை மன்றாடுகிறோம்.

இறைமக்கள்: ஆண்டவரே இரக்கமாயிரும்.


ஆராதனை நடத்துபவர்: அகில உலக திருச்சபை அன்பினாலும், ஆவியின் ஒருமைப் பாட்டினாலும் நிறைந்து, விசுவாசத்தைக் காத்துக்கொண்டு, ஆண்டவருடைய நாளில் மாசற்றவர்களாக நிற்க கிருபையருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைமக்கள்: ஆண்டவரே இரக்கமாயிரும்.


ஆராதனை நடத்துபவர்: தென்னிந்திய திருச்சபை அக்கறையும், இரக்கமும் நிறைந்து காணப்படவும், குழந்தைகளை நேசிக்கவும். நல்லதொரு எதிர்கால சந்ததியையும், தலைவர்களையும் உருவாக்கவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறோம்.

இறைமக்கள்: ஆண்டவரே இரக்கமாயிரும்.


ஆராதனை நடத்துபவர்: கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் எதிர்காலங்களைக் குறித்த கேள்விகளோடும் இருப்போருக்காகவும், ஆண்டவரின் அரவனைப்பிற்காக ஏங்கி நிற்போருக்காகவும், கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தங்கள் உறவுகளை, உடைமைகளை இழந்த பிள்ளைகளுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம்.

இறைமக்கள்: ஆண்டவரே இரக்கமாயிரும்.


ஆராதனை நடத்துபவர்: வறுமையினால் குழந்தை தொழிலாளர்களாக்கப்பட்டு, கல்வி உரிமையும், சிறுவயதின் வாழ்வியலும், மறுக்கப்பட்ட எங்கள் நண்பர்களுக்காக உம்மை மன்றாடுகிறோம்.

இறைமக்கள்: ஆண்டவரே இரக்கமாயிரும்.


ஆராதனை நடத்துபவர்: யுத்தங்களினால் பாதிக்கப்பட்ட தேசங்களில் பயத்தோடும், கலக்கத்தோடும் வாழும் சிறுவர்களுக்காக உம்மை மன்றாடுகிறோம்.

இறைமக்கள்: ஆண்டவரே இரக்கமாயிரும்.


ஆராதனை நடத்துபவர்: தென்னிந்திய திருச்சபையின் அனைத்து திருமண்டிலங்களிலும் செயல்படுகிற சிறுவர்கள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி நிறுவனங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம்.

இறைமக்கள்: ஆண்டவரே இரக்கமாயிரும்.


ஆராதனை நடத்துபவர்: தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயருக்காகவும், அனைத்து பேராயர்களுக்காகவும், சினாட் தலைமை கழகத்திற்காகவும், அனைத்து அலுவலர்களுக்காகவும், இயக்குனர்கள், ஆயர்கள், சிறப்பாக சிறிஸ்தவக் கல்வித் துறைக்காகவும், ஞாயிறு பள்ளி ஊழியங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம்.

எல்லோரும்: இவையனைத்தும் எங்கள் ஆண்டவரும் அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வாழியாகவே உம்மை வேண்டிக்கொள்ளகிறோம். ஆமென்.


18. அர்ப்பணிப்பின் ஜெபம்:
அனைவரும் சேர்ந்து சொல்லுவோம்
அன்புள்ள ஆண்டவரே, எங்கள் திருச்சபையிலும், குடும்பத்திலும் நற்செய்தியின் நடுவிலே நாங்கள் வளருவதற்கான கிருபைகளைத் தந்திருக்கிற உமக்கு நன்றி செலுத்துகிறோம். சிலுவையில் நீர் எங்களுக்காக ஏற்படுத்தின மீட்பிலும், உம்மைக் குறித்த புரிதலில் வளர பெலன் தாரும். எங்கள் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு உம்மால் மாத்திரமே இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுகிறோம் என்ற படிப்பினையை உணர்ந்து செயல்படும் விசுவாசக் குடும்பமாக எங்களை அர்ப்பணிக்கிறோம். உடைந்திருக்கும் உறவுகளில் எங்கள் சகோதர, சகோதரிகளை இணைக்கிற கருவிகளாக எங்களை அர்ப்பணிக்கிறோம். உம்முடைய கரத்தில் எங்களை ஒப்புக் கொடுத்து, உமக்கு கீழ்ப்படிந்து, எங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் திருச்சபையின் மூப்பர்களையும் மதித்து நடக்க எங்களுக்கு பெலன் தாரும். உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ எங்களுக்கு கிருபை செய்யும் ஆமென்.


19. கர்த்தருடைய ஜெபம்:
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.


20. நிறைவு ஜெபம்:

21. இறை ஆசி:
சிறு பிள்ளைகளின் நேசரான நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களைத் தாங்குவதாக. பிதாவாகிய தேவனுடைய அன்பு உங்களோடிருப்பதாக. பரிசுத்த ஆவியானவர் உங்களை நடத்தி, எல்லா மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் இன்றும் என்றும் உங்களுக்கு அருள்வாராக. ஆமென்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.