Type Here to Get Search Results !

அப்போஸ்தலர் நடபடிகள் | Book of Acts 6-8 Bible Study in Tamil | Christian Message | Part 4 | Jesus Sam

==============
அப்போஸ்தலர் நடபடிகள் பாகம் நான்கு (4)
==============
ஆறாம் (6) அதிகாரம்
=============

பரிசுத்த ஆவியினாலும், ஞானத்தினாலும் நிரைந்தவர்களும், ஜனங்களிடத்தில் நற்சாட்சி பெற்றவர்களுமாகிய ஏழுபேரை தெரிவுசெய்தார்கள். அவர்கள்மேல் அப்போஸ்தலர்கள் கைகளை வைத்தபோது அவர்கள் பந்திவிசாரிப்புக்காக தெரிவு செய்யப்பட்டார்கள்.

சாதாரண பந்தி விசாரிப்புக்காக சிலரை தெரிவு செய்யும்போது அப்போஸ்தலர்கள் அவர்கள் மேல் கைகளை வைத்து தெரிவு செய்தார்கள்.

ஒரு ஊழியன் என்பவன் சபை மூப்பர்களால் ஏற்படுத்தப்பட வேண்டும். தங்களைத் தாங்களே ஊழியனாக அழைத்துக் கொண்டு ஊழியம் செய்வதை ஆண்டவர் விரும்பவில்லை.


பந்தி விசாரிப்பு ஊழியம் என்பது ஒரு சாதாரண ஊழியம் அல்ல. பந்தி விசாரிப்பு ஊழியம் செய்த ஸ்தேவானையும், பிலிப்புவையும் தான் ஆண்டவர் மிகவும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்தினார்.

ஸ்தேவான், பிலிப்பு இந்த இரண்டு பெயர்களும் கிரேக்க பெயர்கள். ஸ்தேவான் என்றால் கிரீடம் என்று பொருள். பிலிப்பு என்றால் குதிரைப் பிரியன் என்று பொருள்.

அப்போஸ்தலர் 6:7-ல் தேவவசனம் விருத்தியடைந்து சீஷர்களின் தொகை எருசலேமில் பெருகிற்று என்று வாசிக்கிறோம். அப்போஸ்தலர் 1:8-ல் சொல்லப்பட்டது போல முதலாவது எருசலேமில் சாட்சிகளாய் இருந்தார்கள். எருசலேமில் சபை நாளுக்கு நாள் வளர்ந்து பெருகியது. கடின இருதயமுள்ள ஆசாரியர்களும் அநேகர் விசுவாசித்து கீழ்ப்படிய ஆரம்பித்தார்கள்.


பந்தி விசாரிப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட ஸ்தேவானின் மூலமாக அநேக அற்புதங்களும், அடையாளங்களும் நடந்தது.

ஒருவர் ஊழியத்திற்காக அழைக்கப்படும்போது உடனே ஆண்டவர் அனைத்து பொறுப்புக்களையும் கொடுப்பதில்லை. சில ஊழியர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடனே அனைத்து பொறுப்புக்களையும் கொடுத்துவிடுகிறார்கள். அதை ஆண்டவர் ஒருபோதும் விரும்புவதில்லை. சிறிய சிறிய பொறுப்புகளை கொடுக்கும்போது, அதில் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருப்பார்களானால், கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பொறுப்புகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார்.

முதலில் பந்தி விசாரிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட ஸ்தேவான், சில நாட்களுக்குப் பின்பே போதக ஊழியத்திற்கும், அற்புத அடையாளங்கள் செய்கின்ற ஊழியத்திற்கும் பயன்படுத்தப்படுகிறார்.


எலியா, எலிசா
பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான தீர்க்கதரிசியாக கருதப்பட்டவர் எலியா. எலியாவிற்கு எலிசா என்ற உதவி ஊழியன் இருந்தார். இந்த எலிசா எலியாவிற்கு செய்த ஊழியம் என்வென்றால், எலியாவின் கைக்கு தண்ணீர் வார்த்தார். ஒரு ஆண்டுகள் இரண்டு ஆண்டுகள் அல்ல 13 ஆண்டுகள் எலிசா எலியாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்தார். இதைத்தவிற வேறு எந்த ஊழியத்திலும் எலியா எலிசாவை பயன்படுத்தவில்லை.

எலிசா பெரிய ஐசுவரியவான். எலிசா ஐசுவரியவானாய் இருந்தாலும், 13 ஆண்டுகள் எலியாவிற்கு அடங்கியிருந்து, அவருக்கு பணிவிடைகள் செய்து வந்தார். முடிவிலே எலியாவின் அபிஷேகம் இரண்டு மடங்காக எலிசாவிற்கு கிடைத்தது.

எலிசா பெரிய ஊழியனாக வளர்ந்தபோது, தனக்கு ஒரு உதவி ஊழியனை வைத்திருந்தார். அவருடைய பெயர் கேயாசி. எலிசா தன்னுடைய உதவி ஊழியன் கேயாசியை தொடக்கத்திலேயே ஊழியத்தில் பயன்படுத்துகிறார்.

சூனேம் ஊரைச் சார்ந்த ஒரு பெண்ணின் மகன் மரித்தபோது, எலிசா தனது கோலை கேயாசியிடம் கொடுத்து, நீ இந்த கோலை பிள்ளையின் மேல் வைத்து அவனுக்கு உயிர் கொடு என்று சொல்லுகிறார். எலிசா சொன்னபடி செய்தும் பிள்ளை உயிரடையவில்லை. பின்பு எலிசா அந்த பிள்ளையின் மீது படுத்து பிள்ளைக்கு உயிர் கொடுக்கின்றார்.

தொடக்கத்திலேயே கேயாசி ஊழியத்தில் பயன்படுத்தப்பட்டதால் அவரால் ஊழியத்தில் முதிர்ச்சி அடையமுடியவில்லை.

பிற்காலத்தில் சீரிய தேசத்து படைத்தலைவன் நாகமானின் குஷ்டரோகம் எலிசாவின் மூலமாக சுகமடைந்தபோது, நாகமான் எலிசாவிற்கு காணிக்கை கொடுக்கின்றார். அதற்கு எலிசா உம்முடைய காணிக்கையை நீரே எடுத்துச் செல்லும், எனக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஊழியத்தில் முதிர்ச்சியடையாத எலிசாவின் உதவி ஊழியன் கேயாசி, நாகமானின் பின்னாக ஓடி, எலிசா தீர்க்கதரிசி காணிக்கை வாங்கிவரச் சொன்னார் என்று பொய் சொல்லி வாங்கி அதை தன்னுடைய வீட்டில் பதுக்கி வைத்துக்கொண்டார். கேயாசியின் இச்செயல்களால் அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் நாகமானின் குஷ்டம் வந்தது.


உலகப்பிரகாரமான தகப்பன்மார் தாங்கள் அடைந்த பாடுகளையும், உபத்திரவங்களையும் தங்கள் பிள்ளைகள் அடையக்கூடாது என்பதற்காக அவர்கள் ஆசைப்பட்ட எல்லா காரியங்களையும் அவர்களுக்கு கொடுப்பார்கள்.

அதைப்போலவே ஒருசில ஊழியர்களும் செயல்படுகிறார்கள். தாங்கள் மிகவும் கடினப்பட்டு ஒரு சபையை எழுப்பியிருப்பார்கள். தான் அடைந்த பாடுகளையும், உபத்திரவங்களையும் தன் உதவி ஊழியன் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக அவசரப்பட்டு அவர்களை ஊழியத்தில் பயன்படுத்துவார்கள். அப்படி அவசரப்பட்டு ஊழியத்தில் பயன்படுத்தப்படுகிறவர்கள், ஊழியத்தின் முதிர்ச்சி இல்லமையால், சிலநாட்களில் வழிதவறி சென்றுவிடுகிறார்கள்.

சில ஊழிய ஸ்தாபனங்களில், நேற்றைக்கு முன் தினம் இரட்சிக்கப்பட்ட ஒருவருக்கு, நேற்று ஞானஸ்நானம் கொடுத்து, இன்று ஊழியனாக, போதகராக ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஊழியர்களின் முதிர்ச்சியில்லாமையினால் தான் விசுவாசிகள் சிதரடிக்கப்படுகிறார்கள்.


ஸ்தேவான் பந்திவிசாரிப்புக்காக தெரிவு செய்யப்படும் முன்னமே பரிசுத்த ஆவியினால் நிரைந்திருந்தார், ஞானத்தினால் நிரைந்திருந்தார், ஜனங்களிடத்தில் நற்சாட்சியும் பெற்றிருந்தார். பின்பு, பந்தி விசாரிப்புக்காக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டவர் அவரை ஊழியத்தில் எடுத்து பயன்படுத்தினார்.

ஸ்தேவானின் ஞானத்தைப் பார்த்து அவரோடு தர்க்கிக்கும்படி அநேகர் அவரிடத்தில் வந்தார்கள்.


ஸ்தேவானோடு பேசும்படி வந்தவர்கள்:
1. லிபர்த்தீனர்:
இவர்கள் லிபியா பிரதேசத்தைச் சார்ந்த யூதர்கள். மத்திய கிழக்கு பகுதியைச் சார்ந்தவர்கள். இவர்கள் ஆவிக்குரிய ரீதியில் அதிக ஞானம் கொண்டவர்கள். தேவதூதர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறவர்கள்.

2. சிரேனே பட்டணத்தார்:
இவர்கள் ஆப்பிரிக்காவைச் சார்ந்த யூதர்கள். பிரயோக ரீதியாக அநேக காரியங்களை கற்றுத் தேர்ந்தவர்கள்.

3. அலெக்சந்திரியா பட்டணத்தார்:
இவர்கள் எகிப்து சேதத்தைச் சார்ந்த யூதர்கள். மதங்களைப் பற்றியும், உலக சரித்திரங்களைப் பற்றியும் அதிக ஞானம் கொண்டவர்கள்.

4. சிலிசியா நாட்டார்:
இவர்கள் ஐரோப்பியாவைச் சார்ந்த யூதர்கள். இவர்கள் கிரேக்கர்களைப் போலவே தத்துவ ஞானிகளாக இருந்தவர்கள்.

5. ஆசியா தேசத்தார்:
இவர்கள் மதக் கோட்பாடுகளில் பக்தி வைராக்கியம் கொண்டவர்கள்.

இப்படியாக பலதரப்பட்ட மக்கள் எழும்பி ஸ்தேவானோடு தர்க்கம்பண்ணினார்கள். பலதரப்பட்ட ஞானமும், அனுபவமும் கொண்ட இவர்கள் ஸ்தேவானோடு பேசி, அவரை எதிர்த்து நிற்கக்கூடாதிருந்தார்கள். அவர்களுடைய எல்லா கேள்விகளுக்கும் சரியாய், நேர்த்தியாய் பதில் சொல்லும் அனுபவமும், பக்குவமும், ஞானமும் ஸ்தேவானுக்கு இருந்தது.

சாதாரண பந்தி விசாரிப்புக்காரனாகிய ஸ்தேவானுக்குள் இவ்வளவு ஞானம் இருந்தது. கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்கின்ற நமக்குள் எவ்வளவு ஞானம் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம்.

ஸ்தேவானைக் குறித்து அதிக காரியங்கள் வேதத்தில் எழுதப்படவில்லை என்றாலும், அவருக்குள் எவ்வளவு ஞானம் இருந்தது, வேதத்தையும் உலக ஞானத்தையும் அவர் எந்த அளவிற்கு கற்று வைத்திருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊழியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வேதத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நமக்கு தெரிந்த சில காரியங்களை வைத்துக்கொண்டு, அதையே ஜனங்களுக்கு போதிக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் அநேக புதிய காரியங்கைளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய ஞானமும், அறிவும் நம்முடைய செயல்பாடுகளில், நம்முடைய வார்த்தைகளில் வெளிப்பட வேண்டும்.


அப்போஸ்தலர் 6:11-ல் ஸ்தேவான் மோசேக்கும், தேவனுக்கும் விரோமாக பேசினான் என்று சொல்லும்படியாக ஜனங்களை ஏற்படுத்தினார்கள்.

மோசே என்றால் மோசேயைக் குறிப்பதில்லை, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தைக் குறிக்கிறது.

ஸ்தேவானுடைய ஞானத்தையும், ஆவியையும் எதிர்த்து நிற்க முடியாததால், அநேக பொய் சாட்சிகளை ஸ்தேவானுக்கு விரோதமாக ஏற்படுத்துகிறார்கள்.

ஸ்தேவானின் முகம் தேவதூதனின் முகம் போல பிரகாசித்தது.


அப்போஸ்தலர் ஏழாம் (7) அதிகாரம்
================
அப்போஸ்தலர் 7:2-50 வரை வாசித்தால் ஸ்தேவான் ஒரு பெரிய பிரசங்கம் பண்ணுகிறார். இவருடைய பிரசங்கத்தில் முழு பழைய ஏற்பாடும் அடங்கிவிடுகிறது. ஸ்தேவான் பழைய ஏற்பாட்டை நன்கு கற்றுத் தேர்ந்தவர் என்பது இதிலிருந்து தெரிகிறது.

அப்போஸ்தல் 7:2-ல் ஆபிரகாம் காரானூரில் இருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆதியாகமம் 11:31-ல் ஆரான் என்று எழுதப்பட்டுள்ளது. ஆரான் என்பதும், காரான் என்பதும் ஒரே இடத்தை குறிக்கும் சொற்கள்.

ஆண்டவர் ஆபிரகாமை தெரிந்தெடுத்தது முதல் இயேசு கிறிஸ்து வரை உள்ள வரலாற்றை மேலோட்டமாக எடுத்துக் காட்டுகிறார் ஸ்தேவான்.

ஸ்தேவான் பேசும்போது ஆமோஸ் தீர்க்கதரிசனத்தைக் குறித்தும், ஏசாயா 66-ம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களையும் எடுத்து பேசுகிறார்.

வேத வசனத்தை நன்கு அறிந்து வைத்திருந்தார் ஸ்தேவான்.

ஒரு சிறந்த ஊழியனுக்கு ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை உள்ள சரித்திரத்தை குறித்த மேலோட்டமான கண்ணோட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்த ஆகமங்களைக் குறித்து எனக்கு தெரியும், இந்த ஆகமங்களைக் குறித்து எனக்கு தெரியாது என்று நாம் சொல்லக்கூடாது. முழு வேதத்தைக் குறித்த மேலான கண்ணோட்டம் நமக்குத் தேவை.

வேதத்தைக் குறித்து நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும் என்றால், ஒவ்வொரு நாளும் வேதத்தை தியானிக்க வேண்டும். ஒரு வருடத்திற்குள்ளாக பலமுறை வேதத்தை வாசித்து முடித்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் வேத ஞானம் நமக்கு கிடைக்கும்.

சாதாரண பந்திவிசாரிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட ஸ்தேவான் எப்படி அவர்களுடைய வேதமாகிய பழைய ஏற்பாட்டை மனதிலே பதித்து வைத்திருந்தார் என்று யோசித்தது பாருங்கள்.

வேதத்தைக் குறித்த ஆழமான கண்ணோட்டம், ஆழமான பார்வை நமக்கு இருந்தால் மாத்திரமே நாம் சிறந்த ஊழியனாக செயல்பட முடியம்.


அநேகர், ஒரு ஊழியர் மேடையில் நின்று பேசுவதைப் பார்த்துவிட்டு, அவருக்கு கிடைக்கின்ற மதிப்புக்களையும், உயர்வையும் நினைத்து, நானும் ஊழியத்திற்கு வருகிறேன் என்று சொல்லுகிறார்கள். அவர் மேடையில் நின்று பேசுவது மாத்திரம் ஊழியம் அல்ல. அதற்காக அவர் எவ்வளவாக தன்னைத் தயார் படுத்துகிறார் என்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஒரு சிறந்த ஊழியர் மேடையில் நின்று கர்த்தருடைய வார்த்தையை போதிக்கிறார் என்றால், அதற்காக அவர் பலமணி நேரம் ஆயத்தப்படுவார். மேடையில் அவர் பேசுவதைக் கேட்டு ஊழியத்திற்காக ஈர்க்கப்படுகிறவர்கள், அவர் எந்த அளவிற்கு மேடைக்கு வெளியே தன்னை ஆயத்தப்படுத்துகிறார் என்பதை பார்க்க தவறிவிடுகிறார்கள்.


ஸ்தேவான் பிரசங்கத்தை முடிக்கும் நேரத்தில், ஜனங்களுடைய குற்றங்களை அவர்களுக்கு உணர்த்துகிறார். உடனே அவர்கள் கோபமடைந்து அவரை கொலை செய்யும்படி எத்தனித்தார்கள்.

கூடியிருந்தவர்கள் ஸ்தேவானை கொலை செய்ய எத்தனித்த நேரத்தில், ஸ்தேவான் வானம் திறந்திருக்கிறதையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டார்.

இயேசுவானவர் உயிர்த்தெழுந்த பின்பு நாற்பது நாட்கள் சீஷர்களோடு இருந்தபின்பு, பரலோகத்தில் பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருந்தார். வெளிப்படுத்தின விசேஷத்திலும் இயேசுவானவர் பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருந்தார் என்று தான் வாசிக்கிறோம். ஆனால் ஸ்தேவானை அவர்கள் கொலைசெய்த நேரத்தில் இயேசுவானவர் எழுந்து நின்றதாக ஸ்தேவான் கண்டார்.

அநேக வேத அறிஞர்களின் கருத்து என்னவென்றால், கிறிஸ்துவுக்காக மரித்த முதல் இரத்தசாட்சி ஸ்தேவான். அவர் மரிக்கும்போது அவரை ஏற்றுக்கொள்வதற்காக சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்த இயேசுவானவர் எழுந்து நின்று ஸ்தேவானை வரவேற்கிறார்.

ஸ்தேவானை கொலை செய்யும்படியாக நகரத்திற்கு புறம்பே கொண்டு சென்றார்கள் என்று வாசிக்கிறோம். எந்த வாசல் வழியே கொண்டு சென்றார்கள் என்றால், சிங்க வாசல் வழியே கொண்டு சென்றதாக சரித்திர புத்தகங்களில் நாம் பார்க்க முடியும்.

இதனால் எருசலேமின் சிங்க வாசலுக்கு ஸ்தேவானின் வாசல் என்ற பெயர் வந்தது.


கல்லெறிந்து கொலை செய்தல்:
யூதர்கள் முறைப்படி ஒருவனை கல்லெறிந்து கொலை செய்ய வேண்டுமானால், குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. இவர் இந்த குற்றத்தை செய்தார் நான் என்னுடைய கண்களால் பார்த்தேன், என்னுடைய காதால் கேட்டேன் என்று யாரேனும் இருவர் சாட்சி சொல்ல வேண்டும்.

இருவருடைய சாட்சிகளும் நிரூபிக்கப்பட்ட பின்பே, குற்றவாளி கல்லெறிந்து கொலைசெய்யப்பட வேண்டும் என்று ஆலோசனை சங்கத்தார் கட்டளையிடுவார்கள்.

எல்லா இடங்களிலும் கல்லெறிந்து கொலை செய்ய மாட்டார்கள். யூதர்கள் அதற்கென ஒரு சில இடங்களை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். எருசலேமிற்கு அருகே கல்லெறிந்து கொலை செய்யும்படியான ஒரே ஒரு இடம் தான் இருந்தது.

கல்லெறியும் இடத்திற்கு குற்றவாளியை கொண்டு வந்த பின்பு, ஜனங்கள் எல்லோரும் கூடியிருக்க அந்த குற்றவாளியை மேடான ஒரு இடத்தில் நிறுத்துவார்கள்.

அவன் அருகே இந்த இரண்டு சாட்சிக்காரர்கள் நின்றுகொண்டிருக்க, ஆலோசனை சங்கத் தலைவர், குற்றவாளியின் பெயரை அறிவித்து, இந்த நபர் இந்த குற்றம் செய்தபடியினால் அவருக்கு அனைவர் முன்னிலையிலும் மரண தண்டனை நியமிக்கப்படுகிறது என்று சொல்லுவார்.

பின்பு குற்றத்தைப் பார்த்த அந்த முதலாம் சாட்சிக்காரர் அந்த உயரமான மேட்டிலிருந்து குற்றவாளியை கீழே தள்ளிவிட வேண்டும். குற்றவாளி உடனே மரித்துவிட்டால் ஜனங்கள் கலைந்து சென்றுவிடுவார்கள். அவர் மரிக்கவில்லை என்றால், மேடான இடத்தில் நின்று கொண்டிருக்கின்ற அந்த முதலாம் சாட்சிக்காரர் ஒரு பெரிய கல்லை எடுத்து குற்றவாளியின் மேல் போட வேண்டும். அந்த கல் அவருடைய தலையிலோ, மார்பிலோ பட்டால் அவர் உடனே மரித்துப்போய்விடுவார், அவர் எறிந்தகல் குற்றவாளியின் மேல் படவில்லை என்றால், இரண்டாம் சாட்சிக்காரர் அந்த மேடான இடத்திலிருந்து ஒரு பெரிய கல்லை எறிய வேண்டும்.

இப்படி இரண்டு சாட்சிக்காரர்கள் கல்லெறிந்த பின்பும் குற்றவாளி உயிரோடிருப்பாரானால், பின்பு தான் கூடியிருந்த ஜனங்கள் கற்களை எடுத்து குற்றவாளி மரிக்கும் வரை அவர்மேல் எறிய வேண்டும்.


மகதலேனா மரியாள் (யோவான் 8:2-11)
விபச்சாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். அதற்கு இயேசு உங்களில் பாவம் செய்யாதவன் முதல் கல்லெறியக்கடவன் என்று சொல்லுகிறார்.

இங்கே ஆண்டவர் உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ, அவனே அந்த முதல் சாட்சி என்று சொல்லுகிறார்.

பாவம் செய்யாதவன் என்றால் எந்த பாவம் என்பதில் இரண்டு விதமான கருத்துக்களை ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.

முதலாவதாக, மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் பாவம் செய்தவர்கள் தானே. அப்படியானால் பாவம் செய்யாத எவனாவது முதலாவது கல்லை எறியக்கடவன் என்று இயேசு சொன்னார் என்பதாக ஒரு கருத்து உண்டு.

மகதலேனாள் மரியாள் மிகவும் அழகுள்ள ஒரு பெண்ணாக இருந்தாள். அவளோடு இணைந்து பாவம் செய்யாதவன் எவனோ அவன் முதலாவது அவள் மேல் கல்லெறியக்கடவன் என்று இயேசு சொன்னதாக மற்றும் ஒரு கருத்தும் உண்டு்.

ஒருவேலை இயேசு இவள்மேல் கல்லெறியுங்கள் என்று சொல்லியிருந்தால், கூடியிருந்த ஜனங்கள் உடனே கல்லெறிந்து கொலை செய்திருப்பார்கள் என்று நாம் நினைக்கிறோம். அப்படியல்ல, அவள் அங்கிருந்து அந்த மேடான பகுதிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அங்கிருந்து அவரை கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய வேண்டும்.


நாசரேத் என்ற ஊரிலும் அப்படிப்பட்ட உயரமான ஒரு இடம் இருந்தது. லூக்கா 4-ம் அதிகாரத்தில் இயேசுவை அந்த இடத்திற்கு நேராக கொண்டுசென்று கீழே தள்ளிவிடப்பார்த்தார்கள் என்று வாசிக்கிறோம். இயேசுவோ அவர்கள் நடுவிலிருந்து மறைந்து போனார்.


ஸ்தேவானை கொலை செய்தது எருசலேமில்
எருசலேமில் கல்லெறிந்து கொலை செய்யும்படியான இடம் ஒன்று தான் இருந்தது. சாலொமோன் எருசலேம் தேவாலயத்தைக் கட்டியபோது, அதற்காக கற்களை ஒரு இடத்திலிருந்து எடுத்தார். அந்த இடம் கற்களால் ஆனது. அங்கே தோண்டி கற்களை எடுக்க எடுக்க அந்த இடம் ஒரு மண்டையோடு போன்ற அமைப்பாக மாறியது. அதற்கு பெயர் தான் கபாலஸ்தலம். கபாலஸ்தலம் என்பதன் எபிரெய பதம் கொல்கொதா. இந்த இடத்தில் தான் ஸ்தேவான் கொலை செய்யப்பட்டார்.

ஸ்தேவான் கல்லெறிந்து கொலைசெய்யப்பட்ட இடத்தில் தான் இயேசுவானவரும் சிலுவையில் அறைந்து கொலைசெய்யப்பட்டார்.

கபாலஸ்தலம் என்ற மேடான இடத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு ஸ்தேவான் கொலை செய்யப்பட்டார்.

இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்டது மலையின் மேல் அல்ல. கபாலஸ்தலம் என்ற இடத்தில், பாதை ஓரத்தில் சிலுவையில் அறையப்பட்டார். பொதுவாக குற்றவாளிகளை சிலுவையில் அறையும்போது பாதை ஓரங்களில் தான் சிலுவையில் அறைவார்கள். மலையின் மேல்தான் சிலுவையில் அறைவார்கள் என்று நாம் நினைப்பது தவறான.


அப்போஸ்தலர் எட்டாம் (8) அதிகாரம்
============
ஸ்தேவான் கொலை செய்யப்பட்டதால் அப்போஸ்தலர் தவிற மற்ற அனைவரும் பல இடங்களுக்கு சிதறடிக்கப்படுகிறார்கள். அப்போஸ்தலர் 1:8-ல் சொல்லப்பட்டபடி சுவிசேஷம் மற்ற இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.

சவுல் என்பவர் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தி, காவலில் அடைத்து சபையை பாழாக்கினார்.


பிலிப்பு
பந்திவிசாரிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட பிலிப்பு என்பவர் சமாரியாவிற்கு சென்று சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

அப்போஸ்தலர் 1:8-ல் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் என்று வாசிக்கிறோம். ஏன் ஆண்டவர் சமாரியாவை குறிப்பிட்டு காட்ட வேண்டும்.

கி.பி. 722-ம் ஆண்டு இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் அசீரியர்களால் கைப்பற்றப்பட்டது. இந்த அசீரியர்கள் வடக்கு ராஜ்யத்தில் உள்ள ஜனங்களில் அநேகரை வேறு நாடுகளில் குடியேற்றி, வேறு நாடுகளில் உள்ள ஜனங்களை இந்த வடக்கு ராஜ்யத்தில் குடியேற்றினார்கள். வடக்கு ராஜ்யத்தின் தலைநகரம் சமாரியா.

இந்த சமாரியாவில் இருந்த இஸ்ரவேலர்கள், அசீரியா ராஜாவால் தங்கள் நாட்டுக்குள் வந்த மற்ற ஜனங்களோடு சம்பந்தங்கலந்தார்கள். இதை ஆண்டவர் வெறுத்தார்.

இதனால் தெற்கு ராஜ்யத்தில் உள்ள யூதா, பென்யமீன் கோத்திரத்தார் வடக்கு ராஜ்யத்தில் உள்ள இஸ்ரவேல் ஜனங்களை வெறுத்தார்கள். இஸ்ரவேலர்கள் புறஜாதிகளோடு சம்பந்தங்கலந்ததால், இஸ்ரவேலர்கள் புறஜாதிகளைவிட மேசமானவர்கள் என்று தெற்கு ராஜ்யத்தில் உள்ளவர்கள் நினைத்தார்கள்.

எனவே, யூதர்கள் சமாரியர்களை அறுவெறுத்தார்கள். யூதர்கள் கலிலேயாவிலிருந்து எருசலேமிற்கோ, எருசலேமிலிருந்து கலிலேயாவிற்கு செல்ல வேண்டுமானால் சமாரியா விழியே தான் செல்ல வேண்டும். ஆனால் யூதர்கள் சமாரியரை வெறுத்தபடியினால் சமாரியா வழியே செல்லாமல், பல மையில் தூரம் நடந்து வேறு வழியாய் செல்வார்கள்.

இப்படியாக சமாரியர்களை யூதர்கள் வெறுத்தார்கள். அப்படிப்பட்ட சமாரியர்களுக்கும் ஆண்டவர் சுவிசேஷத்தை அறிவிக்க சென்றார். யோவான் 4-ம் அதிகாரத்தில் இயேசு சமாரிய ஸ்திரீ ஒருத்தியின் மூலமாக முழு சமாரியர்களுக்கும் சுவிசேஷம் அறிவித்தார் என்று வாசிக்கிறோம்.

ஆண்டவர் யாரையும் வெறுக்கிறவர் அல்ல. யூதர்களால் புறக்கணிக்கப்பட்ட சமாரியாவையும் இயேசு நேசித்தார்.

அந்த சமாரியர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியாக பலிப்பு என்ற நபரை ஆண்டவர் ஏற்படுத்துகிறார். பிலிப்புவின் மூலமாக சமாரியாவில் பெரிய எழுப்புதல் உண்டானது.


மாயவித்தைக்காரன்
சமாரியாவிலே சீமோன் என்னும் மாயவித்தைக்காரன் இருந்தான். சமாரியாவில் உள்ள ஜனங்கள் அனைவரும், கடவுளுடைய பெரிய சக்தி இவன் தான் என்று எண்ணி, அவனுக்கு செவிகொடுத்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட சீமோன் பிலிப்புவின் ஊழியத்தினால் கவரப்பட்டு, ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.


சமாரியாவில் எழுப்புதல் நடைபெற்றதை அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு பேதுருவையும், யோவானையும் சமாரியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

 சமாரியாவில் உள்ளவர்கள் வசனத்தை ஏற்றுக் கொண்டும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாததால், பேதுருவும், யோவானும் அவர்களுக்காக ஜெபம் பண்ணினார்கள். அப்பொழுது சமாரியர்களும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

பேதுரு யார்மேல் கை வைக்கிறாரோ, அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டார்கள். இதை பார்த்த மாயவித்தைக்காரனாய் இருந்து இரட்சிக்கப்பட்ட சீமோன், பேதுருவிடமும், யோவானிடமும் பணத்தைக் கொடுத்து, நான் யார் மீது கை வைக்கிறேனோ அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும்படி எனக்கு அதிகாரம் கொடுங்கள் என்று கேட்டார்.

சீமோன் பணத்தினால் ஆவியின் வரங்களைப் பெற்றக்கொள்ள முடியும் என்று நினைத்தார்.

சீமோனின் இந்த நினைவுகளால், பேதுரு சீமோனைப்பார்த்து, பணத்தினாலே நீ ஆவியின் வரங்களைப் பெற நினைத்ததால், உன் பணம் உன்னோடே கூட நாசமாகக் கடவது என்று சொல்லுகிறார்.

அப்போஸ்தலர்களிலேயே பேதுரு சற்று வித்தியாசமானவர். சீமோனின் மீது கோபம் கொண்டு அவனை திட்டுகிறார். இப்படிப்பட்ட ஊழியர்கள் இந்த நாட்களில் இருந்திருந்தால், அவர்கள் மக்களை கடிந்துகொள்ளக்கூடிய அந்த நிகழ்வை ஜனங்கள் பிடித்துக்கொண்டு, அவரை கள்ள உபதேசி என்றே சொல்லிவிடுவார்கள்.

அனனியா, சப்பீராள் நிகழ்விலும் சரி, மாயவித்தைக்காரனாகிய சீமோனின் காரியத்திலும் சரி, பேதுரு பயங்கரமாக கோபம் கொள்வதை நாம் பார்க்க முடியும்.

ஏன் பேதுரு மாயவித்தைக்காரனாகிய சீமோனின் மீது கோபம் கொள்ள வேண்டும். சீமோனின் பார்வையில் அவன் செய்தது சரியான காரியம் தான். அவன் சமாரியாவில் மிகப்பெரிய மாயவித்தைக்காரனாக இருந்தாலும், மாயவித்தை செய்து ஜனங்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, இப்போது ஆண்டவரை ஏற்றுக்கொண்டுவிட்டாரே. பின்னே ஏன் பேதுரு சீமோனை கடிந்துகொள்ளுகிறார்.

பேதுருவின் காரியத்தைப் பார்த்து நாம் நினைக்கலாம், ஒரு ஊழியனுக்கு இது அழகல்ல. ஒரு மாயவித்தைக்காரன் புதிதாக ஆண்டவரை ஏற்றுக்கொண்டுள்ளான், அவன் இப்படி செய்தபோது, பேதுரு இப்படி பணத்தின் மூலமாக அபிஷேகத்தை பெற நினைப்பது தவறு, உங்களை சரிபடுத்திகொள்ளுங்கள் என்று அன்பாய் சொல்லியிருக்கலாமே என்று நாம் நினைக்கலாம்.

இங்கே பார்க்கிறோம், பேதுரு புதிதாக இரட்சிக்கப்பட்டு ஆண்டவரை ஏற்றக்கொண்ட ஒரு மாயவித்தைக்காரனைப் பார்த்து: நீ நாசமாய் போவாய் என்றும், உன்னோடு கூட உன் பணமும் நாசமாய் போகக்கடவது என்றும் கடிந்து பேசுகிறார்.

சீமோன் கொடுத்த பணத்தை காணிக்கையாக ஏற்றுக்கொண்டு பேதுரு அவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கலாமே. புதிதாக இரட்சிக்கப்பட்ட ஒரு மந்திரவாதி கொடுத்ததை காணிக்கையாகக்கூட ஏற்றுக்கொள்ளாமல் அங்கே கடிந்துகொள்ளுகிறதை நாம் பார்க்கிறோம்.

1 கொரிந்தியர் 12:28-ல் பவுல் வரங்களை நாடுங்கள் என்று எழுதுகிறார். வரங்களுக்காக ஆசைப்படுங்கள், வரங்களுக்காக ஜெபியுங்கள் என்று தான் பவுல் கற்றுக்கொடுகிறார். அப்படியிருக்க இந்த சீமோன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கொடுக்க விரும்பினதில் என்ன தவறு இருக்கிறது. ஏன் பேதுரு சீமோனை இவ்வளவு கடினமான வார்த்தைகளை சொல்லி கடிந்துகொள்ள வேண்டும்.


ஏன் பேதுரு இப்படியாக கடிந்துகொள்ளுகிறார் என்றால், நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்காக ஊழியம் செய்ய வரும்போது, ஏதோ ஒரு காரியத்தை விட்டுவிட்டு ஊழியத்திற்கு வருகிறோம். அப்படி ஊழியத்திற்கு வருகின்ற நாம், நாம் விட்டு வந்த காரியங்களை ஊழியத்தில் எதிர்பார்ப்பதை கர்த்தர் வெறுக்கிறார். (எ.கா பணம், படிப்பு, ஜாதி, புகழ், அந்தஸ்து)

ஊழியப்பாதையில் நாம் எதை விட்டுவிட்டு ஊழியத்திற்கு வருகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் எதைவிட்டுவிட்டு ஊழியத்திற்கு வந்தோமோ, அந்த காரியத்தை ஊழியத்திற்குள் நுழைய வைப்பதே பிசாசின் தந்திரம்.


1 இராஜாக்கள் 17
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப், சீதோனிய ராஜாவாகிய யேத்பாகாலின் மகள் யேசபேலை திருமணம் செய்தான். அந்நிய நுகத்தில் திருமணம் செய்வது என்பது தவறு. ஆகாப் மாத்திரம் அல்ல, வேறு அநேகரும் அந்நிய நுகத்தில் திருமணம் செய்தார்கள்.

ஆனால் ஒருபோதும் ஆண்டவர் பஞ்சத்தினால் தேசத்தை அழிக்கவில்லை. ஆகாப்பின் நாட்களில் ஆண்டவர் முழு தேசத்தையும் பஞ்சத்தினால் அழித்தார்.

ஆகாப் விக்கிரக ஆராதனையை தேசத்திற்குள் கொண்டு வந்தார், அதற்காக ஆண்டவர் பஞ்சத்தை அனுப்பினாரா என்றால், வேறு அநேக ராஜாக்களும் விக்கிரகங்களையும், சிலைகளையும் தேசத்திற்குள் கொண்டு வந்தார்கள். ஏன் ஆண்டவர் ஆகாப்பின் நாட்களில் மாத்திரம் பஞ்சத்தை அனுப்ப வேண்டும்.

பஞ்சம் என்பது சாதாரண ஒரு காரியம் அல்ல. மூன்று ஆண்டுகள் தேசம் கொடிய பஞ்சத்தில் வாடியது. பஞ்சம் மூன்று ஆண்டுகளுக்குத் தான் இருக்கப்போகிறது என்றும் யாருக்கும் தெரியாது.

நோவாவின் காலத்தில் ஆண்டவர் வெள்ளத்தை அனுப்பினார், வெள்ளத்தில் ஏராளமான ஜனங்கள் மரித்தார்கள். அவர்களுடைய உயிர் ஒருசில நிமிடங்களில் அவர்களைவிட்டு பிரிந்திருக்கும்.

சோதோம் கொமோரா பட்டணத்தை ஆண்டவர் அழிக்கும்போது, முழு தேசமும் அக்கினியால் அழிந்துவிட்டது. ஜனங்கள் அனைவரும் சில வினாடியில் மரித்துப்போனார்கள்.

ஆனால் ஆகாப்பின் நாட்களில் ஆண்டவர் இதுபோன்ற ஒரு தண்டனையை கொடுக்காமல், பஞ்சத்தினால் உயிரோடு ஜனங்களை சாகடித்தார். பஞ்சம் வரும் என்று ஜனங்களுக்குத் தெரியாது. ஜனங்கள் தானியத்தை சேர்த்து வைத்திருக்கவும் மாட்டார்கள். இன்னும் எத்தனை நாட்கள் பஞ்சம் இருக்கப்போகிறது என்றும் தெரியாது. ஜனங்கள், ஒவ்வொரு நாளும் உயிரோடு செத்துக்கொண்டிருந்தார்கள்.

இப்படி ஒரு வேதனையான சூழ்நிலையை ஆகாப் ராஜாவின் நாட்களில் ஆண்டவர் கொடுக்க காரணம் என்னவென்றால், இஸ்ரவேலிலிருந்து, யோசுவாவின் காலத்திலும், தாவீதின் காலத்திலும் துரத்தப்பட்ட பாகால் என்ற தெய்வத்தை ஆகாப், தன் மனைவி யேசபேலின் மூலமாக இஸ்ரவேலுக்குள் மீண்டும் கொண்டு வந்தான்.

முன்னே இஸ்ரவேலிலிருந்து துரத்தப்பட்ட ஒன்றை, ஆகாப் மீண்டுமாக தேசத்திற்குள்ளே கொண்டுவந்ததால் ஆண்டவர் கோபமடைந்து தேசம் முழுவதையும் பஞ்சத்தினால் வாதித்தார்.


மாயவித்தைக்காரனாகிய சீமோனும் இதே காரியத்தை இங்கே செய்கிறான். இவன் இரட்சிக்கப்படும் முன்பு மாயவித்தை செய்து, ஜனங்களை நான் தான் கடவுள் என்று நம்பவைத்துக் கொண்டிருந்தான். மாயவித்தையின் மூலமாக ஜனங்கள் மத்தியில் சீமோனுக்கு பெரிய மதிப்பும், மரியாதையும் இருந்தது. சமாரியாவிலே பெருமையாக வாழ்ந்த மனிதன் இந்த சிமோன்.

இப்படிப்பட்ட சீமோன், எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டான். பேதுருவும், யோவானும் ஜனங்கள் மேல் கை வைத்த போது அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றார்கள். இதனால் ஜனங்கள் மத்தியிலே பேதுருவுக்கும், யோவானுக்கும் நல்ல மதிப்பு மரியாதை இருந்தது.

சீமோன் எதை விரும்புகிறான் என்றால், இந்த அபிஷேகம் எனக்கும் கிடைத்தால், முன்னே எனக்கு இருந்த அந்த மதிப்பும் மரியாதையும் மீண்டும் கிடைக்கும். எதை விட்டுவிட்டு ஆண்டவரை பின்பற்ற ஆரம்பித்தானோ, அதை மறந்து, அந்த காரியத்தை சபைக்குள்ளும் எதிர்பார்த்தான். எனவே, தான் பேதுரு மிகவும் கோபத்தோடு சீமோனைக் கடிந்துகொள்ளுகிறார்.


இன்றும் அநேக ஊழியர்கள் இந்த தவறை செய்து கொண்டிருக்கிறார்கள். எதை விட்டுவிட்டு ஊழியத்திற்கு வந்தார்களோ அந்த காரியத்தை சபைக்குள்ளே எதிர்பார்க்கின்ற ஊழியர்கள் அநேகர்.

சிலர் ஊழியத்திற்கு வரும் முன்பதாக ஏதோ ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்திருப்பார்கள். அவர்கள் ஊழியத்திற்கு வந்த பின்பும், அதே தலைமைத்துவத்தை எதிர்பார்ப்பார்கள்.

உலகத்தில் பட்டங்களுக்காக ஆசைப்படுபவர்கள் அநேகர். இப்படிப்பட்டவர்கள் ஊழியத்திற்கு வந்த பிறகு, ஊழியத்திலும் பட்டங்களுக்காக ஆசைப்படுவார்கள். ஜனங்கள் என்னை Pastor என்று அழைக்க வேண்டும், ஜனங்கள் என்னை Reverend என்று அழைக்க வேண்டும், ஜனங்கள் என்னை Doctor என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

Pastor, Reverend, Doctor என்று ஜனங்கள் சொல்லுவதில் எந்த தவறும் இல்லை. ஜனங்கள் என்னை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று நான் அசைப்படுவது தவறு. நான் அசைப்படும்போது எனக்குள் இருக்கின்ற தாழ்மை மறைந்து விடுகின்றது.

மற்றவர்கள் என்னை Pastor, Reverend, Doctor என்று அழைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவது பெருமை. ஜனங்களாகவே என்னை Pastor, Reverend, Doctor என்று அழைப்பது கிருபை.

நான் கிருபையில் இருக்கிறேனா? பெருமையில் இருக்கிறேனா? என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


சீமோன் பெருமையினாலேயே வரத்தை விரும்பினார். எனக்கு வரம் கிடைத்தால், அநேகர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுவார்கள், அநேகர் என் மூலமாக ஆண்டவரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காக அவர் வரத்தை விரும்பவில்லை.

எனக்குள் வரங்கள் இருக்கும்போது ஜனங்கள் முன்போலவே இப்பொழுதும் என்னை மதிப்பார்கள். அந்த உயர்வும், பெருமையும் மீண்டும் எனக்கு கிடைக்கும் என்றே சிமோன் வரத்தை விரும்பினார்.

பவுல் கொரிந்தியருக்கு எழுதும்போது வரங்களை நாடுங்கள் என்று எழுதுகிறார். எதற்காக பெருமைக்காக அல்ல, கிருபைக்காக. நாமும் வரங்களை நாட வேண்டும், வரங்களுக்காக ஜெபிக்க வேண்டும். பெருமைக்காக அல்ல, கிருபைக்காக.

ஊழியத்தில் நாம் ஆசைப்படுவதை விட்டுவிட்டு, ஆண்டவர் சொல்வதையே செய்ய வேண்டும். நாம் ஆசைப்படுவதையே ஆண்டவர் சொல்வாரானால், அது மிகப்பெரிய ஆசீர்வாதத்தையும், உயர்வையும் தேடித்தரும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஆண்டவர் நாம் விரும்புவதை நமக்கு சொல்ல மாட்டார். அவர் சொல்லுவதை தான் நாம் விரும்பி செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.


எத்தியோப்பிய மந்திரி
அப்போஸ்தலர் 1:8-ன் படி முதலில் எருசலேமிலும், பின்பு யூதேயாவிலும், பின்னர் சமாரியாவிலும், அதன் பின்பு பூமியின் கடைசி பரியந்தம் சுவிசேஷம் சென்றடைய வேண்டும்.

அப்போஸ்தலர் 6-ல் எருசலேமில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டுவிட்டது. எட்டாம் அதிகாரத்தின் துவக்கத்தில் யூதேயாவிலும், சமாரியாவிலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு விட்டது.

பின்பு எட்டாம் அதிகாரத்தின் பின்பகுதியில் உலகம் முழுவதுக்கும் சுவிசேஷம் அறிவிப்பதற்கான ஒரு வாய்ப்பை ஆண்டவர் ஏற்படுத்துகிறார்.

எத்தியோப்பியா என்பது அந்தக்காலத்தைய உலகத்தின் தெற்கு எல்லை ஆகும். அந்த எத்தியோப்பியாவிலிருந்து ஒருவர் எருசலேமிற்கு வந்தார். இந்த எத்தியோப்பிய மந்திரி இரட்சிக்கப்பட்டுவிட்டாள், அவர் மூலமாக சுவிசேஷம் எத்தியோப்பியா வரை சென்றுவிடும். அப்படியானால், பூமியின் கடைசி பரியந்தம் சுவிசேஷம் சென்றடைந்து விட்டது என்று பொருள்.

எருசலேமிலிருந்து யூதேயா, யூதேயாவிலிருந்து சமாரியா, சமாரியாவிலிருந்து தான் உலகம் முழுவதற்கும் சுவிசேஷம் சென்றடைய வேண்டும். எனவே தான் உலகின் தெற்கு பகுதியில் இருந்து எருசலேமிற்கு வந்த எத்தியோப்பிய மந்திரிக்கு சுவிசேஷம் அறிவிக்க சமாரியாவில் இருந்த பிலிப்புவை ஆண்டவர் பயன்படுத்துகிறார்.

எத்தியோப்பியாலிருந்து வந்த அந்த மந்திரி, தன்னுடைய காரியங்கள் முடிந்த பின்பு, எருசலேமிலிருந்து புறப்பட்டு காசா பட்டணம் வழியாக சென்று எத்தியோப்பியா சென்றடைய திட்டமிட்டுள்ளார். எருசலேமிலிருந்து காசா வழியாக எத்தியோப்பியா செல்லும் வழி வேறு புறத்திலும், பலிப்பு ஊழியம் செய்து கொண்டிருந்த சமாரியா வேறு புறத்திலும் உள்ளது.

வேறு வழியாய் சென்றுகொண்டிருந்த எத்தியோப்பிய மந்திரிக்கு சுவிசேஷம் அறிவிக்க ஆண்டவர் சமாரியாவில் உள்ள பிலிப்புவை பயன்படுத்துகிறார். இந்த மந்திரி எருசலேமிலிருந்து தான் வருகிறார், எருசலேமில் தான் அப்போஸ்தலர்கள் இருந்தார்கள். அப்போஸ்தலர்கள் சிதறிப்போகவில்லை. அவர்கள் மந்திரிக்கு சுவிசேஷம் அறிவித்திருக்கலாம். ஆனால் ஆண்டவர் சமாரியாவில் இருந்த பலிப்புவை அனுப்ப காரணம் என்னவென்றால், சமாரியாவிலிருந்து தான், சுவிசேஷம் உலகம் முழுமைக்கும் சென்றடைய வேண்டும்.

எத்தியோப்பியாவில் ஒரு இராஜஸ்திரீ இருந்தாள். அவள் பெயர் கந்தாகே. அவளுக்கு ஒரு மந்திரி இருந்தார். பொதுவாக அந்நாட்களில் இராணிகளுக்கு மந்திரிமார் ஆண்களாக இருக்க மாட்டார்கள். பெண்களும் இராணிக்கு மந்திரியாக இருக்க மாட்டார்கள். ராணிக்கு மந்திரியாக அந்நகர்களையே ஏற்படுத்துவார்கள். அதாவது திருநங்கைகள்.

தமிழ் வேதாகமம் மந்திரியை ஒரு ஆணாக காட்டுகிறது. ஆனால் மூல பாஷையாகிய கிரேக்க மொழி வேதாகமத்திலும், ஆங்கில மொழி வேதாகமத்திலும் அந்த மந்திரி ஒரு அந்நகர் என்றே எழுதப்பட்டுள்ளது.

இந்த மந்திரி எத்தியோப்பியா செல்லும் வழியில் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தார். ஆவியானவர் பிலிப்புவை நோக்கி: நீ ஓடிப்போய் அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று சொன்னார்.

மந்திரியின் ரதத்தில் மொத்தம் நான்கு குதிரைகள் இருக்கும். ரதத்தை இயக்க ஒரு வேலையாள் இருப்பார். இரதத்தின் பின்னே வேலையாட்கள் அமர்ந்திருப்பார்கள். இரதத்தின் பின்புறத்தில் இரண்டு வேலைக்காரர்களும், இரதத்தின் இரு பக்கங்களில் இரண்டு வேலைக்காரர்களும் ஓடி வருவார்கள். ரதம் அவ்வளவு பெதுவாகத் தான் செல்லும். எத்தியோப்பியா என்பது ஆப்பிரிக்க தேசம். இவர்கள் அனைவரும் கருப்பினத்தவர்கள்.

ரதம் ஓடிக்கொண்டிருக்கிறது, சுற்றிலும் வேலைக்காரர்கள் இரதத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மந்திரி ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்.

பிலிப்பு ஓடிப்போய் அந்த இரதத்துடனே சேர்ந்துகொண்டார். மந்திரி ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை மனதிற்குள் வாசிக்கவில்லை. அனைவரும் கேட்கும்படியாக சத்தமாக வாசித்தார். எனவேதான், இரதத்தோடு ஓடிவந்த பிலிப்புவிற்கும் அவர் வாசித்தது கேட்டது.

பிலிப்பு மந்திரியைப் பார்த்து: நீர் வாசிக்கின்ற இவைகளின் அர்த்தம் தெரியுமா? என்று கேட்டபோது, மந்திரி: ஒருவன் எனக்கு விளக்கப்படுத்தாவிட்டால் எனக்கு எப்படி தெரியும் என்று சொல்லி, பிலிப்புவை தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டார்.

ஏசாயா 53:7,8 இந்த வசனங்களையே மந்திரி வாசித்துக் கொண்டிருந்தார்.

அந்நகர் என்றால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்களால் எதையும் செய்ய முடியாது என்று நாம் யோசிக்க கூடாது. பாலியல் ரீதியாக அவர்களுக்கு குறைபாடு உண்டே தவிற மற்றபடி அவர்களும் நம்மைப்போலவே நன்றாக சிந்திப்பார்கள், சிறப்பாக செயல்படுவார்கள், நன்றாக படிப்பார்கள், அழகாக பாடுவார்கள், அழகாக ஓவியங்கள் வரைவார்கள். இதுபோன்ற அநேக திறமைகள் அவர்களுக்குள்ளும் இருக்கிறது.

இராஜாக்கள் காலத்தில் ராஜாக்கள் தங்கள் மனைவி, மருமனையாட்கள் இருக்கின்ற அந்தப்புறத்திற்கு பாதுகாவலராக இந்த அந்நகர்களையே பயன்படுத்தனார்கள். அந்தப்புறத்திற்குள் ஆண்கள் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள்.

இந்த மந்திரி ஒரு அந்நகனாக இருந்தபடியினால், அவனுக்கு ஞானம் இல்லை என்று பொருள் அல்ல. சிறந்த ஞானம் படைந்தவராக இருந்ததினால் தான் கந்தாகே என்ற இராணி இவனை தன் மந்திரியாக ஏற்படுத்தி வைத்திருக்கிறாள்.

அப்படிப்பட்ட ஒரு நபர், யாரோ ஒருவன் நீங்கள் வாசிப்பதின் பொருள் என்ன என்று தெரியுமா என்று கேட்ட மாத்திரத்தில் எப்படி அவரை தன் இரத்தில் ஏற்றிக்கொண்டார்.

இங்கே மந்திரி பிலிப்புவைப் பார்த்து: நீ யார்? உன் பெயர் என்ன? எங்கேயிருந்து வருகிறாய்? இந்த தீர்க்கதரிசன வார்த்தைக்கு உனக்கு எப்படி விளக்கம் தெரியும்? என்ற எந்த கேள்வியும் கேட்கவில்லை. உடனே பிலிப்புவை தன் இரதத்தில் ஏற்றிக்கொள்ளுகிறார்.

காரணம் என்னவென்றால், பிலிப்பு அபிஷேகத்தினால் நிரைந்த ஒரு மனிதன். பிலிப்புவை மந்திரி பார்த்த மாத்திரத்தில், அவனுடைய வார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில், அவன் சாதாரண மனிதன் அல்ல, இவன்மேல் விசேஷ அபிஷேகம் இருக்கிறது என்பதை மந்திரி உணர்ந்து கொள்ளுகிறார். எனவேதான், உடனே தன் இரதத்தில் அவருக்கு இடம் கொடுக்கிறார்.

ஊழியர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்: ஊழியர்கள் ஒவ்வொருவர் மேலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருக்கின்றது. அவர்களுடைய அபிஷேகத்தை அவர்கள் தங்கள் ஆடை அணிகலன்களில் காட்ட வேண்டிய தேவை இல்லை. ஜனங்கள் நம்மைப் பார்க்கும்போதே நம்முடைய அபிஷேகத்தை உணர்ந்து கொள்வார்கள்.

நாம் யாராக இருந்தாலும் விசுவாசியாக இருந்தாலும், பகுதிநேர ஊழியராக இருந்தாலும், முழு நேர ஊழியராக இருந்தாலும் நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றிருந்தோமானால், நம்மிடத்தில் ஒரு வித்தியாசம் காணப்படும். அதை மற்றவர்கள் அறிந்துகொள்ளும்படியான வாழ்க்கை முறை நாம் வாழ வேண்டும்.

பந்திவிசாரிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட பிலிப்பின் மூலமாக சமாரியாவில் உள்ளவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். பிலிப்பு எத்தியோப்பிய மந்திரியை சந்தித்து பேசுகையில், மந்திரி பிலிப்புவை தன்னோடு இரதத்தில் சேர்த்துக்கொள்ளும் அளவிற்கு அவருக்குள் அபிஷேகம் இருந்தது.

பிலிப்புவுக்குள் அபிஷேகம் இல்லை என்றால், யாரோ ஒருவர் வந்து என்ன வாசிக்கிறீர்கள்? இதன் அர்த்தம் தெரியுமா? என்று கேட்ட உடனே, எனக்கு தெரியாது, வந்து சொல்லிக்கொடுங்கள் என்று சொல்வதற்கு மந்திரி புத்தியில்லாதவர் அல்ல.

மந்திரியைப்போல நாம் ஒரு இடத்திற்கு பிரயாணப்படுகிறோம் என்றால், யாராவது ஒருவர் ஏதோ ஒரு காரியத்தைப் பேசுகிறார் என்றால், உடனே அவரை நம் அருகில் அமரவைத்துக்கொள்வோமா? மந்திரி உடனே பிலிப்புவை தன்னோடு இரதத்தில் அமர வைத்தார் என்றால், பிலிப்புவுக்குள் இருந்த அபிஷேகத்தை மந்திரி கண்டார்.

பிலிப்புவின் வார்த்தையினால் தொடப்பட்ட மந்திரி, அங்கேயே பிலிப்புவினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்.


அப்போஸ்தலர் நான்காம் பாகத்தின் மூலமாக பந்திவிசாரிப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட ஸ்தேவனையும், பலிப்புவையும் ஆண்டவர் எப்படி வல்லமையாய் எடுத்து பயன்படுத்தினார் என்று அறிந்துகொண்டோம்.

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய பிள்ளையாய் மாரியிருக்கிற நான் என்ன ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறேன் என்று நம்மை நாமே ஆராய்ந்து பாரக்க வேண்டும்.

இந்த நாள் வரையிலும் நான் எந்த ஊழியமும் செய்யவில்லை என்றால், நான் சபைக்கும், பூமிக்கும் பாரமாய் இருக்கிறேன் என்று பொருள்.

பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ ஏதோ ஒரு ஊழியத்தை நாம் செய்ய வேண்டும். உங்கள் சபை மேய்ப்பரிடம் சென்று நான் எப்படிப்பட்ட ஊழியத்தை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேளுங்கள், ஆண்டவரிடம் ஜெபித்து உங்களுடைய ஊழியத்தை துவங்குங்கள். உங்கள் ஊழியம் சின்ன ஊழியமாக இருக்கலாம், யாராலும் பார்க்கப்படாத ஊழியமாக இருக்கலாம், விசாரிப்பற்ற ஊழியமாக இருக்கலாம். உங்கள் ஊழியத்தை கனப்படுத்துகிறவர் கர்த்தர். மனிதர்கள் என்னை கனப்படுத்துவார்கள் என்று நாம் நினைப்பது சிறந்த ஊழியம் அல்ல. கர்த்தர் என்னை கனப்படுத்துகிறவர் என்ற தைரியத்தோடு தொடர்ந்து ஓடுவோம். கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக….ஆமென்……!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.