Type Here to Get Search Results !

ஜெபத்திற்கான சிறந்த முறை | The Best Way To Prayer | Jesus Sam

===============
ஜெபம் செய்வோம்
================

நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற எங்கள் அன்பின் ஆண்டவரே, இந்த நாளின் மாலை நேரத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். கடந்த பகல் முழுவதும் எங்களைப் பாதுகாத்து, நாங்கள் செய்த வேலைகளை ஆசீர்வதித்து இந்த மாலை நேரத்திலும் உம்மைக் காணும்படியாக நீர் பாராட்டின கிருபைகளுக்காக, சுகத்திற்காக, பெலத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த குளிர்ச்சியான மாலை நேரத்திலும் உம்மை நோக்கிப் பார்க்கிற ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கும்படியாய் ஜெபிக்கின்றோம். இந்த நேரத்தை உம்முடைய கிருபையினாலும், நன்மையினாலும், முடிசூட்டும்படியாய் மீட்பரும், உலகஇரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே. ஆமென்.

ஆ.ந: கர்த்தரின் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

சபை: கர்த்தர் நல்லவர். அவர் கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

ஆ.ந: நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

சபை: அவர் நம்முடைய தேவன் நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.

ஆ.ந: யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?

சபை: கைகளில் சுத்தமுள்ளவனும், இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.

ஆ.ந: ஆண்டவருக்கு விரோதமாக நாம் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு, நமக்கு முன்பாக வைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக, நாம் அவருடைய வசனத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் நமது தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரங்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.

சபை: தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.

ஆ.ந: வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

சபை: நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்;. தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன் என்பேன்.

யாவரும்: என் கன்மலையும், என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.


பொதுவான பாவ அறிக்கை ஜெபத்தை நாம் அனைவரும் இணைந்து ஏறெடுப்போம்:
சர்வ வல்லமையும், மிகுந்த இரக்கமுள்ள பிதாவே, தப்பிப்போன ஆடுகளைப்போல, நாங்கள் உம்முடைய வழியைவிட்டு விலகி அலைந்து போனோம். எங்கள் இருதயத்தின் யோசனைகளுக்கும், விருப்பங்களுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம். உம்முடைய பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க், குற்றஞ்செய்தோம். செய்யத்தக்கவைகளைச் செய்யாமலும், செய்யத்தகாதவைகளையே செய்து வந்தோம். எங்களுக்கு சுகமேயில்லை ஆயினும் ஆண்டவரே, நீர் இயேசு கிறிஸ்து நாதர் மூலமாய், மனிதருக்கு அருளிச் செய்த, வாக்குத்தத்தங்களின்படியே, நிர்ப்பாக்கியமுள்ள குற்றவாளியாகிய அடியாருக்கு இரங்கும். தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள்மேல் பொறுமையாயிரும், பாவத்தினிமித்தம் துக்கப்படுகிற எங்களை சீர்படுத்தும்.  மிகவும் இறக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி நாங்கள் இனித் தேவ பக்தியும், நீதியும், தெளிந்த புத்தியும் உள்ளவர்களாய் நடந்துவர, இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்கு கிருபை செய்தருளும். ஆமென்.

சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள ஆண்டவர் மன்னிப்பையும், பாவ நிவிர்த்தியையும் நமக்கு கட்டளையிட்டருளி வாழ்வை சீர்படுத்துவதற்கான காலத்தையும், தமது பரிசுத்த ஆவியின் கிருபையையும், தேற்றறவையும், தந்தருளுவாராக. ஆமென்.


பொதுவான ஸ்தோத்திர ஜெபத்தை நாம் அனைவரும் இணைந்து ஏறெடுப்போம்
சர்வ வல்லமைள்ள கடவுளே, சர்வ ஜீவதயாபர பிதாவே, அபாத்திரரான உமது அடியாராகிய எங்களுக்கும், மற்றெல்லா மனிதருக்கும், தேவரீர் அருளிச் செய்த பற்பல கிருபைக்காகவும், அன்புள்ள தயவுக்காகவும் நாங்கள் மிகுந்த தாழ்மையோடும், முழு இருதயத்தோடும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். எங்களை சிருஸ்டித்ததற்காகவும், காப்பாற்றுகிறதற்காகவும் இம்மைக்குறிய எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம். விசேஷமாய் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலே உலகத்தை மீட்டுக்கொண்ட விலைமதியாத உமது அன்புக்காகவும், கிருபையின் யத்தனங்களுக்காகவும், மகிமையடைவோம் என்கிற நம்பிக்கைக்காகவும், உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். நாங்கள் உண்மையாய், நன்றியறிந்த இருதயமுள்ளவர்களாயிருக்கவும், எங்களை உமது ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் வாழ்நாளெல்லாம், உமக்கு முன்பாக பரிசுத்தமும், நீதியுமுள்ளவர்களாய் நடக்கவும், எங்கள் வாக்கினாலே மாத்திரமல்ல, எங்கள் நடக்கையினாலேயும், உம்முடைய புகழைப் பிரஸ்தாபப்படுத்தவும், தேவரீர் செய்த, உபகாரங்கள் எல்லாவற்றையும், உணர்ந்து கொள்ளும் உணர்வை, எங்களுக்கு அருளிச் செய்ய வேண்டுமென்று, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். அவருக்கும், தேவரீருக்கும், பரிசுத்த ஆவிக்கும், எல்லா மேன்மையும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.

பிதாவுக்கும், குமாரனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.


வாசிக்க வேண்டிய வேதபகுதி:
வாசிக்கும்படியாக தெரிந்துகொள்ளப்பட்ட வேதபாடம். ------------------------

பாடம் முடிந்தது கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.


ஜெபம் செய்வோம்
சமாதானத்துக்கு காரணரும், ஏக சிந்தையை விரும்புகிறவருமாகிய கடவுளே, உம்மை அறிவதே நித்திய ஜீவன், உம்மை சேவிப்பதே மெய் சுயாதீனம், தேவரீரைத் தஞ்சமாகக் கொண்டிருக்கிற உமது அடியாராகிய நாங்கள், எந்த விரோதிகளுடைய வல்லமைக்கும் பயப்படாதிருக்கும்படியாக, எங்கள் சத்துருக்கள் செய்கிற, எல்லாப் பிரயத்தனங்களினின்று, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால், எங்களைக் காப்பாற்றியருளும். ஆமென்.

சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, இந்நாள் வரையும் எங்களைச் சுகமாய் நடத்தி வந்த, எங்கள் பரம பிதாவாகிய ஆண்டவரே, இந்த நாளிலும், உமது மிகுந்த வல்லமையால், எங்களைக் காப்பாற்றி, நாங்கள் யாதொரு பாவத்துக்கும் உட்படாமலும், எவ்விதமான மோசத்திலும் அகப்படாமலும், உமது பார்வைக்கு நீதியாயிருக்கிறதை, எப்பொழுதும் செய்கிறதற்கு, நாங்கள் செய்கிற எல்லாவற்றையும், உம்முடைய ஆளுகையினாலே நடத்தியருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

இத்தருணத்தில் ஒருமனப்பட்டு, உம்மை நோக்கி, எங்கள் பொதுவான விண்ணப்பங்களைச் ஏறெடுக்க, எங்களுக்கு கிருபை அளித்த, சர்வ வல்லமையுள்ள கடவுளே, இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே கூடிவரும்பொழுது, அவர்கள் கேட்கிறவைகளை, அருளிச்செய்வேன் என்று வாக்கருளியிருக்கிறீரே. கர்த்தாவே, உமது அடியாராகிய எங்களுக்கு வேண்டிய, நன்மைகள் உண்டாக, எங்கள் விருப்பங்களையும், வேண்டுதல்களையும், இப்பொழுது நிறைவேற்றி, இம்மையிலே, உம்முடைய சத்தியத்தை அறிகிற அறிவையும், மறுமையிலே நித்திய ஜீவனையும், எங்களுக்கு கட்டளையிட்டருளும். ஆமென்.

எங்களை நேசிக்கின்ற அன்பின் ஆண்டவரே, இந்த நாளின் மாலை நேரத்திற்காக, உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதியும். விஷேசமாய், தோட்ட வேலைக்கு செல்லுகிறவர்களுக்கும், வியாபாரம் செய்கிறவர்களுக்கும் வேண்டிய நல்ல பெலனையும், முன்னேற்றத்தையும் தந்து ஆசீர்வதியும். எங்கள் பாவங்களை மன்னித்து, எங்களின் தாழ்மையைப் பார்த்து (நீர் கொடுத்த மழைக்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்னும் ஏற்ற நேரத்தில்) விவசாயத்திற்க்குத் தேவையான மழையைக் கிருபையாய் பொழிந்தருளும். எங்கள் கிராமத்திலிருந்து, வெளியிடங்களுக்குச் செல்லுகிற, ஒவ்வொருவருக்கும் முன்பதாக, உம்முடைய சமூகம் கடந்து செல்லும்படியாய், ஜெபிக்கின்றோம். ஓவ்வொருவரும் நல்ல பாதுகாப்போடு, தங்கள் இல்லங்களுக்குத் திரும்பி வர, நீர் கிருபை செய்யும். படிக்கிற ஒவ்வொருவருக்காக, உம்முடைய சமுகத்தில் வருகிறோம். அவர்களுக்கு வேண்டிய விஷேசித்த ஞானத்தையும், பாதுகாப்பையும் தந்து வழி நடத்தியருளும். சிறு பிள்ளைகளுக்காக, வாலிபர்களுக்காக, பெண்களுக்காக, பெரியவர்களுக்காக, ஊழியர்களுக்காக ஜெபிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் வேண்டிய கிருபைகளையும், நன்மைகளையும் தந்து, எந்தத் தீங்கும் அவர்களை அணுகாதபடி காத்துக்கொள்ளும். பெலவீனத்தோடு வீடுகளிலும் மருத்துவமனைகளிலும், இருக்கிறவர்களுக்காக உம்மிடத்தில் பாரப்படுகிறோம். 'வியாதியை உன்னைவிட்டு விலக்குவேன்' என்று சொன்ன கர்த்தர், பெலவீனங்களையெல்லாம் நீக்கி, பரிபூரண சுகத்தை கட்டளையிடும்படியாய், ஜெபிக்கிறோம். 'பயப்படாதே, நான் உன்னுடனே கூட இருக்கிறேன்’ என்று சொன்ன ஆண்டவர்தாமே, எல்லாக் கவலைகளையும் நீக்கிப்போட்டு, சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் ஒவ்வொருவரையும் நிரப்பியருளும். கர்த்தாவே, இந்த நாளின் தொடக்கம் முதல் இந்நேரம் மட்டும் எங்களை பாதுகாத்த உமது தயவிற்காக, இரக்கங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இரவில் அயர்ந்த நித்திரையை தந்து, அதிகாலையில் உம்மைத் துதிக்கும் துதியோடு எழும்பவும், எங்கள் கடமைகளை நிரைவேற்றவும் அருள்புரியும். மீட்பரும் இரட்சருமாகிய இயேசு கிறிஸ்துவின், நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே. ஆமென்.

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். இராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி, கர்த்தர் செய்த, சகல உபகாரங்களையும் மறவாதே. ஆமென்...........

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.