Type Here to Get Search Results !

ஆசிய கிறிஸ்தவ பெண்கள் கூட்டமைப்பு (ACWC) தின ஆராதனை முறைகள் | Women's Sunday Service | Order of Service | Jesus Sam

2024 ஆசிய கிறிஸ்தவ பெண்கள் கூட்டமைப்பு (ACWC) தின ஆராதனை முறைகள்

இளம் பெண்களும் வயதில் பெரியவர்களும் ஒன்றிணைந்து பணி செய்தல்

(ஊழியத்தில் ஆவியானவரால் ஒன்றுபடுதல்)


ஆசிய கிறிஸ்தவ பெண்கள் கூட்டமைப்பின் இந்திய குழுவினரால் எழுதப்பட்டது.


ஆசிய கிறிஸ்தவ பெண்கள் கூட்டமைப்பு தினம் (ACWC Day)
ஆசிய கிறிஸ்தவ பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 1958-ல் ஹாங்காங்கில் நடைபெற்ற முதல் ஆசிய கிறிஸ்தவ பெண்கள் கூட்டமைப்பு மன்றத்தின் நினைவாக 1984-ல் ஆசிய கிறிஸ்தவ பெண்கள் கூட்டமைப்பு தினத்தை கடைபிடிக்கத் தொடங்கினர். அந்த மன்றம் நவம்பர் 15 அன்று துவங்கப்பட்டதால், 2022-ஆம் ஆண்டு வரை அதே தினத்தில் ஆசிய கிறிஸ்தவ பெண்கள் கூட்டமைப்பு தினம் ஆசரிக்கப்பட்டது. அதன் பின்பு ஒவ்வொரு நவம்பர் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் இத்தினம் ஆசரிக்கப்பட்டு வருகிறது.

ஆராதனைக்கு அழைப்பு
ஆராதனை நடத்துபவர்: கிறிஸ்துவுக்குள் சகோதரிகளே, நாம் ஒன்றிணைந்து ஆராதிப்போம்.

அனைவரும்: வயது வித்தியாசமின்றி பெண்கள் அனைவரும் ஆவியானவரால் ஒன்றுபட்டோம்.

ஆராதனை நடத்துபவர்: ஏனெனில், கர்த்தருடைய வீட்டில் அனைவருக்கும் இடம் உண்டு.

அனைவரும்: ஒவ்வொருவரும் மதிப்புமிக்கவர்கள், ஒவ்வொருவரும் போற்றப்படத்தக்கவர்கள், ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டவர்கள்.

ஆராதனை நடத்துபவர்: நம் சத்தத்தை உயர்த்தி ஆண்டவரை துதித்து ஆராதிப்போம்.

அனைவரும்: நம் வரங்களையும், தாலந்துகளையும் ஆண்டவரின் மகிமைக்கென்று அர்ப்பணிப்போம்.

ஆராதனை நடத்துபவர்: பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை உணரும்படியாய் நம் இருதயங்களைத் திறந்தருளுவோம்.

அனைவரும்: நாம் ஊழியத்தில் ஒன்றிணைந்து செயல்படும்போது, அவர் நம்மை வழிநடத்தி ஊக்கப்படுத்துவார்.

ஆராதனை நடத்துபவர்: வயது மற்றும் அனுபவத்தின் பன்முகத்தன்மை நம் மத்தியில் இருப்பதாக.

அனைவரும்: கடவுளுடைய படைப்பின் செழுமைக்குச் சான்றாக இருப்போம்.

ஆராதனை நடத்துபவர்: ஏனெனில், கிறிஸ்துவின் சரீரத்தில் பிரிவினைகள் இல்லை.

அனைவரும்: ஒருமைப்பாடும், அன்பும், கிருபையும் மட்டுமே அங்கிருக்கும்.

ஆராதனை நடத்துபவர்: எனவே சிறியோரும் பெரியோருமாக அனைவரும் சேர்ந்து ஆராதிப்போம்.

அனைவரும்: நம்பிக்கையுடைய, துணிவுள்ள, வலிமைமிக்கப் பெண்களே.

ஆராதனை நடத்துபவர்: ஏனெனில், நமது ஒற்றுமையில் நம் பெலத்தைக் காண்கிறோம்.

அனைவரும்: நமது பன்முகத்தன்மையில் நம் அழகைக் காண்கிறோம்..

ஆராதனை நடத்துபவர்: நமது சத்தத்தை உயர்த்திப் பாடுவோம்.

அனைவரும்: நமது இருதயத்தை உயர்த்தி ஜெபிப்போம்.

ஆராதனை நடத்துபவர்: நமது கரங்களை உயர்த்தி சேவிப்போம்.

அனைவரும்: ஆண்டவரை ஆராதிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம். ஆமென்.


ஆரம்ப கீதம்:
குத்துவிளக்கேற்றுதல்
”இளம் பெண்களும் வயதில் பெரியவர்களும் ஒன்றிணைந்து பணி செய்தல்” என்ற கருப்பொருளைக் கொண்டாட நாம் கூடி வந்திருக்கும் இவ்வேளையில் நமக்கடுத்த தலைமுறையினருடைய ஒற்றுமையின் அழகையும், வலிமையையும் நாம் அங்கீகரிப்போம். விளக்கு ஏற்றுவது, பல கலாச்சாரங்களில், இருளை அகற்றி ஒளியையும், ஞானத்தையும், அறிவையும் பரப்புவதை அடையாளப்படுத்துகிறது. கடவுளுக்கும், சக படைப்புகளுக்கும் நாம் ஒன்றிணைந்து ஊழியஞ்செய்ய அர்ப்பணிக்கும் இந்நாளில் இளையோர், முதியோர் மற்றும் கடந்த காலம், நிகழ்காலம் ஆகியவற்றிற்கு இடையேயான ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் அடையாளப்படுத்தும் விதமாக குத்துவிளக்கேற்றுகிறோம்.

(வெவ்வேறு தலைமுறைகளின் பிரதிநிதிகளாக மூன்று பெண்கள் ஒன்றாக விளக்கேற்றலாம்)

இளம்பெண் (விளக்கேற்றுதல்) : ஊழியத்திற்கேற்ப நாங்கள் அளிக்கும் ஆற்றலையும், உற்சாகத்தையும், புதிய முன்னோக்குகளையும் அடையாளப்படுத்தி இளைய தலைமுறையினரின் பிரதிநிதியாக நான் இவ்விளக்கை ஏற்றுகிறேன். கடவுளுக்கும், பிறருக்கும் ஊழியம் செய்ய வேண்டும் என்ற எங்களின் வேட்கை, அவருடைய ராஜ்யத்தின் முன்னேற்றத்திற்காக விடாமுயற்சியுடனும், ஆக்கப்பூர்வமாகவும் பணி செய்ய நம்மை உத்வேகப்படுத்துவதாக.

நடுத்தர வயதுடைய பெண் (விளக்கேற்றுதல்): கடவுளின் நோக்கங்களை நிறைவேற்ற நாம் முயற்சி செய்யும்போது, கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இணைக்கும் பாலத்தை அடையாளப்படுத்தி இரண்டாம் தலைமுறையின் பிரதிநிதியாக இந்த விளக்கை ஏற்றுகிறேன். நமது நம்பிக்கையின் மரபுகளில் வேரூன்றிய, இளையோரின் உயிர் சக்தியால் உயிரூட்டப்பட்ட நமது ஒருமித்த முயற்சிகள் நாம் முன்னேறிச் செல்லும் பாதையை ஒளியூட்டட்டும்.

வயது முதிர்ந்த பெண் (விளக்கேற்றுதல்): சமூகத்திற்கு நாங்கள் அளிக்கும் ஞானத்தையும், அனுபவத்தையும், நீடித்த நம்பிக்கையையும் அடையாளப்படுத்தி வயது முதிர்ந்த தலைமுறையினரின் பிரதிநிதியாக இந்த விளக்கை ஏற்றுகிறேன். எங்கள் பயணத்திலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும், அன்போடு ஒன்றிணைந்து உழைக்கும்போது, பரஸ்பர மரியாதை உணர்வையும் வளர்க்கட்டும்.

அனைவரும்: இந்த விளக்கின் ஒளி நம் முன் பிரகாசிக்கும்போது, இளையோரும், முதியவர்களும் ஒற்றுமையோடு ஒருமித்த பணி செய்வதற்காக நாம் ஒருவரோடொருவர் இணைந்து செய்த நமது அர்ப்பணிப்பை இது நினைவூட்டட்டும். எங்கள் முயற்சியின் சுடர், பிரிவினையாகிய இருளையும், சந்தேகமாகிய இருளையும் அகற்றி, நம்பிக்கையோடும் அன்போடும் நாம் ஒன்றாக பயணிக்கும்போது நாம் முன்னோக்கிச் செல்லும் பாதையை ஒளியூட்டட்டும். ஆமென்.


ஆரம்ப ஜெபம்:
கிருபையும், அன்பும் நிறைந்த ஆண்டவரே, நீர் அளித்துள்ள ஐக்கியம் மற்றும் ஒற்றுமை ஆகிய வரங்களுக்காக நன்றி செலுத்தி, நன்றியுள்ள இருதயத்தோடு உம்முடைய சமூகத்திலே நாங்கள் கூடிவந்திருக்கிறோம். இளம் வயதுடையவர்களாக, பெரியவர்களாக நாங்கள் ஊழியத்தில் ஒன்றிணைந்து, உமக்கும், பிறருக்கும் ஊழியம் செய்யும்போது உமது ஆவியினாலே எங்கள் இருதயங்களையும், கரங்களையும் வழிநடத்தும். உமது நாமத்தை மகிமைப்படுத்தவும், பூமியிலே உம்முடைய இராஜ்ஜியத்தை மேம்படுத்தவும், நாங்கள் ஒற்றுமையுடனும், அன்புடனும் இணைந்து பணியாற்றுவற்கு ஞானத்தையும், பொருமையையும், இரக்கத்தையும் எங்களுக்குத் தாரும். ஆமென்.

பாவ அறிக்கை
ஆராதனை நடத்துபவர்: மனத்தாழ்மையோடும், உண்மையோடும் நம்முடைய குறைகளை உணர்ந்து, தேவனுடைய மன்னிப்பை வேண்டி அவருடைய சமூகத்தில் வருவோம். ”இளம் பெண்களும் வயதில் பெரியோர்களும் ஒன்றிணைந்து பணி செய்தல்“ என்ற கருப்பொருளிலே நாம் சிந்திக்கும்போது, நமது சமூகத்தில் பிரிவினைகளுக்கும், கருத்து வேறுபாட்டிற்கும் நாம் எவ்வாறு காரணமாகின்றோம் என்பதை அடையாளம் காண்போம்.

மௌனமாக நம்மை நாமே ஆராய்வோம்:
அனைவரும்: கிருபையுள்ள கர்த்தாவே, எங்கள் மத்தியில் காணப்படுகின்ற வயதின் அனுபவத்தின் பன்முகத்தன்மையை நாங்கள் எல்லா சூழலிலும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். பிறரைக் குறித்த எங்கள் மதிப்பீடுகளை மறைக்கின்ற, உறவுகளை முறிக்கின்ற மாற்ற முடியாத எங்கள் கருத்துக்களையும், பாரபட்சங்களையும், முன்முடிவுகளையும் நாங்கள் அனுமதித்துள்ளோம். வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் பார்வைகளையும், பங்களிப்புகளையும் நாங்கள் பாராட்ட தவறிவிட்டோம். மாறாக எங்களுக்கு நலமாய் தோன்றுகின்ற இடங்களிலும், நபர்களோடும் இருப்பதைத் தெரிந்தெடுத்தோம்.

ஆராதனை நடத்துபவர்: கர்த்தாவே எங்கள் குறுகிய மனப்பான்மை மற்றும் பச்சாதாபமின்மைக்காக எங்களை மன்னியும். உமது மக்களிடையே தீங்குகள் பிரிவினைகள் ஏற்படுத்திய வார்த்தைகளோ அல்லது செயல்களோ எங்களிடையே காணப்படுமாயின் மன்னியும். ஒருவரின் வயதையோ, பின்னணியத்தையோ பொருட்படுத்தாமல், ஒவ்வொரு தனி நபரின் கண்ணியத்தையும் மதிப்பையும் அங்கீகரித்து உம்முடைய கண்களால் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்க எங்களுக்கு உதவி செய்யும்.

அனைவரும்: கர்த்தாவே நீர் எங்களுக்கு மன்னித்தது போல, எங்களைக் காயப்படுத்தியவர்களையும், அநீதி இழைத்தவர்களையும் மன்னிக்க எங்களுக்கு அருள்புரியும். தலைமுறைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நீக்கி நம்பிக்கையோடும் பரஸ்பர மரியாதையோடும் ஒருவரோடொருவருக்குள்ள பிணைப்பை கட்டியெழுப்ப உதவிபுரியும். உம்முடைய இராஜ்ஜியத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அன்புடனும் இணக்கத்துடனும் இணைந்து பணியாற்ற உம்முடைய ஆவியின் ஒற்றுமை எங்களிடையே நிலவட்டும்.

ஆராதனை நடத்துபவர்: கர்த்தாவே எங்கள் ஜெபத்தைக் கேளும். எல்லா அநீதிகளையும் எங்களிலிருந்து நீக்கி, எங்களை தூய்மைப்படுத்தும். உமது அன்பையும், கிருபையையும் பிரதிபலிக்க எங்கள் வாழ்வு மாற்றுருவாக்கம் அடையும்படியாய், எங்களை உமது ஆவியினால் புதுப்பிக்க இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

கீதம்

திருமறைப் பாடங்கள்
(பின்வரும் வேதவசனங்களிலிருந்து 2 அல்லது 3 பகுதிகளைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது பொருத்தமான வேறு வேதபகுதிகளையும் தெரிவு செய்யலாம்)
    நீதிமொழிகள் 31:10-31
    ரூத் 1:16-18
    ரூத் 2:1-10
    கலாத்தியர் 3:28
    லூக்கா 1:39-45
    சங்கீதம் 96:1-2

வேத செய்தி:

பெண்களுக்கான அர்ப்பணிப்பின் ஜெபம்:
கிருபையும் அன்பும் நிறைந்த கர்த்தாவே, விசுவாசமுள்ள பெண்களாக உம்முடைய ஊழியத்தை செய்யும்படியாகவும், பூமியிலே உம்முடைய இராஜ்ஜியத்தை கட்டும்படியாகவும், உம்முடைய சமுகத்தில் கூடிவந்திருக்கிறோம். உமது அழைப்புக்கு நாங்கள் முழு மனதோடு அர்ப்பணித்து, திறந்த மனதோடு உமது சமுகத்தில் வருகிறோம்.

கர்த்தாவே தனித்தன்மை வாய்ந்த வரங்களையும், திறமைகளையும், உலகிலே மாற்றத்தை உருவாக்குவற்கேற்ற வாய்ப்புகளையும் எங்களுக்கு அருளியிருக்கிறீர். பெண்களாகிய நாங்கள், மாற்றத்தின் முகவர்களாகவும், நீதிக்காக போராடுகிறவர்களாகவும், உம்முடைய அன்பையும் இரக்கத்தையும் எடுத்துச் செல்கின்ற கருவிகளாகவும் செயல்பட வேண்டியது எங்கள் கடமை என்பதை உணருகின்றோம். அங்கீகரிக்கின்றோம்.

கர்த்தாவே, விசுவாசத்தோடு செயல்படுவதற்கும், நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், வாய்ப்புகளையும் தழுவுவதற்கும், துன்பங்களை எதிர்கொள்வதற்கும் ஏற்ற துணிவை எங்களுக்குத் தாரும். சாட்சியுள்ள வாழ்விலே தைரியமாகவும், விசுவாசத்திலே உறுதியாகவும், முழு மனதோடு உம்மை பின்பற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நிலைத்திருக்கவும் எங்களுக்கு உதவிச் செய்யும்.

எங்கள் வார்த்தைகளையும் செயல்களையும் உம்முடைய சித்தத்திற்கேற்ப அமைத்து, நாங்கள் உண்மையுள்ள பெண்களாக இருப்போம். நாங்கள் இரக்கமுள்ளவர்களாக, தேவையில் இருப்போருக்கு இரக்கத்தையும் அன்பையும் காண்பிப்போம். நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உமது வழிகாட்டுதலையும் விவேகத்தையும் வேண்டி ஞானமுள்ள பெண்களாக இருப்போம்.

கர்த்தாவே பெண்களிடையே ஒற்றுமை உருவாக நாங்கள் பிரார்த்திக்கிறோம். நாங்கள் ஒருவரையொருவர் தாங்கவும், ஆதரிக்கவும், ஒருவருக்கொருவர் வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் கொண்டாடவும், வயதையோ, பின்னணியத்தையோ, சூழ்நிலையையோ பொருட்படுத்தாமல், ஒவ்வொரு பெண்ணினுடைய மதிப்பையும் அங்கிகரிக்கவும், எங்கள் விசுவாச பயணத்தில் ஒருவரையொருவர் உறுதிப்படுத்தவும் ஊக்குவிக்கவும் உதவி செய்யும்.

கர்த்தாவே எங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் உமக்குச் சேவை செய்ய நாங்கள் எங்கள் அர்ப்பணிப்பை புதுப்பிக்கிறோம். உமது அன்புக்கும் அருளுக்கும் எங்கள் வாழ்வு உயிருள்ள சாட்சியாக நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உமது நாமத்தை மகிமைப்படுத்த கிருபை அளியும்.

கர்த்தாவே, உமது பரிசுத்த ஆவியினால் எங்கள் வாழ்வில் நீர் வைத்த நோக்கத்தையும், அழைப்பையும் நிறைவேற்ற எங்களை பெலப்படுத்தும். சவால்களை எதிர்க்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்க எங்களைப் பெலப்படுத்தும். மேலும் இவ்வுலகில் உமது சாட்சிகளாக இருக்க தைரியத்தையும், நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

மன்றாட்டு ஜெபம்:
ஆராதனை நடத்துபவர்: விசுவாச சந்ததிகளுக்கிடையேயான நல்ல உறவை எங்களுக்கு பரிசாக அளித்ததற்காக நாங்கள் முழு மனதோடு நன்றி செலுத்திட உமது சமுகத்தில் வருகின்றோம். எங்கள் பயணத்தை செழுமைப்படுத்த ஒவ்வொருவரும் தங்களின் தனித்துவமான வரங்களையும், அனுபவங்களையும், முன்னோக்குகளையும் அளிக்கும் பெண்களின் மாறுபட்ட கருத்துக்களுக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.

அனைவரும்: தேவனே உமக்கு நன்றி

ஆராதனை நடத்துபவர்: கர்த்தாவே வெவ்வேறு வயதுடைய பெண்களை நாங்கள் கனப்படுத்தி, அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அளிக்கும் ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரிப்போம். இளைய தலைமுறையினரை ஞானத்தோடு வழிநடத்தும் பெண்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களின் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் பெருக்கி, அவர்களின் நுண்ணறிவையும் அனுபவங்களையும் தாராளமாகப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு அருள்புரியும்.

அனைவரும்: தேவனே, ஒருமைப்பாட்டிற்காக வேண்டிக்கொள்கிறோம்.

ஆராதனை நடத்துபவர்: எங்கள் சமூகத்திற்கு ஆற்றலையும், உற்சாகத்தையும், புதிய முன்னோக்குகளையும், அளிக்கும் இளம் பெண்களை நாங்கள் கனப்படுத்துகிறோம். வயதில் பெரியவர்களுடைய ஆலோசனையின் மதிப்பை உணர்ந்து அவர்களிடமிருந்து ஞானத்தையும் வழிகாட்டுதலையும் பெற அவர்களுக்கு மனத்தாழ்மையைத் தாரும். அவர்கள் வாழ்க்கை பயணத்தைத் தொடரும் போது, வயது முதிர்ந்த பெண்களின் அனுபவங்கள், அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு அவர்களின் முதிர்ச்சியும், ஞானமும் வளருவதாக.

அனைவரும்: தேவனே வழிநடத்துதலுக்காக வேண்டிக்கொள்கிறோம்.

ஆராதனை நடத்துபவர்: போராலும், பிரிவினைகளாலும், பிரச்சனைகளாலும் சிதைந்து கிடக்கும் உலகில், நாங்கள் அனைவரும் ஜெபத்திலும், செயலிலும் ஒன்றுபடுவதற்கு நீர் உதவி செய்யும்படியாய் உம்மை வேண்டிக்கொள்கிறோம். இதனால் நாங்கள் ஒவ்வொருவருக்கிடையிலும் அமைதியை உருவாக்கி ஆதரவாகவும் ஒற்றுமையாகவும் இருக்க அருள்புரியும்படியாய் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

அனைவரும்: கிருபை அருளும் தேவனே

இறுதி ஜெபம்:
கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கும் அழகான பன்முகத்தன்மைக்கும், ஒவ்வொரு பெண்ணும் எங்கள் சமூகத்திற்கு கொண்டு வரும் தனித்துவமான வரங்களுக்கும் அனுபவங்களுக்கும் நன்றி செலுத்தி இன்று நாங்கள் உமது சமூகத்தில் வருகிறோம்.

ஆண்டவரே, எல்லா வயதினரிடமும் நாங்கள் சமாதானமாக இருக்க ஜெபிக்கிறோம். மெய்யான அமைதி என்பது புரிதல், பச்சாதாபம் மற்றும் இரக்கத்துடன் தொடங்குகிறது என்பதை உணருகின்றோம். நம்மில் பிரிவினையை கொண்டுவருகின்ற காரியங்கள் மற்றும் தடைகளை உடைக்கவும், எங்களை வழிநடத்துபவர்களின் ஞானத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் எங்கள் இருதயங்களைத் திறந்தருள எங்களுக்கு உதவி புரியும்.

அறிவையும், அனுபவத்தையும் ஞானத்தையும், செல்வத்தையும் வழங்கும் வயதான பெண்களை நாங்கள் கனப்படுத்துகிறோம். வயது முதிர்ந்தவர்கள் தங்கள் கதைகளையும் நுண்ணறிவுகளையும் இளைய பெண்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களின் விசுவாச பயணத்தில் அவர்களை வழிநடத்துவதற்கும், வளர்ப்பதற்கும் அவர்களுக்கு அருள் புரியும். அவர்கள் ஒளியூட்டும் கலங்கரை விளக்கங்களாகவும், ஊக்கமளிக்கும் ஆதாரங்களாகவும் இருந்து, இளைய தலைமுறையினர் தங்கள் ஆற்றலின் முழுமையைத் தழுவுவதற்கு ஊக்கமளிப்பார்களாக.

எங்கள் சமூகத்திற்கு ஆற்றல், உற்சாகம் மற்றும் புதிய முன்னோக்குகளை கொண்டு வரும் இளைய பெண்களையும் நாங்கள் உயர்த்துகிறோம். அவர்களின் ஞானத்தையும் அனுபவத்தின் மதிப்பையும் உணர்ந்து, அவர்களின் மூத்த சகோதரிகளிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற அவர்களுக்கு மனத்தாழ்மையைத் தாரும்.

கர்த்தாவே, பிரிவுகளாலும், முரண்பாடுகளாலும் பாதிக்கப்பட்ட உலகில் மனிதனுடைய புரிதலுக்கு அப்பாற்பட்ட சமாதானம் நம்மிடையே உருவாக நாங்கள் ஜெபிக்கிறோம். அனைத்து பெண்களும் செழித்து வளர அதிகாரம் உள்ள ஒரு சமூகத்தை உருவாக்க நாங்கள் முயற்சி செய்யும்போது, எங்கள் உறவுகள் அன்பாலும், மரியாதையாலும் பரஸ்பர ஆதரவாலும் நிரப்பப்படட்டும்.

தலைமுறை இடைவெளியைக் குறைப்பதற்கும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும், கிறிஸ்துவில் சகோதரிகளாக நம்மை ஒன்றிணைக்கும் அனுபவங்களைக் கொண்டாடுவதற்கும் உருவாகும் வாய்ப்புகளுக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் இவ்வுலகில் உமது அருளுக்கும் அன்பிற்கும் ஒரு சான்றாக அமையட்டும். நம்முடைய சமாதானக் காரணராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

பின்பவனி கீதம்

ஆசீர்வாதம்:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடந்து, நீங்கள் சந்திக்கும் அனைவருக்கும் மீட்பின் செய்தியைக் கொண்டு செல்லும்படியாய் துணிவோடு சாட்சி பகிரவும், உங்கள் அணுகுமுறை மென்மையாக இருக்கும்படியாய், பரிசுத்த ஆவியானவர் உங்களை பலப்படுத்தி உலகில் அவரின் உண்மையுள்ள சாட்சிகளாக பயன்படுத்துவாராக. திரியேக தெய்வத்தின் ஆசீர்வாதம் நம் அனைவரோடும் எப்போதும் நிலைத்திருப்பதாக. ஆமென்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.