Type Here to Get Search Results !

நான் சுமப்பேன் | ஆழமான ஆசீர்வாத பிரசங்க குறிப்பு | Deep Blessing Sermon Notes Tamil | Jesus Sam

======================
தலைப்பு: நான் சுமப்பேன்
======================

ஏசாயா 46: 4ஆ

உங்கள் முதிவர் வயது வரைக்கும் நான் அப்படிச் செய்வேன்.  நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்.  நான் அப்படிச் செய்து வந்தேன்.  இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.

புதிய மொழிபெயர்ப்பு:

          நீங்கள் பிறந்ததும், உங்களைச் சுமந்தேன்.  நீங்கள் முதுமை அடையும் வரை உங்களைத் தாங்குவேன்.  உங்கள் நரைமுடி நரைக்கும் வரை உங்களைத் தாங்குவேன்.  ஏனென்றால், நான் உங்களைப் படைத்தேன்.  நான் உங்களைத் தொடர்ந்து தாங்குவேன், உங்களைப் பாதுகாப்பேன்.

 


நம்முடைய ஆண்டவர் நம்மை சுமக்கின்ற ஆண்டவராய் இருக்கின்றார்.  ஆண்டவர் நம்மை எப்படியெல்லாம் சுமப்பார் என்பதைக் குறித்து இந்த குறிப்பில் நாம் சிந்திக்கலாம்.


1. தகப்பனைப் போல சுமப்பார் – தேவைகளை சந்திக்க

உபாகமம் 1: 31

          ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்து கொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்து கொண்டு வந்ததைக் கண்டீர்களே.

          ஒரு தகப்பன் தன் மகன் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கித் தரமாட்டார்.  மகனுக்கு எது தேவையானதோ அதை கட்டாயம் வாங்கித்தருவார்.  அதுபோலவே நம்முடைய ஆண்டவரும்.

ஒர் கதை:

          ஒரு பேருந்து நிறுத்தத்தில் தகப்பனும், மகனும் நின்று கொண்டிருக்கிறார்கள்.  அப்பொழுது அந்த மகன் விளையுயர்ந்த ஒரு இனிப்பு பலகாரத்தை தன் தகப்பனிடம் கேட்கிறான்.  தகப்பன் வாங்கிக்கொடுக்க முடியாது என்று சொல்லுகிறார்.  அப்போது வேறு ஒரு சிறுவன் வந்து அதே இனிப்புப் பலகாரத்தைக் காண்பித்து அந்த சிறுவனுடைய தகப்பனிடம் கேட்கிறான்.  அப்பொழுது யார் என்றே தெரியாத அந்த சிறுவனுக்கு அந்த தகப்பன் அந்த இனிப்பு பலகாரத்தை வாங்கிக் கொடுத்துவிடுகிறார்.  இதை பார்த்த அந்த மகனுக்கு அப்பாவின் மீது கோபம்.  சிறிது நேரத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்து வந்தது.  அப்போது அந்த தகப்பன், தனது மகனை மட்டுமே அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினார்.  அங்கே இருந்த மற்றொருவனுக்கும் நான் இனிப்பு பலகாரம் வாங்கித் தந்தேன் என்பதற்காக அவனையும் பேருந்தில் அழைத்துச் செல்லவில்லை.

          நாமும் கூட அநேக நேரங்களில் எனக்கு கிடைக்காத ஒரு பொருள் ஆண்டவரை அறியாத ஒரு நபருக்குக் கிடைக்கும்போது நாம் வேதனைப்படுகிறோம்.  ஏன் இந்த பரம தகப்பன் எனக்கு மாத்திரம் தரமறுக்கிறார் என்று சிந்திக்கிறோம். நம்முடைய பர தகப்பன் உலக பிரகாரமாக நம்முடைய தேவைகளை சந்திக்காமல் இருக்கலாம்.   ஆனால் அந்த பேருந்தைப்போன்று அவருடைய வருகை இருக்கும்போது, நான் மற்றவனுக்கும் எல்லாவற்றையும் வாங்கிக்கொடுத்தேன் என்பதற்காக அவனையும் அழைத்துச் செல்லமாட்டார்.  தனது சொந்த மகனை மட்டுமே அழைத்துச் செல்வார்.  அந்த பரம அழைப்பிற்காக நாம் ஆயத்தப்படுவோம்.



மத்தேயு 6: 33

          முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.  அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்.

          நாம் முதலாவது அவரைத் தேடும்பொழுது, அவருக்கு நாம் முன்னுரிமை கொடுக்கும்போது நம்முடைய வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட தேவைகள் இருந்தாலும் அதை நமது பரம பிதா நிறைவேற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.  ஒருவேலை அவர் நிறைவேற்றாமல் போனாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்போம், ஏனென்றால் நாம் இந்த உலகத்திற்குறியவர்கள் அல்ல, அழியாத நித்திய வாழ்க்கையாகிய பரலோகத்தின் சொந்தக்காரர்கள்.

          ஒரு தகப்பனைப்போல நம்மை சுமக்கின்ற ஒரு நேசர் நமக்கு உண்டு என்பதை நாம் மறந்துபோய்விட வேண்டாம்.

 

 

2. கழுகைப்போல சுமப்பார் – நம்மை பயிற்றுவிப்பதற்காக

யாத்திராகமம் 19: 4

          நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக் கொண்டதையும் நீங்கள் கண்டிருக்கறீர்கள்.


உபாகமம் 32: 11, 12

          11. கழுகு தன்கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாட்டி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளை தன் செட்டைகளின் மேல் சுமந்து கொண்டுபோகிறதுபோல,

          12. கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்.  அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

 

கழுகும் அதன் குஞ்சும்:

          கழுகு மிக உயர்ந்த மலைகளில் தான் தனது கூட்டைக் கட்டும். கழுகின் கூடு மையத்தில் பஞ்சுமெத்தை போன்று இருக்கும்.  அதை சுற்றி அநேக குச்சிகள் இருக்கும்.  கழுகு தனது குஞ்சுக்கு சரியான நேரத்திற்கு உணவு கொடுத்து, மிகவும் கண்ணும் கருத்துமாக பராமரித்து வரும்.  குஞ்சு பறக்கும் நேரம் வந்ததும் அந்த கழுகு தனது சிறகால் குஞ்சை அடிக்கும்.  அப்போது அந்த குஞ்சு மிகவும் வேதனையோடு அழுதுகொண்டே பஞ்சுமெத்தை போன்ற இடத்திலிருந்து நகர்ந்து கூட்டின் விழும்பிற்கு வரும்.  அப்பொழுது குஞ்சு நினைக்கும் நான் கூட்டிற்குள் மிகவும் அழகாக, நின்மதியாக வாழ்ந்து வந்தேன்.  ஆனால் இப்பொழுது என் அம்மாவிற்கு என் மீது சிறிதளவு கூட பாசம் இல்லை.  என்னை அடித்து, அடித்து தொந்தரவு செய்கிறார்கள்.  நான் கீழே விழப்போகிறேன் என்று தனது மனதில் நினைக்கும்.  அந்த கூட்டின் விழும்பில் நின்று கொண்டு, உலகத்தையும், நான் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறேன் என்பதையும் பார்க்கும் அந்த குஞ்சு நான் கூட்டுக்குள் போவதுதான் சரி என்று நினைக்கும்.  அந்த நேரத்தில் அந்த தாய் கழுகு கூட்டின் விழும்பில் இருக்கின்ற குஞ்சை தனது சிறகால் அடித்து கீழே தள்ளிவிடும்.  அப்பொழுது அந்த குஞ்சுக்கு தாய் மீது மிகவும் கோபம், பயம் வரும்.  ஏன் என் அம்மா என்னை இப்படி சித்திரவதை செய்கிறது என்று நினைக்கும்.  குஞ்சி கத்தி அலறிக்கொண்டே பூமியை நோக்கி விழும்.  குஞ்சி பூமியை வந்தடைய ஒரு சில வினாடிகளுக்கு முன் அந்த தாய் கழுகு பறந்து வந்து குஞ்சை தன் செட்டைகளில் ஏந்திக்கொள்ளும்.   செட்டைகளில் ஏந்திக்கொண்ட தாய், மீண்டும் குஞ்சை உயரத்திற்கு கொண்டு செல்லும்.  நான் சகப்போகிறேன் என்று நினைத்த குஞ்சு தாயின் செட்டைகளில் இருப்பதை கண்டு சற்று இழைப்பாறும்.  நான் பிளைத்துக்கொண்டேன் என்று எண்ணி, பெருமூச்சு விடும் அடுத்த வினாடியே தாய் கழுகு தனது செட்டையில் இருக்கும் குஞ்சை மீண்டும் கீழே விட்டுவிடும்.  திரும்பவும் குஞ்சுக்கு தாயின் மீது கோபம் வரும்.  இப்படியே பலமுறை செய்து தான் அந்த தாய் தன் குஞ்சை உருவாக்குகிறது.  ஒரு சிறந்த பறவையாக, நேர்த்தியாக பறப்பதற்கு கற்றுக் கொடுக்கிறது.


குழந்தை நீச்சல் பழகுதல்:

          ஒரு தகப்பன் மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றார். முதல் நாள் அவன் தண்ணீரைப் பார்த்ததும், அழுதுகொண்டு உள்ளே இரங்க மாட்டேன் என்று சொன்னான்.  மறுநாள் தகப்பன் அவனை இழுத்துக்கொண்டு வந்து தண்ணீரின் ஆழமான பகுதியில் தூக்கி வீசினார்.  அங்கு இருந்து அவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள கையையும் காலையும் ஆடித்துக்கொண்டே எப்படியோ கரை வந்து சேர்ந்து விட்டான்.  அப்பொழுது தகப்பன் சொன்னார் நீ நீச்சல் பழகிவிட்டாய் என்று.  அப்பா தூக்கிப்போட்டபோது அவனுக்கு அப்பா மீது கோபம் இருந்திருக்கும்.  நீச்சல் பழகாத என்னை என் அப்பா இப்படி ஆழத்தில் தள்ளிவிட்டாரே என்று நினைத்தான்.  பிறகு தான் அவனுக்கு புரிந்தது நான் நன்றாக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் என் தந்தை அப்படி செய்தார் என்று.

 


சிலை:

          ஒரு அழகான சிலை உருவாக வேண்டுமானால் அது அநே அடிகளை வாங்க வேண்டியுள்ளது.  சிற்பி தன்னை செதுக்கும்போது அந்த கல் அத்துனை வலிகளையும் தாங்கிக்கொண்டு மிகச் சிறந்த ஓர் சிற்ப்பமாக உருவாகிறது.

          இதைப்போலவே நம்முடைய ஆண்டவரும் இவ்வுலக வாழ்வில் அநேக கஷ்டங்களையும், துன்பங்களையும், கண்ணீரையும் அனுமதிப்பார்.  இவைகள் நம் வாழ்வில் நிரந்தரம் அல்ல.  இவை எல்லாம் நம்மை பக்குவப்படுத்துவதற்காக, நம்மை உருவாக்குவதற்காக என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.  ஒருவேளை அந்த கழுகு குஞ்சு அந்த பயிற்ச்சியை எடுக்காதிருந்தால் அந்த குஞ்சால் மிக உயரமான இடத்தில் பறக்க முடியாது.  உயர உயர பறக்க வேண்டுமானால் நாமும் கூட சில கஷ்டத்தின் ஊடாய், கண்ணீரின் ஊடாய் கடந்து செல்ல வேண்டியுள்ளது.  தகப்பன் மகனை தண்ணீருக்குள் தூக்கி எறியாவிட்டால் மகன் சிறந்த நீச்சல் வீரனாக மாறியிருக்க முடியாது.  கல் சிற்ப்பியின் அடிகளை தாங்காமல் இருந்திருந்தால் அழகான சிற்ப்பமாக மாறியிருக்க முடியாது.  நாமும் சோதனைளை தாங்கும்போது சிறந்த ஒரு மனிதனாக, சிறந்த ஓர் வெற்றியாளானாக மாற முடியும்.  வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒருநாள் தோல்வையை சந்தித்தவர்களே.

 


யோவான் 16: 33ஆ

 உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு.  ஆனாலும் திடன்கொள்ளுங்கள்.  நான் உலகத்தை ஜெயித்தேன்.

          உபத்திரவத்தைக் கண்டு சோர்ந்துபோகாமல், உலகத்தை ஜெயித்தவர் என்னோடிருக்கிறார் என்ற நிச்சயம் நமக்கு இருக்கும்போது நாமும் வெற்றியாளனாக மாற முடியும்.

 

யோபு:

யோபு 23: 10

    ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்.  அவர் என்னை சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.

          யோபுவை விட நாம் நல்லவர்கள் அல்லவே.  (உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து பொல்லப்புக்கு விலகுகிற. யோபு 1: 1). யோபுவையே கர்த்தர் சோதிப்பார் என்றால், நாம் எம்மாத்திரம்.

          ஒரு கழுகு தன் குஞ்சுகளை பக்குவப்படுத்துவது போல நம்முடைய ஆண்டவர் நம்மை ஒவ்வொருநாளும் பக்குவப்படுத்துகிறார்.  அவர் கரத்தில் நாம் அடங்கியிருக்கும்போது யோபு பக்தன் சொன்னதுபோல நாமும் ஒரு நாள் பொன்னாக விளங்க முடியும்.

 

3. மேய்ப்பனைப்போல சுமப்பார் – பாதுகாப்பார்

ஏசாயா 40: 11

       மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்.  ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினாலே சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

          மேய்ப்பன் குட்டியை சுமப்பது போல ஆண்டவர் நம்மை சுமக்கிறவராக இருக்கிறார்.  நம்மை பெலப்படுத்துகிறவராக இருக்கிறார்.



யோவான் 10: 11

          நானே நல்ல மேய்ப்பன்.  நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

          நம்மை பெலப்படுத்த வேண்டும் என்பதற்காக, நாம் ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும் என்பதற்காக தனது ஜீவனையும் கொடுத்தவர் நம்முடைய ஆண்டவர்.



யோவான் 10: 11-18

          நம்முடைய ஆண்டவர் நம்மை கூலிக்காக வாங்க வில்லை.  அவரே நம்மை உருவாக்கினார்.  நமக்கு தலைவராய், மேய்ப்பராய் இருக்கிறார்.  கூலியாள் ஆடுகளுக்கு பிரச்சனை வந்ததும் ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுவான்.  ஆனால் சொந்த மேய்ப்பனோ, அந்த பிரச்சினைகளில் இருந்து தனது உயிரையும் கொடுத்த ஆடுகளை மீட்பார்.  நம்முடைய ஆண்டவர் நம்மை பாதுகாக்க, நம்மை பெலப்படுத்த, திடப்படுத்த, தைரியப்படுத்த, ஆசீர்வதிக்க தனது ஜீவனையே கொடுத்தார்.

 


முடிவுரை:

          ஆண்டவர் நம்மை சுமப்பார் என்ற தலைப்பில், தகப்பனைப்போல சுமப்பார் தேவைகளை சந்திப்பார் என்றும், கழுகைப்போல சுமப்பார் நம்மை பயிற்றுவிப்பார் என்றும், நல்ல மேய்ப்பனாக இருந்து தோழில் சுமந்து ஜீவனைக் கொடுத்து காப்பார் என்றும் கற்றுக்கொண்டேன். 

          நாம் இந்த ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொள்ளும்போது, நம் வாழ்வில் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை விடுவித்து காப்பாற்ற அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்.

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.