Type Here to Get Search Results !

யோவான்ஸ்நானனைப் பற்றி நாம் அறியாத பல உண்மைகள் | Biography of Baptist John | Bible Study in Tamil | Sermon Notes | Jesus Sam

================
யோவான்ஸ்நானன்
================

            இவர் பெயர் யோவான்ஸ்நானகன் அல்ல, யோவான்ஸ்நானன்.

யோவான்ஸ்நானன் என்றால் நம் நினைவிற்கு வரும் காரியங்கள்:

1. இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர்.

2. இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம் பண்ண வந்தவர்

3. விரியன் பாம்புக்குட்டிகளே என்றும், மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கித்தவர்

4. இயேசு கிறிஸ்துவை பார்த்து இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி என்று மொழிந்தவர்.


வழியை ஆயத்தம் பண்ண வந்தவர் என்றால் என்ன?

            இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம் பண்ண வருவது என்றால், எனக்குப் பின்னே ஒருவர் வரப்போகிறார், அவரை ஏற்றுக்கொள்ளவும், அவருடைய பிரசங்கத்தை கேட்கவும் ஆயத்தமாகுங்கள் என்று தான் யோவான் சொல்லும்படியாக வந்தார் என்றும் நாம் நினைக்கிறோம்.

            இயேசு கிறிஸ்து எங்கு எல்லாம் ஊழியம் செய்தார் என்று நாம் ஆராய்வோமானால், கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், தெக்கோவாவிலும், சிரியாவிலும் கூட அவருடைய கீர்த்தி சென்றதாக நாம் பார்க்கிறோம்.   கிறிஸ்துவானர் மூன்றறை (312) ஆண்டுகள் அநேக கிராமங்களுக்கும், பட்டணங்களுக்கும் சுற்றித்திருந்து ஊழியம் செய்தார்.  அப்படியானால், யோவான்ஸ்நானன் அந்த எல்லா இடங்களுக்கும் சென்று, மேசியா வரப்போகிறார் என்று சொல்ல வேண்டுமே, ஆனால் யோவான்ஸ்நானன் போகவில்லையே.  அவர் யோர்தான் நதியில் மட்டுமே பிரசங்கித்தார்.



யோர்தான் நதி:

            எர்மோன் மலை அடிவாரத்தில் துவங்குகின்ற யோர்தான் நதி 120 கி.மீ தெற்க்காக பாய்ந்து வந்து சவக்கடலில் கலக்கிறது.  இவ்வளவு பெரிய நீளம் கொண்ட யோர்தான் நதியில் யோவான்ஸ்நானன் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இருந்து பிரசங்கித்தார்.  அந்த இடத்தின் பெயர் பெத்அவ்ரா.  இந்த இடம் எரிகோவிற்கு அருகாமையில் இருக்கிறது.  யோர்தான் நிதி சவக்கடலை வந்து அடையும் முன்பு இருக்கின்ற அந்த இடத்தில் மட்டுமே யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்தார்.  ஊழியத்திற்கு வந்த பிறகு யோவான்ஸ்நானன் கலிலேயாவிற்கு போகவில்லை, எருசலேமிற்குப் போகவில்லை.  எரிகோவின் அருகாமையில் உள்ள அந்த இடத்தில் மாத்திரம் தான் ஊழியம் செய்தார்.


யோவானுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள வயது வித்தியாசம்:

யோவான்ஸ்நானன் இயேசு கிறிஸ்துவுக்கு எத்தனை நாளுக்கு முன்பாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார் என்று நாம் ஆராய்ந்து பார்ப்போம்.   யூதர்களுடைய கலாச்சாரப்படி ஒரு ஆண் மூப்பது வயது நிரப்பின பிறகே, வீட்டை விட்டு வெளியே சென்று தங்க முடியும்.  எனவே தான்  இயேசு கிறிஸ்து முப்பது வயதில் ஞானஸ்நானம் பெற்று ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.  அப்படியானால் யோவான்ஸ்நானனும் தனது முப்பதாவது வயதில் தான் வீட்டை விட்டு வெளியே வந்திருக்க முடியும்.  இயேசு கிறிஸ்துவுக்கும் யோவான்ஸ்நானனுக்கும் உள்ள வயது வித்தியாசம் ஆறுமாதம் ஆகும். (லூக்கா 1: 26)


எலிசபெத்தும் மரியாளும்:

  எலிசபெத் கர்ப்பம் தரித்தபோது அவள் மிகவும் வயது சென்றவள்.  எனவே தான் வயதான காலத்தில் நான் கர்ப்பவதியானேன் என்று சொல்லி வெளி உலகத்திற்கு சொல்ல கூச்சப்பட்டதால், ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தால்.   (லூக்கா 1: 25).  எலிசபெத் வயதானவள் என்பதாள் அவளுடைய அடுத்த மூன்று மாதங்களுக்கு உதவி செய்ய ஒரு துணை தேவை.  எனவே, தேவதூதன் மரியாளை அனுப்புகிறார்.  எலிசபெத்தின் வீட்டிற்கும் (நாசரேத்) மரியாளின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 110 கி.மீ.  எலிசபெத்தின் வீட்டில் தான் மரியாள் கர்ப்பவதியாகிறாள்.  தேவதூதன் மரியாளிடம் சொல்லுகிறார், பரிசுத்த ஆவியினால் நீ கர்ப்பவதியாவாய் என்று.  அதோடு சேர்த்து எலிசபெத்தும் கர்ப்பவதியாய் இருக்கிறாள் என்று சொல்லுகிறார்.  எனவே, மரியாள் எலிசபெத்தின் வீட்டிற்கு புறப்படுகிறாள்.  எதற்காக என்றால், நான் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியாகப்போகிறேன், இதை யாரும் நம்பமாட்டார்கள்.  பெற்றோரும் கூட நம்பமாட்டார்கள்.  எனவே, எலிசபெத்தின் வீட்டிற்கு போகிறாள்.  அங்கு தான் மரியாள் கர்ப்பவதியாகிறாள்.  மரியாளின் முதல் மூன்று மாதங்கள் எலிசபெத் மரியாளை பராமரிக்கிறாள்.  எலிசபெத்தின் கடைசி மூன்று மாதங்கள் மரியாள் எலிசபெத்தை பராமரிக்கிறாள்.  இதிலிருந்து நமக்குத் தெளிவாகிறது யோவான்ஸ்நானன் இயேசு கிறிஸ்துவை விட ஆறுமாதம் மூத்தவர்.

மூன்று மாதம் கழித்து மூன்று மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக நாசரேத் வருகிறாள் மரியாள்.  மூன்றாம் மாதம் என்பதால் மரியாள் கர்ப்பவதியாய் இருக்கிறாள் என்று அவள் சொல்லாமல் யாருக்கும் தெரியாது.  நாசரேத் வந்ததும் மரியாள் யோசேப்பிற்கு திருமணம் நடைபெறுகிறது.  அதன் பின்பு மரியாள் கர்ப்பவதியாய் இருக்கிறாள் என்று யோசேப்பிற்கு தெரிய வருகிறது.  மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானால் என்று தெரிந்த இரண்டே நபர்கள் ஒன்று எலிசபெத், மற்றொன்று யோசேப்பு.

 

யோவான் ஊழியம் செய்ய ஆரம்பித்தது எப்போது:

            இப்போது நாம் என்ன நினைக்கின்றோம், இயேசு கிறிஸ்து ஊழியம் செய்வதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே யோவான்ஸ்நானன் ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்று.   ஓர் ஆராய்சியாளர் இப்படியாக சொல்லுகிறார், இயேசு கிறிஸ்து ஊழியம் செய்ய துவங்குவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு தான் யோவான்ஸ்நானன் ஊழியம் செய்ய துவங்கினார் என்று.  ஆனால் யோவான்ஸ்நானன் தனது முப்பதாவது வயதிலேயே வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.  அப்படியானால், முதல் நான்கு மாதங்கள் என்ன செய்தார் என்று சிந்திக்க வேண்டும்.

 

யோவான்ஸ்நானனை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்:

            யோவான்ஸ்நானன் ஒட்டக மயிர் உடையை அணிந்திருந்தார்.  வெட்டுக்கிளியையும், காட்டுத்தேனையும் உணவாக உட்கொண்டவர்.   இதற்கான காரணம் என்ன?

            அந்த காலத்தில் பரிசேயர்களும், சதுசேயர்களும் பெருமை பிடித்து அழைந்தார்கள்.   ரோம பேர்ச்சேவகர்கள் திமிர்பிடித்தவர்கள்.   ஜனங்களை அடக்கி ஆண்டுகொண்டிருந்தவர்கள்.  வேதபாரகருடைய தலை வீங்கியிருந்த காலம்.  பரிசேயர்களும், சதுசேயர்களும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள்.  யூதர்களுக்கும் ரோமர்களுக்கும் ஒத்தே வராது.  இப்படிப்பட்ட இந்த காலத்தில் எவனாவது கொஞ்சம் பிழையாக பேசிவிட்டால், அவனை கல்லெறிவார்கள், கைதுசெய்வார்கள், கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள். 

            இந்த காலத்தில் தான் யோவான்ஸ்நானன் தனது பிரசங்கத்தை துவங்குகிறார்.  அவர் தனது பிரசங்கத்தை விரியன் பாம்புக்குட்டிகளே என்று துவங்குகிறார்.  அவருடைய பிரசங்கத்தை கேட்டவர்கள் யார் என்றால் பரிசேயர்கள், சதுசேயர்கள், வேதபாரகர்கள், ரோம போர்ச்சேவகர்கள் மற்றும் பொதுமக்கள்.  ஏன் ஒருவரும் யோவானை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை.  மாறாக எல்லோரும் பயந்து, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.    இதற்கு காரணம் என்ன?  யோவானை எதிர்த்து நிற்கவேண்டியவர்கள், நாங்கள் மனந்திரும்ப என்ன செய்ய வேண்டும் என்று ஏன் கேட்டார்கள்.

லூக்கா 3: 10-14
            10. அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.
      11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்.  ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றார்



        12. ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.
    13. அதற்கு அவன்: உங்களுக்கு கட்டயைிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
    14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.  அதற்கு அவன்:  நீங்கள் ணருவருக்கும் இடுக்கண்செய்யாமலும், பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.



தீர்க்கதரிசிகளைவிட மேலானவர் யோவான்ஸ்நானன்:

            வேதத்தில் அநேக தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள்.  எலியா, எலிசா, ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல் என்று.  பெரிய தீர்க்கதரிசிகள் அநேகர் இருந்தார்கள்.  சின்ன தீர்க்கதரிசிகள் அநேகர் இருந்தார்கள்.  ஆனால் எந்த ஒரு தீர்க்கதரிசியும் பிறக்கும் முன்பு, இவர் வரப்போகிறார் என்று எந்த ஒரு தீர்க்கதரிசியும் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை.  பெரிய எலியா வந்தார்.  எலியா என்று ஒரு தீர்கதரிசி வருவார் என்று யாராவது தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டா? இல்லையே.  பயங்கர பெரிய தீர்க்கதரிசி ஏசாயா வந்தார்.  அவர் வரப்போகிறார் என்று அதற்கு முன்பு எவரும் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.  முழுவேதத்தையும் வாசித்தால், இந்த தீர்க்கதரிசி வரப்போகிறார் என்று எந்த ஒரு தீர்க்கதரிசியையும் முன்னறிவிக்கவில்லை.  ஆனால் ஏசாயா தீர்க்கதரிசியும், மல்கியா தீர்க்கதரிசியும் யோவான்ஸ்நானன் தீர்க்கதரிசியைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள்.

ஏசாயா 40: 3-5
    3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்.  அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைப்பண்ணுங்கள் என்றும்,
      4. பள்ளமெல்லாம்உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,
      5. கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும் மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.

            யோவான்ஸ்நானன் வருவதற்கு 700 வருடங்களுக்கு முன்பு யோவான்ஸ்நானனைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.

மல்கியா 4: 5
    இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

            ஏசாயா என்ற மகா பெரிய தீர்க்கதரிசியும், மல்கியா என்ற பழைய ஏற்பாட்டு கடைசி தீர்க்கதரிசியும் யோவான்ஸ்நானனைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்.  அந்த அளவிற்கு யோவான்ஸ்நானன் ஒரு பெரிய தீர்க்கதரிசி.  அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற இந்த யோவான்ஸ்நானன் என்ன செய்தார். 

 

நான்கு சுவிசேஷத்திலும் யோவான்ஸ்நானன்:

            இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை எழுத நான்கு நற்செய்தியாளர்களை ஆவியானவர் ஏற்படுத்தினார்.  இவற்றுள் ஒரு சில நிகழ்வுகள் மத்தேயுவில் இருக்கும் மாற்குவில் இருக்காது, மாற்குவில் இருக்கும் லூக்காவில் இருக்காது, லூக்காவில் இருக்கும் யோவானில் இருக்காது.  இப்படியிருக்க இந்த யோவான்ஸ்நானனைக் குறித்து நான்கு சுவிசேஷங்களிலும் இடம் பெற்றிருக்கிறது. 

மத்தேயு – யூதர்களுக்காக எழுதுகிறார்

மாற்கு – ரோமர்களுக்காக எழுதுகிறார்

லூக்கா – கிரேக்கர்களுக்காக எழுதுகிறார்

யோவான் – ஆவிக்குரிய யூதர்களுக்கு எழுதுகிறார்

            இந்த யோவான்ஸ்நானனைக் குறித்து யூதர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆவியானவர் விரும்பினார்.  எனவே தான் நான்கு நற்செய்தியாளர்களும் இவரைக் குறித்து எழுதுகிறார்கள்.  அந்த அளவிற்கு இவர் என்ன பெரிய காரியம் செய்தார்.

மத்தேயு 3: 3
          கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்.  அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள் என்றும் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

மாற்கு 1: 3, 4
         3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்,
 4. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.

லூக்கா 3: 4
     4. பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும்.
   5. மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருகு்கிற பிரகாரம்,
  6. அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கித்தான்.

யோவான் 1: 23
      அதற்கு அவன் கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.

 

இயேசு கிறிஸ்து யோவான்ஸ்நானனைக் குறித்து என்ன சொன்னார்:

லூக்கா 7: 24-28
  24. யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக் குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
   25. அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்லவமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைளகளிலே இருக்கிறார்கள்.
        26. அல்லவென்றால், எதைப்பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ?  ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
      27. இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்.  அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
      28. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை.

            தீர்க்கதரிசியை விட மேன்மையுள்ளவன் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.

ஏன் எலிசபெத் மலடியானாள்:

            யோவான்ஸ்நானன் தகப்பன் சகரியா, தாய் எலிசபெத்.  லேவி வம்சத்தை சேர்ந்தவர்கள்.  எலிசபெத்து மேசியா பிறக்க ஆறுமாதத்திற்கு முன்பு யோவான்ஸ்நானனை கர்ப்பந்தரிக்க வேண்டும் என்பதற்காகவே, ஆண்வர் எலிசபெத்தின் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.  தாயின் வற்றில் உருவாகும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர் இந்த யோவான்ஸ்நானன்.  யோவான்ஸ்நானன் உருவாவதற்கு முன்பு அந்த கர்ப்பப்பையில் வேறு ஒரு குழந்தை உருவாகக் கூடாது என்பதற்காக ஆண்டவர் எலிசபெத்தின் கர்ப்பத்தை அடைத்து வைத்திருந்தார்.



எலிசபெத்தும் சகரியாவும் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள்.  செல்லும் இடமெல்லாம் அநேகர் கேட்டிருப்பார்கள், எப்போது ஒரு குழந்தையை பெற்றுத்தாரப்போகிறாய் என்று.  எலிசபெத் மூதாட்டியாகும் வரை குழந்தை இல்லாததால் மலடி என்ற ஒரு பெயரையும் வைத்திருந்தார்கள்.  ஆனால், எலிசபெத் மலடியாய் இருந்ததற்க்கு ஒரு திவ்ய காரணம் இருந்தது.  அந்த காரணத்தை சகரியாவும் எலிசபெத்தும் யோவான்ஸ்நானன் பிறந்தபோதே அறிந்து கொண்டார்கள்.

நம்முடைய வாழ்க்கையிலும் அநேக ஆசீர்வாதங்கள் தடைபடலாம்.  காலதாமதமாகலாம்.  நம்முடைய ஆண்டவர் எதை செய்தாலும் நம்முடைய நன்மைக்கே செய்வார் என்று நாம் விசுவாசிப்போம்.  தொடர்ந்து முழுமையாக ஆண்டவரை நம்புவோம்.  சகரியா எலிசபெத்திற்கு காரியத்தை வெளிப்படுத்தின ஆண்டவர் ஏற்ற நேரம் வரும்போது நமக்கும் காரியத்தை வெளிப்படுத்துவார்.

எலிசபெத்தின் கருவில் யோவான்ஸ்நானன் இருக்கும்போதே அவர் ஒரு விசேஷித்தவராக இருந்தார்.  மரியாள் எலிசபெத்தை வாழ்த்தினபோது, எலிசபெத்தின் வயிற்றில் இருந்த யோவான்ஸ்நானன் துள்ளினான்.   அனைவராலும் மலடி என்று அழைக்கப்பட்ட எலிசபெத்திற்கு ஆண்டவர் ஒரு விசேஷித்த குழந்தையைக் கொடுத்தார்.

 

எருசலேம் கைப்பற்றப்பட்டு தேவாலயம் தீட்டுப்படுதல்:

            கிறிஸ்துவுக்கு முன் 167-ம் ஆண்டில் அந்தியோகஸ் எபிபனஸ் என்ற மன்னர், தனது இராணுவத்தோடு எருசலேமிற்கு வந்து தேவாலயத்தைக் கைப்பற்றி, செயூஸ் என்ற கிரேக்க தெய்வ சிலையை தேவாலயத்தில் வைத்து, பன்றிகளை பலியிட்டு தேவாலயத்தை நாசமாக்கினான்.  இதற்கு எதிராக செயல்பட்டவர்களை கொலை செய்தான்.  கர்ப்பினி பெண்களை தேவாலயத்தின் உப்பரிகையில் இருந்து தள்ளிவிட்டு கொலைசெய்தான்.  அப்போது எருசலேமில் பிரதான ஆசாரியனாக இருந்தவர் மட்டாடயஸ்.  அவருடைய மூத்த மகள் எறுதா.  அவள் தன் தம்பிமாரோடும், சில வாலிபர்களோடும் தப்பியோடி ஒரு மலையிலே இரண்டு ஆண்டுகள் ஒழிந்திருந்தாள்.   கி.பி. 165-ல் மறுபடியும் எருசலேமிற்க்கு வந்து அந்தியோகஸ் எபிபனசை அடித்து துரத்தி, எருசலேமை கைப்பற்றினார்கள்.  அதன்பின்பு ஆசாரியர்கள் அனைவரும் பயந்தார்கள், இதேபோன்று இனியும் அரசியல்வாதிகளால், இராணுவங்களால் தங்களுக்கு பிரச்சனைகள் வரும் என்று பயந்தார்கள்.  எனவே, ஆசாரியர்கள் ஆரசியல்வாதிகளை தங்கள் பக்கமாக இழுத்துக்கொள்ள நினைத்தார்கள்.  (அரசியல்வாதிகளை காக்காய் பிடித்தார்கள்).   தேவாலயத்திலே யார், யார் எங்கு எங்கு போகமுடியும் என்று நிபந்தனை சட்டம் இருக்கிறது.  எல்லாரும் ஆலயத்தில் எல்லா இடத்திலும் நுழைய முடியாது.  ஆனால் இந்த ஆசாரியர்கள் புறஜாதியாராய் இருக்கிற அரசியர்வாதிகளை, புறஜாதிகள் நுழைய முடியாத உட்பிரகாரத்திற்கு அழைத்து வந்து, அவர்களை கணம்பண்ணி, அவர்களையும் தூபம்காட்ட வைத்து, அவர்களை ஆசீர்வதித்து, தேவாலயத்தை தீட்டுப்படுத்தினார்கள்.

            இவர்களைப் போலத்தான் இன்றும் அநேக ஊழியர்கள் தாங்கள் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக அரசியல்வதிகளை தேவாலயத்தின் முக்கிய இடங்களில் அமரவைக்கிறார்கள்.  காரணம் சமுதாயத்தால் எனக்கு எந்த எதிர்ப்பும் வரகூடாது என்பதற்காக.

சபைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.  பாவி வரலாம், விபச்சாரி வரலாம், கொலைகாரன் வரலாம்.  எவரும் வராலம்.  ஆனால் மேடைக்கு, பரிசுத்த ஸ்தலதிற்கு அபிசேஷம் பெற்ற ஊழியர் மட்டுமே வரவேண்டும்.  விசுவாசிக்கு கூட அனுமதி இல்லை.

 

எஷீன்ஸ்கள்:

            எருசலேம் தேவாலயம் இப்படி தீட்டுப்பட்டதால், அதில் ஒரு சில ஆசாரியர்கள் இப்படிப்பட்ட காரியங்களை வெறுத்தார்கள்.   அவர்கள் தான் எஷ்னாயிம்கள்.  எஸ்னாயிம் என்றால் எபிரெய மொழியிலே தூய்மையை பேனுபவர்கள் என்ற அர்த்தம்.  இவர்கள் தான் எருசலேமை விட்டு, தேவாலயத்ததை விட்டு, தங்கள் சமுதாயத்தை விட்டு வெளியேறி, சவக்கடல் அமைந்திருக்கும் பிரதேசத்திற்கு போய், அதற்கு அன்மையில் இருக்கின்ற கும்ரான் என்ற இடத்தில் தனியாய் வாழ ஆரம்பித்தார்கள்.  அவர்கள் மற்ற மனிதர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.   லேவி கோத்திரத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் அங்கு இருப்பார்கள்.

            அவர்களுடைய வேலை என்ன வென்றால், ஒரு சிலர் சமயலுக்கு பொறுப்பாய் இருந்தார்கள்.  ஒரு சிலர் ஆடுமாடுகளை பராமரிப்பதற்கு பொறுப்பாய் இருந்தார்கள்.  ஒரு சிலர் பனைமரங்களை வளர்ப்பதற்கு பொறுப்பாய் இருந்தார்கள்.  மற்றவர்கள் அனைவரும் பரிசுத்த வேதாகமத்தை பிரதியாக்கம் செய்து வந்தார்கள்.  யாரும் அதிகமாக பேசிக்கொள்ள மாட்டார்கள்.   தினமும் காலையில் எழும்புவார்கள், ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருக்கும், அந்த தொட்டியில் இறங்குவார்கள்.  தொட்டியின் நடுவில் சென்றதும் மூன்று முறை மூழ்கி, மூழ்கி எழும்புவார்கள்.  அப்படியே தொட்டியை விட்டு வெளியே வந்து விடுவார்கள்.  எல்லோரும் அப்படியே செய்து தங்கள் வேலைகளை செய்ய ஆரம்பிப்பார்கள்.  உணவு அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் உண்பார்கள்.  இரவு தூங்கும் முன்பதாக காலையில் செய்ததுபோலவே அனைவரும் தொட்டியில் இரங்கி மூன்று தரம் மூழ்கி தங்களை சுத்திகரித்துக்கொள்வார்கள்.  இவர்கள் தான் எஷீன்ஸ்கள்.  இவர்கள் இங்கு வாழ ஆரம்பித்தது கி.பி 160-ம் ஆண்டில்.  அதை தொடர்ந்து தேவாலயத்தில் நடைபெறுகிற அறுவெறுப்புகலை வெறுத்த அநேகர் அவர்களோடு சேர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.  யோவான்ஸ்நானனும் தனது முப்பதாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, கும்ரானில் இருந்த எஷ்னாயிம்களோடு வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.   ஏறக்குறை நான்கு மாதங்கள் அவர்களோடு தங்கியிருந்தார்.

            இந்த எஷ்னாயிம்களில் எவராவது தங்கள் வீட்டையோ, குடும்பத்தையோ பார்க்க விரும்பினால், அவர்கள் பெரியவர்களிடம் அனுமதி கேட்பார்கள்.  அனுமதி கிடைத்தால், அவர்கள் வெளியே போய் யாரோடும் பேசக்கூடாது, சிரிக்ககூடாது, வணக்கம் சொல்லக்கூடாது. யாராவது அவர்களோடு பேசினாலும் பதில் பேசக்கூடாது.  இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து திரும்பி வர வேண்டும்.

அப்படி ஒருவர் வெளியே வருவார் என்றால் அவர் ஒட்டகமயிர் உடையை மட்டுமே உடுத்தியிருக்க வேண்டும்.  கும்ரான் குகையில் அவர்கள் எந்த உணவு வேண்டுமானாலும் சாப்பிடலாம், அவர்களுடைய வீட்டிற்கு சென்றால் எந்த உணவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  ஆனால் வெளியே இருக்கும்போது, அவர்கள் ஒரு தோல் பையில் காட்டுத்தேன் கொண்டுபோக வேண்டும்.  எருசலேமில் வெட்டுக்கிளிகள் அதிகமாக இருக்கும்.  நமது இடத்தில் இருக்கும் வெட்டுக்கிளிகள் அல்ல அவைகள்.  அவைகள் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்தவை.  இன்றும் எருசலேமில் அந்த வெட்டுக்கிளிகளை உணவாக பயன்படுத்துகிறார்கள்.   இந்த எஷ்னாயிம்கள் வெளியே எங்கு சென்றாலும் இந்த வெட்டுகிளியை சுட்டு அதை காட்டுத்தேனோடு சேர்த்து சாப்பிட வேண்டும்.  வேறு எந்த உணவும் சாப்பிட கூடாது.  எனவே தான் யோவானும் ஒரு எஷீனாக இருந்தார் என்று நம்பப்படுகிறது.

            ஆசாரியர்கள் நினைத்தார்கள் இவர்கள் பெரிய பரிசுத்தவான்களாக  தங்களை காண்பிக்கிறார்கள் என்று.  ஆனால் பொதுமக்கள் இவர்களை பார்த்து பயந்தார்கள்.  ஏனென்றால் இவர்கள் பக்தியுள்ளவர்கள்.  வசனத்தை பிரதியாக்கம் செய்கிறவர்கள்.  அதிகமாக இவர்களை பார்க்க முடியாது.  என்றாவது, எப்போவாவதுதான் ஒரு எஷீனைப் பார்க்க முடியும்.  எனவே, ஜனங்கள் ஆச்சரியமாக அவர்களை உற்று உற்று பார்ப்பார்கள்.  அவர்களோடு பேசவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.  ஆனால் அந்த எஷீன்கள் பேசவே மாட்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் ஒரு எஷீன் வந்து ஜனங்களோடு பேசுகிறார்.  அவர்தான் யோவான்ஸ்நானன்.  ஒட்டகமயிர் உடை, காட்டுத்தேன் பை, கையிலே ஒரு கம்பு.   அதைபார்த்த ஜனங்கள் எஷீன் வந்துவிட்டார் என்று சொல்லி ஆர்வமாக அவரைப் பார்க்க வருகிறார்கள்.  எரிகோவிலே அநேக மண்மேடுகள் இருக்கும்.  அதில் ஒன்றில் இவர் ஏறிக்கொண்டு, விரியன் பாம்புக் குட்டிகளே என்று சொல்லுகிறார்.  ஜனங்கள் எல்லாரும் கோபம் கொல்லவில்லை.  எஷீன் பேசுகிறார் என்று ஆர்வமாய் கேட்கிறார்கள்.   அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் அனைவரும் வந்து சொல்லுகிறார்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று.  யோவானுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.  கும்ரான் குகையில் அவர்கள் தினமும் செய்து வந்த அந்த பழக்கம் நினைவிற்கு வந்தது.  எனவே, மனந்திரும்ப விரும்புகிறவர்கள் எல்லாரும் யோர்தானுக்கு வாருங்கள் என்று சொல்லி, அவர்களை யோர்தானில்  மூன்று முறை மூழ்கச் செய்கிறார்.   இதன் பெயர் தான் ஞானஸ்நானம்.  எஷீன்களுடைய பழக்கத்தை வெளியுலகத்திற்கு கொண்டு வந்தவர் யோவான்ஸ்நானன்.

 


வழியை ஆயத்தப்படுத்துவது என்றால் என்ன?

            யோவான் கொடுத்த இந்த ஞானஸ்நானம் என்பது ஒரு இறையியல் அர்த்தத்தைக் குறிக்கிறது.  இதை உறுதிப்படுத்ததான் மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்து யோவானால் ஞானஸ்நானம் பெற வந்தார்.  அந்த நேரத்தில் யோவான் ஆடிப்போய்விடுகிறார்.  நாதா நீர் எனக்கு ஞானஸ்நனம் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.  அப்போது இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் இப்போது இடங்கொடு.  இப்படி எல்ல நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு எதுவாய் இருக்கிறது என்று.   இப்படி இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுக்கிறார்.  இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்தது சரி என்பதை உறுதிப்படுத்த பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல இரங்குகிறார்.  பிதாவானவர் இரண்டு முறை வானத்திலிருந்து பேசுகிறார்.  முதல் முறை நீர் என் நேசக்குமாரன், உம்மில் பிரியமாய் இருக்கிறேன் என்றும், இரண்டாவது முறை இவர் என் நேசக்குமாரன் இவரில் பிரியமாய் இருக்கிறேன் என்றும் சொல்லுகிறார். 

லூக்கா 3: 21
   21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது.
 22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார்.  வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீ என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

மத்தேயு 3: 17
            அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

            ஆனால் இந்த ஞானஸ்நானத்தின் இறையியல்  என்ன என்று யோவான்ஸ்நானன் சொல்லிக்கொடுக்கவில்லை.  இயேசு கிறிஸ்துவும் சொல்லிக்கொடுக்கவில்லை.  பிற்காலத்தில் வந்த பவுல் கற்றுக்கொடுக்கிறார்.  அதாவது ஞானஸ்நானத்தின் போது ஒரு மனிதன் இயேசுவோடு மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு உயிரோடு எழும்புகிறான்.  இதற்குள்ளே தான் இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துவது அடங்கியிருக்கிறது.  இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி சிலுவையில் மரிக்க வந்தார்.

            ரோமர் ஆறாம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப்பாருங்கள்.

            ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.  ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று சட்டம் சொல்லும்.  ஆனால் இயேசு கிறிஸ்து குற்றவாளி அல்ல.  நாம் தான் குற்றவாளி. பாவத்தின் சம்பளம் மரணம் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். (ரோமர் 6: 23) 

            யோவான்ஸ்நானன் இயேசு கிறிஸ்து வருவதற்கான வழியை ஆயத்தப்படுத்தவில்லை.  நான் தவறு செய்யும்போது நான் தண்டிக்கப்பட வேண்டும்.  எனக்காக கிறிஸ்து தண்டிக்கப்பட்டுவிட்டார்.  அதை நான் எப்படி அனுபவிக்க வேண்டும் என்றால், ஞானஸ்நானத்தின் மூலமாக மட்டுமே. இந்த வழியை ஏற்ப்படுத்த வந்தவர் தான் யோவான்ஸ்நானன்.

நான் ஞானஸ்நானம் பெறும்போது, நான் செய்த குற்றத்திற்காக, பாவங்களுக்காக என் சரீரம் தண்டனையை அனுபவிக்க வேண்டும், என் சரீரம் உழப்பட்ட நிலம்போல் மாற வேண்டும்.  ஆனால் எல்லாவற்றையும் அவர் எடுத்துக்கொண்டு நன்மைகளையும், ஆசீர்வாதத்தையும் மட்டுமே எனக்கு தந்தார் என்று நான் நினைவுகூற வேண்டும்.  எனக்காக கிறிஸ்து அடிக்கப்பட்டது உண்மைதான், சிலுவை மரத்தில் தொங்கியது உண்மைதான்.  அதை நான் அனுபவிக்க வேண்டுமானால் நான் ஞானஸ்நனம் பெற வேண்டும்.  அந்த வழியைத் தான் யோவான்ஸ்நானன் ஏற்படுத்தினார்.  எனவே, தான் அவர் தீர்க்கதரிசிகளைப்பார்க்கிலும் மேலானவர் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.   நான் மெய்யான விடுதலையை, மெய்யான இரட்சிப்பை சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமானால், நான் கட்டாயம் ஞானஸ்நானம் பெற வேண்டும். 

சற்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.  கிறிஸ்து எனக்காக சிந்திய பாடுகளை நான் அனுபவிக்க வேண்டுமானால், அந்த விடுதலையை, இரட்சிப்பை நான் அனுபவிக்க வேண்டுமானால், அதற்கு ஞானஸ்நானம் அவசியமாகும்.  ஞானஸ்நானம் என்பது சடங்காச்சாரம் அல்ல, நான் பாவத்தின் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டேன் என்பதற்கான அடையாளம்.  எனவே, ஒவ்வொரு கிறஸ்தவனும் ஞானஸ்நானம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த யோவான்ஸ்நானன் வாழ்க்கையின் மூலமாக ஆண்டவர் உங்களோடு பேசியிருப்பார் என்று நான் கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.