Type Here to Get Search Results !

யார் இந்த நாத்தான்வேல்? | Nathaniel and Jesus Christ | பிலிப்புவின் ஊழியம் என்ன? | What was Philip's ministry? | Jesus Sam

நாத்தான்வேல்

யோவான் நற்செய்தியில் முக்கியமான உரையாடல்கள் இரண்டு உள்ளது

1. நாத்தான்வேலும் – கிறிஸ்துவும் பேசியது (யோவான் 1: 43-51)

2. சமாரிய பெண்ணும் – கிறிஸ்துவும் பேசியது (யோவான் 4: 1-42)

            யோவான் இறையியல் சார்ந்த அநேக கருத்துக்களை அவருடைய நற்செய்தியில் எழுதியுள்ளார்.

            மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் இந்த நான்கு சுவிசேஷங்களிலும் நாம் கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றி வாசிக்கலாம்.  இவைகளில் முதலாவது எழுதப்பட்ட நூல் மாற்கு நற்செய்தி நூல், இந்த நூலை துணையாகக் கொண்டு ஏணைய நூல்கள் எழுதப்பட்டன.  மத்தேயு நற்செய்தி நூல் முதலாவதாக வைக்கப்பட்டிருப்பதன் நோக்கம், யூதர்களின் பாரம்பரிய வரலாற்று அட்டவணையை மத்தேயு நற்செய்தியாளர் தனது முதல் அதிகாரத்தில் எழுதியுள்ளார்.   யூதர்களை முக்கியப்படுத்தி வேதம் எழுதப்பட்டுள்ளதால் மத்தேயு நற்செய்தி நூல் புதிய ஏற்பாட்டின் முதல் நூலாக இடம் பெற்றிருக்கிறது.

            யோவான் நற்செய்தியாளர் மிக முக்கியமான தகவல்களை மட்டுமே பதிவு செய்வார். எனவே மற்ற நற்செய்திகளில் இருந்து யோவான் நற்செய்தி நூல் முற்றிலும் வேறுபட்டதாக காணப்படும்.  இவர் ஒரு சிறந்த இறையியளாலர், சிறந்த ஊழியர், சிறந்த எழுத்தாளர்.  இயேசு கிறிஸ்து பயன்படுத்திய நானே என்ற வார்த்தையை யோவான் நற்செய்தியாளர் மட்டுமே தனது சுவிசேஷத்தில் குறிப்பிட்டுள்ளார்.  நாத்தான்வேல் கிறிஸ்துவிடம் உரையாடிய செய்தியும், சமாரிய ஸ்திரீ கிறிஸ்துவுடன் உரையாடிய செய்தியும் மற்ற நூல்களில் நாம் பார்க்க முடியாது.   மற்ற நற்செய்தியாளர்களை விட இந்த யோவான் நற்செய்தியாளர் சற்று வித்தியாசமாக யோசிக்கக்கூடியவர்.

பிலிப்பு:

            பிலிப்புவின் பிரதான வேலை மற்றவர்களை அறிமுகம் செய்கிறவர். 

1. நாத்தான்வேலை கிறிஸ்துவுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

(யோவான் 1: 45, 46)

2. கிரேக்கர்களை கிறிஸ்துவுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

            (யோவான் 12: 20-22)

3. எத்தியோப்பிய மந்திரியை அறிமுகப்படுத்துகிறார்.

            (அப்போஸ்தலர் 8: 26-39)

நாத்தான்வேல்:



            நாத்தான்வேல் என்றால் கடவுளின் அருட்கொடை என்று பொருள்.

            நாத்தான்வேலின் மறுபெயர் பர்தொலோமேயு.  பர்தொலோமேயு என்பது குடும்பப்பெயர்.

 

பிலிப்பு - நாத்தான்வேலை அழைத்தல்:

யோவான் 1: 45

            பிலிப்பு நான்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்.  அவர் யோசேப்பின் குமாரனும், நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.



            சட்டபுத்தகத்தையும் (தோரா), தீர்க்கதரிசனங்களையும் அதிகமாக நம்பியவர்கள் யூதர்கள்.  சட்டத்திற்கும் உயிர் உண்டு, தீர்க்கதரிசனத்திற்கும் உயிர் உண்டு.  இவை இரண்டும் இணைந்த மனிதனை தான் கண்டதாகவும், அவர் நாசரேத்தைச் சார்ந்தவர் என்பதாகவும் பிலிப்பு நாத்தான்வேலிடம் சொல்லுகிறார்.

நாசரேத்:

யோவான் 1: 46

            அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான்.

            நாசரேத் ஊர் மக்கள் சமூகத்திலே அடிமைகளாக்கப்பட்ட மக்கள், பொருளாதாரத்திலே மிகவும் பின்தங்கியவர்கள்.  சமயம் என்ற பெயரிலே அழுத்தப்பட்ட மக்கள், கலாச்சாரம் என்ற பெயரில் சிலுவை அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட மக்கள்.

            எனவே நாத்தான்வேல் கேட்கிறார் அங்கிருந்து எந்த நன்மை வரும் என்று.  நாசரேத்தைக் குறித்து ஒரு எதிர்மறையான சிந்தனை கொண்டவர் நாத்தான்வேல்.

            நாத்தான்வேல் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.  பிலிப்புவிற்கு பதில்சொல்ல முடியவில்லை.  என்ன சொல்வது என்று தெரியவில்லை.  நாசரேத்தைக் குறித்த எதிர்மறையான சிந்தை கொண்ட இவரை, நேர்மறை சிந்தை கொண்டவராக மாற்ற வேண்டும்.  அந்த நேரத்தில் பிலிப்பு ஞானமாக ஒரு பதிலை சொல்லுகிறார்.

யோவான் 1: 46

            அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.

            தீர்வை ஆண்டவரின் கரத்தில் கொடுக்கின்றார் பிலிப்பு.  எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு.  அந்த தீர்வு ஆண்டவர் தான்.  எனவே அவரை வந்து பார் என்ற பிலிப்பு சொல்லுகிறார்.  பிலிப்புவின் வார்த்தை ஒரு  உறுதிப்பாட்டின் வார்த்தை.  வந்து பார்த்தால் தான் விடை கண்டுகொள்ள முடியும்.  வெளியே நின்று விவாதித்துக்கொண்டிருந்தால் விடையைப் பெற்றுக்கொள்ள முடியாது.

தோமா:

            தோமா தனது குருவை தொட்டுப்பார்த்தால் தான் நம்புவேன் என்று சொன்னார்.  தோமா இந்த வார்த்தையை சந்தேகத்தினால் சொல்லவில்லை.  தோமா ஒரு அனுபவத்தின் ஆன்மீகவாதி.

           

            தோமா கண்டு விசுவாசித்தான்.  அப்படிப்பட்ட ஓர் விசுவாச அனுபவத்தை நாத்தான்வேலுக்கு தரவேண்டும் என்பதற்காக பிலிப்பு, நாத்தானிவேலிடம் சொல்லுகிறார், வந்து பார்.

வேதத்தின் முக்கிய சாராம்சங்கள் இரண்டு:

1. வந்து பாருங்கள் (Come and See)

2. போய் சொல்லுங்கள் (Go and Tell)

            நாம் கிறிஸ்துவின் அன்பை ருசிபார்க்க வேண்டும் என்றால், வந்து பார்க்க வேண்டும்.  தூரத்தில் நின்று கொண்டு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.  ஆனால் உண்மையான கிறிஸ்துவை, உயிருள்ள கிறிஸ்துவை நான் அனுபவிக்க வேண்டுமானால் அந்த கிறிஸ்துவிடம் வந்து பார்த்தால் தான் தெரியும்.  ஒரு பழத்தை தூரத்தில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தால் அதின் சுவையை நம்மால் உணர முடியாது.  அதை நாம் கையில் எடுத்து சுவைத்துப் பார்க்க வேண்டும்.  அதுபோல கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்பதை நாம் தூரத்தில் நின்று கொண்டிருந்தால் அறிந்துகொள்ள முடியாது.  கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொண்டு அவரோடு வாழும்போது அவரின் மகத்துவத்தை நம்மால் அனுபவிக்க முடியும்.

யோவான் 1: 47

            இயேசு நாத்தான்வேலை தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக் குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.



            நாத்தான்வேல் கிறிஸ்துவினிடத்தில் வந்த மாத்திரத்தில் நாத்தான்வேலைக் குறித்து மிகப் பெரிய சாட்சியை கிறிஸ்து சொல்லுகிறார்.

            அதேபோல, கிறிஸ்துவும் சாட்சியை எதிர்பார்க்கின்றார்.  ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள். (மாற்கு 8: 27), (லூக்கா 9: 18)

ஒவ்வொரு ஊழியனும், இந்த கேள்வியை தனது விசுவாசிகளிடம் கேட்க வேண்டும்.  ஒவ்வொரு விசுவாசியும் தனது பக்கத்துவீட்டுக்காரர்களிடம் , நம்மோடு வேலை செய்கிறவர்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும்.  என்னை நீங்கள் யார் என்று சொல்லுகிறீர்கள் என்று.

            என்னைக் குறித்து நான் எனது உறவுகளிடம் கேட்க கூடாது.  அவர்கள் என்னைக் குறித்து புகழ்ந்துதான் பேசுவார்கள்.  மற்றவர்களிடம் கேட்க வேண்டும்.  அதை தான் கிறிஸ்து செய்தார்.  அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியாக, சரியாக வாழ்ந்து காண்பித்தவர் எம் அருள்நாதர்.  எனவே, தைரியமாக கேட்கிறார், மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று. (மத்தேயு 16: 13)

            நம்முடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது?  கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் கிறிஸ்துவின் சுபாவம் காணப்படுகிறதா? கிறிஸ்துவை நாம் பிரதிபலிக்கிறவர்களாக, வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கின்றோமா?

 

யோவான் 1: 48

            அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான்.  இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.

            நமது ஆண்டவர் ஒரு தீர்க்கதரிசி.  நாம் எந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அவர் அறிவார்.  அவருடைய கண்களுக்கு மறைவாக நாம் எதையும் செய்ய முடியாது.

2 நாளாகமம் 16: 9

            கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.

            அத்திமரம், ஒலிவ மரம், திராட்சைத் தோட்டம் இதற்கு கீழ் அமர்கிறவர்கள் அனைவரும் யாவே கடவுளை நோக்கி இறை வேண்டல் செய்வார்கள்.  பழைய ஏற்பாட்டு ஆகமங்களையும், தீர்க்கதரிசனங்களையும் படிப்பார்கள்.  இங்கு அமர்ந்து வேதத்தை ஒரு நபர் படிக்கின்றார், கற்றுக்கொள்கின்றார் என்றால் அவர் ரபீமாராக தன்னை ஆயத்தப்படுத்துகிறார் என்று அர்த்தம்.  அத்திமரம் மிகவும் குளிர்ச்சியான மரம்.   மனதை ஒருநிலைப்படுத்த இந்த மரம் உதவியாக இருக்கும்.

மரத்தினடியில் ரபீமார்கள் பாடம் கற்பார்கள்

சகரியா 3: 10

    அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின் கீழும் அத்திமரத்தின் கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

மீகா 4: 4

    அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.  சேனைகளின் கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று

            ஒவ்வொரு யூதருடைய ஜெபமும் தினமும் என்னவாக இருக்கும் என்றால்: மேசியாவே சீக்கிரம் வாரும், மேசியாவே எங்களை விடுதலையாக்கும் என்பதாகும்.  நாத்தான்வேலும் ரபீமாராக மாற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.  எனவே அத்திமரத்தின் கீழ் அமர்ந்து தினமும் யாவே கடவுளை நோக்கி ஜெபித்துக்கொண்டும், வேதத்தைக் கற்றுக்கொண்டும் இருக்கிறார்.

 

யோவான் 1: 49

            அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன்.  இஸ்ரவேலின் ராஜா என்றான்.



            நாம் ஒரு காரியத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.  யூதர்கள் இன்றுவரை கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை.  யூதர்களின் நம்பிக்கை என்வென்றால் ஒரு கடவுள் வருவார், எங்களுக்காக சண்டையிடுவார், அவர் தாவீதைப்போல போராடுவார், எங்களுக்கு விடுதலையை தேடித்தருவார்.  அவர் தான் எங்கள் மேசியா என்று நம்பினார்கள்.  அதே நம்பிக்கையில் வளர்க்கப்பட்டவர் தான் இந்த நாத்தான்வேல்.  கிறிஸ்துவின் பாதைக்கும், நாத்தான்வேலுக்கும் சம்பத்தம் இல்லாத ஒரு சூழல்.  நாத்தாவேலின் நம்பிக்கைக்கு முற்றிலும் வேறுபட்டதாய் இருந்தது இயேசு கிறிஸ்துவின் போதனைகள்.  யூத ஆகமங்களை மட்டுமே நம்பிகொண்டிருந்தவர், நியாயப்பிரமாணத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தவர், சட்டத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தவர்.  கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்வதற்கான எந்த ஒரு அடையாளமும் நாத்தான்வேலிடம் காணப்படவில்லை.  இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கின்ற நாத்தான்வேலை தான் பிலிப்பு அழைத்துக்கொண்டு வருகிறார்.  இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசன வார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில் முழுவதுமாக தன்னை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுகின்றார் நாத்தான்வேல்.

            மூன்றுவிதமான பட்டங்களை கிறிஸ்துவுக்கு கொடுக்கின்றார் நாத்தான்வேல்.

1.       ரபீ

2.       தேவனுடைய குமாரன்

3.       இஸ்ரவேலின் ராஜா

நம்மை மீட்க வரும் மேசியா இவர் தான் என்று எந்த ஒரு நம்பிக்கையும் நாத்தான்வேலிடம் இல்லை.  இவர் வளர்ந்த நம்பிக்கைகள் முற்றிலும் வித்தியாசமானது.  ஆனால் கிறிஸ்துவின் வார்த்தையை கேட்ட மறுகணத்தில் பழைய நம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு, கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்கின்றார்.  இன்றும் அநேக யூதர்கள் தங்களை காப்பாற்ற ஒரு மேசியா வருவார் என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் இந்த நாத்தான்வேல் ஆண்டவரின் வார்த்தையால் மாற்றப்படுகிறார்.

கிறிஸ்துவின் வார்த்தையின் மகத்துவம் என்னவென்றால்:

1. ஆண்டவருடைய வார்த்தை வாழ்வு கொடுக்கின்ற வார்த்தை

2. ஆண்டவருடைய வார்த்தை வலிமை கொடுக்கின்ற வார்த்தை

3. ஆண்டவருடைய வார்த்தை விடுதலை கொடுக்கின்ற வார்த்தை

நாத்தான்வேலின் வாழ்க்கை கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்ட உடனே மாறுகிறது.  பழைய ஏற்பாட்டு யூதனாக வாழ்ந்த நாத்தான்வேல், இப்போது புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவை பறைசாற்றக்கூடியவறாக, கிறிஸ்துவின் தொண்டனாக, உடன் ஊழியனாக மாற்றப்படுகிறார். 

 

யோவான் 1: 50

            இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்ற நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்.  இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.

            இயேசு கிறிஸ்து நாத்தான்வேலைப் பார்த்து கேட்கிறார், நீ ஒரு யூதன்.  ரபியாக மாற வேண்டும் என்ற ஆசைப்பட்டவன்.  நான் உன்னைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னதினால் என்னை நீ விசுவாசிக்கிறாயா? (அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன்)  இந்த தீர்க்கதரிசன வார்த்தையினால் தான் நீ விசுவாசிக்கிறாய் என்றால், இதைவிட பெரிதானவைகளையெல்லாம் இனிதான் நீ பார்க்கப்போகிறாய் என்றார்.

1.                   நாத்தான்வேல் ஒரு யூதன்.  ஆண்டவரின் அழைப்பை அவன் நிராகத்திருக்கலாம்.   ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.  அழைப்பை ஏற்றுக்கொள்கிறான்.  அதேபோல நீங்களும், நானும் கிறிஸ்துவின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.  நிராகரிப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கலாம், (குடும்ப சூழ்நிலையாக இருக்கலாம், வறுமையாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், மனைவி, பிள்ளைகளாக இருக்கலாம்) நாத்தான்வேல் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் என்னவென்றால், பழையவைகளை நாம் மறந்து அழைப்பை  ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவுக்காக வாழ வேண்டும்.

            2. நாத்தான்வேலைக் குறித்து சாட்சி கொடுத்த கிறிஸ்து, என்னைக் குறித்தும் சாட்சி கொடுக்க வேண்டும்.  இந்த மகன்-மகள் கபடற்றவன், உத்தமன் என்று கிறிஸ்து என்னைக் குறித்து சாட்சி கொடுக்க வேண்டும்.

            அப்படிப்பட்ட வாழ்க்கை நாம் வாழும்போது பெரிதானவைகளை நாம் காண முடியம்.  காண்பதோடு மட்டுமல்ல பெரிதானவைகளையும் செய்ய முடியும்.

யோவான் 14: 12

            மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.  நான் என் பிதாவினிடத்திற்க்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான்.  இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

            யூதர்கள் – கண்டு விசுவாசிப்பார்கள்

            கிரேக்கர்கள் – ஞானத்தின் மூலமாகத்தான் விசுவாசிப்பார்கள்

            கிறிஸ்தவர்கள் – காணாமல் விசுவாசிக்க வேண்டும்.  அவர்களே பாக்கியவான்கள். (யோவான் 20: 29)

            விசுவாசித்து ஏற்றுக்கொண்டாள் மட்டுமே பெரிதானவைகளை காண, செய்ய முடியும்.

            இந்த நாத்தான்வேல் கி.பி 68-ல் தோல் உரிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.

            நாத்தான்வேல் ஒரு ஆய்வு செய்கின்ற அப்போஸ்தலன், சாட்சியுள்ள அப்போஸ்தலன், அறிக்கை செய்கின்ற அப்போஸ்தலன்,  அர்ப்பணிப்புள்ள அப்போஸ்தலன்.

            ”கிறிஸ்துவுக்காக பெரிதானவைகளை செய்,
            கிறிஸ்துவிடம் இருந்து பெரிதானவைகளை எதிர்பார்”

            பெரிதானவைகளை காண, பெரிதானவைகளை செய்ய நாத்தான்வேலைப் போல தொடர்ந்து கிறிஸ்துவுக்காக சாட்சியாக வாழ்வோம், கிறிஸ்துவின் ராஜ்யக் கட்டுமானப்பணியில் நம்மை ஒரு ஊழியராக, சுவிசேஷகராக இணைத்துக்கொள்வோம்.

            ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

 

ஓர் விடுமுறை வேதாகமப்பள்ளியின் பாடல் வரி

நாத்தான்வேலை வரக்கண்ட இயேசு

அவர் கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்

என்னை எப்படி அறிவீர் என்று நாத்தான்வேல் கேட்டார்

அதற்கு இயேசு……..

பிலிப்பு உன்னை அழைக்கும் முன்னே

அத்தினமரத்தின் கீழே உன்னை கண்டேன் என்றார்

நீர் தேவனுடைய குமாரன், இஸ்வேலின் ராஜா என்று நாத்தான்வேல் சொன்னார்

அதற்கு இயேசு…..

நான் உனக்கு சொன்னதினால் விசுவாசிக்கிறாய்

இதிலும் பெரியவற்றை நீ காண்பாய்

நாமும் கபடற்று உத்தமராய் வாழும் போது

பெரியவற்றைக் காண்போம் பெரியவற்றை காண்போம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.