Type Here to Get Search Results !

யெகோவாவின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் | Jehovah's expectation and disappointment | bible deep sermon points in tamil | ஆழமான பிரசங்க குறிப்பு | Jesus Sam

பிரசங்க குறிப்பு

செய்தியின் தலைப்பு:

யெகோவாவின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்



            ஆண்டவரும் மீட்பரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்!

            எல்லாம் வல்ல இறைவன் நம்மிடம் என்ன காரியத்தை எதிர்பார்க்கின்றார் என்றும், அவருடைய எதிர்பார்ப்பை நாம் நிறைவு செய்திருக்கிறோமோ? என்று நம்மை நாமே சற்று பரிசோதித்துப் பார்க்க ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.  இந்த குறிப்பில் இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கும் ஒருசில காரியங்களைப் பற்றி சிந்திப்போம்.

 

1. நேரத்தை அவருக்காக செலவிட வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்:

மத்தேயு 26: 40

            “நீங்கள் ஒருமணிநேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக்கூடாதா?”

            கிறிஸ்துவானவர் இந்த பூமியில் வாழ்ந்த கடைசி நாட்களில் இந்த வார்த்தையை, தான் மிகவும் நேசித்த சீஷர்களிடம் சொல்லுகிறார்.  எனக்காக ஒருமணி நேரம் விழித்திருந்து ஜெபியுங்கள் என்று.

            ஒருமணி நேரம் எனக்காக விழித்திருங்கள் என்று இயேசு கிறிஸ்து கட்டளையாக சொல்லவில்லை.  ஒரு பாரத்தின் வார்த்தையாக வேண்டுகோளாக தனது சீஷர்களிடம் வைக்கிறார்.



            இன்றும் கூட இவ்வுலகின் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நம்மைப் பார்த்தும் ஆண்டவர் கேட்கிறார், கிறிஸ்துவை அறியாமல் அழிந்துகொண்டிருக்கிற ஜனங்களுக்காக, தேசத்தில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக, தேசம் எங்கும் சுவிசேஷம் பரவே வேண்டும் என்பதற்காக நாம் மிகவும் பாரப்பட வேண்டும், ஜெபிக்க வேண்டும் என்று அருள்நாதர் எதிர்பார்க்கின்றார்.  எம் அருள்நாதரின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோமா? இல்லையென்றால் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம்.

1 தீமோத்தேயு 2: 1, 2

    1. எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்

   2. நாம் எல்லா பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும்.

            நாம் அமைதலோடு வாழவேண்டுமானால் அதிகாரிகளுக்காகவும், நம்மை ஆழுகிற தலைவர்களுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார். 

லூக்கா 21: 36

            இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி, விழித்திருங்கள் என்றார்.

            மேசியாவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்ற நாம் அவருடைய வருகையில் (இரகசிய வருகை) காணப்பட ஒவ்வொரு நாளும் விழித்திருந்து ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

தானியேலின் ஜெபம்:

தானியேல் 6: 10

            தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினமும் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.



            ஜெபிப்பது குற்றம் என்று ராஜாவே சொன்னதைக் கண்டோ, சிங்கங்களைக் கண்டோ தானியேல் பயப்படவில்லை.  தடைகளையும் தாண்டி தன் வழக்கப்படி  ஒருநாளைக்கு மூன்று வேலை ஜெபிக்கின்ற ஒரு மனிதனாக, ஒரு ஜெபவீரணாக வாழ்ந்தார்.

தாவீதின் ஜெபம்:

சங்கீதம் 55: 17

            அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்.  அவர் என் சத்தத்தைக் கேட்பார்.

சங்கீதம் 119: 164

            உமது நீதிநியாயங்களினிமித்தம் ஒரு நாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

            தாவீது அரசன்: ஒரு தேசத்தை ஆளும் அனைத்துப் பொறுப்புக்கள் அவனுக்கு இருந்தாலும், அவன் ஒவ்வொரு நாளும் கடவுளை ஏழுமுறை துதிக்கிறவனாக காணப்பட்டான்.

அன்னாளின் ஜெபம்:

லூக்கா 2: 36, 37

            36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்.  அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயது சென்றவளுமாயிருந்தாள்.

37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.



            புதிய ஏற்பாட்டில் அன்னாள் என்னும் பேர்கொண்ட ஒரு விதவை, தனது என்பத்து நான்காவது (84) வயதில் ஆலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும், உபவாசிக்கிற தாயாராக, ஜெபிக்கின்ற தாயாராக, கடவுளை மகிமைப்படுத்துகின்ற தாயாராக, அவரை ஆராதிக்கின்ற தாயாராக வாழ்ந்து வந்தார்கள்.

            நாம் எப்படி ஜெபிக்கின்றோம்.  அநேகருடைய ஜெபம் இப்படியாக இருக்கிறது.  ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம், எனக்கு ஆத்தரம் ஆமென்.  நம்மை படைத்து, இந்த உலகில் நம்மை வாழவைத்து, அன்றன்றுள்ள தேவைகளை நேர்த்தியாய் சந்தித்து வருகிற எல்லாம் வல்ல கடவுளுக்கு நாம் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம்.  சிந்திப்போம்.

 

2. நன்றி பலிகளை எதிர்பார்க்கின்ற ஆண்டவர்:

லூக்கா 17: 11-19

            இந்த வேதபகுதியை நாம் வாசிப்போம் என்றால் பத்து குஷ்டரோகிகள் இயேசு கிறிஸ்துவை பார்க்க வருகிறார்கள்.  இயேசு கிறிஸ்துவை நாங்கள் பார்த்து விட்டால் எங்களுக்கு மெய்யான விடுதலை கிடைத்துவிடும் என்று முழு விசுவாசத்தோடு கிறிஸ்துவை பார்க்க வருகிறார்கள்.

            அந்த குஷ்டரோகிகளைப் பார்த்து கிறிஸ்து சொல்லுகிறார்: நீங்கள் போய் உங்களை ஆசாரியருக்கு காண்பியுங்கள், சுகம் பெறுவீர்கள் என்று.  கிறிஸ்துவின் வார்த்தையை கேட்டவர்கள், கீழ்ப்படிந்தவர்களாக ஆசாரியரைப் பார்க்கப்புறப்படுகிறார்கள்.  போகும் வழியில் சுகத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.



            சுகத்தைப் பெற்றுக்கொண்ட சந்தோஷத்தில் ஒவ்வொருவனும், தான் இவ்வளவு நாள் பார்க்க நினைத்த தனது குடும்பங்களையும், மனைவி, பிள்ளைகளையும், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்க சென்றுவிட்டனர்.  ஆனால் ஒரே ஒரு சமாரியன் மட்டும், தனக்கு சுகம் கொடுத்த கிறிஸ்துவை பார்த்து அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறான்.



லூக்கா 17: 17, 18

            17. அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துபேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே?

            18. தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்கானோமே என்று சொல்லி,

            பத்து குஷ்டரோகிகள் சுகம் பெற்றிருக்க, இந்த சமாரியன் மட்டுமே வந்து தன்னை மகிமைப்படுத்தினதைக் கண்ட ஆண்டவர் மிகவும் வேதனைப்படுகிறார்.  இந்த சமாரியனைத் தவிர மற்ற ஒன்பது பேர் எனக்கு நன்றி செலுத்த விரும்பவில்லை என்று பாரத்தோடு சொல்லுகிறார்.

            நாமும் கூட ஆண்டவரிடம் அநேக நன்மைகளைப் பெற்றிருக்கிறோம்.  நாம் ஜெபிக்கும் அநேக ஜெபங்களுக்கு பதிலையும் பெற்றிருக்கிறோம்.  நாம் இந்நாள் வரையிலும் சுகத்தோடு, பெலனோடு வாழுகிறோம் என்றால், அது கடவுளுடைய சுத்த கிருபை, அவருடைய கிருபையினாலே நாம் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  இந்த நன்மைகளை எண்ணி நாம் ஒவ்வொரு நாளும் ஆண்டவருக்கு நன்றி பலிகளை, துதிபலிகளை ஏறெடுக்கிவர்களாக இருக்க வேண்டும். அதை ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

 

3. கவலைப்பட வேண்டாம் என்று கடவுள் எதிர்பார்க்கின்றார்:

1 பேதுரு 5: 7

            அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

            நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கவலைகள் இருக்கலாம்.  நாம் கவலைகளை சிந்தித்துக்கொண்டிருந்தோமானால் நம்மால் சமாதானமாக வாழ முடியாது,  எனவே, கடவுள் உங்கள் கவலைகளை என்னிடம் வைத்துவிடுங்கள் என்று சொல்லுகிறார்.

            நாம் ஆலயத்திற்கு சென்றவுடன், நம்முடைய மன பாரங்களை, கவலைகளை, வேதனைகளை, கஷ்டங்களை ஆண்டவரிடம் சொல்லுகின்றோம்.  ஆலயம் முடிந்து வீட்டிற்கு செல்லும்போது உமக்கு எதற்கு ஆண்டவரே என் கவலை நானே எடுத்துச் செல்லுகிறேன் என்று சொல்லி, அதே முகவாடலோடு தான் வீட்டிற்கு செல்கிறோம்.

            வேதத்தில் ஒரு தாயார் இருந்தார்கள்.  அவர்கள்  தனது மனபாரத்தை எல்லாம் ஆண்டவரிடம் தெரிவித்த பிறகு, அவர்கள் துக்கமுகமாக இருக்கவில்லை. அவர்கள் தான் சாமுவேலின் தாயாகிய அன்னாள்.

1 சாமுவேல் 1: 18ஆ

            அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.      

            அன்னாளைப்போல நாமும் நம்முடைய கவலைகளை ஆண்டவரிடம் சொல்லிய பின் நாம் துக்கமுகமாக இல்லாமல், ஆண்டவர் என்னைப் பார்த்துக்கொள்வார் என்று மனமகிழ்ச்சியாக இருப்போம். 

 

பிலிப்பியர் 4: 6

            நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

            நம்முடைய வாழ்வில் எவ்வளவு பெரிய கவலைகள் வந்தாலும், அதை நினைத்து நாம் கலங்கிக்கொண்டிருக்காமல், என்னைப் உருவாக்கின கடவுள் என்னோடு கூட இருக்கிறார், அவர் என்னைப் பார்த்துக்கொள்வார் என்று நம்முடைய கவலைகளை அவரிடம் அறிக்கையிட வேண்டும்.

மத்தேயு 6: 27

            கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

            நாம் அதிகமாக கவலைப்படுவோமானால் அது நம்மை அநேக தவறான வழிகளுக்கு நேராக வழிநடத்தும்.

எ.கா. மது அருந்தும் நபர்களிடம் நாம் விசாரித்தால் அவர்கள் சொல்லுவார்கள் என் கவலையை மறக்க நான் குடிக்கிறேன் என்று.  இதுபோன்ற அநேக தவறுகளுக்கு கவலை வழிவகுக்கின்றது.  எனவே கடவுள் சொல்லுகிறார் நீங்கள் கவலைப்படுவதால் உங்கள் சரீர வளர்ச்சியை கூட்டமுடியாது, கவலைகள் அதிகரிக்க அதிகரிக்க நமது சரீரத்தின் பெலன் குறைய துவங்கும்.

 

லூக்கா 10: 41, 42

            41. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

42. தேவையானது ஒன்றே மரியாள் தன்னைவிட்டெடுடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்.



            மார்த்தாள் உலக கவலைகளை நினைத்து நினைத்து கலங்கிறாள்.  இதன் விளைவாக அவளுக்குள் கோபம் எழும்புகிறது.  கோபத்தால் இயேசு கிறிஸ்துவிடம் தன் சகோதரியை கடிந்துகொள்ளுமாறு கூறுகிறாள்.

            நாமும் அநேக நேரங்களில் கவலைப்படுவதால் அநேக தவறான முடிவுகளை எடுக்க நேரிடலாம், பாவத்துக்கு அடிமையாகிவிடலாம், எனவே நம்முடைய கவலைகளை அவர்மேல் வைத்துவிட்டு, சந்தோஷமாக இருப்போம்.  நாம் கவலைப்பட வேண்டாம் என்று கடவுள் எதிர்பார்க்கின்றார்.

 

4. அன்பாயிருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கின்றார்:

யோவான் 21: 15

            அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி:  யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்.  அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான்.  என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.



            இயேசு கிறிஸ்து சீமோனைப் பார்த்துக் கேட்கின்றார்: நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? என்று.  அதற்கு சீமோனின் பதில் நான் அன்பாயிருக்கவில்லை ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறார்.  சீமோன் உண்மையை ஒப்புக்கொள்ளுகிறார்.

            அன்பு – சீமோனிடம் இயேசு கிறிஸ்து கேட்கிறார், சீமோனே உனக்கு என்மீது அகாப்பே அன்பு உள்ளதா? என்று.

அகாப்பே – எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவரை நேசிக்கக்கூடிய அன்பு.

 

நேசம் – சீமோன் பேதுரு இயேசு கிறிஸ்துவிடம் சொல்லுகிறார், நான் உம்மீது பாசம் வைத்துள்ளேன் (ஃபிளேயோஸ் அன்பு) ஆண்டவரே என்று.

ஃபிளேயோஸ் - நாம் ஒரு நபர் மீது வைக்கும் பாசத்தைக் குறிக்கிறது.

எ.கா. கணவன் மனைவி மீது வைக்கும் பாசம், மனைவி கணவன் மீது வைக்கும் பாசம், பெற்றோர் பிள்ளைகள் மீது வைக்கும் பாசம், பிள்ளைகள் பெற்றோர் மீது வைக்கும் அன்பு, நண்பர்கள் மீதான அன்பு. 

            சீமோன் பேதுரு சொல்லுகிறார் ஆண்டவரே என்னிடம் அகாப்பே அன்பு இல்லை, ஆனால், ஃபியேயோஸ் இருக்கிறது என்று.  அந்த நேரத்தில் தன் தவறை உணர்ந்த சீமோன், ஃபியேயோஸ் தான் இருக்கிறது என்று சொன்ன சீமோன், தன் வாழ்வின் கடைசி மூச்சு வரை இயேசுவின் மீது அகாப்பே அன்பு கொண்டவராக வாழ்ந்தார்.  கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரித்தார்.

            நாம் கிறிஸ்துவின் மீது எப்படிப்பட்ட அன்பு வைத்திருக்கிறோம்.  கிறிஸ்துவின் மீது சீமோனின் அன்புக்கு ஈடாக நமது அன்பை வைப்போம் என்றால், நமது அன்பு ஒரு துளியளவு கூட இருக்காது.  ஆனால் நான் கிறிஸ்துவின் மீது அன்பு வைத்திருக்கறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.  நான் கிறிஸ்துவின் மீது உண்மையான அகாப்பே அன்பு வைத்திருக்கிறேன் என்றால், சீமோனைப்போல வைராக்கியமாக எழும்பி கிறிஸ்துவுக்காக பெரிய காரியங்களை செய்ய வேண்டும்.

            கிறிஸ்தவனாய் பிறந்த ஒவ்வொருவரையும் கடவுள் ஊழியக்காரராகவே அழைத்திருக்கிறார், ஆனால் ஊழியப் பாதைகளில் வித்தியாசம் உண்டு.  ஆண்டவர் நம்மை எந்த வழியில் நடத்துகிறாரோ, அந்த வழியில் தொடர்ந்து கிறிஸ்துவுக்காக நம்மால் இயன்ற ஊழியத்தை வைராக்கியமாய் செய்ய வேண்டும்.  நாம் கிறிஸ்துவின் மீது அன்பு வைத்தவர்களாக இருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்.

 கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் நான்கு காரியங்கள்:

        1. ஜெபம் (ஒருமணி நேரமாவது விழித்திருக்கக்கூடாதா?)

        2. நன்றி (நன்றி பலிகளை, துதி பலிகளை எதிர்பார்க்கிறார்)

        3. கவலையை அவர்மேல் வைத்துவிட எதிர்பார்க்கிறார்

        4. முழுமையான அகாப்பே அன்பை எதிர்பார்க்கிறார்

            இந்த குறிப்பின் மூலமாக கடவுள் எதை எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்துகொண்டோம்.  ஆண்டவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம், கடவுள் நம்மை வளர்ச்சியின் பாதையில் வழிநடத்துவார்.

            ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.