Type Here to Get Search Results !

இயேசு கிறிஸ்துவின் சாட்சி | witness sermon | ஆழமான | பிரசங்க குறிப்புகள் | Deep sermon | Gospel Of John Bible study | Christian Message Topic | Jesus Sam

 

பிரசங்க குறிப்பு

தலைப்பு – சாட்சி




நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த போது எப்படி சாட்சியாக வாழ்ந்தார்  என்பதையும், அதன் மூலமாக நாம் எப்படி சாட்சியாக வாழ வேண்டும் என்பதையும் பற்றி இந்த குறிப்பில் சிந்திக்கலாம். 

யோவான் 8: 12

            மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.  என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.

            இங்கே இயேசு கிறிஸ்து நானே மெய்யான ஒளி என்று சாட்சி கொடுக்கிறார்.  இதைப் பார்த்த பரிசேயர் அவரிடம் கேட்டார்கள்.

யோவான் 8: 13

            அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக் குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்.  உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.

            யூதர்களைப் பொறுத்த மட்டில் (பரிசேயர்கள்) இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இருந்தால் மட்டுமே ஏறு்றுக் கொள்வார்கள்.  எனவே தான் இயேசு கிறிஸ்துவிடம் வந்து கேட்கிறார்கள், நீங்களே உங்களைக் குறித்து சாட்சி கொடுக்கிறீர்களே, மற்ற எவரும் நீர் தான் மெய்யான ஒளி என்று சாட்சி கொடுக்கவில்லையே என்று.  அந்த கேள்விக்கு பதிலாகத் தான் இந்த பதிவு அமைந்துள்ளது.

யோவான் 8: 12

            நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.

ஒளி என்றால் என்ன?

ஒளி:

            தன்னிடம் இருந்து பிரகாசத்தை வெளியிடக்கூடியது ஒளி.

            அப்படியானல் வெளிச்சம் என்றால் என்ன?

வெளிச்சம்:

            பிரகாசத்தை மற்றவரிடம் இருந்து வாங்கி அதை பிரதிபலிப்பது வெளிச்சம் ஆகும்.

            ஒளி என்பதும் வெளிச்சம் என்பதும் ஒன்றுதானே என்று நாம் நினைக்கலாம்.  ஆனால் இரண்டிற்கும் வித்திசாயம் உண்டு.

எடுத்துக் காட்டு:

சூரியன், சந்திரன்

சூரியன்:

            தன்னிடம் இருந்து ஒளியை வெளியிடுகிறது. 

சந்திரன்:

            சந்திரனால் ஒளியை வெளியிட முடியாது.  சூரியனிடம் இருந்து பிரகாசத்தை வாங்கி அதை பிரதிபலிக்கிறது. 

ஒளியாகிய கிறிஸ்துவும், நானும்:

            இயேசு கிறிஸ்து ஒளி.  அவர் ஒளியை வெளியிடக் கூடியவர்.  நாம் வெளிச்சம்.  நாம்மால் ஒளியை வெளியிட முடியாது.  அந்த மெய்யான ஒளியிடம் இருந்து நாம் பிரகாசத்தை வாங்கி அதை பிரதிபலிக்க வேண்டும்.  அதாவது, ஒளியாகிய கிறிஸ்து எப்படி இந்த பூமியில் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காண்பித்தாரோ அதே மாதிரியை நாம் பின்பற்றி வாழ அழைக்கப்படுகிறோம்.

மத்தேயு 5: 14

            நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.

            ஒளியாகிய கிறிஸ்து எப்படி சாட்சியாய் வாழ்ந்தார் என்பதை பற்றி அறிந்துகொண்டு, வெளிச்சமாகிய நாமும் அந்த கிறிஸ்துவின் ஒளியில் பிரகாசிப்போம்.

 

1. ஒளியாகிய கிறிஸ்து தன்னைக் குறித்து தானே சாட்சி கொடுத்தார்.

யோவான் 8: 14

            என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாய் இருக்கிறது.

            ஒளியாகிய கிறிஸ்து முதலாவது நான் தான் மெய்யான ஒளி என்று தன்னைக் குறித்து தானே சாட்சி கொடுத்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நானே மெய்யான ஒளி என்று நிரூபித்துக்கொண்டிருந்தார்.

வெளிச்சமாகிய  (கிறிஸ்தவனாகிய) நானும் நான் கிறிஸ்தவன் என்பதை வெளிப்படுத்திக் கொண்டே (பிரதிபளித்துக் கொண்டே) இருக்க வேண்டும்.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ:

தானியேல் 3: 17, 18

            17. நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்.  அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.

            18. விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

            மரணம் நிச்சயம் என்ற போதிலும் அவர்கள் சாட்சியாக வாழ்ந்தார்கள்,  நாம் நமக்கு வருகிற சிறுசிறு உபத்திரவங்களைத் தாங்கிக்கொண்டு, ஒளியாகிற கிறிஸ்துவுக்காக சாட்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? சிந்தித்து செயல்படுவோம்.

 

ரோமர் 9: 2

            நான் சொல்லுகிறது பொய்யல்ல கிறிஸ்துவுக்கள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.

 

2. ஒளியாகிய கிறிஸ்துவைக் குறித்த பிறர் சாட்சி:

யோவான் 1: 6-8

            6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்.  அவன் பேர் யோவான்.

            7. அவன் தன்னாலே எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்க வந்தவனாயிருந்தான்.

            8. அவன் அந்த ஒளியல்ல, ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தவனாயிருந்தான்.

            ஒளியாகிய கிறிஸ்துவைக் குறித்து பலருடைய சாட்சிகள் இருந்தாலும், இந்த குறிப்பில் நாம் யோவான் ஸ்நானனுடைய சாட்சியைக் குறித்து பார்கிறோம்.

            ஒளியாகிய கிறிஸ்துவைக் குறித்து அநேகர் சாட்சிகொடுத்தது போல, வெளிச்சமாகிய என்னைக் குறித்தும் பிறர் சாட்சி கொடுக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்.  என்னுடைய நடக்கையில், பேச்சில், செயல்பாடுகளில் நான் ஒளியாகிய கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுக்க வேண்டும்.

1 தெசலோனிக்யேர் 2: 10

            விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.

 

 

3. ஒளியாகிய கிறிஸ்துவைக் கிறித்த பிதாவின் சாட்சி:

யோவான் 5: 37

            என்னை அனுப்பின பிதா தாமே, என்னைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார்

            ஒளியாகிய கிறிஸ்துவைக் குறித்து பரம பிதா சாட்சி கொடுத்ததுபோல, வெளிச்சமாகிய நம்மைக் குறித்து பரம பிதா சாட்சி கொடுக்க வேண்டும்.  ஒளியாகிய கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் அநேகர் அவரைக் குறித்து சாட்சி கொடுத்தார்கள்.  ஆகிலும், எல்லோரும் அல்ல.  பரிசேயர், சதுசேயர், வேதபாரகர், ஆசாரியர்கள் போன்ற பலரும் அவருக்கு எதிராகவே இருந்தார்கள்.  அதைப்போலவே, நம்மைக் குறித்தும் அநேகர் சாட்சி கொடுக்க வேண்டும் உண்மைதான்.  ஆனால், எல்லாரும் அல்ல.  உலக மனிதர்கள் எல்லோரிடமும் நாம் சாட்சியாய் வாழ முடியாது.  ஆனால், பரம பிதா நம்மைக் குறித்து கட்டாயம் சாட்சி கொடுக்க வேண்டும். நம்முடைய வாழ்வு அப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்.  சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு முன்பாக நாம் நீதிமான்களாய் வாழ வேண்டும்.  இந்த மகன்/மகள் எனக்காக வைராக்கியமாக வாழுகின்றவன்/வாழுகின்றவள் என்று பரம பிதா சாட்சி கொடுக்க வேண்டும்.

யோபு:

            பரம பிதா ஒளியாகிய கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுத்தார்.  மனுஷகுமாரனைக் குறித்து சாட்சி கொடுத்த கடவுள் மனிதர்களைக் குறித்தும் சாட்சி கொடுப்பாரா?

யோபு 1: 8

            கர்த்தர் சாத்தானை் நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை.

            யோபுவைக் குறித்து கர்த்தரே சாட்சி கொடுத்தார்.

2 கொரிந்தியர் 1: 18

            நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை.  அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.

 

 

4. ஒளியாகிய கிறிஸ்துவைக் குறித்து வேதவாக்கியங்கள் சாட்சி கொடுத்தது

யோவான் 5: 39

            வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்.  அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே.  என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே.

            ஒளியாகிய கிறிஸ்துவைக் குறித்து வேதாகமம் சாட்சி கொடுத்தது.  நம்மைக் குறித்தும் இந்த வேதாகமம் சாட்சி கொடுக்க வேண்டும்.  அதாவது, வேத வசனங்களின்படி நாம் வாழ்ந்து காட்டுகிறவர்களாக இருக்க வேண்டும்.  வேதத்தை படிக்கிறவர்களாக மட்டும் அல்ல, தியானிக்கிறவர்களாக மட்டும் அல்ல, அதன்படி வாழ்ந்து காட்டுகிறவர்களாகவும் நாம் திகல வேண்டும்.

            நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாற முடியாது.  கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும். 

                        கிறிஸ்து  + அவன் = கிறிஸ்தவன்

            கிறிஸ்து என் வாழ்க்கையில் இல்லை என்றால், நான் பெயர் கிறிஸ்தவன் மட்டுமே. கிறிஸ்துவின் பார்வையில் நான் கிறிஸ்தவன் அல்ல.

2 கொரிந்தியர் 4: 2

            வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியதை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்ககப்பண்ணுகிறோம்.

 

            ஒளியாகிய கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுத்த நான்கு சாட்சிகள்.

1. தானே சாட்சி கொடுத்தார்

2. பிறர் சாட்சி கொடுத்தனர்

3. பரம பிதா சாட்சி கொடுத்தார்.

4. வேதவாக்கியங்கள் சாட்சி கொடுத்தது.

            நாமும் இந்த சாட்சிகளைக் கைக்கொண்டு ஒளியாகிய கிறிஸ்துவை பிரதிபலிப்போனால் மனுஷகுமாரனைப் போல நாமும் ஒரு சிறந்த வெற்றியாளனாக மாற முடியும்.

            ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.