Type Here to Get Search Results !

யார் நீதிமான்? | ஆழமான வாக்குத்தத்த ஆசீர்வாத பிரசங்க குறிப்பு | Promise Blessing Sermon Points | Preaching Notes | Jesus Sam

  

பிரசங்க குறிப்பு

தலைப்பு: யார் நீதிமான்?

Bible Sermon Notes tamil


          நீதிமான்கள் என்ற தலைப்பை இரண்டு பகுதிகளாக பிரித்து நாம் தியானிக்கலாம்.

1. நீதிமானாய் வாழ்வது எப்படி?

2. நீதிமானாய் வாழ்ந்தால் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன?

 

1. நீதிமானாய் வாழ்வது எப்படி?

          நாம் எப்படி நீதிமானாய் வாழ வேண்டும் என்று மூன்று குறிப்புகளின் அடிப்படையில் தியானிக்க இருக்கிறோம்.

1. தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியும்போது நாம் நீதிமானாக மாறுகிறோம்.

சகரியா, எலிசபெத்

லூக்கா 16

          அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.

    சகரியாவும் எலிசபெத்தும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியும், நியமங்களின்படியேயும் நடந்ததால், அவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாய் எண்ணப்பட்டார்கள்.

வேதபாரகர், பரிசேயர்:

மத்தேயு 23: 28

          அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்.  உள்ளத்திலே மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

     இவர்கள் வெளிப்புற வாழ்க்கையில் கர்த்தருடைய கற்பனைகளின் படியும், நியமங்களின் படியும் வாழ்கிறவர்கள் போல தெரிவார்கள்.  ஆனால் இவர்களுடைய உள்ளத்தில் மாய்மாலமும், அக்கிரமமும் நிறைந்து காணப்படும்.

 இந்த இருவரில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை நாம் தான் நிதானித்து அறிய வேண்டும்.  மற்றவர்கள் பார்வைக்கு நான் கர்த்தருடைய கட்டளைகளின் படி நடக்கிறவனாக இருக்கிறேனா? இல்லையென்றால் ஆவிக்குரிய வாழ்க்கையில் நான் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவருடைய கட்டளைகளின் படியேயும், நியமங்களின் படியேயும் வாழ்கின்றேனா? நிதானித்து செயல்படுவோம்.  கர்த்தருடைய கற்பனைகளின் படியும் நியமங்களின் படியும் நாம் வாழும்போது நாம் நீதிமானாக மாற்றப்படுகிறோம்.

 

2. தேவனை நாம் விசுவாசிக்கும்போது நாம் நீதிமானாக மாறுகிறோம்.

ஆபிரகாம்:

யாக்கோபு 2: 23

 ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்.  அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

விசுவாசம் என்றால் என்ன?

   பார்த்து நம்புவது நம்பிக்கை.  பார்க்காத ஒரு காரியத்தை நம்புவது விசுவாசம்.

          நடப்பதற்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாதபோதும், இந்த உலகில் எவருக்கும் அப்படிப்பட்ட ஒரு காரியம் நடந்திராதபோதும், பால முறை, பல ஆண்டுகள் தோற்றுப்போனபோதும் ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்.  

          நம்முடைய வாழ்க்கையிலும் நாம் அநேக முறை தோற்றுப்போய் இருக்கலாம்.  இனி உன்னால் எழும்ப முடியாது, வெற்றி பெற முடியாது, உன் வாழ்க்கை முடிந்துவிட்டது என அநேகர் நம்மை இகழ்ந்திருக்கலாம்.  உலக மனிதர்கள் அநேகராலும் நாம் கைவிடப்பட்டிருக்கலாம்.  எத்தனை இழப்பு வந்தாலும் என் தேவன் என்னை மாற்றுவார், புதுவாழ்வு தருவார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்குமானால், அதுதான் விசுவாசம்.  அப்படிப்பட்ட விசுவாசத்தைத்தான் தேவன் எதிர்பார்கிறார்.  நாம் தேவனை முழுமையாக விசுவாசிக்கும்போது நாம் நீதிமானாக மாற முடியும்.

 

3. தேவனுக்கு பயந்து நடக்கும்போது நாம் நீதிமானாக மாற முடியும்.

யோபு

யோபு 1: 1

          ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்.  அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமதாயிருந்தான்.

 

          ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்த மனிதர்களில் யோபு என்பவன் மிகப்பெரிய பணக்காரனாகவும், அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு மனிதனாகவும் காணப்பட்டான்.   அவன் ஆசைப்பட்ட எல்லாம் அவனுக்கு நிறைவாய்க் கிடைத்தபோதிலும் அவன் தேவனுக்கு பயந்து நடக்கிற ஒரு மனிதனாக இருந்தான்.

          அநேகர் கொஞ்சபணத்தை கையில் பார்த்தாலே படைத்தவரை மறந்துவிட்டு, உள்ளாசமாக வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள்.  ஆனால் இந்த யோபு எல்லாம் நிறைவாய் கிடைந்த போதும் தேவனுக்கு பயந்து நடக்கிற ஒரு மனிதனாய் காணப்பட்டார்.  நாமும் நம்முடைய எல்லா சூழ்நிலையிலும் தேவனுக்கு பயந்து நடக்கும்போது நீதிமானாய் மாறுகிறோம்.

 

நீதிமானுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன?

1. நீதிமானின் ஜெபத்தை ஆண்டவர் கேட்கிறார்

யாக்கோபு 516

          நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது.

          நாம் நீதிமானாய் வாழ்ந்து ஜெபிக்கும்போது கடவுள் நமது ஜெபத்தைக் கேட்டு நமக்கு பதில் தறுகிறவராக இருக்கிறார்

யாக்கோபு 5: 17

    எலியா என்பவன் நம்மைப்போல பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான்.  அப்பொழுது மூன்று வருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.

    நீதிமானாகிய எலியாவின் ஜெபத்தை ஆண்டவர் கேட்டு மூன்று வருஷமும், ஆறு மாதமும் மழையை நிறுத்தினார்.  எலியாவின் ஜெபத்திற்கு தேவன் இயற்க்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையைக் கொடுத்திருந்தார்.

          நாமும் நீதிமானாய் வாழ்ந்து ஜெபிக்கும்போது, நம்முடைய ஜெபத்தைக் கடவுள் கேட்டு இயற்க்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை நமக்கு செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

யோவான் 14: 12

    என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

          இயேசு கிறிஸ்து இரண்டு மரித்த மனிதர்களை உயிரோடு எழுப்பினர் என்றால் நம்மால் அநேக மரித்த நபர்களை உயிரோடு எழுப்ப முடியும்.  நம்முடைய ஜெபத்திற்கு தேவன் அப்படிப்பட்ட வல்லமையைக் கொடுத்திருக்கிறார்.

          நாம் கடவுளை விசுவாசிக்கும்போது நாம் நீதிமானாக மாறுகிறோம்.  நாம் நீதிமானாய் மாறும் போது நம்முடைய ஜெபத்தின் மூலமாக இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களையும் அடையாளங்களையும் நம்மால் செய்ய முடியும். அதற்கு அதிகமான அடையாளங்களையும் செய்ய முடியும்.

சங்கீதம் 34: 17

    நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

 

2. நீதிமான் பனையைப் போல செழிப்பான்:

சங்கீதம் 92: 12

          நீதிமான் பனையைப் போல் செழிப்பான்.

          பனைமரம் மகிவும் உயரமாக வளரக்கூடியது.  அநேக நாட்களுக்கு தண்ணீர் இல்லாமல் பனைமரத்தால் இருக்க முடியும்.

          நாமும் நீதிமானாய் வாழும்போது கடவுள் நமக்கு அப்பேற்பட்ட ஆசீர்வாதங்களைத் தந்து நம்மை நடத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

 

 

3. நீதிமானாய் வாழும்போது கடவுள் நம் சந்ததியை ஆசீர்வதிப்பார்.

சங்கீதம் 37: 25, 26

          25. நான் இளைஞனாயிருந்தேன்.  முதிர்வயதுள்ளவனுமானேன்.  ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.

          26. அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான்.  அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.

          கடவுள் நீதிமானை மட்டுமல்ல, அவன் சந்ததியையும் ஆசீர்வதிக்கிற கர்த்தராயிருக்கிறார்.  எத்தனை தலைமுறைக்கு நம் சந்ததியை தேவன் ஆசீர்வதிப்பார்.

யாத்திராகமம் 20: 6

    என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.

          நாம் கற்பனைகளைக் கைக்கொண்டு நடக்கும்போது நாம் நீதிமானாய் மாறுகிறோம். நீதிமானாய் வாழும்போது தேவன் நம்மை மாத்திரம் அல்ல நம் சந்ததியையும்  ஆயிரம் தலைமுறைக்கும் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார்.

          நாமும் நீதிமானாய் வாழுவோம், கடவுள் தரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.!


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.